மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 9

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சந்திரன் கொழும்பிற்கு சென்று விடுமுறை கிடைக்காத காரணத்தால் இரு மாதங்களாக அவனது ஊரிற்கு செல்லவில்லை... அவன் செல்லவில்லை என்றாலும் அவனது கடிதங்கள் ஊரிற்கு படையெடுத்த வண்ணமே இருந்தது... இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கடிதம் மூலமே அவன் தன் குடும்பத்தாரை தொடர்பு கொள்வான்...இம்முறை தேவியிற்கும் அவனது கடிதம் சென்றடைந்தது... தேவியிடம் அவன் தன் காதலை தெரிவித்த பின் அவனுக்கு தேவியிடம் பேசுவதற்கோ கடிதம் அனுப்புவதற்கோ எந்தவித தயக்ககமும் இல்லை....அதோடு தேவியின் தாயார் தெய்வானை அம்மாவும் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சுகவீனமுற்று இருந்தமையால் அவரை நலம் விசாரிக்கும் காரணமும் அவனுக்கு தேவியை அணுகுவதற்கு சந்தர்ப்பமாக கிடைத்தது.... அதாவது இரண்டு கடிதங்கள் ஒரேடியாக இணைக்கப்பட்டு தபால் மூலமாக தேவியை வந்தடையும்....வரும் அனைத்து கடிதங்களையும் பிரித்து படித்து தெரிவிக்கும் பொறுப்பு தேவியிடமே இருந்தமையால் அவனது இலக்கான தேவியிடமே கடிதம் சென்றடையும்....
ஒவ்வொருமுறை சந்திரனிடமிருந்து கடிதம் வரும் போதும் தேவி நெருப்பின் மீது நிற்பது போல் உணர்வாள்.....இரண்டு கடிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதில் ஒரு கடிதத்தின் தலைப்பாக அவளது பெயர் எழுதப்பட்டிருக்கும்..... அன்னைக்கான கடிதத்தை வாசிப்பவள் அவளது கடிதத்ததை வீட்டார் அறியாத வண்ணம் வாசித்து விட்டு மறைத்து வைத்துக்கொள்வாள்.... சந்திரனது கடிதங்கள் அவனது காதலை அவனது பாணியில் வெளிப்படுத்துபவனாகவே இருக்கும்... ஆனால் வாசிப்பவளுக்கு அதன் பிரதிபலிப்பு இருந்ததா என்பது பதில் தெரியாத வினா.....
தெய்வானை அம்மாவின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டிருந்தது.... அவரது கருப்பையில் வளர்ந்திருந்த கட்டி ஒன்று இப்போது அவருக்கு புற்றுநோயை தோற்றுவித்திருந்தது. நோயை சரியான நேரத்தில் கண்டறியாததால் அது அவருக்கு எமனாக மாறி இருந்தது... அதன் விளைவாக தொடர் இரத்த போக்கு அவரது குடலை சிறுக சிறுக கரைத்து திரவ நிலை உணவுகளை மட்டுமே அவரை உட்கொள்ள அனுமதித்தது... ஆனால் அவருக்கு நோய் என்று வீட்டினர் கூறினரே தவிர என்ன நோய் என்று அவர் அறிந்துகொள்ளா வண்ணம் பார்த்துக்கொண்டனர்.... அவரை விட அவரது நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டவள் தேவியே.... அதீத குருதிப்போக்கால் தெய்வானை அம்மா வாடி வதங்க அவரது தேவைகள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு தேவியினுடையதாகியது...
அவரது உணவு,உடை, மருத்துவ கவனிப்பு முதல் கழிவகற்றல் வரை ஒரு சிறு குழந்தையை பார்த்துக்கொள்வது போல் அனைத்தையும் தேவியே பார்த்து பார்த்து செய்தாள்.... அவரது அம்மாயி துணையாய் இருந்த போதிலும் வயோதிபம் காரணமாக சமையல் தவிர வேறு எதிலும் அவரால் உதவ முடியவில்லை. இவ்வாறு வீட்டுவேலை மற்றும் தாயை கவனிப்பதில் அவளது கல்வி தடை பட்டது... ஆயினும் எவ்வித சுணக்கமோ முகச்சுளிப்போ இன்றி தன் தாயை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள்....... இவ்வாறு அவளது பொழுதுகள் தன் வேலைகளை கவனிப்பதிலே சென்றாலும் அவளது இறுக்கத்தை போக்குவதற்கென்றே சந்திரனின் கடிதங்கள் அவள் கையிற்கு கிடைக்கப்பெறும்.. அவனது நல விசாரிப்புகளும் காதல் வார்த்தைகளும் அவளது துயரை மட்டுப்படுத்துவதாகவே அமையும்..... என்னதான் தைரியமாக இருப்பது போல் அன்னையின் முன்னால் காட்டிக்கொண்டாலும் நாளுக்குநாள் அன்னைக்கு ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயம் அதிகரித்த வண்ணமே இருந்தது....ஆனாலும் தன் உணர்வுகளை வெளியே காட்டாது மிக சாதூர்யமான முறையில் மறைத்துக்கொண்டாள்...இவளது இந்த நடத்தையே தெய்வானை அம்மாவை மூன்றாண்டு காலம் உயிருடன் நடமாட வைத்தது....... ஆனால் அதற்கும் தேவியின் தந்தை சுந்தரத்தின் வடிவில் எமன் தெய்வானை அம்மாவை நோக்கி காலடி எடுத்து வைக்கத்தொடங்கினான்.....
ஒரு நாள் தெய்வானை அம்மாவை நலம் விசாரிக்க அவரது தூரத்து உறவினர் விசுவநாதன் வந்திருந்தார்... வாசலில் அமர்ந்திருந்த சுந்தரம் அவரை வரவேற்க அவரிடம் தெய்வானை அம்மாவின் உடல் நலத்தை பற்றி விசாரித்தவருக்கு உண்மையான நிலவரத்தை கூறினார் சுந்தரம்... அந்த உண்மை நிலவரம் வந்திருந்தவரின் காதிற்கு மட்டுமல்லாது தெய்வானை அம்மாவின் காதிலும் விழுந்தது.... வழமையாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜன்னலை அன்று அதிக புழுக்கம் காரணமாக திறந்துவிட்ட தெய்வானை அம்மாவில் காதில் அவர்களது உரையாடல் விழ அன்று இரவிலிருந்து அவரது உடல்நிலை சீர்குலையத் தொடங்கியது.... அவரது திடீர் சுகவீனத்தால் பயந்த தேவி அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் வாழும் நாட்களுக்கான கெடுவாக மூன்று மாதங்களை குறிப்பிட்டார்.... இந்த செய்தியை அறிந்ததும் முழுதும் உடைந்து விட்டாள் தேவி... ஆயினும் தன் துயர் தாயினை எட்டகூடாது என எண்ணி தன் அன்னையை அழைத்து சென்றாள்..... வைத்தியர் கூறிய செய்தி அனைவரின் காதுகளையும் சென்றடைந்தது..... எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற காரணத்தினால் உறவினர்கள் அடிக்கடி வருகை தந்த வண்ணமே இருந்தனர்..மீனாட்சி அம்மாவும் தங்கைக்கு துணையாக வந்து இருந்தார்.... ஆனால் அவரது வருகை தேவியிற்கு கேடுகாலமாக மாறியது....பல வருடங்களாக தங்கை மீதிருந்த வன்மையை தங்கை மகள் தேவி மீது காட்டத்தொடங்கினார்..... அவளது செயல்கள் அனைத்திற்கும் திட்டுக்கள் பஞ்சமில்லாது கிடைத்தது....
அன்று மாலை ஆறு மணியளவில் தேவி காலையிலிருந்து அயராது எல்லா வேளைகளை செய்ததாலும் அன்னையின் சுகவீனம் காரணமாக சில நாட்கள் சரியான உறக்கமின்மையாலும் கண்ணசந்து விட்டாள்..... அதனை பார்த்து விட்ட மீனாட்சியம்மா அவளை சரிமாறியாக திட்டிவிட்டார்... அவரது வசைகள் காதில் விழுந்தபோதிலும் உறக்கமின்மை தந்த அயர்வால் தேவியால் எழும்ப முடியவில்லை.... அவள் எந்த விதத்திலும் பிரபலிக்காமல் இருக்க ஆத்திரமடைந்த மீனாட்சியம்மா அவளை தன் கால்களால் உதைக்க அந்த நேரத்தில் சந்திரனும் நாதனும் வீட்டிற்கு வந்தனர்... அவரது செயலை கண்ட நாதன் அவரை திட்டத்தொடங்கினான்
“ஏன்மா இப்படி நடந்துக்கிறீங்க??? பாப்பா என்ன பண்ணானு இப்படி நடந்துக்கிறீங்க??? அவள மனுஷனு நினைச்சீங்கள இல்ல வேற ஏதாவதுனு நினச்சீங்களா??”
“இப்ப எதுக்கு என்கிட்ட சத்தம் போடுற?? அவ என்ன செஞ்சானு தெரியுமா?? வெளக்கு வைக்குற நேரத்தில தூங்கி வடியிறா....இதுதான் பொம்பள பிள்ளைக்கு அழகா?? இப்படி இருந்தா வீட்டுல மூதேவி தான் குடியிருக்கும்.... இவ அம்மா என்னத்த வளத்து வச்சிருக்காலோ???” என்று மீனாட்சியம்மா கூற சட்டென்று தன் பார்வையை திருப்பி தேவியை பார்க்க அவளது முகவாட்டத்திலேயே அவள் பல நாட்கள் சரியாக தூங்கவில்லை என்று உணர்ந்துகொண்டவன்
“சரி அதுக்காக இப்படியா அவளை அடிப்பீங்க... ஏதோ அசதியில இன்னைக்கு இந்நேரம் தூங்கிட்டா... ராத்திரி எல்லாம் சித்தியை கவனிக்கிறதுல அவளுக்கு தூக்கம் இல்ல... பகலைக்கு நீங்க அவளை வேலை வாங்கி தூங்க விட மாட்டேன்குறீங்க.... அப்ப அவ எப்ப தான் தூங்குறது??? அவளும் மனிஷி தானே... அவளை மட்டும் என்ன இரும்பாலையா செஞ்சிருக்காங்க???? இவளை இப்படி கஷ்டப்படுத்திட்டு இருந்தீங்கனா நான் மாமா கிட்ட சொல்லிருவேன்... அப்புறம் அவர் கேட்குற கேள்விக்கு நீங்க தான் பதில் சொல்லனும் சொல்லிட்டேன்...” என்று சந்திரனின் தந்தை ஆறுமுகத்தை நியாபகப்படுத்த அவ்விடம் விட்டு நகர்ந்தார் மீனாட்சி...
தேவி இன்னும் அதே இடத்தில் அழுதவாறு இருக்க சந்திரனோ அவளை தேற்றமுடியாது தான் இருந்த சூழ்நிலையை எண்ணி அதனை வெறுத்தான்... தன்னவள் துன்புறுத்தப்படுவதை கண்ணால் பார்த்த போதும் தன்னால் ஏதும் செய்யமுடியாத போதும் அவளை தேற்றும் தைரியமும் அவனிடம் இருக்கவில்லை.. தைரியம் என்று சொல்வதை விட உரிமை என்று சொல்வதே பொருத்தம்....தனது தேற்றுதல் கூட அவளுக்கு ஏதும் ஊறு விளைவித்துவிடுமோ என்று பயந்தான்... மீனாட்சியம்மா தேவியின் வீட்டிற்கு வந்த பின் அங்கு செல்வதை சந்திரன் குறைத்துக்கொண்டான்... அப்படி செல்வதாயின் தன் அன்னையுடனோ அல்லது நாதனுடனேயே செல்வான்.... அப்படி செல்பவன் பிறர் அறியா வண்ணம் தேவிக்காக அவன் கொழும்பிலிருந்து வாங்கி வரும் ஒரு பொதி டெல்டா டொபி யையும் கொடுக்கத் தவறுவதில்லை... ஆனால் முன் போல் பேச முயற்சிக்க மாட்டான்....தனது எந்த முயற்சியும் தேவிக்கு ஏதும் துன்பத்தை விளைவிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த விலகல்... ஆனால் இந்த விலகல் அவளது துன்பத்தில் கூட அவனால் தோள் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கியதை எண்ணி மனம் வெறுத்தான்... இவ்வாறு அவன் எண்ணங்களாலே தன்னை வசைபாடியபடி இருக்க நாதனோ தேவியை எழுப்பிவிட்டவன் அவளை அறைக்குள் சென்று படுக்குமாறு கூறி உள்ளே அனுப்பினான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top