ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

#1
அத்தியாயம் -8

ஹர்ஷாவின் மாமன்மகள் அஞ்சலி அழகும் அமைதியும் நிறைந்த 25 வயது மங்கை.... அவளுக்கு அன்பை விட அழுத்தம் அதிகம்.... ஒரு விடயத்தை முடிவு செய்துவிட்டால் அவளை அதிலிருந்து யாராலும் மாற்றவே முடியாது ....

அதற்கு உதாரணமாக தான்....

பெற்ற தாய் தந்தையால் கூட திருமணம் வேண்டாம் என்று அவள் எடுத்த முடிவை இப்பொழுது வரை மாற்ற முடியவில்லையே....

ஹர்ஷா உடனான நிச்சயதார்த்தம் நின்று போனதிலிருந்து இப்போது வரை அவள் சொல்லும் ஒரே வாக்கியம்.... 'எனக்கு திருமணம் வேண்டாம்' என்பதுதான்....

அவளது இரண்டு அண்ணன்கள் அண்ணிகள் முதல் அனைவரும் அவளிடம் எவ்வளவோ கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்தாயிற்று ....அவள் மசியவில்லை ..... ஒருபுறம் வயது ஏறிக் கொண்டே சென்றாலும் அவள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள் அஞ்சலி.


திருமணத்தை நிறுத்திய திலகருக்கு கூட தன் மகள் இப்படியே இருந்து விடுவாளோ என்ற பயம் நெஞ்சுக்குள் உண்டாயிற்று.
அதற்கு விரைவிலேயே ஒரு வழி செய்யவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் அவர்....
தன் மகளின் மனது புரியாமல்.....


************
அன்று எப்படியாவது தனது உடைக்கு நியாயம் கேட்கவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ஹர்ஷினிக்கு வாய்ப்பளிக்காமல்
அன்று இரவு உணவின்போது கார்த்திக் தனக்கு உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டு அறைக்குள்ளேயே அடைந்துகொள்ள ....


ஹர்ஷினிக்கு அவனை சந்திக்க முடியாமல் போனது....

மறுநாள் காலையிலேயே எப்பொழுதும்போல் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் கார்த்திக். அவனருகில் நிழலாட யாரென்று திரும்பிப் பார்த்தவன் ஹர்ஷினியை பார்த்ததும்.... 'இந்த அர லூசு தானா...' என்று அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவன் தன்னைப் பார்த்ததும் பேச வாயெடுத்தவள்.... முகத்தை திருப்பிக் கொண்டதும் கடுப்பாகி.... "யோவ் எவ்வளவு தைரியம் இருந்தா.... என்னோட டிரஸ் எல்லாத்தையும் அனிமல்ஸ் எல்லாத்துக்கும் குடுத்ததும் இல்லாம.... என் கிட்டயே சீன் போடுற இப்போ.... உன்னையெல்லாம் கம்பத்துல கட்டி வைத்து கைய உடைக்கணும்...யோவ்" என்று எகிற

"ஏய் மரியாதையா பேசு..." என்று கார்த்திக் கோபத்துடன் பதிலுக்கு எகிற... அவளும் விடாமல் பதிலுக்குப் பதில் பேச....

அவர்களின் உரையாடல் சில நிமிடங்களிலேயே வாய்ச்சண்டை ஆகிப்போனது.

இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவா? குத்தவா? என்பது போல் பார்க்க....

சரியாக அப்பொழுது கார்த்திக்கின் அப்பா கணபதி....
தோட்டத்தில் பெரிய மரங்களின் கிளைகள் அடர்ந்து வளர்ந்ததால் சிறுசிறு செடிகளுக்கு சூரிய ஒளி படாமல் இருக்கவும்.... அதனின் கிளைகளை மட்டும் வெட்ட மரம் வெட்டுபவர் ஒருவரை கூட்டிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தார்.....


தன் அப்பா வருவதை பார்த்ததும்... "அப்புறமா பேசிக்கலாம் இப்ப வீட்டுக்கு போ" என்று கார்த்திக் மெதுவான குரலில் ஹர்ஷினியிடம் கடிந்து கொள்ள.....

"ஐயோடா இவர் பெரிய சண்டியர்... இவர் சொன்னதும் நாங்க பயந்து சரிங்க எஜமான்னு சொல்லிட்டு உள்ள போகனுமா? நெவர்.... மொதல்ல என் டிரஸ்சுக்கு ஒரு வழி சொல்லு மேன்" என்று பாண்டியனின் சபையில் நீதி கேட்டு நின்ற கண்ணகி போஸில் நின்றாள் ஹர்ஷினி.

அவளது பேச்சு அவனை எரிச்சல் படுத்த....
"ஹேய் பொண்ணுன்னு பாக்குறேன் இல்லன்னா பல்ல தட்டி கைல தந்திடுவேன்.... தேவையில்லாம என்கிட்ட பேசி வாங்கிகட்டிட்டு போயிடாத... ஓவரா பேசுனா தங்கச்சி ஃப்ரெண்ட்ன்னு கூட பாக்க மாட்டேன்..." என்று கார்த்திக் கோபத்தில் பல்லைக் கடிக்க...


ஹர்ஷினியோ... அசராமல்
"சரி போயா நீ எதுவுமே சொல்ல வேண்டாம்... இந்த வாராரே உன்னோட அப்பா அவர்கிட்டயே என்னோட டிரஸ்சுக்கு நியாயம் என்னன்னு கேட்டுக்குறேன்" என்று அசால்டாக சொல்லிவிட்டு அவனது அப்பாவை நோக்கி நகர....


"ஏய் இம்சை நில்லு" என்று அவள் பின்னாலேயே சென்றான் கார்த்திக்....

எந்தெந்த கிளைகளை வெட்ட வேண்டும் என்று மரம் வெட்டும் நபரிடம் கணபதி கூறிக் கொண்டிருக்க....

"அங்கிள்" என்று அழைத்து கொண்டே அவரருகில் வந்தாள் ஹர்ஷினி...

"என்னமா?" என்று அவர் கேட்க... அதற்குள் அவளின் பின்னால் வந்த கார்த்திக் அவளை முந்திக்கொண்டு பதில் சொன்னான்.

"அது ஒன்னும் இல்லப்பா... நம்ம வீட்டு விருந்தாளி நம்ம ஊரெல்லாம் சுத்தி பார்க்கணுமாம்... துணிக்கடைக்கும் போகணுமாம்.... அதுக்குதான் உங்ககிட்ட கேட்க வந்தாங்க.... நம்ம கனிக்கும் புது உடுப்பு எடுத்து ரொம்ப நாளாச்சுல்ல அதான் ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சிருக்கேன்.... நீங்க என்ன சொல்றீங்கப்பா?..." என்று பவ்யமாக அனுமதி கேட்க...

மகனின் முகத்தை கூர்ந்து பார்த்தவர்....
"அதெல்லாம் சரிதான்... ஊர் வம்பை இழுத்து வராம புள்ளைங்கள பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வா" என்று மகனிடம் கூறியவர்....


ஹர்ஷினியின் புறம் திரும்பி...
"நல்லா சுத்தி பார்த்துட்டு உடுப்பு எல்லாம் எடுத்துட்டு வாங்கம்மா.... இந்த பய ஏதாவது வம்பு பண்ண என்கிட்ட சொல்லுமா.... சரியா?" என்றதும் ஹர்ஷினியின் தலை படு வேகமாக ஆடியது.


'மாட்டுனடா நீ இத வச்சே உன்ன கவுக்குறேன்' என்று உள்ளுக்குள் நம்பியார் போல் கைகளிரண்டையும் உரசி வசனம் பேசியவள்....

வெளியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

கார்த்திக்கிற்கு எப்பொழுதும்போல் தந்தையின் பேச்சில் கோபம்தான் வந்தது. அதுவும் எவளோ ஒருத்தி முன் தன்னை மட்டம் தட்டி பேசும்பொழுது பத்தி கொண்டு வந்தது. எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான் அவன்...

சுவாதி பிரச்சனையில் இருந்து அவனது அப்பா சொல்லும் ஒரே வாக்கியம்... 'ஊர் வம்பை இழுத்து வந்து விடாதே' என்பதுதான்.
அன்று அவனின் அவசர புத்தியால் தான் பிரச்சனை ஆகியது என்பது அவருடைய கருத்து.... அதனால் அவரது பேச்சில் அவரை மீறி ஒரு குத்தல் வந்த விடும். தந்தை என்னதான் குத்திக் காட்டிப் பேசினாலும் அவர் மீதுள்ள மரியாதையால் முடிந்தளவு தன்னை கட்டுப்படுத்திக் கொள்வான் கார்த்திக் ........


அன்று காலை உணவாக இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் செய்யப்பட்டிருக்க... அதை அன்புடன் பரிமாறினார் சுகன்யாவின் தாய் சிவகாமி......

எப்பொழுதும் போல் உணவுப் பிரியை ஆன ஹர்ஷினி அதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டே.... "ம்ம்ம்...ஆன்ட்டி சான்சே இல்ல அப்படி ஒரு டேஸ்ட் சுகன்யா சொன்னது உண்மைதான்.... நீங்க ரொம்ப அருமையா சமைக்கிறீங்க" என்று பாராட்ட....
முகத்தில் எட்டா புன்னகையுடன் அவளது பாராட்டை ஏற்றுக்கொண்டார் சிவகாமி.


அதை கவனித்துக் கொண்டவள்... சுகன்யாவிடம் மெதுவான குரலில், "ஏன் அம்மா ஒரு மாதிரி இருக்காங்க?" என்று கேட்க... 'அப்புறம்மா சொல்றேன்" என்று முணுமுணுத்தாள் சுகன்யா.

கார்த்திக்கிற்கு அன்று அவர்களது பண்ணையில் முக்கியமான வேலைகள் இருந்ததால்.... மதியத்திற்கு மேல் ஹர்ஷினி சுகன்யா இருவரையும் வெளியே கூட்டி செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

காலை உணவிற்கு பின் கணபதியின் கார்த்திக்கும் அவர்களது பண்ணைக்கு சென்றுவிட.... கொஞ்ச நேரம் பூமணி அப்பத்தாவிடமும் சிவகாமி அம்மாவிடமும் நல்ல பிள்ளையாக பேசிக்கொண்டிருந்த ஹர்ஷினி ஊர் மைதானத்திற்கு செல்ல அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சுகன்யாவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்....

"சரி இப்போ சொல்லு சாப்பாடு பரிமாறும் போது அம்மா ஏன் ஒரு மாதிரி இருந்தாங்க?" என்று ஹர்ஷினி கேட்க...

"அது வேற ஒண்ணுமில்ல ஹர்ஷா அண்ணாவோட தங்கச்சி வர்தினிக்கும் ஆப்பம் தேங்காய்ப்பால்னா ரொம்ப இஷ்டம். அதுவும் எங்க அம்மா செஞ்சா அவளுக்கு ரொம்ப பிடிக்கும். இது செய்யும்போதெல்லாம் கரெக்டா எங்க வீட்டுக்கு ஆஜராகிடுவா... என் அண்ணாவுக்கு அவள பிடிக்காது ஹர்ஷி... மோப்பம் பிடிச்சுட்டு வந்துட்டாளா அப்படின்னு கிண்டல் பண்ணுவான்... ஆனா அவன எல்லாம் அவ கண்டுக்கவே மாட்டா... உரிமையா சாப்பிட்டுட்டு அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டு போவா... அம்மாவுக்கு அவள ரொம்ப பிடிக்கும்.... ஆனா இப்போ எல்லாம் அவ எங்க வீட்டுக்கு வர்றதும் இல்ல எங்க வீட்ல உள்ள யார் கூடவும் பேசறதும் இல்ல.... அதனால அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்... மே பி நீ அவங்க செஞ்சத ரசிச்சு சாப்பிட்டு பாராட்டும் போது அவளோட ஞாபகம் வந்திருக்கலாம் அதனால சோகமா இருந்திருப்பாங்க" என்று விளக்கம் அளித்தாள் சுகன்யா.

ஒரு நிமிடம் யோசனையாகிய ஹர்ஷினி... "உன்னோட நொண்ணனுக்கு எதுக்கு ஹர்ஷா சாரோட தங்கச்சி மேல அப்படி ஒரு கடுப்பு.... அழகு அண்ணா கிட்ட கூட அசிங்கமாக பேசி இருக்கார்" என்று கேட்க....
"தெரியாது" என்று தலையாட்டினாள் சுகன்யா...


ஹர்ஷினி அவளை சந்தேகமாக பார்க்க.....
"ஹே நானே நாலு வருஷமா இங்க அவ்வளவா வர்றதே இல்ல ஸ்டடி ஹாலிடேஸ் கூட ஹாஸ்டல்ல தான் இருந்தேன்.... உனக்கு தெரியுமே... நான் படிப்பு முடிஞ்சு இங்க வந்து ஆறேழு மாசம் தான் ஆகுது" என்றாள் அவள்....


"சரி சரி ஓவரா எமோஷனல் ஆகாத..." என்று சமாளித்துவிட்ட ஹர்ஷினி.. உள்ளுக்குள்
'என்னமோ இதுல இருக்கு... கண்டுபிடிக்கணும் ஹர்ஷி கண்டுபிடிக்கணும் ...'என்று நினைத்துக்கொண்டாள்.


இருவரும் பேசிக்கொண்டே கோவில் அருகே உள்ள மைதானத்திற்கு வந்திருந்தனர். அங்கு அவளது குரங்கு படை ஏற்கனவே தயாராக இருக்க அவர்களுடன் குழந்தையாக விளையாட போனவளின் கையை பிடித்து நிறுத்தினாள் சுகன்யா....

என்ன என்பது போல் ஹர்ஷினி தோழியை பார்க்க.... அவளது ஆடையை சுட்டிக்காட்டினாள் அவள்....

நேற்று அவளது உடைகள் அனைத்தும் கார்த்திக்கின் உபயத்தால் விலங்கினங்களுக்கு தானம் செய்யப்பட்டதால் இன்று சுகன்யாவின் தங்கை ஸ்வாதியின் தாவணியை அணிந்திருந்தாள் அவள்.....

சுகன்யா ஒல்லியான உடல்வாகு உடையவள் என்பதால் அவளது உடைகள் ஹர்ஷினிக்கு பொருந்தாது. லேசாக புஷ்டியாக இருக்கும் அவளுக்கு சுவாதியின் உடைகள் சரியாக இருந்ததால் அதை உடுத்தி இருந்தாள்.

"தாவணிய போட்டுட்டு ஓவரா ஆடாத..." என்று தோழியை எச்சரித்த சுகன்யா.... அவளது கையில் இருந்த மொபைலை வாங்கிக்கொண்டு.... "ஈஈஈஈ....ஹர்ஷி நான் கதிர் கிட்ட பேசிட்டு தரேன்டி.... வீட்ல இருந்தா சரியா பேசமுடியாது" என்று ஹர்ஷினி கிண்டல் செய்வதற்குள் அங்கிருந்து நழுவினாள்....

சுகன்யா முதலில் சொன்னதை கவனிக்காமல்... 'பயபுள்ள என் போன்ல தான் கடல வறுக்க போகுதா?'
"ஹேய் மொபைல் பத்திரம்டி.... எங்க ஆத்தா ஹிட்லர் கிட்ட அடம் பிடிச்சு வாங்கினது" என்று கத்திவிட்டு குழந்தைகள் புறம் திரும்பினாள் அவள்.


அவர்கள் ஏரியா குழந்தைகளுடன் ஹர்ஷினி விளையாடி இருக்கிறாள் தான்.... ஆனால் அது பாதி மொபைல் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும்.... பாதி நேரம் பப்ஜி பிரீ பையர் என்று விளையாடினால் ....மீதி நேரம் 'கும்பலாக சுத்துவோம்... நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்... ஏன் கத்துறேன்னு கேட்டா உங்க வாயிலேயே குத்துவோம் ... எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எங்கள பார்த்தா தமன்னா மயங்கி விழுந்துடும்' போன்ற கொலை குத்து பாடல்களுக்கு டிக் டாக் செய்வது வாய்ப்பு கிடைத்தால் தங்கள் குடுமிப்பிடி அம்மாக்களின் பெர்மிஷன் உடன் பீச் மால் பார்க் என்று சுற்றிவிட்டு வருவார்கள்.... அவளைப் பொறுத்த வரை அது தான் விளையாட்டு...

ஆனால் அவள் அறியாத விளையாட்டுகள் பல இங்குள்ள சிறுவர்-சிறுமிகள் கூட்டம் விளையாடிக்கொண்டிருந்தது....

"ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு...
தாம் தூம் தையா...
அஸ்தலக்கடி...
புஸ்தலக்கடி....
பாலசுந்தரம் கொய்யா...." குழந்தைகள் வட்டமாக இரண்டு கைகளையும் தரையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க ஒரு சிறுமி மட்டும் இந்த பாடலை பாடி ஒவ்வொரு கையாக அவுட்டாக்கி கொண்டிருந்தாள் .


கிரிக்கெட் ஹாக்கி ஃபுட்பால் என்ற விளையாட்டுக்களை மட்டும் பார்த்து பழகியவளுக்கு அவர்கள் விளையாடிய உப்புமூட்டை, பல்லாங்குழி, சுட்டி பிடித்தல்,
கித்திக்கா, கோலி விளையாட்டு எல்லாம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.


அவளும் ஒவ்வொரு விளையாட்டிலும் என்னென்ன செய்கிறார்கள்? என்பதை கூர்ந்து கவனித்து விட்டு அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள்....

இங்கு மொபைலில் கதிருடன் பேசிக்கொண்டிருந்தாள் சுகன்யா.

"அப்பா கிட்ட பேசுனியா கன்யா" என்று கதிர் கேட்க...

எப்பொழுதும்போல்.... "பயமாயிருக்கு" என்றாள் அவள்....

"ப்ப்ச்ச் பயப்படாம சொல்லு கன்யா... என்ன பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே பேஸ் பண்ணலாம்" என்று அவளுக்கு தைரியம் சொன்னான் கதிர்....

"ம்ம்ம்" என்ற சுகன்யா
"மாமா இன்னும் மனசு மாறவே இல்லையா?" என்று கம்மிய குரலில் கேட்க..... நெடிய பெருமூச்சுடன் "இல்லை" என்றான் அவன்....


சுகன்யாவின் தாய் சிவகாமியின் உடன்பிறந்த அண்ணனின் மகன் தான் கதிர்.... சுகன்யாவின் பூப்புனித நீராட்டு விழா பத்திரிக்கையில் ஆரம்பித்தது சண்டை.... சுகன்யாவின் அப்பா கணபதிக்கு இரண்டு அக்காக்கள் இருக்க அவர்களின் பெயர் மாமா அத்தை உறவில் முதலில் போடப்பட்டிருக்க... தாய் மாமன் பெயரான கதிரின் அப்பா பெயர் மூன்றாவதாக போடப்பட்டிருந்தது. ஆத்திரமடைந்த கதிரின் அப்பா செய்யவேண்டிய எல்லா சடங்குகளையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக பத்திரிக்கையில் தங்களது பெயர் மூன்றாவதாக போடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்ட... பெரும் சண்டையே உருவானது.... சண்டையில் கணபதியை நெல்லையப்பர் அடித்துவிட
விளைவு உறவுகளுக்கு இடையே விரிசல்.....


கதிரின் குடும்பம் சென்னையிலேயே செட்டிலாகிவிட....இரு குடும்பங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஆனால் சுகன்யாவின் தாய் சிவகாமி தன் தாய் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் தன் அண்ணனிடம் பேசி விடுவார்.... என்னதான் கோபம் இருந்தாலும் தங்கையின் மீது அவரால் கோபப்பட முடியவில்லை. அவ்வீட்டில் முடிவு எடுக்கும் உரிமை கணபதி உடையதே என்பதை அவரும் அறிவார்.... ஆனாலும் தன் நிலையிலிருந்து மாறாமல் தங்கையிடம் பேசுவதை தவிர்த்து விடுவார் அவர்.... சிவகாமிக்கு தான் பெரும் மன உளைச்சலாக இருந்தது. கணவர் ஒருபுறம்... அண்ணன் ஒருபுறம் இருக்க... யாருக்கு துணையிருக்க... எப்பொழுதுதான் இரண்டு குடும்பமும் பழையபடி ஒன்றாக என்று மிகவும் வேதனைப்பட்டு போனார் அவர்....

சிவகாமி தன் மனதில் உள்ளதை மூத்த மகளிடம் எப்பொழுதும் சொல்லிவிடுவார். அதைப்போல் இதையும் மனது கேளாமல் கொட்டித் தீர்த்துவிட தன் தாயின் சந்தோஷத்திற்காக தங்களது குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைத்தாள் சுகன்யா. கண்டிப்பாக அவள் தந்தையிடம் சென்று இதைப் பற்றி பேசவே முடியாது என்பதை அவள் அறிவாள்....
அதனால் மாமாவிடம் தன் அம்மாவின் கஷ்டத்தை சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்தாள் அவள்.... அதற்கு முதற்படியாக சென்னைக்கு சென்று மாமன் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லையே? அங்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு காரணம் தேவை.... அதன்படி தான் அவள் ஒரு யோசனைக்கு வந்தாள்.


முடிந்தளவு படிப்பின் மீது கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று சென்னைக்கு செல்ல வேண்டும் என்பதே அது ....

அதன்படி அவளது விடாமுயற்சியால் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று சென்னையில் புகழ்பெற்ற கல்லூரியில் இடமும் கிடைத்தது அவளுக்கு... அங்கு அவளே எதிர்பார்க்காதது தான் கதிரின் அறிமுகம்... அங்கு தனக்கு சீனியராக இருந்தவன் தன் மாமன் மகன் என்பதை அறிந்ததும்... அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.... கடவுளே தனக்குத் துணை இருப்பதாக நம்பினாள். சிறுவயதில் பார்த்த முகம் என்பதால் கதிருக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை என்றாலும் தன் அத்தை சாயலில் இருந்த சுகன்யாவை சில நாட்களிலேயே கண்டுபிடித்து விட்டான். அவளிடம் சென்று விசாரிக்க....
தன் அம்மாவிற்காக இவ்வளவு தூரம் வந்தவளை ஆச்சரியமாகத்தான் பார்த்தான் அவன். அதன் பிறகு இருவருமே தங்களது குடும்பத்தை இணைக்க சேர்ந்தே திட்டமிட அவர்களுக்குள் அவர்களை அறியாமலேயே காதலும் உருவானது.


ஹர்ஷினியின் நட்பு கிடைத்த பின் கதிர் பற்றி சுகன்யா அவளிடம் கூற கதிர் ஹர்ஷினிக்கு அண்ணன் ஆகிப் போனான். ஹர்ஷினியின் ஆலோசனைப்படி சுகன்யா தன் மாமா வீட்டிற்கு கதிர் உடன் செல்ல.... முதலில் உர்ரென்று பேசினாலும் பிறகு நன்றாகவே பேச ஆரம்பித்தார். கதிரின் அப்பாவும் சுகன்யாவின் மாமாவும் ஆன நெல்லையப்பர் கணவன் எவ்வழியோ நானும் அவ்வழியே என்பதுபோல் சுகன்யாவின் அத்தையும் நன்றாகப் பேசிவிட கதிர் சுகன்யா இருவரும் நிம்மதியாகினர்.

கதிர் சுகன்யாவை விட இரண்டு வருடங்கள் சீனியர் என்பதால் கல்லூரியை முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையும் கிடைத்து விட கதிர் அவனது பெற்றோரிடம் சுகன்யாவை விரும்புவதை கூறினான்....

ஆனால் அதற்கு அவர்கள் கூறியது யாரும் எதிர்பார்க்காதது.... சுகன்யாவின் அப்பா கணபதி தன்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் அவர்கள் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார் நெல்லையப்பர்....

கதிர் எவ்வளவோ போராடியும் அவனது அப்பாவை சம்மதிக்க வைக்க முடியவில்லை... சுகன்யாவும் தன் மாமாவிடம் கெஞ்சி கேட்டு பலனில்லை.... அவளுக்கு நன்றாகவே தெரியும் அவளது அப்பா மாமாவிடம் மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்லை என்று.... இருவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று தெரியாமல் தடுமாறிப் போய் நின்ற சமயம் அது...

சுகன்யாவும் கதிரும் தங்களது காதலுக்காக உறவுகளையும்... உறவுகளுக்காக காதலையும் தியாகம் செய்ய தயாராக இல்லை.

பகையாக நின்ற குடும்பங்களுக்கு இடையே நின்று தடுமாறினர் இளம் காதலர்கள்.....


சுகன்யா படிப்பு முடிந்து ஊருக்கு சென்று மாதங்கள் கடந்தும் இப்பொழுது வரை அவளது குடும்பத்திடம் கதிரை காதலிப்பது பற்றி அவளால் கூறமுடியவில்லை... கணபதிக்கு இன்றளவும் நெல்லையப்பர் மீது வெறுப்பு இருப்பது போல் தான் தெரிந்தது. அதனால் அப்பாவிடம் வாயை திறக்கவே பயமாக இருந்தது அவளுக்கு.... கதிருக்கும் அதே நிலைதான் தன் அப்பாவை தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை.... என்ன இருந்தாலும் நெல்லையப்பர் தான் கணபதியை முதலில் அடித்தது... அதனால் கதிரால் தந்தையின் பக்கமும் நிற்க முடியவில்லை... கண்டிப்பாக ஒரே ஒருமுறை தன் அப்பா சுகன்யாவின் அப்பாவிடம் பேசி விட்டால் போதும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்று நினைத்தான் கதிர்.

கதிர் இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான்.... ஹர்ஷினி சுகன்யாவின் ஊருக்கு செல்ல போவதாகவும்.... அதற்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டாள். எதற்கு செல்கிறாள்? என்று கேட்பதற்கு ஜல்லிக்கட்டு பார்க்கப் போவதாக அசால்டாக ஹர்ஷாவிடம் சொன்ன அதே பொய்யை அள்ளி விட்டாள் ....

கதிரும் தங்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையை கூற.... அதையும் தானே முடித்து வைப்பதாக சொல்லிவிட்டு தான் ஹர்ஷினி இந்த ஊருக்கு வரும்பொழுது அவனது பர்ஸை காலி செய்ததே.....!!

"சரி அத விடு.... அந்த அறுந்த வாலு என்ன பண்ணுது? பெருசா நா பாத்துக்குறேன் நான் பாத்துக்குறேன்னு டயலாக் பேசிட்டு அங்க வந்துச்சு..." என்று கதிர் கேட்க...

"அதை ஏன் கேக்கறீங்க.." என்ற சுகன்யா.... அவளுக்கும் தன் அண்ணன் கார்த்திக்கிற்கும் இடையே நடக்கும் கூத்துக்களை சொல்ல.... சத்தமாக சிரித்தான் கதிர்

"அறுந்த வால அடக்க வந்துட்டான்யா என் மச்சான் சிங்கம்" என்று பாராட்ட.... "இத அப்படியே ஹர்ஷி கிட்ட சொன்னா என்ன ஆகும்?" என்று சுகன்யா கேட்டவுடன்...

"எம்மாடி நான் உன்னோட லவ்வரு தாயி லவ்வர்... அந்த கொசு கிட்ட என்ன கோர்த்து விட்டுடாத" என்று அலற.... இப்பொழுது சிரிப்பது சுகன்யாவின் முறை ஆயிற்று.....

இருவரும் பொதுவான விஷயங்களை பேச.... நேரம் போனதே தெரியவில்லை....

சுகன்யா பேசி முடித்துவிட்டு வரும் பொழுது ஹர்ஷினி, "ஒரு குடம் தண்ணீர் எடுத்து ஒரு பூ பூத்தாச்சு" பாடிக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தாள்...

ஹர்ஷினியும்... இன்னொரு சற்று உயரமான சிறுமியும் கைகளை கோர்த்துக் கொண்டு கண்களை மூடியபடி பாடிக்கொண்டிருக்க.... அவர்கள் கைகள் கோர்த்திருந்த இடைவெளியில் புகுந்து சிறுவர்-சிறுமிகள் வேகமாக ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு நகர்ந்து கொண்டே இருந்தனர்..

கண்கள் மூடி இருவரும் சரியாக "பத்து குடம் தண்ணி எடுத்து பத்து பூ பூத்தாச்சு" என்ற வாக்கியத்தில் தங்கள் கைகளை இறுக்க... இடையில் மாட்டிக் கொண்டவர்கள் தான் அவுட்.....

கிடைத்த இடைவேளையில்....
"ஹர்ஷி நேரம் ஆயிட்டு போகலாமா?" என்று சுகன்யா கத்த ...


"கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம் சுகா.... ரொம்ப ஜாலியா இருக்குடி இது" என்று பதிலுக்கு கத்திய ஹர்ஷினி....
திரும்பவும் தன்னுடன் கைகளை கோர்த்து இருந்த சிறுமிஉடன் கைகளை தூக்கி கொண்டு "ஒரு குடம் தண்ணீர் எடுத்து ஒரு பூ பூத்தாச்சு" என்று ஹர்ஷினி மகிழ்ச்சியாக பாட ஆரம்பிக்க....


'இவளை என்ன செய்வது?' என்பது போல் தான் சுகன்யாவால் பார்க்க முடிந்தது....

அவளைப் போல் தான் ஹர்ஷாவும் அழகேசனும் ஒன்றுபோல் தலையால் கைகளைத் தாங்கியபடி மைதானத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்து ஹர்ஷினியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


அவர்கள் இருவரையும் பார்த்துவிட்ட சுகன்யா அவர்கள் அருகில் சென்று பேச்சுக் கொடுக்க.... அழகேசன் சுவாதி கல்லூரி சுற்றுலா முடிந்து எப்பொழுது வீடு திரும்புவாள் என்று விசாரித்தான்.... சுகன்யா அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க...

ஹர்ஷா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷினியின் விளையாட்டை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டே சிறுவன் போல் வரிசையில் நின்றான்....

அவனுக்கு முன்னால் நின்ற சிறுவன் சென்றதும் இவனும் ஹர்ஷினி கைகள் கோர்த்து இருந்த பகுதிக்குள் புகுந்து வெளியே வர நினைக்க அதற்குள் "பத்து குடம் தண்ணீர் எடுத்து பத்து பூ பூத்தாச்சு" என்று பாடி முடித்து ஹர்ஷாவை இறுகப் பிடித்துக் கொண்டே கண்களை திறந்தாள் ஹர்ஷினி....

அதேநேரம் தூரத்திலிருந்து ஹர்ஷாவை இமைக்காமல் பார்த்துக்கொண்டே அருகில் வந்த அஞ்சலியின் கண்கள் இக்காட்சியைப் பார்த்ததும் இடுங்கியது.

தொடரும்.....

போன அத்தியாயத்திற்கு லைக் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்:):)

அடுத்த அத்தியாயம் சீக்கிரம் கொடுக்க ட்ரை பண்றேன்....
 
Last edited:
#9
என்னதான் இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளை தங்கையின் கணவர் என்று கூட இல்லாமல் நெல்லையப்பர் கணபதியை அடித்தது ரொம்பவே தவறு
கணபதியிடம் அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கணும்
என்ன ஹர்ஷினி மீது ஹர்ஷாவுக்கு சம்திங் சம்திங் வந்து விட்டதா?
அச்சச்சோ
அஞ்சலி பார்த்துட்டாளே
என்ன பண்ணப் போறாளோ?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement