யாருமிங்கு அனாதையில்லை - 26

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 26
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.

அத்தியாயம் : 26


அந்தத் தனியார் மருத்துவமனையில் கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனசேகருக்கு தனது செல்வாக்கின் மூலம் உடனடியாக உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பொன்னுரங்கம்.

விஷயம் கேள்விப்பட்டு புயலாய் வந்து சேர்ந்த ராமலிங்க பூபதி அந்த இடம் ஒரு மருத்துவமனை என்று கூடப் பாராமல் தன் மனைவியைக் கரித்துக் கொட்டினார். “ஒரு தடவை...ரெண்டு தடவை இல்லை...நூறு தடவைக்கும் மேலே சொல்லியிருக்கேன்.. “அந்த சொக்குப் பயல் ஒரு தறுதலைப்பயல்...அவனையெல்லாம் வீட்டிற்குள் சேர்க்காதே”ன்னு...நீதான் “ஆயிரம் தான் இருந்தாலும் அவன் என் ஒரே தம்பி...”ன்னு சொல்லிச் சொல்லி என் வாயை அடக்கினே?...இப்ப அவன் செஞ்சிருக்கற காரியத்தைப் பார்த்தியா?”

அவரிடம் பதில் பேச முடியாதவளாய் தலை குனிந்து நின்றாள் சொர்ணம்.

அப்போது வேக வேகமாய் வந்த சீஃப் டாக்டர் “உடனடியா ஒரு ஆபரேஷன் பண்ணியாகணும்!“ என்றார்.

“பண்ணிடுங்க டாக்டர்!...என் மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பண்ணிடுங்க டாக்டர்” சுந்தரி டாக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னாள்.

“ஆபரேஷனுக்கு ஏஒன் நெகடிவ் ரத்தம் வேணும்!...அந்த ரத்தம் ரேர் குரூப் ரத்தம் என்பதனால் அதை நாங்க ஸ்டாக் பண்ணி வைக்கறதில்லை!...அதனால அந்த குரூப் ரத்தம் குடுக்க....உடனடியா ஒரு ஆளை ஏற்பாடு பண்ணுங்க” அவசரமாய்ச் சொன்னார் டாக்டர்.

பொன்னுரங்கத்திடம் வந்த முரளி, “இந்த ஊர்ல அந்த குரூப் ரத்தம் உள்ள வேற ஆள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” கேட்டான்.

“இல்லையேப்பா?...அந்த அளவுக்கு எனக்குத் தெரியாதேப்பா” என்றார் அவர்.

அப்போது முரளியிடம் வந்த தனசேகரின் மாமியார் சொர்ணம், “தம்பி...எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆளுக்கு அந்த ரத்தம் இருக்கு...ஆனா அவர் ரத்தம் குடுக்க வரமாட்டார்” என்றாள்.

“நீங்க ஆள் மட்டும் யார்?னு சொல்லுங்க நான் போய்க் கெஞ்சிக் கூத்தாடி அழைச்சிட்டு வர்றேன்” முரளி பரபரத்தான்.

“வந்து...வந்து...என் தம்பி சொக்கு” தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள்.

“சொக்கு”ன்னா?” முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான் முரளி.

“மாப்பிள்ளையைக் குத்தினானே என் தம்பி சொக்கு?...அவனுக்கு அதே வகை ரத்தம்தான்” என்றாள்.

நொந்து போனான் முரளி. ஆனால் ஒரே நொடியில் சுதாரித்துக் கொண்டு “அவர் இப்ப எங்க இருப்பார்?ன்னு சொல்லுங்க நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

“ஹூம்...அவன் இப்ப எங்க இருக்கானோ?...எந்த பொந்துல ஒளிஞ்சிட்டிருக்கானோ தெரியலையே?...போலீஸுக்கு பயந்து வெளியூர் போயிருந்தாலும் போயிருப்பான்”

சில விநாடிகள் யோசித்த முரளி “அவர் வீடு எங்கிருக்கு?ன்னு மட்டும் சொல்லுங்க” கேட்டான்.

சொர்ணம் சொல்ல தங்கவேலுவை அழைத்துக் கொண்டு லாரியிலேயே புறப்பட்டான்.

சொக்குவின் வீட்டிற்குச் சென்ற முரளி கதவில் பூட்டு தொங்குவதைப் பார்த்து மனம் நொந்தான். “இப்ப என்ன பண்றது சார்?” தங்கவேலுவிடம் கேட்டான்.

“அவன் போலீஸுக்கு பயந்து ஓடியிருப்பான்”ன்னே நெனைக்கறதை விட.... “அவன் போலீஸில் சரண்டர் ஆகியிருக்கலாம்”ன்னு ஏன் நினைக்கக் கூடாது” என்றார் தங்கவேலு.

“சார்...என்ன சொல்றீங்க?....”முரளி கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்க

“ஊர்ல பெரிய புள்ளி பொன்னுரங்கம்...அவரோட மகன் தனசேகர்!...அதே மாதிரி இன்னொரு பெரிய புள்ளி ராமலிங்க பூபதி...அவரோட மாப்பிள்ளை தனசேகர்!...இப்படி ரெண்டு திமிங்கலங்களுக்கு உறவாயிருக்கற பையனை நாம குத்திட்டோமே...அந்த ரெண்டு திமிங்கலங்களும் நம்மைத் தாக்க ஆளனுப்பினா நம்மால தப்ப முடியுமா?”ன்னு யோசிச்சிட்டு... “நமக்குப் பாதுகாப்பான ஒரே இடம் போலீஸ் ஸ்டேஷன்தான்”ன்னு முடிவு பண்ணி...சரண்டர் ஆகியிருக்கலாமல்ல?” தன் யூகத்தைச் சொன்னார் தங்கவேலு.

அதிலிருந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட முரளி “அப்ப போலீஸ் ஸ்டேஷன் போய்ப் பார்க்கலாமா சார்?” கேட்டான்.

“செய்து பார்ப்போமே?...ஒரு முயற்சிதானே?”

போலீஸ் ஸ்டேஷன் நோக்கிப் பறந்தது லாரி.

அனுபவஸ்தர்களின் சிந்தனைகளும் யூகங்களும் நூற்றுக்கு நூறு சரியாக இல்லாவிடினும் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு சரியாகவே இருக்கும். தங்கவேலு யூகித்ததைப் போலவே அந்த சொக்கு போலீஸில் சரண்டர் ஆகி லாக்கப் ரூமினுள் சத்தமில்லாமல் அமர்ந்திருந்தான்.

தங்கவேலுவும் முரளியும் அங்கு வருவதைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து கொண்டான்.

“இன்ஸ்பெக்டர் சார்...உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தங்கவேலு.

“மொதல்ல நீங்க யாரு?ன்னு சொல்லுங்க அப்புறம் பேசலாம்” என்றார் இன்ஸ்பெக்டர் திவாகர் அந்த உத்தியோகத்திற்குரிய கம்பீரத்தோடு.

“சார்...நான் கோயமுத்தூரிலிருந்து வர்றேன்...இந்தப் பையன் இதே ஊர்தான்...”என்று சொல்லி தங்கவேலு முரளியைக் காட்ட நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவனைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். “ஓ…இவன்தான் அந்த தனசேகரோட நண்பனா?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்.

முரளி ஆரம்பத்திலிருந்து நடந்த விஷயங்களை ரத்தினச் சுருக்கமாய் இன்ஸ்பெக்டருக்கு விவரித்து விட்டு “சார்...இப்ப அந்த தனசேகர் உயிர் பிழைப்பது...இதோ இந்த லாக்கப் ரூமிற்குள் இருக்கும் இந்தச் சொக்கு கையில்தான் இருக்கு சார்...அதனால....ப்ளீஸ் அவனைக் கொஞ்சம் எங்க கூட அனுப்பி வைங்க சார்” கெஞ்சினான் முரளி.

பொன்னுரங்கத்தைப் பற்றியும் ராமலிங்க பூபதியைப் பற்றியும் ஊருக்குள் அவர்களுக்கிருக்கும் செல்வாக்கு பற்றியும் இன்ஸ்பெக்டர் திவாகர் அறிந்திருந்தவராகையால் மெல்லப் புன்னகைத்து விட்டு “இது ரொம்ப புதுசா இருக்குப்பா....குத்தியனையே ரத்தம் குடுக்க வைக்கறது...உண்மையிலேயே அதிசயம்தான்” என்றவர் எழுந்து லாக்கப் நோக்கிச் சென்றார்.

“என்ன சொக்கு...நாங்க பேசியதையெல்லாம் கேட்டியா?” லாக்கப் ரூமின் கம்பியை லத்தியால் தட்டியவாறே கேட்டார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“சார்...நான் அங்க போனால் அங்கிருக்கற ஆளுங்க என்னை அடிச்சே கொன்னு போடுவாங்க சார்” சொக்கு பயந்தான்.

“நீ ரத்தம் குடுக்க சம்மதம்”னு சொல்லு...அந்தப் பாதுகாப்பை நான் கவனிச்சுக்கறேன்!...அது மட்டுமில்லை...உன் மேல் கேஸே வராம பார்த்துக்கறேன்” என்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

மகிழ்ந்து போன சொக்கு உடனே சம்மதித்தான். “அப்ப நாங்க கூட்டிட்டுப் போகலாமா சார்?” முரளி அவசரப்பட்டான்.

“நோ...அவனை நாங்க எங்க போலீஸ் ஜீப்லதான் கூட்டிட்டு வருவோம்!...” என்றார்.

மருத்துவமனையின் பெயரைச் சொல்லி விட்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான் முரளி.

சில நிமிடங்களிலேயே சொக்குவை ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் கிளம்ப தங்கவேலுவின் லாரி ஜீப்பைத் தொடர்ந்தது.


அவசர சிகிச்சைப் பிரிவின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த தனசேகரின் பெற்றோரும் ராமலிங்க பூபதி குடும்பத்தாரும் இன்ஸ்பெக்டருடன் நடந்து வரும் சொக்குவைப் பார்த்ததும் குழப்பமாயினர்.

“இவன் எதுக்கு இங்க வர்றான்?” ராமலிங்க பூபதி கேட்டே விட்டார்.

“தெரியலையே?...ஒரு வேளை தனசேகர்கிட்ட வாக்குமூலம் வாங்க வர்றாங்களோ?”என்றார் பொன்னுரங்கம்.

“அப்படின்னா நம்ம பையன் மரண வாக்குமூலம் குடுக்கற நிலைமையிலா இருக்கான்?” கேட்டு விட்டுக் “கோ”வென்று கதறினாள் சுந்தரி.

அவர்களுக்கு பின்புறமிருந்த வேறொரு வழியாக வந்து திடீரென அங்கு பிரசன்னமாயினர் தங்கவேலுவும் முரளியும்.

“த பாருங்க யாரும் சொக்குவைப் பார்த்ததும் ஆத்திரமடைய வேண்டாம்...சண்டை போட வேண்டாம்!..இப்போதைக்கு அவன் ஒருத்தன்தான் நமக்குக் கிடைச்சிருக்கற ஒரே “ஏஒன்” நெகடிவ் ரத்தக்காரன்...அவன் ரத்தம் குடுத்தால்தான் நம்ம தனசேகர் பிழைப்பான்...” என்றான் முரளி சன்னக் குரலில்.

அதற்குள் அவர்களை நெருங்கி விட்ட இன்ஸ்பெக்டர் திவாகர், “என்னப்பா முரளி...இவங்க எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டியா?” கேட்டார்.

“சொல்லிட்டேன் சார்...நாம சொக்குவை உள்ளார அனுப்பிடலாம்”

அப்போது அவர்களைக் கடந்து சென்ற நர்ஸிடம் “சிஸ்டர்... “ஏஒன்” நெகடிவ் ரத்தத்துக்கு ஆள் வந்தாச்சு” என்று முரளி சொல்ல

அவள் சொக்குவை அவசர சிகிச்சைப் பிரிவு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அவர்கள் சென்றவுடன் இன்ஸ்பெக்டர் திவாகர் பேசினார். “த பாருங்க...அந்த சொக்கு தன்னோட தவறை உணர்ந்து..அவனாகவே வந்து சரணடைஞ்சிட்டான்!...அதே மாதிரி தன்னோட தவறுக்குப் பிராயச்சித்தமா...தான் குத்திய நபருக்கு தானே ரத்தம் குடுக்கவும் வந்திட்டான்!..அதனால...நீங்க யாரும் தயவு செய்து அவன் மேல் விரோதம் காட்ட வேண்டாம்!...கேஸும் குடுக்க வேண்டாம்!...ஒரு குற்றவாளியை தண்டனை குடுத்து திருத்த முடியாது!...அப்படியே திருந்தினாலும் அது ஒரு தற்காலிகமாய்த்தான் இருக்குமே தவிர நிரந்தமாய் இருக்காது!...அதே நேரம்...அவன் தவறை அவனே உணரும்படி செய்து அவனால் உண்டான பாதிப்புக்களை அமைதியாய் நாம் ஜீரணிக்கும் போது அவன் மனசாட்சி நிச்சயம் அவனைக் குத்திக் கிழிக்கும்....அதன் மூலம் அவன் திருந்தும் போது...அது ஒரு நிரந்தரமானதாகவும் இருக்கும்” என்றார்.

எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வது போல் அமைதியாய்த் தலையசைத்தனர்.

சரியாக முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு

அவசர சிகிசைப் பிரிவின் கதவு திறக்கப்பட்டது. சொக்குவை ஒரு நர்ஸ் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தாள். “இவரைக் கூட்டிட்டுப் போய்...நல்லா காத்து வர்ற இடத்துல உட்கார வைங்க!...ஆப்பிள் ஜீஸோ...ஆரஞ்சு ஜூஸோ வாங்கிட்டு வந்து குடுங்க” என்றாள்.

பாய்ந்து சென்ற முரளி சொக்குவின் தோள்களைப் பற்றி மெல்ல நடக்க வைத்து சற்றுத் தள்ளியிருந்த மரத்தடி பெஞ்சில் அமர வைத்தான்.

“நான் போய் ஆப்பிள் ஜூஸ் வாங்கிட்டு வ்ர்றேன்” தங்கவேலு ஓடினார்.

பொன்னுரங்கத்திடம் வந்த இன்ஸ்பெக்டர் திவாகர், “நீங்க போய் அந்த சொக்கு கிட்டே நன்றி சொல்லுங்க” என்றார்.

பொன்னுரங்கம் சுந்தரியையும் தன்னுடன் அழைத்துச் சென்று சொக்குவின் கைகளைப் பற்றி “ரொம்ப நன்றிப்பா..என் மகன் உயிர் உன்னால் காப்பாற்றப்பட்டு விட்ட்து” என்றார் தழுதழுத்த குரலில்.

தன் வாழ்க்கையில் அடிதடி...ரத்தம்...கத்திக்குத்து...அரிவாள் வெட்டு...சாராயம்...போலீஸ் லாக்கப்...போன்றவற்றை மட்டுமே சந்தித்து வந்திருந்த சொக்குவிற்கு அந்த நிலைப்பாடு சற்று நெகிழ்ச்சியைத் தந்தது.

மரியாதை நிமித்தமாக அவன் எழ முயற்சிக்க “பரவாயில்லை உட்காரு தம்பி”என்றாள் சுந்தரி.

கலங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தான் சொக்கு.

அப்போது அவனை நோக்கி நடந்து வந்த சொர்ணம், “தம்பி...நீ வெளித் தோற்றத்துல கொஞ்சம் கரடு முரடானவனா இருந்தாலும் இன்னோட உள் மனசு ரொம்ப இளகிய மனசுன்னு காட்டிட்டே...என் பொண்ணுக்கு தாலிப் பிச்சையும் போட்டுட்டே” என்றார் அவனைக் கட்டிக் கொண்டு.

ராமலிங்க பூபதி அவனருகில் வந்து அவன் தோளை ஆறுதலாய்த் தொட்டு தன் நன்றியை உணர்த்தினார்.

“உறவுகளின் அன்பான நெருக்கத்தில் இத்தனை சுகம் உண்டா?” மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சொக்கு.

கையில் ஆப்பிள் ஜூஸோடு வந்த தங்கவேலு அதை சொக்குவிடம் நீட்ட தானே வாங்கி அதைப் புகட்டி விட்டாள் சொர்ணம்.

“என்ன சொக்கு?....இதெல்லாம் உனக்கு புது அனுபவமாய் இருக்குமே?...அப்படித்தானே?”.

அவன் ஆப்பிள் ஜூஸைப் பருகிக் கொண்டே மேலும் கீழுமாய்த் தலையாட்ட

“வாழ்க்கையில் எப்போதுமே திமிராகவே இருக்கக் கூடாது!...ஏன்னா...நாளைக்கு நாம திரும்பிப் பார்க்கும் போது...நமக்காக யாருமே இருக்க மாட்டாங்க...நம்ம திமிர் மட்டும்தான் நம்ம கிட்ட இருக்கும்!... எப்பவுமே... “தன்னை உயர்த்திப் பிடிப்பவன் தாழ்ந்துதான் போவான்!...தன் சுற்றத்தை உயர்த்திப் பிடிப்பவன்தான் உயர்ந்து போவான்!..” என்ற இன்ஸ்பெக்டர் திவாகர், “இனி எனக்கு இங்கு வேலையில்லை...உன்னை உன் சுற்றத்தார் பார்த்துக்குவாங்க” சொல்லி விட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.

“ஜூஸ் போதுமா?...வேற ஏதாவது வேணுமாப்பா?” ராமலிங்க பூபதி வந்து கேட்க,

சில நிமிடங்கள் அமைதியாய்த் தலை குனிந்திருந்த சொக்கு மெல்லத் தலை நிமிரும் போது அவன் கண்களில் ஈரம். “ஒண்ணே ஒண்ணு வேணும் மாமா”என்றான்.

“சொல்லுப்பா” என்றார் ராமலிங்க பூபதி அவசரமாய்.

“மல்லிகா வாயால் என்னை “மன்னிச்சிட்டேன்”னு சொல்லணும்...அதை நான் கேட்கணும்”என்றான்.

அதைக் கேட்டு பூரித்துப் போன ராமலிங்க பூபதி “ஒரு தடவை என்ன?...நூறு தடவை சொல்லச் சொல்றேன்...போதுமா?”என்றார் பலமாய்ச் சிரித்து.
------​

காலம் வாய் பேசாது ஆனால் இந்த உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் அதுதான் பதில் சொல்லும். அதே போல் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தன் ஓட்டத்தைச் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் அது ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த ஓட்டத்தில் நாட்களும் வாரங்களும் மாதங்களும், வருடங்களும் அரைபட்டுக் கொண்டேதான் இருக்கும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு

முரளியும் அவன் தங்கை வசந்தியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டு டி.வி.எஸ்-50யில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“ஏய்...வசந்தி...நான் கையை விட்டுட்டு ஓட்டி நீ பார்த்ததில்லை அல்ல?...இன்னிக்குப் பாரு” சொல்லி விட்டு அவன் இரு கைகளையும் ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து விட

பயத்தில் அலறினாள். “அடேய்...அடேய்...நீ தனியா வரும் போது இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் பண்ணுடான்!...இப்ப என்னைக் கொண்டு போய் பத்திரமா வீட்டுல சேர்த்து விடுடா”

அவள் அலறலைக் கண்டு சிரித்தவன் எடுத்த கைகளை மீண்டும் ஹேண்டில்பாரில் வைத்தான். “என்ன வசந்தி இப்படி பயப்படறே?....என்னையெல்லாம் விட்டா பைக் ரேஸிலேயே கலந்து ஜெயிப்பேன் தெரியுமா?”

“மொதல்ல பைக் வாங்கு...அப்புறமா ரேஸுக்குப் போறதைப் பற்றிப் பேசலாம்” என்றாள் வசந்தி அவன் முதுகில் குத்தி.

சிறிது தூரம் சென்றபின் வசந்தி “அண்ணா...வண்டியை நிறுத்து!...வண்டியை நிறுத்து” கத்தினாள்.

“என்ன வசந்தி?..என்னாச்சு?” வேகத்தை மட்டுப் படுத்திக் கொண்டு கேட்டான்.

“அங்க பாரு”

அவள் கை நீட்டிய திசையில் பார்த்த முரளி லேசாய் அதிர்ச்சி வாங்கினான். அங்கே யாரோ ஒரு மனிதன் குப்புறக் கிடந்தான்.

“ஆக்ஸிடெண்ட் போலிருக்கு...வாண்ணா போய்ப் பார்க்கலாம்” என்றாள் வசந்தி வண்டியிலிருந்து கீழே இறங்கியபடி.

தங்கை இறங்கியவுடன் தானும் இறங்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு குப்புறக் கிடக்கும் அந்த மனிதனை நோக்கி நடந்தான்.

அருகில் சென்றதும் காற்றில் மது வாடை வீச “அய்ய...வசந்தி இது ஆக்ஸிடெண்ட் கேஸ் அல்ல...தண்ணிக் கேஸ்!...எவனோ அளவுக்கதிகமா தண்ணியைப் போட்டுக்கிட்டுக் கிடக்கறான்” என்றான்.

ஆனால் வசந்தி குனிந்து அந்த மனிதனின் முகத்தை அடையாளம் பார்த்தாள்.

“வசந்தி...இது நாம் உதவி செய்யற விஷயமல்ல...கண்டுக்காம போற விஷயம்!...அதனால..கிளம்பு...போகலாம்” என்றான் முரளி.

ஆனால் அவளோ “இல்லைண்ணா...இந்த ஆள் முகம் எங்கியோ பார்த்த மாதிரித் தெரியுது” என்றாள் குனிந்து நின்றவாறே.

அவளருகே வந்து நன்றாகக் குனிந்து பார்த்த முரளிக்கு அப்போதுதான் அடையாளம் தெரிந்தது. “அட...இவன்...சொக்கு!...மூணு மாசத்துக்கு முன்னாடி நம்ம தனசேகரனைக் குத்திட்டு ஜெயிலுக்குப் போனானே...அவன்!...சுயநினைவே இல்லாத அளவுக்குக் குடிச்சிட்டு...நடு ரோட்டுல கிடக்கறான்!”

“அதையே இப்படி மாற்றிச் சொல்லிப் பாரேன் முரளி” வசந்தி தலையைச் சாய்த்துக் கொண்டு சொல்ல

“எப்படி?”

“அன்னிக்கு தனசேகர் உசுருக்குப் போராடிட்டு இருந்தப்ப...தன்னோட ரத்தத்தை அவனுக்குக் குடுத்து அவன் உயிரைக் காப்பாற்றியவன்!”ன்னு சொல்லிப் பாரு முரளி” என்றாள் வசந்தி.

“அட...ஆமாம்...இவன் மட்டும் அன்னிக்கு மறுத்திருந்தா...அந்த மல்லிகா இன்னிக்கு விதவையாய்த்தான் இருப்பா!” என்றான் முரளி.

“அண்ணா...எப்பவுமே ஒருத்தர் கிட்ட இருக்கற கெட்ட விஷயங்களை நாம ஜீரணம் பண்ணிக்கணும்!...நல்ல விஷயங்களை நாம அனுபவிக்கணும்!...ரசிக்கணும்!”

“சரி வசந்தி...இப்ப என்ன பண்ணலாம்!னு சொல்றே?” முரளி தங்கையையே கேட்டான்.

“ஒண்ணும் பண்ண வேண்டாம்...நம்ம வண்டிலேயே ட்ரிபிள்ஸ் அடிச்சு இவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோம்!...நல்லா போதை தெளிஞ்சு சுய நினைவுக்கு வந்த பிறகு அவர் வீட்டுக்கு அனுப்புவோம்!...என்ன சொல்றே?”
( தொடரும்)​
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement