முரண்பாடே காதலாய் 3

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
காதலது
இரு உடல்களுக்கான உணர்ச்சிகளின்
அங்கமல்ல ,
அது ...
இருஉயிர்களின்
உணர்வுகளுக்கான சங்கமம்..!!



அத்தியாயம் 3 :


"பாதி வழியில் இருக்கிறோம் ஸ்ரீ! இன்னும் ஒரு மூணு,நாளு மணி நேரத்தில் ஊர் வந்துரும்னு நினைக்கிறேன் ."

"........"

"இல்ல ஸ்ரீ ! நம்ப முன்னாடி முடிவு பண்ணமாதிரியே தான் எல்லாம் பண்ணலாம் . மொதல்ல "இச்சாதாரிகள் பத்தி மக்களோட அபிப்பிராயம் என்ன? இச்சாதாரிகள் - னு உண்மையாவே இருக்கா இல்லையா ? இருக்குனு சொன்னா அத நம்புறதுக்கான சான்று என்ன ? இப்படி கேள்விகள்ன்னு ஒரு எபிசொட் பண்ணலாம் .அடுத்து போன வாரம் "இச்சாதாரிகள் வரலாறு" னு ஒரு குறும்படம் எடுத்தோம்ல அதையும் சேர்த்து ஒரு ரெண்டு, மூணு எபிசொட் நீ டைரக்ட் பண்ணிடு , மீதி நாங்க இங்க கண்டுபிடிக்கிறது வச்சி பார்த்துக்கலாம் " என தனது உதவியாளன் மற்றும் நண்பனான "ஸ்ரீ" -க்கு கைப்பேசியில் இவன் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியவைகளை விளக்கிக்கொண்டிருந்தான் மித்ரன் .

தன் பேச்சிற்க்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைத்தபடி இருந்தவனின் கண்களோ, நொடிக்கொருதரம் பின்இருக்கையில், சிறுபறவை தன் இறக்கைகளை சுருட்டிக்கொண்டு இருப்பதுபோல் தன் கைகளால் இரண்டு கால்களையும் இறுக்கிப்பிடித்தபடி உறங்கும் "யஷி"யை கண்டபடி இருந்தது.

"தி லிட்டில் பேலஸ்" -ன் வாட்ச்மேன் "கதிரேசன்" இவர்களுக்கு ஓட்டுனராய் மாறியிருக்க , மித்ரன் முன்னிருக்கையில் அவரின் அருகில் அமர்ந்திருந்தான் . ஆளரவம் இல்லாததால் கார் வேகமா சென்றுகொண்டிருந்ததில், திறந்திருந்த சன்னலின் வழியே காற்று உள்நுழைந்து அவனின் சற்று நீண்ட கேசத்துடன் விளையாடியது.

அதன் விளையாட்டை தடுப்பது போல் இடது கையில் கைப்பேசியை வைத்திருந்தவன் , வலது கையால் தன் சிகையை கோதியபடியே முன்னிருக்கும் கண்ணாடியில் பார்த்தவனின் கண்களோ பின்னிருக்கையில் ஏதோ ஓர் வித்தியாசத்தை உணர்ந்தது .

கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாலும் அவனது மூளை "அங்கிருக்கும் வித்தியாசம் என்ன ?" என யோசிக்க அவனின் யோசனைக்கு உதவும் நோக்கத்திலோ என்னவோ காற்றின் வேகம் அதிகரித்தது.

காற்று பலமாக வீசியதால் அப்பக்கம் பேசுவது தெளிவாக கேட்காமல் கைப்பேசியை வலது கைக்கு மாற்றியவன் நன்றாக பின்புறம் திரும்ப அவ்வித்தியாசம் என்ன என்பதை கண்டுகொண்டான்.

பின்னிருக்கையின் சன்னல்களும் திறந்தே இருந்தாலும் அங்கு காற்றின் வேகம் இங்கு இருப்பது போல் இல்லையோ என தோன்ற செய்தது அவன் முகத்தில் மெல்லியதாய் வருடி சென்ற குளிர் காற்று.

"ஸ்ரீ ! நான் உன்னை கொஞ்ச நேரத்தில் கூப்புட்றேன் " என கைப்பேசியை அணைத்தவன் ,

"கதிரேசன்ணா ! கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க " என்றான்.

அவன் சொன்னது போல் உடனே ஓர் ஓரமாய் நிறுத்தியவர் , அவன் கதவை திறந்து இறங்குவதை கண்டு,"என்ன தம்பி! என்னாச்சு ? "என கேட்க,
பின்பக்க கதவை திறந்து ஏறியவன், உறங்கிக்கொண்டிருக்கும் 'யஷி'-ன் தலையை எடுத்து தன் மடிமீது வைத்தபடி ,

"ஒண்ணுமில்லை -ணா , இப்போ வண்டிய எடுங்க " என சொல்ல, கண்களோ தங்களை சுற்றி எதையோ தேடியது.

அவன் நினைவில் காலையில் தூங்கி எழுந்தவுடன் விஸ்வநாதன் தான் பார்த்ததாக சொல்லியதை பற்றி தான் தோன்றியது .

அப்பொழுது அவர் மகளை பிரியப்போகும் எண்ணத்தில் விளைந்த பிரம்மையாய் அதை எண்ணியவன் அவரின் பயத்தை போக்குவதற்காக ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தான்.

இப்போது அதை எண்ணி, ஒருவேளை அது உண்மையாய் இருந்தால் என்ன செய்வது ? என குழம்பியது .

ஏனெனில் அவன் பின்புறம் ஏறும்பொழுதே சற்று குளிர்ச்சியாய் தழுவிச் செல்லும் காற்றை அவன் உடலும், மிக மிக மெல்லியதான நறுமணத்தை அவனின் நாசியும் உணர்ந்திருந்தது .

அதில் , அவன் நெஞ்சம் கலங்க தொடங்க தன் மடியில் படுத்திருந்த யஷியின் தலையை தன் வயிற்றோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துகொண்டான்.

அவனின் அச்செயல் , " என்ன நடந்தாலும் உன்னை விடமாட்டேன் ...என்றும் உன்னை என்னுள் வைத்து பாதுகாப்பேன்" என்பது போல் இருக்க, அவனின் செயலைக் கண்ட காற்றோடு கலந்த அவ்வுருவம் மெதுவாய் தனக்குள் சிரித்துக் கொண்டது.

அதன் எதிரொலியாக காற்று சிலுசிலுவென ஓசை எழுப்ப... அதை கேட்ட மித்ரனோ கேட்காதவரே கண்களை இறுக்கமாய் மூடி பின்இருக்கையில் தலை சாய்த்தவன், இன்னும் இறுக்கமாய் அவளின் தலையை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

காற்றோடு கலந்த அவ்வுருவம் சிறிது நேரம் இருவரையும் சுத்தியபடி இருந்து பின் எதையோ எண்ணி நிறைவுடன் அங்கிருந்து மறைந்தது .


------------------------------------------------------------------------------------------------------------------------

"போதையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்து கிடந்த வாலிபர்கள் " என காலையில் யஷி காட்டிய அதே செய்தியை படித்துக்கொண்டிருந்தான் ஒருவன்.

கல்லூரி முடித்து சிறிது நாட்கள் தான் ஆகி இருக்கும்போல் , தாடி மீசை எல்லாம் முழுதாய் வழித்து பார்ப்பதற்கு சிறுபையன் போல் இருந்தான்.

செய்தித்தாளை வாசித்தவன் , அதில் இருந்த இருவரின் புகைப்படத்தை கண்டு கோபத்துடன் அதை கசக்கி எறிந்தபடி
தனது கைபேசியை எடுத்தவன், எவருக்கோ அழைக்க அப்பக்கம் எடுக்கப்படவில்லை .

சிறிது நேரம் முயற்சித்தவன் தன் முயற்சி வெற்றிபெறாததில் அதையும் தூக்கி எறிய அது செய்தித்தாளுக்கு துணையாய் அதன் அருகில் சென்று விழுந்தது .

அவ்வறை சற்று இருட்டாக இருக்க, கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவன் அவ்வறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க தொடங்க, அவனின் மூளை வேகவேகமாய் என்ன நடந்திருக்கும் என யோசிக்க தொடங்கியது .


எத்தனை விதமாய் யோசித்தும் அவர்கள் இருவரும் அடித்து கொண்டு இறந்தார்கள் என்பதை அவனின் மூளை நம்ப மறுத்தது .

கோபம் அடங்குவது போல் இல்லாததால் நடந்துகொண்டிருந்தவன் அங்கிருந்த மோடாவில் அமர்ந்து தன் கைகளை கோர்த்து கட்டைவிரல் இரண்டையும் புருவமத்தியில் வைத்து சற்று நேரம் மூச்சை ஆழமாய் உள்இழுத்து தன்னை கட்டு படுத்தத் துவங்கினான் .

சிறிது நேரத்தில் மனம் ஓர் நிலைக்கு வர எழுந்து சென்று சற்று நிதானமாய் யோசித்தவனின் கண்கள் இப்பிரச்சனையின் ஓர் முடிச்சை அவிழ்க்கும் வழியை கண்டுகொண்டதில் மின்ன , அவ்வறையின் மூலையில் இருந்த அலமாரியை திறந்தவன், அதிலிருந்தவற்றை கலைத்து புரட்டி எதையோ தேடினான்.

சற்றுநேரத்தில் அவன் தேடியது கிடைக்க அதை எடுத்தவன் அதை பிரித்தபடி நின்றஇடத்திலே அமர்ந்துவிட்டான்.
அது அவனின் பலதொழில்கள் மற்றும் அதில் சம்பந்த பட்டிருப்பவர்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பு .

பொதுவாய் அவன் இவற்றை எல்லாம் கணிணி மற்றும் வேறு சில முறையில் பதித்து வைத்திருந்தாலும் முக்கியமான சிலவற்றை குறிப்பெடுத்து வைப்பது அவனின் பழக்கம் .

அவன் விஞ்ஞானத்தின் ஆபத்தை முழுதாய் அறிந்தவனாகிற்றே ஆதலாலே இத்தகைய பழக்கம் .

இது போலான சம்பவம் முதல் அல்லது இரண்டாம் முறை என்றால் இதை பெரியதாய் அல்ல சிறியதாய் கூட எண்ணியிருக்க மாட்டான் . ஏன் ! முதல் மூன்று சம்பவங்கள் வரைக்கும் இவனின் கீழ் இருப்பவர்கள் அதை இவனின் காதிற்கு வராமல் தான் பார்த்துக்கொண்டனர் . ஆயினும் அதை அறியாமல் இருந்தால் அப்பெரும் ஆபத்தான தொழில் சாம்ராஜ்யத்தில் அவனால் இவ்வளவு நாட்கள் நீடித்திருக்க முடிந்திருக்காதே .

அனைத்தையும் அறிந்தே இருந்தவன், எவர் தம்மை நெருங்கமுடியும் இது சாதாரண சம்பவம் எனும் அலட்சியத்துடன் கடந்திருந்தான் .

ஆனால் நான்காம் சம்பவம் இவன் இருந்த இடத்தினிலே நடைபெற சற்று திகைத்தவன் யோசிக்க ஆரம்பித்தான் .

ஆனால் அவன் யோசித்து சுதாரிப்பதற்குள்ளாகவே , அடுத்தடுத்து ஒவ்வொருவூரிலும் அவனின் ஆட்கள் சாகத்தொடங்கி இருந்தனர் .

இந்த இருவரின் இறப்பு கிட்டத்தட்ட 15- வது .சாவென்பது இவர்களின் தொழிலில் சகஜமான ஒன்று தான் . ஆதலால் இது அனைத்துமே இயல்பாய் நடந்தவை என அவனின் மூளை சொன்னாலும் அதை ஒத்துக்கொள்ளமுடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது .

இத்தனை நாட்கள் எவ்வெவ்வாறோ முயன்றும் ஒன்றும் அறியமுடியாமல் போக இன்று புதிதாய் ஓர் வழி தோன்றியதில், இந்த குறிப்பை எடுத்தவனுக்கு இறந்தவர்கள் யார் யாரென சரியாய் அறிய வேண்டியிருக்க , "ஜான்" என்று தன் வலக்கரமாய் செயல்படுபவனை கூப்பிட்டான் .

அவன் கூப்பிடாமல் அவன் அறைக்குள் நுழைய எவருக்கும் அனுமதி இல்லாததால், அச்செய்தித்தாளை அவனிடம் கொண்டுவந்து தந்த பொழுதினில் இருந்து அவனின் அழைப்பிற்காய் வாயிலிலே நின்றுகொண்டிருந்த " ஜான் " அவன் அழைத்த மறுநொடி அவனின் முன் நின்றிருந்தான்.

அவனை கண்டவன் "ஜான்! இதுவரைக்கும் நம்ப ஆட்கள் யார் யார் இறந்துருக்காங்க என்ற முழுவிபரமும் எனக்கு வேணும் . எவ்வளவு நேரம் ஆகும் உனக்கு " என வினவ ,

அவனின் முகத்தை வைத்தே அதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்தவன் " ரெண்டு நிமிஷம் போதும் பாஸ்" என்றவன் எதிரிலிருப்பவனின் கேள்வியான பாவனையில்,

" நீங்க வழக்கமா எல்லாத்தையும் குறிப்பெடுத்து வைக்கிறது நல்லதுன்னு சொல்லுவிங்க பாஸ், அதுதான் இதையும் ஒரு குறிப்பா எடுத்துவச்சிருக்கேன் என்றவன் ,

வெளியே சென்று அவன் சொன்னது போலவே இரண்டு நிமிடங்களில் வந்தவன் , ஒரு சில காகிதங்கள் அடங்கிய குறிப்பை அவனால் "பாஸ்" என அழைக்கப்பட்டவனிடம் கொடுத்தான் .

அதை வாங்கியவனின் உள் ஏதோ ஓர் குரல், "அங்கு செல் அங்கு செல்" என அச்செய்தியை வாசித்த நொடி முதல் சொல்லிகொண்டே இருக்க அதில் தனது உள்மனதின் தேடலுக்கான விடை அங்கிருக்குமோ என சிந்தித்தவன் ,

" ஜான் ! நம்ப நாளைக்கு காலையில் சின்னம்பாளையத்துக்கு போறோம் , தேவையானது எல்லாம் பார்த்துக்கோ " என சொல்லி அத்துடன் பேச்சை முடித்தவன்,

மற்றவன் வெளியேறும் வரை பொறுத்திருந்து பின் அவன் கொண்டுவந்து தந்த குறிப்பையும் தான் முதலில் எடுத்துவைத்த குறிப்பையும் மாற்றி மாற்றி புரட்டி , தனக்கு தோன்றுவதையெல்லாம் வேறொரு காகிதத்தில் எழுத ஆரம்பிக்க காற்று அங்கு சற்று சீறலாய் வீசத்தொடங்கியது .


---------------------------------------------------------------------------------

சின்னம்பாளையம் :

இருள் என்னும் போர்வையை போற்றியபடி உறங்கிக்கொண்டிருந்த பூமியழகியை தன் செங்கதிர்கள் கொண்டு எழுப்பத் துவங்கினான் ஆதவன் .

அந்த சிவப்புநிற படுக்கையில் வெள்ளை நிற முழு உடையில் , விரிந்திருந்த கூந்தல் முகத்தினில் தவழ உடலை குறுக்கி கொண்டு உறங்கிக்கொண்டிருந்த "யஷி" -யின் அறை சன்னலின் வழியே நுழைந்தது அந்நாகம் .

கட்டிலின் அருகே நின்றவாறு சிறிது நேரம் தன் கண்களை விரித்து அவளை பார்த்தபடி நின்ற அது மெதுவாய் அக்கட்டிலில் ஏற துவங்கியது .


அவளின் காலருகில் சென்ற அந்நாகம் சிறிதுநேரம் பொறுத்து பின் மெதுமெதுவாக அவள் மேல் படர்ந்து அவளின் உடலை சுற்றத்துவங்க , முதலில் சிறிதாய் இருந்த நாகமோ தற்பொழுது அவளின் உடலையே மொத்தமாய் தன்னுள் சுருட்டிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாய் மாறியது.

தன்னை எதுவோ இறுக்குவது போல் தோன்ற தூக்கத்திலே சிணுங்கியவள் , சிறிதாய் கண்களை திறந்தாள் .

கண்விழித்தவள் ஏதோ ஓர் நாகம் தன்னை சுற்றி கொண்டிருந்ததில் அதிர்ந்து, மீண்டுமாக கைகளால் கண்களை மூடி பயத்தில் கத்த போக , அந்நொடியில் பாம்பின் உருவம் ஆண்மகனின் உருவமாய் மாறியது.

தன்முன் பயத்தில் கண்மூடிருந்தவளின் கைகளை விலக்கியவன் "பேபிமா" என வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல் மெதுவாய் அழைத்தான் .

யஷி அவன் குரலில் இருந்த மென்மையில் அதிர்ந்து வேகமாய் கண்களை திறக்க ,

அங்கு நாகத்திற்கு பதில் ஆண்மைக்கான முழு இலக்கணத்துடன் கண்களாலே அவளை வசியம் செய்துவிடுவதை போல் நின்றவனை கண்டு அதிர்ச்சியில் தானாய் அவள் வாயை பிளக்க , சிறு சிரிப்புடன் அதை அழகாய் தன் வழியில் மூடசெய்தான் .

ஓர் நொடி அவனின் செயலில் கரைந்தவளோ சட்டென்று தெளிந்து, நாகத்தின் நினைவில் தன் முழுபலத்தை பிரயோகித்து அவனை தள்ளியபடி எழ அக்கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள்.


