தீத்திரள் ஆரமே -11

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:எல்லாத்திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.


ஆரா கேளிக்கை விடுதிக்கு கிளம்பும் போது, நீல நிற ஜீன்ஸ் பேண்டும், சிவப்பு நிற குர்த்தியும் அணிந்து தலைமுடியை கேச் கிளிப்பில் அடக்கி இருந்தாள்.

அவளைப் பார்த்த திலகா "இது என்னடி கருமம்!! இப்படி கிளம்பிருக்க" என்றார் கோவமாக.

"என்னம்மா இந்த டிரஸ் நல்லா தானே இருக்கு, இதுக்கு என்ன குறைச்சல்" என்றாள்.

"நல்லா இருக்கு தான், ஆனா இதை போட்டுட்டு சினிமாவுக்கெல்லாம் போகக்கூடாது" என்றார் கண்டிப்புடன்.

"இதுல என்னமா இருக்கு..?என்று சிணுங்கியவள், "அப்பா, அப்பா.. எங்க போனார் இவர்?"என்று கத்தினாள்.

"அவரை எதுக்கு இப்போ கூப்பிடற?, வயசு பிள்ளையா ஒழுங்கா லட்சணமா நடந்துக்கோ" என்றார் திலகா.

"அம்மா, அதுக்கு தானே தினமும் ரெண்டு முழ பூவை தலையில வெச்சுட்டு, குடும்ப குத்துவிளக்கா குனிஞ்ச தலை நிமிராம நல்லபிள்ளையா கம்பெனிக்கு போய்ட்டு வரேன். எனக்காக ஒருநாள் இப்படி டிரஸ் பண்றது தப்பா.. நான் என்ன அரைகுறையாவா டிரஸ் போட்டுட்டு சுத்தரேன், ப்ளீஸ்மா இதுக்குனு தனியா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிச்சுடாத" என்று திலகாவின் கன்னதில் இதழ் பதித்து விட்டு,"நாங்க வரோம்" என்று சாயின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

"போடி போ எப்படின்னாலும் நைட் வீட்டுக்கு வந்துதானே ஆகணும், அப்போ பேசிக்கறேன்" என்ற திலகாவைப் பார்த்து சிரித்தான் பரணி.

"இப்போ எதுக்குடா நீ சிரிக்கிற?"

"ஒரு சின்ன பொண்ணு உங்கள எப்படி பேசியே ஏம்மாத்திட்டு ஓடினானு நினைச்சிப் பார்த்தேன் சிரிப்பு வந்துடுச்சி" என்றவன்.. "அம்முவோட டிரஸ் ஒன்னும் அசிங்கமா இல்லம்மா, அதுமாதிரி அவளும் டிரஸ் பண்ணிக்க மாட்டா.. என்ன சால் மட்டும் தான் போடல மத்தபடி சுடிதார் மாதிரி தானே இருக்கு" என்று தங்கைக்கு ஆதரவாக பேசினான் பரணி.

"இந்த காலத்துல வயசு பிள்ளைய வீட்டுல வெச்சிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு, எப்போ எது நடக்குதுனே தெரியலை, காலம் கெட்டுக்கடக்குதுடா" என்றார்.

"அது பார்க்கவிங்க கண்ணுல இருக்கும்மா, சின்ன குழந்தைகளைக் கூட தான் இப்போ காமவெறி பிடிச்ச நாய்ங்க விட்டு வைக்க மாட்டிங்குதுங்க, அதுக்குன்னு குழந்தை போடற டிரஸ் தான் தப்புன்னு சொல்லுவிங்களா..?"

"நான் அப்படி சொல்லல்ல பரணி. எதுக்கு கண்ணை உறுத்த மாதிரி டிரஸ் பண்ணிட்டு அடுத்தவீங்க கருத்தைக் கவரணும்.. நம்ப ஒழுக்கமா இருந்தாலும் தப்பு நடந்த பிறகு, அவ அப்படி இப்படி தான் இருப்பா,அதான் இப்படி நடந்துருச்சினு ஊர் உலகத்துல சொல்லுவாங்க, எதுக்கு பரணி தேவையில்லாத பேச்சிக்கு இடம் கொடுக்கனும்' என்றார்.

ஒரு தாயாக திலகாவின் கவலை பரணிக்கு புரிய, "சரி கூல் கூல் கவலைப்படாதீங்க" என்றவன்,"சாய் கூட தானே போறா அவன் பார்த்துப்பான்" என்றான்.

"சரி அவளை விடு, சசிக்கு ஒரு பொண்ணு பார்த்துருக்கோம் ஜாதகம் எல்லாம் சரியா இருக்கு இன்னும் அவன்கிட்ட தான் சொல்லல நீ கொஞ்சம் சொல்றியாடா.." என்றார்.

"இதைய தானே நீங்க முதல சொல்லிருக்கணும், எனக்கு ரூட் கிளியர் ஆகும் போது நான் மாட்டேன்னு சொல்லுவேணாம்மா" என்றவன், "அவன் வெளிய போயிருக்கான் தானே வரட்டும் பேசிப் பார்க்கறேன்" என்றான்.

"ம்ம் சரி" என்றவர்,"இந்தா இதுதான் பொண்ணு போட்டோ"என்று பெண்ணின் போட்டோவைக் காட்டவும்,

"பேர் என்னமா?"என்றப்படி போட்டோவை வாங்கிப் பொண்ணைப் பார்த்த பரணிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

"பேர் சஷ்டிகா"

"ம்ம் நல்லபேர்",என்றவன், "பொண்ணும் நல்லா இருக்கு, சசி வரட்டும் பேசிப் பார்க்கறேன்" என்றான்.

சாய்யுடன் கேளிக்கை விடுதிக்கு சென்ற ஆரா வண்டியை விட்டு இறங்கியதும், அவளுடைய கண் அங்கு நின்ற ரோல்ஸ் ராயல்ஸ் குல்லினைன் காரின் மீது தான்
சென்றது.

"இது அந்த தடிமாட்டு தாண்டவராயன் கார் தானே, அது எதுக்கு இங்க நிக்குது" என்று யோசித்துக் கொண்டிருந்தவளை

"ஏய் என்னடி கனவு கண்டுட்டு இருக்க உள்ளே வா" என்று அழைத்துச் சென்றான் சாய்.

ஆரா அவனுடன் சென்றாலும், அவளுடைய கண்கள் அந்த விடுதியில் சக்தி எங்கு இருக்கிறான், என்று தேடுவதில் தான் சென்றது.

"ஹேய் சாய் வெல்கம் அவர் பேர்வல் பார்ட்டி" என்று சாயைப் பார்த்ததும் அனைவரும் கத்த.... அவர்களுடன் சென்று இணைந்துக் கொண்டனர் இருவரும்..

என்னதான் ஆடல் பாடல் என்று சந்தோசமாக இருந்தாலும் ஆராவின் மனம் முழுவதும் சக்தியின் மேல் தான் இருந்தது..

சாய் அனைவருடனும் சேர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருக்க, சாய் பார்க்காதப் போது அங்கிருந்து மெதுவாக விலகி நகர்ந்து வந்துவிட்டாள் ஆரா..

"டேய் நெட்ட கொக்கே எங்கத் தான்டா இருக்க?" என்று புலம்பியவள், சாய் இருந்த அறையை விட்டு வெளியே வந்து அதனை ஒட்டியிருந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்தும் இடத்திற்கு சென்றவள் சக்தியை தேட ஆரம்பித்தாள்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவள் எதிரே வந்தப் பேரரை கவனிக்காமல் அவன் மீது இடிக்க, அவன் கையில் வைத்திருந்த கொத்தமல்லி சட்டினி ஆராவின் மீது அபிஷேகம் செய்தது.

"சாரி மேடம் தெரியாமல் கொட்டிட்டேன்" என்று பேரர் மன்னிப்பு கேட்டான்.

தப்பு அவள் மீது தான் என்றாலும் இங்கு வருபவர்கள் அதிகம் பணக்காரர்கள் தான் அவர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர்களைப் பற்றி குறைச்சொல்லி அதிகமுறை மேலாளரிடம் திட்டு வாங்கியிருக்கிறான். அதில் இருந்து தனக்கு எதற்கு வீண் வம்பு என்று நினைத்து தவறு யார் மீது என்றாலும் இவனே முன் வந்து மன்னிப்பு கேட்டுவிடுவான்.

"இல்ல இல்ல நீங்க சரியா தான் வந்திங்க, நான்தான் உங்களை கவனிக்கல சாரி" என்றவள், "இங்க வாஷ்ரூம் எங்க இருக்கு?" என்று கேட்டாள்.

"அந்தப் பக்கம் மேம்" என்று கையைக் காட்டியவன், "ஒன்ஸ் அகைன் சாரி" என்றான்.

"இட்ஸ் ஓகே", என்றவள் கழிவறையை நோக்கிச் சென்றாள்.

அப்பொழுதும் அவள் கண்கள் சக்தியைத் தேடிக் கொண்டுதான் இருந்தது.

இங்கோ ஆடிக் கொண்டிருந்த சாய் அருகில் இருந்த ஆராவைக் காணவில்லை என்றதும் பதறியவன் அவளைத் தேடத் துவங்கினான்.

தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்த ஆரா, இதற்கு மேலும் சக்தியை தேடிக் கொண்டிருந்தால் சாயிடம் மிதி வாங்க வேண்டியது தான் என்று சாய் இருந்த இடத்திற்கு செல்லப் போனாள்.

அவளது கண்கள் இறுதியாக ஒருமுறை அந்த இடத்தை அலசிவிட்டு செல்லலாம் என்று அடம்பிடித்தது.

"இன்னும் இங்க இருந்தா கட்டையைத் தூக்கிட்டு வந்துடுவான் அந்த குரங்கு" என்று நினைத்தவள் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

அந்த ஹோட்டல் கேண்டில் லைட் டின்னருக்கு பிரசித்திப் பெற்றது அதனாலையே பணக்காரர்கள் அதிகம் அங்கு வருவார்கள் என்று சாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள். இன்றும் அதேப்போல் அனைவரது மேஜையின் மீதும் மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருக்க, அந்த வெளிச்சத்தை தவிர வேற எந்த வெளிச்சமும் அந்த அறையில் இல்லை.

காதலர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தவாறு ஒருவித மோனநிலையில் இருந்தனர்.

"அந்த சிடுமூஞ்சிக்கு லவர் இருக்கலாம் சான்ஸே இல்லை, அவனை இங்க தேட வேண்டாம், ஏதாவது பிஸ்னஸ் விசயமா வந்துருப்பான், நம்ப வந்த வேலையைப் பார்ப்போம்" என்று நினைத்துக்கொண்டு சென்றவளின் கண்கள் எதையற்சியாக அறையின் இறுதி மேஜைக்குச் சென்றது

அங்கு தன் தோளில் ஒரு பெண்ணை சாய்த்துக் கொண்டு அவள் முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்தும் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து நின்று விட்டாள் ஆரா.

சக்தியின் தோளில் சாய்ந்திருந்த அந்தப் பெண், சக்தியின் பூட்டப்படாத சட்டைப் பட்டனில் கையைவிட்டு அவனது நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டியிருந்தாள்.

"ச்சை எவ்வளவு தைரியம் இருந்தா நாலுப்பேர் பார்க்கற இடத்துல இப்படி தடவுவா, விட்டா அவனை கடிச்சி தின்னுடுவா போலையே, இவனும் ஏதோ அவ தடவல்ல மயங்கி உக்கார்ந்து இருக்கான்" என்று மனம் வெதும்ப..

"அவங்க லவர்ஸாக் கூட இருப்பாங்க, அடுத்தவீங்க பர்சனல்ல எட்டிப்பார்க்கறது தப்பு ஆரா, நீ இங்க இருந்து கிளம்பு" என்று அவள் மனம் கண்டிக்கவும் செய்தது.

"ம்ம் இருப்பாங்க இருப்பாங்க, அவங்க எப்படி இருந்தா நமக்கு என்ன?"என்று நினைத்தாள்.

அப்போது சக்தி அந்த பெண்ணைத் தோளோடு அணைத்தவாறு அங்கிருந்து எங்கோ சென்றான்.

"வா அவங்க எங்க போறாங்கனு பார்க்கலாம்" என்ற மனதை.." கம்னு இருக்கீயா, நீ கம்முனு இருந்திருந்தினா இவ்வளவு பிரச்சனையும் இல்லை. எவனையோ தேடிட்டு நானும் இங்க வந்துருக்க மாட்டேன் எல்லாம் உன்னால வந்தது.." என்று அடக்கினாள்.

"அதான் வந்துட்டில இன்னும் கொஞ்ச தூரம் தானே, வா வா போலாம்" என்று மனது உந்த எப்போதும் மனது சொல்வதையே கேட்டுப் பழகியவள், சக்தியை பின் தொடர ஆரம்பித்தாள்.

இருவரும் ஹோட்டலின் லிப்ட்டில் ஏறினர்.

"ஐயோ! இவன் லிப்ட்ல எங்கையோ போறானே, இவன் பின்னாடி போனா தானே எங்கப் போறான்னு கண்டுபிடிக்க முடியும், இப்போ எப்படி கண்டுபிடிக்கறது" என்று நினைத்தாள்.

அப்போது அவர்கள் இருவர் மட்டும் ஏறிய லிப்ட் மூன்றாம் தளத்தில் நிற்கவும், இவள் வேக வேகமாக லிப்ட் கீழே வர எண்ணை அழுத்தினாள்.

அவர்களை வெளியேற்றி விட்டு லிப்ட் இவளிடம் வர, அதில் ஏறி அவர்கள் இறங்கிய தளத்திற்கு எண்ணை அழுத்தியவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"எதுக்கு இப்படி அடிக்கற..? அவன் எப்படி போனா உனக்கு என்ன?,நான் அவ்வளவு சொல்லியும் கேக்காம வந்தில உனக்கு தேவை தான்" என்று மனதை சமாதனம் செய்வதற்குள் லிப்ட் மூன்றாவது தளத்தில் நின்றது.

வெளியே வந்துப் பார்த்தவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.. ஏனென்றால் அந்த தளத்தில் இருந்தது அனைத்தும் அறைகள் மட்டுமே..

"இவன் எதுக்கு அவ கூட ரூமுக்குப் போறான், ஒருவேளை" என்று அதற்கு மேல் அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை.

"ச்சை சக்தி, நீ இப்படி பட்ட கேவலமான புத்தி உள்ளவனா?" என்று நினைத்தவளை

"அப்படி இருக்காது, நீயா ஏன் தப்பா நினைக்கற?, ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருந்தா தப்பு பண்றாங்கனு தான் அர்த்தமா? லூசு மாதிரி நினைக்காம கீழேப் போ" என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொள்ள

"அவன் அப்படி பண்ண மாட்டான்னு சொல்ல அவன் ஒன்னும் உத்தமன் இல்லையே எல்லோரையும் அடிச்சி துன்புறுத்துற ரவுடி தானே, கொலைப் பண்றவன் பொம்பளை பொறுக்கியா இருக்க மாட்டானு என்ன நிச்சயம்?" என்றது ஒரு மனம்.

"அது அவனோட லவ்வராக் கூட இருக்கலாம், அது அவனோட பர்சனல், இதுல நீ எதுக்கு மூக்கை நுழைக்கற?" என்றது மற்றொரு மனம், இப்படி பத்து நிமிடங்களுக்கு மேல் மனதிற்குள் ஒரு படிமன்றமே நடத்தி முடித்துவிட்டாள், அப்போதும் கூட சக்தி அறையை விட்டு வெளியே வரவில்லை..

அவன் அங்க தான் இருக்கிறான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட,ஆராவின் மனம் சக்தி தப்பானவன் தான் என்று அடித்துக் கூறியது..

அதே எண்ணதில் கீழே வந்தவள் சாயை தேடிச் சென்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top