சின்னஞ்சிறு இரகசியமே 1 அத்தியாயம் 2

Vanathi

New Member
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. தமிழ் காலையில் எழுந்து சமையலறைக்கு வர அங்கே அவளின் அம்மா சத்யா தலைக்கு குளித்து புடவை கட்டி சமைத்துக் கொண்டிருந்தார்.

" அம்மா இன்னைக்கு லீவ் தான... எதுக்கு புடவை கட்டியிருக்க? "

" இன்னைக்கு கிருத்திகை மகளே. "

" கிருத்திகை உனக்கு மட்டுமா? எனக்கும்தான... நான்லாம் கட்டலையே... "

" ஏன்னா நான் ஒரு குடும்ப இஸ்திரி " அவர் பாவனையுடன் சொல்ல, தமிழ் சிரித்தாள்.

" அப்ப நைனா? "

" அவரு கரி " சத்யா சொல்லவும் இன்னும் சத்தமாகச் சிரித்தாள்.

" அப்ப அக்கா? " என்றவாறு அவள் தம்பி நகுலன் உள்ளே வந்தான்.

" இது என்ன ரகம்னே தெரியல " அவர் போற போக்கில் சொல்லிவிட்டுப் போக, " தாய்கெழவி " என்று தமிழ் பல்லைக் கடிக்க நகுலன் அவளைப் பார்த்து கைகொட்டி சிரித்தான்.

" ரொம்ப இளிக்காதடா. " அவன் தலையில் லேசாகக் கொட்டினாள். அப்போது விஜய் அவளுக்கு அழைத்தான்.

பேசி முடித்துவிட்டு " ம்மா விஜய் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறானாம். ஈவ்னிங் பார்க்கலாம்னு சொல்லிட்டான். நான் என் ஃப்ரெண்ட்ஸோட வெளிய போறேன். படைக்கற டைமுக்கு வந்துடுவேன். " என்றுவிட்டு சரவணனுக்கு அழைக்க, அவன் எடுக்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தயாராகச் சென்றாள்.

தமிழரசி தன் கல்லூரி நண்பர்களுடன் மாலுக்கு சென்றாள். அவளையும் சேர்த்து ஆண் பெண் என கலந்து கிட்டத்தட்ட பத்து பேர். பெண்கள் அழகுப் பொருட்கள் வாங்கச் செல்ல, வேறு வழியின்றி ஆண்களும் உடன் சென்றார்கள்.

தமிழ் ஒரு பெரிய அளவு ஜிமிக்கி கம்மலை எடுத்து தனக்கு வைத்துப் பார்த்து அருகிலிருந்த நண்பனை அழைத்து " டேய் மனிஷ் நல்லா இருக்கா? " என்க,

மனிஷ் திரும்பி அவளைப் பார்த்து " என்ன அன்னக்கூடைய கௌவுத்து போட்டு காதுல கட்டிவுட்ட மாதிரி இருக்கு? " என்றான்.

அவர்களுக்கு அருகில் தன் தங்கைக்கு வாங்குவதற்காக கம்மல் பார்த்துக் கொண்டிருந்த ராஜீவ் " மச்சான் நல்லா பாரு... அது எண்ணெய் சட்டி. " என்று சிரித்தான். தமிழ் இருவரையும் முறைத்தாள்.

மற்றொரு தோழி ஷாலினி தமிழுக்கு சாதகமாக " கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை... " என்க, " அத நீ தான் சொல்லனும். எங்கள கேட்டா? " என்று அவளை கழுதை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் மனிஷ்.

தமிழ் வைத்திருந்த கம்மலைப் பார்த்த மற்ற பெண்களும் அதே போன்ற கம்மலை தேர்வு செய்து வாங்கிக் கொண்டார்கள்.

பில் போட்டு முடித்ததும். பணம் எடுக்கப் போன தோழியை தடுத்து " பில் இதோ இவரு பே பண்ணுவாரு " என்று மனிஷை கைகாட்டி விட்டு தமிழ் வெளியே ஓடிட மற்ற மூன்று பெண் தோழிகளும் அவளைப் பின்பற்றி எஸ்ஸாகி விட்டார்கள்.

மனிஷ் மாட்டினான். " இதுங்கள நம்பி ஷாப்பிங் வந்ததுக்கு என்ன பிஞ்ச செருப்ப சானியில முக்கி நானே அடிச்சிக்கனும். " என்று பர்சை வெளியே எடுத்தான்.

" உனக்கு எதுக்குடா அவ்ளோ
கஷ்டம்... என்கிட்ட சொன்னா நான் செய்ய மாட்டேனா... அப்படியே இதுக்கும் காசு குடுத்துடு " என்று ராஜீவ் அவன் தேர்ந்தெடுத்த கம்மலையும் கௌன்டரில் வைத்துவிட்டு ஓடினான்.

" டேய் என்ன பார்த்தா மாங்க மடையன் மாதிரி இருக்கா " மனிஷ் பல்லைக்கடிக்க, " இல்ல கேனயன் மாதிரி இருக்கு " என்றுவிட்டு மற்ற நண்பர்களும் வெளியே ஓடிவிட்டார்கள்.

" போற போக்க பார்த்தா நம்மள பிச்சயெடுக்க உட்ருவானுங்களோ... " என்று நொந்துக் கொண்டே பணம் கட்டிவிட்டு வந்தான்.

அடுத்து துணி கடைக்குச் சென்றார்கள். உள்ளே நுழைவதற்கு முன்புதான் தமிழ் அந்த நபரை கவனித்தாள். கண்களை நன்றாக கசக்கிவிட்டு " யாரு... பிச்ச மவனா? " என்று ஸூம் போட்டு பார்த்தாள்.

அவனேதான். விஜய். உடன் நித்யா. பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தமிழ் திகைத்தாள்.

இரவு வந்த கனவின் தாக்கம் உடனே இன்று நித்யாவை காண வேண்டுமென்று விஜய்யின் உள் மனது அவனை பிராண்டியது. அதுவும் தனிமையில்.

ஆனால் கூப்பிட்டால் அவள் மட்டும் வருவாளா என்ன? மற்ற இரண்டு பரதேசிகளும் இலவச இணைப்பாக சேர்ந்துதானே வரும். விஜய்க்கு இப்போது நித்யாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும். தன்னுள் ஏற்பட்டுள்ள உணர்ச்சிகளை இனம் காண வேண்டும்.

உடனே சரவணனுக்கு அழைத்தான். அவன் எடுக்கவில்லை. பின்பு தமிழை அழைத்தான்.

" தமிழு "

" சொல்லுடா "

" இன்னைக்கு என் காலேஜ் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன். சோ நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம். நான் நித்யாகிட்ட சொல்லிட்டேன். சரவணனுக்கு ஃபோன் பண்ணா அவன் எடுக்கல. நீ அப்புறம் அவனுக்கு சொல்லிடு. "

" ஓகே. நானும் ஃப்ரெண்ஸோட வெளிய போறேன். ஈவ்னிங் பார்க்கலாம் "

அவள் அழைப்பைத் துண்டித்ததும் தோழியிடம் பொய் சொல்கிறோமே என சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால் அவனுக்கே உறுதியாகத் தெரியாத ஒன்றை மற்ற இருவரிடமும் வெளிப்படுத்த முடியாதல்லவா. இது நட்பைத் தாண்டிய உறவு என்பது தெளிவான பின்னர் உடனே அவர்களிடம் சொல்வது என்று தீர்மானித்தான்.

அடுத்து நித்யாவை அழைத்தான். " நித்யா "

" சொல்லு விஜி "

" தமிழ் ஈவ்னிங் ஃப்ரெண்ட்ஸோட வெளியே போறாளாம். சோ மார்னிங்கே மீட் பண்ணலாம்னு சொன்னா. சரவணனும் நானும் இப்ப வெட்டிதான். எங்களுக்கு ஓகே. நீ? " மனதுக்குள் வரேன்னு சொல்லுடி என்று ஜபித்துக் கொண்டே இருந்தான்.

" நீயே வெட்டியா இருக்கேன்னா அப்ப நானு? எங்கன்னு சொல்லு "

இடத்தைச் சொன்னான். இவன் மாலில் முன்பே சென்று காத்திருக்க சில நிமிடங்களில் நித்யா வந்தாள்.

" மத்த ரெண்டும் எங்க? "

" தமிழுக்கு கெளம்பும்போது ஏதோ வேலை வந்துருச்சாம் முடிச்சிட்டு வரேன்னா. சரவண அவங்க அம்மாவ வெளிய கூட்டிட்டு போயிருக்கானாம். வந்துருவான். நீ வா " என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்டான்.

நித்யா அவன் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிகிறாள் இன்று. அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். இரசிக்க ஆரம்பித்தான்.

அவள் பேசிக் கொண்டே வர, இவன் சிரிப்புடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். நித்யாவிடம் எந்த மாறுதலும் தென்படவில்லை. எப்போதும் போலத்தான் பேசிக் கொண்டிருந்தாள். விஜய்யின் போதாத காலம். தமிழும் அவள் நண்பர்களுடன் அதே மாலுக்கு வந்தாள். மாலை சுற்றிவரும் போதுதான் அவர்கள் இவள் கண்ணில் பட்டார்கள்.

' இதுங்க ரெண்டும் என்ன... இங்க தனியா சுத்துதுங்க... நம்மகிட்ட இவன் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறதால்ல சொன்னான்... ஏதோ சரியில்லயே ' என்று குழப்பியவள் அருகில் மொபைல் நோண்டிக் கொண்டிருந்த மனிஷை அழைத்தாள்.

" மனிஷ் ரெண்டுல ஒன்னு தொடு " என்று இரு விரல்களை அவன் முன்பு நீட்டினாள். ஆட்காட்டி விரலில் விஜய். நடு விரலில் நித்யா. யாருக்கு முதலில் அழைப்பது என்ற குழப்பத்திற்காக இப்படி. அவன் நித்யாவை தொட, தமிழ் விஜய்க்கு அழைத்தாள். பிறகு என்ன வெண்ணெய்க்கு அவனிடம் கேட்டாளோ தெரியவில்லை.

மொபைலை காதில் வைத்து அவ்விருவரையும் பின் தொடர்ந்து சென்றாள்.

" ஹேய் எங்க போற? " மனிஷ்.

" எனக்கு வேல இருக்கு நீ போ " தமிழ்.

விஜய் மொபைல் ஒலிக்கவும் நித்யாவிற்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தான். சூனிய பொம்மை என்று காட்டியது. அழைப்பை துண்டிக்காமல் ஒலியை மட்டும் அணைத்தான்.

" யாருடா? " நித்யா.

" கம்பெனி கால். " விஜய்.

" அவங்க ரெண்டு பேரும் எப்ப வராங்கன்னு கேளேன். " நித்யா.

" மெசேஜ் பண்ணிட்டேன்டி. வருவாங்க இரு " விஜய்.

இவ்விருவரின் பேச்சும் இவர்கள் பின்னே தொடர்ந்து கொண்டிருந்த தமிழுக்கு நன்றாகக் கேட்டது.

' அடப்பாவி அப்ப எல்லார் கிட்டயும் பொய் சொல்லியிருக்கானா... ஆனா ஏன்? நித்யாவோட எங்களுக்குத் தெரியாம இவனுக்கு என்ன வேலை? ' என்று சிந்தித்தவள் சரவணனை அழைத்தாள்.

நேற்றிரவு டயானா சரவணனையும் விட்டு வைக்கவில்லை. சும்மா இருந்த விஜய்க்கே கனவில் வந்தது என்றால் அவள் அழகில் மயங்கிய சரவணனையா சீண்டாமல் போகும். கனவில் விஜய் அவளுக்கு செய்ய வந்ததை அவள் சரவணனுக்கு ரிவீட்டடித்துவிட்டாள்.

நள்ளிரவு " அம்மா... " என்று அலறியபடியே எழுந்தான். அவன் சத்தம் கேட்டு அவனின் பெற்றோரும் என்னவோ ஏதோவென பதறிப்போய் வந்து பார்த்தார்கள்.

" ம்மா டயானா எனக்கு உம்மா குடுத்துடுச்சி ம்மா! ஹைய்யோ எனக்கு புள்ள பொறக்கப் போவுது. " என்று பயத்தில் பிதற்றினான்.

அவன் தந்தை பலராமன் தலையில் அடித்துக் கொண்டு " டேய் உம்மா குடுத்தா புள்ள பொறந்துடுமா... தலையெழுத்து... உன்ன பெத்ததுக்கு உருப்படியா ஒரு ஒலக்கைய பெத்திருக்கலாம்டா. " என்க,

" ஏன் செகன்ட் ஷோ சினிமாக்கு போயிருக்க வேண்டியதுதான... " சரவணன் பல்லைக் கடித்தான்.

" டிக்கெட் கெடைக்கலடா மவனே
" அவர் நொந்துக் கொள்ள,
சரவணன் கையில் விபூதியுடன் வந்த அன்னை வசுமதியிடம் " ம்மா இந்த வீரப்பன நாளைக்கே டைவர்ஸ் பண்ணிடு. நாம வேற அப்பா வாங்கிக்கலாம் " என்று கடுப்புடன் சொன்னான்.

" இன்னொரு இளிச்சவாயனுக்கு நாம எங்கடா போறது? " என்று அவர் சலித்தவாறே மகனுக்கு பட்டையிட்டார்.

" ச்சை குடும்பமா இது " பலராமன்.

" இனிமே கனவு வராது. படுத்து தூங்கு " வசுமதி.

" எது... விபூதி வச்சா கனவு வராது... " நக்கலாக முறைத்தான் சரவணன்.

" நம்பிக்கை... அதானே எல்லாம்... " பலராமன்.

" இப்ப எதுக்கு பா அர்த்த ராத்திரில மிமிக்கிரி பண்ணிட்டு இருக்க? உனக்கு அந்த டயானாவே தேவலாம். " சரவணன்.

" ஒரு அப்பனா நான் இத சொல்லக்கூடாது... இருந்தாலும் உனக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் ஆகாதுடா. உம்மா குடுத்தா கொழந்த பொறந்துடுமாம். அப்படி பார்த்தா உனக்கும் உங்கொண்ணனுக்கும் ஒரு ஊரே தம்பி பாப்பா தங்கச்சி பாப்பாவாயிருக்கும். " என்றுவிட்டு தங்களின் அறைக்குச் சென்றார் பலராமன். அவரின் வாக்கும் பிற்காலத்தில் பலித்துவிட்டது.

" இவரு கூட எப்படிம்மா குடும்பம் நடத்துற? "

" என் தலையெழுத்து. வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல " என்று அவர் சரவணனையும் சேர்த்து சொல்லிவிட்டுச் சென்றார்.

அதன்பின் சரவணன் உறங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. காலை பத்து மணியாகியும் விழிக்கவில்லை. யாரும் அவனை எழுப்பவுமில்லை. அதனால்தான் விஜய் மற்றும் தமிழ் அழைத்தபோது அவன் அழைப்பை ஏற்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்தான்.

இப்போதும் உறக்கத்தில் தான் இருந்தான். வசுமதி வந்து அவன் மொபைலை காதின் அருகில் வைக்கவும் அலறி எழுந்தான்.

" ஆத்தா... நிம்மதியா தூங்க உட மாட்டியா... இராத்திரியெல்லாம் அவ தூங்க விடலன்னா இப்போ நீ... " என்று கண்ணைக் கசக்கி விட்டு திறந்து பார்க்க, வசுமதி அங்கில்லை. எப்போதோ சென்றுவிட்டிருந்தார்.

அழைப்பு துண்டிக்கப்பட்டு தமிழ் மீண்டும் அழைத்தாள்.

" என்னடி உன் பிரச்சனை? "

" எங்கடா இருக்க? "

" வீட்ல. தூங்கிட்டு இருந்தேன். "

" டேய் மணி என்னாகுது... "

" நேத்து டயானா கனவுல வந்து கசமுசா பண்ணிருச்சு. அதான் தூங்க லேட்டு "

" த்து கருமம் புடிச்சவனே. பேயக்கூட விட்டுவைக்க மாட்டியாடா ? "

" என்ன விஷயம்னு சொல்லு. "

" விஜய் உன்கிட்ட எதாவது சொன்னானா? "

" இல்லயே " என்றவன் மொபைலை சற்று நோண்டிப் பார்த்தான். தமிழிடமிருந்து விஜய்யிடமிருந்தும் ஒரே மாதிரியான குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதைச் சொல்லி " ஏன் என்னாச்சு? " என்றான்.

" இங்க ஒரு பெரிய சம்பவம் நடந்து போச்சுடா. "

" என்னது? "

" டேய் அவன் சரியான புலுகாண்டி. ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு நம்ம கிட்ட சொல்லிட்டு நித்யாவோட இங்க மாலுக்கு வந்திருக்கான். "

" அடிங்... இது ஒரு சம்பவமா... ப்ளான மாத்தியிருப்பானோ என்னவோ... "

" லூசுக்கூமுட்ட மாதிரி பேசாத. நம்மகிட்ட சொல்லாம எப்படி மாத்துவான்? இப்ப நான் அவனுக்கு ஃபோன் பண்ணா, எடுக்காம நித்யாகிட்ட கம்பெனி காலுன்னு புருடா உட்றான்டா. ஏதோ சரியில்ல. "

தமிழின் கூற்று சரவணனையும் சிந்திக்க வைத்தது. " உன்ன அவன் பார்த்தானா? "

" இதுவரைக்கும் இல்ல. நான் அதுங்களை தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். "

" அத அப்படியே மெயின்டெயின் பண்ணு. நான் ஒரு அரை மணிநேரத்துல அங்க வந்துடுவேன். " என்று அழைப்பை துண்டித்தவன் உடனே தயாராகிக் கிளம்பிவிட்டான்.

தமிழ், சரவணன் இருவருக்குமே இப்போது சற்று பொஸஸ்ஸிவ்னெஸ் எட்டிப் பார்த்தது. நட்பில் அனைவரும் சமம்தானே... அதென்ன இருவருக்குத் தெரியாமல் மறைத்து நித்யாவுடன் விஜய்க்கு பேச்சு? அவளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது போன்ற செயல் சற்று பிடிக்கவில்லை. காதல் என்பது பற்றியெல்லாம் அவர்கள் அப்போது சிந்திக்கவுமில்லை.

சரவணன் மாலிற்கு வந்ததும் தமிழை அழைக்க, அவள் ஃபுட் கோர்ட்டிற்கு வரச் சொன்னாள். சென்றான்.

" எங்க? "

" அங்க " என்று ஒரு டேபிளை காட்ட அதில் நித்யாவும் விஜய்யும் அருகருகே அமர்ந்து மெனுவை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

சரவணன் உற்றுப் பார்த்துவிட்டு " பிச்ச மவனேதான் " என சற்று வியப்புடன் சொன்னான்.

" என்ன பண்ணுதுங்கன்னு போய் பார்ப்போம் வா " தமிழ் அவனை இழுத்துக் கொண்டுஅருகில் சென்றாள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement