சாரல் 31(2)

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
சாரல் 32


தனது அத்தனை நாள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் அன்று நண்பனிடம் இறக்கி வைக்க சித்தம் கொண்டிருந்தானோ முகுந்தனும். மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.



குரலை செருமி சரி செய்துக் கொண்டவன், “எங்க சுந்தர் மாமா, வித்யா அத்தை முகத்துலயும் சந்தோசமே இல்லை. அவங்களும் கல்யாண வேலைகள கலந்துக்காம ஒதுங்கியே இருந்தாங்க. எங்க அம்மா ஒருநாள் கேட்கவும் தான், ரெண்டு பேரும் வந்தாலும், அதிகமா ஒட்டல. அப்புறம் தாத்தா எங்கப்பா கிட்ட பேசும்போது தான் எனக்கு எல்லாமே தெரிய வந்துச்சு. அன்னைக்கு எங்க அப்பாவா இப்படின்னு நெனச்சு ரொ… ரொம்பவே உடைஞ்சு போய்ட்டேன்டா! எனக்கு எல்லாம் தெரியும்னு யார்கிட்டவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல. அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு தான் விஷ்வா மாமாவை நான் பார்த்தேன். அவரை பார்த்து நான் அப்படியே திகைச்சு போய்டேன். ஆளே அடையாளம் மாறி, கண்ணு உள்ள போய், கருத்து….”



அடைத்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்துக் கொண்டவன், “அதவிட அவர் முகத்துல இருக்கிற அந்த சிரிப்பும், துள்ளலும் மறைஞ்சு போய், கண்ணுல ஒருவித சோகம் தான் நிறைஞ்சு இருந்தது பார்த்து நான் துடிச்சு போயிட்டேன். எங்க விஷ்வா மாமாவா இப்படின்னு? எனக்கே அப்படியிருக்கும் போது அவரை பெத்தவங்க அவரை பார்த்து எப்படி துடிச்சு போயிருப்பாங்க?” சிவந்த கண்களுடன் நண்பனிடம் கேட்டவனின் உள்ளத்து உணர்வுகள் புரிந்தவனாய், அமைதியாய் நின்றான் முகுந்தனின் நண்பன்.




“தன் பொண்ணோட வாழ்க்கைக்காக, ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமா அழிச்சிட்டு, அந்த சமாதி மேல எங்க அக்க வாழ்க்கையை ஒய்யாரமா அடுக்குனார் எங்கப்பா!” என்றவனிடத்தில் எள்ளல் சிரிப்பொன்று உதயமானது. “ஆனா அடுத்தவங்க பாவம் சும்மா விடுமா? அதுக்கான பலனை அதுக்கான தண்டனையை கடவுள் எங்க அக்கா மூலமாகவே எங்கப்பாக்கு கொடுத்துட்டார். கல் கோட்டை மாதிரி மகளோட வாழ்க்கையை அமைச்சு கொடுத்துருக்கேன்னு இறுமாந்து கிடந்த எங்க அப்பாக்கு மகளோட வாழ்க்கை சீட்டு கட்டு மாளிகைனு தெரிஞ்சதுக்கு அப்பறம் மனுஷன் தன்னையே நொந்துக்காத நாளே இல்லை. என்ன இருந்தாலும், தன்னை உயிரா… உறவா… உயிர் நண்பனா… தன்னோட குடும்பத்துல ஒருத்தனா நினைச்ச.. எங்க சுந்தர் மாமாக்கு அவர் செஞ்ச துரோகம் தான் எங்க அக்கா வாழ்க்கை இப்படி அமைய காரணமாகி போச்சு போல….



பணம் மட்டும் வாழ்க்கையிலன்னு எங்க அப்பா இப்ப நல்லாவே புரிஞ்சிக்கிட்டு இருப்பார். ஆனா அவர் செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? பணம்….” விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்தவன், “அந்த பணம்… அளவுக்கு அதிகமாவே பிருந்தாகிட்ட இப்ப இருக்கு. ஆனா அவகிட்ட நிம்மதி தான் இல்லை. அவளை பார்த்தவுடனே எனக்கு அவ எந்த மாதிரி வாழ்க்கையை வாழ்றான்னு நல்லாவே புரிஞ்சி போச்சு… அவ அன்னைக்கு கொஞ்சம் தைரியமா முடிவெடுத்திருந்தா இன்னைக்கு கார், பங்களான்னு இல்லைனாலும், சந்தோசமா… நிம்மதியா… அவ ஆசைப்பட்ட விஷ்வா மாமாவோட… அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய நிறைவாகவே வாழ்ந்திருப்பா!” என்றவனுக்கு சகோதரியின் உயிர்ப்பற்ற முகமே அவளின் நிலையை சகோதரனுக்கு விளக்குவதற்கு போதுமானதாய். அதற்கு மேல் பெபட முடியாது தொண்டை அடைக்க, ததும்ப துடிக்கும் கண்ணீரை நண்பனுக்கு கட்ட மனமில்லாதவனாய் தனது அறைக்குள் புகுந்துக் கொண்டான், முகுந்தன். செல்லும் தனது நண்பனையே வேதனை மீதுற பார்த்திருந்தான், ஜேக்.



அன்றைக்கு நல்ல விதமாய் விடிந்த பொழுது நொடி நேரத்தில் இப்படியாகும் என் அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனுக்கு சிறிது நேரம் தனிமையளிக்க முடிவு செய்தான் ஜேக். நேரம் மதியத்தை தொடவிருக்க, பசியில் குடல் கூப்பாடு போட துவங்கியது அவனுக்கு. எதுவும் சமைக்கவும் மனம் வராமல் நூடில்ஸ் மட்டும் செய்தவன், அவனை விட்டு உண்ணவும் மனமின்றி, நண்பனின் அறைக்கதவையே பார்த்திருந்தான், ஜேக். “இதற்கு மேல என்னால முடியாதுடா!” என கதறிய குடலின் கூக்குரலுக்கு செவி மடுத்தவன், முகுந்தனின் அறைக்கதவை தட்டினான்.


இரண்டுமுறை தட்டியும் பதிலின்றி போக, கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஜேக். அங்கே கரங்களால் கண்களை மூடி படுத்திருந்தான், முகுந்தன். அவனை அப்படி காண மனம் வலித்தாலும், அவன் நலன் கருதி, “டேய் மச்சான் சாப்பிட வாடா!” என அழைக்க, “ம்ம்ச் எனக்கு சாப்பாடு வேண்டாம்டா!” சோர்வை முனங்கினான் முகுந்தன். “டேய் உனக்கு பசிக்கலைனா பரவாயில்லைடா! எனக்கு ரொம்ப பசிக்குதுடா!” முயன்று குரலை பாவமாகக வைத்துக் கொண்டு சொல்ல, கைகளை விலக்கி நண்பன் முகம் கண்டான், முகுந்தன்.



அவன் தன்னை பார்ப்பான் என உணர்ந்திருந்த ஜேக்கும், முகத்தை பாவம் போல வைத்துக் கொள்ள, நண்பனின் முயற்சி புரிந்து உதடுகளில் நெளிந்தது சிறு புன்னகை. “டேய் என்னை அப்புறம் சைட் அடிக்கலாம். எனக்கு நிஜமாகவே பசிக்குது. இதுக்குமேல என்னால முடியாதுடா யப்பா!” எனவும் வேகமாய் எழுந்து நண்பனுடன் இணைந்துக் கொண்டான்.



“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா மச்சான்! வெளிய ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன். அப்புறம் இதுவே போதும்னு விட்டுட்டேன்!” என்ற நண்பனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தான், ஜேக்கின் நண்பன். சாப்பிட்டுவிட்டு அறைக்குள் முடங்கினால் அவன் தனக்குள்ளே முடங்கி விடுவான் என்பதை நன்கு அறிந்திருந்த ஜேக், “வாடா மச்சான் வெளிய போய் ரொம்ப நாளாச்சு! எங்கேயாவது போய்ட்டு, நைட் டின்னரும் வெளியவே முடிச்சுட்டு வந்துடலாம்!” என அழைக்க, நண்பனின் அழைப்பில், அவனுக்கும் எங்கேயாவது சென்றால் தேவலாம் போலிருக்க, சம்மதமாய் தலையாட்டினான்.



அரைமணி நேரத்திற்கு பிறகு, இருவரும் நகர்வலம் செல்ல தயாராகி வர, முகுந்தனின் வண்டியில் ஏறிக்கொண்டான், ஜேக். பெரும்பாலும் சீருடையிலே இருப்பதால் அவர்களிடம் ஆடைகள் குறைவாக இருக்க, வழியில் ஒரு கடையில் நுழைந்தனர். ஜேக் ஒரு சட்டையை அணிந்து விட்டு வெளியே வர, தனக்கு பார்த்துக் கொண்டிருந்த முகுந்தன், ஒரு பெண்ணின் குரலில் கவனம் கலைந்தான். “ம்ம்கும் 400ரூபா தான் தருவேன். அதுக்கு மேல ஒரு பைசா குடுக்க மாட்டேன்!” கடைகாரரிடம் அவள் பேரம் பேச, முகுந்தனின் கவனம் அவளிடம் குவிந்தது.


“அட இன்னமா உங்களோட ஒரே ரோதனையா போச்சு! இதோட விலை 7௦௦ ரூபா நீங்க நானூறு ரூபாய்க்கு கேட்குறீங்க! அவ்ளோ குறைச்ச விலைக்கெல்லாம் தர முடியாதுமா!” என கடைக்காரர் மறுக்க, “சரி அப்ப எங்களுக்கு வேண்டாம் வாடி போகலாம்!” தோழியின் கைபிடித்து அவள் நடக்க, “அட நில்லுங்கம்மா! நீங்க கேட்ட விலைக்கே தரேன்!” கடைசியில் அவளது வழிக்கே வந்தார் அவர். கேட்ட விலையில் பொருள் கிடைத்த மகிழ்வில், “ஹே சூப்பர்டி!” அவளது தோழி அவளை பாராட்ட, “பார்த்தியா? நான் தான் சொன்னேன்ல!” இல்லாத காலரை தூக்கி விட்டு நண்பியிடம் பெருமையடித்தாள், அவள், அர்ச்சனா. அவளை அங்கே கண்ட அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் தெறித்து விழுவது போல முழித்தான், முகுந்தன்.


அதற்குள் நண்பனிடம் வந்த ஜேக், அவனது கவனம் இங்கு இல்லாததை கண்டு அவனும் தனது பார்வையை திருப்ப, “ஹே இது… இது உங்க அக்காவோட நாத்தனார் மாதிரியே இருக்காளேடா!” என சொல்ல, “அவ மாதிரி இல்லடா அவளே தான்!” அதிர்ச்சியில் இருந்து வெளியே வராது, இன்னும் பார்வையை அவளில் பதித்த வண்ணமே,


“அன்னைக்கு என்னவோ பெரிய பீட்டர் மாதிரி சலும்புனாளேடா! இன்னைக்கு என்ன பிளாட்பாரம் கடையில நின்னு பேரம் பேசிக்கிட்டு இருக்கா?” தானும் அதிசயித்து போனவனாய் கேட்க, சாரதாவின் அலட்டலை நினைத்து ஏளன புன்னகை சிந்தினான், முகுந்தன்.


அவனது நியாபக அடுக்கில், அந்த சம்பவம் நினைவிலாடியது. மறுவீடு சென்று வந்தபின், மணமக்களுக்கு தாங்கள் அளித்த உடையை பார்த்து, “என்ன துணியிது? கலரும், டிசைனும்! துணியோட குவாலிட்டியும் எதோ பிளாட்பாரம் கடையில எடுத்த மாதிரி வேற இருக்குது!” என சாரதா அனைவரின் முன்பும் நக்கலடித்தது பாலகன் மனமதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன நிகழ்வு மேலும்ப, அவனையும் அறியாது அத்தனை பேர் முன்பு கூனி குறுகி நின்றது இன்று நினைத்தாலும், அவனை இறுக செய்தது.


அதில், உடை எடுக்கும் மனநிலை சிறிதும் இல்லாது போக, “வாடா போகலாம்!” என்றான். நண்பனின் முகமாற்றம் கண்டு, “ஹையோ எங்க போனாலும் இவனுக்குன்னே எல்லாம் வருதே!” என மனதினுள் புலம்பியபடி முகுந்தனின் பின்னே சென்றான், ஜேக்.



அன்று முகுந்தனுக்கு நாள் சரியில்லை போலும் என்பதை நிரூபிப்பது போல மேலும் சில நிகழ்வுகள் நிகழ்ந்தேற, கடைசியில் அவனை ஏண்டா வெளியில் அழைத்து வந்தோம் என ஜேக் தான் நொந்துக் கொள்ளும்படி ஆனது.



சாரல் அடிக்கும்….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top