தூரம் போகாதே என் மழை மேகமே!! - 55

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அப்படி வந்த அந்த சித்தரின் பெயர்தான் திகேந்திரர் தங்கமே “ என்று ஆதிரையை ஊடுருவும் பார்வை பார்த்தார் சிவராமன்.

“திகேந்திரர்” என்ற அவருக்குப் பின் சொல்லிய ஆதிரை, “தாத்தா… அது… அந்த பெயர்… திகேந்திரர் என்ற பெயரை” என்று அவள் தீவில் கண்ட கனவில் அர்ஜுனின் பெயர் என்பதைச் சட்டென உணர்ந்த ஆதிரை அதனைச் சொல்லிட நினைத்து சிவராமனை நோக்கிச் சொல்ல எத்தனித்தாள்.

அதிகமாக வழக்கத்தில் இல்லாத பெயரான திகேந்திரன் என்ற பெயர் ஆதிரையின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது இயல்பான ஒன்று. அதனாலே ‘அந்த கனவிற்கும் இந்த நிகழ்விற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கக் கூடுமோ? ஆனால் என் கனவில் திகேந்திரர் இளவரசர் ஆயிற்றே. இவர் சொல்லக் கூடிய பூர்விக கதையில் அவர் சித்தர் என்கிறாரே இந்த தாத்தா’ என்று குழம்பியே, சிவராமன் சொல்லியதும் கேள்விகள் கேட்டிடத் துடித்தாள் ஆதிரை.

“ம்ம்.. அந்த திகேந்திரர் என்ற பெயரையே அர்ஜுனுக்கும் இப்போது இருக்க வேண்டும் ஆதிரை” என்றார் சிவராமன்.

“ஓ..” என்றவள் சில நொடி ,’அப்போ அந்த மழைமேகம் சொல்லிய எல்லாம் பொய்யல்ல. திகேந்திரன் என்ற பெயர் அர்ஜுனுடையதே! அப்போ அவனுக்கும், இல்லை இல்லை அந்த திகேந்திரருக்கும் ஆதிரையாகிய எனக்கும் ஏதேனும் விட்ட குறை தொட்ட குறை என்று பழமொழிக்கேற்ப ஏதேனும் தொடர்பு இருக்குமோ. அந்த சித்தருக்கு ஏதேனும் கடன் பட்டிருப்பேனோ. அவருக்குக் கடமை செய்யவே நான் இப்போதை திகேந்திரனுக்கு மனைவியாகும் சூழல் ஏற்பட்டிருக்குமோ!’ என்று பலவாறு எண்ணி யோசனையில் ஆழ்ந்தாள்.

அவளது யோசனையில் ஏனோ சிவராமனுக்குக் குறுக்கிடத் தோன்றவில்லை. சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. ஆதிரைக்குக் கொஞ்சம் சிந்திக்கத் தனிமை கொடுக்க எண்ணி சிவராமனே பேச ஆரம்பித்தார். “தங்கமே.. கொஞ்சம் தேநீர் குடிக்கலாமென்று நினைக்கிறேன். நான் போய் canteen – ல தேநீர் வாங்கி வருகிறேன். உனக்கும் ஏதேனும் குடிக்க வேண்டுமா?” என்று கேட்ட வண்ணம் அங்கிருந்த flask –ஐ எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்தார்.

அவரது குரலில் நிமிர்ந்த ஆதிரை, “ஆன்….என்ன தாத்தா சொன்னீங்க” என்றாள்.

அதற்கு புன்னகித்த சிவராமன், “ஒன்னுமில்லையம்மா.. பால் இல்லனா, தேநீர் குடிக்கிறியானு கேட்டேன்” என்றார்.

‘ஒரு flask –ஐ வச்சிட்டு வேறு வேறா வாங்க முடியும். தாத்தா இதுல கேள்வி வேறு கேட்கிறாரே’ என்று எண்ணி புன்னகித்த ஆதிரை , “அ.. அதுவா தாத்தா, நீங்க என்ன வாங்கிறிங்களோ அதுவே எனக்கும் தாத்தா. நானும் வரட்டுமா தாத்தா. ரெண்டு பேரும் canteen- லயே தேநீர் குடித்துவிட்டு வந்துவிடலாம். “ என்று அவருடன் செல்ல எத்தனித்தாள். ஆனால் ‘நோயாளிகள் யாரும் canteen போகக் கூடாது என்பது அந்த hospital விதிமுறை’ என்று ஆதிரைக்கு ஏற்கனவே தெரிந்த போதும் ,’ நன்றாகத்தானே இருக்கிறேன். இந்த கையில் இருக்கிற, நோயாளி அடையாள கயிற்றை சால்வையால் மறைத்துவிட்டால் யாருக்குத் தெரியப் போகிறது என்று எண்ணிக் கேட்டாள்.

“ம்ம்.. அதெல்லாம் வேண்டாம் தங்கமே. நீ இங்கேயே ஓய்வாக இரு. தூக்கம் வந்தால் தூங்கு. இவ்வளவு நாள் என் பேத்திக்கென்று நான் எதுவுமே செய்யல. இது போல வாய்ப்பு கிடைக்கும் போது என் ஆசைக்கு செய்றனே விடும்மா. அதனோட பக்கத்துல தானே canteen இருக்கிறதா அர்ஜுன் சொன்னான். நா இதோ உடனே போய்விட்டு வந்திடுறேன். உள்ள நீ பத்திரமா இரு. “ என்று சொல்லிவிட்டு வெளியில் கதவை மூடிவிட்டு மெதுவாக நடந்து சென்றார் சிவராமன்.

ஆதிரையின் சிந்தனைக்கு அந்த தனிமை மிகவும் தேவைப் பட்டது. அதனால் அவரை மேலும் தடுக்காமல், “போங்க தாத்தா.. உங்க இஷ்டம் “ என்று சிணுங்கிய வண்ணம் சொல்லிவிட்டுப் படுக்கையில் லேசாகச் சாய்ந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தாள். ஆனால் அவளது தனிமையையே வேறு ஒருவரும் எதிர் பார்த்திருந்தது போல சிவராமன் சென்ற சில நிமிடங்களிலே உள்ளே வந்து நின்றான் விஸ்வா.

அவசரமாக உள்ளே வந்த விஸ்வா, “ஆதி… நீ எப்படி இருக்க “ என்று கேட்ட வண்ணம் கதவை மூடிவிட்டு தாழ்பாலிட சென்று தயங்கிய கைகள் கதவைப் பூட்டாமலே மீண்டு உள்ளே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் விஸ்வா.

விஸ்வாவை எதிர்பாராமல் இருந்த ஆதிரை , ஒரு நொடி அதிசயித்தாலும் , சட்டெனச் சமாளித்துப் பேசலானாள். , “ஏ.. விஸ்வா.. நான் நல்லா இருக்கிறேன். நீ எப்படி இருக்க. அன்னிக்கு என்னால ஒழுங்கா பேச முடியல” என்றாள்

“ம்ம் .. நான் நல்லாருக்கேன். பெரிய டாக்டர் உனக்கு எல்லாம் normal ஆகிவிட்டதாகச் சொன்னார். Bp மட்டும் அடிக்கடி குறைய வாய்ப்பிருக்காம். நன்றாக சாப்பிட்டால் ஓரிரு மாதத்தில் எல்லாம் சரியாகிவிடுமாம்” என்று இயல்பாகப் பேசினான் விஸ்வா.

சிவராமன் தாத்தா விஸ்வாவை பற்றிச் சொன்னது நினைவிலிருந்தாலும் 6 வருடமாக தன் MBBS , MS college –லயும் உடன் படித்து எல்லா கஷ்டங்களிலும் ஆருதலாக இருந்த விஸ்வாவை ஆதிரையால் முழுதும் ஒதுக்கிட முடியவில்லை. அதனால் அவனிடம் இயல்பாகவே பேசினாள் ஆதிரை. “ஆமாம் நானும் டாக்டர்ட்ட கேட்டேன். ஏதோ de-hydrate ஆகி , தண்ணீரும் உணவும் இல்லாமல் குறைந்தது 5 நாட்களாக இருந்ததால் கோமா நிலைக்கு நான் வந்ததாகச் சொன்னார். அதனால ஒழுங்கா சாப்பிட்டு ஓய்வெடுத்தாலே எல்லாம் சரியாகிவிடுமுனு சொன்னார். சரி என்னைப் பார்க்க அன்னிக்கு வந்த அப்பறம் ஆளே இல்ல. என்னாலும் இந்த அறையைவிட்டு வெளியில் வர முடியல” என்று அவனுடன் சேர்ந்து தான் டாக்டரிடம் பேசியதையும் மற்றதையும் இயல்பாகச் சொன்னாள் ஆதிரை.



“ம்ம்…. நான் எங்க இங்கு வருவது. உன்னிடம் நெருங்கவிடாமல் , நாயைப் போல அறையிலே இருந்தானே அந்த அர்ஜுன்” என்று முகத்தில் லேசான குரூரம் தெரிய சொன்னான் விஸ்வா.

அவனையே பார்த்திருந்த ஆதிரைக்கு , விஸ்வாவின் இந்த முகம் பரிட்சியம் இல்லாததால், “என்னாச்சு விஸ்வா. என்னமோ போல இருக்க” என்று ஒரு மாதிரி குரலில் அவனை நோக்கிக் கேட்டாள் ஆதிரை.

ஆதிரை தன் முகத்தைக் கவனிக்கிறாள் என்பதை உணர்ந்த விஸ்வா, “அ… அது ஒன்றுமில்லை ஆதி… உன்னிடம் ஏதேனும் சொன்னானா அந்த அர்ஜுன்” என்று விட்டேற்றியாக கேட்டான் விஸ்வா.

விஸ்வாவின் மாற்றம் அறிந்த ஆதிரை அதிகம் அவனிடம் பேசாமல் அவனை வெளியில் அனுப்பிவிட எண்ணினாள். என்னதான் அர்ஜுனுக்கும் அவளுக்கும் மனபேதம் இருந்த போதும் அர்ஜுனை விஸ்வா மரியாதையில்லாமல் பேசுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடாக ஆதிரையின் மலர்ந்த முகம் கடுமையாக மாறியது. “என்ன விஸ்வா.. அர்ஜுன் என்னிடம் என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்” என்று கேட்டுவிட்டு அவனை ஊடுருவும் பார்வை பார்த்தாள்.

“ம்ம்.. சொல்லிருக்க மாட்டான்.எப்படிச் சொல்வான் அவன். எல்லாம் நான் சொன்ன பிறகும் என்னைத்தானே விரட்டினான். உன்னிடம் என்னை நெருங்க விடாமல் அல்லவா செய்தான். பிறகு உன்னிடம் எப்படிச் சொல்வான். “ என்று கைகளைப் பிசைந்த வண்ணம் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் விஸ்வா.

அவனது கடுமை ஆதிரைக்கு புரியாமலில்லை. இருந்த போதும் இயல்பாக பேசினாள் ஆதிரை. “என்னனு நீயே சொல்லேன். அவர் தான் சொல்ல வேண்டும் என்று என்ன இருக்கிறது” என்று சொல்லிவிட்டு விஸ்வாவின் பதிலுக்காகக் காத்திருந்தான். அர்ஜுனை அவர் என்று ஆதிரை சொல்லியது ஏனோ விஸ்வாவிற்கு பிடிக்கவில்லை.

“ஆன்… சொல்லித்தானே ஆக வேண்டும். வெளியே சென்ற கிழவன் வருவதற்குள் சொன்னாள்தான் சரியாக இருக்கும். Canteen –ல நேரமாக்க சொல்லிவிட்டுத்தான் வந்தேன். யாரந்த கிழம். ஒற்றைக்கையால் கட்டிலைத் தூக்குகிறது அந்த கிழம். அது இருக்கும் போது நான் வர முடியாதே. உனக்குக் காவல் போல அந்த அர்ஜூன் அந்த கிழத்தை இங்கு இருக்க வைத்துவிட்டு போயிருக்கே. உன் அண்ணணாக இருந்தால் நான் எளிதாக வந்து சென்றிருக்க முடியுமே! இடையூறாக இந்த கிழத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறானே அந்த அர்ஜூன். Canteen –ல் ஓரளவு காக்க வைக்க முடியுமே தவிர அதிக நேரம் காக்க வைக்க முடியாதே. நான் விரைவிலுன்னிடம் சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும்” என்று தன் தாடையைத் தேய்த்த வண்ணம் வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தான் விஸ்வா.

அவனையே பார்த்திருந்த ஆதிரைக்கு அவள் நண்பனாக இருந்த விஸ்வா இவனில்லை. ‘இவனுள் என்னவொரு மாற்றம். அமைதியாகவும் , அன்பாகவும் , பெரியவர்களிடம் மரியாதையாகவும் இருப்பான். இப்போது ஏன் இவன் இவ்வளவு விகாரமாக நடந்து கொள்கிறான்’ என்று எண்ணி இருந்த போதும் ஆதிரைக்கு லேசாக விஸ்வாவிடம் பயம் ஏற்பட ஆரம்பித்தது. எப்படியாவது நல்ல முறையில் இவனிடம் பேசி வெளியில் அனுப்பிட வேண்டும் என்று மனதுள் எண்ணிய வண்ணம் அவனுடன் பேசினாள்.

“ஓ… அவர் என் தாத்தா.. அது சரி விஸ்வா. யாருக்கும் தெரியாமல் நீ என்னிடம் அப்படி என்ன தான் பேச வேண்டும். அதனோடு நீ எப்படி இந்த hospital –ல. நீ சிதம்பரத்தில்தானே இருந்திருக்க வேண்டும். சென்னையில் எப்படி” என்று பேச்சை மாற்ற முயன்றாள் ஆதிரை.

“ஓ தாத்தாவா… உன்னிடம் நானாகச் சொன்னால்தான் அது சரியாக இருக்கும் மற்றவர் முன்னிலையில் என்னால் சொல்ல முடியாதே!” என்று அசடு வழிந்தான் விஸ்வா.

இப்படிப்பட்ட விதமாக விஸ்வாவை பார்த்திராத ஆதிரை, ஒரு நொடி வேற்றுமையாக உணர்ந்தாள். இவனை எப்படி வெளியில் அனுப்புவது என்று யோசித்த வண்ணம் அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். “ஓ… இங்க எப்படிவந்தனு சொல்லலையே” என்று வேறு பேச ஊக்கினாள்.

அவளது மன நிலை அறியாமல் , அந்த அறையிலிருந்த மற்றொரு கட்டிலில் லாவகமாக அமர்ந்து கொண்டு, “ இங்க 6 மாதம் பயிற்சி ஆதி.. மூன்றுமாதம் முடிஞ்சிடுச்சு. இன்னும் மூன்று மாதம்தான். அதன்பின் என் அப்பா எனக்கு எங்க ஊர் திருச்சிலயே ஒரு மருத்துவமனை கட்டி தருவதாக சொல்லி இருக்கிறார். “ என்று பெருமையாகச் சொன்னான் விஸ்வா.

“அப்படியா. சந்தோஷம் விஸ்வா. லாவண்யா எப்படி இருக்கா? அப்பறம் நம்ம மத்த friends – லாம் எப்படி இருக்காங்க” என்று பொதுவாகப் பேசி நேரத்தைக் கடத்த முயன்றாள் ஆதிரை. அதற்குள் தாத்தா வந்துவிட மாட்டாரா என்று எண்ணினாள்.

“எல்லாரும் நல்ல இருக்காங்க ஆதி. நானுமே அவர்களைப் பார்த்து 3 மாதம் ஆச்சு. இந்த training முடிந்ததும் உன்ன பார்க்க வரலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது” என்று கவலையாகச் சொன்னான் விஸ்வா.

“ஏன். என்ன ஆச்சு. நீ என்னைப் பார்க்க வரும் முன்னாடியே நாம்தான் பார்த்துக்கொண்டோமே. சந்தோஷம் தானே” என்று விகற்பம் இல்லாமல் சொன்னாள் ஆதிரை.

“என்ன ஆச்சா..” என்று ஒரு நொடி கத்தியவன் ,உடனே சமாளித்து, “உனக்கும் அர்ஜுனுக்கும் எப்படி திருமணம் ஆனது.” என்று நேரிடையாக சொல்லவந்த செய்திக்கு வந்தான் விஸ்வா.

விஸ்வாவின் இந்த திடீர் கத்தலில் ஒரு நொடி வியர்த்த போதும் , நிமிர்ந்து அமர்ந்திருந்த ஆதிரை, அந்த அறையிலிருந்த மேஜையின் அருகே இயல்பாக நடப்பது போலச் சென்று அங்கிருந்த பேனாவை எடுத்துக் கொண்டாள். ‘ஒருவேளை அவன் ஏதேனும் வம்பு செய்தால் அதனைக் கொண்டு எங்கேனும் அவனைக் குத்திவிட்டு ஓடிவிட எண்ணித்தான் எடுத்தாள். ஆதிரை.
இருந்த போதும் , தன் மிரட்சியை மறைத்திட எண்ணி ,”அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் விஸ்வா… அதனோடு நீ ஏன் இவ்வளவு நிலை தடுமாறுகிறாய். நான் யாரைத் திருமணம் செய்து கொண்டாள் என்ன. ஒரு நண்பனாக உனக்கு மகிழ்ச்சிதானே!” என்று அவனது மனதின் மறுமுகத்தை ஏற்கனவே படித்தவளாக விட்டேற்றியாகப் பேசினாள் ஆதிரை..

“என்ன ஆதி. சொல்ற. நீ விரும்பிதான் அர்ஜுனைத் திருமணம் செய்து கொண்டாயா?” என்று எதிலோ தோற்றது போலக் கேட்டான் விஸ்வா.

“அப்படிதான் வைத்துக் கொள்ளேன்.” என்று சொன்னாள் ஆதிரை. ‘இல்லையென்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் அவனை அவள் விரும்பினால்தானே இதில் இல்லையென்று சொல்ல வாய்ப்பே இல்லையே’ என்று எண்ணினாள்.

உடனே அவள் அருகில் நெருங்கி வந்த விஸ்வா, இறுக்கமாக அவளது இரு முழங்கைகளுக்கு மேலான கையினை பற்றி ,” அப்போது நீ என்னை விரும்பவில்லையா?” என்று அவனது மனதின் தீயைப் பற்ற வைத்தான் விஸ்வா.

“ஏய்.. விஸ்வா என்ன இது… என் கையை விடு. நான் வேறொருவரின் மனைவி என்பதை மறக்காதே. இப்படி ஒரு நாளும் நீ என்னைத் தொட்டதில்லையே. நீ என்னுடைய நண்பன். அதை மீறி நான் ஒரு நாளும் உன்னைப் பார்த்ததில்லை. பேசியதில்லை. “ என்று அவனது கையிலிருந்து விலகிட முயன்றாள்.

இறுக்கமாகப் பற்றியிருந்த விஸ்வாவின் கை ஆதிரையின் கை இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி அவள் கையில் பற்றியிருந்த பேனா கீழே விழுந்தது. விஸ்வாவின் , கண்களில் தெரிந்த வெறி ஏனோ ஆதிரையின் உள்ளத்தில் பயத்தினால் உண்டான குளிர் பரப்பியது. ‘இவனிடமிருந்து விலகி இருக்கச் சொல்லி தாத்தாவும் ஏன் அர்ஜுனும் கூட அதையே விரும்பினான். அதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது. என் மீது எவ்வளவு பாசமாக இருப்பான். அதன் காரணம் நட்பல்ல என்பது இப்போதல்லவா தெரிகிறது. இவனிடமிருந்து எந்த பாதிப்புமில்லாமல் தப்ப வேண்டுமே. இப்போதே தாத்தா வந்தால் நன்றாய் இருக்குமே. அவரைதான் இவன் தாமதமாக்க ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.’ என்று பலதும் எண்ணி அவனிடமிருந்து விடுபட முயன்றாள் ஆதிரை.

இவ்வாறு ஆதிரை பலதும் யோசித்துக் கொண்டிருக்கும் போது விஸ்வா ஏதோ ஒரு துடிப்பைப் பற்றுவது போல அவன் மனதுள் தோன்றிய உணர்வுகளை வெளிப்படுத்தினான். “ பெரிய மனைவி. மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டால் மட்டும் மனைவியா?.” என்று விட்டேற்றியாகப் பேசிய விஸ்வா, “ஆனால் நீ எந்த ஆணிடமும் இயல்பாகப் பேசியதில்லையே. அர்ஜுனிடம் மட்டும் எப்படி. College –ல் கூட என்னை விட்டால் வேறு எந்த ஆணிடமும் பேசியேதுமில்லையே. என்னிடம் மட்டும்தானே விஸ்வா விஸ்வா என்று எப்போதும் பேசுவாய். ஆதி.. நீ எனக்கு வேணும். நீ யாருக்கும் பயப்படாதே. இந்த கயிற்றைக் கழற்றி எரிந்துவிட்டு என்னுடன் இப்போதே வந்துவிடு. நாம் எங்கேனும் யாருக்கும் தெரியாமல் போய்விடலாம். நான் படிப்பை முடித்துவிட்டு வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்ள கேட்கலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் நீ அதற்குள் அர்ஜுனைத் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறாய். உன்னையே நம்பி இருந்த என்னை வதைக்காதே” என்று அவளைப் பிடித்திருந்த பிடியை இன்னும் அதிகரித்த வண்ணம் கொட்டி தீர்த்தான் விஸ்வா.

“விஸ்வா.. வலிக்கிறது. என் கையை முதலில் விடு. நான் எல்லோரிடம் பழகுவதுப் போலத்தான் உன்னிடமும் பழகினேன். நீ அடிக்கடி வந்து பேசும் போது எடுத்தெறிந்தா பேச முடியும் , நன்றாகப் படிக்கிற பையன். சந்தேகமென்று ஆண்களில் எந்தவித தயக்கமின்றி நீ என்னிடம் கேட்க்கும் போது எப்படிப் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டா போக முடியும். அதனால் உன்னிடம் இயல்பாகப் பேசினேன். அதனோடு என்னிடம் நீ அக்கறையான ஒரு நல்ல நண்பனாகப் பல சமயங்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி புரிந்தாய். அதனால் உன்னை எந்தவித பேதமும் தெரியாமல் என் அண்ணாவைப் போல, அண்ணியைப் போல , எண்ணினேன்.. இருந்த போதும் நான் ஒரு நாளும் உன்னை விரும்பியதாகச் சொல்லவில்லையே. அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஒரு நாளும் தோன்றியதும் கூட இல்லையே” என்று முடிந்தவரை அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள் ஆதிரை.

“என்னடி சொல்ற. என்னைப் பார்த்தால் மாங்க மடையன் போலத் தெரிகிறதா.. உன்னுடைய அந்த கன்னக் குழி புன்னகைக்காகவே நான் எப்போதும் வந்து தெரிந்த கேள்விகளுக்குக் கூட உன்னிடம் பாடத்தில் சந்தேகமென்று வந்து கேட்டு நின்றேன். எனக்குத் தெரியும் என்று அறிந்தும் நீ எனக்கு ஆசையாகச் சொல்லிக் கொடுக்கிறாய் என்றுதானே நான் எண்ணி இருந்தேன். அந்த அர்ஜுன் உன்னை அப்படி மயக்கிவிட்டானா? எப்படி மயக்கினான். நானும் அது போலவே செய்கிறேன் சொல். உன்னை இப்போதே… என்ன… செய்கிறேன் பார். அதன் பின் என்னுடன் எப்படி வர மறுப்பாய்” என்று விகாரமாக பேசிய வண்ணம் அவளை இழுத்து அனைத்திட முயன்றான் விஸ்வா.

‘இனி இவனிடம் சாதாரணம் போலப் பேசுவது பயனில்லை. Hospital என்றும் பாராமல் எவ்வளவு தைரியமாக எல்லை மீற முயல்கிறான். இந்த hospital –ல் யாருடைய ஆதரவோ இல்லாமல் இவன் இவ்வாறு நடந்துக் கொள்ள வாய்ப்பில்லை.’ என்பதை உணர்ந்த ஆதிரை, “விஸ்வா… என்னை விடு… நீ எல்லை மீறுகிறாய். என்னை விடு” என்று அவனிடமிருந்து விலக முயன்று தோற்று, இறுதியாக அவனுடைய இடது காலை தன் வலது காலால் ஓங்கி மிதித்துவிட்டு கதவை நோக்கி ஓடினாள்.

“ஸ்… ஆ…” என்று வலியால் கத்திய போதும் , ஓரெட்டில் ஓடிச் சென்று அவள் கையை பிடித்து இழுத்தான் விஸ்வா. ஏற்கனவே உடல் நிலை குறைவால் பலவீனப்பட்டிருந்த ஆதிரை அவனது பிடியில் நழுவி கீழே விழுந்தாள்.

அதனை வசதியாக எண்ணிய விஸ்வா அவளை வளைத்துப்பிடித்து தன் கையால் அவள் மேலும் ஏதும் கத்திவிடாமல் அவள் வாயினை அடைத்துவிட்டு மற்றொரு கையால் அவளது இரு கைகளையும் இறுக்கமாக ஓடிவிடாமல் பிடித்த வண்ண “அந்த கிழம் வசதியாக ஜன்னலையெல்லாம் மூடி விட்டுச் சென்றுவிட்டது. கதவையும் தாளிட்டுவிட்டாள் எல்லாம் வசதியாக இருக்கும்” என்று வில்லத்தனமாகச் சிரித்தான்

‘சே எப்படிப்பட்ட எண்ணம் இவனுக்கு. இவனையா நண்பன் என்று நினைத்தோம். ‘ என்று தன்னையே நோந்து கொண்டாள். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். அவனிடமிருந்து விலகி ஓடமுடியாமல் பலவீனப்பட்டிருந்த தன் உடல் நிலையை எண்ணியும் தன் பெண்மையைக் காத்திட துடிதுடித்துக் கொண்டிருந்த அங்கமெல்லாம் எரிந்து பயத்தில் கண்ணிலே நீர் ஓட ஆரம்பித்தது.


அவ்வாறாக அவள் நிலை இருக்க , எல்லாவற்றிலும் வென்றுவிட்டது போல உணர்ந்த விஸ்வா, விசில் அடித்த வண்ணம், “ஆதி… கொஞ்ச நேரம்தான். கவலைப்படாதே. கதவை தாளிட்டுவிடலாம். ஒரு வேளை அந்த கிழவன் வந்தாலும் எந்தவித இடையூறுமிருக்காது. என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது. நானும் தான் பார்த்துக் கொண்டு தானே இருந்தான். கணவன் மனைவியாக நீங்க இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லையென்பது எனக்கும் தெரியும். அதனால் இதன் பின் நீ என்னுடன் வாழ வந்துவிடுவாய் என்பது மறுக்க முடியாத நிச்சயம் “ என்று கதவின் தாளில் கையை வைத்தான் விஸ்வா.


இதை கேட்டதும் ஆதிரையின் உதிரமெல்லாம் கொதித்தது. ‘இம்முக்கும் இப்படியே அழுதுக் கொண்டிருந்த எதுவும் சரி வராது. என்ன செய்யலாம்! எது கையில் கிடைத்தாலும் அவன் முகத்தில் அடித்துவிட்டு ஓடிவிட எண்ணினாள்.’ என்று அவளது கண்ணை அந்த அறை முழுதும் நோட்டமிட்டாள் ஆதிரை.

அப்போது அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு மூச்சு வாங்க வந்து நின்றான் அர்ஜுன். அவனை எதிர்பாராமல் பார்த்த விஸ்வாவின் சக்தி குறைந்தாற் போல ஆதிரையை பிடித்திருந்த பிடியை லேசாக குறைத்தான். அது போல ஆதிரைக்கும், அவ்வளவு நேரம் எங்கோ போயிருந்த சக்தியெல்லாம் மீண்டவளாக, அர்ஜூனைக் கண்ட நொடியில் விஸ்வாவை இழுத்துத் தள்ளிவிட்டு ஓடிச் சென்று அர்ஜுனின் மார்பிலே சாய்ந்து கொண்டு , “அ… அர்ஜுன்.. இவ… இவன்…” என்று குழந்தை போல அழுக ஆரம்பித்தாள் ஆதிரை. அவளுக்கு ஆதரவாக அவளது முதுகை ஒரு கையால் வருடிய போதும் விஸ்வா பார்த்திருந்த அர்ஜுனின் பார்வை விலகவில்லை. அவன் மறுகையின் கை முஷ்டி இறுக்கம் தளரவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top