முரண்பாடே காதலாய் 6

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#16
நிஜமதில் இணையமுடியாமால் போகுமோ என்னும் பயத்தினில்..
தன் பிரியத்தை நினைவில் கொண்டு கானல்நீராய் சுகம் காணும் மனங்கள் இவ்வுலகில் பலகோடி....!!!அத்தியாயம் 6:


சின்னம்பாளையம்:

சூரியனின் கதிர்கள் பூமியழகியிடம் விடைபெற்று மேற்கில் மறையத் தொடங்க, தனது தடை கலைந்ததில் பூமி அவளைக் கண்டுக்களிக்க ஓடோடி வந்தான் சந்திரன்.

நேரம் இரவு ஏழை கடந்திருக்க இன்னும் முழுதாய் தன் கிராம ஆடையை கலையாத அவ்வூர்மக்கள் அனைவரும் இந்நேரத்திற்கே வீட்டின் கதவை அடைத்திருந்தனர்.

அவ்வூர் முழுக்க தொலைக்காட்சியின் சத்தமும் , அவ்வப்பொழுது நாய்களின் குறைப்பு ஒலியுமே கேட்டுக்கொண்டிருந்தது .

அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருக்க அத்தெருவின் முடிவில் ஒரு வீட்டினில் மட்டும் இன்னும் விளக்கு எரிந்தது மட்டுமில்லாமல் , பேச்சுக் குரலும் கேட்டது .

"டேய் மித்ராராரா ! " என மித்ரனை அழைத்த யஷியின் குரல் அவ்வூரின் அமைதியை கிழித்துக்கொண்டு பலமாய் கேட்டது.

" ஷ்ஷ்ஷ்....! ஏண்டி உன் கீச்சு குரல வச்சிக்கிட்டு கத்தி தொலைக்குற, பாரு நாய்லாம் பயந்து குறைக்குது . நான் இங்க தான இருக்கேன் ...கொஞ்சம் மெதுவா பேசு" என்றவனின் பேச்சின் முதல் பாதியில் குறுக்கிட்ட யஷி ,

"யாருக்குடா கீச்சு குரல் உனக்கு தான்டா காண்டாமிருகம் குரல்" என்றவள் அவனின் இரண்டாம் பாதியில் ," என்ன...என்னசொன்ன ???? ..யூ ...யூ....இடியட் ...உன்ன...." என்றவாரே
கையிலிருந்த கைபேசியை அவனை குறிபார்த்து எறிந்ததில் அது சரியாய் அவனின் தலையை தாக்கியது .

"ஆஆ....ராட்சசி என் மண்டையவா உடைக்குற . நில்லுடி! உன்னைய இந்த ப்ராஜெக்ட் முடிறதுக்குள்ள இச்சாதாரிக்கு இரை ஆக்கல என் பெயர் மித்ரன் இல்ல டி " என்றவனின் வாய் வீராவேசமாக பேசினாலும் , கை வலித்த இடத்தை தடவியது .

" ஒன்னும் பிரச்சனை இல்லடா , சோணமுத்தான்னு வேணும்னா வச்சிக்கோடா உனக்கு நல்லா பொருத்தமா இருக்கும் " என அப்பெயரை சொல்லி அவனை அழைப்பதாய் எண்ணிப்பார்த்தவளிற்கு சிரிப்பு வந்துவிட , வாய்விட்டு சிரித்தாள்.

"அடிங்.....!" என தன் முன் வாயாடி கொண்டிருந்தவளின் பின்னலை பிடித்து தன் பக்கம் இழுத்தவன், " இங்க நாகங்களோட இருப்பிடம் எங்க இருக்குனு கண்டுபிடிக்க சொன்னா.. மைக்க எடுத்துட்டு போய் மக்கள்கிட்ட வெறும் பேட்டியை மட்டும் எடுத்துட்டு வந்துட்டு பேச்சை பாரு " என இப்பொழுது அவன் அவளின் தலையில் கொட்டினான் .

அதில் அவள் முகத்தை சுருக்க, " அடியே பாப்பா ..! உடனே உர்ராங்கோட்டன் மாதிரி மூஞ்ச வைக்காத, இங்க பாரு" , என்று அங்கிருந்த யஷியின் லேப்டாப்பை எடுத்து திறக்க அது கடவுச்சொல் கேட்டதில், அதை வாங்கிய யஷி கடவுச்சொல்லை போட்டவள்அவனிடம் திறந்து கொடுத்தாள்.

அதில் தனது "பென்ட்ரைவை" இணைத்து தான் சேகரித்துவைத்த செய்திகளை அவளிடம் காண்பித்தான் .

அவற்றை பார்த்த யஷிக்கு யாரோ ஒருவரின் மூச்சுக்காற்று அருகில் தன் மேல் படுவது போல் தோன்ற தங்களை சுற்றி பார்த்தாள்.

அவளின் கவனம் தான் காமிப்பதில் இல்லாததை உணர்ந்த மித்ரன் அவளின் கையில் தட்டி ," யஷிமா..! நல்லா பாரு இந்த இடத்துல தான் இச்சாதாரிகள் வசிப்பதா நம்ப மக்களால் நம்பப்படுது . அதுமட்டுமில்லாம இந்த காட்டுல ஒரு சிவன் கோவில் இருக்குறதாகவும், அங்க ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இச்சாதாரிகள் வருவதாவும் சொல்லப்படுது . நம்ப ப்ராஜெக்ட் -டோட கடைசி பகுதி இங்க தான் , நம்ப எப்படியாவது இந்த காட்டுக்குள்ள போய்டணும்.நான் அதுக்கு சில திட்டங்கள் வச்சிருக்கேன் . அதில ஒன்னு இங்க இருக்க மக்களோட இச்சாதாரிகள் பற்றின பார்வை என்னனு தெரிஞ்சிக்கிறது சோ நீ இந்த மைக்க வச்சிக்கிட்டு மக்கள்கிட்ட தாராளமா சீன போடு" என்று தங்களின் ப்ராஜெக்ட் பத்தி பொறுப்புடன் பேசிக்கொண்டிருந்தவன் இறுதியில் கிண்டலில் நிறுத்தினான் .

இதற்க்கு யஷியிடம் இருந்து பலமான அடியை எதிர்பார்த்திருந்தவன் அவளின் அமைதியில் திரும்பி அவளை பார்க்க , அவளோ வேறோரு யோசனையில் அமர்ந்திருந்தாள் .

மித்ரன் காட்டிய புகைப்படங்களை கண்ட யஷிக்கு ஏதேதோ நியாபகங்கள் . ஏதோ ஓர் சுழலுக்குள் சிக்குவது போல் தோன்றி மூச்சு விட திணற ஓர் கரம் அவளை பிடித்து உலுக்கியது .

"ஏய் ...! என்னடி ஆச்சு?" என அவளின் அமைதியில் மித்ரன் அவளைபோட்டு உலுக்க அதில் அதிர்ந்து விழித்தவள் சட்டென்று தனக்கு தோன்றிய பிரம்மையிலிருந்து வெளிவரமுடியாமல் திணறினாள் .

என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியவள் அவனிடம் அப்புகைப்படத்தை காட்டி , "அது ....இந்த காடு எங்க இருக்கும்னு யோசிச்சிட்டிருந்தேன் " என சமாளித்தாள் .

"ம்ம்ம்....கிட்டதட்ட கண்டுபிடிச்சிட்டேன் டி , இங்க பாரு என அதில் ஒரு வரைபடத்தை காட்டியவன் , இதோ இது தான் வடகாலத்தூர்... இந்த ஊர்ல இருந்து தான் கொஞ்ச தூரத்துல அந்த காடு இருக்கறதா சொல்லுறாங்க .அதாவது இங்க இருந்து சரியா ஆறு மணி நேரம் டிராவல் பண்ணா அந்த இடம் வந்துரும் . நம்ப மட்டும் இந்த இடத்தை கண்டுபிடிச்சிடோம்னா அது தான் நம்ப ப்ரொஜெக்-டோட வெற்றி " என சொல்லிகொண்டே வந்தவன் , யஷியின் கேள்வி பாவனையில் தன் பேச்சை நிறுத்தி என்ன ?? என்பதை போல் பார்த்தான்.

" இல்லடா இவ்ளோ தெளிவா சொல்ற இச்சாதாரிகள் இங்க தான் இருந்தாங்கனு .அப்புறம் எதுக்கு நம்ப இங்க நேரத்த வீணடிக்கணும் ?? "

"அடியே லூசு பாப்பா...! மேச் பாக்குறதுக்கு முன்னாடியே ரிசல்ட் என்னனு தெரிஞ்சுடிச்சுனா அந்த மேட்ச் ஆஹ் நம்ப அதே இன்ட்ரெஸ்டோட பார்ப்போமா ???அதே தான் டி . எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்து என்னன்னு ஒரு த்ரில் இருந்தா தான் நல்லா இருக்கும் . அடுத்து என்னனு ஆர்வத்தை தூண்டனும் அப்போ தான் மக்கள் நம்மளோட இந்த நிகழ்ச்சியை பார்ப்பாங்க . அண்ட் இந்த ஊருக்கு ஏன் வந்தோம்னு கேட்டல ? , இங்க பாரு என்று இன்னொரு செய்தியை காட்டியவன் ,

"இந்த ஊர்ல சில வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு திடிர்னு பாம்பா மாறுனத பார்த்ததாகவும் , அது இச்சாதாரி நாகம் தான்னும் மக்கள் இந்த செய்தில சொல்லி இருக்காங்க " என யஷிக்கு பொறுமையாய் விளக்கிக்கொண்டிருந்தவனை அவனின் கைப்பேசி அழைத்தது.

அழைப்பை ஏற்றவனுக்கு அப்பக்கம் பேசுவது தெளிவாக கேட்காமல் போக, வெளிவந்து வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

அவன் பேசி முடிக்கும் தருவாயில் ஒரு நான்கு சக்கர வாகனம் அவனை கடக்க இயல்பாய் கண்டவனுக்கு , அதில் மதியம் மற்ற வாகனங்களில் இருந்த அதே வார்த்தை இருப்பதை பார்த்து மதியம் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்தது . அதனுடன் சேர்ந்து அக்குரலின் வார்த்தைகளை அவனின் மூளை மீண்டும் ஓர்முறை நினைவுபடுத்த சட்டென்று திரும்பி யஷியை பார்த்தான்.

மதியம் தொடர்ந்து பல வேலைகள் அவனை தன்னுள் மூழ்கடித்ததில், அவன் மதியம் நடந்த அனைத்தையும் மறந்தேவிட்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் .இப்பொழுது அக்குரலை பற்றி யோசித்தவனுக்கு அவ்வார்த்தைகளின் அர்த்தம் யஷிக்கு இதில் ஏதும் ஆபத்து நேரிடுமோ என்பதா? அதை தான் அக்குரலில் என்னிடம் சொல்லியதா ? என யோசித்தவனின் கைகள் தானாய் வாகனங்களில் கண்ட வார்த்தையை தனது கைப்பேசியில் அழுத்தியது.

வீட்டின் உள்ளே மித்ரன் காட்டிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் யஷி. அதை படிக்க படிக்க மீண்டுமாய் ஏதோ ஒரு மாய உலகத்திற்குள் நுழைந்தது போலவே இருந்தது .

இச்சாதாரிகள் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல் அதில் இச்சாதாரி நாகினிகள் என குறிப்பிட்டு ஒரு படமும் வரையப்பட்டிருந்தது.

அதை பார்த்தவள் காலை கனவில் வந்த நாகத்தின் நினைவில் அப்படத்தையே உற்றுப் பார்த்தாள்.

கனவின் தாக்கமோ என்னவோ அப்பக்கத்தில் இருந்த நாகத்தின் உருவம் சட்டென்று கனவில் வந்தவனின் உருவமாய் தோன்றியது .

அதை கண்டவளுக்கு, அதிர்ச்சியில் வாய் பிளக்க தன் வலக்கரத்தை வாயில் வைத்தவளின் கண்கள் இரண்டும் விரிந்தது . அவளின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அப்புகைப்படத்தில் இருந்தவன் தன் கன்னக்குழி சிரிப்புடன், அவளை கண்டு கண் சிமிட்டினான்.

அவ்வேளையில் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்ற அப்படத்தை பார்த்தவாறே " இந்த சீரியல்லலாம் பொண்ணுங்க தான இச்சாதாரியா காட்டுவாங்க , பையன் இச்சாதாரிலாம் இருக்கா என்ன ?? "என மிக தீவிரமாய் யோசிக்க ,

"ஏன் நீ நாகினி பார்ட் டூ பாக்கல ? அதுல பையன் இச்சாதாரியா வரலையா ?? அதும் அவன் முதல்ல வில்லனுகூட கண்டுக்காம நீ ஜொள்ளுவிட்டுக்கிட்டேபார்க்கல " என அவளின் மனசாட்சி காறித்துப்பியது .

அதில் அசடுவழிய அதை மறைப்பதற்காய் மித்ரனை அழைக்க , அவளின் முகத்தை கண்ட புகைப்படத்தில் இருந்த உருவம் தற்பொழுது வாய்விட்டு சிரித்தது .

அவனின் அச்சிரிப்பு அவளை பயம்கொள்ள வைப்பதிற்கு பதிலாக ஆணின் கம்பீரம் கலந்த வசீகர சிரிப்பாய் இருக்க அதை அதிர்வுடன் உள்வாங்கியவள் சட்டென்று அதை மூடிவிட்டு இன்னும் உள்வராத மித்ரனிடம் விரைந்தாள் .

இவள் அருகில் வந்ததை கூட உணராமல் அவன் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, எதிரில் இருந்தவளுக்கு அவனின் அந்த தீவிர முகபாவனை ஆச்சரியம் அளிக்க , " அப்படி என்னத்த பார்க்கிறான்" என யோசித்தபடி அவனின் கையில் இருந்த கைப்பேசியை சற்று எக்கி பார்த்தாள்.

"PAID"
-என்ற ஆங்கில வார்த்தையின் பொருட்கள் மற்றும் அதன் விரிவாக்கம் என அப்பக்கம் முழுவதும் விரவிக் கிடக்க, யோசனையுடன் ,

"paid" என முனகியவள் ,"இது இந்த ஊர்ல நம்ப பார்த்த நிறைய வண்டியில இருந்த வார்த்தை தான ?" என சந்தேகத்துடன் கேட்டவள் அவனின் தோள் தொட்டாள்.

அதில் கலைந்த மித்ரன் அவள் வந்ததை உணர்ந்து ,"நான் இன்னும் வரலைன்னு வந்தியாடி ...அதுவந்து எனக்கு இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தமா இருக்கும்னு தெரிஞ்சிக்கணும்டி . நானும் எதுஎதிலயோ தேடிட்டேன் , சந்தேகப்படற மாதிரியோ இல்ல இது கோட் - ன்ற மாதிரியோ எந்த கிளுவும் கிடைக்கல " என்றவனின் பேச்சு அவளிடத்தில் இருந்தாலும் கண்கள் கைபேசியில் இருந்தது.

"ம்ப்ச்....ஒன்னும் புரியலடி " என பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே அவனின் கைபேசி அணைந்துவிட "ஷிட் " என அருகில் இருந்த சுவற்றில் கைகளை குத்தினான்.
.

"மித்ரா " என பதறி அவளின் கைகளை பிடித்து தடுத்த யஷி ,"என்னடா ஆச்சு உனக்கு ? முதல்ல உள்ள வா நீ " என அவன் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றவள் அவனை சோபாவில் அமரவைத்துவிட்டு அவனின் கை காயத்திற்கு மருந்தெடுக்க சென்றாள் .

மித்ரனுக்கு அவ்வார்த்தையில் தான் தெரிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய ஆபத்து இருப்பதாய் மனம் சொல்ல அதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என நினைத்தவன் , கைப்பேசியை மின்சார இணைப்பில் பொருத்தியபடியே , அச்சொல்லின் ஒவ்வொரு பொருளையும் மீண்டும் மீண்டும் மனதுக்குள் கொண்டு வந்து பார்க்க அதில் ஏதும் தவறாக இருப்பதாக அவன் மனதிற்கு தெரியவில்லை.

இவனின் குழப்ப முகத்தை கண்ட காற்றுடன் கலந்திருந்த அவ்வுருவம் அவனுக்கு உதவ எண்ணி மிகவும் வேகமாக வீசியது.

அதில் இவன் கண்களில் ஏதோ எரிச்சல் தோன்ற சட்டென்று கைகள் கொண்டு கண்ணை கசக்கியவனின் கையில் இன்னும் சரியாய் பொறுத்தப்படாமல் பிடித்துக்கொண்டிருந்த கைப்பேசி , கீழே விழுந்தது .

காற்றின் வேகம் இன்னும் குறையாமல் இருக்க கைபேசியை எடுப்பதற்க்காக குனித்தவனுக்கு கை எட்டாமல் போக , எழுந்தவனின் கால் முன்னிருந்த மோடாவில் இடித்ததில் தடுமாறி முன் யஷி அமர்ந்திருந்த சோபாவில் விழ, அவள் மூடி வைத்து விட்டு வந்த லேப்டாப் இவன் விழுந்த அதிர்வில் கீழே விழுந்து திறந்தது .


இதற்காகவே நான் வந்தேன் என்பது போல அத்தனை நேரமாய் வேகமாய் வீசிய காற்று மீண்டும் தென்றலாய் மாறி மெதுவாக தன் வேலையை பார்த்தது.

கீழே விழுந்த லேப்டாப்பினை கண்டவன் காற்றின் வீச்சும் சட்டென்று மாறியதை உணர்ந்தான்..

அவர்கள் இவ்வூருக்கு வருவதாய் முடிவாகிய தினத்திலிருந்தே காற்று தனது ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை தனக்கு தெரிவிப்பதை உணர்ந்திருந்தவன், தற்பொழுதும் இதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அந்த லேப்டாப்பினையே பார்த்தான் .

லேப்டாப்பினை எடுத்தவன் அதை உயிர்ப்பிக்க , அதுவோ கடவுச்சொல் கேட்டது . சற்றுமுன் யஷி அழுத்தியதை பார்த்திருந்தவன் அதை அழுத்தி விட்டு காத்திருந்தான் .

ஆனால் கடவுச்சொல் தவறு என்று காட்டப்பட சற்று குழம்பியவன் ,"யஷி இதுதான போட்டா " என சந்தேகமாய் யஷியை அழைத்தான் .

மருந்தெடுத்துக்கொண்டு வந்தவளை கண்டவன் , " பாப்பா...! நீ கொஞ்ச நேரம் முன்ன போட்ட பாஸ்வேர்ட் இப்போ போட்டா தப்புனு வருதுடி" .

அவனின் அருகில் வந்தவள் ," டேய் அது எப்படி கொஞ்ச நேரத்துல தப்புனு வரும் ? நீ என்னனு போட்டடா?" எனக் கேட்டுக்கொண்டே மருந்தை தடவ துவங்கினாள்.

அவளிடம் வலது கையை கொடுத்தவன் , தான் சொல்வதை நிரூபிக்க முயலும் சிறுவனாய் , " நீயே பாரு" என்றபடி ஒவ்வொரு எழுத்தாய் சொல்லியாவாரே இடதுகையில் அழுத்தத் தொடங்கினான்.

"Y"..." A"..."S"..."H".."I"..."I". உன் பெயரை தான இழுத்து போட்டுருக்க, சரியா ? "என்றான்.

"டேய் லூசு கடைசி எழுத்து 'ஐ' இல்லடா 'சின்ன எல்' போடு ...நீதான சொல்லுவ நம்ப பீல்ட்ல (field) ஆபத்து ஜாஸ்த்தி , பாஸ்ஒர்ட லாம் ஒழுங்கா இருக்கணும்னு அதுக்காக நானே யோசிச்ச சின்ன ட்ரிக்! உன் முன்னாடி தான் அத போட்டேன் ஆனா நீ யே ஏமாந்துட்டியே , ஹாஹா எப்படி என் மூளை " என தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் .

அவள் பேசியதை முழுதாய் காதில் வாங்கிக்கொள்ளாத மித்ரனுக்கு அவள் சொல்லிய " 'ஐ' க்கு பதில் 'எல்' " என்ற வார்த்தையே மீண்டும் மீண்டும் தோன்ற ,

தானாய் அவனின் வாய், "ஆமாம் . ஏன் அப்படி இருக்க கூடாது ?? தூரத்துல இருந்து பாக்குறப்போ 'ஐ' யும் சின்ன 'எல்'-யும் ஒரே மாதிரி தானே இருக்கும் என்றவன் ,

அந்த லேப்டாபினிலே இணைய தொடர்பேற்படுத்தி , முன் முயற்சித்த " PAID" என்னும் வார்த்தையில் ஐ என்ற எழுத்திற்கு பதில் எல் (l) என்று மாற்றி அதற்குண்டான விரிவாக்கத்திற்கு காத்திருந்தான் .

இவன் இங்கு அவ்வார்த்தையின் ஆராய்ச்சியில் இறங்கி கொண்டிருந்த அதே நேரத்தில் அவ்வூரின் மற்றொரு வீட்டினில் ஒருவன் இதே வார்த்தை தாங்கிய அட்டையை தன் முன் அமர்ந்திருந்தவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

வேண்டுமென்றே இருட்டில் அமர்ந்திருந்தவன் , தன்முன் நீட்டப்பட்ட அட்டையை பார்த்தவுடன் கண்கள் பளிச்சிட திரும்பி, தன் பின் நின்ருந்தவனை தலையசைத்து அருகில் அழைத்தான்.

"ஏ ஜான்.....! இத பார்த்தியா இந்த வார்த்தையை பார்த்தியா ? இதுதான்...இதுதான் இந்த ஊர்ல நமக்கான அடையாளம்" என்றவன் , ஜானின் அமைதியான முகத்தை பார்த்து ,

"ஜான் ! இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியும்தானே "என்று விளையாட்டு சிரிப்புடன் கேட்டான்.

அவன் பதில் சொல்வதற்கு முன்பே, அவ்வட்டையை அவர்கள் முன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் அப்பாவியாய், " சார் நான் டவுன்ல காலேஜ்-லாம் முடிச்சிருக்கேன். நான் இதுக்கு பதில் சொல்லட்டுமா?" என கேட்டான் .

அவனின் கேள்வியில் ஜான் திரும்பி தன்னால் "பாஸ்" என்றழைக்கப்பட்டவனை பார்க்க அவன் சரி என்பதுபோல் தலையசைத்ததில் , அவ்விளைஞனிடம் "சரி ..! சொல்.." என்றான்.


அவனின் அனுமதியில் , தான் சரியான பதில் சொல்லி இவர்களிடம் இன்னும் பெரிய வேலையில் சேர வேண்டுமென்ற எண்ணத்தில் , நீதிபதியின் முன் வாதாடும் வக்கீலை போல நிமிர்ந்து நின்றவன்,

அதிலிருந்ததை ஒவ்வொரு எழுத்தாய், " 'பி' 'ஏ' 'ஐ' 'டி' என படித்தவன் , இதன் விரிவாக்கம் 'People Against Illegitimate Debt '
அதாவது 'நாங்கள் முறைக்கேடானவர்களுக்கு எதிரானவர்கள்' என்று அர்த்தம் "

-என தன் ஒல்லியான தேகத்தை விறைப்பாய் வைத்து சொன்னவன், தான் சொன்னது சரிதானா என்பதுபோல் எதிரில் இருந்த இருவரையும் பார்த்தான் .

"பாஸ்" என்று அழைக்கப்பட்டவன் சத்தமாய் தன் கைகளைத் தட்டியபடி "குட் ...வெரி குட்" என சொல்லியவாறு இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டான் .

இத்தனை நேரம் சற்று தள்ளி இருட்டில் அமர்ந்திருந்தவனின் முகம் இப்பொழுது வெளிச்சத்தில் தெரிய, அவனின் அழகிய ,கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் எதிரில் இருந்தவன் மலைத்துப் பார்த்தான்.

சிரித்துக்கொண்டே அவனின் முதுகில் தட்டி சென்று வா என்பது போல பார்த்தவன் , அவன் அதே மலைப்புடனே சென்று மறைவதை பார்த்தபடி நின்றிருந்தான் .

அவன் கண்ணில் இருந்து மறைந்த அடுத்த நொடி , "ஹா ஹா ஹா" என பலமாய் சிரித்துக்கொண்டே திரும்பிய 'பாஸ்' , "எப்படி எப்படி ...??? நாங்கள் முறைகேடானவர்களுக்கு எதிரானவர்கள் "என்று அவனைப் போலவே விறைப்பாய் சொல்லி சிரித்தான்.

அவனின் சிரிப்பை கண்ட ஜானும் , சிரித்துக்கொண்டே அவ்வட்டையை எடுத்து தங்கள் முன் இருந்த சுவரின் தடுப்பில் சாய்த்துவைத்தவன் ,

அந்த " பேய்ட்" என்ற வார்த்தையில் ஒரு எழுத்தை மற்றும் மாற்றி காட்டினான் .

அதாவது அவ்வார்த்தையை , 'பி' 'ஏ' 'எல்' 'டி' என உச்சரித்தவன் இதன் அர்த்தம் என்று இழுக்க ,

அவனுடன், 'பாஸ்' எனப்பட்டவனும் இணைந்துக்கொள்ள இருவரின் குரலும் இணைந்து,

" People Against Legitimate debt" (நாங்கள் முறையானவர்களுக்கு எதிரானவர்கள் ")என சிரிப்புடன் அவ்வீடு முழுவதும் ஒலித்தது .

அவர்களின் சிரிப்பில் கோபம் கொண்ட காற்று தனது கோபத்தை சூறாவளியாய் தன்னை சுழன்றடித்து காட்ட, அவர்கள் முன் இருந்த அவ்வட்டை பறந்து அவர்களின் முகத்திற்கு நேராய் தூக்கி வீசப்பட்டதில் ....அதன் முனை இருவரின் முகத்திலும் பட்டு சதையை கிழித்தது .


-காதலாகும்......
Nice ud
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement