மௌனமாய் கரைகிறேனடி!

Advertisement

Prashadi

Member
"ஆர்யவ்!!! லிசன் டு மீ"

"ஜஸ்ட் லீவ் மீ அலோன் சுதிர்!" என்றவன் வேகமான எட்டுக்களை வைத்து முன்னே நடக்க

அவன் பின்னால் "ஆர்யவ்! ஆர்யவ்!" என்றழைத்தபடி அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தபடி நடந்து, இல்லையில்லை ஓடி வந்தான்.

சுதிர்!

ஆர்யவ்வின் ஆருயிர் தோழன். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடி வந்தவனுக்கு கல்லூரியில், அருகில் இருப்பவனாய் அறிமுகமாகி கனவிலும் அழிக்க முடியாத தோழமையை இருவருக்கும் முகவரியாக்கினான்.

"ஆர்யவ்! நில்லு பிளீஸ்......எனக்காக!" என்றவுடன் தான் அவனது நீண்ட கால்கள் நடையை நிறுத்தியது.

"இந்த தப்பு இனிமே நடக்காது டா. ரிதன் இப்பிடி பண்ணுவான்னு நினைக்கல டா. இனிமே இப்பிடி நடக்காம பாத்துப்போம்." என்றவனின் கண்களுக்கு ஆர்யவ்வின் மண் நிற கண்கள் "நிறுத்து உன் சமாதானத்தை!" என்ற செய்தியை அவனது ஒற்றைப் பார்வையில் கடத்தி அவனது மொழியை மௌனமாக்கினான்.

சுதிரை பார்த்து முழுதாக திரும்பி நின்றவன் தன் கையில் உள்ள கிட்டாரை தூக்கிக் காட்டி "டூ யூ நோ வாட் இஸ் திஸ்? திஸ் இஸ் நொட் ஜஸ்ட் என் இன்ஸ்ரூமண்ட்!!!......மியூசிக்! ......என்னோட லைஃப்......என்னோட பேஷன்...., என்னோட ட்ரீம்..... புரியுதா உனக்கு? நான் சாதிச்சு காட்டுவேன் னு வீட்ல சவால் விட்டு வந்தது எல்லாம் பொய்யாகிடுச்சு னு போய் சொல்ல சொல்றியா? இந்த உலகத்துல பணத்தை விட டேலண்ட் தான் மனுஷனா வாழ வைக்கும் னு நிரூபிச்சு காட்டுறேன் னு சொன்னதை, இல்லை னு போய் "தி கிரேட் பிஸ்னஸ் வுமன்",மை மாம் 'அக்ஷரா வாசுதேவன்' கிட்ட சொல்ல சொல்றியா? சொல்லு....அ..அதோட அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?" என்று வலியும் கோபமுமாய் ஒலித்தது அவன் குரல்.

மீண்டும் நிலவிய மௌனக் கதவை உடைக்க‌ முடியாமல் நின்றான் சுதிர். ஆருயிர் தோழனாய் இருந்தும் அவனின் வலியிற்கு மருந்திட முடியாமல் போனதை நினைத்து வருந்தினான்.

கல்லூரி காலத்தின்‌ பின் 'ட்ரீம் கேட்சர்ஸ்' என்ற பெயரில் இசைக்குழுவொன்றை அமைத்து தமது திறமைக்கொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என மாநில ரீதியில் சிறந்த இசைக்குழுவை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போட்டி அறிவிக்கப்பட்டு நடந்த முதல் சுற்றில் , பணத்தை வாங்கி தன் சொந்த அணிக்கே ரிதன் துரோகம் செய்ததில் ஆர்யனும் குழுவினரும் மனமுடைந்து போயினர். இதில் ஆர்யனது கனவும் பஸ்மாகிப் போனதில் அவனது கோபம் எல்லையை கடந்தது. ரிதனை வெறிக்கொண்டு அடிக்க வந்தவனின் மனதில் "கோபம் எதுக்கும் தீர்வாகாது ஆரு!" என்று அவனவள் உரைத்தது ஞாபகம் வர கைகள் தன்னால் இறங்கியது. அந்த நிலையிலும் தன்னவளது நினைவில் புன்னகை பூத்தது‌. பின் அந்த இடத்தை விட்டு வேகமாய் வெளியே வந்தான்....

சுதிரையே பார்த்திருந்தவன் தனது பக்கவாட்டில் திரும்பி பெரூமூச்சொன்றை விட்டு " கிவ் மீ சம் டைம். ஐ வில் பி பாக்!" என்றவன் திரும்பிப் பார்க்காமல் கிடாரினை முதுகில் மாட்டி கால் போன போக்கில் நடந்து ஒரு பூங்காவை அடைந்தான்.

இது இலையுதிர் காலம் என்பதை உணர்த்திய மரத்தின் கீழ் அமர்ந்து கிடாரை டியூன் செய்து இசைக்கத்தொடங்கினான்.

"என் இனிய பொன் நிலாவே!" பாடலை இசைத்துக் கொண்டிருந்தவன் மனதில் அவனது கல்லூரி நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தது.

இதே பாடலை கல்லூரி அரங்கத்தில் இசைக்கும் போது , அந்த இசையில் மயங்கிய ஆண்களும் பெண்களும் "ஆர்யன்! ஆர்யன்!" என்று சந்தோஷ‌ மிகுதியில் கூச்சலிடுவது இன்றும் அவனது காதில் கேட்பது போன்றொரு பிரம்மை!

அவனுக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம். இதனாலேயே ஆண்கள் சற்று அவன் மீது பொறாமை கொண்டனர். ஆனால் இவை எதுவும் அவன் தலையில் ஏறியதில்லை. ஒரு சிறு புன்னகையோடு கடந்து விடுவான். அவனையும் கர்வம் கொள்ள வைத்தாள்.... தன்னவள் மீது அவன் கொண்ட காதலை நினைத்து...

அவள்....ஜோஷ்னா....

புல்லாங்குழல் இசையில் மற்றவரை கட்டிப்போடும் கன்னிகை!

முதன் முதலில் இருவரும் சந்தித்த நிகழ்வு சற்று சுவாரஸ்யமானது...

அவன் இசைத்து முடித்ததும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்தில் முட்டி மோதி வெளியில் வந்தவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஊதும் முன் ஒரு கை அதனை பறித்து கீழே போட்டு கோபமாய் மிதித்தது. இயல்பாகவே கோபத்தில் கொதிப்பவன் இந்த செயலில் வெகுண்டெழுந்து இதற்கு காரணமானவரை அடிக்க ஓங்கியவனின் கை அந்தரத்தில் நின்றது. ஏனெனில் அது அந்த பெண்ணவளிடம் சிக்கி இருந்தது. அதில் மீண்டும் தகித்தவனை பற்றி திருப்பி முன்னால் காட்டியதும் அவன் கோபத்தீ தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டு குற்ற உணர்ச்சி மேலோங்கியது‌.

கள்ளங்கபடமில்லா மனதோடு தங்களது உலகத்தில் விளையாடும் சிறுவர்கள் கண்ணில் பட்டனர்.

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் உடனே ஒரு கடதாசியில் ஏதோ ஒன்றை கிறுக்கித்தள்ளி அதை அவன் கையில் திணித்துவிட்டு நின்ற சுவடு தெரியாமல் காணாமல் போனாள்.

தான் ஒரு பெண்ணிற்கு கட்டுப்படுவதா என்று அந்த கடதாசியை எறிய முற்பட்டவனை ஏதோ ஒன்று தடுக்க, பிரித்துப் பார்த்தான்.

"ஏஞ்சாமி! இந்த சிகரெட் பழக்கத்தை வுட்டுட கூடாதா? நீ யும் கெட்டு சின்னாப்பின்னமாகி எதுக்குய்யா மத்தவன் வாழ்க்கையையும் நாசமாக்கப் பாக்குற? அதுவும் இல்லாம பொசுக்கு பொசுக்கு னு அது என்ன கை நீட்டுற பழக்கம்? பேட் பாய்! இனி அப்பிடி செய்யக்கூடாது சரியா? கோபம் எதுக்குமே தீர்வாகாது ஆரு!

சந்திச்ச உடனே செல்ல பெயர் வைக்கிற வழக்கமா னு கேட்க கூடாது. நாம இனி பிரெண்ட்ஸ் ல. அதான்!

திரும்ப நாம சந்திக்கும் போது சிரிச்சிட்டே பாத்துக்கனும் சரியா?

டாடா!

- ஜோ- "

என்றிருந்ததைப் பார்த்து புன்னகை மலர்ந்தது, கூடவே 'கிரேஸி கேர்ள்' என்ற ஆச்சரியமும்.

பின் மீண்டும் தன் குணம் தலை தூக்க , இதுவும் மற்ற பெண்களைப் போன்று தன்னை மயக்கும் முயற்சி தான் என்று அவனே நினைத்து அந்த கடதாசியை வீசி எறிந்து விட்டு வந்தான்.

அதன் பின் அவளைப் பற்றி அவன் யோசிக்கவில்லை தான்‌ ஆனால் அவனே உணர்ந்து புகைப்பிடித்தலை நிறுத்தினான். இது அவளைப் பார்த்த பின்பா இல்லை அந்த சிறுவர்களை பார்த்த பின்பா என்பதை அவனே அறிவான்.

அவள் ஒன்றும் பார்த்ததும் மனதில் பசக்கென்று நிற்கும் பேரழகி இல்லை தான் ஆனால் அவளிடம் தெரியும் அமைதியான அழகு ஒருமுறையேனும் பார்க்கத் தோன்றிடும்‌.

அவள் முகம் முதல் சந்திப்பில் பதியாவிட்டாலும் இரண்டாவது சந்திப்பில் ஆழமாக பதிந்தது.

காலேஜில் கிளாஸிகல் மியூசிக் பகுதியை கடந்து கேண்டீன் செல்லும் போது "மலர்கள் கேட்டேன்...வனமே தந்தனை..." பாடல் புல்லாங்குழல் இசையாக ஒலித்ததில் அவன் நடை நின்றது. திரும்பி அறை ஜன்னல் வழியே பார்த்தவன் கண்கள் வழியே மனதில் அமர்ந்தது..... கண்மூடி புல்லாங்குழல் வாசிக்கும் அவள் தோற்றம்.....

அவள் வாசித்து முடித்ததும் ஒலித்த கைதட்டல்களுக்கு மத்தியில் இயல்பாக அவனைப் பார்த்தவளின் முகத்தில் சிநேகப் புன்னகை தவழ்ந்தது.

ஆனால் அவள் யாரென்றே தெரியாது என்ற பாவனையில் கடந்து சென்றான்.

இம்முறை 'அவளை நினை ! அவளை நினை!' என்று மனது சொன்னது ஆனால் மூளை 'நீ எதற்கு அவளை நினைக்க வேண்டும்?' என்று கேள்வி கேட்டதில் , மூளையின் குரலுக்கு செவி சாய்த்து மனம் சொல்வதை கைவிட்டான்.

இவ்வாறே அவள் சிநேகமாகப் பார்ப்பதும் இவன் தவிர்ப்பதுமாக தொடர்ந்தது.

ஒருநாள் இவனும் இவர்களது குழுவும் வெளி கல்லூரிகளோடு மோதியதில் ஐந்து புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்ததை தாங்க முடியாமல் ஒரு மரபெஞ்சில் வந்து அமர்ந்திருந்தான். சுதிரின் நம்பிக்கையான பேச்சில் மனம் சற்று அமைதியானாலும் இன்னும் ஏதோ ஒரு உந்துதல் தன் பயணத்தை தொடர்வதற்கு தேவை என்பதை உணர்ந்ததால் தனிமையை நாடினான்.

மீண்டும் அவள் அருகாமை,அவனிடம் சற்று தயங்கிய உணர்வுடன்...

இம்முறை கடதாசியோடு சேர்த்து ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லெட்....

"உன்னோட திறமை , அந்த இடங்கள்ளயும் , பரிசுகளிலையும் இல்லை. அது உனக்குள்ள இருக்கு ஆரு! ஆழமா புதைஞ்சு இருக்கதை இன்னும் விடாம தேடி எடு. அப்போ உன்னால எதையும் சாதிக்க முடியும். அதோட உன் கனவுக்கு அடித்தளமே, உன் மேல உனக்கு இருக்க நம்பிக்கை தான். எனக்கு உன்கிட்ட பிடிச்ச விஷயமும் அது தான். ஒரு காலேஜ்மேட் டா மட்டும் இல்லாம ஒரு நல்ல பிரண்டா இதை உன் கிட்ட சொல்லனும் னு நினைச்சேன்.

இப்போ உனக்கும் என்னை பிரண்டா ஏத்துக்க உ தோணினா அந்த சாக்லெட்டை எடுத்து சாப்பிடு.

-ஜோ-"

அவன் வாசித்து முடித்ததும் ஒரு ஆர்வத்தோடு கை நீட்டினாள். ஆர்யனும் அதை மறுக்காமல் பிடித்து குலுக்கி 'பிரெண்ட்ஸ்' என்றான். சாக்கிலேட்டையும் அவளோடு பங்கிட்டு, முகத்தில் ஒரு அழகான புன்னகையை தவழவிட்டவாறு உண்டான்.

பின் ஏதோ நினைவு வந்தவனாக ,"ஆமா...உன் பேர் என்ன?"

என்று கேட்க, ஒரு நிமிடம் தயங்கியவள் மீண்டும் ஒரு கடதாசியில் "ஜோஷ்னா" என்று எழுதிக் கொடுத்தாள்‌. அதை வாசித்தவன் 'இவ கிறிஸ்டியனா! அப்போ நமக்குள்ள செட் ஆகுமா?' என்று தன்னையுமறியாமல் யோசித்தவன், தன் எண்ணம் போகும் பாதையை அறிந்து அதிர்ந்து பின் இது வெறும் சலனம் என்று அவனே தன்னை தேற்றிவிட்டு அதோடு எழுந்த எரிச்சலில் அவளிடம் திரும்பி ," அதான் நான் பிரெண்டுனு சொன்னேன் தானே. அதுக்கு பிறகும் வாயை திறந்து பேசாம இருக்க. உனக்கு திமிர் ஜாஸ்தி. இது செட்டாகாது" என்று எழப்போனவனை நிறுத்தி சைகையால் ஏதோ காட்டினாள்.

அதை புரிந்து கொள்ள முடியாமல் மீண்டும் கத்த வந்தவனை தடுத்து ஒரு கடதாசியில் "என்னால எப்பவுமே பேச முடியாது. அது நான் வாங்கி வந்த வரம்" என்று எழுதி கொடுத்தாள்.

முதலில் வேண்டா வெறுப்பாக வாங்கியவன் அதை வாசித்து அதிர்ந்து அவளைப் பார்க்க, அவளோ 'இதிலென்ன இருக்கின்றது' என்பது போல புன்னகைத்தாள். ' மனதில் ஊனம் இல்லாத வரை நானும் ஊனம் இல்லை' என்பதை பறைசாற்றியது அவள் பார்வை.

நாட்கள் உருண்டோட...

அவளுடன் இயல்பாக பழகத்தொடங்கினான். இருவரும், நட்பு என்ற வட்டத்தை இருவருக்குள்ளும் உருவாக்கி தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். ஆனால் ஓடும் காலம் அவள் மேல் அவனுக்கு இருப்பது நட்பை தாண்டிய பெயரில்லா ஒரு உணர்வு என்பதை உணர்த்த இம்முறை முழுமனதோடு அதை ஏற்றுக்கொண்டான். அதை ஆராய முற்படவும் இல்லை, அவளிடம் தெரிவிக்கவும் இல்லை.

அவளின் அருகாமையும் அவள் மௌனமொழியும் அவனது உலகத்தை அழகாய் மாற்றியது போன்ற உணர்வு அவனுள்!

இத்தனை நாள் ஒரே காலேஜில் படித்தும் ஏன் என் கண்ணில் சிக்கவில்லை என்ற ஏக்க உணர்வு அவனுள்!

அவளை தினம் தினம் கண்டாலும் புதிதாக எழுகின்ற ஒரு பரவசம் அவனுள்!

அவளுக்காக சைகை மொழி கற்று அதை அவளிடமே பேச , அவள் முகத்தில் தெரியும் பாவங்களை எப்போதுமே சலிக்காமல் இரசிக்கலாம் என்ற உணர்வு தோன்றியது அவனுள்!

தனது வெற்றிகள் ஒவ்வொன்றிலும் அவளது ஊக்குவிப்பு தரும் உற்சாகத்தை உணர்ந்தான் அவனுள்!

அவள் தன்னுடன் இருக்கும் நேரத்தில் வேறொருவருடன் பேசும் போது தோன்றும் பொறாமையை உணர்ந்தான் அவனுள்!

மொத்தத்தில் அவளிடம் மௌனமாக கரையத் தொடங்கினான்....

இதே போல் தோன்றிய அத்தனை உணர்வுகளும் கோர்த்த மாலை, காதல் மாலையாக அவள் கழுத்தில் சூட்ட துடித்தது அவன் மனம்!

ஆனால், தான் ஒரு நல்ல நிலைக்கு வரும் வரை சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்து அவளிடமிருந்து மறைத்தான்‌.

அவளும் இந்த உணர்வுகளை உணர்ந்தாலும், அவன் தகுதிக்கு தான் ஏற்றவள் இல்லை என்று ஒரு முட்டாள் தனமான எண்ணத்தை வளர்த்து அதை அவனிடம் காட்டாது மறைத்தாள்.

ஒரு கட்டத்தில் அவனிடம் தன் உணர்வுகளை மறைக்க முடியாமல் தவித்தவள் அவனிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தாள்.

அவள் விலகலை உணர்ந்தவன்‌ அவளிடமே சண்டைக்கு சென்றான்.

ஒரு கட்டத்தில் அது பெரியதாக வெடிக்க ஆர்யவ்வை அவன் நண்பர்கள் தடுக்க முற்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்தி விலகி சென்றவளை, முழுதாக அன்று தான் கடைசியாகப் பார்த்தது.

அதன் பிறகு கேள்விப்பட்டதெல்லாம் சில நாட்களில் அவள் ஒரு விபத்தில் மாட்டி கோமாவிற்கு சென்றதும், அவள் மயக்க நிலைக்கு செல்லும் முன் "ஆர்யவ், உன் கனவை என்னவானாலும் நிறைவேத்தனும். அதுவரைக்கும் என்னால முடிஞ்ச வரைக்கும் உனக்காக காத்திட்டு இருப்பேன்‌‌. உன் ஜோவா!" என்று அவசரமாக கிறுக்கல்களோடு இறுதியாக எழுதிய கடிதம் பற்றியும் தான்.

இதை விடவா, அவள் தன் காதலை உணர்த்திட முடியும்?

அவளது காதலை அவளிடம் நேரடியாக

அறிய முடியாவிட்டாலும் இன்றுவரை அந்த கடிதம் அவனது பொக்கிஷம் தான்.

அவளிடம் முழுதாக காதலில் கரைய ஆசைப்பட்டவன் , அவள் முன் கண்ணீரில் கரையக்கூடாதென்று தீவிரமாக முயற்சி செய்தான். கூடவே அவளது சிகிச்சைகளின் முன்னேற்றம் பற்றி அவளது பெற்றோரிடமும் அறிந்து கொள்ள தவறவில்லை.

இன்று.....

அந்த பாடலை முழுமையாக வாசித்து முடித்தவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் தடங்கள்!

சுதிர், "ஆர்யவ்!!!" என்று கத்தி ஓடி வந்தவன் அவனை இறுக அணைத்து கூறியது, போட்டிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது பற்றியும் ஜோஷ்னாவின் சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் தான்.

இதற்கு மேல் அவனாலும் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை. கத்தி அழுது கூச்சலிட்டான். சந்தோஷ மிகுதியில்....

போட்டியின் இறுதி நாள்....

"டீரிம் கேட்சர்" குழு முதல் இடத்தை தட்டிச் செல்கிறது என்று அறிவிக்கப்பட்டதும்.

ஆர்யவ், தன் அருகில் நின்ற தன் ஜோவை இறுகி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

சுதிர், " டேய் டேய் டேய்! ஒரு சின்ன பையன் முன்னாடி ஹாலிவுட் படம் ஓட்டாதிங்க டா!" என்று அலற

"டேய்....இது வெறும் இந்தியன் தமிழ் பிலிம் தான். இனிமே தான் ஹாலிவூட்" என்று ஜோஷ்னாவைப் பார்த்து கண்ணடித்ததும் சிவந்த அவள் கன்னங்களை இரசித்தவாறே மேடையேறி விருதை வாங்கும் போது,

அவன் அன்னையை பெருமையாகப் பார்த்தான். அவர் முகத்திலும் இப்போது ஆணவத்தை விட பெருமையே குடிகொண்டது தன் மகனை நினைத்து...

ஆர்யவ் இறங்கி வந்து தன் ஜோவிடம் விருதை கையில் கொடுத்து " நீ சொன்ன மாதிரி ஜெயிச்சிட்டேன். இனி லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்குள்ள நமக்கு வயசாகிடும். டக்குனு சொல்லு. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்க

அவளும் அவன் நெஞ்சில் 'இப்பவே' என்று எழுதிக் காட்டி அணைத்துக் கொண்டாள்‌.

முற்றும்....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top