நீயாக நான், நானாக நீ 10

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:giggle::giggle::giggle:

ei9UVG660316.jpg

அத்தியாயம் 10

பூமியின் சத்தத்தில் அந்த இடமே நிசப்தமாக, அனைவரும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆடிக் கொண்டிருந்த நண்பர்களும், அவளின் அருகே வர, முதலில் வந்த அசோக் பூமியிடம், “என்னாச்சு பூமி” என்று முணுமுணுத்தான்.

சோனுவை முறைத்தவள், “நான் கிளம்புறேன்… நீ என்ன ட்ராப் பண்றீயா…” என்றாள்.

திடீரென்று கிளம்புவதாக சொல்லவும் சற்று குழம்பினாலும், அவளுடன் சென்றான் அசோக். செல்லும்முன் நண்பர்களைக் கண்டு தலையசைக்க, அதில் ஒருவன், “இந்த தடவையும் பாதிலேயே கிளம்புற…” என்று ஏதோ கூற வர, மற்றொருவன் அவனை அடக்கினான்.

இவையெல்லாம் பூமி கண்டாலும், அவளின் யோசனை முழுக்க நடந்த சம்பவத்தில் இருந்ததால், அவள் அதை ஆராயவில்லை.

வெளியே வந்ததும், “என்னாச்சு பூமி…? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று வினவினான் அசோக். அவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் அனைத்தையும் வார்த்தைகளில் கொட்டினாள் பூமி.

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள், “எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே டேட்டிங் கூப்பிடுவான்…” என்று பொறிந்தாள்.

“ஹே பூமி… வெய்ட் அ செக்… அவன் உன்ன கூப்பிடல… ஆகாஷ கூப்பிட்டுருக்கான்…” என்று அசோக் தெளிவுபடுத்தவும் தான் அதை உணர்ந்தாள் பூமி.

“வாட்… அஷுவையா!!!” என்று திகைத்தவள், மீண்டும் உள்ளே செல்ல, அசோக்கும் அவளின் பின்னே ஓடினான்.

அங்கு பூமியின் கத்தலில் பயந்து பரிதாபமாக (!!!) அமர்ந்திருந்த சோனுவை சுற்றியிருந்த நண்பர்கள் விசாரிக்க, நடந்ததை மெதுவாக கூறிக் கொண்டிருந்தவன், கோபத்தில் உள்ளே வரும் பூமியைக் கண்டு எழுந்தான்.

வேகமாக வந்தவள், சோனுவின் சட்டையைப் பிடித்து, “எவ்ளோ தைரியம் இருந்தா என் அஷுவ டேட்டிங் கூப்பிடுவ…” என்றாள்.

இரைச்சல் அதிகமாக இருந்ததால், அவள் கூறியது மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும், அவள் சட்டையைப் பிடித்திழுத்ததால் அவளருகே வந்திருந்த சோனுவிற்கும் அவள் பின்னே வால் போல திரிந்து கொண்டிருக்கும் அசோக்கிற்கும் கேட்டது.

‘போச்சு இவளே காட்டிக் கொடுத்துடுவா போல…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட அசோக், அவளருகே சென்று, “ஹே நீ தான் ஆகாஷ்…” என்று இன்னொரு முறை நினைவு படுத்தினான்.

பூமி சுதாரித்துக் கொள்ள, அவளின் கூற்றில் குழம்பிய சோனு, “யாரது அஷு… நான் அவங்கள கூப்பிடல… உங்கள தான்…” என்று திக்கியவாறே சோனு கூற, “அடிங் திரும்பவும் என்ன கூப்பிடுவியா…” என்று அவனை அடித்தாள் பூமி.

அதுவரையிலும், ‘டேட்டிங்’ என்றதிலேயே அதிர்ந்திருந்த மற்றவர்கள், இவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் நிகழ்விற்கு வந்து, அவர்களை பிரித்தனர். பின்பு அசோக்கிடம், ஆகாஷை அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

வெளியில் வந்தும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த பூமியை உலுக்கியவன், “எதுக்கு இவ்ளோ கோபம்…” என்றான்.

“பின்ன அஷுவ டேட்டிங் கூப்பிடுவானா… ராஸ்கல்…” என்று பொறுமினாள்.

பூமியின் ‘அஷு’ என்ற அழைப்பை அவள் உணரவில்லை என்றாலும், அசோக் மனதில் குறித்துக் கொண்டான். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஓகே ரிலாக்ஸ்…” என்று கூறியபடி வண்டியைக் கிளப்பினான்.

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, “ஆமா கிளம்புறப்போ மகேஷ் ‘இந்த தடவயையும் பாதில கிளம்புற’ன்னு சொன்னானே… இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பிரச்சன நடந்துருக்கா என்ன…” என்று அவள் கேட்டாள்.

‘ஐயோ கரெக்டா கேக்குறாளே… இதெல்லாம் எப்படி தான் நியாபகம் இருக்கோ… எப்படியாவது வாய குடுக்காம எஸ்கேப் ஆகிடனும்…’ என்று நினைத்த அசோக், “அது… அது…” என்று திக்கினான்.

‘ச்சே அவசரத்துக்கு ஒரு பொய் கூட வாயில வர மாட்டிங்குதே… ரொம்ப நல்லவனா வளர்ந்தாலே இப்படி தான்…’ என்று சலித்துக் கொண்டான்… மனதிற்குள் தான்…

அவன் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், “ஒழுங்கா உண்மைய சொல்லு… இல்ல நாளைக்கு அந்த சோனு கூட உன்ன கோர்த்து விட்டுடுவேன்…” என்று மிரட்டினாள் பூமி.

‘அடப்பாவி… இவ செஞ்சாலும் செய்வா…’ என்று பயந்தவன் சென்ற முறை பப்பில் நடந்ததைக் கூறினான்.

“எங்க டீம்ல கதிர்னு ஒருத்தன் இருந்தான்… ஆனா எங்க யாருக்கும் அவன் கூட அவ்ளோ க்ளோஸா பழக பிடிக்கல… ஏன்னா அவன் எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பான்… இடம், சூழ்நிலை எதுவும் பாக்க மாட்டான்… அவனால எங்க ஆஃபிஸ்லயே நெறையா பேரு ஹர்ட் ஆகிருக்காங்க…. ஆனாலும் எங்க டீம்முகிறதால ஒதுக்க முடியல… அளவா பழகுவோம்… போன டைம் மகேஷ் ட்ரீட்டுக்கு இங்க வந்தப்போ தான், அவன் ரொம்ப குடிச்சுட்டு உன்னையும் ஆகாஷையும் தப்பா பேசிட்டான்… அவன் கேரக்டர் தெரிஞ்சு தான், நீயும் ஆகாஷும் ஒரே வீட்டுல இருக்க விஷயத்த அவன்கிட்ட நாங்க யாரும் சொல்லல… ஆனா அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு தான் தெரியல… அவன் உன்ன ரொம்ப பேசவும், ஆகாஷ் கோபத்துல அவன அடிச்சுட்டான். அப்பறம் நாங்க தான் அவன சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வச்சோம்… இதான் அந்த ட்ரீட் பாதிலேயே நின்னதுக்கு காரணம்…” என்று விளக்கினான்.

பூமியோ, ‘இந்த கருவாயன் நமக்காக சண்டை போட்டுருக்கானா…’ என்று நினைத்துக் கொண்டே பயணம் செய்தாள்.

‘என்ன சத்தத்தையே காணோம்…’ என்று திரும்பிய அசோக் அவள் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை பின்புற கண்ணாடி வழியே கண்டவன், ‘ஹ்ம்ம் முத்திருச்சு…’ என்று எண்ணியவாறு வண்டியை ஆகாஷின் வீட்டை நோக்கி செலுத்தினான்.

*****

பூமியை அங்கு அனுப்பி வைத்துவிட்ட ஆகாஷின் மனமோ நூறாவது முறையாக அவளை அங்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாது என்று புலம்பியது. இதுவரையிலும் வீட்டிற்குள்ளே பொத்தி வைத்து வளர்க்கப்பட்டவள், இது போன்ற இடங்களுக்கு சென்று பழக்கமில்லாதவள், எவ்வாறு அங்கு சமாளிப்பாள் என்றெண்ணி கவலைக் கொண்டான்.

“ப்ச் அந்த வெள்ளெலி கேட்டுச்சுன்னு அனுப்பியிருக்க கூடாது…” என்று வாய் விட்டு புலம்பியவன், அழைப்பு மணி ஓசை கேட்டு வாசலுக்கு விரைந்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த அசோக்கையும் பூமியையும் கண்டவன், “அதுக்குள்ள முடிஞ்சுருச்சா…” என்றான்.

பூமிக்கு ஆகாஷை காணவே ஏதோ போலிருக்க, அவனை விலக்கிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள். அவளின் செயலைக் கண்டு புருவம் சுருக்கியவன், “என்ன பிரச்சன டா…”என்று அசோக்கிடம் வினவினான்.

அசோக்கோ, “நாங்க ஈவ்னிங் ஆறரை மணிக்கு அங்க போனோமா…” என்று ஆரம்பித்தவன், அவன் அங்குள்ள பெண்களை சைட்டடித்த கதை, அவர்கள் எதிர்வினையாக செருப்பெடுத்த கதை அனைத்தையும் கூறும்பொழுதே, உடை மாற்றி, தன் மனநிலையையும் மாற்றி வந்தாள் பூமி.

ஆகாஷின் பொறுமை குறையத் துவங்க, பூமியிடம் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ நமுட்டுச் சிரிப்புடன், “உனக்கு ப்ரொபோசல் வந்துச்சு…” என்றாள்.

அதைக் கேட்டதும் உள்ளுக்குள், ‘எவ அவன்னு தெரிலயே…’ என்று எரிச்சல் பட்டாலும், வெளியே “என் பெர்சனாலிட்டி அப்படி…” என்று பெருமையாகக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட மற்ற இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் நடுவே, “ஆமா ஆமா, ‘பசங்களே’ மயங்கி விழுகுற அளவுக்கு பெர்சனாலிட்டி தான்…” என்றாள் பூமி.

“வாட்…” என்று முதலில் அதிர்ந்தவன், “யாரு…” என்று வினவினான்.

அவர்களும் நடந்தவற்றை சிரிப்புடனும் பல ஹை-ஃபைக்களுடனும் சொல்லி முடித்தனர்.

ஆகாஷோ இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, பூமி மேலும் அவனை சீண்டினாள்.

“எனக்கொரு டவுட்… நீதான அவன் தனியா இருக்குறது பொறுக்காம அவன்கூட போய் பேசுன… அப்போ உனக்கும் அவன் மேல லவ்ஸோ… அச்சோ இது தெரியாம அவன் ப்ரொபோசல ரிஜெக்ட் பண்ணிட்டேனே…” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட, “ஹே நில்லுடி உருண்ட…” என்று ஆகாஷ் துரத்திக் கொண்டு சென்றான்.

அவர்களைக் கண்ட அசோக், ‘ஒன்னாச்சும் நம்மள கண்டுக்குதான்னு பாரு… இப்போவே இப்படி இதுல கல்யாணம் ஆச்சுனா வீட்டுக்குள்ள யாரு வந்தாலும் தெரியாது போல… சரி அது எதுக்கு நமக்கு… வந்த வேலைய பாப்போம்… ச்சே நைட் நல்லா சாப்பிடலாம்னு மதியம் வேற சரியா சாப்பிடலையே…’ என்று மனதிற்குள் புலம்பியவன், “ஹலோ… வீட்டுக்கு வந்துருக்கேனே, உபசரிப்பெல்லாம் இல்லயா…” என்றான் இன்னும் ஓடிக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து…

“உபசரிப்பு தான… அவகிட்ட கேளு… பத்து விசில் நூடுல்ஸ் பண்ணித் தருவா…”

“டேய் கருவாயா என் சமையலுக்கு என்ன கொறச்சல்… உனக்கு தான் சாப்பிட குடுத்து வைக்கல” என்று மீண்டும் அங்கு சண்டை துவங்க, ‘இதுங்கள நம்பிட்டு இருந்தா இன்னிக்கு நைட் பட்டினி தான்…’ என்று யோசித்த அசோக், சொல்லாமலேயே கிளம்பிச் சென்றான்.

சண்டை முடிந்த பின் தான் சுற்றுப்புறம் உணர்ந்தவர்கள், அசோக்கை தேட, அவன் சென்று விட்டது தெரிந்தது. “உன் பிரெண்டுக்கு சொல்லிட்டு போகணும்னு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா…” என்று அடுத்த சண்டைக்கு அடித்தளம் போட்டாள் பூமி. இவ்வாறே அவர்களின் சண்டையுடன் அழகாக (!!!) முடிந்தது அந்த நாள்.

*****

அடுத்த நாள் வேலைக்குச் சென்ற பூமியை வரவேற்றது, சோனு அவன் ஊருக்கே சென்று விட்டான் என்ற செய்தி. மற்றவர்களுக்கு விபரம் தெரியாததால், இவர்களின் கேங்கிடம் கேட்க, “ஹீ வாஸ் ஹோம் சிக்…” என்று கூறி சமாளித்தனர்.

அசோக் கூட பூமியிடம், “ஒரு அடி தான அடிச்ச… அதுக்கே அவன் மும்பை போயிட்டான்… ஹ்ம்ம் என் நண்பன் நிலமை தான் பாவம்… உங்கூட எப்படி குப்பை கொட்ட போறானோ…” என்று கிண்டல் செய்ய, பூமியோ அவன் கூறியதில் அவளிற்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்ததால், அசோக்கிடம் மறுமொழி கூட கூறாது கடந்து சென்று விட்டாள்.

‘இவ எதுக்கு மந்திருச்சு விட்டது மாதிரி இருக்குறா…’ என்று அசோக் தான் புலம்பினான்.

*****

ஆகாஷிற்கு நாட்கள் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி கழிந்தன. அந்த பயிற்சியாளர் மீண்டும் கடுவன் பூனை போல் சுபாவத்தை மாற்றிகொள்ள, அவரின் ரெமோ அவதாரத்திற்கு, இந்த அந்நியன் அவதாரம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது, ஆகாஷிற்கு.

மற்ற தோழிகளிடமும் சகஜமாகவே பேசிப் பழகிக் கொண்டான். புதியவர்களிடம் பேசும்போதோ, அவன் தடுமாறும் போதோ, ரூபா அவனிற்கு துணையாக நின்றாள்.

அன்றைய இடைவேளையில் கேன்டீனில் அமர்ந்திருந்த தோழிகளில் ஒருத்தி, வழக்கம் போல ஆகாஷ் – பூமியின் காதல் கதை பற்றி கேட்க, ஆகாஷும் ஏதோ கூறி வைத்தான். ஆனால், அவர்கள் இருவரையும் இணைத்து பேசுவது ஆகாஷின் மனதிற்கு இதமாகவே இருந்தது.

*****

இப்படியே இரு வாரங்கள் கழிந்திருந்தன. இந்த இரு வாரங்களில், அவன் பெண்ணாகவும், அவள் ஆணாகவும் சந்தித்திருந்த இன்னல்கள் பல.

சட்டையில் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டு கவலையின்றி திரிந்தவனிற்கு, உடை எங்கேனும் விலகியிருக்கிறதா, கயவர்களின் பார்வை தன்னை துளைக்கிறதா என்று பார்க்கவுமே சரியாக இருந்தது. இதில் பல இடங்களில் ‘பொண்ணு தான நீ’ என்ற கேலிப் பார்வைகளும் அடங்கும். அதில் சற்று துவண்டு தான் போனான், ஆகாஷ்.

பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லாமல் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி போல் இருந்தவளிற்கு, வேலையில் பொறுப்புகள் அதிகமானது. அதை கூட ஆகாஷ் மற்றும் அசோக்கின் முயற்சியால் முடித்துவிட்டாலும், அதற்கான அங்கீகாரம் இவளிற்கு கிடைக்காமல், மற்றவர்களுக்கு கிடைப்பதை பார்த்தவளிற்கு மனம் சுணங்கிப் போனது. அதுமட்டுமில்லாமல், வேலை செய்யாமல் பொழுதை கழிக்கும் பெண்களின் கேலிப் பேச்சுகள் அவளை சோர்வுறச் செய்தன.

வேலையிலிருந்து வீடு திரும்பும்போது இதே பதட்டத்துடன் சோர்ந்து வருபவர்களுக்கு மற்றவரின் ஆறுதல் வார்த்தைகளே மருந்தாகிப் போனது. இப்போதெல்லாம் நிறைய பேசினர் இருவரும். காலையிலிருந்து மாலை வரை நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் சந்தித்த பிரச்சனைகளைக் கூறி, அதை தீர்க்கும் வழிகளை ஆலோசித்தனர். ஒன்றாக சமைத்தனர். ஒருவரையொருவர் அவர்களின் உடை முதற்கொண்டு பாராட்டிக் கொண்டனர். சில பல பரிந்துரைகளும் சொல்லியும் கேட்டும் அவர்களின் புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டனர்.

‘கருவாயா’, ‘ஸ்கை ஹை’, ‘க்ளோபு’, ‘வெள்ளெலி’ போன்ற அழைப்புகள் இப்போது உரிமை அழைப்புகளாக மாறிப் போனது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், மனதளவில் மிகவும் நெருக்கமாகிப் போயினர். ஆனால் அந்த நெருக்கத்தை தான் உணரவில்லை.

அதை உணரவைக்கவே அவன் வருகிறான். பூமியின் தாய் வழி மாமன் மகனான சுந்தர்… அவனின் வருகை இவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும்..?

தொடரும்...
 

Srd. Rathi

Well-Known Member
சுந்தர்.....பூமிகிட்ட எப்படி நடக்கப்போறானோ இருவருக்கும் இருக்கும் பிரச்சனை நல்ல படியா முடிந்தால் சரி...
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
சுந்தர்.....பூமிகிட்ட எப்படி நடக்கப்போறானோ இருவருக்கும் இருக்கும் பிரச்சனை நல்ல படியா முடிந்தால் சரி...
Sundhar vandha prechanai theeruma ila uruvaguma nu next epi la pakalam;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top