சின்னஞ்சிறு இரகசியமே 1 அத்தியாயம் 5

Advertisement

Vanathi

New Member
அதன்பிறகு தினமும் மாலை சந்திக்கும் வேளையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தமிழும் சரவணனும் விஜய் நித்யாவிற்கு தனிமை கொடுப்பதை தவிர்த்தனர். கூடவே ஒட்டிக் கொண்டு திரிவார்கள். விஜய் வாயைவிட்டு கேட்டால் கொஞ்சம் ஒதுங்கிவிட்டு மீண்டும் அவனே அறியாதவாறு சேர்ந்து கொள்வார்கள்.

விஜய்க்கு நித்யாவை எப்படி நெருங்குவது என்று பயங்கர குழப்பம். அவளுடன் தனியாக நேரம் செலவிடுவதும் கடினம். அவளுக்கென்று மற்ற இருவரை ஒதுக்க முடியாது. வேலை நாட்களின் மாலை நேர சந்திப்பு நண்பர்களுக்கானது. அதில் காதலை புகுத்த விஜய்க்கு விருப்பமில்லை. எனவே நித்யாவுடனான தனிமை வார இறுதியில்தான் கிடைக்கும் என புரிந்து கொண்டான். காத்திருந்தான்.

தமிழும் சரவணனும் தீவிரமாக சிந்திப்பார்கள். எப்படி ஆட்டத்தை கலைத்து விடுவது என்று. எவ்வளவு யோசித்தும் மண்டை குழம்பியதுதான் மிச்சம். கடைசியில் விஜயின் நகர்வுக்கு ஏற்ப திட்டமிடுவதாக முடிவு செய்தார்கள்.

அந்த வார இறுதியில் நித்யாவுடன் தனியாக சினிமாவிற்கு செல்லலாம் என முடிவு செய்த விஜய் அன்று காலையே தமிழுக்கும் சரவணனுக்கும் விஷயத்தை குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டான்.

லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்த தமிழ் மொபைல் எழுப்பிய ஒலி கேட்டு எடுத்துப் பார்த்தாள்.

விஜய் அனுப்பியிருந்த செய்தியை நோட்டிஃபிகேஷனில் பார்த்துவிட்டு திடுக்கிட்டாள்.

" சுத்தம்... இப்ப என்ன பண்றது? " என புலம்பியவள் உஷாராக அந்த குறுஞ்செய்தியை திறந்து பார்க்காமல் உடனே சரவணனுக்கு அழைத்தாள்.

அம்மாவுடன் பேசிக் கொண்டே காய் வெட்டிக் கொண்டிருந்த சரவணன் மொபைலை பார்த்துவிட்டு " என்ன பைத்தியம் காலையிலேயே நம்மள பிராண்டுது? " என்றுவிட்டு அழைப்பை ஏற்று மொபைலை காதுக்கும் தோளுக்கும் இடையே முட்டு கொடுத்துவிட்டு பேசினான்.

" சொல்லு பைத்தியம்... "

" டேய் விஜி உனக்கு எதாவது மெசேஜ் பண்ணியிருக்கானா? நோட்டிஃபிகேஷன் மட்டும் செக் பண்ணு. மெசேஜ் ஓபன் பண்ணாத. "

" சனியனே அதுக்கு ஏன் கத்தித் தொலையுற? இரு. " என்றவன் மொபைலை பரிசோதிக்க விஜய்யிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

" ஒரு மெசேஜ் வந்திருக்கு. என்ன விஷயமாம்? "

" அவன் ஈவ்னிங் நித்யாவ சினிமாக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கான்டா "
தமிழ் சொன்னதும் சரவணன் அதிர்ச்சியில் " என்னது??? "என்று நிமிர, மொபைல் தோளிலிருந்து வழுக்கி வெங்காயங்கள் குளித்துக் கொண்டிருந்த நீரில் விழுந்து குதூகலமாக ஜலக்கிரிடையில் ஐக்கியமாகிவிட்டது.

பார்த்த சரவணனுக்கு இதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடும்போல் இருந்தது. " அம்மா... " எனக் கத்த வசுமதி என்னவோ ஏதோவென்று பதறி சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.

" ஏன்டா கத்துன? "

" தண்ணி ஃபோனுக்குள்ள விழுந்துடுச்சு மா "

" அடச்சி உளராம பேச்சு. "

" ஐய்யோ... ஃபோனு தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு மா " என்று கண்ணை கசக்கினான்.

" இதுக்காடா அப்படி கத்துன... கொண்டு போய் மொட்ட மாடில காய வை போ. க்ளிப் போட மறந்துடாதடா... அடிக்கிற காத்துல பறந்து போயிடும் " என்றுவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

" ம்மா உனக்கெல்லாம் எவன் ப்ரொஃபெசர் வேலை குடுத்தான்? " சரவணன் பல்லைக்கடிக்க,

" உங்கொப்பன் மாதிரி ஒரு கேனையன்தான். " உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

" என்னை யாரு கூப்பிட்டது? " என அங்கே வந்தார் பலராமன்.

" ப்பா அம்மா உன்ன கேனையன்குது... நீ கேட்டுட்டு சும்மா இருக்க... உன் ரத்தம் கொதிக்கல? " கொளுத்திப் போட முயன்றான்.

" ம்ம்... கொதிக்கும் கொதிக்கும்... " வசுமதி.

பலராமன் இருவரின் பேச்சும் தன் காதில் விழவே இல்லை என்பதுபோல முகத்தை வைத்துக் கொண்டு வெங்காயத்தோடு வெங்காயமாக இருந்த மகனின் மொபைலை பார்த்து " என்னடா சரவணா ஃபோன ஊர வச்சிருக்க? அழுக்காயிடுச்சா? டோன்ட் வொரி கரை நல்லதுடா தம்பி " என்றார்.

அவர் சொல்லவும்தான் இவ்வளவு நேரமாக மொபைலை வெளியே எடுக்காததே நினைவு வந்தது சரவணனுக்கு. சட்டென்று மொபைலை வெளியே எடுத்தவன், " ச்சே நான் ஒரு லூசு " என தன்னையே திட்டிக் கொள்ள,

" அப்படியே உங்கம்மா மாதிரி " என்றார் பலராமன். உள்ளே இருந்து ஒரு கரண்டி பறந்து வந்தது. ஓடிவிட்டார்.

சரவணன் மொபைலை பார்த்தான். தேராது என்று தெரிந்துவிட்டது. இதுதான் சாக்கென்று " ம்மா ஐஃபோன் வாங்கித் தரியா? " என்க,

" மூக்கு பஞ்சராயிடும் மகனே. நீ வருஷத்துக்கு ஒரு ஃபோன் மாத்துவ... உனக்கு ஆயிரக்கணக்கா செலவு பண்ணி ஐஃபோன் வாங்கித் தராங்க. மரியாதையா இந்த முற பத்தாயிரம் ரூபாயில முடிச்சிக்கற. " என்றார் வசுமதி.

" ம்மா பத்தாயிரத்துக்கு வெண்கல கிண்ணம்தான் மா தருவான். "

" நீ நொட்டுற நொட்டுக்கு அது போதும் "

சரவணன் சிணுங்க வசுமதியின் மொபைல் ஒலித்தது. தமிழ் அழைத்திருந்தாள். அவர் மகனிடம் நீட்ட, சரவணன் தலையிலேயே அடித்துக் கொண்டு அழைப்பை ஏற்றான்.

" டேய் லூசுப்பயலே... இப்படியா பேசிட்டு இருக்கும்போதே கட் பண்ணுவ? திரும்ப பண்ணாலும் ஸ்விட்ச் ஆப். "

" ஹே ஃபோன் தண்ணியில விழுந்துடுச்சுடி "

" அடப்பாவி... ஏன்டா யாராவது ஃபோன இப்படி தண்ணியில போடுவாங்களா? அறிவு வேணா? "

" அறிவுக் களஞ்சியம் மாதிரி பேசாத. நேர்ல வந்தேன் மவளே மூஞ்ச ஒடச்சிருவேன். நீ குடுத்த ஷாக்ல ஃபோன தவர விட்டுட்டேன். அது தண்ணியில விழுந்துடுச்சு. நீ மொதல்ல விஷயத்துக்கு வா. "

" ஐய்யோ அத மறந்துட்டேன் பாரு. விஜய் நித்யாவோட சினிமாக்கு போறானாம்டா. அததான் மெசேஜ் பண்ணியிருக்கான். நான் ஓபன் பண்ணல. உன் ஃபோனும் புட்டுகிச்சு. இத அப்படியே மெயின்டெயின் பண்ணி நமக்கு விஷயம் தெரியாதுன்ற மாதிரி அவன் வீட்டுக்கு போய் ப்ளான கெடுத்துடறோம். ஓகேவா? "

" நல்ல திட்டம். எப்போ போகனும்? "

" மதியம். "

விஜய் அவன் வீட்டில் கனவில் மிதந்து கொண்டிருந்தான். திரையரங்கில் கார்னர் சீட்டில் அவனும் நித்யாவும். ரொமாண்டிக் சீன் வருகையில் விஜய் அவள் கையைப் பிடிக்க, அவளும் அவன் கையைப் பிடிக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அப்படியே முத்தமிட நெருங்குகிறார்கள்...

" உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? " என்ற காஜல் அகர்வாலின் குரல் கேட்டு கனவிலிருந்து மீண்டான் விஜய். தொலைக்காட்சி விளம்பரம் கெடுத்துவிட்டது.

" என்னடா பகல் கனவா? பலிக்காம போயிடப்போது ராஜா " அவன் அம்மா கங்காதேவி சொலலவும், " ஏம்மா வாய வைக்கற? " என்றான். மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இளங்கோவன் " என்ன கனவுடா தங்கம்? ஜனாதிபதி அவார்டு எதாவது வாங்குனியா? " என்றார்.

" இல்ல... "

" ஸ்டேட் ஆவார்ட்டு? "

" இல்ல... "

" எம்பிபிஎஸ்ல கோல்ட் மெடலா? "

" இல்ல... "

" அப்ப என்னதடா கனவு கண்டு தொலச்ச? "

விஜய் சட்னியில் டையக்ராம் வரைய, " அத ஏன்டா நோண்டுற? பதில சொல்லு " என்றார் கங்காதேவி.

" ம்மா... நான்... நானு... "

" நீ... "

" நானு... "

" நீ... "

" நானு... "

" டேய் தொடப்பகட்டை பிய்ய பிய்ய அடிப்பேன். மரியாதையா என்னன்னு சொல்லு. " என கடுப்பாகி விட்டார்.

" நானு... லௌவ் பண்றேன் மா " என்று வெட்கப்பட்டான்.

" செட் ஆவல செட் ஆவல வேற காமெடி ட்ரை பண்ணு " இளங்கோவன்.

" தகப்பா சத்தியமா லவ்வு "

" கொஞ்சமாவது நம்புற பொய் மாதிரி சொல்லேன்டா " கங்காதேவி.

" தாயே உன் சட்னி மேல சத்தியம். ப்லீவ் மி " என்று கதற, லேசாக நம்ப ஆரம்பித்தார்கள்.

" பொண்ணு யாரு? " இளங்கோவன்.

" அத அப்பறமா சொல்றேன். "

" ஹ்ம். நான் கூட நீ கடைசி வரைக்கும் மொட்ட பையனாவே இருந்துடுவியோன்னு பயந்துட்டேன் " கங்காதேவி.

" இதெல்லா ஓவர் நக்கலு மா " விஜய்.

மதிய வேளை விஜய் நித்யாவிடம் வெளியே செல்வதற்காக வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் ஓடிச்சென்று திறந்தவன் திகைத்தான்.

" மச்சான் " தமிழும் சரவணனும் கோரசாகக் கத்தினார்கள்.
விஜய்க்கு பேக் ரௌன்டில் " தேல்பத்ரிசிங்... தேல்பத்ரிசிங்... " என்று கேட்டது.

" இன்னா மச்சான் எங்கனா வெளிய போறியா? " அப்பாவியாகக் கேட்டான் சரவணன்.

" உனக்கு தெரியாது... " விஜய்.

" நோ டா செல்லம் " சரவணன்.

" உனக்கு? " விஜய்.

" நீ சொன்னாதானடா தெரியும்... " தமிழ்.

விஜய் குழப்பத்துடன் " அப்ப நான் அனுப்புன மெசேஜ் பார்க்கலையா? "

" எந்த மெசேஜ்? என் ஃபோன்ல சார்ஜ் இல்லைன்னு நான் காலையில இருந்து பார்க்கல. சரவணன் ஃபோன தண்ணியில போட்டுட்டான். என்னடா விஷயம்? " தமிழ்.

" இதுக்கு மேல அத சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன? " என சலித்துக் கொண்ட விஜய் விஷயத்தை சொல்ல வர, கங்காதேவி பழச்சாறுடன் ஹாலுக்கு வந்தார்.

" என்னடா லீவ் ஆச்சே உங்கள இன்னும் காணோமேன்னு பார்த்தேன். " என்று மூவருக்கும் கொடுத்தார்.

தமிழ் அப்போதுதான் டீபாய் மேல் இருந்த இரண்டு சினிமா டிக்கெட்டுகளை பார்த்தாள். உடனே விஜய் அறியாமல் சரவணன் காதில் " டேய் அங்க பாரு... டிக்கெட்ஸ். " என்றாள்.

அவனும் பார்த்துவிட்டான். " என்ன பண்றது? "

" நீ விஜிகிட்ட பேச்சு குடு. மத்தத நான் பார்த்துக்கறேன். "

சரவணன் விஜய்யை அருகில் அழைத்து " மச்சான் முதுகு சுருக்கு சுருக்குன்னு வலிக்கிதுடா. என்னவா இருக்கும்? "

" ஆ... மூக்கு பொடப்பா இருந்தா அப்படித்தான் வலிக்கும். " விஜய் சற்று கடுப்பில் சொல்லவும் " என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட... அப்புறம் நான் செத்து கித்து போயிட்டேன்னா? " என்றான் சரவணன்.

" எது முதுகு வலிச்சா செத்து போயிடுவ? " விஜய்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்க தமிழ் தன் வேலையை காட்டினாள். கங்காதேவியிடம் கையை ஆட்டி ஆட்டிப் பேசி அப்படியே பழச்சாற்றை டிக்கெட் மீது ஊற்றுவதுதான் அவள் திட்டம். அதுவும் பலித்தது.

ஆனால் அது ஊற்றப்போகும் நேரம் விஜய் பார்த்துவிட்டான். அதிர்ந்தவன் " அ...டி...யே...ய்... வே...ண்...டா...ம்...டி... " என்று ஸ்லோ மோஷனில் கத்தியவாறே ஓடி வந்தான்.

இவனின் ஹீரோயிச கொழுப்புக்கு இவன் ஸ்லோ மோஷனில் வரலாம்... ஊற்றிக் கொள்ளும் ஜூஸுமா ஸ்லோ மோஷனில் கீழே விழும்? அது டிக்கெட் மீது ஊற்றி டிக்கெட் ஊறி நைந்து போய் பத்து நிமிடம் இரு விநாடிகள் கழித்துத்தான் விஜய் அருகில் வந்தான்.

எடுத்துப் பார்க்க இரண்டாக இருந்த டிக்கெட் இப்போது நான்காக வந்தது. அவன் தமிழை பார்த்து " என்னடி பண்ணி வச்சிருக்க? " என்று அழ,

தமிழ் " மூவி டிக்கெட்ஸா? சாரிடா விஜி நான் கவனிக்கல " என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான்.

" என்ன ரெண்டு டிக்கெட் தான் இருக்கு? " சரவணன்.

" அதான் இப்ப நாலாயிடுச்சே " தமிழ். கங்காதேவி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

விஜய் இருவரையும் முறைத்து " இதத்தான்டா நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணேன். நித்யாவோட தனியா சினிமாக்கு போறதுக்கு ப்ளான் பண்ணேன். எல்லாம் நாசமா போச்சு. " என்றான்.

அந்த நேரம் " ஹைய் எல்லாரும் வந்துட்டீங்களா? சூப்பரு " என்ற நித்யாவின் குரலை கேட்டு மூவரும் திகைத்து வாசல் புறம் திரும்பினார்கள்.

உள்ளே வந்த நித்யா " டேய் சினிமா போலாம்டா நான் டிக்கெட் புக் பண்ணிட்டேன். " என்றிட தமிழும் சரவணனும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டார்கள்.

" என்னடா இது... கிணறு வெட்ட பூதம் கெளம்புனா பரவால்ல... இவ கெளம்புறாளே... " என தமிழ் பயத்தில் சரவணனிடம் முணுமுணுக்க,

" பதறாத பதறாத... நித்யா டிக்கெட் புக் பண்ணா ரெண்டு பேருக்கு மட்டுமா பண்ணுவா? "

" ஆமால்ல " என்று அவளைப் பார்க்க, அவளும் " எல்லாரும் கெளம்புங்க போலாம் " என்று இருவரின் வயிற்றிலும் ஐஸ்கிரீமையும் விஜய்யின் வயிற்றில் பர்கர் வித் தக்காளி சாஸையும் வார்த்தாள்.

விஜய் திரும்பி சரவணனையும் தமிழையும் பார்த்து கண்ணால் பேசினான். மறுக்கச் சொல்லி.

" என்னடா கண்ல தூசி விழுந்துச்சா? இங்க காட்டு " என்று அவன் கண்ணைப் பிடித்து விரித்து உஃப் என்று சரவணன் ஊத, எச்சில் தெரித்துவிட்டது.

" அம்மாமாமாமா " என்று கத்தி கண்ணைக் கசக்கினான் விஜய். கங்காதேவி உள்ளிருந்து " சில்லறை இல்லப்பா போயிட்டு நாளைக்கு வா " என்றார்.

மற்ற மூவரும் வாயைப் பொத்தி சிரித்தார்கள். நித்யா பழச்சாற்றை பார்த்துவிட்டு " எனக்கு? " என்று சமையலறைக்குச் சென்றிட, விஜய் நண்பர்களிடம் " டேய் டேய் நானும் அவளும் தனியா போறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கடா ப்ளீஸ்... " என்று கெஞ்ச, மாட்டேன் என்றா சொல்ல முடியும்...

நித்யா வெளியே வந்து " போலாமா " என்க, சரவணன் " நித்யா தமிழுக்கு ஒடம்பு சரியில்ல... நான் அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வரேன் நீ விஜய்யோட போ " என்றான்.

தமிழ் மனதில் ' டேய் சொல்லிட்டு செய்ங்கடா... பாடி தாங்காது ' என்று புலம்பினாள்.

" ஏன்டி உடம்பு சரியில்லயா? " நித்யா கேட்க, விஜய் மீண்டும் தமிழைப் பார்த்து கண்ணைக் காட்டினான்.

அவளும் " ஆமா... லொக்கு லொக்கு " என்றாள்.

" என்னது லொக்கு லொக்கா? என்னடி சொல்ற? " நித்யா.

" இரும்புறாளாமாம்... " என்றுவிட்டு அவள் தலையில் தட்டிய விஜய் " நாயே ஒழுங்கா நடிச்சுத் தொலடி " என கிசுகிசுத்தான்.

நித்யாவுக்கு ஏதோ திருட்டுத்தனம் நடப்பது போல தோன்றியது. இருந்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் " பரவால்ல சினிமா போயிட்டு அப்புறம் ஹாஸ்பிட்டல் போலாம். வா " என்று தமிழை இழுத்துச் சென்றாள்.

விஜய் தன் விதியை நொந்துக் கொண்டே கிளம்பினான்.

" என்ன படம்? " சரவணன்.

" அனிமேஷன் படம். இன்க்ரெடபில்ஸ் " என்க, விஜய் அவளறியாமல் தலையிலேயே அடித்துக் கொண்டான். அவன் பார்க்க நினைத்தது ஒரு ரொமாண்டிக் படம். இவள் என்னடாவென்றால் பொம்மை படத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அதுவும் நண்பர்களோடு.

மனதில் நினைத்துக் கொண்டான் ' இந்த ஜென்மத்துல என் லவ்வு வெளங்குன மாதிரி தான் '

தமிழும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்து வில்லத்தனமாக சிரித்தேக் கொண்டார்கள். தலையில் டெவில் கொம்புகள் முளைத்தன.

ஆனால் இவர்களின் திட்டமெல்லாம் திரையரங்கில் நாசமாய் போனது.

ஓரமாக நித்யா. அவளுக்கடுத்து விஜய். அவனுக்கடுத்து தமிழ். அவளுக்கடுத்து சரவணன் என்றவாறு அமர்ந்தார்கள். இது கடவுள் விஜய் மேல் காட்டிய கருணை.

விஜய்யும் நித்யாவும் குசுகுசுவென்று பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். விஜய் அவளறியா வண்ணம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான். ஆக மொத்தம் நண்பர்கள் உடன் வந்திருந்தாலும் அவன் ஆசைப் பட்டது நடந்துவிட்டது.

அருகில் சரவணனும் தமிழும் " உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட... " என்பது போல தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தார்கள்.

" தப்பு பண்ணிட்ட... நீ டிக்கெட்ல ஊத்துன ஜூஸ தரையில ஊத்தியிருக்கனும். ரெண்டுல எதாவது ஒன்னு விழுந்து சில்லறை பொறுக்கியிருக்கும். ப்ளானும் கேன்சலாகியிருக்கும். " சரவணன்.

" ஆ... இந்த வெளக்கெண்ணய இப்ப வந்து சொல்லு... " தமிழ் எரிந்து விழுந்தாள்.

இருவரும் வேண்டிக் கொண்டனர். " ஆண்டவா இதுங்கள எப்படியாவது பிரிச்சிரு "
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top