ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி -6

Advertisement

ஹாய் ரீடர்ஸ் தாமதமான பதிவிற்கு இந்த பச்சை புள்ளைய மன்னிச்சிடுங்க... இனி டூ டேஸ் ஒன்ஸ்.... யூ டி வந்துடும்...:):):)

ஹேப்பி ரீடிங்....:love:
****************
அத்தியாயம் 6:

கார்த்திகை அறைக்குள் பூட்டியது ஹர்ஷினியை பொருத்தவரை சிறு குழந்தையின் விளையாட்டு போலத்தான்.... அதுவும் நேற்று அவன் நடந்து கொண்ட விதத்திற்கும் அவளின் ஆசையான கீ செயின் உடைந்ததற்கும் சிறு பழிவாங்கும் படலம்....

ஆனால் உடைந்து இருந்த அறைக்கதவை பார்த்த ஹர்ஷினிக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.

"கதவுக்கே இந்த நிலைமைனா? அதை பூட்டின எனக்கு?" என்று மனதிற்குள் புலம்பினாள்.

அவளின் முகத்தை பார்த்து...
'பாவம் புள்ள பயந்து போச்சு போல .... அதான் பேய் அறைஞ்சது மாதிரி நிக்குது' என்று தவறாக புரிந்துகொண்ட அப்பத்தா... சுகன்யாவிடம்...
"இந்த வாசக் கதவ நம்ம வீட்டு சண்டியர் தான் உடைச்சுருப்பியான்.... உன் அப்பன் வீட்ல இல்லல்ல அதான் துறைக்கு குளிர் விட்டுப்போச்சு .... எம் மவன் வரட்டும்... அப்புறம் வச்சிக்கிறேன் அவன... இப்படி அபசகுணமா போச்சே" என்று தன் பாட்டிற்கு புலம்பிக்கொண்டே திண்ணையில் சென்று அமர்ந்தார்.


ஹர்ஷினிக்கு தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை...... தான்தான் அறைக்கதவை பூட்டியது என்று இவர்களிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று குழம்பியபடி நின்றாள்.

அப்பத்தா வேறு விடாமல் ....கெட்ட சகுனம் சுகன்யாவின் பெற்றோர்கள் ஊர் திரும்பும் நேரம் ...அது இது என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்க... சுகன்யா தன் அப்பத்தாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.


அப்பொழுதுதான் பின்பகுதியில் இருந்த தோட்ட கதவை திறந்து கொண்டு வியர்வை வழிய வீட்டிற்குள் வந்தான் கார்த்திக்.

அவனின் தோற்றத்தை பார்த்து மலைத்து நின்றாள் ஹர்ஷினி....

வெறும் பனியனும் மடித்து கட்டிய வேஷ்டியும் அணிந்திருந்தான். அவனது கைகளில் இருந்த பல கட்டிகளையும் வயிற்றிலிருந்த படிக்கட்டுகளையும் பார்த்தாலே தெரிந்துவிடும் அவன் தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்று...

'ஆத்தாடி அம்மாடி இம்புட்டு பெருசா இருக்கானே... இவன்கிட்ட போய் வசமா சிக்கி சின்னாபின்னமாக போறியே ஹர்ஷி.... ஓங்கி ஒன்னு உட்டா பல்லு போய் பல்லி மாதிரி சுவத்துல ஒட்டிட்டு இருப்ப போலயே....' என்று மைண்ட் வாய்ஸில் தனக்குத் தானே பேசிக் கொள்ள....

'வந்த இடத்துல வாலை சுருக்கிட்டு கம்முனு இருக்கணும்... இல்லன்னா சில பல அடிகள் விழத்தான் செய்யும் ஹர்ஷி... வாங்கிக்கோ வாங்கிக்கோ' என்று தக்க சமயம் பார்த்து அவளின் காலை வாரியது மனசாட்சி....

' அய்யோடா கராத்தேல பிளாக் பெல்டாக்கும் நானு.... சிங்கப் பெண்ணே சாங் வரதுக்கு முன்னாடியே நான் சிங்கப் பெண்... என் மேல யாராலும் கை வைக்க முடியாது' என்று கெத்தாக மனசாட்சியை தட்டி அடக்கினாள்.

பாவம் அவளுக்கு தெரியாதது என்னவென்றால் கார்த்திக் கட்டதுரை என்று அழைக்கப்படுவதற்கு முதல் காரணமே அவனது கட்டுக்கோப்பான உடல் வலிமை தான்... இரண்டு வருடங்களாக ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அவன்தான் வெற்றிக் கோப்பையை தட்டி இருந்தான். அப்படிப்பட்ட திடகாந்திர ஆண் மகன் ஒருவனை சிறு அறைக்குள் அடைத்து வைக்க முயற்சி செய்தது சிறுபிள்ளைதனத்திலும் சிறுபிள்ளைத்தனம் தான்....

அவளின் முக மாற்றத்தை அவதானித்தபடி வந்த கார்த்திக் ....

உடைந்து கிடந்த கதவின் பாகங்களை தூக்கிக்கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்று போட்டவன்..... விடாமல் புலம்பிக் கொண்டிருந்த அப்பத்தாவிடம்... "அப்பத்தா அப்பா அம்மா வரதுக்குள்ள கதவை ரெடி பண்ணிடுவேன் ...இப்படி பொலம்புறத நிறுத்திட்டு சோலிய போய் பாருங்க..." என்று அதட்டவும் பூமணி அப்பத்தா அடங்கிப் போனார்.

பேரனின் சாயலில் தன் கணவரை பார்ப்பவர் ஆதலால் அவனின் ஒரு அதட்டல் கூட வேலை செய்தது.

எதற்கு கதவை உடைத்தான்? எதற்கு சரி செய்கிறான்? என்று ஒன்றும் புரியாமல் சுகன்யா திருதிருவென்று தன் அண்ணனை பார்க்க ...

"எனக்கு காப்பித்தண்ணி கொடுக்காம காலையிலேயே ஊர் சுத்த போய்ட்டீங்களா? கனி வர வர நீயும் பொறுப்பு இல்லாம ஆகிட்ட... எல்லா சகவாச தோஷம்" என்று
ஹர்ஷினியை முறைத்தான்.


அவ்வளவு நேரம் தன் மேல் தான் தவறு மன்னிப்பு கேட்கலாமா? வேண்டாமா? ஆளு வேற பல்கா இருக்கானே... அடிச்சிடுவானோ? என்று குழப்பத்துடன் இருந்த ஹர்ஷினி ....
சகவாச தோஷம் என்ற குரலில் நிமிர்ந்து அவனை பார்க்க.... கார்த்திக் முறைக்கவும் சூடாகி போனாள்.


'தடிமாடு சைஸ்ல இருந்துகிட்டு ஓவரா சீன் போடறான் பக்கி பய...' என்று உள்ளுக்குள் பொங்கியவள்... உதட்டை கோனி நாக்கை நீட்டி அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.

அங்கு ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டால் கார்த்திக்கின் இதழ்கள் மர்மமாக வளைந்தது.

கனியும் தன் அண்ணனிடம் திட்டு வாங்கியதால் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்து கொள்ள ....கார்த்திக் அவன் பாசமாக வளர்க்கும் பறவைகளுக்கு உணவளிக்க மீண்டும் பின் கட்டிற்கு சென்றான்.

ஹர்ஷாவின் வீட்டிலோ.... கண்கள் கலங்க தன் முன்னால் நின்ற தங்கையை பரிவுடன் பார்த்தான் ஹர்ஷா....

ஹர்ஷாவின் பாசமான தங்கை ஹர்ஷவர்தினி.... பிறக்கும் பொழுதே காலின் எலும்பு லேசாக வளைந்து இருக்க சரிந்தபடி தான் நடப்பாள்....
ஊரில் பலர் அவளைப் பரிதாபமாக தான் பார்ப்பார்கள்....


தாழ்வுமனப்பான்மை அவளுக்கு துளியும் வந்ததில்லை... ஆனால் பரிதாபம் காட்டும் நபர்களிடம் இருந்து தானாகவே விலகி விடுவாள்... அது யாராக இருந்தாலும் சரிதான்...

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவள் அதன் பிறகு படிப்பின் மேல் ஆர்வம் இல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றாள்....

ஆனால் படிப்பைத் தவிர கைவேலைப்பாடுகள் அனைத்திலும் அவளை மிஞ்ச முடியாது. கூடை பின்னுதல் ,அழகாக துணிகளுக்கு விதவிதமாக எம்ராய்டிங் செய்வது... விதவிதமாக கோல்டு கவரிங் கம்மல் நெக்லஸ் வளையல் செய்வது... அழகான பொம்மைகள் கைவினைப் பொருட்கள் செய்வது ...என்று கைவேலைப்பாடுகள் உள்ள வேலைகள் அனைத்திலும் அவளுக்கு நிகர் அவளே ....

அவள் செய்யும் எல்லாவற்றிலும் எல்லாவற்றிலும் அழகும் தனித்துவமும் நிறைந்திருக்கும்...

ஊர் பெண்கள் சிலருடன் வீட்டில் இருந்தபடியே கைவினைப் பொருட்கள் செய்து நகரத்தில் இருந்த பெரிய பெரிய கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் பெண் அவள்...

வீட்டிலிருக்கும் அனைவரும் அவளை பாசமாகவும் பரிவாகவும் அவளை பார்த்துக் கொண்டாலும் ஹர்ஷா என்றால் அவளுக்கு சிறுவயதிலிருந்தே உயிர்.... அவனுக்கும் அப்படியே....

இந்த மூன்று வருடங்களில் அவனில்லாமல் மற்றவர்களுக்கு எப்படியோ அதிகம் தவித்துப் போனது அவள் தான்....

நேற்று ஹர்ஷா வந்திருந்த சமயம் பக்கத்து ஊரில் இருக்கும் தன் பெரியம்மாவின் வீட்டிற்கு சென்றிருந்ததால் அவனைப் பார்க்க முடியவில்லை.
வீடு திரும்ப தாமதமானதால் பயணக்களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த அவனை தொந்தரவு செய்யாமல் சென்று விட்டாள். அதனால் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தன் அண்ணனை தான் காண வந்திருந்தாள்.


நெடிய மூன்று வருடங்கள் கழித்து தன் முன் நிற்கும் பாசமான அண்ணனை பார்த்து கலங்கிக் கொண்டிருந்தாள் அவள்....

"வரு குட்டி எதுக்கு அழறாங்க..." என்று தன் தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டான் ஹர்ஷா. அவன் கண்களிலும் நீர் கோர்த்து இருந்தது....

"அண்ணா இனி எக்காரணத்தைக் கொண்டும் எங்களை விட்டு போயிடாத ..."என்று அவனின் தோளில் சாய்ந்து குலுங்கி அழுத தங்கையை பார்த்தவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது...

தங்கையின் தலையை வருடி விட்டவன்... "இனி ஊரவிட்டு போகமாட்டேன் டா... சரியா நீயும் இப்படி அழாத" என்று அவளின் கண்களைத் துடைத்து விட்டான்....

"சாமி சத்தியம் பண்ணு அப்ப தான் நம்புவேண்ணா ...."என்று தங்கை கேட்டதும் ....ஹர்ஷினியின் 'பிங்கி ப்ராமிஸ் பண்ணுங்க அப்ப தான் சொல்லுவேன்' என்ற வசனம் வந்து மனதை வருட அவனின் இதழ்கள் புன்னகைத்தது....

"அண்ணா சத்தியம் பண்ணு.." என்று தங்கை கைகளை நீட்டியதும் "சத்தியம்" என்று தங்கையின் கைமேல் கை வைத்தான் ஹர்ஷா...

தனது கையை எடுத்து காற்றில் ஊதி விட்டவள்....
"சத்யம் சாமிகிட்ட போயிட்டுண்ணா இனி எக்காரணத்தைக் கொண்டும் மீறக்கூடாது.... "என்றாள் கண்டிப்புடன்....


சிரித்தபடி தலையசைத்த ஹர்ஷா
"நேத்து எப்படா வந்த..." என்று கேட்க


"நீங்க தூங்குனதும் தான் வந்தேன்... அண்ணா மாரி அண்ணா தான் வீட்ல கொண்டு விட்டுட்டு போனாங்க...."

"ஹம்ம்"என்றவனுக்கு அதற்குமேல் என்ன பேச வென்று தெரியவில்லை....

தங்கை ஏதாவது கேட்டால் எதற்கு ஊரை விட்டு சென்றான் என்று சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தவன் தயக்கத்துடன் நின்றான்....

அவனுக்கு எவ்வித சங்கடத்தையும் கொடுக்காமல் அவன் வேலை செய்த இடத்தை பற்றியும் வேலையை பற்றியும் மட்டுமே கேட்டாள் ஹர்ஷவர்தினி .

அவர்கள் இருவருக்கும் காபி கொண்டு வந்த அவர்களின் அம்மா கௌசல்யாவும் தங்கள் மக்களின் பாசப்பிணைப்பை நினைத்து உள்ளம் நெகிழ்ந்து அமைதியாக சென்று விட்டார்.

இங்கு அறைக்குள் வந்த ஹர்ஷினியின் கண்கள் தன் மொபைலுக்கு சென்றது.....

நேற்று இரவே சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது....

இன்று காலை கோவிலுக்கு செல்வதற்கு முன்பு தான் சார்ஜ் போட்டுவிட்டு சென்றிருந்தாள்.

மொபைலை பார்த்ததும் வீட்டு ஞாபகம் வந்துவிட சார்ஜரில் இருந்த மொபைலை எடுத்தவள் தன் தந்தைக்கு அழைத்தாள்.
கோர்ட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த சுகந்தன்
மகளின் எண்களை பார்த்ததும் அடுத்த நொடியே அழைப்பை ஏற்று.... "எங்கடா போன? எதுக்கு பொய் சொன்ன? அம்மா பயங்கர கோபத்துல இருக்கா ...என்கிட்ட மட்டுமாவது சொல்லிட்டு போய் இருக்கலாம்ல்ல" என்று குரலில் வலிய கொண்டுவந்திருந்த கண்டிப்புடன் கேட்க....


இந்த புறம் ஹர்ஷினி ஒரு நொடி அமைதிக்குப் பின் ...
"சாரிப்பா உங்ககிட்ட சொல்லாம வந்தது தப்பு தான்....பட் உங்ககிட்ட சொன்னா கண்டிப்பா அம்மா கிட்ட நீங்க சொல்வீங்க... அம்மாவும் என்ன போக விட மாட்டாங்க...அதான்... இன்னும் பத்து நாள்ல நான் வந்துடுவேன்... என்னோட ஃப்ரெண்ட் சுகன்யா வீட்லதான் இருக்கேன் இது வில்லேஜ் சைட் சிக்னல் அவ்வளவா கிடைக்காது அப்பப்ப முடியும்போது கால் பண்றேன் அம்மாவ சமாளிச்சுகோங்கப்பா ப்ளீஸ்..." என்று படபடத்து விட்டு வைத்து விட்டாள்.


சுகந்தன் பாசமாக பேசி இருந்தால் கண்டிப்பாக அவள் வந்ததன் நோக்கம் இங்கு வந்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் கண்டிப்பாக சொல்லியிருப்பாள்.
நல்ல வேளையாக அவர் கண்டிப்புடன் பேசியதால் தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு முடிந்த அளவு விரைவாக படபடத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.


அடுத்து அவள் சமாதானம் செய்ய வேண்டியது அவளின் செல்ல தமையன் கோகுலுக்கு.....

முதல் தமையன் ராகவ் இடம் கூட அவள் அவ்வளவு நெருக்கம் கிடையாது.... திருமணம் முடிந்ததுமே வீட்டிற்கு விருந்தாளி போல் எப்பவாது வீட்டிற்கு வந்து தங்கையை நலம் விசாரிப்பதோடு சரி மற்ற நேரங்களில் அவளை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியது கூட இல்லை அவன்..... அதற்கு காரணம் அவளது அண்ணி கங்கா தான் காரணம்... அவளுக்கு ஏனோ தன் கணவனுக்கு தான் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதனால் சொந்த தங்கையாக இருந்தாலும் அவளை நெருங்க விட்டது இல்லை அவள்....

ஆனால் மூத்த தமையனுக்கு நேர்மாறாக அன்பையும் பாசத்தையும் அள்ள அள்ள குறையாது கொடுத்தவன் கோகுல்.... இப்பொழுது கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து கொண்டே முக்கியமான ஆராய்ச்சியில் ஒன்றில் மூழ்கி இருக்கிறான்.

ஹர்ஷினி சொல்லாமல் வந்தது கண்டிப்பாக அவளின் அன்னையின் மூலம் அவனுக்கு தெரிந்து இருக்கும்.

கண்டிப்பாக தன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருப்பான் என்று நினைத்தவள் தானே அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

மூன்றாவது ரிங்கிலே அட்டெண்ட் செய்தவன் அமைதியாக இருந்தான். தந்தையைப் போல் ஏதாவது கேட்டு இருந்தால்... கண்டிப்பாக ஏதாவது சொல்லி சமாளித்து இருப்பாள்... ஆனால் தன் அண்ணனின் அமைதி என்னமோ செய்ய, "சாரி அண்ணா" என்றாள்....

"எதுக்கு சொல்லாம போன?" என்று அமைதியான குரலில் கேள்வி வந்தது அந்த புறம்....

"சொன்னா அம்மா விடமாட்டாங்க" என்று சிறுபிள்ளைத்தனமாக பதில் சொன்னாள் ஹர்ஷினி.

ஒரு நொடி அமைதி காத்தவன்...
பெருமூச்சுடன் ...
"குட்டிமா நீ இன்னும் சின்ன குழந்தை இல்ல ....உனக்கும் இந்த உலகம் எப்படிப் பட்டதுன்னு நல்லாவே தெரியும்... இப்படி அப்பா அம்மா கிட்ட பொய் சொல்லிட்டு போறது சரியா?" என்று அண்ணனின் அழுத்தமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஹர்ஷினி அமைதியாகி விட.....


தங்கை அமைதியான உடன் என்ன நினைத்தானோ....
"எந்த ஊருக்கு போய் இருக்க? எதுக்கு போயிருக்க?" என்று விபரம் கேட்டான்.


தன் வந்திருக்கும் ஊரை சொன்னவள்....
ஹர்ஷாவிடம் எப்படி கதை அளந்தாலோ அதே கதையை தன் அண்ணனிடம் அளந்து விட்டு "டென் டேஸ் ல ரிட்டன் வந்துடுவேன்...." என்றாள்.


தமையனிடம் பொய் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் அவள் ஒருவருக்கு கொடுத்திருந்த வாக்கு அவளின் வாயை கட்டிப் போட்டிருந்தது.

சில நிமிடங்கள் தன் அண்ணனின் ஆராய்ச்சி வேலைகளை பற்றி விசாரித்தவள் நேரம் கிடைக்கும் பொழுது அழைப்பதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்....

மொபைலை மேஜையில் வைத்துவிட்டு திரும்பியவள் தன் சூட்கேஸ் கிடக்கும் நிலையை பார்த்து அதிர்ந்துதான் போனாள்...

அதில் இருக்கும் அவளது உடைகள் மாயமாகி போயிருந்தது. நல்லவேளையாக அவள் வைத்திருந்த கைப்பையில் எதுவும் எடுக்கப்படவில்லை...

தான் அறைக்குள் வரும்பொழுது கார்த்திக் தன்னை பார்த்து சிரித்ததன் அர்த்தம் இப்பொழுது அவளுக்கு நன்றாகவே புரிந்தது 'பாவிப்பயலே.... இது என்ன அநியாயம்...இப்போ எனக்கு நியாயம் வேணும் ...' சிலிர்த்துக் கொண்டு வெளியே செல்ல போனவள் .... அறை வாயிலில் நமட்டுச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்ததும் நின்று விட்டாள்.

பின் மீண்டும் கோபத்துடன்...
" இது உங்க வேலை தானே மிஸ்டர்" என்று விரல் நீட்டி அரட்ட....


"நீ எதுக்கு என்ன ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டு போன ?"என்று அவளைப்போலவே விரல் நீட்டி கேட்டான் அவன்....

மூக்கு விடைக்க அவனை முறைத்துப் பார்த்தவள்...
" நீ என்னோட கோகுல் அண்ணா வாங்கி கொடுத்த கீ செயின நேத்து அத்து போட்டல அதான்" என்றாள் கடுப்பாக....


இப்பொழுது முறைப்பது கார்த்திக்கின் முறை ஆயிற்று.....

"அந்த பத்து ரூபா கீ செயின்காக என் வீட்டிலேயே என்ன பூட்டி வைப்பியா?" என்று கேட்டான் கார்த்திக் சீற்றத்துடன்....

அவன் பத்து ரூபாய் கீ செயின் என்று சொன்னதில் கடுப்பானவள்....
"அது எவ்ளோ எக்பென்சிவ் அண்ட் இம்போர்ட்டட் மெட்டீரியல் கீ செயினு தெரியுமா? அதுவும் என்னோட அண்ணா ஸ்பெஷலா எனக்கே எனக்குன்னு என்னோட பர்த்டேக்கு வாங்கி கொடுத்தது என்னோட அக்கா கூட அதை பார்த்து பொறாமை பட்டா.... ஆனா நீ அதை அத்து போட்டதும் இல்லாம என்கிட்ட ஒரு சாரி கூட கேட்கல" என்றாள் அவனுக்கு குறையாத சீற்றத்துடன்....


நேற்று ஹர்ஷாவை பற்றியே சிந்தித்துக்கொண்டு வந்தவனுக்கு அது அறுந்து விழுந்தது கூட தெரியாது.... அதை இப்பொழுது சொன்னால் நம்பவா போகின்றாள்....

"சாரி எல்லாம் கேட்க முடியாது உன்னால முடிஞ்சத பாத்துக்கோ... போடி... இனிமே என்கிட்ட வம்பு பண்ணினா சூட்கேசை கைகாட்டி இதே மாதிரி பல பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும்...." என்று வெளியே சென்று விட்டான்....

'கேனப்பய' என்று எரிச்சலில் முணுமுணுத்து விட்டு அமைதியாகத்தான் இருந்தாள் ஹர்ஷினி ....அவளுக்கு இந்த ஊரில் ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன அதை விட்டுவிட்டு இவனிடம் மல்லுக் கட்டிக்கொண்டிருக்க அவளுக்கு ஏது நேரம்??? .....

அன்று மதிய நேரத்திலேயே வந்து சேர்ந்தனர் சுகன்யாவின் பெற்றோர்கள்.....

சுகன்யாவின் அப்பா கணபதி அம்மா சிவகாமி.... இருவருமே அன்பும் கனிவும் நிறைந்தவர்கள் தான்.... ஹர்ஷினியை பாசத்துடன் நலம் விசாரித்தனர்.... அவர்களுக்கு பதில் சொன்னவள்..... 'இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கொரில்லா குரங்கு புள்ளையா' என்று உள்ளுக்குள் நொடிந்து கொள்ளவும் மறக்கவில்லை..

கார்த்திக் சொன்னது போலவே அறைக்கதவு அவர்கள் வருவதற்கு முன்பே மாற்றப்பட்டு இருந்ததால் எந்தக் கேள்விக்கும் இடமில்லாமல் போனது....

மதிய உணவிற்குப்பின் வெளி முற்றத்தில் அமர்ந்து சுகன்யாவிடம் கதை பேசிக் கொண்டிருந்த ஹர்ஷினியை அழைக்க கோவிலில் அவள் பார்த்த வானரக் கூட்டம் வந்து சேர்ந்தது....

அவர்கள் ஊரின் கோவிலுக்கு மிக அருகில் இருந்த செம்மண்ணால் நிரப்பப்பட்ட பெரிய மைதானமே அவர்களின் பிரதானமான விளையாட்டு பகுதி....

ஹர்ஷினி ஆவலாக அந்த வானரங்கள் உடன் கிளம்ப சுகன்யா சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லி விட்டாள்....

ஹர்ஷா அழகேசன் இருவரும் தங்களது பழைய நண்பர்களுடன் கோவிலின் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க......

"டேய் நீங்க தான அவுட்டு போங்கடா.... இதெல்லாம் போங்கு போங்கு... நான் ஒத்துக்கவே மாட்டேன் ... "
என்று ஹர்ஷினியின் குரல் மைதான சுவரையும் தாண்டி இவர்களின் காதில் விழ....


ஹர்ஷா அழகேசன் இருவரும் தங்கள் உயரத்திற்கு சரியாக இருந்த சுவரில் கைகளை ஊன்றி அந்தப் பக்கம் என்ன நடக்கிறது என்று பார்த்தனர்.

இரு குழுக்களாக பிரிந்து கபடி ஆடிக்கொண்டு இருந்தனர் அவ்வூரின் சிறுவர்-சிறுமிகள்.... சிறுமிகளின் கூட்டத்தில் ஒருவளாக நின்றது ஹர்ஷினி...

சிறு பெண் போல தனது லாங் ஸ்கர்ட்டை தூக்கி பிடித்துக்கொண்டு கபடி ஆடி கொண்டிருந்தவளை பார்த்தவர்களுக்கு அவளும் சிறுமி தானோ என்ற எண்ணம் வந்துவிடும்... அந்த அளவிற்கு சிறு குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி விளையாடிக் கொண்டிருந்தாள்.

நகரத்துப் பெண் தானா இவள் என்று சந்தேகப்படலாம் அந்த அளவிற்கு உடல் முழுவதும் செம்மண் வேறு .....

விளையாட்டில் கவனமாக இருந்தவள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த இவர்களை கவனிக்கவேயில்லை...

அழகேசன் ஆர்வம் தாங்காமல்... "பாப்பு இங்க பாரேன்..." என்று குரல் கொடுக்க....

கபடி கபடி என்று எதிரணியில் இருந்து ஒரு சிறுவன் அவளை தொட வந்த நேரம் அவன் குரலில் திரும்பியவள் அவுட்டாகி போயிருந்தாள்....

'எவன்டா அது' என்று கடுப்பாகி குரல் வந்த திசையை பார்த்தவள்..... ஹாய் பாப்பு என்று கைகாட்டிய அழகேசனைப் பார்த்ததும் கடுப்பாகி...
"டேய் அழகு நொண்ணா கோட்ட சுவர சுத்தி இங்க வாடா உன்ன கைமா பண்றேன் புண்ணாக்கு ..."என்று நின்ற இடத்திலிருந்தே கத்திவிட்டாள்.....


அவள் டா என்றதும் வாயை பிளந்த அழகேசன் அவர் கைமா பண்றேன் புண்ணாக்கு என்றதும் ஹர்ஷாவை பாவமாக பார்க்க....
அவன் சிரிப்பை அடக்குவது நன்றாகவே தெரிந்தது.....


"எதுக்குடா சிரிக்கிற?" என்று அழகேசன் அவன் மீது பாய....

"அவ நேத்து அண்ணான்னு கூப்பிட்டா மரியாதையை எதிர்பார்க்கக் கூடாதுனு சொல்லும்போது அந்த புடலங்காய் எல்லாம் எனக்கு வேண்டாம் வீரவசனம் பேசுனது நீதானே... அனுபவி ராசா அனுபவி" என்று சிரித்தான் ஹர்ஷா.

அவனின் சிரிப்பு தூரத்தில் வந்து கொண்டிருந்த அவன் மாமா திலகரை பார்த்ததும் உறைந்து விட்டது....

மூன்று வருடங்களுக்கு முன்னால் மாமன் மகள் அஞ்சலியுடன் நடக்கவிருந்த நிச்சயதார்த்தம் அன்றுதான் அவன் இந்த ஊரில் இருந்த கடைசி நாள்.... காரணம் ஏதும் சொல்லாமல் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டு சென்றவன் தான் அதன் பிறகு இப்பொழுதுதான் வந்திருக்கிறான்....

"பரவால்ல மாப்புள இந்த புள்ள பாப்பு ரொம்ப சுட்டி ... எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி வேணும்னு ஆசை... உரிமையா கூப்பிட்டு போகுது.... "என்று அழகேசன் நண்பனின் முக மாற்றத்தை கவனிக்காமல் சிரித்துக்கொண்டே சொல்ல.... எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த திலகரை பார்த்த ஹர்ஷாவினால் புன்னகைக்க முடியவில்லை....

திலகரும் அவர்கள் நிற்பதை கவனிக்காமல் நகர்ந்துவிட... ஹர்ஷாவினால் மீள முடியவில்லை.

அன்றைய நாளில் அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் இன்னும் நெஞ்சத்தைக் கூறு போட்டு கொண்டிருந்தது ....

தங்களை கடந்து சென்ற திலகரை பார்த்த அழகேசன் ஹர்ஷாவிடம் ஏதோ கேட்க வாயடுத்து.....
அவனின் முகத்தைப் பார்த்ததும் அமைதியாகி விட்டான்.


ஹர்ஷாவின் அப்பா ஜானகிராமனின் தங்கை தான் சுதா...அவரின் கணவன் திலகர்....
அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ...கடைசியாக அஞ்சலி என்ற ஒரு பெண் .... மகன்களுக்கு உள்ளூரிலேயே நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தவர் தங்கள் பெண் அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் சுதா தன் அண்ணன் மகன்தான் மருமகனாக வேண்டும் என்று அடம் பிடித்தார்.... ஜானகிராமனுக்கு தன் தங்கை மகள் மருமகளாக வருவதில் எந்த தயக்கமும் இல்லை.... ஹர்ஷாவிற்கும் தன் தந்தையின் முடிவுதான் தனது முடிவு... அதனால் அமைதியாகத்தான் இருந்தான். ஆனால் திலகர் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் ஹர்ஷாவை சந்தித்து பேசிய சில வார்த்தைகளால் அவன் விலகிக் கொள்ள. திருமணப் பேச்சு
நிச்சயதார்த்த பேச்சோடு நின்று போயிருந்தது.


தன் அண்ணன் மகன் தன் மகளை வேண்டாம் என்பதுபோல் நிச்சயதார்த்தத்திற்கு முந்தையநாள் ஊரை விட்டு சென்றதால் சுதாவிற்கு தன் அண்ணன் குடும்பத்தின் மீது கோபம் அதனால் இரண்டு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது.

ஆனால் அஞ்சலி இன்றுவரை திருமணம் வேண்டாம் என்று ஹர்ஷாவிற்காக காத்திருப்பதாக பேச்சு உள்ளது....

" ஹலோ பாய்ஸ்" என்ற குரலில் அழகேசன் ஹர்ஷா இருவரும் திரும்பிப் பார்க்க....

ஹர்ஷினி சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.....

அவளுக்கு பக்கவாட்டு திசையில் சிறிது தூரத்திற்கு அப்பால் கார்த்திக் அவனது புல்லட்டில் அவனது தோழன் டக்லஸ் உடன் பேசியவாறு வந்து கொண்டிருக்க... ஹர்ஷா அழகேசன் இருவரும் அவனது பைக்கின் ஹாரன் சத்தத்தில் அவனைப் பார்த்துவிட...

தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த ஹர்ஷினி இடம் 'இங்கிட்டு வராத அங்கிட்டு போ போ' என்பது போல் சைகை காட்டினர்.

'இதுங்க என்ன சொல்லுதுன்னு புரியலையே' என்று தலையை சொரிந்த ஹர்ஷினி....
"அங்கேயே நில்லுங்க பாய்ஸ் ...மீ அங்க கம்மிங்கு... அதுக்கப்புறம் யூ டெல்லிங்கு" என்று கத்திவிட்டு அவர்கள் அருகில் வந்துவிட இருவரும் ஒரே நேரத்தில் தலையில் அடித்துக் கொண்டனர்.


நண்பனுடன் பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்த கார்த்திக்
உள்ளுணர்வு உந்த அவர்கள் நின்ற திசையை திரும்பிப் பார்த்தான்...


தொடரும்....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top