விழுந்தவள் கண்களை திறக்க , அத்தனை நேரம் மங்கலாய் இருந்த அறை தற்பொழுது நல்ல வெளிச்சத்துடன் இருந்ததில் குழம்பியவள் சற்றுமுன் நடந்ததை நினைத்து வேகமா திரும்பி கட்டிலைப் பார்க்க அந்த கருப்பு வண்ண கட்டில் இவள் உருண்டு புரண்டிருந்ததில் அலங்கோலமாய் காட்சியளித்தது .

அதை கண்டவள் கலைந்திருந்த தன் கூந்தலை ஒதுக்கியபடி, "என்ன இது கட்டில் கருப்பு கலர்ல இருக்கு கொஞ்சம் முன்ன சிவப்பு கலர்ல தான இருந்துச்சி " என யோசித்தவளிற்கு புரிந்தது இதுவரை தான் கண்டதனைத்தும் கனவு என்று .

"சே ! என்ன கனவுடா இது ? இதுக்குத்தான் நான் இந்தமாதிரி ஆராய்ச்சிக்குலாம் வரமாட்டேன்னு சொன்னேன் யார்னா என் பேச்சை கேட்டாங்களா ? அதும் பாம்பை பார்த்தாலே பத்தூரு தள்ளி நிக்குற என்னைய "இச்சாதாரி" எப்படி எப்படி "இச்சாதாரி" பாம்ப பத்தி ஆராய்ச்சி பண்ண வந்தே ஆகணும்னு தூக்கிட்டு வந்துட்டான் அந்த தடியன் . எருமமாடு ! " என தான் கண்ட கனவிற்கு கூட மித்ரனை காரணாமாக்கிய யஷி வாயில் வந்தபடி அவனை திட்டிகொண்டே அனைத்தும் செய்துமுடித்தாள்.

குளித்துமுடித்து அறையை விட்டு வெளியே வந்தவள் எதிரிலிருந்த அறையை கண்டவுடன் , "இவன் இன்னும் எழுந்துக்கலை போல " என நினைத்தவள் ,

கண்ட கனவின் விளைவால் " எல்லாம் இவனால் தான இருடா வரேன்" என்று வேகமாய் சென்று கதவை தட்டப்போக இவளின் நல்ல நேரமோ அல்ல அவனின் கெட்ட நேரமோ கதவின் தாள் போட அவன் மறந்திருக்க , அவள் கைவைத்த நொடி கதவு திறந்திருந்தது .

கட்டிலில் சிறிதாய் வாயை பிளந்தபடி அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேகமாய் சென்று வேண்டுமென்றே கட்டிலில் குதித்து அவனின் மேல் அமர்ந்தவள் அவனின் முடியை தன் கைகளுக்குள் சுருட்டி , " பக்கி பக்கி எரும மாடு எழுந்துருடா, வரமாட்டேன்னு சொன்னவளை எங்க அப்பாவ ஏதேதோ பேசவச்சி என்னைய வரவச்சவன் , நேத்து வண்டி ஏறுனது தொடங்கி கொஞ்சமாச்சும் என்னைய கண்டுகிட்டியா ?? மவனே ! இங்க ஒருத்தி கண்ட கனவையும் கண்டு பயத்துல முழிச்சிட்டு இருக்கேன், நீ என்னனா வாய பிளந்து தூங்கிட்டிருக்க ! யாரோடடா கனவுல டூயட் பாடிட்டு இருக்க எழுந்து தொலடா எரும" என பேச்சிற்கு ஏற்ப தன் கைக்குள் சிக்கிருக்கும் அவனின் முடியை ஆட்ட,


அவள் குதித்ததிலே விழித்திருந்த மித்ரன் அவள் முடியை பிடித்து ஆட்டியதால் வலியில் "ஆஆஆ...விடுடி...அம்மா...வலிக்குதுடி ..விடுடி ..விடுடி பாப்பா....ஆஆ" என கத்த துவங்கினான் .

அவன் கத்தலை வழக்கம் போல் குறும்பு வழிய பார்த்திருந்தவள், வலியில் இருக்கும்பொழுதும் அவனின் அவளுக்கான அழைப்பில் மென்மை இருக்க ....அதே போல் மென்மையை கனவில் அழைத்தவனின் குரலிலும் இருந்ததை அவளின் மனம் எடுத்துரைத்ததில் அவளின் பிடி சற்று தளர அதில் அவளின் பிடியிலிருந்து விலகிய மித்ரன் அவளிடமிருந்து தப்பிக்க வேகமாய் பாத்ரூமினுள் சென்று கதவை அடைத்துக்கொண்டான் .

அதை கூட உணராமல் கனவில் வந்தவனின் குரல் மென்மையில் லயிக்கத் தொடங்கினாள் யஷி.



-காதலாகும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top