மை டியர் டே(டெ)டி - 8

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
நிலமதியின் நினைவில் மாறன் அமைதியாகவே இருக்க, அவன் அமைதி பிடிக்காமல், "என்ன!" என்றாள் குட்டி இளா சற்று சத்தமாகவே. "ஒன்னுமில்லயே" என்று மாறன் தலையாட்ட, "அப்புறம் மூஞ்சி ஏன் மனித குரங்கு மாதிரி இருக்காம்? உர்ர்ர்'ன்னு" என்று அவள் கேள்வியில் தான், மனைவியின் நினைவிலிருந்து சற்று வெளிவந்தான். "உன் மூஞ்சி மட்டும் ஏன் குட்டி குரங்கு மாதிரி இருக்காம்? உர்ர்ர்'ன்னு" என்று மீண்டும் அவளைக் கேட்டான் மாறன்.

"என்ன நீ? நீயே திட்டிட்டு, நீயே கேள்வி கேக்கற?" என்று இடையில் கை வைத்துக்கொண்டு கேட்க, "யார் திட்டுனது குட்டி இளா'வ? யாருடா அவன் குட்டி இளாவயே திட்டுனது. யாரா இருந்தாலும் தூக்குடா. எவனா இருந்தாலும் வெட்டு டா" என்று காற்றுடன் சண்டை போட்டுச் சமாளிக்க முயன்றான் மாறன். "சமாளிக்காதீங்க மிஸ்டர்.மாறன். நீங்க தான் என்னைத் திட்டுனீங்க" என்று அவள் கைக்கட்டிக்கொண்டு நிற்க, "நான் என்ன திட்டினேன். நீயே சொல்லு" என்று அவனும் கைக்கட்டிக்கொண்டான். "அதான் திட்டினியே. அங்க அப்பார்ட்மெண்ட் எண்ட்ரன்ஸ்ல. நிலா'ன்னு" என்று அவள் கூற, "என்னது? நிலான்னு சொன்னா திட்டுறதா? உன் பேர் நிலா தான?" என்று அவன் கேட்க, "அது மத்தவங்களுக்கு. நீ குட்டி இளான்னு தான கூப்டுவ. கோவம் வந்தா தான் நிலா சொல்லுவ. எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டு அவள் வேறு பக்கம் திரும்பிக் கை கட்டி நின்றுக்கொண்டாள்.





"பாப்பா... பேசமாட்டியா அப்பா கிட்ட?" என்று அவள் உயரத்திற்கு முட்டிக்கால் போட்டு, அவள் தாடையை கையில் ஏந்திக் கேட்க, "பேசிட்டு தான இருக்கன். ரொம்ப சீன் போடாதீங்க மிஸ்டர். மாறன்" என்று முறைத்தாள் நிலா. "என் குட்டி பாப்பா இப்டி பேசமாட்டாளே! எனக்குத் தெரியும். நீ என் குட்டி பாப்பா இல்ல. நீ ஒரு குட்டி சாத்தான். என் பாப்பா உடம்புல இருக்க. அவ உடம்பை விட்டு வெளியே போ" என்று உலுக்கினான் அவளை. "ஏய்ய்... நிறுத்து. நான் என்ன சிரப் பாட்டிலா? என்னை உலுக்கற? நான் பாப்பா தான். நிஜமா தான்" என்றாள் நிலா.

"நம்ப முடியாதே! என் பாப்பா இப்டி எட்ட நின்னு பேசமாட்டாளே!" என்று அவன் யோசிப்பது போலப் பாவனை செய்ய, "வேற எப்படி பேசுவா?" என்று கேட்டாள் குட்டி இளா. "என் பாப்பாவா இருந்தா நான் இப்படி அவ ஹைட்க்கு உக்காந்ததும், என்ன கட்டி புடிச்சி கன்னத்தில இச்சி வச்சிருப்பா" என்று அவன் கன்னத்தைக் காட்ட, "இச்சு எல்லாம் வைக்க முடியாது. கடிச்சு வேணா வைக்கறேன்" என்றாள் குட்டி.இளா. "நான் தான் சொன்னேனே! நீ என் பாப்பா இல்லைன்னு" என்று இளா எழும்பப் பார்க்க' அவனைப்பிடித்து ஒரு முத்தம் வைத்தவிட்டாள். வாங்கியதை திருப்பித்தந்துவிடும் பழக்கம் உள்ளவனாய், இவனும் கஞ்சம் செய்யாமல் கொஞ்சம் அதிகமாகவே திருப்பிக் கொடுத்துவிட்டான்.

அவள் கொடுத்த முத்தமும், இவள் கொடுத்த முத்தமும் ஒன்றுபோல் இல்லை. தாமரை இதழ்கள் கொண்டு ஒத்தி எடுத்தார் போல் இருந்தது அவள் முத்தம். தாமரையில் தேன் தேடும் வண்டு தேன் உரிவது போல் அழுத்தமாய் பதிந்தது அவன் முத்தம். அத்தனை அழுந்தக் கொடுத்த முத்தத்திற்கு, அவள் அளித்த வெகுமானம், "ச்சீ. எச்சீ" என்று அவன் சட்டையில் துடைத்துக கொண்டது தான்.



"இச்சி குடுத்தா எச்சி படத்தான் செய்யும் குட்டி பாப்பா" என்று இளா சொல்ல, "ஹ்ஹ்ம்ம்ம்... அதெல்லாம் இருக்கட்டும். ஒரு அங்கிள் வந்தாருல்ல அவர் யாரு?" என்று கேட்க, "அதெல்லாம் நீ தெரிஞ்சிக்க வேணாம்" என்றான் மாறன். "தெரியலன்னா எனக்கு மண்டை வெடிக்கும்ன்னு உனக்குத் தெரியாதா?" என்று அவள் கேட்க, "நான் சொல்ல விரும்பலைன்னு சொன்னா, அதுக்கு காரணம் இருக்குன்னு உனக்குப் புரியாதா?" என்று இளமாறன் திரும்பக் கேட்க "சரி மிஸ்டர். மாறன். நான் கேக்கல!" என்று சொல்லி முடித்துவிட்டாள் குட்டி இளா.

"என்ன இன்னைக்கு புதுசா மிஸ்டர்.மாறன்'ன்னு கூப்புட்ற? இளா'ன்னு தானே கூப்பிடுவ?" என்று மாறன் கேட்க, "அது. உனக்கு ஒரு ரைனோசர் போன் பண்ணுச்சா! அந்த ரைனோசர் உன்னை அப்டி தான் சொல்லுச்சு. அதான் சொல்லிப் பாத்தேன்" என்றாள் அவள். "என்னது? ரைனோசரா?" என்று அதிர்ந்தவன், அப்போது தான் அவன் அலைபேசியைப் பார்த்தான். "ஆத்தி! ரைனோசர் தான். இவ வேற என்ன ஏழரைய கூட்டி வச்சான்னு தெரியலையே" என்று பதறியவன், "குட்டி இளா. அவர் கிட்ட பொறுமையா தான பேசுனீங்க? ஒன்னும் கத்தலையே!" என்று மாறன் பதமாய் கேட்க, "ச்ச. ச்ச. நான் சின்-சான் பாக்கணும். போனை வைடா கோழி முட்டை தலையா!' அப்டின்னு பொறுமையா தான் சொன்னேன்" என்றாள் குட்டி இளா.

"என்னது கோழி முட்டை தலையா?" என்று மாறன் கேட்க, "ஆமா. அவர் போன் பண்றப்போ அவர் ஃபோட்டோ தெரிஞ்சுது. அப்போ அவர் மண்டை பாக்க கோழி முட்ட மாதிரி தான் இருந்துச்சு. ஓவல் ஷேப்ல. ஒரே வழுக்கையா!" என்றாள் குட்டி இளா. "அடிப்பாவி. சும்மாவே எனக்கும் அவனுக்கும் ஆவாது. இதுல இவ வேற! மாறா உனக்கு நாளைக்கு ஆஃபிஸ்ல ஆப்பு நிச்சயம் டா" என்று நினைத்துக்கொண்டான் மாறன்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். நீ அது யாருன்னு கேக்கவேணாம்ன்னு சொன்ன. நானும் நல்ல பாப்பாவா கேக்கல தான! அதே மாதிரி நான் ஒன்னு கேப்பேன். நீயும் செய்யணும்" என்றுக் குட்டி இளா கேட்க, "என்னவாம்?" என்றான் மாறன். "மொட்டை மாடிக்குப் போலாமே!" என்று அவள் கேட்க, "வேணாம்" என்றான் மாறன் சட்டென. "ஏன்? நான் எத்தனை தடவை கேக்கறேன். மொட்டை மாடிக்குப் போகலாம்ன்னு. நீ ஏன் கூப்டு போகவே மாட்டுற? ஷர்மி வீட்ல எத்தனை நாள் அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடிக்குப் போயி டின்னர் சாப்புடுறாங்க தெரியுமா. நீ தான் என்னைக் கூப்டுட்டே போக மாட்டுற" என்று அவள் கேட்க, "சரி சரி. நைட்ல பனி பெய்யும். இன்னொரு நாள் பகலில் போலாம். சரியா" என்று எப்படியோ சமாதானம் செய்து அவளைப் படுக்கவைத்துவிட்டான்.

அவன் மொட்டை மாடிக்குச் சென்று கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாய் நிலமதி உடன் இருக்கும்போது சென்றது. முழுநிலா, பிறைநிலா என எதையும் விடாமல் இருவருமாய் இணைந்து ரசித்ததுண்டு. மாறன், மதி இருவரும் வீட்டை விட அதிகம் சேர்ந்து உலாவியது, கதைத்ததெல்லாம் மொட்டைமாடியில் தான். அதனாலே, அவள் இல்லாமல் போனப்பின்பு செல்லப் பிடிப்பதே இல்லை.

இதோ, அவன்மேல் படுத்திருந்த குட்டி இளா உறங்கிவிட்டாள். ஆனால், இவன் மதி உறங்கச்சொல்லியும், இவன் மனம் ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை. ஜன்னல் வழியே தெரிந்த வெண்மதியைப் பார்த்துக்கொண்டிருந்த மாறனின் மனதில் ஜம்மென வந்து அமர்ந்துகொண்டாள் அவனின் நிலமதி.

அவளுடனான கடைசி மொட்டைமாடி உரையாடல் நிழற்படமாக ஓடிக்கொண்டிருந்தது அவனுள்ளே! நிலமதியின் பிறந்தநாள் அன்று. நிலமதியின் கருவில் குட்டி இளா ஜனித்த எட்டு மாதங்கள் ஆகியிருந்தது. அது தான் இவர்கள் இருவரும் ஒன்றாக மொட்டைமாடியில் உலாவியது.

அவள் தான் பேசிக்கொண்டிருந்தாள். அவன் கேட்டுக்கொண்டு மட்டும் தான் இருந்தான். ஆனால், அவள் குரல் கேட்பதிலே அலாதி இன்பம் அவனுக்கு. இவர்கள் பேச்சைச் சிறிது நேரம் கேட்ட நிலவுக்கும் வெட்கம் வந்துவிட்டது போலும். மேகத்திரைக்குள் ஒளிந்துகொண்டது. இவர்கள் பேச்சில் சிலிர்த்தது, அந்தப் பச்சை மரங்களின் உடலும்.

இந்தத் தென்றல் மட்டும் இவர்கள் சுற்றி சுற்றி வந்தது. ஒருவேளை, ஊடல் பொழுதில் தூதுபோக ஆயத்தமாய் வந்ததோ என்னவோ!

அவள் பேச்சுக்கு நடுவே நிறுத்தியவன், "ஏய் நிலா!" என்று அழைக்க, "என்னடா. எப்போவும் மதின்னு தான கூப்பிடுவ. இன்னைக்கு என்ன நிலான்னு கூப்புட்ற?" என்று நிலமதி கேட்க, "தோணுச்சு கூப்பிட்டேன்" என்றான் அவன்.

அதன் பின் சில நொடிகள் அமைதி தான். அது வார்த்தைகளுக்கான அமைதி. அவளைப் பின்னால் இருந்து கட்டிஅணைத்துக்கொண்டு சொல்ல வேண்டியதை எல்லாம் அவன் இதழ்கள் அவள் கழுத்தோரத்தில் எழுதிவைத்துக்கொண்டிருந்தன. சட்டென நிறுத்தியவன். "அது என்ன பொண்ணுங்களுக்கு மட்டும் நிலான்னு பேர் வைக்கறாங்க. இந்தக் கவிதை எழுதுறவங்களெல்லாம் கூடப் பொண்ணுங்களை நிலாவோட ஒப்பிட்டு எழுதி வச்சிடறாங்க. அவங்க எழுதிவைச்சாலும் வச்சிடறாங்க. இந்தப் பொண்ணுங்கலாம், ஏதோ நெஜமாலே இவங்க தான் நிலா'ன்னு நெனச்சிட்டு மெதப்புல சுத்துறது" என்று அவன் வான்மதியை பார்த்தபடியே நிலமதியை வம்பிழுக்க, மெல்லியபுன்னகை ஒன்றை இதழ்களில் படரவிட்டாள்.

"டேய் பேக்கு புருஷா! பொண்ணுங்களை நிலாவோட ஒப்பிடறதுக்கு காரணம் அவங்க அழகு கிடையாது. நிஜமாலுமே பெண்களுக்கும் நிலவுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. ஒரு வகைல பெண்களும் நிலவும் நிஜமாலே ஒன்னு தான்" என்று நிலமதி சொல்ல, "அப்டியா? என்ன தொடர்பு அது. எனக்குச் சொல்லு பாப்போம்" என்று கேட்டு, இன்னும் இறுக அணைத்துக்கொண்டான் அவளை. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டு அவன் மாணவனாய் மாறிப்போக, அவனுக்கு விளக்கத் தொடங்கினாள் நிலமதி.

" பெண்களோட மாதவிடாய் சுழற்சிக்கும்(Menstrual cycle), சந்திர சுழற்சிக்கும் (Lunar cycle) ரொம்ப நெருங்கிய தொடர்பு இருக்கு. கவனிச்சிருக்கியா. பெண்களோட ஒரு மாதவிடாய் சூழ்ச்சி, அதாவது மாதவிடாய்க்கு அடுத்த மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலம் 28 நாட்கள். அதே மாதிரி ஒரு சந்திர சுழற்சி, அதாவது ஒரு அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசைக்கு இடைப்பட்ட நாட்கள் (நிலவு பூமியை ஒருமுறை சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் அவகாசம்) கிட்டத்தட்ட 28 நாட்கள் தான்.

இன்னும் சொல்லனும்னா பழங்காலத்துல எல்லா பெண்களுக்கும் அமாவாசை நெருக்கத்துல தான் மாதவிடாய் காலமா இருக்கும். காலெண்டர் எல்லாம் அந்தக் காலத்துல இல்ல தானே! நிலவைப் பார்த்தே கண்டுபிடிப்பாங்க அவங்களோட மாதவிடாய் சுழற்சியை. ஆனா, இன்னைக்கு எல்லாருக்கும் அப்டி இருக்கறதில்ல. நிறைய செயற்கை ஒளி, எல்லாத்திலும் கணினிமயம், இந்தக் காரணங்களால பெண்கள் உயிரியல் இயைவு (Biological rhythm) ரொம்பவே மாறிடுச்சு. ஆனா, இப்போவும் நிறைய பெண்களுக்கு அமாவாசை நெருக்கத்துல தான் மாதவிடாய் காலம் இருக்கு.

அது மட்டும் இல்லை. முழுநிலா, தேய்பிறை, வளர்பிறைன்னு ஒவ்வொன்றுக்கும், பெண்களோட மாதவிடாய் சுழற்சிக்கும் தொடர்பு இருக்கு.

அம்மாவாசையிலிருந்து தொடங்குவோம். பழங்காலத்துல அம்மாவாசை அப்போ தான் ஒரு பொண்ணுக்கு மாதவிடாய் காலமா இருக்கும்ன்னு சொன்னேன்ல. அம்மாவாசை அப்போ எப்படி நிலாவோட ஒளி, ஆற்றல்ன்னு எல்லாமே குறைந்திருக்கோ, அப்டி தான் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்துல உடல் வலிமை, ஆற்றல், ஆர்வம்ன்னு எல்லாமே குறைத்திருக்கும். எப்படி அம்மாவாசை அப்போ, நிலா தன்னை யாருக்கும் காட்டாம ஒளிஞ்சிருக்கோ, அப்டி தான் மாதவிடாய் நேரத்துல பெண்களும், வெளியுலக தொடர்பைச் சுத்தமா விரும்பாம தனியா இருக்க விரும்புவாங்க.

அடுத்து வளர்பிறை. அந்த நேரம் தான் நிலா கொஞ்சம் கொஞ்சமா வளரும். அதோட ஆற்றல் ஒளின்னு எல்லாமே அதிகரிச்சிக்கிட்டே இருக்கும். பெண்கள் உடலில் பாத்தேன்னா, இந்த வளர்பிறை காலம் தான் கருமுட்டை வளருற காலம். அந்த நேரத்துல வேலையில அவங்களோட கவனமா இருக்கட்டும், அவங்களோட வெளியுலக விஷயங்களில் காட்டும் ஆர்வமா இருக்கட்டும் எல்லாமே கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். மொத்தத்துல இந்த ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும்.

அடுத்து. முழுநிலவு. கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வந்த நிலா முழு வளர்ச்சி அடையும் நாள் அது. அதோட ஒளி, ஆற்றல்ன்னு எல்லாமே அதிகமா தான் இருக்கும். பெண்களுக்கு, அது கருமுட்டை முழுசா வளர்ச்சி அடையும் நாள். நிலாவோட ஒளியும் ஆற்றலும் எப்படி அன்னைக்கு உச்சத்துல இருக்கோ, அப்டி தான் எல்லா விஷயத்துலயும் பெண்களோட ஆர்வம், ஆற்றலும் அன்னைக்கு உச்சத்துல இருக்கும்" என்று நிலமதி சொல்ல, "எல்லா விஷயத்துலயுமா?" என்று மாறன் குறும்பாய் கேட்க, "ஆமாம். எல்லா விஷயத்துலயும்" என்று சொல்லிவிட்டு கண்ணடித்தாள் நிலமதி.

"சரி சரி தேய்பிறை?" என்று மாறன் மீண்டும் ஆர்வமாய் கேட்க, "தேய்பிறை. நிலாவோட ஒளி, ஆற்றல் எல்லாமே எப்படி உச்சத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே வருதோ! அதே மாதிரி தான் பெண்களோட உடல் வலிமை, ஆற்றல், வெளிவிஷயங்களில் அவங்க ஆர்வம்ன்னு எல்லாமே கொறஞ்சிகிட்டே வரும். இந்தக் காலம் தான், வளர்ச்சி அடைந்த கருமுட்டை, வெளியேற்றப் படுவதற்கு தயார் ஆகுற காலம்" என்றாள் நிலமதி.

"இவ்ளோ விஷயம் இருக்கா?" என்று மாறன் கேட்க, "ஆமாம் இருக்கு. இப்போ ஒத்துக்கோ. பொண்ணுங்கள சும்மா ஒன்னும் நிலான்னு வர்ணிக்கல. நெஜமாவே பொண்ணுங்க பூமியில நடமாடும் நிலா தான்" என்றாள் நிலமதி.

"சரி சரி. ஒத்துக்கறேன்!" என்று மீண்டும் வாய்ச்சொற்களுக்கு கொஞ்சம் ஓய்வளித்தான் மாறன்.

சில நிமிடங்களுக்கு நிசப்தம் நிலவவும், அதுவும் தன் பெயர் அடிக்கடி அடிப்படுவதாலும் ஆர்வம் தாங்காமல், வானில் இருக்கும் வான்நிலா அதுவும், மேகத்திரை துறந்து, வெட்கம் விடுத்து, எட்டி பார்த்தது.

அந்த மௌனத்தைக் கலைத்தது நிலமதி தான்.

"உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா?" என அவள் கேட்க, அவன் இதழில் குறும்புன்னகை, கண்களில் குறும்புப்புன்னகை.

"என்ன சிரிப்பு?" என்று நிலமதி கேட்க, "நம்ப சில நேரம் ஒரு மூணு நிமிஷ பாட்டு கேக்குறப்போ, அந்த மூணுமணிநேர படமும் அகக்கண்ணில் ஓடும். அப்டி தான். உனக்கு ஞாபகம் இருக்கான்னு நீ கேக்குற அந்த நேரம், உன்னைப் பார்த்த முதல் நொடியிலிருந்து, நிகழும் இந்த நொடிவரை, மொத்தமும் நினைவுக்கு வருகிறது கண்மணியே!" என்றான் மாறன்.

அவன் கூறியதில் கண்சிமிட்டவும் மறந்தவள், அவள் கூறவந்ததை மறந்தே போனாள்.

அவன் மார்பில் குத்தியவள், "திருட்டுப்பையா. நான் என்ன சொல்ல வரேன்னு, நீ சரியா கெஸ் பண்ணலேன்னா, நான் கோச்சிக்குவேன்னு, எப்படியெல்லாம் சமாளிக்கற. ஆனா, கேட்க நல்லா தான் இருக்கு" எனக் கூறி, சற்று நேரம் முன்பு குத்திய அதே மார்பிற்கு கம்பளியானாள்.

அவளை நகரவிடாமல் அணைத்துக்கொண்டு, "சரி சொல்லு. நீ என்ன ஞாபகம் இருக்கான்னு கேக்கவந்த?" என்று மாறன் கேட்க, "நம்ப லவ் பண்ணும்போதெல்லாம் என் பிறந்தநாள், காதலர்கள் தினம், நம்ப முதல் முதலில் சந்திச்ச நாள்'ன்னு எல்லாத்துக்கு கிஃப்ட் வாங்கி தருவ. ஆனா, இப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் பாரு. இன்னைக்கு என் பிறந்தநாள். ஆனா, ஒரு கிஃப்ட் கூட வரல. ஞாபம் இருக்கா?" என்று முறைத்தாள் நிலமதி.

"அதான் கல்யாணம் ஆகிடுச்சுல. நானே பெரிய கிப்ட். இதுல வேற கிஃப்ட் வேற வேணுமா உனக்கு? இருந்தாலும் போனா போகுதுன்னு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன்" என்று அவள் கையில் மிகச்சிறிய கிப்ட்பாக்ஸ் ஒன்று வைக்க, அதை ஆர்வமாய் திறந்துப் பார்த்தாள் நிலமதி.

"என்னடா இது?" என்றாள் அவள்.

"பார்த்தா தெரியல? கொலுசு...", என்றான் அவன்.

"அது தெரியுது. ஆசையா மோதிரம் வாங்கி தருவாங்க, செயின் வாங்கி தருவாங்க. இது என்னடா கொலுசு வாங்கி தர?" என்றாள் அவள்.

"அதுவா? நீ எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியிலும், நான் வாங்கி தந்த கொலுசு சொல்லும் இந்தப் பூமி கிட்ட, 'நீ என்னுடையவ..எனக்கானவ.. எனக்கு மட்டும் தான்'னு. நீ அதன் மேல கால் பதித்து நடப்பதாலயோ, இல்லை அது உன்னைச் சிரம்மேல் தாங்குவதாலயோ, அது உன் மேல உரிமை கேட்டு வந்துட கூடாது பாரு. அதுக்கு தான். கொலுசு வாங்கி தரேன்" என்றான் அவன்.

"டேய் கே.டி. நீ டைமென்ட் நெக்லஸ் வாங்கி தந்திருந்தாக் கூட, இவளோ சந்தோஷம் இருந்துருக்காது போல. வாங்கி குடுத்தது என்னமோ வெள்ளிக் கொலுசு தான். ஆனா, டயலாக்ல ஸ்கோர் பண்ணிட்ட நீ" என்று அவன் காதைத் திருகியவளை கீழே அமரவைத்து, அவன் பாதங்களை மடி மீது வைத்து, அவள் கால்களுக்குக் கொலுசு பூட்டினான் அவன்.

அத்தனையும் நேற்று நிகழ்தது போல் ஓடிக்கொண்டிருந்தது அவனுள்.

ஆசையாய் வாங்கி வந்த கொலுசின் சத்தம், நீண்ட நாட்கள் கேட்க கொடுத்துவைக்கவில்லை அவனுக்கு. நிலமதியின் உடமைகள் அனைத்தையும் ஒரு தனி அலமாரிக்குள் பூட்டி வைத்திருந்தான் மாறன்.

தன் மீது உறங்கிக்கொண்டிருந்த இளநிலாவை பெட்டில் படுக்கவைத்துவிட்டு, நிலமதியின் கொலுசை அந்த அலமாரியிலிருந்து எடுத்துப் பார்த்தான். இத்தனை நேரம் திடமாய் இருந்தாலும், அதைப் பார்த்ததும் தன்னை அறியாமல் கலங்கியது அவன் கண்கள்.

ஏதோ யோசித்தவனாய், அவன் ஆபிஸ் கொண்டு செல்லும் பேக்'கில் அந்தக் கொலுசை எடுத்து வைத்துக்கொண்டான்.
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர் எபி.... உண்மையாவே அமாவாசை கிட்ட வரும் லேடீஸ் மூட் ஸ்விங் அதிகமா இருக்கும் அதுக்கு reason என்னனு யோசிச்சி இருக்கேன் இப்போ புரியுது அது நம்ம ஹார்மோன் தான் காரணம். சூப்பர் நல்ல info.

இளா நிலமதி ரெண்டு பேரோட அன்பு அட்டகாசம்...அந்த கிப்ட்க்கு கொடுத்த விளக்கம் இள வேற லெவல்
 

banumathi jayaraman

Well-Known Member
நிறைய பேருக்கு தெரியாத நிலாவும் பெண்ணும் ஒன்று என்ற உண்மையை ரொம்பவே அழகா சொல்லியிருக்கீங்க
மாதவிடாய் காலத்தை அமாவாசையுடன் ஒப்பிட்டு சொன்னதும் சரியே
உண்மைதான்
அப்பொழுதெல்லாம் பெண்களின் கர்ப்பம் குறித்து அமாவாசையை அடிப்படையாக வைத்துத்தான் எதுவும் செய்ய ஆரம்பிப்பார்கள்
 

Kamali Ayappa

Well-Known Member
சூப்பர் எபி.... உண்மையாவே அமாவாசை கிட்ட வரும் லேடீஸ் மூட் ஸ்விங் அதிகமா இருக்கும் அதுக்கு reason என்னனு யோசிச்சி இருக்கேன் இப்போ புரியுது அது நம்ம ஹார்மோன் தான் காரணம். சூப்பர் நல்ல info.

இளா நிலமதி ரெண்டு பேரோட அன்பு அட்டகாசம்...அந்த கிப்ட்க்கு கொடுத்த விளக்கம் இள வேற லெவல்

நன்றி க்கா:love:
 

Kamali Ayappa

Well-Known Member
நிறைய பேருக்கு தெரியாத நிலாவும் பெண்ணும் ஒன்று என்ற உண்மையை ரொம்பவே அழகா சொல்லியிருக்கீங்க
மாதவிடாய் காலத்தை அமாவாசையுடன் ஒப்பிட்டு சொன்னதும் சரியே
உண்மைதான்
அப்பொழுதெல்லாம் பெண்களின் கர்ப்பம் குறித்து அமாவாசையை அடிப்படையாக வைத்துத்தான் எதுவும் செய்ய ஆரம்பிப்பார்கள்

மிக்க நன்றி பானும்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top