முரண்பாடே காதலாய் 4

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
நம் இருவருக்குமான
முரண்களில்
மனமது உடைய துவங்க..
காதலதோ மனம் கண்டுகொண்ட முரணதையே
உடைக்க எண்ணியது !!!


அத்தியாயம் 4 :

சந்திரமதி செல்லும் பாதை :
"ஆமா நீங்க இந்த கலர் லென்ஸ் இந்த ஊர்ல , எங்க வாங்குனீங்க? இதே மாதிரி வேற வச்சிருந்தா எனக்கு தரீங்களா" என யாரென்றே தெரியாத... சில நிமிடங்களுக்கு முன் பார்த்தவனிடம் சிறிதும் பயமில்லாமல் சகஜமாய் பேசியபடி வந்தவளை வியப்பாய் பார்த்தான், சந்திராதித்யன் .

அவன் பதில் சொல்லாமால் தன்னை பார்த்து விழிப்பதை கண்டவள் , அவனின் முன் தன் கைகளை அசைக்க அதில் வியப்பை தன்னுள் மறைத்தவன் , " ஒண்ணுமில்லை....நீ இன்னும் எவ்வாறு இங்கு வந்தாய் என்று சொல்லவில்லையே" என்றான்.

"அது தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வெட்டியா மொக்க போடப்போறேன்" என முணுமுணுத்தவள் ,

பேச்சை மாற்றுவதற்காக , " உங்க கேள்வி பதில் செஷன்-ன கொஞ்ச நேரம் கழிச்சி வச்சிக்கலாமா ?" என ஆரம்பித்தவள் அவன் கேள்வியான பார்வை கண்டு ,

"ஹீஹீ எனக்கு கொஞ்சமா பசிக்கிற மாதிரி இருக்கு அதுவுமில்லாம கடைசியா எப்போ சாப்பிட்டேன்னு கூட எனக்கு நியாபகமில்லை அதுதான்" என உதடுகளை பிதுக்கி பாவமாய் சொல்லியவளை கண்டவனின் மனம் அவளின்பால் உருகியது .

வண்டியின் வேகத்தை குறைத்தவன், அந்நெடுஞ்சாலையில் கடைகள் ஏதேனும் தென்படுகிறதா என தன் கூர்மையான விழிகளால் அலசியதில் ஒன்றும் தென்படாமல் போக ," சற்று பொறுத்துக்கொள் , இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றான்.

அவன் சொல்லியதை பெரிதாய் கண்டுக்கொள்ளாமல், " ஆமா ! நீங்க என்ன ஏதோ வித்தியாசமா பேசுறீங்க?" என கேட்டவளின் குரலில் சந்தேகம் தொக்கி நின்றது.

" அது சரி! நான் வித்தியாசமாக பேசுகிறேனா ?" என கேலிபோல் வினவியவன் அதற்கு பதில் சொல்வதை தடுப்பது போல் ,

"முதலில் நான் கேட்டதற்கு பதில் சொல்!..நீ எவ்வாறு இங்கு வந்தாய் என்று கேட்டிருந்தேனே அதை சொல்ல விருப்பம் இல்லையெனில் நீ எங்கு செல்லவேண்டும் என்றாவது கூறு , நான் உன்னை கூட்டிச்செல்கிறேன்".

" அப்படினா நம்ப ... நான் முதல்ல நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து நேரா போய் வலது பக்கம் போகணும் ....அங்க ஒரு ஐந்து நிமிடம் நம்ப நடக்கணும் , அதுக்கு அப்புறம் இடது பக்கம் அதன் பின் வலது பக்கம் சென்று ஒரு அறை மணி நேரம் போகணும் அவ்வளவுதான் ...கொஞ்சம் சீக்கிரமா கூட்டிட்டு போங்க இருக்குற பசியில உங்கள சாப்பிட்டாலும் சாப்பிட்டுடுவேன் " என கடகடவென ஒப்பித்தவள் தன் இருபக்க தோள்களையும் குலுக்கிக் கொண்டாள்.

அதை கேட்ட சந்திராதித்யனுக்கு தான் ஒருநிமிடம் தலை சுற்றியது போலானது அவள் சொன்ன இடது வலதில்.

தலையை குலுக்கி கொண்டவன் சற்று கண்களை அவள்புறம் திரும்பி , "இந்த பெண் என்ன இவ்வளவு இலகுவாய் சொல்லிவிட்டாள். இவ சொன்னதில வலது , இடது இது இரண்டு மட்டும் தானே நம்மளுக்கு புரிந்தது . இதில் ஆரம்பத்தில் நான் நின்ற இடம் என்று வேறு சொன்னாளே !" என குழம்பியவன் அவளை முதலில் தான் பார்த்த நொடிகளுக்கு தன் சிந்தனையை சிறகடித்தான்.

சில மணி நேரம் முன்பு :


சிறைச்சாலையை விட்டு வெளிவந்தவன் ,தன் தோள்களில் உடல் முழுக்க ரத்தம் வழிய இறந்துகிடந்தவனை தான் வந்த வண்டியின் பின்புறம் தூக்கிபோட்டபின் , சுற்றும் முற்றும் எவருமில்லாததை உறுதி செய்துகொண்டு ஓர் நொடி ஆழமூச்செடுத்து கண்மூடினான் .

கண்மூடிய அடுத்தநொடி, இத்தனை நேரம் இருந்த காவல் அதிகாரி தோற்றம் மறைந்து சாதாரண உடையில் தன் நிஜ உருவிற்கு வந்தவன்,

ஐந்தரை அடி உயரத்தில், அரசனுக்கேற்ற கம்பீரமான உடலமைப்புடன் இருக்க, சற்று மஞ்சள் நிறத்துடன் இருந்தவனின் கண்கள் இரண்டும் பச்சை நிறத்தில் மரகதகல்லாய் ஜொலித்தது.

தான் தூக்கிப் போட்டவனை கண்டவனுக்கு , அவனை பார்க்க பார்க்க கோபம் தலைக்கேற....நாக்கு பாம்பின் இயல்பாய் வெளிவந்து "ஸ்ஸ் ஸ்ஸ்" என சத்தம் எழுப்பியது.

நேரம் கடப்பதை உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி விரைவாய் அங்கிருந்து வண்டியை கிளப்ப, அவன் கிளப்பிய வேகத்தில் அது புகையை வெகுவாய் கக்கியபடி கிளம்பியது .

தன்னிருப்பிடம் நோக்கி செல்லும் பாதையில் வண்டியை செலுத்தியவன், சிறிது நேரத்திலே சாலையின் ஓரம் ஒருவர் மயங்கியிருப்பதை கண்டு புருவம் சுருக்கியபடி வண்டியை அருகில் சென்று நிறுத்தி இறங்கினான் .

அங்கு சாலையோரத்தில் , சற்று களைத்து இருந்தாலும் பார்ப்பவரை ஈர்க்கும் அப்பழுக்கற்ற முகத்துடன் , பள்ளிப்பருவ பெண்ணின் தோற்றத்தில் மயக்கத்தில் இருந்தாள் மங்கை ஒருவள்.

ஏனோ அவளை பார்த்த நொடியில் அவனின் மனம் சற்று தடம்புரள அதை அதிர்வுடன் உள்வாங்கியவன் , " சே ! என்ன இது ? சந்திரமதியினரின் வருங்கால அரசன் அவர்களின் எதிரியான மனிதர்களில் ஒருவளானவளை கண்டு அயர்வதா " என தன்னையே திட்டிக்கொள்ள அவனின் கைகளோ தானாய் மயங்கிருந்தவளை தூக்கிக் கொண்டது .

அவளை தூக்கியபடி வண்டியின் அருகில் வந்தவன் , பின் இருக்கையில் படுக்கவைக்க முடியாததால் தனது பக்கவாட்டு இருக்கையில் அமர்த்தியவாறு கிடத்தினான் .
அவளின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயல அவளோ சிறிதும் அசையவில்லை .

