தூரம் போகாதே என் மழை மேகமே !! - 79

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
பெரிய வட்ட விழி விரித்து, “ஓ.. உதயா என்னிடமும் இதை பற்றி எதுவும் சொல்லவில்லையே" என்று தன் தோழியினை எண்ணி அவனிடம் கேள்வி கேட்டாள்.” ம்ம் நான்தான் நீயாக உணரும் வரை சொல்ல வேண்டாமென்றேன்" என்றான் திகேந்திரர்.


“கடைசியில் என் தோழியும் உங்களது பக்கமாகி போனாளே!” என்று வியப்பாக சொல்லிய போதும் ஆதிரை புன்னகைத்தாள்.


அதன் பிறகு திரையில் தெரிந்ததெல்லாம், வஜ்ரன் உதயாவின் தந்தையிடம் வந்து பெண் கேட்டதும் அடுத்து சில தினங்களில் திருமணம் நடந்ததும்தான். நீங்களும் திருமணம் செய்துக் கொண்ட பின் அந்த தீவுக்கு போகலாமே என்று உதயா கேட்டதற்கு , 108 நாட்கள் தவமிருந்து சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் செய்வித்த பிறகு அதே நாளில் நாங்கள் இருவரும் மணம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று என் குரு சொல்லியிருக்கிறார். அதனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லை." என்றான் திகேந்திரர்.


அப்படி திகேந்திரர் சொன்ன போது அந்த தவத்திலெல்லாம் நம்பிக்கை இல்லாத போதும், உடனே திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும் இல்லாததால் இதில் மறுப்பேதும் ஆதிரை சொல்லவில்லை. மாறாக திகேந்திரரின் இந்த முடிவிற்கு ஏதேனும் காரணம் இருக்குமென்று அவர் சொல்வதை அப்படியே செய்ய தன் வீட்டினரையும் ஊர் தலைவரையும் சம்மதிக்க வைத்தாள்.


மலைவாழ் மக்களின் ஊர் தலைவர் உதயா மற்றும் ஆதிரைக்கு உதவியாக ஊரில் ஒருவனான விஸ்வநாதனையும் அந்த தீவுக்கு செல்ல அவர்களுடன் அனுப்பினார். அதே போல சிவனின் பூஜைகளின் வரை முறைகளை நெறி பிறழாமல் செய்ய உதவிட பெண் சித்தர் ஒருவரை வஜ்ரன் மற்றும் திகேந்திரரின் குரு அவர்களுடன் அனுப்பினார். சொல்ல போனால் அந்த பெண் ராகவியே சித்த குருவிடம் இது போல நாட்கள் கழிந்து சேரும் சிவன் பார்வதி சிலைகளுக்கு முறைப்படி தவமிருந்து திருமணம் செய்த பின்பே அவை ஒன்றாக முடியும் என்பதை எடுத்து சொன்னதும் அதனை திகேந்திரரும் ஆதிரையும் திருமணத்திற்கு முன்பு செய்விக்க வேண்டுமென்பதையும் சொன்னதும் அந்த பெண் ராகவிதான். இதனை தீவுக்கு செல்லும் போதும் படகு செலுத்தும் போதே ஆதிரையிடம் வஜ்ரன் சொன்னார். இது ஒரு பெரிய செய்தி இல்லையென்பதாலோ என்னமோ திகேந்திரர் ஆதிரையிடம் எதுவும் சொல்லவில்லை என்று ஆதிரை எண்ணிக்கொண்டாள். அதன் பின் அறுவரும் அந்த மலையிலிருந்து இறங்கி கடல் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
இவற்றை காண நேர்ந்த இப்போதைய ஆதிரைக்குதான் துணுக்குற்றது. 'இந்த விஸ்வா என் மலைவாழ் மக்கள் குடும்பத்தை சேர்ந்தவனா? உடன் வருகிறானென்றால் திகேந்திரரிடம் என்னைப்பற்றி தவறாக பேசி பிரிக்கவென்றே ஏதோ திட்டமிட்டு உடன் வருகிறான். அது போல நடத்தியும் காட்டியிருப்பதால்தானே அர்ஜூன் என்மீது அவ்வளவு கோபம் கொண்டது. என்னதான் செய்கிறான் என்று பார்ப்போம்.’ என்று எண்ணிய வண்ணம் கனவில் ஆழ்ந்தாள்.


