மண்ணின் காரிகையவளோ 3

#1
அத்தியாயம் 3

காலைப் பொழுது புலர அந்திவானமோ சிவந்து அழகாகக் காட்சி அளித்தது... அதிகாலையில் எழுந்த சாம்பவி ரங்கோலி கோலம் வரைந்து அதற்கு கலர் கொடுத்துக் கொண்டிருக்க தனது பேத்தி கோலம் போடும் அழகில் சிலோகித்து நின்றார் நாச்சியார்....

"என்ன ஆத்தா(பாட்டி) என்னையே வைச்ச கண்ணு வாங்காமப் பார்த்துட்டு இருக்க... அம்புட்டு அழகா இருக்கேனா என்ன... " சாம்பவி சிரித்துக் கொண்டே வினவ

"இக்கும் ஆமா ஆமா இவ அழகுல மயங்கிட்டாங்க.... போடி போடி இவளே... நானு வானத்தப் பாத்துட்டு இருந்தேனாக்கும்... எம்புட்டு அழகா இருக்கு.... " என்று சமாளித்தார் நாச்சியா...

"மிஸஸ்.நாச்சியார் சுந்தரபாண்டியன் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்னு உங்க அம்மையார் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலயா.... உங்களுக்கு வாய் ஜாஸ்தியா ஆயிருச்சு அதனால மிச்சக் கலர நீங்களே போடுங்க... " என்றவள் கலர்பொடிக் கிண்ணத்தை அவரின் கையில் திணித்து விட்டு உள்ளே ஓடிவிட

"இந்த சின்னக் கழுதைக்கு இதே வேலையா போச்சு... எப்பப்பாரு பாதி கோலத்தில ஓடிறவேண்டியது..." பேத்தியை வசைப்பாடிக் கொண்டே மீதி கோலத்திற்கு கலர்பொடியைத் தூவி அலங்கரித்தார் அந்த பைங்கிளியின் ஆத்தா....

சிறிது நேரத்தில் கல்லூரிக்குக் கிளம்பி அவசர அவசரமாக கீழே வந்தவளைப் பிடித்து சாப்பிட அமர வைத்த நாச்சியாரைப் பாவமாக நோக்கியவள்

"ஆத்தா டிபன்ல போட்டுக் கொடுங்க நான் காலேஜ்ல போய் சாப்பிட்டுகிறேன்... நேரமாயிரும்... " என்று பரபரப்பாகக் கூற பேத்தியின் தட்டில் மொறு மொறு நெய் ரோஸ்டை வைத்துச் சட்னியை ஊற்றினார் நாச்சியார்...

"நீ காலேசு போய் எங்க சாப்பிடுற... இங்கனவே சாப்பிட்டுட்டு போ... வயசுப் புள்ள மாதிரியா இருக்க.... வேற வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது ஒழுங்கா சாப்பிட்டு உடம்பு தேத்து... " என்ற தன் ஆத்தாவை ஆராய்ச்சியாய் நோக்கிய சாம்பவி

"வேற வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியா... " முறைத்துக் கொண்டே வினவ திருதிருவென விழித்தார் நாச்சியார்....

சுந்தரபாண்டியன் உளறிய தன் மனையாளை முறைத்துக் கொண்டிருந்தார.... அதனை உணர்ந்த நாச்சியார் " பின்ன இங்கனவே இருக்க முடியுமா... காலாகாலத்துல உன்ன கட்டிக் கொடுக்கோனும்ல... " என்று மெதுவாய் சமாளிக்க

"இங்கனப் பாருங்க ஆத்தா... என்ன இந்த வீட்ட விட்டுத் துரத்தனும்னு நினைச்சீங்க உம்ம உங்கய்யா வீட்டுக்கு பார்சல் பண்ணிருவேனாக்கும்... " என்று மிரட்டும் தொனியில் சாம்பவி கூறிட முகத்தைத் திருப்பிக் கொண்டார் நாச்சியார்...

"சவி... என்ன பழக்கம் இது... பெரியவங்ககிட்ட இப்படி தான் பேசுவியா கொஞ்சம் கூட மரியாதையில்லாம... வர வர உனக்கு வாய் கூடிப் போச்சு... அத்தை உன் நல்லதுக்கு தான சொன்னாங்க... எதுக்கு இப்படி எகுறுறவ..." கோவத்தில் மீனாட்சி மகளை அதட்ட அதில் சாம்பவிக்கு கண்கள் கலங்கிவிட்டது.....

பேத்தி கண்கலங்கியதும் பதறிய நாச்சியார் " இப்போ எதுக்கு என்ற பேத்திய வைறவ(திட்டுற)... என்றகிட்ட தான அவ விளையாடுறா... பாருப் புள்ளைக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு.... நீ எதுக்கு கண்ணு அழுகுற... " மருமகளை அதட்டிவிட்டு வாஞ்சையாய் பேத்தியின் கண்களைத் துடைத்தார் நாச்சியார்...

"சாரி ஆத்தா... இனிமே நான் அப்படிப் பேசல " தேம்பிக் கொண்டே கூறியவளின் கன்னத்தைக் கிள்ளியவர்

"அட சின்னக் கழுத... நீ தான் என்ற கூட ஏட்டிக்குப் போட்டியா பேசுறவ... உன்னத் தவிர யாராவது என்ற கிட்ட அப்படிப் பேச முடியுமா... இந்த நாச்சியா பேத்தி இதுக்கு போய் அழுவுலாமா... உன்ற அம்மாகிட்ட திருப்பி என்ற ஆத்தா நான் பேசுவேனு சொல்லாம இப்படி தான் கண்ணக்கசக்கிட்டு இருப்பியாக்கும்... "

"அய்யோ ஆத்தா இவள நம்பாதீங்க.... இவளாவது திட்டுறதுக்கு அழுறதாவது.... இவளுக்கு ஏதாவது காரியம் ஆகனும்னு இப்படி வாய்ப்பு கிடைச்சோன அழுது சாதிக்கப் பாக்குறா... " தங்கையைப் பற்றி நன்கறிந்த அன்புச்செழியன் கூற மொத்த குடும்பமும் இப்போது சவியை ஆராய்ச்சியாய் நோக்கினர்...

"அண்ணாவாடா நீ அண்ணாவா... இப்படி நா கஷ்டப்பட்டுப் பண்ண பர்பாமன்ஸை வந்து ஒரே நிமிசத்துல கெடுத்துவிட்டுட்டான் படுபாவி.... எரும எரும... இன்னும் அஞ்சு நிமிசம் இவன் அமைதியாயிருந்துருக்கக் கூடாதா கடவுளே..." மனதிற்குள் நொந்து கொண்டாள் சாம்பவி....

அனைவரும் தன்னை நோக்குவதை உணர்ந்தவள் சுந்தரபாண்டியனின் அருகில் சென்று "ஹீ ஹீ ஹீ அது வந்து... அப்பாரு இது கடைசி வருசங்கறனால எங்க காலேஜ்ல சென்னைக்கு எல்லாரையும் டூர் கூட்டிட்டு போறாங்க அப்பாரு... நானும் போவட்டா பிளீஸ் அப்பார்... என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க நானும் போவட்டா பிளீஸ்.... " முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவள் கெஞ்ச அதற்கு மேல் மனம் தாளாமல் சம்மதித்தார் சுந்தரபாண்டியன்....

"எப்ப கண்ணு போகோனும்... திருவிழா வேற வருதே... "

"நாளைக்கு அப்பார்... திருவிழாவுக்கு முன்னாடி நாள் வந்துருவேன் அப்பாரு... "

"சரி கண்ணு வீட்டுல சரினு சொல்லிட்டாங்கனு காலேசுல சொல்லிரு... "

"ஹை சூப்பரு... அப்பாருனா அப்பாரு தான்... " என்று சாம்பவி துள்ளிக் குதிக்க

"நான் சொல்லல இவ காரியத்தோட தான் அழுதானு.... இதுல இந்த ஆத்தா இவ அழுகுறானு பக்கம் பக்கமா சமாதானம் வேற... " தலையிலடித்துக் கொண்டுப் புலம்பியபடியே அன்புச்செழியன் வெளியில் சென்று தனது பைக்கை எடுக்க தாத்தா அனுமதியளித்த சந்தோஷத்தில் சாப்பிட மறந்து வெளியே ஓடினாள் சாம்பவி....

ஓடும் பேத்தியைக் கண்ட நாச்சியா " ஏனுங்க திருவிழா முடிஞ்சோன கல்யாணம் முடிவு பண்ணப் போறோம்... இப்போ போய் சவிய வெளியூருக்கு அனுப்பனுமாங்க..." என்று வினவிய தன் மனையாளிடம் திரும்பிய சுந்தரபாண்டியன்

"அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா நாச்சியா... நான் காரணமா தான் சரினு சொன்னேனாக்கும்... " என்று புதிராகப் பேசியவரை நாச்சியாரும் மீனாட்சியும் கேள்வியாக நோக்க

"நம்ம சவிக்குட்டி ஆசைப்பட்டு இத கேட்டுருக்கு... நம்ம ஒத்துகலனா முகத்த தூக்கி வைச்சுக்கும்... அந்த கோவத்த கல்யாண விஷயத்துல காட்டும்... அதான் புள்ள கேட்டதும் சரினு சொன்னேன்... இப்போ புள்ளயும் சந்தோஷமா இருக்கும் நம்மளும் தைரியமா கல்யாண வேலை ஆரம்பிக்கலாம்.... " என்று விளக்கியவரை மாமியாரும் மருமகளும் ஆச்சரியமாகப் பார்த்தனர்...

"எங்களுக்கு இது தோணாம போச்சே... " என்று கன்னத்தில் கைவைத்து வியந்தார் நாச்சியார்....

"எப்படியோ அத்த அந்தப் பிடிவாதக்காரி கல்யாணத்துக்கு சம்மதிச்சா சரி... " என்று மீனாட்சி சிரித்துக் கொண்டே கூற

"அதெப்படி ஒத்துக்காம போவா... அவ என்ற பேத்தியாச்சே... " மீசையை முறுக்கிக் கொண்டே பெருமையாகக் கூறினார் சுந்தரபாண்டியன்....

**************

கல்லூரிக்கு வந்த சாம்பவிக்கோ சந்தோஷம் தாளவில்லை... குடுகுடுவென்று தோழிகளிடம் ஓடிய தங்கையைக் கண்டு புன்னகையுடன் " வாலுக்குட்டி... எப்படியோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எல்லாரையும் ஒத்துக்க வைச்சுட்டா... " நினைத்துக் கொண்டே தங்கை உள்ளே பத்திரமாக செல்லும் வரை நின்றுப் பார்த்துவிட்டு தனது வண்டியை வயலிற்கு கிளப்பினான் அன்புச்செழியன்...

மும்முரமாக வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த விஷ்வா வண்டியை நிறுத்தி விட்டு வரும் செழியனைக் கண்டு " என்ன மச்சான் உன்ற தங்கச்சிய காலேஜ்ல விட்டுட்டு வாரியாக்கும்... " என்று வினவ

"ஆமாங்க மாமா.... அப்புறம் இன்னொரு விஷயம் நாளைக்கு அம்மணி சென்னைக்கு போயிருவாங்க... " என்று செழியன் தெரிவிக்க அதில் புரியாமல் அவனை நோக்கினான் விஷ்வா....

"என்ன திடீர்னு எதுக்கு சென்னைக்கு..."

"காலேஜ்ல டூர் கூட்டிட்டுப் போறாங்களாம் மாமா... அதனால அடம்பிடிச்சு வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வைச்சுட்டா... " என்று அன்பு கூற விஷ்வாவின் முகமோ அவள் தன்னிடம் கூறவில்லையே என்று வாடிப் விட்டது...

"எப்போ வருவாளாம்.... " முகத்தை விரைப்பாய் வைத்துக் கொண்டு விஷ்வா வினவ அவனின் மனநிலை உணர்ந்த செழியனோ

"மாமா சவி மேல கோவமா உங்ககிட்ட சொல்லலனு... " தயங்கிக் கொண்டே வினவ

"அட அதெல்லாம் இல்ல மச்சான் இதுல என்ன இருக்கு... அவ பத்திரமா போயிட்டு வந்தாலே போதும் எனக்கு... வா வேலையப் பார்ப்போம்... " சமாளித்த விஷ்வா அதற்கு மேல் நிற்காமல் சென்றுவிட செழியனும் வேலையை கவனிக்கச் சென்றான்.....

*********

பரபரப்பாக கிளம்பி கீழே வந்த மகனை பத்மா சாப்பிட அழைக்க " இல்லமா லேட் ஆகிறும்.... நான் அங்க போய் சாப்பிட்டுகிறேன்..... நீங்க சாப்பிடுங்கம்மா... " தனது பேகில் தேவையானதை வைத்துக் கொண்டே ஸ்ரீதரன் கூற

"கண்ணா அவசரமா போகனுமா.... " தயங்கிக் கொண்டே வினவினார் பத்மா....

"ஏன்ம்மா ஏதாவது முக்கியமான விஷயமா..... "

"இல்லப்பா அக்கா கால் பண்ணிருந்தாங்க.... உன்னோட ஜாதகம் அவங்ககிட்ட இருந்திச்சு.... ஒரு நல்ல வரன் வரவும் ஜோசியர்கிட்ட பொருத்தம் பாத்துருக்காங்க... பொருத்தம் அமோகமா இருக்காம் கண்ணா... பொண்ணு வீடும் அவங்களுக்கு தெரிஞ்சவங்களாம்... நல்ல குடும்பம்னு சொன்னாங்க... இது தான் பா பொண்ணு போட்டோ... " தயங்கிக் கொண்டே கூறி முடித்தவர் போட்டோவை நீட்ட அவரைச் சலிப்பாக நோக்கினான்...

"ம்மா இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம்மா..."

"அவசரமா.... உனக்கு இருபத்தியாரு வயசாகிருச்சு கண்ணா... எனக்கும் உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசை இருக்காதா... " ஏக்கத்துடன் கூறும் அன்னையை ஆழ்ந்து நோக்கியவன்

"மா கொஞ்ச நாள் போகட்டும்மா நானே சொல்றேன்...." என்றுவிட்டு வேகவேகமாக சென்றுவிட செல்லும் மகனையே தவிப்புடன் பார்த்தார் பத்மா...

ஸ்ரீதரனின் கை காரை ஓட்டிக் கொண்டிருந்தாலும் மனமோ தவித்தவித்துக் கொண்டிருந்தது...

"இன்னைக்கு எப்படியோ சமாளிச்சாச்சு... இப்படியே அம்மாகிட்ட எல்லா நேரமும் சமாளிக்க முடியாதே.... உன்ன சீக்கிரமே கண்டுபிடிச்சாகனும் அழகி... கண்டுபிடிச்சே தீருவேன்.... " மனதில் உறுதிப் பூண்டுவிட்டு மருத்துவமனையை நோக்கிச் சென்றான் ஸ்ரீதரன்....

மருத்துவமனை வந்ததும் முக்கிய நோயாளிகளைப் பார்த்து முடித்துவிட்டு ஒரு முறை ரவுன்ஸ் சென்று வந்தபின் தனதறையில் அமர்ந்தவனின் சிந்தனையோ தன் மனம் கவர்ந்தவளிடமே நிலைத்திருந்தது...

அவளைக் கண்டுப்பிடித்தாக வேண்டும் ஆனால் எப்படி என்று யோசித்தவனுக்கு தனது தோழனின் நியாபகம் வர அவனுக்கு அழைப்பு விடுத்தான்....

எதிர்முனையில் போனை எடுத்ததும் "ஹலோ மச்சான் எப்படி இருக்க.... " என்று ஸ்ரீதரன் பாசமாக வினவ

"யார்டா நீ..."

"என்னடா இப்படி கேட்டுட்ட.... உன் ஆருயிர் நண்பன்டா.... "

"எடு செருப்ப.... ஆருயிர் நண்பனாம்... இத்தனை மாசமா ஒரு போனாவது பண்ணியா... நான் இப்போ டூயிட்டில பிசியா இருக்கறனால தப்பிச்ச இல்ல மவனே உன்ன .... " இத்தனை நாட்கள் தன்னிடம் பேசாத தன் உயிர்நண்பனை மனம் ஆறும் வரை திட்டித் தீர்த்தான் இன்ஸ்பெக்டர் விகாஷ்...

"சரி மச்சான் சரி மச்சான்.... இதுகெல்லாம் கோச்சுக்கலாமா.... டேய் அப்பறம் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா... " தயங்கிக் கொண்டே ஸ்ரீதரன் கூற மேலும் கடுப்பானான் விகாஷ்....

"டேய் என்னடா இது ஹெல்ப் கில்ப்னுட்டு.... மச்சான் எனக்கு பண்ணனும்டானு சொன்னா பண்ணப்போறேன்... என்னனு சொல்லுடா...."

"அது வந்து நான் ஒரு போட்டோ அனுப்புறேன்.... அந்த பொண்ண கண்டுபிடிக்கனும்டா... "

"எதே பொண்ணா... மச்சான் நீதானா இது... " என்று விகாஷ் வாயைப் பிளக்க

"ஆமாடா... கண்டுப்பிடிச்சு தாடா மச்சான்... "

"என்னடா எதோ என்னோட நாய்க்குட்டி காணோம் கண்டுப்பிடிச்சுக் கொடுங்கற மாதிரி சொல்ற... "

"இப்போ என்ன கண்டுப்பிடிக்க முடியுமா முடியாதா... " பொறுமை இழந்து ஸ்ரீதரன் கடுப்புடன் வினவ

"உடனே வந்துருமே மூக்குக்கு மேல கோவம்... டூயிட்டில இருக்கேன் மச்சான்... நீ போட்டோ அனுப்பி விடு... நான் பாத்துக்கிறேன்... " என்று விகாஷ் கூற இனி தன் நண்பன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் தனது வேலைகளை கவனித்தான் ஸ்ரீதரன்....

*************

மாலை வீட்டிற்கு வந்த சாம்பவியோ பரபரப்பாக தனது உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்த நாச்சியார்

"அடியே சின்னக் கழுதை என்ன எல்லாமே சுடிதாரா வைச்சுட்டு இருக்க... நாலு தாவணியும் எடுத்து வைச்சுக்கலாம்ல...." என்று கூறியவரை முறைத்தாள் சாம்பவி....

"ஆத்தா நான் என்ன கோவில் குளத்துக்கா போறேன் தாவணி எடுத்து வைச்சுக்க.... சுடிதார் போட்டாலே சென்னைல எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க... இதுல தாவணி வேறயா... " என்று சிணுங்கிய தன் பேத்தியை ஆச்சரியமாகப் பார்த்தவர்

"அப்போ அங்கன இருக்குறப் புள்ளைங்க எல்லாம் என்னத்த போடுவாங்க... "

"அங்க எல்லாம் பேண்ட் சட்ட தான் ஆத்தா போடுவாங்க.." என்று சாம்பவி கூறியதும் இரண்டு கண்களும் வெளியே வரும் அளவிற்கு அதிர்ச்சியானார் நாச்சியார்....

"அடி ஆத்தி... நிசமாவா சொல்ற... புள்ளைங்களும் சட்டபேண்ட் தான் போடுவாங்களாக்கும்.... "

"அட ஆமா ஆத்தா அது தான் இப்போ பேஷன்... "

"என்னத்த பேசனோ... புள்ளைங்கனா அழகா புடவையோ தாவணியோ கட்டுனா தான் அழகு... அதுல தான் பாக்கவும் லட்சணமா இருப்பாங்க...." என்று கூறிய நாச்சியாரை சலிப்பாய் நோக்கினாள் சாம்பவி...

"அய்யோ உயிர வாங்காம கம்முனு போ ஆத்தா... "

"போடி சின்னக்கழுதை.... நல்லது சொன்னா எங்க கேக்குறவ... நாளைக்குப் போற எடத்துல மாமியார் கிட்ட நாலு அடி வாங்குனா தான் இந்த ஆத்தா அரும புரியும்..." புலம்பிக் கொண்டே அவர் வெளியே சென்று விட மறுநாளிற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சாம்பவி....

கீழே பல பேச்சுக்குரல்கள் கேட்க யாரென்று சென்றுப் பார்த்தவள் தனது அத்தை அன்புசெல்வியைக் கண்டதும் "அத்தமா... " என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் சாம்பவி....

"சவிக்குட்டி.... " தனது செல்ல மருமகளின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவர்

"என்னடா நாளைக்கு காலேசு டூரு போறியாமே.... அத்தகிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லல.... " வெள்ளந்தியாய் வினவியவரின் முகமோ வாடியிருந்தது...

"அத்தமா உங்க கிட்ட சொல்லாம நான் போவேனா... ட்ரஸ்லாம் பேக் பண்ணிட்டு நான் இப்போ உங்களப் பாக்கதான் கிளம்பலாம்னு இருந்தேன்.... அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க... " என்றவள் முகத்தில் நிமிடத்திற்கு நூறு பாவனைகளுடன் தனது அத்தையிடம் பேசிக் கொண்டிருக்க அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்....

"அதானே என்ற மருமகளாவது என்றகிட்ட சொல்லாமப் போறதாவது... " என்று பெருமையாக அன்புச்செல்வி கூற அதில் விஷ்வாவைத் தவிர அனைவரும் சிரித்தனர்....

"கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது அத்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சாம்பவி....

தொடரும்

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களைச் சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes