மை டியர் டே(டெ)டி-5

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
இவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி வர, அங்கு பார்க்கில் பிளாட் செக்ரெட்டரியுடன் அமர்ந்திருந்தார் விக் பாட்டி.

இவர்கள் வருவதை பார்த்து, "அய்யயோ. இந்த குட்டி சாத்தனா" என்று ஒளிய முயன்றும் முடியவில்லை.

தூரத்திலிருந்து பார்த்தே, "ஹாய் விக் பாட்டி. கைல வாக்கிங் ஸ்டிக் இல்லாம கூட வருவீங்க. விக் இல்லாம வரமாட்டீங்க போலயே." என்று அவர் தலையில் இருந்த விக்கை ஒரு முறை எடுத்துப் பார்த்தாள்.

"ஏய். விடுடி என்னோட முடியை" என்று அந்த பாட்டி அவளைத் தடுக்க, "அய்யயோ பாட்டி. நம்ப மண்டையில தானா வந்தா தான் அது முடி. நம்பளா வச்சுக்கிட்டா அது விக். இது கூடத் தெரியலையே விக் பாட்டி உங்களுக்கு" என்று அந்த பாட்டியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டிருந்தாள் அவள்.

அப்பொழுது அவள் தோழி ஷர்மி அங்கு பார்க்கில் அவள் தாயுடன் அமர்ந்திருக்க, "இளா. ஷர்மிக்கு உடம்பு சரி இல்லை. அதனால தான் அவ இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல. நான் போயி அவ கிட்ட பேசிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு ஓட, நம் இளமாறன் தான் தனியாக அந்த விக் பாட்டியிடம் சிக்கிக் கொண்டான்.

இந்த அப்பார்ட்மென்டில் வயதான சிலரில் ஒருவர் தான் இந்த வடிவு பாட்டி. போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவரையும் ஏதுனும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்.

வயதாக ஆக, தலை முடி அனைத்தும் கொட்டிவிட, செயற்கையாய் விக் வாங்கி மாட்டிக்கொள்கிறார். இது அனைவருக்கும் தெரியும் தான். இருந்தும் அவர் காதுபட எதுவும் பேசிவிட மாட்டார்கள். "இந்த வயசுல பாத்தியா! கெழவி விக் மாட்டிகிட்டு சுத்துது" என்று அவர் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் ஏராளம்.

சிறு பிள்ளைக்குத் தெரியுமா? எது நிஜ முடி, எது விக் என்று. ஒரு நாள் விக் இல்லாமல், அந்த பாட்டியைப் பார்த்துவிட, "என்ன பாட்டி? முடி காணாம போச்சு" என்று முதல் முறை, உண்மையான அதிர்ச்சியுடனே கேட்டாள் நம் நிலா.

"உரக்க பேசாத டி. அது விக்" என்றார் அந்த பாட்டி. "என்னது விக் ஆஹ்?" என்று நிலா வாயைப் பிளக்க. "ஆமா டி இவளே. ஒழுங்கா வூட்டுக்கு ஓடு" என்று சொல்லி அனுப்பிவிட்டார் அவளை.

அதன் பின், அவரைக் காணும்பொழுதெல்லாம் 'விக் பாட்டி' என்று தான் அழைக்கிறாள். அதைச் சொல்லிகாமிக்க வேண்டுமென்று எந்த உள்நோக்கமும் இல்லை நிலாவிற்கு. 'விக்' என்பது அங்கு இருக்கும் பாட்டிகளுக்குள், இந்த வடிவு பாட்டிக்கு அவள் குடுத்த ஒரு அடையாளம். அவ்வளவே. கும்பலாக 4 பேர் அமர்ந்திருந்தாள், யாரை அழைக்கிறோம் என்று தெரியவேண்டுமல்லவா. அதற்காக அப்படி பெயர் வைத்து அழைக்கத் தொடங்கியது. அப்படியே பழகிவிட்டது நிலாவிற்கு.

நிலா எந்த உள்நோக்கமும் இல்லாமல் அழைத்தாலும், அப்படி அழைக்கும் போதெல்லாம் உடன் இருப்பவர்கள் யாரேனும் சிரித்துவிடுவர். அது பெருத்த அவமானமாய் தோன்றும் அந்த பாட்டிக்கு. ஏதாவது திட்டி அனுப்பிவிடுவார் நிலாவை. நிலாவுக்கு தான், உடன் இருப்பவர்கள் சிரிப்பதற்கான காரணமும் தெரியாது, இந்த பாட்டி மூஞ்சை காட்டுவதற்கான காரணமும் புரியாது. "இப்படி திட்டும் போது, உன் மூஞ்சி எப்படி தெரியுமா இருக்கு" என்று முகத்தை அந்த பாட்டிக்கு அஷ்டகோணலாய் வைத்துக் காட்டிவிட்டு, ஓடி விடுவாள்.

அதனாலே இந்த பாட்டிக்கும், நிலாவுக்கும் ஏழாம் பொருத்தம்.

நிலா சென்றுவிட, அங்கு நின்றிருந்த மாறனை பார்த்து, "என்ன தான் புள்ள வளர்த்து வச்சிருக்கானோ. யாருக்கும் கொஞ்சம் கூட மரியாதையே தராது. பெத்தவனையே பேர் சொல்லிக் கூப்புடுது. அதுக்கே ஒண்ணுமே சொல்லாம இளிச்சிகிட்டு கொஞ்சுறான் அவளை. அப்புறம் எப்படி அந்த பொண்ணு உருப்படும். அந்தக் காலத்துல எங்க அப்பாவெல்லாம் அப்பான்னு கூப்பிடவே பயப்படுவோம். ஐயான்னு தான் கூப்பிடுவோம். அப்டி மிரட்டி வச்சிருப்பாங்க. அப்பா முன்னாடி ஒரு வார்த்தை பேசமாட்டோம். அப்பா இருந்தா அந்த எடத்துல உக்கார கூட மாட்டோம்.

இது என்னடான்னா. அப்பன் முன்னாடியே இப்டி எல்லார்கிட்டயும் வாயாடுது. அவன் தல மேலயே ஏறி உக்காந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது. புள்ளைய அடக்கி வளர்க்க தெரியுதா எங்கயாது. இவனுங்கள சொல்லிக் குத்தமில்ல. இப்போ வர சினிமா படத்துல தான், ஹீரோங்க எல்லாரும் பொட்ட புள்ளைய தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாய்ங்க. கண்ணே மணியேன்னு பாட்டெல்லாம் வேற பாடி வச்சிடுறாய்ங்க. இவங்களும் அதையெல்லாம் பாத்துட்டு, மனசுல அப்டியே ஹீரோன்னு நெனச்சிட்டு இப்படியெல்லாம் புள்ளைய ஒழுக்கம் இல்லாமா வளர்க்குறானுங்க" என்று கண்டமேனிக்கு பேசியவர், மாறன் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க, அவன் முகம் சிவந்திருந்தது.

இதுவரை மாறனை அப்படி அந்த பாட்டி பார்த்ததில்லை. ஏன், இந்த அப்பார்மெண்டில் இருக்கும் யாருமே மாறன் கோபப்பட்டு பார்த்ததில்லை. ஆனால் இன்றோ, அவன் முகத்தை இறுக்கியதில், நெற்றியில் சில ரேகைகள் ஓடியது. கண்களில் கோவம் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டையின் கை சுருக்குப்பட்டை பட்டனை அவிழ்த்து, முழுக்கை சட்டை அதை, முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததுமே பேசுவதை நிறுத்திவிட்டார் அந்த பாட்டி, "அடிச்சிப்புடுவானோ?" என்று தான் விக் பாட்டியின் மனசில் ஓடிக்கொண்டிருந்தது.

சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்தவன், சட்டென அருகில் வர, பயத்தில் ஒரு நொடி கண்ணை மூடிக்கொண்டார் அந்த பாட்டி. அவர் கண்திறந்து பார்க்கையில், அவர் அருகில் அவர் அமர்திருந்த உயரத்திற்கு, முட்டிக்கால் போட்டு தரையில் இருந்தான் அவன்.

அவர் அருகில் வந்து, "ஏன் கொழந்தை மேல இவ்வளோ கோவம். அப்புறம் என்ன சொன்னீங்க? உங்க காலத்துல உங்க அப்பா உங்கள வளர்த்த முறையோட, நான் என் பிள்ளையை வளக்குறத கம்பேர் பண்ணீங்க ல.

அன்னைக்கு உங்க அப்பாவுக்கு ஒரு பயம் இருந்துருக்கும்ல.நம்ப குழந்தை கிட்ட யாராவது தப்பா நடந்துக்குவாங்களோன்னு. இன்னைக்கு இருக்க அப்பாங்களுக்கு அந்த பயம் ரொம்ப பூதாகாரமா வளந்துருக்கே. தினம் தினம் பேப்பர், டி.வி'ன்னு தான் பாக்குறோமே. 3,4 வயசு குழந்தைங்க கூட யாரோட காம பசிக்கு இறை ஆகுறதை. மூணு வருஷத்துக்கு முன்ன, இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் ரீதியா துன்புறுத்தப் படுதுன்னு கணக்கு சொன்னாங்க.ரெண்டு வருஷத்துக்கு முன்ன, ஒரு நாளைக்கு 109 குழந்தைகள்'ன்னு கணக்கெடுத்தாங்க. இதுவும் இந்தியாவில் மட்டும் எடுத்த கணக்கு தான். இந்த கணக்கு கூடிகிட்டே தான் இருக்கு. கொறஞ்சபாடில்லை. ஒவ்வொரு முறையும் இதை பத்தி, செய்தி கேட்கும்போது, பொண்ணை பெத்தவன் மனசு எப்படி அடிச்சிக்கும் தெரியுமா? அதுலயும், இந்த மாதிரி பாலியல் துன்புறுத்தல் யாரால தெரியுமா? அந்த குழந்தையோட சொந்தக்காரங்களோ, இல்ல பெத்தவங்க நம்பி விட்டுட்டு போற யாராலேயோ தான். இப்போ எதுக்கு இவன் இதெல்லாம் சம்பந்தம் இல்லாம சொல்லிட்டு இருக்கான்னு யோசிக்கறீங்களா?

சம்பந்தம் இருக்கு ம்மா. அன்னைக்கு உங்க அப்பா உங்கள அதட்டி வளத்தாங்கன்னு சொன்னீங்களே. அப்பா முன்னாடி இருக்கப்போ ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன்னு சொன்னீங்களே. அப்படி நானும் என் புள்ளைய வளர்த்தா, அவளும் என்கிட்ட எதையாவது சொல்ல கூடப் பயப்படுவா தான மா? அவ கொழந்தை தான். ஆனா, யாரோ ஒருத்தன் அவளைத் தப்பான எண்ணத்தோட தொட்டா, அது அவளுக்குப் புரியும். அதை என்கிட்ட சொல்லணும்ல. அதைத் தெளிவா சொல்லமுடியாட்டியும், ஏதோ தப்பா நடக்குதுன்னு உணர்த்தனுமே. உங்க அப்பா உங்கள அதட்டி வச்சிருந்த மாதிரி, நான் அவளை வச்சுக்கிட்டா, என்கிட்ட சொல்லுவாளா அவ? சொல்ல முயற்சியாவது பண்ணுவாளா?

ஏன், நீங்கச் சொல்லுங்க. அவ வயசுல, உங்கள யாராச்சும் தப்பா தொட்டு, ஏதோ தப்பா இருக்குனு தெரிஞ்சிருந்தா கூட, அதை அன்னைக்கு உங்க அப்பா கிட்ட சொல்லிருப்பீங்களா? அம்மாகிட்டயோ, இல்ல அக்காகிட்டயோ சொல்ல நெனச்சிருப்பீங்க. அவங்க கிட்ட கூட, அவங்க நம்பள நம்புவாங்கனு நம்பிக்கை இருந்தா தான சொல்லுவீங்க? தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லுறவங்களா இருந்தா, இதுக்கும் நம்ப மேல தான் பழி போடுவாங்கன்னு விட்ருவீங்க தான? அவங்க கிட்ட சொல்லலாமான்னு யோசிக்கற மாதிரி கூட, அப்பா கிட்ட சொல்லணும்ன்னு யோசிக்க மாட்டீங்க தான.

ஆனா, என் பொண்ணுக்கு அம்மா கூட இல்லையே. எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் சொல்லணும் அவ. அதுக்கு அவளுக்குள்ள ஒரு நம்பிக்கை விதைக்க வேண்டாமா? நம்ப என்ன பண்ணாலும் அப்பா நம்பளுக்கு துணையா இருப்பாரு. நம்பள தப்பா புரிஞ்சிக்க மாட்டாருன்னு அவ நம்ப வேணாமா? அப்போ தான் என்கிட்ட சொல்ல யோசிக்க கூடச் செய்வா.

அவ செய்யுற சின்ன சின்னத் தப்பையெல்லாம் பெருசு பண்ணி, நம்ப என்ன பண்ணாலும் இந்த அப்பாவுக்குத் தப்பா தான் தெரியும்'ன்ற எண்ணத்தை அவ மனசுல விதைக்கச் சொல்றீங்களா? அவ செய்யுற சின்ன தப்பையும், நான் திருத்திகிட்டு தான் இருக்கன். ஆனா, நீங்க எதிர்பாக்குற விதத்தில் இல்ல. வன்முறையோ, சுடுசொல்லோ உபயோகிக்காம, அவளுக்குப் புரியுற விதத்துல, அவளால ஏத்துக்கோ முடியுற விதத்துல சொல்லிக்கிட்டு தான் இருக்கன். அவளுக்கு அவ மேல இருக்க நம்பிகையும், என்மேல இருக்க நம்பிக்கையும் கொஞ்சமும் குறையாம சொல்லிட்டு தான் இருக்கான். அவளும் கேட்டுகிட்டு தான் இருக்கா.

அப்பறம் என்ன சொன்னீங்க? சினிமா பார்த்துட்டு, பிள்ளையை இப்படி வளர்க்குறோமா? நெஜத்துல நடக்காத ஒரு விஷயத்தை, அதுவும் பாசம், உணர்வு சம்பந்த பட்ட விஷயத்தை யாரும் சினிமாவில் எடுக்கவும் போறதில்ல, அப்டி எடுத்தாலும் அதை யாரும் ஏத்துக்கவும் போறதில்ல.

என் குழந்தைய நான் கொஞ்சி கொஞ்சி வளர்க்கறேன்னு சொன்னீங்களே. நீங்கச் சொல்லற மாதிரி, அவகிட்ட நான் கொஞ்சாம கண்டிப்பா வளர்த்தா, என் புள்ள ஏங்கிட மாட்டாளா! தோ. அங்க பாருங்க. அந்த ஷர்மி. இவ கூடப் படிக்கற பொண்ணு தான். இப்போ அந்த கொழந்தை அவங்க அம்மா மடியில உக்காந்துட்டு இருக்கா. இதைப் பார்த்து, நம்ப அம்மா இல்லையேன்னு தோணாதா என் கொழந்தைக்கு. நிச்சயமா தோணும். தினம் தினம் சொல்லுவா என்கிட்ட, ஷர்மி அம்மா, இது பண்ணாங்களாம்... இப்டி பண்ணங்களாம்ன்னு எல்லாம் வந்து சொல்லுவா என்கிட்ட. எல்லாத்தையும் சொல்லிட்டு, எனக்குத் தான் இதெல்லாம் செய்ய இளா இருக்கான்னேன்னு சொல்லி முடிச்சிடுவா. அந்த வரி. இளா இருக்கான்னு அந்த ஒத்தை வரி. அது இல்லனா, எவ்ளோ ஏங்கிடுவா அவ.

அதுக்காக அவ என்னோட கட்டப்பாட்டுக்குள்ள இல்லன்னும் சொல்லிட முடியாது. நான் குட்டி இளான்னு கூப்புட்ற வரை அடம் பிடிக்கறவ, நான் நிலா'ன்னு அதட்டுன அடுத்த நிமிஷம் அடங்கிருப்பா.

சரி. இப்போ அவ என்ன பண்ணிட்டான்னு உங்களுக்கு இவ்ளோ கோவம். உங்கள விக் பாட்டின்னு கூப்புட்றதுக்கா. அவ உங்கள கலாய்ப்பதற்காக அப்டி ஒன்னும் கூப்பிடல. ஆனா, அது உங்கள உறுத்துது. அதுக்கு காரணம். இப்டி விக் போடுறதை அசிங்கமா நினைக்கறீங்க. அதான் காரணம். நீங்க இப்போ திருத்த வேண்டியது உங்கள தான். விக் போட்டுக்கறது நீங்க அழகுக்காகச் செய்யுற ஒன்னு. உங்கள வெளிஉலகத்துக்கு நீங்க எப்படி ப்ரெசென்ட் செய்ய விரும்பறீங்களோ. அப்டி பண்ணிக்கறீங்க. அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன்? எப்படி, கலரா காமிச்சிக்க பவுடர் பூசுறோமோ, உதட்டை செவப்பா காமிக்க, சாயம் பூசுறோமோ அப்டி தான். உங்கள முடியோட காமிக்க நெனச்சி விக் போடறீங்க அவ்ளோ தான்" என்று அவன் பேசிக்கொண்டிருக்க, "பே..பே.." வென முழித்தார் விக் பாட்டி.

அந்த பக்கம் ஒரு காலேஜ் பெண் கடந்து செல்ல, "ஒரு நிமிஷம் இங்க வாங்க" என்று மாறன் அழைக்க, "சொல்லுங்கண்ணா" என்று அவளும் வர. அந்த பெண்ணிடம், "ஏம்மா. உன் கண் இமை இவ்வளோ அடர்த்தியா இருக்கே. எப்படி மா" என்று கேட்க, "ஹையோ அண்ணா. இது ஃபால்ஸ் ஐலாஷ் (false eyelash ) அண்ணா" என்று கையில் எடுத்துக் காட்டினாள் அவள். "கண்ணு கூட நீலமா இருக்கே?" என்று மாறன் கேட்க, "அதுவும் லென்ஸ் தான் அண்ணா" என்று கூறிவிட்டு சென்றாள் அவள்.

"பாத்தீங்களா? கண் இமையில் முடி பத்தலன்னு, அதையே செயற்கையாகப் பொருத்திட்டு போறாங்க. அதே தான, நீங்கத் தலைக்கு விக் போடுறதும். இதுல என்ன அசிங்கம் இருக்கு. யாராவது கேட்டா, ஆமாம் போடுறேன்னு சொல்லுங்க" என்று அவன் பேசிக்கொண்டிருக்க, இவன் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள் இளநிலா.

"என்ன இளா! விக் பாட்டி கிட்ட ஏதோ தீவிரமா பேசிகிட்டு இருக்க போலயே. உனக்கும் முடி கொட்டுது ல. சொட்டை ஆகிட்டா, நீயும் விக் போடத் தான பாட்டி கிட்ட விசாரிச்சிட்டு இருக்க" என்று அவள் கேட்க, "என்னது? நா சொட்டையாகப் போறேனா? பாரு எவ்ளோ முடி இருக்கு" என்று அவன் தலையைக் கோதி காமிக்க "போடா பஞ்சுமிட்டாய் தலையா" என்று சொல்லிவிட்டு ஓட, அவள் பின்னால் துரத்திக்கொண்டு ஓடினான் மாறன்.

இத்தனை காலம் தன்னை புறம் பேசுவோரையும்., ஏசுவோரையும் மட்டுமே கண்டிருந்த Wig பாட்டிக்கு மாறன் கூறியதும்., கூறிய விதமும் புதிதாய் தெரிந்தது. அதனை ஆழ சிந்தத்தவர் 'அவன் கூறியதும் சரி தானே.. நான் என்னை அழகு படுத்த நினைப்பதை ஏன் அசிங்கமென எண்ண வேண்டும்' என்று தோன்றியது.

மாறனின் முதிர்ச்சியடைந்த சிந்தனையை எண்ணி வியந்தவர் தன் மகளை ஒரு தெளிவான பிள்ளையாகவும் வளர்ப்பதை எண்ணி புன்னகைத்துக்கொண்டே அவ்விரண்டு இளாவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top