பிரச்சினையா? அசௌகரியமா?

Advertisement

Eswari kasi

Well-Known Member
பிரச்சினையா?
அசௌகரியமா?

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், ’நான் கற்ற பாடம்’ என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை.

நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.

‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள்.

எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?

உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை.

உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை...

ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை.

இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.

மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள் (inconveniences).

இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும்.
ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை.

பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும்.

இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்.

நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும்.
இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘ என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது.

அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.

நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது" என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..

நாமும் நிதானமாக யோசிப்போம்:
நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா,
இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!

படித்ததில் பிடித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top