எப்படியோ வண்டியினுள் தேடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன், அவளின் மயக்கத்தை தெளியவைக்கும் முன் அவன் அறிந்திருந்த விஷயங்கள் பெண்ணான அவளின் நிலையை முதலில் அறிய சொல்ல, விரைவாய் தன் பார்வையால் அவளின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

அந்த சில நொடிகளில் அவனின் மனம் இதுவரை அறியா பயத்தை உணர , அவனின் மனம் உணர்ந்ததை மூளை ஒதுக்கித்தள்ளியது .

சிலநொடிகளிலே அவளின் பத்திரத்தை உறுதி செய்தவனின் மனம் நிம்மதி பெருமூச்சிவிட, முதலில் தண்ணீரை மெதுவாய் அவளின் முகத்தில் தெளித்து பார்த்தான்.

ஆனால் அவள் இன்னும் எழாததால் , இப்பொழுது தண்ணீரை அவளின் முகத்தில் வேகமாய் அடித்தான் .

"ஏய் ஏய் ! யாருடா அது என்னைய குளிப்பாற்றது " என கத்திக்கொண்டே கண்விழித்தவள் தன் எதிரே தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தவனை கண்டு,

"டேய் பச்ச கண்ணா ! எதுக்குடா என் மேல தண்ணிய ஊத்துனா யூ யூ இடியட் " அவன் சற்று நெருங்கி நின்றிருந்ததில் தான் முதலில் பார்த்த அவனின் அந்த பச்சை நிற கண்களை வைத்து அவனை அழைத்தவள் தொடர்ந்து,.

அவனின் கையிலிருந்த பாட்டிலை பிடுங்கி அதில் மீதமிருந்த தண்ணீரை அவனின் மேலே ஊற்றினாள்.

அவளின் செயலில் அவன் அதிர்ந்து விலக ,

அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவளுக்கு ஏனோ சிரிப்பாய் வர," ஹாஹா! என்னாச்சி ...என் மேல நீ ஊத்துன பதிலுக்கு நான் உன் மேல ஊத்திட்டேன் . அதுக்கும் இதுக்கும் சரியாய் போச்சி" என இத்தனை நேரம் மயங்கிருந்தவள் , பலநாள் இவனுடன் பழகியதை போல ஒருமையில் விளித்து படபட பட்டாசாய் பேசுவதை கேட்டவன்,

"ஈசனே ! இந்த பெண்ணா இவ்வளவு நேரம் மயக்கமாக இருந்தாள் என எண்ண தோன்றுகிறதே . ஒரு வேளை இப்பெண்ணுக்கு மனநிலை ஏதேனும் சரியில்லையா " என்று யோசித்தான்.

அவனின் முகத்தை வைத்தே அவனின் யோசனை செல்லும் பாதையை அறிந்தவள், " ஏய் நான் ஒன்னும் பைத்தியம் கிடையாது ஓகே! சில் பையா ,நான் மயக்கமாகிட்டேன் அதுனால நீ தண்ணிய தெளிச்சி எழுப்ப நினைச்சிருக்க அதான. ஆனா நீ தெளிக்கிறதுக்கு பதிலா மொத்தமா என் மேல அத ஊத்தி என்னை குளிப்பாட்டிட்டல அது தான் நான் உன்மேல மீதி தண்ணிய ஊத்திட்டேன் . யூ நொவ் ஒன் திங் , நான் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை குளிக்குறதே அதிகம்பா அதுவுமில்லாம நான் காலையிலையே குளிச்சிட்டேன் இன்னிக்கு" என அவள் பாட்டிற்கு பேசிகொண்டே சென்றாள்.

அத்தனை நேரம் அவளிற்கு ஏதேனும் பிரச்சனையோ என்று படபடப்பாய் இருந்தவனுக்கு, அவளின் பேச்சில் படபடப்பு தானாய் மறைந்தது மட்டுமில்லாமல் சிரிப்பும் கூட வந்தது .

சிரிப்புடனே சத்தமாய் "நீ யார் பெண்ணே ? நீ எங்கு போகவேண்டும்? எப்படி இங்கு வந்தாய்?" என அடுத்தடுத்து கேட்டவனின் கேள்விகள் அனைத்தும் எதிரில் இருந்தவள் கண்களை உருட்டி முழித்த விதத்தில் பதிலில்லாமல் போனது.

சற்று குழப்பத்துடன் மறுபுறம் வந்து வண்டியை கிளப்பியவன்," எங்கு இறங்க வேண்டும் என்று சொல் ,போகும்வழியில் உன்னை விட்டுவிடுகிறேன் " என்றான்.

"சரி "என்பதை போல் தலையை ஆட்டியவளை கண்டவனின் மனமும் ஆட , அவள் புறம் திரும்பியவனின் பக்கவாட்டு பார்வையில் விழுந்தது பின்னிருந்த பிணம் .

அதை கண்டவன் அங்கிருந்த துணியை கொண்டு அதை போர்த்தி மறைத்தபடி, அவள் யார்? என அறிந்துகொள்ள தன் பேச்சை வளர்க்க ஆரம்பத்தான் .


இதை அனைத்தையும் நினைத்தவன், அவளுடன் கடந்த ஒரு மணி நேர பயணத்தில் இதுவரை அவளின் பெயரை கூட அவனிடம் சொல்லாததில் அவளின் அவ்வெச்சரிக்கை உணர்வை வியந்தவன் , மனிதர்களின் கொடுரப்பக்கத்தை அறிந்திருந்ததால் அதை ஆதரிக்கவே நினைத்தான் .

எப்படியோ அவளின் படபட பட்டாசு பேச்சை கேட்டுகொண்டே வந்தவன் , அவள் போகவேண்டிய இடம் பற்றி அவளே சரியாய் அறியாததுமில்லாமல் நேரமும் கடந்து இருள துவங்கியதால் அவளை தன் இருப்பிடமான சந்திரமதி இருக்கும் காட்டிற்கே அழைத்துவந்துவிட்டான் .


அதன்மூலம் பல நூற்றாண்டுகளுக்கு பின் அந்த காட்டினுள் மனித காலடி பட்டதில் அங்கிருக்கும் மரங்கள் அனைத்தும் நிகழப்போவதை அறிந்து தன் கிளைகளை வேகமாய் ஆட்ட தொடங்க , காற்று பலமாய் வீச தொடங்கியதில் தூரத்தில் மலையின் மேல் வீற்றிருக்கும் புற்றீஸ்வரரின் ஆலய மணி ஒலித்து அடங்கியது.
.

காட்டின் மறுகோடியில் இருக்கும் அவர்களை காக்கும் புற்றீஸ்வரரின் சன்னதிக்கு வலப்பக்கமாய் சற்று தொலைவில் ஓர் குகை, வீடு போலான அமைப்பில் இருக்கும் .

அவளை அங்கு கூட்டிக்கொண்டு வந்த சந்திராதித்யன், அவள் சுற்றும் முற்றும் ஒருவித ஆவல் கலந்த பயத்துடன் பார்ப்பதை அவளின் முகம் அப்பட்டமாய் காட்ட .. புருவங்கள் மேலேறியவாறு விரிந்த கண்களும், சற்று பிளந்த வாயுமாய் அவள் முகம் காட்டும் பாவனைகளை ரசனையாய் கண்டான்.

சற்றுநேரம் அவளை ரசித்திருந்தவன் , காரிலிருக்கும் உடலின் நினைவு வர அவளிடமிருந்து தன்னை மீட்டெடுத்து ," நீ இங்கு அமர்ந்திரு ..நான் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் " என சொல்லி கிளம்ப ,

"ஏய் ...நில்லு!!!சும்மா ரோட்டுல போய்ட்டிருந்தவள கடத்தி இந்த காட்டுல கூட்டிட்டு வந்து விட்டுட்டு நீ எங்க போற?" என வேகமாய் வினவியவள் அவனின் பார்வையில் ,

"என்ன ...என்ன அப்படி பாக்குற ?? சரி நடந்து போய்ட்டிருந்தவ இல்ல மயங்கிக்கிடந்தவனு வேணும்னா மாத்திக்கிறேன் ஓகே!! அதுக்காகலாம் நீ அந்த பச்சை கண்ணை அப்படி சுருக்காத... நீ எங்கையும் போக கூடாது கூட்டிட்டு வந்தல ஒழுங்கா என்கூடவே இரு " என தன் பயத்தை மறைத்தபடி அதிகாரமாய் சொன்னாள்.

அவளின் அவ்வதிகாரத்தை அவனின் மனம் விரும்பவே செய்தது. அவள் கண்களின் மூலம் அவளின் பயத்தை அறிந்து அவளுடன் விளையாடும் எண்ணத்தில் சிறுசிரிப்புடன் அவன் அங்கிருந்து நகர ,
"ஏய்ய் ! சரி சரி நான் ஒத்துகிறேன்...எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு நீங்களும் என்கூட இங்கயே இருங்களேன் ப்ளீஸ்" என்றவளுக்கு அவன் விட்டுசென்றுவிடுவானோ என்ற பயத்தில் குரல் தானாய் அழுகைக்கு மாறியது .

"ஹாஹா" என வாய்விட்டு சிரித்தவன் , " இங்கு உனக்கு எப்பயமும் வேண்டாம் பெண்ணே..!!.பசிக்கிறது என்று சொன்னாய் தானே, இப்பழங்களை சாப்பிட்டு கொண்டிரு. இவை அனைத்தையும் நீ சாப்பிடும் முன் நான் வந்துவிடுவேன் " என வழியில் மரங்களில் இருந்து பறித்த பழங்களை அவளிடம் கொடுத்து தைரியம் சொல்லி அவ்விடத்தை விட்டு வெளியில் வந்தான்.

அன்று பௌர்ணமியானததால் அவர்களின் குலத்தவர் புற்றீஸ்வரரின் ஆலயத்திற்க்கு அவர்களின் பூஜைக்காக வரஆரம்பித்தனர் .

அவர்களின் கண்களில் படாமல் வேகமாய் சென்றவன் வண்டியிலிருந்த அப்பிணத்தை தான் வழக்கமாய் செய்யும் முறையில் செய்து, வண்டியையும் அங்கிருந்த கொடிகளினுள் மறைத்தவன், மீண்டுமாய் அவளை விட்டுவந்த குகைவீடை நோக்கி நடைபோட்டான் .


நேரம் கடந்ததில் பௌர்ணமியின் முழுநிலவு நடுவானில் பிரகாசமாய் வெளிச்சத்தை கடத்தி தன்னிருப்பை காட்டத் தொடங்கியது .

தூரத்தில் ஆலயத்திலிருந்து அவர்கள் இனத்தவர் செய்யும் பூஜை ஓசைகள் மெல்லியதாய் செவியை தீண்ட தன் நடையை விரைவாக்கினான் .


இத்தனை நேரம் மரங்களின் இருட்டில் வந்துகொண்டிருந்தவன் குகை அருகே வரும்வேளையில் மரங்கள் இல்லாததில் முழுநிலவொளி அவன் தேகத்தில் சுதந்திரமாய் படர, அவனின் உடல் சிறிது சிறிதாய் பாம்பின் தோற்றத்திற்கு மாற தொடங்கியது .

இந்த நொடி வரை, தன்னுடன் சிறிதும் பயமின்றி தன்னை நம்பி வந்தவளை பற்றியே யோசித்துக்கொண்டு வந்திருந்தவன் ...தான் பாம்பின் தோற்றத்திற்கு மாறினால் விரைவாக செல்ல முடியும் என்பதை கூட மறந்திருந்தான் .

நிலவொளியில் மாறத்தொடங்கிய தன் தோற்றத்தை கண்டபிறகே அவளுக்கும் தனக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை முழுதாய் அவன் மூளை உள்வாங்க , முதல்முறையாய் ஒரு பெண்ணை ரசித்து இயல்பாய் அவளை ஏற்றுக்கொண்ட மனமோ அவ்வித்தியாசத்தில் உடைய துவங்கியது .



-காதலாகும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top