மாயவனின் அணங்கிவள் -9

Advertisement

Priyamehan

Well-Known Member
இருவரையும் முறைத்துப் பார்த்த வேந்தன் சாப்பாட்டில் கவனம் செலுத்த, கண்ணீர் சிந்த தயாராக இருந்த அருவியின் முகம் தான் வேந்தனின் கண் முன் வந்து போனது.

"ச்சை என் தங்கச்சியை அழுவ வெச்சிட்டு இவ அழற மாதிரி நடிக்கிறா... சரியான நாடகக்காரி" என்று நினைத்தவனுக்கு எரிச்சலாக வர இரண்டு இட்லியுடன் எழுந்துக் கொண்டான்.

"தேவா"

"சொல்லுங்க மாமா".

"சீக்கிரம் சாப்பிட்டு வா நான் கார்ல வெயிட் பண்றேன்" என்றான்.

"ம்ம் இதோ பைவ் மினிட்ஸ்' என்று அவசர அவரசமாக சாப்பிட்டவள்.. எழுந்து கைகழுவ ஓட... "அண்ணா நான் மட்டும் தனியா இங்க இருந்து என்ன பண்ண போறேன்? நானும் தேவாவோட வரட்டுமா? " என்றாள் ரித்து.

"வெயிலா இருக்கும்மா"

"பரவால்ல அண்ணா... தேவா வீட்டுக்கு வரும்போது நானும் வந்துடரேன்" என்றாள்.

"ம்ம் சரி" என்றவனிடம் பஞ்சாயத்தைப் பற்றி கிருபாகரன் கேள்வி கேக்க அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த இனியனும் கார்த்திக்கும் அருவியை தேடினர் அவளோ தோட்டத்தில் இருந்த சிவப்பு ரோஜாக்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தோட்டக்காரை அழைத்து அண்ணா இந்த ரோஸ் செடியை வேற தொட்டிக்கு மாத்த சொன்னேன்ல ஏன் மாத்தலையா அண்ணா? " என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

"மறந்துட்டேன் அம்மிணி இன்னைக்கு செஞ்சிடறேன்" என்றார்.

சரி என்று அவரை அனுப்பி விட்டு மீண்டும் ரோஜாவின் இதழை வருடிக்கொண்டிருந்தாள்.

"இங்கப்பாருடா ஒரு பூவே இன்னொரு பூவை ரசிக்குது" என்று இனியன் அருவியின் மனதை இலகுவாக்க சொல்ல

"டேய் என்னதான் பொய் சொன்னாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமாடா... இவளைப் போய் அந்த அழகான பூவோட ஒப்பிட்டு பார்க்கறியே இவ பூ இல்ல பூகம்பம் எப்போ யாரை அதிர வைப்பான்னு யாருக்கும் தெரியாது" என்று கார்த்திக் வாரினான்.

இருவரையும் திரும்பி முறைத்தவள், "எனக்கு மனசு சரியில்லைடா நம்ப கோவிலுக்கு போவோமா?" என்றாள்.

இதுநாள் வரை அருவி இப்படி சொல்லி அவர்கள் கேட்டதில்லை இன்று சொல்லும் போதே அவள் மனம் எந்த அளவிற்கு காயப்பட்டிருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது .

"இன்னைக்கு நைட் கோவில்ல பவுர்ணமி பூஜை இருக்குல அரு... அப்போ போலாம் இப்போ எங்களோட மிலுக்கு வரியா..?"

"இல்ல இனியா எனக்கு தோட்டத்துல வேலை இருக்கு நீங்க போங்க" என்றாள்.

"அப்போ வா தோட்டத்துல விட்டுட்டு நாங்க கிளம்பறோம்"

"வேண்டாம் அதுக்கும் உங்க நொண்ண ஏதாவது சொல்லுவார்..." என்றவள் "என்னால நீங்க திட்டு வாங்க வேண்டாம் கிளம்புங்க" என்றவளுக்கு யாரிடமாவது மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி அழ வேண்டும் போல் இருந்தது.

"சரி பார்த்து இருந்துக்கோ... மதியம் சாப்பிட வரும் போது பிக் பண்ணிக்கறோம்..."என்ற இருவரும் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் போனப் பின்பு நிர்மலா பண்ணையில் இருந்து வர..

"அரும்மா இங்க என்ன பண்ற? சாப்பிட்டியா?"

"ம்ம்"

"ஏண்டா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு"

"ஒன்னுமில்லம்மா, அம்மா நம்ப பாட்டி தாத்தாவை போய் பார்த்துட்டு வருவோமா எனக்கும் இப்போ தானே லீவ் விட்டுருக்காங்க அதுக்கு அப்புறம் எக்ஸாம் ப்ராஜெக்ட்டுனு லீவ் கிடைக்காது..இப்போவே போலாமா" என்றாள் ஏக்கமாக...

அங்குப் போனால் அருவி தான் மகாராணி .. வயதானவர்கள் இவளை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள்... அருவி இருந்த மனநிலைக்கு அந்த அன்பு இப்போது தேவைப்பட்டது.

"இப்போ முடியாதேடம்மா... பண்ணையை பெருசாக்க சிவில் வேலை போய்ட்டு இருக்கு... நிரு ஒருத்தனால மட்டும் இங்க சமாளிக்க முடியாதுல, நம்மளும் கூட இருக்கனும்" என்றார்.

எப்போது கேட்டாலும் இதை தான் சொல்லுவார். தாத்தாவும் பாட்டியும் தான் இங்கு வந்து பேரன் பேத்திகளைப் பார்த்து விட்டு செல்வார்கள்... பண்ணையம் பார்க்கும் இவர்களால் அங்கு செல்ல முடிவதில்லை... வேந்தன் மட்டும் வாரம் ஒருமுறை சென்று வருவான்..

"சரிம்மா அவன் எங்க?"

"நிரு மணலுக்கு சொல்லிருந்தான் அது வந்ததும் வரேன்னு என்னைய முன்னாடி அனுப்பி வெச்சான்... நீ ஏன் இங்க நிக்கற?"

"நீ போய் சாப்பிடும்மா"

"நீ வெளிய போறியானு கேட்டேன் அரு"

"படிப்பு சம்மந்தமா தோட்டத்துல லீவ் நாள்ல்ல வேலை செய்யலாம்னு மாமாக் கூட போறேன்ம்மா" என்றவள், மறந்தும் அவன்தான் வேலை செய்ய சொன்னான் என்று சொல்லவில்லை.

சொன்னால் பெற்ற மனம் பதறும் என்று அவள் அறியாமல் இல்லை.. அதற்காக தானாக விருப்பப்பட்டு செய்வதுப் போல் சொன்னாள்.

"சரிம்மா பார்த்து போய்ட்டு வா" என்று உள்ளே செல்ல.... வேந்தன் வெளியே வந்தான்.

அவன் வருவது தெரிந்தும் தெரியாத மாதிரி ரோஜா செடியின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவனுக்கு பின்னால் ரித்துவும் தேவாவும் வந்தனர்.

"சீக்கிரம் காருல ஏறுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு..." என்று வேந்தன் சொன்ன மறுநொடி தேவா முன்பக்கம் ஏறி வேந்தனுக்கு அருகில் உக்கார்ந்துக் கொண்டாள்

அதைப் பார்த்த அருவிக்கு மனம் பாறாங்கல்லை தூக்கி நெஞ்சின் மீது வைத்ததுப் போல் மனம் கனத்துப் போனது.

"எத்தனை நாள் நான் முன்னாடி உக்கார கேட்டுருப்பேன்,அப்போல என்னைய ஒரு புழு மாதிரி பார்த்துட்டு இன்னைக்கு அவ கேக்கக் கூட இல்ல, ஏறி உக்கார்ந்ததும் எதுவும் பேசாமல் இருக்கார்ல.. அப்போ இவருக்கு என்கிட்ட மட்டும் தான் பிரச்சனை.. என்னைக் கண்டா தான் பிடிக்கல.. ஏன் பிடிக்கல? அப்படி என்ன தப்பு செஞ்சேன் சேட்டை செய்யறது இயல்பு தானே, அவர் சொல்ற மாதிரி ரோபோவா வாழ்ந்தா நான் நல்லவாளா..?இல்ல இது மட்டும் காரணமா இருக்காது , எங்க வீட்டுக்கு ஒண்டி பிழைக்க வந்தவளுக்கெல்லாம் என் பக்கத்துல இடம் கொடுக்கணுமானு நினைச்சிருப்பார்" என்று நினைக்கும் போதே மனம் வாள் கொண்டு அறுத்தது.