மலையிலிருந்து கிளம்பியதிலிருந்து திகேந்திரன் கையில் சிலையும் ஆதிரையின் கையில் விளக்கும் இருந்தது. ஒருமுறை உதயா ஆதிரைக்கு உதவ எண்ணி அதை ஏந்திட முயன்று அதன் சூடு தாங்க முடியாமல் மீண்டும் ஆதிரையிடமே கொடுத்துவிட்டாள். கோவிலுக்கு போனதாலோ என்னமோ ஆறுபேரும் காவி உடையில் சென்றனர். அங்கேயே 4 மாதங்கள் தங்குவதற்கான உணவு உடை சகிதங்களையும் உடன் எடுத்து சென்றிருந்தனர். திருமண சடங்குகளுக்கு தேவையான சில மங்கள பொருட்களும் அவற்றில் அடக்கம். அப்படி ஆதிரை மனதிரையில் பார்த்த பொருட்களில் இப்போது ஆதிரையின் கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கிழங்கும் இருப்பதை பார்த்து கனவிலும் பிரமித்தாள். உண்மையிலே 1000 வருடம் பழமையான மஞ்சள் கிழங்கு, வீணாகாமல் எப்படிதான் இருந்தது. ' என்று தன் ஆச்சரியமுற்றாள். அதன் பிறகு இரு சிறு படகுகளின் மூலம் அந்த தீவினை அவர்கள் அடைந்தனர்.


சிதிலமடைந்திருந்த கோவிலிலிருந்து விலகி அந்த சிலைகளை பால் வண்ண அருவியின் அருகிலிருந்த குகைக்கு எடுத்து சென்று அவற்றின் தன்மை மாறாமல் இருக்க அவற்றை அந்த பால் அருவியின் சிறு துளி நீர் சிதறல் அந்த சிலைகள் மீது விழுமாறு அதனை வடிமைத்து ஆதிரையும் அர்ஜூனும் ராகவியின் கட்டளையின் பேரில் தவமிருக்க ஆரம்பித்தனர். உணவும் நீருமில்லாமல் தவமா என்று இப்போதைய ஆதிரைக்கு ஆச்சரியம்தான். திரையில் தெரிந்த அந்த பால் வண்ண அருவி குகையை அர்ஜூன் சொன்ன இடத்துடன் மனதிலும் ஒப்பிட்டு இந்த இடத்தை தான் அர்ஜூன் மயில்பாறை கோவிலுக்கு போன போது சொன்னது என்பது ஆதிரை உணர்ந்துக் கொண்டாள். 108 நாள் தவம் முடிந்த போது கழுத்து வரை அர்ஜூன் சொன்னது போல புற்றேறியது. உடன் இருந்து கவனித்த போதும் 108 நாட்கள் முடியும் வரை அங்கேயே தங்கியிருந்த மற்ற நால்வரும் ஆதிரையையோ அர்ஜூனையோ தொந்தரவு செய்ய முயலவில்லை.. 108 தவத்தின் பின் ராகவி சிவனின் சிலை மீது இருந்து பால் நீரை எடுத்து அர்ஜூனின் மீது தெளித்தாள். அதே போல் ராகவியின் சொல்படி உதயா ஆதிரையின் மீது பார்வதியின் சிலை மீது இருந்து பால் நீரை எடுத்து தெளித்தாள். உடனே புற்றுடைந்து இருவரும் கண் விழித்தனர்.


அதன்பிறகு ஆறு பேரும் சேர்ந்து பார்வதி மற்றும் சிவனின் திருமணம் மற்றும் அதனை தொடர்ந்து ஆதிரை மற்றும் திகேந்திரரின் திருமணம் பற்றி திட்டமிடலாயினர். அதன்படி சிவன் மற்றும் பார்வதியின் சிலைகள் மணகோலத்தில் அலங்கரிக்கபட்டது. ஆதிரையும் அர்ஜூனும் அதே போல் மணகோலம் கொண்டனர். சடங்குகளின் வரைமுறைகளை விளக்கி பெண் அழைப்பு போல ஆதிரையை அழைக்க மணமகன் முறை போல ஏற்பாடு செய்யபட்டது.


"இருக்கும் ஆறு பேரில் இவை எதற்கென்று" உதயா சொல்லதான் செய்தாள். ஆனால் "அவை அவை முறை படி நடக்க வேண்டும் இல்லையென்றால் கடவுளின் விசயத்தில் மன்னிக்கமுடியாத குற்றங்களாகி போகும் வாய்பிருக்கிறது" என்று ராகவி சொன்னதும் அங்கு இருந்த யாராலும் மறுக்க முடியவில்லை.


அதனால் ராகவி சொல்வதையே எல்லோரும் கேட்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஆதிரையும் பார்வதியும் கடலில் மூழ்கி ஈர துணியுடன் வர வேண்டும். உடன் பெண் வீட்டார் என்பதற்கு இணங்க விஸ்வானாதன் அவளுடன் வருவதாகவும் , ராகவி மாப்பிள்ளை வீட்டார் போல இருந்து ஆதிரையையும் பார்வதியையும் ஆலம்கரைத்து அழைத்து வருவதாகவும் , உதயாவும் வஜ்ரனும் இங்கு யாகம் வளர்க்கவும் மாப்பிள்ளைக்கு செய்யும் சடங்குகளை செய்வதென்றும் ஒருமிதமாக முடிவெடுக்கப்பட்டது.


இதனை பார்த்த இப்போதைய ஆதிரைக்கு. 'இவை ஏதோ மேம்போக்கு வேலையாகவே தெரிந்தது. இந்த மணக்கோலத்தில்தான் அர்ஜூனை விட்டுவிட்டு போயிருப்பதாக அர்ஜூன் சொல்லியிருப்பானோ. இப்போது வரை அன்றைய என் முகத்தில் எந்த கவலையும் இல்லையே. இந்த பெண் ராகவி ஏன் என்னை விஸ்வனாதனுடன் வர சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும். அந்த விஸ்வா என்ன செய்து என் அர்ஜூனிடமிருந்து போன ஜன்மத்தில் பிரித்திருப்பான்' என்று எண்ணினாள்.


ராகவியின் சொல்படி முதலில் ஆதிரை பார்வதியின் சிலையுடன் தனியாகவே சென்றாள். இப்போதைய ஆதிரையும் திரையிலிருந்த ஆதிரையை மட்டுமே தொடர்ந்தாள். தனியாகவே கிளம்பிய போதும் விஸ்வா விரைவில் வந்துவிடுவதாக சொல்லியிருந்ததால் அந்த பால் வண்ண அருவியை கடந்து கடலினை அடைந்திட நடந்தாள். தீபம் மற்றும் சிலையுடனே கடலில் மூழ்கி எழுந்தாள். ஆனால் ஆதிரை கடலில் மூழ்கி எழுந்த பிறகும் அவர்கள் ஆதிரையிடம் வந்து சேரவில்லை. புரியாமல் போன வழியே திரும்பி வந்துக் கொண்டிருந்த ஆதிரையின் முகத்தில் ஒரு பெரிய இலையை வைத்து யாரோ அழுத்தினர். யாரோ என்ன விஸ்வாவே. அதன் பிறகு மயக்க முற்ற ஆதிரைக்கு நினைவு இருப்பதாக தெரியவில்லை.


மயங்கிய நிலையிலிருந்த போதும் ஆதிரையின் கையிலிருந்து அந்த தீபமும் கையணைப்பிலிருந்த பார்வதி சிலையும் நழுவவில்லை. அவற்றை ஆதிரையின் கையிலிருந்து பிரித்து இந்த தீவிலே கிடத்திவிட்டு போக முயன்றும் விஸ்வாவால் முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவற்றுடனே அவசர அவசரமாக ஆதிரையை தூக்கிக் கொண்டு கடல் கரையிலிருந்த படகில் கிடத்தி ஆதிரையை அந்த தீவிலிருந்து பிரித்து சென்றான் விஸ்வனாதன். இதை கண்டு பரிதவித்து தடுக்க என்ன முயன்றும் அருவமான இப்போதைய ஆதிரையால் எதுவும் செய்ய இயலவில்லை.


நிகழ்வில்…


ஆப்பிள்களை பறித்து வந்த அர்ஜூன், ஆதிரையை விட்டு சென்ற இடத்தில் அவள் இல்லாததை கண்டதும் பதற்றத்துடன் கையில் கொண்டு வந்த ஆப்பிள்களை சிதற விட்டு " ஆதிரை.. ஆதிரை..” என்று கத்திய வண்ணம் தேடினான். அந்த கல் அருவியின் நான்குபுரத்தில் ஒருபுரம் ஓங்கி உயர்ந்த கற்குன்றும் , மறுபுரம் பெரிய பள்ளதாக்கும் , வந்த வழி ஒருபுரமும், மீதமிருந்த பக்கம் கொஞ்ச தூரம் வரை பாறைகளும் அதனை கடந்து புதர்களும், பாம்புகள் வசிக்கும் புற்றுகளும் இருந்தது. ஆதிரை தான் வந்த வழி வரவில்லையென்பதும் , பெரிய கற்குன்றின் மீது தனியே ஏறியிருக்க வாய்ப்பில்லை யென்பதாலும் மீதமிருந்த பள்ளதாக்கின்புரம் சிறிது தூரம் தேடிவிட்டு , பாறைகள்புரம் திரும்பி தேடிக்கொண்டு வந்தான்.


அவனையும் அறியாமல் அவனது கண்களில் ஈரமிருந்தது. ஆதிரைக்கு எதும் நேர்ந்துவிடுமோ என்ற கவலை அவனை நிலையிழக்க செய்தது. இருட்டென்றாலே பயம் கொள்ளும் ஆதிரையை ஒரு நொடி நினைத்த அர்ஜூன் முழுதும் இருள் படருமுன் கண்டுவிட துடிதுடித்தான். அப்படி அவன் எண்ணிய வண்ணம் தேடிய போது , இருக்கும் குளிர் மேலும் அதிகரித்து நீரின் சாரல் அடிப்பதுப் போல உணர்ந்து "மழை மேகம்" என்று வாயில் முனுமுனுத்த விதமாக சாரல் வந்த திசையை நோக்கி விரைந்து ஓடினான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரு குறுகிய இடத்தில் மழை பெய்துக் கொண்டிருந்தது. அந்த மழையையும் தரையின் அருகில் தெரிந்த மேகத்தை பார்த்தபின் உயிர்கொடி வந்தவனாக அந்த மழையின் அருகில் வந்து அதில் நனைந்த வண்ணமே "ஆதிரை ஆதிரை" என்று அங்கு தெரிந்த புதர்களை கையால் விலக்கி தேடினான்.


அந்த நேரம் விஸ்வா கனவில் ஆதிரையை தூக்கி செல்வதை உணர்ந்த இப்போதைய ஆதிரை " என்னை விடு விஸ்வநாதன் .. என்னை விடு.. நான் என் இந்தரிடம் போகவேண்டும்.. இந்தர்.. இந்தர்.. இந்த விஸ்வா என்னை தூக்கிக் கொண்டு போகிறானே. ராகவி.. அந்த ராகவி எங்கே போனாள். இவனை பற்றி தெரியாமல் இவனுடம் என்னை வர சொன்னார்களே" என்று பிதற்றினாள்.


அவள் குரலை கேட்ட திசையை நோக்கி பார்த்த அர்ஜூன் , அவளை நெருங்கிவிட்ட ஒரு பாம்பினை பார்த்து உறைந்து போனான். நொடியும் தாமதியாமல் அவன் கையில் அகப்பட்ட குச்சினைக் கொண்டு அதனை தட்டிவிட்டு, அவசரமாக ஆதிரையை தன் தோள் மீது கிடத்தி தூக்கிக் கொண்டு வந்தான். அந்த தீவை போலவே அந்த மழை மேகம் அவர்கள் இருவரையும் தொடர்ந்து மழை பொழிந்து வந்தது. செய்கையற்று விரைந்து சென்று அர்ஜூன், அந்த கல் அருவியின் அருகில் அமைந்திருந்த ஒரு கல்லை நகர்த்தி அருவியின் அடியில் இருந்த சுரங்க பாதை மூலமாக ஒரு குகையினை அடைந்தான். அவர்களை தொடர்ந்து வந்த மழை மேகம் அவர்கள் அருவியின் அடியிலிருந்த குகைக்குள் சென்ற போதும் , அருவியின் மீதே மழை பொழிய செய்தது. அதன் படைப்பின் கடமை இன்றோடு முடிவது போல இன்றே முழுதும் பொழிந்து முடித்திட அது முடிவெடுத்துவிட்டதோ என்னமோ. அவர்களை தொடர்ந்து பெய்த மழை தூரலின் சத்தம் அந்த குகையின் சுவரெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


குகையிலிருந்த மூங்கில் பாயில் ஆதிரையை கிடத்திவிட்டு , இருண்டு இருந்த குகைக்கு வெளிச்சம் வர அந்த குகையில் ஆங்காங்கே இருந்த தீப்பந்தங்களுக்கு அங்கேயே இருந்த தீப்பட்டியின் மூலம் ஒளியேற்றிவிட்டு , ஆதிரையிடம் ஓடி வந்தான் அர்ஜூன்.


ஆதிரையின் கன்னத்தை தட்டி, “ ஆதிரை .. ஆதிரை… " என்று அவளை நினைவுக்கு கொண்டு வர முயன்றான்.


“இந்தர்.. இவனிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்.. இந்தர்..” என்று ஆதிரை முனங்கினாளே தவிர கண் விழித்தாள் இல்லை.


அவளது இந்தர் என்ற அழைப்பு ஆதிரை அவனை இரண்டாவது ஜன்மத்தில் அழைக்கும் முறை என்பதை அர்ஜூன் அறிந்திருந்தான். பிடிவாதமாக இரண்டாவது ஜன்மம் பற்றி அறிந்திட வேண்டுமென்று இவளே இந்த மழை மேகத்தை தேடிச் சென்றிருக்க வேண்டுமென்பதை அர்ஜூன் உணர்ந்தான். “என்ன செயல் செய்திருக்கிறாள். இரண்டாவது ஜன்மம் இப்படி இவளை வருத்தியேனும் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? இந்த சிம்லாவின் குளிரில் போய் மழையில் நனைந்து வைத்திருக்கிறாளே. நானாவது மழை மற்றும் குளிரில் காக்கும்விதமான jerkins அணிந்திருக்கிறேன். வெரும் கனத்த பருத்தி ஆடையுடன் வந்தது மட்டுமில்லாமல் இப்படி மழையில் நனைந்து வைத்திருக்கிறாளே. தலை முழுதும் ஈரமாகியிருக்கிறதே. “ என்று அழகாகவும் நீளமாகவும் இருப்பதகா அவள் அறியாமல் ரசித்த ஆதிரையின் கார்குழலின் மீது இப்போது அர்ஜூனுக்கு எரிச்சல் வர அதனை காய வசதியாக பிரித்துவிட்டான்.


நனைதல் நின்ற போதும் ஆதிரையின் , முகமும் உதடுகளும் குளிரினால் வெளுப்புற்று உறைந்தது போல இருந்தது. கைகளும் கால்களும் தண்ணீரிலே அதிக நேரம் இருந்ததாலும் குளிரினாலும் மரத்து போனது போல இறுகி கடினமுற்று பனிக்கட்டி போல சில்லிட்டிருந்தது.


அவசரமாக அந்த குகையின் மூலையில் அடுக்கி வைக்க பற்றியிருந்த விரகு சுல்லிகளின் ஒரு கட்டை எடுத்து வந்து பிரித்து ஆதிரை படுத்திருந்த பாயின் அருகில் விரகுகளை அடுக்கி தணல்கூண்டு எழுப்பி அனல் பரப்பினான். பின் மீண்டும் ஒருமுறை ஆதிரையை அழைத்து பார்த்து அவள் இப்போதுக்கு கனவில் மீளும் எண்ணம் இருப்பவள் போல தெரியவில்லை என்பதை உணர்ந்து விரைந்து அந்த குகையின் மறுமுனையிலிருந்த சுரங்க பாதை வழியாக எதையோ தேடி சென்றான். வந்தவன் கையில் பட்டும் தங்கமும் இழைந்த ஆடைகளை உடன் கொண்ர்ந்திருந்தான்.


கனவில்..


இடை இடையே அர்ஜூனின் குரல் கேட்பது போல இருந்த போதும் ஆதிரைக்கு நிகழ்காலம் செல்ல விருப்பமில்லை. பிடிவாதமாக கனவிலிருந்த ஆதிரையை விஸ்வா எங்கு தூக்கி செல்கிறான் என்று கவனித்த வண்ணம் தொடர்ந்தாள்.


எல்லாம் திட்டமிட்டு செய்தது போல விஸ்வா ஆதிரையை தூக்கிக் கொண்டு மற்றொரு கடற்கரையை அடைந்ததும் , அங்கே மாட்டு வண்டியில் வேறு சிலர் காத்திருந்தனர். ஆதிரையை வண்டியில் கிடத்தியபின் விரைந்து சென்ற வண்டி , முன்பு பார்த்த இடமில்லாமல் எங்கோ சென்றது. காடு மேடு கடந்து மீண்டும் ஏதோ ஒரு மலை பிரதேஷத்துக்கு சென்றது. ஒரு மலை அடிவாரத்தில் சில பல கூடாரங்களும் ஒரு மலைகுகையும் இருந்த இடத்தில் சென்று நின்றது. குகைக்குள் ஆதிரையை கிடத்திவிட்டு விஸ்வா எங்கோ சென்றுவிட்டான். சில ஆட்கள் அவ்வப்போது குகைக்குள் வருவதும் வெளியே காவல் போல கூடாரத்தில் தங்குவதுமாக இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு இரவு பகல் கடந்த பிறகு ஆதிரை கண்விழித்தாள். கண் விழித்த நொடியில் எந்த இடமென்று புரியாமல் , உதயாவையும் திகேந்திரரையும் தேடினாள். ஆனால் யாரென்றே தெரியாத சில ஆண்களை தவிர பெண்களே அங்கு இல்லை. அங்கு எதுவும் ஆதிரைக்கு புரியவில்லை. குறைந்தது 10 ஆட்களாவது மாறி மாறி குகைக்குள் வந்து சென்றனர்.. ஆதிரையின் கையிலிருந்த சிலையும் தீபத்தையும் அந்த குகையில் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். அதிக நேரம் அவளை காக்க வைக்காமல் விஸ்வா அங்கு வந்து சேர்ந்தான்.


தெரிந்த முகமாக அவனை கண்டதும் "என்ன விஸ்வானாதன் , நாம் எங்கு இருக்கிறோம். என் இந்தர் எங்கே. உதயா எங்கே?” என்று கேள்விகள் கேட்டு களைப்புற்ற கண்களால் கேட்டாள் ஆதிரை.


அவளிடம் பேசுவதற்கென்றெ ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்தான் போல, அவளுக்கு பதிலளித்தான் விஸ்வா. "ஆதிரை.. உன்னிடம் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் சொல்லாமல் முடியாது. அதனால்?” என்று பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்தான் விஸ்வா.


“என்ன நடந்தது விஸ்வனாதன். எதுவென்றாலும் சொல்லுங்கள். எங்கே என் இந்தர்?” என்று திகேந்திரரை பற்றி விசாரித்தாள் ஆதிரை.


“அது.. ஆதிரை திகேந்திரர், அந்த பெண் ராகவியை ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டவர். உன்னிடம் இருக்கும் ஏதோ ஆத்ம சக்தியை பெருவதற்காகவே உன்னை அந்த தீவிற்கு அழைத்து சென்று தவம் புரியவைத்திருக்கிறார். தவம் முடிந்ததால் உன்னை கொலை செய்யவே ராகவியும் திகேந்திரரும் திட்டமிட்டிருக்கின்றனர். இதை பற்றி அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை நானே கேட்க நேர்ந்தது. நீ கடலில் மூழ்கி திரும்பி வரும்போது உன்னை கடலிலே மூழ்கி இறக்க செய்வதற்காகவே அந்த பெண் ராகவி எனக்கு வேறு வேலை கொடுத்து உன்னுடனே வரவிடாமல் செய்துவிட்டாள்.. நான் திரும்பி வருமுன் ராகவி உன்னை சந்தித்துவிட்டாள். அதன் பிறகு.. அதன் பிறகு" என்று பீடிகையுடன் ஆதிரையை பார்த்தான் விஸ்வா.


அவன் சொல்வதை கேட்கிறேன் என்பது போல நெற்றி சுருக்கம் இருந்த போதும் விஸ்வா பேசுவதற்கு பதிலாக எதுவும் சொல்லவோ மறுத்து பேசவோ ஆதிரை முயற்சிக்கவில்லை.


அவள் இறுகிய முகத்தை பார்த்து ஆனந்தமுற்று விஸ்வா மேலும் பேசினான். “ அதன் பிறகு அந்த பெண் உன் முகத்தில் மயக்கம் தரும் இலையை வைத்து அழுத்தி உன்னை கடலில் தூக்கி வீச முயன்றாள். அதற்குள் அவளை அவள் பயன்படுத்திய இலை மூலமே நானும் மயக்கமுற செய்து உன்னை காப்பாற்றி உன்னை இப்படி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்துவிட்டேன். எனக்கு நீ உயிருடன் இருந்தால் போதுமென்று தோன்றியது. அவர்கள் எப்படியோ போகட்டுமென்று அவர்களை எதிர்க்காமல் விட்டுவிட்டேன்.” என்று சோகம் போல சொல்லி முடித்தான்.


இதை காண நேர்ந்த இப்போதைய ஆதிரை அப்படியே விக்கித்து போனால் என்ன எளிதாக பொய் சொல்கிறான். இவன் எந்த எல்லை வரையும் போவான் என்று எண்ணியவள், அப்போதைய ஆதிரையின் மன வலியை இப்போது உணர்வது போல் நின்றாள்.


“ நான் உன்னை காப்பாற்றும்படி சொன்னேனா? எதற்காக இங்கு என்னை அழைத்து வந்திருக்கிறாய். எனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை. அதனால் நான் இங்கிருந்து போகிறேன்" என்று வெளியில் செல்ல முயன்றாள் ஆதிரை. ஆனால் எழ முடியாமல் பலவீனமுற்றிருப்பது போல் உணர்ந்து தொப்பென்று விழுந்தாள்.


திகேந்திரர் மீதிருக்கும் கோபத்திலே ஆதிரை இப்படி பேசுகிறாள் என்று எண்ணி "ஆதிரை. கோபம் கொள்ளாதே. முதலில் இவற்றை சாப்பிடு. வள்ளி கிழங்குகளும் , அத்தி பழங்களும். உன் சக்தியைதான் தவம் என்ற பெயரில் எல்லாம் உறிஞ்சிவிட்டானே அந்த சித்தன். அவனை நம்பாதே என்று முதலிலே உன்னிடம் சொல்லலாமென்று நினைத்தேன். அதைவிடு. மற்றதை பிறகு பேசலாம்.. நீ சாப்பிட்டுவிட்டு ஓய்வெடு" என்று இயல்பாக சொல்வது போல் சொல்லி அவளிடம் உண்ண கிழங்குகளையும் பழங்களையும் கொடுத்தான் விஸ்வா.


அவன் தந்த உணவை வெறித்த ஆதிரை, "அவரை பற்றி இனி ஒரு வார்த்தை தவறாக பேசினால் நான் என்ன செய்வேனென்று தெரியாது?” என்று பொறிந்து கொட்டினாள்.


“ஆதிரை..” என்று அதிர்ந்து விழித்தான். “உன்னை ஏமாற்றியவனுக்காக காப்பாற்றிய என்னிடம் கோபம் கொள்கிறாயே ஆதிரை..” என்று இயல்பாக கேட்டான் விஸ்வா.


“விஸ்வானாதன். நான் தவம் இருந்தவள். என்னிடம் உன்னுடைய பொய் பித்தலாட்டம் வேலை செய்யாது. என்னை யார் ஏமாற்றியது என்று எனக்கு தெரியும். என் பார்வதியின் அருளால் என்னால் என்னிடம் பேசுபவர்களை பற்றியும் அவர்கள் உள் நோக்கை பற்றியும் அறிய முடியும் . நான் தவத்திலிருந்து கண் விழித்ததிலிருந்து உன்னுடைய எண்ணம் அறிந்துக் கொண்டேன். இருந்தும் நீ எல்லை மீற வாய்ப்பில்லாமல் உடனே என் இந்தருடன் திருமணம் இருந்ததால் உன்னை பெரிதும் நினைக்கவில்லை. எனக்கு வழி விடுவது உனக்கு நல்லது. இல்லையென்றால் விபரீதங்கள் மிகவும் மோசமாக இருக்கும்.” என்று பார்வதியின் முன் எரிந்துக் கொண்டிருந்த விளக்கினையே வெறித்த வண்ணம் சொல்லி முடித்தாள் ஆதிரை.


ஆதிரைக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்குமென்று விஸ்வா அறிந்திருக்கவில்லை. இப்போது உண்மை அறிந்தவள் என்றுணர்ந்த பின் நடிக்க தேவையில்லாமல் விகாரமாக முகம் காட்டி அவளிடம் பேசினான்.


“ஓ தெரிந்துவிட்டதா. அப்போது சரி.. இனி இந்த நல்லவன் வேஷம் தேவையில்லை. சில நிமிடம் அப்படி இருப்பது போல் நடிப்பதற்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. எப்படிதான் நல்லவனாகவே இருப்பதோ. தொலைகிறது. இப்போது உனக்கு எல்லாம் தெரியுமென்பதால் எந்த நாகாசு வேலையும் செய்ய தேவையில்லை. என் எண்ணம் தெரியும் என்றாய். நல்லது. தெரியவில்லையென்றால் கேட்டுக்கொள். நாளை மறுனாள் உனக்கும் எனக்கும் திருமணம். அதுவரை உன்னால் யாரையும் பார்க்க முடியாது" என்று சொல்லி கெக்கலித்து சிரித்தான் விஸ்வனாதன்.


அவனை வெறுத்து பார்த்த ஆதிரை, "உயிர் மீது ஆசையிருந்தால் இது போல் பேசுவதை நிறுத்திவிட்டு , எனக்கு வழிவிடு " என்று முடிந்த அளவு சக்திக் கொண்டு எழுந்து வெளியில் செல்ல முயன்றாள். ஒரே இழுப்பில் அவளை இழுத்து குகையில் தள்ளி பெரிய கல்லினால் குகையை மூடினான். ஏற்கனவே உணவில்லாமல் சக்தியற்று இருந்த ஆதிரை அப்படியே விழுந்தாள்.


“நீ அனுமதித்தால் திருமணம் மூலம் நீ எனக்கு சொந்தமாவாய். இல்லையென்றால் திருமணமில்லாமலே நீ எனக்கு சொந்தமாவாய். அதனால் வீணாக பேசிக்கொண்டிருக்காமல் ஒழுங்காக சாப்பிட்டு இங்கேயே கிட..” என்று கத்தி கலகலவென்று சிரித்த வண்ணம் கல்லினை மூடி அந்த ஆட்களை காவலிட்டான் விஸ்வா.


அவனது இந்த இடிஇடியென்ற சிரிப்பு காதில் விழுந்த போதும் , ஆதிரை சைகையற்று கிடந்தது சில நொடிகலே, பின் எழுந்து அமர்ந்து பார்வதியின் முன் பத்மாசன நிலையில் அமர்ந்து கண்ணெதிரே இருந்த பார்வதியை நோக்கி, “ ஓம் சக்தியே போற்றி " என்று துதிக்க ஆரம்பித்தாள்.


இரண்டு நாள் கழித்து மீண்டும் குகையை திறந்து வந்த விஸ்வனாதன் அங்கு கண்ட காட்சியில் அச்சத்தில் உறைந்தான். குகைக்குள் மூண்டு தெரிந்த கருநிற மழை மேகங்கள் அவனை குகைக்குள் நுழையவிடாமல் மின்னலிட்டு ஓட செய்தது. முயன்று உள்ளே வந்து பார்த்த விஸ்வனாதன் ஆதிரையின் உயிரற்ற உடலையே காண நேர்ந்தது. மானத்தை காக்க நினைத்து உயிர் துறந்து, அந்த மேகங்களை உருவாக்கியிருந்தாள் ஆதிரை. ஆதிரைக்கும் திகேந்திரருக்கும் திருமணம் நடக்கும் வரை ஆதிரையின் ஜன்ம கதைகளை தாங்கி இருக்குமாறு பார்வதியிடம் வேண்டி உயிர்விட்டிருந்தாள் ஆதிரை. அதன் பிறகு எப்படி பார்வதியின் சிலை திகேந்திரரிடம் போனது என்பதை அறிய எண்ணி இப்போதைய ஆதிரை கனவிலே இருக்க முயன்று தோற்று நிகழ்காலத்துக்கு வந்திருந்தாள்.


நிகழ்வில்,


மழை பொழியும் சப்தம் நின்றதும் , அவசரமாக ,” ஆதிரை .. ஆதிரை..” என்று அவளது தலையை தன் மடிமீது கிடத்தி அர்ஜூன் எழுப்ப முயன்றான்.


ஆதிரையும் , உறைந்து போயிருந்த இமையினை பிரிக்கமுடியாமல் பிரித்து அர்ஜூனை பார்த்தாள். "அ..அர்ஜூன்" என்று குரலே எழும்பாத உதட்டசைவில் அவனை அழைத்தாள். நினைவுக்கு வந்ததுமே குளிரிலும் மழையிலும் நனைந்திருந்த ஆடைகளும் தலைமுடியும் அவளது பற்களை தந்தியடிக்க செய்தது.கைகளையும் கால்களையும் அசைக்க முடியாமல் கனத்து இருப்பதை உணர்ந்தாள். கண்களும் அறை மயக்கம் போல மூடிக்கொள்ள முயன்றது தெரிந்தது.


“அ.. அர்ஜூன்" என்றவளது குரல் முனகியதே தவிர மேலும் எதுவும் பேசவில்லை.


“ஆதிரை.. கண்ணை திற .. என்ன செய்கிறது.. என்னிடம் பேசு.. எதற்காக இந்த குளிரில் மழையில் நனைய சென்றாய்?” என்று அர்ஜூன் பரிதவித்து கேட்டான். அதற்கும் "அர்ஜூன். அர்ஜூன்...” என்ற பிதற்றலே பதிலாக கிடைத்தது.


வேறு வழியில்லாமல், சுரங்க பாதையிலிருந்து கொணர்ந்த பட்டும் தங்கமும் கொண்டு நெய்த பாவடையையும் சட்டையையும் ஆதிரை அணிந்திருந்த ஈரமான உடைக்கு மாற்றாக அணிவிக்க எண்ணி ஆதிரையின் மேல் சட்டையின் பொத்தானை கழற்ற கை வைத்தான்.


அரைமயக்கத்திலிருந்த போதும் , பெண்மைக்கே இருக்கும் எச்சரிக்கை உணர்வில் அர்ஜூன் தொட்டவுடன் மெய் சிலிர்க்க அதிர்ந்து அர்ஜூனை நேருக்கு நேர் கண்டு உறைந்திருந்த கைகளால் அவனை தடுத்திட எண்ணி கைகளை நகர்த்திட முயன்றாள் ஆதிரை. ஆனால் ஆதிரையின் கை விரல்களை தவிர வேறு எதுவும் உணர்வுடன் இல்லாமல் குளிரினால் உறைந்து கனத்து போயிருந்தது. செய்கையற்று கை முட்டி இறுக எதையோ பற்றினாள்.


அவளது அச்சத்தை உணர்ந்த அர்ஜூன், “ ஆதிரை.. என் மீது நம்பிக்கை இருக்கிறதுதானே. உன் விருப்பமில்லாமல் உன்னை மீறி எந்த எல்லை மீறலும் நடக்காது. இப்படியே இந்த ஈரத்துணியுடனிருந்தால் இந்த குளிரில் ஜன்னி வந்துவிடும். உன்னாலேயும் உடை மாற்றுவது இப்போது இயலாது. அதனால் என்னை ஒரு மருத்துவன் போல எண்ணி உனக்கு உடை மாற்ற அனுமதிக் கொடு" என்றான்.


அவனுக்கு பதிலேதும் சொல்ல முடியாமல், கண்களை இறுக மூடி , பற்களால் உதடுகளை கடித்த வண்ணம் லேசாக சரி என்பது போல் தலையசைத்தாள். என்னதான் மருத்துவன் என்றெல்லாம் சொன்னப் போதும் அதையும் மீறி கணவன் என்ற எண்ணம் அவன் முன் தன்னுடைய நிலையும் நினைத்து ஆதிரைக்கு கூச்சம் வராமல் இல்லை. அர்ஜூன் உடை மாற்றும் வரையும் பிறகு சில நிமிடங்களும் ஆதிரை கண்களை திறக்கவில்லை.
 

Ivna

Active Member
Nice ud...
Aathirai ku 2vathu jenmamum nyabagam vanthutu....
Intha viswa thaa ellathukum reason aa...arjun ta sonna piragu semayaa iruku viswa ku...
 

periyauma

Well-Known Member
சூப்பர் பதிவு. இரண்டாம் ஜன்மம் நியாபகம்ஆதிரைக்கு வந்திடுச்சு இந்த விஸ்வா ஜன்மம ஜனம்ம அவன் கொடுர புத்தியும் வளருது . ரிதி குகைய பார்த்தது கல்வெட்டி எல்லாம் தெளிவா புரியுது. இந்த முதல் ஜன்மம் சிலை பற்றி சொன்ன ராகவி சித்தர். முலமா இரு ஜென்ம தொடர்பு வருரது புரியுது. விஸ்வா ஆதிய அடைச்சு வைச்ச குகை தான் சந்திர குளர் குகையா . அருமை யான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top