புள்ளினங்காதல் - 4

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
"போன் செய்தது எங்க அம்மா..." என்றான் ஆரூரன்.



"என்னது அம்மாவா?" என்று ஒரு புறம் அதிர்ந்த அவிரா, "நான் கூட, உனக்கு ஏதாவது பழைய லவ்வர் இருந்து, அவங்க தான் போன் பண்றாங்களோன்னு, என்னென்னமோ கற்பனை பண்ணிட்டேன் பா" என்றாள் அவிரா.



அவன் கூறியதில் கொல்லென சிரித்த ஆரூரன், "என்னது லவ்வா? எனக்கா? அட ஏன்மா நீ வேற. நான் 5 நிமிஷத்துக்கு மேல, பசங்க கிட்டயே பேசுனது கிடையாது. பொண்ணுங்க கிட்ட பேசுனதே கிடையாது. உங்கிட்ட தான் இவ்ளோ பேசுறேன்" என்றான் அவன்.



"சரி சரி. அது இருக்கட்டும். ஏன் அம்மா கிட்ட பேசுறது இல்ல?" என்று அவிரா கேட்க, "அது..." என்று இழுத்தான் ஆரூரன்.



"என்ன?" என்று அவிரா மீண்டும் கேட்க, "எங்க அப்பா, அம்மா ரெண்டு பெரும் டாக்டர்ஸ்" என்றான் ஆரூரன்.



"சரி. அதனால என்ன? டாக்டர் கிட்டயெல்லாம் பேச மாட்டேன்னு ஏதாவது விரதமா?" என்று அவிரா கேட்க, "கொஞ்சம் நேரம் வாய வச்சிட்டு சும்மா இருக்கியா...என்னை பேச தான் விடேன்..." என்று ஆரூரன் கூற, "சரி பா...நான் எதுவும் பேசல" என்று ஒன்றாம் வகுப்பு பிள்ளை போல, ஒற்றை விரலை இதழ்மீது வைத்துப்பூட்டிக்கொண்டாள்.



"அதனால அவங்களுக்கு என்னையும் டாக்டர் ஆக்கி பாக்கணும்ன்னு ஆசை. ஆனா அதுல எனக்கு துளியும் விருப்பம் இல்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்ச கையோட அவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணி எனக்கு புடிச்ச துறையிலும் சேர்ந்தாச்சு. அவங்களே சும்மா இருந்தாலும், இந்த நாலு விதமா பேசுற நாலு பேர் இருக்காங்களே... சாதாரணமா ஒரு புள்ள சயின்ஸ் குரூப்ல பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சாலே டாக்டரா? என்ஜினீயரா?ன்னு தான் கேப்பாங்க. இதுல டாக்டர் பசங்கன்னா சொல்லவா வேணும்..முடிவே பண்ணிடுவாங்க, டாக்டர்தான்னு.



இதுல எனக்கு முன்ன பொறந்தவன் வேற, அவனுக்கு மேத்ஸ் படிக்க ஆசை இருந்தும், இவங்க சொன்னதுக்காக டாக்டர் ஆகிட்டான். அதே மாதிரி நானும் பண்ணுவேன்னு எதிர் பார்த்தாங்க போல. ஆனா, நான் பிடிவாதமா பறவையியல் தான் படிப்பேன்னு சொன்னதும், அவங்களால அதை ஏத்துகவே முடியல. அங்க இருந்து தொடங்குனது . அப்போல இருந்தே கோவம் என்மேல.



நான் டாக்டர்க்கு படிக்க மாட்டேன்னு சொன்னப்போவே, இதுக்கு நீ ஒரு நாள் கண்டிப்பா வருத்தபடுவன்னு சொன்னாங்க. ஆனா நான் அதுக்கும் சிரிச்சிட்டு வந்துட்டேன். அப்போல இருந்தே, நான் வருத்தப்படணும்னு செய்வாங்களோ என்னவோ, வாய்ப்பு கிடைக்கறப்போ எல்லாம் மட்டம் தட்டுவாங்க. எனக்கு வருத்தமா இருக்கும்ன்னு சொல்றத விட, வெறுப்பா இருக்கும்ன்னு சொல்லலாம்.



அவங்க இஷ்டத்துக்கு இல்லாம என் இஷ்டத்துக்கு எடுத்தது அவ்ளோ பெரிய தப்பான்னு ஓடிட்டே இருக்கும் உள்ள.



ஆனா, என் படிப்பு எனக்கு சந்தோசமா தான் இருந்துச்சு. சின்ன வயசுல விளையாட்டா பர்ட்-வாட்சிங் ஆரமிச்சது. ஆனா, வளர வளர, பறவைகள் மேல இருந்த ஆர்வம் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு. ஏனோ, சிறகடித்து பறக்குற அந்த பறவைகளை பார்த்தா, நானே வானத்துல பறக்குற மாதிரி ஒரு ஃபீல். வண்ண வண்ணமா இருக்கும் அந்த பறவைகளை பாக்குறப்போ எல்லாம்,கடவுளோட மொத்த திறமையையும், ரசனையையும் இதுல தான் கொட்டிட்டாரோன்னு தோணும்.



ஸ்கூல் படிக்கறப்போவே பறவைகளை பத்தி கொஞ்சம் கொஞ்சமா தேடி படிக்க ஆரமிச்சேன். நான் விரும்பி எடுத்த படிப்பு என்னோட அந்த தேடலுக்கு தீனி போடுற மாதிரி தான் இருந்துச்சு. நான் இதை படிக்கறது தான் சரின்னு தோணுச்சு. என் இஷ்டம் தானே இது. இதை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லையா எனக்கு? அப்டின்னு எனக்குள்ள ஒரு கோவம் இருந்தது.



அந்த கோவம் எல்லை மீறிய நாளும் வந்தது.



அப்போ அண்ணன் அமெரிக்கால எம்.எஸ் முடிச்சிட்டு வந்து, ஒரு தனியார் மருத்துவமனையில் பெரிய போஸ்ட்லயும் இருந்தான்.



அப்போதான் ஒரு டி .வி சேனல்லில் 'ஹலோ டாக்டர்'ன்னு ஒரு நிகழ்ச்சி தொடங்குனாங்க. அதுல நேயர்கள், மருத்தவம் சம்பந்தமா தங்களுக்கு இருக்க சந்தேகங்களை போன் செய்து கேப்பாங்க. அதுல சந்தேகம் தீர்த்து வைக்குற டாக்டராக எங்க அண்ணன் தான் போயிருந்தான்.



அதுல எங்க அப்பா அம்மாக்கு ரொம்ப பெருமை...வழக்கம் போல, அன்னைக்கும் வீட்டுல கச்சேரி தொடங்குச்சு.



வழக்கம் போல அதே தான். நீயும் நாங்க சொன்னது போல நடந்துருந்தா, இப்படி பெரிய நிலைமைக்கு வந்திருக்கலாம். இப்படி டி.வி ல வருவதையெல்லாம் உன்னால நெனச்சி கூட பாக்க முடியாதுல்லன்னு சொன்னாங்க.



இத்தனை நாளா அவங்க பேச பேச அமைதியா இருந்தவன், அன்னைக்கு முதல் முறையா வாய தொறந்து பேசுனன். நான் இப்டியே சந்தோசமா தான் இருக்கேன். உங்க ஆசையை என்மேல திணிக்க பாத்தீங்க. முடியலன்னு உங்க இயலாமையால இப்படி கத்துறீங்கன்னு சொன்னேன்.



அவங்களால அதை ஏத்துக்க முடியாம, இயலாமையில் கத்துறது நீ தான். உன்னால இப்படி எல்லாம் டி.வியில் வரவே முடியாது. அந்த இயலாமையில் தான் இத்தனை நாள் அமைதியா இருந்தவன், இன்னைக்கு எங்களை எதிர்த்து பேசுறேன்னு சொன்னாங்க.



என்ன? திரும்ப திரும்ப டி.வி, டி.வின்னு...ஏன் என்னால டி.வியில வர முடியாதா? வந்து காட்டிட்டா! ன்னு நான் கேட்கவும், நான் பதில் பேசுறதையே பொறுத்துக்க முடியாதவங்களால, நான் இப்படி சவால் விடுறத பொறுத்துக்கவா முடியும்?



எதிர்த்து பேசுற பிள்ளை எங்களுக்கு வேணாம். வீட்டை விட்டு வெளிய போன்னு சொல்லிட்டாங்க.



நானும் வெளிய வந்துட்டேன். அப்போ எதனால அப்படி தோணுச்சுன்னு தெரியல. ஆனா, அவங்க என்னால முடியாதுன்னு சொன்னதை செஞ்சி காமிக்கற வரை, அவங்க கிட்ட பேச கூடாதுன்னு தோணுச்சு.



எப்போவாது அம்மா போன் செய்வாங்க...நான் அதை எடுக்கறதில்லை" என்றான் ஆரூரன்.



அம்மாடியோவ்...இவ்ளோ பெரிய காரணத்தை நான் எதிர் பார்க்கல. சரி சரி. இது நடந்து எவ்வளவு நாள் இருக்கும்?" என்று அவிரா கேட்க, "அஞ்சு வருஷம்" என்றான் அவன்.



"அடிஆத்தி... அஞ்சு வருஷமா...? அஞ்சு வருஷமாவா அம்மா கிட்ட பேசல?" என்று அவள் வாய் மீது கை வைக்க, "ஆமாம்" என்றான் அவன் ஒற்றை வார்த்தையில்.



"அவங்க செய்தது தப்பு தான். ரொம்பவே தப்பு தான். அப்படி பேசுனது...ரெண்டு பசங்களையும் ஒப்பிட்டு பார்த்து, ஒருத்தவன் செய்த மாதிரி இன்னொருத்தரும் செய்யணும்னு நெனச்சது தப்பு தான். அதுக்கு சார் சவால் விட்டுட்டு வந்ததும் சரி தான். ஆனா...அதுக்காக பெத்தவங்க கிட்ட அஞ்சு வருஷமா பேசாமலா?" என்று அவிரா கேட்க, "அவங்க செஞ்சது தப்பு தான. அப்புறம் ஏன் பேசணும்?" என்று விடாப்பிடியாய் இருந்தான் ஆரூரன்.



".டேய் சாம்பார். உனக்கு என்ன சொல்லி புரியவைக்கறது? இரு. ஒரு கதை சொல்றேன் கேளு" என்று கூற, "சரி. சொல்லு" என்றான் அவன்.



"சிவன்னு ஒரு அப்பா இருந்தாரு. பார்வதின்னு ஒரு அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு கணேசன், முருகன்னு ரெண்டு புள்ளைங்க இருந்தாங்களாம். நல்லா இருந்த குடும்பத்துல கும்மி அடிப்பதுக்குன்னே வந்தாராம் நாரதர்.



வந்த மனுஷன். ஒரு மாம்பழத்தை எடுத்துன்னு வந்தாராம். வந்தவரு வரும்போதே ரெண்டு பழம் எடுத்துனு வந்தா என்னவாம்? ஆனா, எடுத்துன்னு வர மாட்டார். ஏன்னா, நல்லா இருக்க வீட்டுல போயி கும்மியடிச்சிட்டு வருவது தான் அவரோட வேலையே.



கஞ்சத்தனமா ஒத்தை பழத்தை எடுத்துனு வந்தது மட்டும் இல்லாம, இதை வெட்டி எல்லாம் குடுக்க கூடாது. முழுசா ஒருத்தருக்கு தான் குடுக்கணும்ன்னு சொன்னாராம்.



இந்த அப்பா, அம்மா என்ன பண்ணி இருக்கனும்? அப்டி ஒரு புள்ளைக்கு தான் கிடைக்கும்ன்னா இந்த பழமே வேணாம்ன்னு திருப்பி அனுப்பிருக்கணும்."



என்று ஞானப்பழத்தை கதையை கூறிக்கொண்டிருக்க, "அவிரா...இந்த கதை எதுக்கு இப்போ?" என்று கேட்க, "மூச்சு முட்ட கதை சொல்றது நானு. உனக்கு கதை கேக்க கசக்குதா. மூடிட்டு கேளுயா" என்று அவன் வாயை அடைத்தாள்.



"எங்க விட்டன். ஆன்.. இந்த பழமே வேணாம்ன்னு திருப்பி அனுப்பிருக்கணும். அதை பண்ணாம, இந்த அப்பா அம்மா என்ன பண்ணங்களாம்...ரெண்டு பேரும், இந்த உலகத்தை மூணு தடவை சுற்றி வாங்க. யாரு முதல சுத்தி வரீங்களோ. அவங்களுக்கு தான் இந்த பழம்ன்னு சொன்னாங்களாம். அந்த போட்டியாவது நியாயமா இருந்துச்சா? இல்லையே. ஒரு புள்ளைக்கு மூஞ்சுறை வாகனமா குடுத்துட்டு, இன்னொரு புள்ளைக்கு மயிலை வாகனமா குடுத்துட்டு, இப்டி ஒரு போட்டி வச்சா நியாயமா? நீயே யோசிச்சி பாரு. ஒரு புள்ளைக்கு சைக்கிள், இன்னொரு புள்ளைக்கு ரேஸ் பைக்கும் வாங்கி குடுத்துட்டு, முதல பால் வாங்கினு வரவனுக்கு தான் காப்பின்னு சொல்ற மாதிரில இருக்கு.



இந்த முருகர் என்ன செஞ்சாராம், நம்ப கிட்ட தான் மயில் இருக்கேன்னு எடுத்துனு கெளம்பிட்டாராம். ஆனா, இந்த கணேசர், இந்த மூஞ்சுறு மேல, ஏறி போனா எப்படியும் ஜெயிக்க முடியாதுன்னு, அவங்க அப்பா அம்மாவை, மூணு முறை சுத்தி வந்து, நீங்க தான் என் உலகமேன்னு சொன்னாராம். அவங்களும் அந்த பழத்தை தூக்கி கணேஷர்க்கு கொடுத்துட்டாங்க.



ஆனா, லொங்கு லொங்குன்னு உலகத்தை மூணு தடவை சுத்தி வந்த முருகர். அவருக்கு இதை பார்த்து கோவம் வந்து, கோச்சிக்கிட்டு கெளம்பிட்டாரு.



அப்போ அந்த அப்பா அம்மா என்ன தெரியுமா சொன்னாங்களாம். அந்த ஞானபழமே நீ தான்பான்னு சொன்னாங்களாம்.



இந்த கதை முழுசாலாம் ஒத்து போகல. இருந்தாலும் சொல்றேன். இந்த கதையில எப்படி ரெண்டு பேரோட வாகனமும் வேற வேறயோ, அப்டி தான் உனக்கும் உங்க அண்ணனுக்கும் திறமை வேற வேற. இந்த சொந்தகாரங்க, ஊருக்குள்ள நாலு விதமா பேசுற நாலு பேரு எல்லாம் தான் இந்த கதையில் வரும் நாரதர் மாதிரி.



கடவுளான சிவன், பார்வதி செஞ்சதுக்கும் உங்க அப்பா அம்மா செஞ்சதுக்கும் பெரிய வித்தியாசம்லான் இல்லை. உங்க அப்பா, அம்மா எப்படி உங்க ரெண்டு பேரோட திறமையும் வேறன்றத யோசிக்காம, அவனை மாதிரி டி.வி ல வரணும் னு சொன்னாங்களோ. அப்டி தான், அவங்களும் ரெண்டுபேரோட வாகனத்தையும் கருத்தில் கொல்லாமல், உலகத்தை சுத்தி வர சொன்னாங்க.



உங்க அண்ணன், அப்பா அம்மாவை உலகமா நெனச்சி சுத்தி வந்த கணேசர் மாதிரி, உங்க அப்பா அம்மா ஆசையை நிறைவேற்றிட்டாரு. ஆனா நீ முருகர் மாதிரி கோச்சிக்கிட்டு வந்துட்ட.



சிவன் பார்வதி, ஞானப்பழத்தை கணேசருக்கு குடுத்தாலும், கோச்சிக்கிட்டு வந்த முருகரை பார்த்து, அந்த ஞானப்பழமே நீ தான்னு சொன்ன மாதிரி, இப்போ நீ உங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணி பாரேன்.



டி.வி ல வந்த உங்க அண்ணனை தலைல தூக்கி வச்சி கொண்டாடின, அதே அப்பா அம்மா, இப்போ உங்கிட்ட என்ன சொல்லுவாங்க. "நீ டி.வி ல வரலைனாலும், நீ திறமைசாலி டா. வீட்டுக்கு வந்துடுடா தங்கம்ன்னு கொஞ்சுவாங்க பாரேன். இதை செக் பண்றதுக்கு போன் பண்ணு இப்போ" என்றாள் அவிரா.



அவன் மாட்டேன் என்று சொல்வதற்கு இடமே அளிக்காதவாறு ஒரு கதையை சொல்லிவிட்டாளே அவள் தான்.

பல முறை கேட்ட அதே ஞானப்பழம் கதை தான். ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கூறிவிட்டாள். அவள் அவனின் தாய் தந்தைக்கு பரிந்து பேசவில்லை தான். ஆனால், அந்த கதையை இவன் சொந்தக்கதையுடன் ஒப்பிட்டு, மனிதர்கள் மட்டுமல்ல, சில நேரம் கடவுளின் முடிவுகளில் கூட தவறிருக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாளே!



இயல்பாய் சிறிய கண்கள் கொண்டவள் தான். ஆனால், இப்பொழுது "இவன் போன் செய்வானா?", என்ற ஆர்வத்தினால் அகல விரிந்திருந்தது.



தாமரை மொட்டாய் குவிந்திருந்த அவள் இதழ்களுக்கு நடுவில், அவள் விரல் நகங்கள் உயிர்நீத்துக்கொண்டிருந்தன.



அவளை பார்த்த வண்ணமே, அவன் தாய்க்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தவன், "ஹலோ அம்மா...:" என்றான்.



ஐந்து வருடங்களுக்கு பின்பு முதன் முறையாய் மகனின் அம்மா என்று அழைப்பிலே உருகிப்போனார் அந்த தாய். "ஆருஹ் கண்ணா..." என்று அழைக்கும்போதே குரல் உடைந்தது. "எப்படிம்மா இருக்கீங்க?" என்று இவன் கேட்க, "நல்ல இருக்கேன் பா. நீ எப்படி ஆருஹ் இருக்க?" என்று கேட்கும் குரலிலே தாயின் தவிப்பை உணர்ந்தான் இவன்.



"நான் நல்லா இருக்கேன் மா. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று கேக்க, "எல்லாரும் நல்லா இருக்காங்க பா" என்று பதில் அளித்தார். அதன் பின் என்ன பேசுவது என்று தெரியாமல் இவன் விழிக்க, அவன் தாயே தொடர்ந்தார்.



"கண்ணா. வீட்டுக்கு வந்துடு பா. நீ இல்லாம வீடு வீடுமாதிரியே இல்ல. வந்துடு கண்ணா" என்று தாயார் அழைக்க, "நான் வீட்டை விட்டு வருவதுக்கு முன்னாடியே என்ன சொல்லிட்டு வந்தேன்னு ஞாபகம் இருக்காம்மா?" என்று இவன் கேட்க, "அதெல்லாம் எதுவும் வேணாம் டா ஆருஹ். நீ வீட்டுக்கே வந்துடு டா. வேற எதுவும் வேணாம். என் புள்ள திறமைசாலி டா. அதை நாங்க தான் புரிஞ்சிக்காம போய்ட்டோம் டா. அம்மாவை மன்னிச்சுடு டா. வீட்டுக்கு வந்துடு டா" என்றார் அவன் தாய்.



"அம்மா. இங்க பாருங்க. எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லை. ஆனா, நான் இப்போ வீட்டுக்கு வந்தா, இத்தனை நாளா நீங்க என்ன பிரிஞ்சி பட்ட கஷ்டத்துக்கும் பலன் இல்லாம போய்டும். நான் சொன்னதை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடறேன் மா" என்று இவன் கூற, சில நிமிட அமைதிக்கு பின், "அதுவரை அடிக்கடி போன் பண்ணு கண்ணா" என்று அவன் அம்மா சொல்ல, "கண்டிப்பா மா" என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.







அவன் அழைப்பை துண்டித்தது தான் தாமதம். "என்ன...என்ன..." என்று துள்ளி குதிக்காத குறையாய் ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.



"என்ன ஆச்சு? பேசுனியா? எப்படி ஃபீல் பண்ண?" என்று அவள் ஆர்வத்துடன் கேட்க, ஒரு பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டு, "ஏதோ பெரிய பாரத்தை எறக்கி வச்ச மாதிரி இருக்கு" என்று அவன் புன்னகையுடன் கூற, அவன் புன்னகை ஒட்டிக்கொண்டது அவளுக்கும்.



"ஹப்பாடா. சரியா போச்சா அப்போ. அவ்ளோ தான். ரெண்டே வார்த்தை தான். இதை பேசி முடிப்பதை விட்டுட்டு...எப்பப்பா..ஒவ்வொரு தடவை உங்க அம்மா போன் பண்ணுறப்போவும் உன்னோட தன்மானம் தடுக்கும், அதை எடுக்காம விட்டுடுவ. ஆனா உங்க அம்மா மேல இருக்க பாசம், அது வலிக்குது உள்ள. அதே போல தான் உங்க அம்மாவுக்கும் வலிக்கும். ரெண்டு வார்த்தை பேசுறதால ரெண்டுபேரோட வலியும் காணாம போகப்போகுதுன்னா, அதை எதுக்கு பேசாம இருந்துட்டு" என்று சொல்லிவிட்டு அமைதியானாள் அவள்.



அதன் பின்னர் அமைதி மட்டுமே அந்த இடத்தில் குடிகொள்ள, மதியம் உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்தாள் அவிரா.



இவனோ முழுதாய் குழம்பி போய் இருந்தான்.



அவனக்கு அவள் மேல் முதலில் இருந்தது நன்றியுணர்வு மட்டும் தான். ஆமாம். தேர்வில் உதவி செய்ததால், ஒரு நன்றியுணர்வு. அதுவும் பழக்கம் இல்லாத இவனுக்கு அவளாகவே வந்து உதவி செய்ததால் ஒரு மரியாதை என்றும் சொல்லலாம்.



இந்த கெட்-டுகெதரில், முதலில் கவந்தது ஆடம்பரம் இல்லாத அவள் அழகு தான் என்றாலும், வெகுவாக கவர்ந்தது, அவள் பேச்சின் தெளிவும், அவள் குணமும் தான்.



மற்றவர் அனைவரும் அவனை தோல்வியடைந்தவனாகவே பார்க்க, அவனுக்குள் இருக்கும் வெற்றியாளனை அவனுக்கே அடையாளம் காட்டியவள் அவள் தான். அதனாலே ஒரு ஈர்ப்பு உருவானது என்றும் சொல்லலாம். அவளுடன் நட்பு பாராட்ட துடித்தது அவன் மனம். அதனால் தான் அவளுடன் பயணப்பட தொடங்கியதே.



ஆனால் இந்த பயணம், அவளின் பல பக்கங்களை காமித்தது. எதையும் ஆராய்ந்து செயல்படும் அறிவு, தெளிவான சிந்தனை, யாரையும் எளிதாய் கவர்ந்து, கட்டிப்போடும் பேச்சு, அனைத்தையும் விட முக்கியமாய், அவன் மேல் அவள் எடுத்துக்கொண்ட அக்கறையை காட்டியது.

ஆம், தான் சாப்பிட வரவில்லை என்றதும், அவனை அவள் சாப்பிட வற்புறுத்தவில்லை தான். ஆனால் பேச்சினாலே மாயம் புரிந்து, அவனை தானாகவே வந்து சாப்பிட வைத்துவிட்டாளே ! அதற்கும் மேல், ஒரு நிமிடம், அவன் கண்ணில் தெரிந்த வலி அதையும் உணர்ந்து, அதை தீர்க்கவும் வழி செய்துவிட்டாளே!



அதனாலோ என்னவோ! நட்பையும் தாண்டி ஒரு உறவை நிலைநாட்ட முற்பட்டான். ஆனால்! தன் அருகில் குழந்தையாய் தூங்கும் இவள், எல்லாரிடமும் நட்பாய் பழுகுபவள். ஒரு வேலை, தன் இடத்தில் வேற யாரேனும் இருந்தால் கூட, அவள் நடவடிக்கை இப்படி தான் இருந்திருக்குமோ? அவள் நட்புடன் தான் பழகுகிறாளோ?



ஆனால், இவனுக்கோ அவள் அவன் மேல் எடுத்துக்கொண்ட அக்கறை, அவனுக்கு வாழ்க்கை வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அதை அவளிடம் தெரிவிக்க தயக்கம். எங்கே இவன் மனதில் இருப்பதை கூறி, இப்பொழுது இருக்கும் நட்பும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான்.



பேருந்தில் முக்கால்வாசி பேர், மதிய உறக்கத்தில் தன்னை மறந்திருக்க, இவன் அருகில் தான் நித்ராதேவி எட்டிகூட பார்க்கவில்லை.



மனம் முழுதும் அவிரா இருக்க, நித்ரா எங்கே அருகில் வருவது!
 

தரணி

Well-Known Member
அவி திருவிளையாடல் கதை சொல்லி ஆரூ வை அம்மா கிட்ட பேச வச்சாச்சு...

படிச்ச அம்மா அப்பாவே இப்படி இருந்தா என்ன பண்ண முடியும்

ஆன ஆரூ அவ உன்னை உறவு வேண்டி தான் தொடருரா அது தெறிஞ்சா என்ன பண்ணுவ....
 

Srd. Rathi

Well-Known Member
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதால் தான் பல பிரச்சனை வருகிறது,
திருவிளையாடல் கதை மூலம் அருவை பேச வைத்தது சூப்பர் அவிரா
 

Kamali Ayappa

Well-Known Member
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதால் தான் பல பிரச்சனை வருகிறது,
திருவிளையாடல் கதை மூலம் அருவை பேச வைத்தது சூப்பர் அவிரா
நன்றி
 

Kamali Ayappa

Well-Known Member
அவி திருவிளையாடல் கதை சொல்லி ஆரூ வை அம்மா கிட்ட பேச வச்சாச்சு...

படிச்ச அம்மா அப்பாவே இப்படி இருந்தா என்ன பண்ண முடியும்

ஆன ஆரூ அவ உன்னை உறவு வேண்டி தான் தொடருரா அது தெறிஞ்சா என்ன பண்ணுவ....

அது தெரியும்போது பார்த்துக்கொள்ளலாம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top