அருவி காரில் ஏறவில்லை என்றதும் வேந்தன் கார் ஹாரனை அழுத்தி பிடித்த வண்ணம் இருக்க

அதில் சுயநினைவுக்கு வந்தவளை ரித்து அழைக்கவும் ... பின்னால் சென்று ரித்துவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

முகத்தை யாரிடமும் காட்டாமல் ஜன்னலின் பக்கம் திரும்பி முடிந்தவரை கண்ணாடியில் தன்னைப் புதைத்துக் கொண்டாள் அருவி .

அவளைப் பற்றி கவலைப்படவெல்லாம் அங்கு யாருக்கும் நேரமில்லை.. காலையில் அருவி திட்டிய கோவத்தில் தேவாவுடன் ஒன்றிக் கொண்டாள் ரித்து. தேவாவும் அருவியிடம் பெரிதாக பேசவில்லை.

கார் தோட்டத்தை நோக்கி செல்ல... கலகலப்பாக இருந்த அருவி இன்று சோகத்தின் பிடியில் இருக்க அதைக் கவனிக்கக் கூட அங்கு ஆட்கள் இல்லாமல் போனார்கள்.

தோட்டம் வந்ததும் காரை நிறுத்த எல்லோரும் இறங்கினார்கள் .

"மாறா"

"சொல்லுங்கய்யா"

"வேலை கத்துக்குடுங்க சொல்லிருந்தேன்ல"

"ஆமாங்கய்யா"

"கூட்டிட்டு போ"

"மாமா அருவி இங்க வேலை செய்யறாளா?" என்று தேவாவின் வார்த்தைகள் ஏளனமாக வர சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தாள் அருவி.

"ஆமா தேவா... லீவ் தானே அதான் வேலை கத்துக்கட்டும்னு செய்ய சொல்லிருக்கேன்"

"ம்ம்..." என்றவள் "எனக்கு இளநி வெட்ட சொல்லுங்க மாமா" என்றாள் காரில் சாய்ந்தவாறு..

ரித்துவுக்கும் அருவியை தேவா அப்படி கேட்டது பிடிக்கவில்லை... அதை முகத்தில் காட்டிக் கொண்டு நிற்க.. அங்கு நிற்க முடியாமல் சென்றுவிட்டாள் அருவி.

போகும் அவளையேப் பார்த்த வேந்தனுக்கு 'இப்போ கஷ்டமா தான் இருக்கும், போக போக பழகிக்கும்" என்று நினைத்துக்கொண்டான்.

அருவியின் மனமோ எதற்கு எடுத்தாலும் தேவாவுடன் போட்டிப் போட்டது.

"என்னோட பேரை இதுவரைக்கும் சொன்னதுக் கூட இல்லை, ஆனா அவ பேரை வார்த்தைக்கு வார்த்தை தேவா தேவானு ராகம் மாதிரி பாடுறார்.. மாமாவாம் மாமா பெரிய மாமா" என்று பழிப்புக் காட்ட..

"அருவி அம்மிணி அங்க நாத்துக்கு களை எடுத்துட்டு இருக்காங்க அவங்களோட சேர்ந்துக்கோங்க, எப்படி களை எடுக்கறது சொல்லி தருவாங்க" என்ற மாறன்.. "நான் ஐயாவுக்கு இளநி வெட்டி தாரேன்" என சென்று விட்டான்.

இவ்வளவு நேரமும் மனதில் இருந்த சோகம் இயற்கையான சூழலைப் பார்த்ததும் சிறிது குறைந்ததுப் போல் இருந்தது.

தன்னுடைய சோகங்களை ஒதுக்கி ஓரம் வைத்தவள்... இயற்கையோட ஒன்ற ஆரம்பித்தாள்.

களை எடுக்கும் வேலையாட்களின் அருகில் சென்றவள்...

"பாட்டி எனக்கும் களை எடுக்கறது எப்படினு சொல்லிக் குடுங்க..?"

'உங்களுக்கு எதுக்கு அம்மிணி இதுலாம்?, நீங்க பண்ணையக்காரிச்சி வேலை வாங்க தான் செய்யணும் நாங்க தான் அண்ணாடும்காட்சிங்க வேலை செய்யணும்னு தலையெழுத்து உங்களுக்கு என்ன தலையெழுத்தா? " " என்றார் அவள் பாட்டி என்ற அழைத்த அறுபதை தாண்டிய முதியவள்.

"க்குஹும் இந்த பாட்டிக்கு என்னோட நிலைமை தெரியல... வீட்டுக்கு வெளிய தான் நானும் அந்த வீட்டுல ஒருத்தினு எல்லோரும் பெரிய வீட்டுப்பொண்ணுனு மரியாதை குடுப்பாங்க, ஆனா அந்த வீட்டுக்குள் நானும் இவங்கள மாதிரி ஒரு வேலைக்காரின்னு இவங்களுக்கு தெரியல .." என்று சலித்துக் கொண்டவள்.

"கத்துக்கறதுல தப்பில்ல பாட்டி... அதும் இல்லாம பண்ணையார்ச்சி வேலை செய்யக்கூடாதுனு எந்த சட்டமும் இல்லையே... வாங்க வாங்க பேசிட்டு இருக்காம வேலையை சொல்லிக் குடுங்க" என்றாள் சந்தோசமாக..

"உங்கள மாதிரி எளிமையிலாம் இப்போ பார்க்க முடியறதில்ல அம்மிணி, படிச்ச பிள்ளைங்கனாலே காட்டுல இறங்கி வேலை செய்ய பயந்துகிட்டக்குறாவுக..."

"எல்லோரும் அப்படி இல்லை பாட்டி.. இதுக்குனே படிக்கற நிறையப் பேரு இப்பவும் இருக்க தான் செய்யறாங்க அதை விடுங்க அவங்க பல்லவி நமக்கு எதுக்கு?"என்று பேச்சை மாற்றி விட்டாள்...

"உங்கப் பேருலாம் என்னனு சொல்லவே இல்லையே..."

"எங்கப் பேரு எதுக்கு தாயி..?"

"தெரிஞ்சி வெச்சிக்கறது நல்லது தானே பாட்டி... இன்னும் ஒரு வாரத்துக்கு நான் இங்க தான் வேலை செய்வேன், என்ன ஒரே வேலையை செஞ்சிட்டு இருக்க மாட்டேன் அவ்வளவு தான் வித்தியாசம்" என்றவள் "சொல்லுங்க" என்று அவர் செய்யும் வேலையை கண்களால் கவனிக்க ஆரம்பித்தாள்.. ஏற்கனவே பாடமாக படித்தது தான் என்றாலும் செய்முறையாக செய்ய பிடித்திருந்தது.

"என் பேரு கருப்பாயி. இவ குப்பா.. அவ கேவிந்தம்மா," என்று வரிசையாக கருப்பாயி பாட்டி பெயரை சொல்ல கடைசியாக சுமதி என்ற பெண்ணிடம் வந்து நின்றார்.

அவளைப் பார்க்கும் போது கொடிக்கு தாவணி பாவாடை சுற்றியது போல் அவ்வளவு மெலிந்து இருந்தாள். வெயில் பட்டு முகம் கருப்பாக மாறிருந்தது..

அவளின் அருகில் சென்றவள் "என்ன படிக்கிற சுமதி?" என்றாள் மென்மையாக

"நான் படிக்கல அக்கா காட்டு வேலைக்கு தான் போறேன்" என்று தயங்கி தயங்கி சொன்னாள், அவளோ நடத்தர குடும்பத்தை சேர்ந்தவள்... பெரிய வீட்டை வெளியே இருந்தே பார்த்துவிட்டு சென்றுவிடுவாள்... அங்கு இருக்கும் பெண் தன்னிடம் பேசிக்கிறாள் என்றதும் உடனே அருவியுடன் சகஜமாக பேச முடியவில்லை சுமதியால்.

"ஹேய் எதுக்கு இவ்வளவு தயங்கர... உன்னோட வயசென்ன?"

"இருபத்தி மூனு"

"எனக்கு இருபத்தி இரண்டு தான் ஆகுது, இன்னும் மூனு மாசம் போனா தான் இருபத்தி மூனு ஆகும் அப்போ நான் உனக்கு தங்கச்சி தானே வா போனே பேசு.."

"ஐயோஓஓ வேணா வேணா அம்மா பேசும்"

"அதுலாம் பேசுமாட்டாங்க.. என் பேரு தெரியுமா?"

"ம்ம் அருவி" என்று தயக்கமாக சொல்ல அவளை தோளோடு அணைத்தவள் "இனி உனக்கு நான் அரு... எனக்கு நீ சுமி ஓகேவா நீயும் நானும் பிரண்ட்" என்று தோளில் தட்டியவள்.. "சும்மா சும்மா ஷாக் ஆகாத" என்று அவளின் அருகில் நின்று களை எடுக்க ஆரம்பித்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top