முரண்பாடே காதலாய் 14 (இறுதி அத்தியாயம் )

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#22
அவளை இருவரும் துரத்த முற்பட எப்படி என்றே தெரியாமல் அவ்விடம் முழுவதும் நெருப்பு பரவ ஆரம்பித்தது . முதலில் அதை கண்டுக்கொள்ளாத ரியாஸும் , ஜானும் அவளை துரத்த... அவர்களிடம் தப்பிப்பதற்க்காய் பின்புறமாய் ஓடியவளின் மேல் அங்கிருந்த நாற்காலியை தூக்கி அடிக்க அது அவளின் பின்மண்டையை பதம்பார்த்தது .

அதில் தடுமாறி "குழியா...!" எனக் கத்தியபடியே கீழே விழுந்தவள் முன் அங்கிருந்த அறை தென்பட உள்நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள் .

சிறிதுநேரம் அக்கதவை உடைக்க முயற்சித்தவர்கள் , தீ வேகமாய் பரவுவதை உணர்ந்து வேறுவழியில்லாமல் பின்பக்க வழியாய் தங்களின் உயிரை காத்துக்கொள்ள ஓடினர்.


முன்நெற்றி பிளந்து ரத்தம் அதிகமாய் வெளியேறிருக்க , உடலில் அங்கங்கே காயத்துடன் மயக்கத்தில் ஆழ்ந்த வேளையில் தான் சந்திராதித்யன் அவ்விடம் வந்தது .

அனைத்தையும் சந்திராதித்யனிடம் சொல்லி முடித்த யஷி (அனகா) , ஆறுதலுக்காய் அவனை பார்க்க அதை உணர்ந்துக்கொண்ட சந்திராதித்யன் காற்றாகவே அவளின் மேல் படர்ந்து பரவினான்.

அவர்கள் நீண்டநாட்களுக்கு பிறகு தங்களுக்கு கிட்டிய தனிமையில் தங்களின் கடந்தகாலத்தை நினைத்தபடி ஒருவர் மற்றவரிடம் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தனர் .

அப்பொழுது அவ்வீட்டின் வாயிலில் "சர்ர்ர்ர் ...." என கிரீச்சிட்டபடி வந்து நின்றது மாருதி .

அதிலிருந்து , " பாஸ்...! இப்போ எதற்காக இந்த வீட்டுக்கே மறுபடியும் வந்திருக்கோம் " என கேட்டபடியே இறங்கிய ஜான் , அவ்வீட்டை கண்களில் பயத்துடன் பார்த்தான்.

அன்று ஏற்பட்ட நெருப்பு தாங்கள் வருவதற்க்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஹரிஷும் , அஸ்வந்த்தும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள அதில் அறிவுகெட்டதனாமாய், திருட்டுத்தனமாய் கடத்திவைத்திருந்த பல லிட்டர் பெட்ரோலை அவ்வீடு முழுவதும் ஊற்றிய ஹரிஷ், நெருப்பை பற்ற வைக்கபோக ...சுதாரித்த அஸ்வந்த் அவனை பற்றி இழுத்து சென்றாலும் , ஹரிஷ் பற்ற வைத்த நெருப்பு அங்கு பட்டத்தை அவனும் கவனித்திருக்க வில்லை.

இதை எல்லாம் மறுநாள் அஸ்வந்த் இவர்களிடம் சொல்லியிருக்க , அதை எண்ணிப் பார்த்தான்.

"என்ன ஜான் ...!மலரும் நினைவுகளா ??" என நக்கலடித்த ரியாஸ்,

"என்னமோ தெரியலை ஜான்..! இங்க அவ வருவான்னு எனக்கு தோணுது வா உள்ள போவோம்.." என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன் ,

அன்று திறக்கமுடியாமல் போன பின்புற அறையின் கதவை திறக்க , அவன் மனம் எண்ணியதை போலவே அவன் தேடிவந்தவள் அங்கு சுவற்றில் சாய்ந்தபடி இருந்ததை கண்டவனுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் போனது .

ருசி கண்ட பூனையாய் கண்களில் காமம் வழிய அவளின் மேனியை மொய்த்தவனின் கால்கள் தானாய் அவளிடம் சென்றது .

அத்தனை நேரம் யஷி (அனகா) யிடம் தன்னை தொலைத்திருந்த சந்திராதித்யன் , அவனின் கால் இவ்வறையில் பட்ட நொடி தன்னை சூறாவளியாய் மாற்றியவன் சுழல ஆரம்பிக்க .... அங்கிருந்த கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து ரியாஸ் மற்றும் ஜானின் உடல்களில் பட்டுத் தெறித்தது .

யஷி(அனகா)யின் மேல் அவை பாடாமல் காத்தபடி மொத்த கண்ணாடிகளை நொறுக்கியிருந்தான்.

திடீரென கண்ணாடிகள் உடைந்து தெரித்ததில் புரியாமல் வெளியேற முயன்ற ஜானின் கழுத்து சங்கில் சரியாய் சொருகியது ஒரு பெரிய கண்ணாடித் துண்டு .


அடுத்தநொடி அவன் தரையில் விழ அங்கு கீழே தெரிந்திருந்த கண்ணடித்துண்டுகள் அவனின் உடலை பதம்பார்க்க , மீண்டுமாய் சந்திராதித்யன் சுழல அங்கு இருந்த மொத்த கண்ணாடி துண்டுகளும் ஜானின் உடலின் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து போர்வையாய் மாறியது .

அங்கு நடந்ததை பார்த்த ரியாஸ் , கண்களை விரித்து நம்பமுடியாமல் திகைத்திருக்க ,அவனின் உடலிலும் ஆங்காங்கே கண்ணாடி துண்டுகள் கிழித்திருந்தது .

என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியாதவனுக்கு கோபம் தலைக்கேற , யஷி (அனகா) தான் அனைத்திற்கும் காரணம் என்று நினைத்தவன் அவளின் கை பற்றி இழுக்க , அடுத்த நொடி காற்றில் பறந்து அங்கிருந்த சுவற்றில் தலை மோத கீழே விழுந்தான் .

விழுந்தவன் மீண்டும் எழ முற்பட மீண்டுமாய் ஓர் சூழல் அங்கு உருவாக , அவ்வறையிலே மாற்றி மாற்றி தூக்கி ஏற்பட்டவனின் உடல் முழுதும் எலும்புகள் அனைத்தும் நொறுங்கியது .

முழுதாய் நொறுங்கி தரையில் கிடந்தவன் தான் தூக்கியடிக்கப்பட்டதில் தரையில் விழுந்திருந்த தன் துப்பாக்கியை எடுத்தவன் , எது தன்னை தாக்குவது என்பதையே அறியமுடியாததால் அவ்வறையில் இலக்கின்றி சரமாரியாக சுட்டான் .

அதில் சில சந்திராதித்யன் மேல் படுவது போல் இருக்க , அது அவனை ஒன்றும் செய்யாது என யஷி (அனகா) யின் மூளை சொல்லிய போதும் ... மனம் அதை முந்திக்கொண்டு உந்தியத்தில் , தானாய் அவனை மறைத்தார் போல் அவனின் முன் நின்றவளின் உடலை துளைத்தது குண்டுகள் .

"அனகா...!!" என கத்திய சந்திராதித்யனின் குரலுடன் "பாப்பா.....!" என்ற மித்ரனின் குரலும் இணைந்து அவ்வறையை அதிர செய்தது .


பைத்தியம் போல் ரோட்டில் , கால்களில் செருப்புகூட அணியாமல் யஷியை தேடித்திரிந்த மித்ரன் வழியில் விசாரித்து அவள் பாதி எரிந்த வீட்டை தேடிச் சென்றதை உணர்ந்து அவனும் அங்கு ஓடி வந்திருந்தான் .

வீட்டினுள் நுழைந்தவனிற்கு பின்புறமிருந்து சத்தம் கேட்க, அங்கு சென்றவனிற்கு மாலை பார்த்தது இருவரில் ஒருவன் யஷியை சுட்டதை தான்.

அவனின் மேல் பாய்ந்தவன் ஏற்கனவே நொறுங்கிருந்தவனை மேலும் நொறுக்க , அவனை தடுக்க முற்பட்ட ரியாஸீன் உடலுக்குள் புகுந்த சந்திராதித்யன் , தூணை உடைத்து வெளிவந்த நரசிம்மராய் ஆவேசமாய் அவனின் உடலை விட்டு வெளிவர ,பல பெண்களின் வாழ்வை வெறும் தேக சுகத்திர்க்காய் பாழாக்கியவனின் தேகம் பல துண்டுகளாய் சிதறியது .


அதில் அதிர்ந்து மிரண்ட மித்ரன் அது காற்றில் கலந்த உருவத்தின் வேலை என்பதை புரிந்துக்கொண்டவன் , யஷியை தன் கைகளில் ஏந்தியபடி அவ்வறையை விட்டு வெளியேறினான்.

அவன் கைகளில் தூக்கியதை உணர்ந்த யஷிக்கு சிறுவயது முதல் அவனின் வீட்டில் ஒன்றாய் அவனுடன் விளையாடியது ,சிறு குழந்தையாய் தன்னை கொஞ்சியது , அன்னையாய் மடிசாய்த்தது என அவன் செய்த அனைத்தும் காட்சிகளாய் தோன்ற அவனின் கைகளில் இருந்தபடியே சற்று எக்கி அவனின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள் ,

தன் கழுத்தில் காரணமே தெரியாமல் இத்தனை நாளாய் அணிந்திருந்த செயினை கழற்றி அவனின் பாக்கெட்டில் போட்டவள் , " நான் உனக்கே மகளா பிறக்கணும்டா " என கலங்கி ," அப்போ இத என் கைல கட்டிவிடு.. ஒருநாள் என்னோட பச்சை கண்ணன் என்னை தேடி வருவான் .அவனே இத என் கழுத்துலையும் மாட்டுவான் " என உறுதியாய் சொல்லி , சிரிப்புடன் அவனின் நெற்றில் மீண்டும் முத்தமிட்டு விலகியவளின் தலை அவனின் கைகளில் தொங்கியது .

பிறந்த நொடி முதல் எந்த கைகள் அவளை அன்பாய் அரவணைத்து, அவள் சோர்ந்துபோகும் வேளைகளில் எல்லாம் ஏந்திக்கொண்டதோ ... அதே கைகளில் புன்னகையுடன் தன் இறுதிமூச்சையும் நிறுத்திக்கொண்டாள் .

தன்னவளை ஏந்தியபடி செல்லும் மித்ரனை பார்த்தபடி இருந்த சந்திராதித்யன் , அவளின் தலை தொங்கியதில் பதறி அருகில் செல்ல போக அவனை தடுத்து அவனின் மேல் சாய்ந்துகொண்டாள் அவனின் அனகா தானும் காற்றோடு கலந்தவளாய் .--------------------------------------------------------------------------------

பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு :

"யஷிமா...யஷிக்குட்டி எங்கடா இருக்கீங்க பாப்பா " என வீட்டிற்குள் நுழையும்பொழுதே கொஞ்சலாய் அழைத்தபடி வந்த மித்ரனின் மேல் ஓடி வந்து தாவி ஏறினாள் அவனின் ஒன்பது வயது மகள் யஷி.

"மித்ரா...! நீ எங்க போன ?? நான் உன்னை தேடுனேன் தெரியுமா ..நீ காணோம் ??" என்றவாரு உதடுகளை பிதுக்கி சிணுங்கியவள் அவனின் நீண்ட முடியினை பிடித்து ஆட்டினாள் .

"குட்டிமா ...!! உனக்கு எத்தனை தடவை சொல்லிருகேன் அப்பாவ பேர் சொல்லி கூப்பிடாதனு...இதுல இப்போ தான் வர மனுஷரோட முடிய பிடுச்சி இழுத்து மல்லுக்கட்டுர?? முதுகுல நாலு போட்டா தான் அடங்குவியா ???" என மகளை கடிந்தபடியே வந்தாள் நிலா, மித்ரனின் மனைவி.

"ஷ்ஷ்ஷ் பேபிமா....!பாப்பாவை திட்டாதனு சொல்லிற்கேன்ல.விடுமா, பாப்பா என்கிட்ட மட்டும்தான இந்தமாதிரி இருக்காங்க .மத்த எல்லோர்கிட்டையும் அமைதியா போறாங்கனு நீயும் தான சொன்ன . என் யஷிக்குட்டி சமத்துக் குட்டி " என மனைவியிடம் மகளுக்காய் பரிந்து வந்தவன் மகளை கொஞ்சினான்.

"ம்ம்ம்க்க்கும்...! நீங்க தான் இவளை கெடுக்குறதே ...அவ எது பண்ணாலும் கொஞ்சவேண்டியது .இதுல எனக்கு பாப்பாகிட்ட கோவபடவரலடினு டையலாக் வேற..நாங்க மட்டும் கோவப்படுறதுல பிஎச்டி பண்ணிருக்கோம்
பாரு " என கணவனை முறைத்தவளின் குரல் அதற்க்கு நேர்மாறாய் தன்னவனின் மகள் மேலான பாசத்தில் குழைந்தே வெளிவந்தது .

அதை கண்டுகொண்ட மித்ரன் பெரிதாய் சிரித்தபடி ," ஹாஹா பேபிமா..! உன்கிட்ட மட்டும் நான் என்னிக்குடி கோபப்பட்டிருக்கேன் " என மகளை மடியில் வைத்திருந்தவன், மனைவியை தோள்வளைவில் கொண்டுவந்தான் .

மித்ரனின் அணைப்பில் இருந்த நிலா ￰அப்பொழுதுதான் கவனித்து ,"அப்பா எங்கேங்க ?? உங்க கூட வரலையா ? எனக் கேட்டாள்.

யஷியின் தந்தை விஸ்வநாத் மகளின் இறப்பில் உடைந்து போயிருந்தாலும் ...தன் மகள் இறந்ததில் உணர்வுகளை தொலைத்து இயந்திரம் போல் வாழ்ந்துக் கொண்டிருந்த மித்ரனிடம் ," யஷயே உனக்கு மகளாய் பிறந்து உன்னிடம் வருவாள் " என சொல்லி சொல்லி கரைத்தவர், நண்பனின் மகள் நிலாவடன் அவனுக்கு திருமணமும் நடத்தி வைத்திருந்தார் .

மித்ரன் அவரை தங்களுடனே வசிக்கவேண்டுமென அன்புக்கட்டளை போட்டிருக்க ,நிலாவும் அவரை தந்தையாய் எண்ணி அவருக்கு இன்னொரு மகளாய் தான் இன்றுவரை இருந்துவருகிறாள் .

"பேபிமா...! என்னோட கூட படிச்ச ஆதி பத்தி சொல்லிருக்கேன்ல....நான், யஷி, ஆதி மூணு பேரும் எப்பவும் ஒண்ணா தான் இருப்போம்னு.. ரொம்ப வருஷம் கழிச்சி நேத்து தான் நாங்க ரெண்டு பேரும் பேசுனோம் ...அப்போதான் அவன் குடும்பத்தோட இந்தியா வந்திருக்குறத சொன்னான். அத அங்கிள் கிட்ட சொன்னதுதான்... அடுத்த நிமிஷம் , எப்படி இந்தியா வந்தவன் நம்ப வீட்ல தங்காம இருக்கலாம் நான் போய் கூட்டிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு .அவங்களை கூட்டிக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு" என்றான்.

சொல்லி முடித்தவன் ..தன் கைவளைவுக்குள் இருந்தவர்களை பார்க்க அவர்கள் இருவரும் அவனின் மேல் சுகமாய் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர் .

"ஒருத்தன் மூச்ச பிடிச்சிக்கிட்டு பேசியிட்டிருக்கேன் நீங்க ரெண்டு பேரும் தூங்கிறீங்களா " என இருவரின் வயிற்றிலும் கிச்சுகிச்சு மூட்ட ,

அம்மாவுடன் கூட்டு சேர்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்திருந்த யஷி,"மாம் ...ரன்...ரன்...!! " என்றபடி தந்தையிடமிருந்து தப்பி ஓடினாள்.

இருவரையும் பொய்யாய் முறைத்தவன் அவர்களை பிடிக்க துரத்த , தாயும் மகளும் அவன் கைகளுக்கு போக்குக்காட்டியபடி தப்பித்து வெளியே தோட்டத்திற்கு ஓடினர் .

தாயுடன் சேர்ந்து முகம் முழுக்க சிரிப்புடன் ஓடியவளை தோட்டத்தின் ஈரமண் சறுக்க , "அப்ப்பாபா...!" என்றபடி பின்புறமாய் சரிந்தவளை தாங்கிக் கொண்டது ஓர் வலக்கரம் .

யார் என பார்த்தவளின் பார்வையில் , அவளின் முகத்தின் அருகே அவளை தாங்கியபடி நின்றிருந்த பதினோரு வயது சிறுவனின்
பச்சை நிறக் கண்கள் பட...ஒன்பது வயது யஷிக்கு அது சொன்ன செய்தி புரியாமல் போனது.

அவளின் கைகளில் தொங்கிக்கொண்டிருந்த செயினை பார்த்த சிறுவன், அவள் விழும்பொழுது அது கழுத்திலிருந்து கலன்றுவிட்டதோ என எண்ணியபடி அவளை சரியாய் நிற்கவைத்தவன் , அதை தானே அவளின் கழுத்தில் அணிவித்தான் .

மகள் சறுக்கியதில் மித்ரனும் ,நிலாவும் பதறி அருகில் வருவதற்குள் இவை நடந்துவிட நிலா விரைந்து யஷியை தன் அணைப்புக்குள் கொண்டுவந்தாள்.

மித்ரன் எதிரிலிருக்கும் சிறுவனின் மின்னும் பச்சை நிறக் கண்களை பார்த்தபடியே , "யார் குட்டி நீங்க ..உங்க பெயர் என்ன ...??" என்று கேட்டவனிற்க்கு ,

அன்னையின் புடவையின் முந்தானையால் முகத்தை மறைத்து கண்களை மட்டும் தெரிய பார்த்துக் கொண்டிருந்தவளை தானும் பார்த்தபடியே , " நான் சந்திரபிரதாப் சன் ஒப் ஆதித்யன் " என சிரிப்புடன் பதில் சொல்லிவனின் கன்னங்களில் ஆழமாய் குழி விழுந்தது .


(சுபம்)
Nice story
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement