தியானம் பற்றி திரு துக்ளக் சோ அவர்களின் அனுபவம்.

Advertisement

SahiMahi

Well-Known Member
த்யானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை!


எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள்
திடீரென்று எழுந்தது.

கூடவே, 'உன்னால் முடியுமா...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது.

'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில்
இறங்கினேன்.

கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன்.
சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.

"மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார்
கூறியிருக்கிறார்..."

"அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆஃப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது
தியானம் பண்ண விடு!"

ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்... மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம்.
ஒழுங்காகத் தியானம் செய்.

அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும்தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது
ஆகும்.

தியானம்... தியானம்... எங்கேயோ போகுதே.

கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும்.

சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?

தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை.

அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே. அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா?
மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை?
நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.

"ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!"

எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.

"இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?... கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?"

கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.
நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள்தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள்
பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.

சரி சரி... மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ.

தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

'அமைதியான நதியினிலே ஓடம்...' அருமையான பாட்டு. சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத
மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை
டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே...

ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!

ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை
போட்டுக் கொண்டால்தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலியை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?

உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது?

அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு
பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-

தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. ப்ளீஸ்... கொஞ்சம் ஒத்துழையேன்.

அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.

'அலை பாயுதே கண்ணே...!
என் மனம் அலை பாயுதே..!'

கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து
கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.

அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்?

ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.

இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன்
இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.

முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி,

ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.

ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா...

நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்.
லீவு நாள்லகூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!

திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ... இதுதான் தியானமா?

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.

யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.

"ஏங்க... எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை?"

சோ. இராமசாமி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
எங்கள் அம்மா சொன்ன அப்புத் தோட்டத்து கவுண்டர் சாமி கும்பிட்ட கதையாட்டமே இருக்கே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top