தூரம் போகாதே என் மழை மேகமே!! - 51

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer

ஊர் மக்களிடம் எல்லாவற்றையும் சிவராமன் சொல்லி முடித்தார்.

சில நாட்களுக்கு பிறகு...

“sister . அவளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?” என்று ஒரு ஆணின் குரல் யாரிடமோ கேட்டது. அது யாரென்று யோசிக்குமுன்னே ICU –ல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும் கருவியின் பீப் பீப் என்ற சப்தம் மிக அருகில் கேட்டது.

“இல்ல sir.. டாக்டர் சொன்னபடி இன்றோ அல்லது நாளையோ சுய நினைவுக்கு வரக்கூடும் sir. நீங்களும்தானே உடன் இருந்தீர்கள். என்னிடம் திரும்பத் திரும்ப கேட்டால் நான் மட்டும் வேறா சொல்லப் போகிறேன். நினைவு வந்தால் உங்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பப்படும். இப்போது என் வேலையைச் செய்ய விடுங்க.” என்று சலித்துக் கொண்டாள் ஒரு பெண்.

“ம்ம்… சரி… “ என்றவன் அந்த அறையை விட்டுச் சென்றிருக்க வேண்டும் அதன் பிறகு பேச்சின் அரவம் நின்று யாரோ அறையை விட்டுச் செல்வதற்கான அறிகுறியாகக் கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது. ‘அந்த குரல்… அந்த குரல்’ என்று அறியத் துடித்த ஆதிரையின் மனம் போராடிக் கண்டுபிடித்தது. அவன் அர்ஜூன். அவள் மனம் கவர்ந்து கொன்றவன். கண்கள் மூடிய நிலையிலும் உணர்ந்தாள் ஆதிரை.

ஏதேதோ எண்ணம் தோன்றி ஆதிரையின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பின் கனத்த தன் இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரிப்பது போலத் திறந்திட முயன்று கொண்டிருந்தாள் ஆதிரை.

அதனைக் கவனித்துக் கொண்டிருந்ததாலோ என்னமோ அங்கிருந்த செவிலி பெண் ஆதிரையின் அருகில் வந்து பார்த்துவிட்டு பின் யாருக்கோ phone செய்தாள்.

“டாக்டர்… நான் தான் ஆர்த்தி.. அந்த ICU ல இருக்கிற பெண் கண்களை விழிக்கும் நிலையில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது . நீங்க உடனே வந்தால் அவளிடம் பேசிவிடலாம். அந்த அர்ஜூன் சார் என்னவென்றே தெரியல இன்று அடிக்கடி இங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் இப்போதுதான் இந்த அறையைவிட்டுச் சென்றார். அவர் வர மீண்டும் வர இன்னும் ஒரு 30 நிமிடமாவது ஆகும். அதற்குள் ஓசைப்படாமல் வந்து பார்த்துவிட்டு போய்விடுங்கள் “ என்றாள் அந்த பெண்.

‘இது என்ன இரகசியம் போல யாரிடமோ அர்ஜுனுக்குத் தெரியாத வண்ணம் இந்த பெண் பேசுகிறாள். ‘ என்று யோசித்த வண்ணம் அப்போதுதான் கண்களைத் திறந்த ஆதிரை அந்த பெண்ணை நோக்கி நெற்றிப் பொட்டில் முடிச்சு விழப் பார்த்தாள்.

“ஹப்பா.. கண் விழிச்சிட்டீங்களா … ஹப்பப்பா எத்தனை நாட்கள் இப்படியே இருந்தீங்க. நம்பிக்கையற்ற நிலையிலிருந்து இவ்வளவுக்கு தேறி இருக்கிறீர்கள்” என்று ஆதிரையின் அருகில் வந்து பேசினாள் அந்த பெண் ஆர்த்தி.

அவளையே கேள்வியாகப் பார்த்திருந்த ஆதிரை, பல நாட்கள் குரல் பயன்படுத்தப்படாததால் குரல் மெலிந்து பேசச் சிரமப்பட்டு, “ எ.. எத்தனை நாட்கள்.. நா.. நான் இப்படி இருக்கிறேன்” என்று கேட்டாள் ஆதிரை.

“ம்ம். அது … “ என்று யோசித்த அந்த பெண் வேகமாகச் சென்று ஆதிரையின் கட்டிலில் மாட்டியிருந்த அட்டையின் குறிப்பைப் பார்த்துவிட்டு, “ இன்றோடு 7 வாரங்கள்” என்றாள் ஆர்த்தி.

“ஏழா?” என்ற ஆச்சரியமற்ற ஆதிரையால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ‘இத்தனை வாரங்கள் என்ன நடந்தது… ‘ என்று நினைவுக்குக் கொணர முயன்றாள் ஆதிரை. “ அ.. அந்த தீவு….. அண்ணா… அண்ணி…. அண்ணி குழந்தை.. அர்ஜூன்.. ராஜா” என்று மாற்றி மாற்றி யோசித்த வண்ணம் அவர்களுக்கு ஏதேனும் ஆகியிருக்க கூடுமோ என்ற அச்சத்துடன் பதற்றப்பட்டாள் ஆதிரை.

“ஏழுதான். “ என்ற ஆர்த்தி , ஆதிரையின் பதற்றத்தில் , மீண்டும் bpயும் ECG யும் தந்தியடிப்பதை பார்த்துவிட்டு, “ மேடம் நீங்க பதற்றப்பட வேண்டாம் நீங்க சொன்ன எல்லாரும் நலமாக இருக்கிறார்கள் “ என்று அப்போதுக்கு ஆதிரை மீண்டும் சுயநினைவை இழக்கக் கூடாதென்பதுதான் முக்கியம் என்பது போலப் பேசினாள் ஆர்த்தி.

இவ்வாறு ஆர்த்தியும் ஆதிரையும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவசரமாக ஓடி வந்தான் விஸ்வா.

“ஆதி… கண் விழிச்சிட்டியா? நான் எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?” என்றபடி அந்த ஒற்றை படுக்கையுடன் கூடிய ICU அறையினுள் நுழைந்த வண்ணமாக வந்தவன் விஸ்வா.

“வி… விஸ்வா… நீ… இங்க… நான் எப்படி..” என்று படுத்திருந்த போது குழப்பமுடன் கேட்டாள் ஆதிரை.

“எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. எல்லாம் சொல்கிறேன்.. ஆர்த்தி… நீ இப்போது போய்விட்டு வா. நான் பார்த்து கொள்கிறேன்” என்று ஆர்த்தியைக் கதவு வரைச் சென்று வேறேதோ சொல்லி வெளியே அனுப்பினான் விஸ்வா.

குழப்பமாகப் பார்த்திருந்த போதும் வேறேதும் பேசாமல் அவள் படுத்திருந்த அறையை நோட்டமிட்டாள் ஆதிரை. Bp 50/80 என்ற அளவில் இயல்பான நிலையை விடக் குறைவாக இருந்தது. கையிலும் முதுகிலும் கழுத்துக்குக் கீழுமாக ECG க்கு என்று சிலவற்றை ஒட்டி வைத்திருந்தனர். மற்றொரு கையில் திரவ உணவு போல குளுக்கோஸ் மற்றும் மருந்து பொருட்கள் உடலில் சேர நரம்பில் ஊசி ஏற்றப்பட்டிருந்தது. இதனை ஆராய்ந்த ஆதிரை சில நிமிடங்களில் அமைதியானாள். ‘எதனாலோ நான் கோமா நிலைக்குச் சென்றிருக்க வேண்டும். பின் இப்போதுதான் நினைவு திரும்பி இருக்கிறேன். எதனால் இந்த நிலை? ‘ என்று எண்ணியவள் விஸ்வாவின் குரலில் சிறிது நிதானமானாள் ஆதிரை.

“ஆதி… என்னை நீ நிறையவே பயமுறுத்திவிட்டாய். எங்கே நான் உன்னை இழந்துவிடுவேனோ என்று தவித்துப் போனேன்” என்றான் ஆதிரையின் கல்லூரி தோழனான விஸ்வா.

அவன் பேசுவதை கேட்டபோதும், தான் அணிந்திருந்த hospital patient உடை அவளுக்கு அவள் நண்பன் முன்னிலையில் தேவையில்லாத அசௌகரியத்தைத் தர, இடுப்புக் கீழே போயிருந்த போர்வையை எட்டி மேல் எடுத்துவிட முயன்றாள் ஆதிரை. கையிலிருந்த ஊசியும் இதர கருவிகளும் அவளால் நகர முடியாமல் இழுத்துப் பிடித்தது.

அவள் முயற்சி புரிந்துவிட, “ஏய் என்னிடம் சொன்னால் நான் செய்ய மாட்டேனா?” என்று சொல்லிய வண்ணம் அவள் அருகில் வந்து அந்த போர்வையை அவள் கழுத்து வரை இழுத்துவிட்டான் விஸ்வா.

“தா..ங்க்ஸ்” என்று வராத குரலில் சொன்னாள் ஆதிரை. முன்பைவிட கொஞ்சம் தெளிந்தார் போல அவள் பார்வை இருந்தது.

“ஆதி… உன்னிடம் தனியே ஒன்று சொல்ல வேண்டும் அதனால்தான் ஆர்த்தியையும் வெளியில் அனுப்பினேன்.” என்று சிறிது நெளிந்த வண்ணம் கூறினான் விஸ்வா.

‘என்னிடம் யாருமறியாமல் பேச இவனுக்கு என்ன இருக்கிறது’ என்று எண்ணிய வண்ணம் விசித்திரமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கைத்தட்டலுடன் உள்ளே வந்தான் அர்ஜூன்.

ஒரு திடுக்கிடலுடன் ஆதிரையிடமிருந்து விலகி நின்றான் விஸ்வா.

“ம்ம்… இப்படிதான் ஒரு நண்பன் இருக்க வேண்டும். எங்கே அந்த வேலையற்ற sister. ? என்னை இந்த அறையை விட்டு விரட்டி அடித்தது இப்படி உனக்கும் இவளுக்குத் தனிமை ஏற்படுத்திக் கொடுக்கதானா” என்று கடுமையாகப் பேசியவன் அவளது அர்ஜூனே.

“அர்ஜூன். பார்த்து பேசுங்க. பேசுவதெல்லாம் சரியென்று பேச வேண்டாம்” என்று அர்ஜுனுக்கு நிகரான அதே கடுமையான குரலில் பேசினான் விஸ்வா. ஒன்றும் புரியாமல் கட்டிலின் இருபுறமும் நின்றிருந்த இருவரையும் மாறி மாறி பார்த்தாள் ஆதிரை.

“ஓ..ஹோ! பார்த்துவிட்டு தானே வந்தேன். ICU கதவு வரை நீ வந்து அந்த செவிலி பெண்ணை வெளியில் அனுப்பி கதவை அடைத்ததை” என்று நக்கலாகப் பேசிய வண்ணம், உதாசினமாக ஆதிரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் விஸ்வாவை பார்த்தான் அர்ஜூன்.

முகம் கறுத்த போதும் ,அர்ஜுனுக்கு பதில் கொடுக்கும் எண்ணமாக, “எதுவும் தவறாக எண்ண வேண்டாம் , ஆதிரையின் உடல் நலத்தில் எனக்கும் அக்கறை இருக்கிறது. “ என்றான் வெற்று குரலில்.

“அப்படியா… சரி போகட்டும். உன் அக்கறையெல்லாம் இனி அவளுக்குத் தேவை இருக்காது. என்னால் அவளைப் பார்த்துக் கொள்ள முடியும். “ என்றான் அர்ஜூன்.

“அர்ஜூன். அவள் என்னுடைய friend –ம் கூட. அதை மறக்க வேண்டாம்” என்றான் விஸ்வா.

“ஓஹோ… எல்லா friend -ம் தனிமையில் பேசத்தான் விரும்புவார்களோ.” என்று தன்மையாக ஒலித்த அர்ஜுனின் குரல், திடீரென்று பெருத்து,” யாரைக் கேட்டு இந்த அறைக்கு நீ வந்தாய். நீ அவளது friend ஆக இருக்கலாம். ஆனால் இனி நீ அவளுக்கு அவசியமில்லை. உன்னைத்தான் இந்த அறைக்குள் விடக்கூடாதென்று உன் தலைமை டாக்டரிடம் சொல்லியிருந்தேனே! உன் டாக்டருக்குத் தெரியாமல் வந்தாயா. இல்லை உன் டாக்டரும் இந்த nurse போல ஏமாற்று செய்பவரா? ” என்று மேலும் கடுமை மறையாமல் சபதமிட்டுக் கத்தினான் அர்ஜூன்.

அவனது இந்த தோற்றம் ஆதிரைக்குப் புரியாமலும், ஏன் அர்ஜுனுக்கு விஸ்வாவின் மீது இவ்வளவு கோபம். என்ன அர்த்தத்தில் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் திகைத்த வண்ணம், “அ… அர்ஜூன்… அ… அவன்… என்… college friend . யாரென்று தெரிந்துதான்” என்று ஆதிரை பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ஜூனின் பார்வை ஆதிரை மீதும் படிந்தது. அந்த பார்வையில் அவள் குரல் நின்றது. இனம் புரியாத பயம் அவள் உடலில் பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அதன் பின் பேச முடியாமல் அமைதியாக அவர்கள் பேசுவதையே தலை தாழ்த்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அர்ஜூன்.. அவளைப் பார்த்துக் கொள்ள கூடிய உரிமை எனக்கும் இருக்கிறது. அவள் என்னுடைய நெருங்கிய தோழி” என்றான் விஸ்வா.

“உரிமையா.. என்னை விட அவளிடம் உனக்கு அதிக உரிமையோ?” என்று நக்கலாகச் சொன்னான் அர்ஜூன்.

அவன் குரலில் நிமிர்ந்த ஆதிரையை , ஒரு நொடி கண் மூடி நிமிர்ந்து பார்த்தான் விஸ்வா. பின் அவள் கழுத்தைப் பார்த்து ,” ஆதி… நான் வருகிறேன். உன் உடல் நிலையைப் பார்த்துக் கொள்” என்று விட்டு அந்த அறையைவிட்டு நகர்ந்தான் விஸ்வா.

“வி… விஸ்வா” என்று ஆதிரையின் குரல் காற்றிலே ஒலித்தது போல விஸ்வா அந்த அறையை விட்டுச் சென்றே விட்டிருந்தான்.

‘எதற்காக இந்த உரிமை சண்டை. சொல்ல போனால் அர்ஜுனை விட விஸ்வாவைதானே எனக்கு அதிக நாட்கள் தெரியும். அதிலும் இவர்கள் இருவருக்கும் என் மீது அப்படி என்ன அக்கறை. விஸ்வா போகும் போது என்னை ஏன் அந்த வலி கொண்ட விழிகளில் பார்த்தான். குறிப்பாக என் கழுத்தை. என் கழுத்தில் ஏதும் காயமா என்ன?’ என்று அவசரமாக தன் கழுத்தைத் தடவிப்பார்த்தாள்.

திடுக்கிட்டு , அங்கு நின்றிருந்த அர்ஜுனை ஏறிட்டாள், “அ.. அர்ஜூன்.. இ.. இது “ என்று தன் கையில் அகப்பட்ட மஞ்சள் கயிற்றை பற்றிய வண்ணம் அவளையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்த அர்ஜுனிடம் கேட்டுவிடத் துடித்தாள் ஆதிரை.
 

Saroja

Well-Known Member
எங்க அந்த சிவராமன் சொன்ன கதை
ஆதிரைக்கு கல்யாணம் முடிந்து விட்டதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top