ப்ரியசகியே 18

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-18





அவள் சென்றிருந்தது தொழில்முறை பயணம் அந்த வகையில் சென்ற காரியம் ஜெயமே ஆனால் அவள்தான் அந்த வெற்றியைக்கொண்டாடும் மனநிலையில் இல்லையே விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே கிருஷ்ணாவை எதிர்ப்பார்த்தவளுக்கு வந்திருந்த ட்ரைவரைக்காணவும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது அவனிடம் பேசி இரண்டு நாளாகிறது.


காரோட்டியும் அமைதியாகவே வர இவள் கேட்ட கேள்விகளுக்கும் ஆம் இல்லை என்ற பதிலைத்தவிர வேறேதும் இல்லாமல் போகவே அவளும் மௌனமாகிவிட்டாள்.


வழக்கத்தைப்போல வண்டியிலிருந்து இறங்கி ஔட் ஹவுஸ் நோக்கிச்சென்ற மாதுவைக்காண அவருக்கு பரிதாபமாக இருந்தது அவரும் சொல்லிவிட வேண்டுமென்றுதான் நினைத்தார் ஆனால் பாவம் அவள் நிற்கவுமில்லை அவரால் முடியவுமில்லை.


எப்பொழுதும் திறந்தே கிடக்கும் கதவு மூடியிருக்க காலிங் பெல்லை அழுத்தியவள் அதன் பின்பே கதவு பூட்டப்பட்டிருப்பதை கவனித்தாள். எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர எப்பொழுதும்போல் முதல் ஆளாக வந்து நிற்கும் வள்ளியம்மாவை காணவில்லை இவள் ‘வள்ளியம்மா’ என்றழைத்த பின்னே அடுக்களையிலிருந்து வெளிபட்டவர் முகமே சொல்லியது அவர் அழுதிருக்கிறாரென்று. ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்ந்தவள்


‘என்னாச்சுமா???....ஏன் கண்ணு கலங்கியிருக்கு? சுந்துமா எங்க? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?’ அவள் கேள்விகளை அடுக்க அவரால் அதற்குமேல் முடியாதென்பதுபோல் அழுதுவிட்டார்.


‘என்னாச்சுமா???... சொல்லுங்கமா’


‘சுந்தரிக்காவும் கிருஷ்ணாவும்….’


‘கிருஷ்ணாவும்…?’


‘ வீட்ட விட்டு போய்ட்டாங்கடா...நம்மளவிட்டுட்டு இந்த வீட்ட விட்டு போய்ட்டாங்க கண்ணு’ என அவள் பிரம்மை பிடித்ததைப்போலாகிவிட்டாள். அவள் இப்படியொன்றை எதிர்ப்பார்க்கவில்லையே...அவள் திகைத்தது சில நிமிடங்களே சுந்தரி அவள்மேல் வைத்திருந்த அன்பை உணர்ந்திருந்தவளுக்கு அவர் அப்படி விட்டுச்செல்ல வேண்டுமென்றால் ஏதோ நடந்திருக்கவேண்டும் என்று நிச்சயம்.


‘என்னாச்சுமா?...எதனால?’


‘அது….’என்று.இழுத்தவரைப்பார்த்து


‘சொல்லுங்கமா என்ன ஆச்சு?’


‘நீ ஊருக்கு கிளம்பின கொஞ்ச நேரத்துலேயே சந்திரனய்யா வந்தாரு’ என அவளுக்கோ ஆச்சர்யமாக இருந்தது ஆறு வருடங்களுக்கு முன் முறித்துக்கொண்டுச்சென்றவருக்கு திடீரென்று என்னவாகியது? அதுவும் ஏன் தான் ஊரிலில்லா சமயத்தில் வரவேண்டும்? என்று யோசித்துக்கொண்டிருக்க அதற்கு வள்ளியம்மா பதிலளித்தார்.





மாதுரியை வழியனுப்பிவிட்டு வந்த கிருஷ்ணா வீட்டில் யாருமில்லாமல்போக மாது வீட்டை நோக்கி நடந்தான் அவனுக்கு நன்றாக தெரியும் சுந்தரி வீட்டில் இல்லையென்றால் அங்குதான் சென்றிருப்பாரென்று அதேபோல் அவரும் அங்குதானிருந்தார் ஆனால் பேசிக்கொண்டிருக்கவில்லை சாமான் ஒதுங்க வைப்பதில் வள்ளியம்மாவிற்கு உதவிக்கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அவர் கனமான பொருளை தூக்கப்போக இவனோ வேகமாக அவரிடமிருந்து அதை வாங்கிக்கொண்டான். திடீரென்று அவன் கையிலிருந்து பிடுங்கியதில் திடுக்கிட்டவர் அவனிடம் திரும்பி

‘என்னடா?’ என


‘ என்னம்மா பண்ற?’


‘இத தூக்கி அந்த ரூம்ல வைக்கப்போறேன்’


‘தனியாவா?’


‘பின்ன இதுக்குனு ஊரயேவா கூப்பிடுவாங்க?’


‘நக்கலா...வள்ளியம்மா எங்க?’ என அவன் கேட்டுக்கொண்டிருக்க முதல் செட் சாமான்களை வைத்துவிட்டு வந்த வள்ளியோ


‘என்னக்கா?...நான்தான் சொன்னேன்ல நான் வரேன்னு…’ என்றுவிட்டு அவர் அதை தூக்க முயல கிருஷ்ணாவோ


‘இரண்டு பேரும் தூக்க வேண்டாம் நானே கொண்டு வரேன் எங்க வைக்கனும்னு சொல்லுங்க வள்ளியம்மா….அம்மா கொஞ்சம் காபி தாயேன்’ என்றுவிட்டு அவன் தூக்கிக்கொள்ள வள்ளியும் அவனுடன் சென்றுவிட சுந்தரி அவன் கேட்ட காபியைக்கொண்டுவர சென்றுவிட்டார்.


வள்ளியம்மாவுடன் சென்றவன் முதல் தளத்திலிருந்த அறையில் அந்த பெட்டியை வைத்துவிட்டு இருவரும் வர அந்நேரம் போர்டிகோவில் ஒரு கார் வேகமாக வந்து நிற்க அதில் வந்திறங்கிய மணிதரோ அதைவிட வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.அந்த சத்ததிலேயே எல்லோரும் முன்னறைக்கு வந்துவிட அவரோ ‘வள்ளி!!!!...’ என்று கத்த கிருஷ்ணாவின் பின் வந்துக்கொண்டிருந்த வள்ளியோ அவரது குரல்கேட்டு வேகவேகமாக இறங்கிவர


‘வாங்கய்யா…’ என அவர் முடிப்பதற்குள்


‘என்ன பண்ணி வச்சிருக்கா அவ...என்னால வெளில தலகாட்ட முடியல’என கத்த அந்த சத்தத்தில் அடுக்களையிலிருந்து வெளியே வந்த சுந்தரியோ பேயறைந்தாற்போல் நின்றுக்கொண்டிருந்த வள்ளியைப் பார்த்துவிட்டு ‘யாரு வள்ளி?’ என்க அவர் பக்கம் திரும்பியவர் ‘ஓ...நீங்கதானா…’ என்று இளக்காராமாக கேட்க அதுவரை அமைதி காத்த கிருஷ்ணாவோ

‘யாரு சார் நீங்க?’ என அவரோ வள்ளியிடம் திரும்பி ‘சார் கேக்குறாருல...சொல்றது’ என்றுவிட்டு அவரே அவன் புறம் திரும்பி


‘நான் சந்திரசேகர்.மிஸ்.மாதுரி ராஜசேகரோட சித்தப்பா’ என என்னதான் அவர் எகத்தாளமாகப் பேசினாலும் மாதுரியின் சித்தப்பா என்றவுடன்


‘ஹாய் அங்கிள் நான் கிருஷ்ணா மாதுவோட ஃப்ரெண்ட் இவங்க…’ என்று அவன் அறிமுகம் செய்துக்கொண்டிருக்க அவரோ ஒரு எரிச்சலான பார்வையை சிந்திவிட்டு ‘உங்களுக்குலாம் கொஞ்சம்கூட வெக்கமாவே இருக்காதா ஒரு ஏமாளிப்பொண்ணு கிடைச்சானா அவ தலைல மிளகா அரைக்கப் பார்க்கறது அவ சின்ன பொண்ணு அவளுக்குதான் தெரியல உனக்கு அறிவு எங்க போச்சு வள்ளி…’ என்று வள்ளியையும் சாட சுந்தரியோ எங்கே கிருஷ்ணா கோபத்தில் வார்த்தையை விட்டுவிடுவானோ என்று முந்திக்கொண்டு ‘நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க….’ என அவரோ


‘யாரு நான் தப்பா புரிஞ்சிட்டிருக்கேனா? எல்லாம் நல்லா தெரிஞ்சிக்கிட்டுதான் பேசறேன் நல்லா வளர்த்திருக்கேம்மா உன் புள்ளய நல்ல பெரிய வீட்டுப்பொண்ணா பார்த்து புடிச்சிருக்கான்’ என்று அவர் மகள் மீது அவரே சேற்றை வாறியிரைக்க கிருஷ்ணாவோ


‘தப்பா பேசாதீங்க அங்கிள்’ என்று அழுத்தமாக உறைக்க அதில் ஒரு நிமிடம் திகைத்தவர் இன்னும் ரௌத்திரமாகி


‘என்னடா குரல உசத்திர? உங்க லட்சணமெல்லாம் தெரிஞ்சிதான் பேசறேன் அதனாலதானா உங்க சொந்தக்காரங்களே உங்கக்கிட்ட பேசறதில்ல.இப்போ மாதுரியோட வாழ்க்கைய கெடுக்க வந்திருக்கீங்க…’என்று அவர் வார்த்தைகளை அமிலமாக கொட்ட


‘யோவ்! நிறுத்துயா...போதும் இன்னொரு வார்த்தை என் அம்மாவ பத்தி பேசுன பல்ல கழட்டிடுவேன் மாதுவோட சித்தப்பாங்கிறதால விடறேன்’ என்றவன் கத்திய கத்தலில் ஒரு நிமிடம் எல்லோரும் ஆடித்தான் போனார்கள் சுந்தரி உட்பட.


சந்திரனுக்கோ இவ்வளவு நேரம் மரியாதையாக பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று ‘வாயா போயா’ என்று கொஞ்சமும் மதிக்காமல் கத்தியதில் அதிர்ந்துவிட்டார்.


‘கிருஷ்ணா!!! என்னடா இது பெரியவங்கள மதிக்காம?’ என சுந்தரி கேட்க அவனோ


‘மரியாதை குணத்துக்குதானே தவிர வயசுக்கில்லமா’ என்றவன் அவர் கையை பிடித்து ‘சக மனுஷன மதிக்கத்தெரியாத யாருக்கும் என்கிட்ட மரியாதை கிடைக்காது...வாங்கம்மா’ என்று அவரை அழைத்துக்கொண்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான். மறுநாள் ஒரு ஆள் டெம்ப்போவுடன் வந்து சாமான்களை எடுத்துச்சென்றான்.





கேட்டுக்கொண்டிருந்த மாதுரிக்கு ஒரு பக்கம் மனம் அவனது செயலை பாராட்டினாலும் இன்னொரு பக்கம் இரத்தம் கொதித்தது. அவள் காரை நோக்கி செல்ல அந்த விசுவாசமிகுந்த காரோட்டியோ ‘நான் ஓட்டுறேன்மா’ என்க அவள் அதை கவனிக்கும் நிலையில் இல்லை அடுத்த நிமிடமே கார் சந்திரசேகரின் வீட்டை நோக்கி பறந்தது.


அங்கிருந்த போர்ட்டிக்கோவில் வண்டியை நிறுத்தியவள் அவளை வரவேற்ற சித்தியைக்கூட கவனிக்காமல் ‘சித்தப்பா எங்க?’ என


‘மேல இருக்காரு மாது ஏன் என்னாச்சு?’ என்க பாவம் அதைக் கேட்கத்தான் அவள் அங்கில்லையே.


அந்த மூன்று மணி காபியை அவர் வீட்டு பால்கனியில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தபடி ருசித்துக்கொண்டிருந்தவர் முன் வந்து நின்றவளைப் பார்த்தும் பார்க்காததுப்போல் இருக்க


‘ஏன் இப்படி செஞ்சீங்க?’ என்று வார்த்தைகளை கடித்து துப்ப அவரோ பொறுமையாக


‘என்ன செஞ்சேன்?’என்று எதுவும் தெரியாததுப்போல் வினவ


‘விளையாடாதீங்க சித்தப்பா ஏன் அப்படி செஞ்சீங்க?’


‘ஓ...நான் உன் சித்தப்பாங்கிறது ஞாபகத்துல இருக்கா…’


‘அது ஞாபகத்துல இருக்கப்போய்தான் பொறுமையா பேசிட்டிருக்கேன்’


‘என்ன திமிரா?’


‘இல்ல தன்மானம்’


‘அவன சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? அவன் என்ன உன் அண்ணனா இல்ல தம்பியா?’


‘அதுக்குமேல அவன் என் நண்பன்’


‘ஆனா ஊருக்குள்ள அப்படி பேசிக்கலயே…’என்றவர் இழுக்க


‘அதபத்தி எனக்கு எந்த கவலையுமில்ல. ஐ ஜஸ்ட் டோன்ட் கேர் அன்ட் இன்னொரு தடவை நீங்க கிருஷ்ணாவையோ இல்ல சுந்துமாவையோ ஹர்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா அதோட கான்ஸிக்வன்ஸஸ் பயங்கரமாயிருக்கும்’ என்று விட்டு கிளம்பியவள் ஒரு நிமிடம் திரும்பி


‘இத நீங்களா பண்ணலன்னு எனக்குத்தெரியும்’ என்று சென்றுவிட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top