சாரல் 30

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

வழக்கம் போல நானே. நான் முடிவு செய்தால், அது ஒருபக்கம் போகுது மக்களே. நிஜமா எனக்கே எனக்கா அவ்வளவு சோதனைகள் வருது. இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு.. என்று தான் எனக்கும் தோணுது.

என்னால முடிந்த அளவு பதிவுகள் சீக்கிரம் கொடுக்க பார்க்கிறேன் மக்களே. ஆனால் தொய்வு இல்லாமல் கதையை கொண்டு செல்லவே நினைக்கிறேன். எனக்கு அதுவே ஒரு அழுத்தமாக இருக்கு. அதான் என்னால தொடர் பதிவுகள் தர முடியலை.

போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து ஆதரவு கொடுத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. பதிவை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க மக்களே.


சாரல் 30

மூடியிருந்த சாளரத்தின் கண்ணாடியினூடு, ஆதவன் தனது ஆதிக்கத்தை அறையினுள் செலுத்த முயல, ஆதவனின் பொன் மஞ்சள் கரங்கள் தன்னை தீண்டியதில் துயில் களைந்தாள், மாது. முகத்தில் பட்ட வெளிச்சத்தில் தூக்கம் தடைபட, எரிச்சலுடன் முகத்தை சுருக்கியவாறே திரும்பிப் படுத்தவள், போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர முற்பட்ட நேரம், தனருகில் துயிலில் ஆழ்ந்திருந்த உருவத்தை கண்டு அதிர்ச்சியில் தூக்கம், அவளை விட்டு தொலைதூரம் சொல்லாது கொள்ளாது ஓடிவிட, உறங்கும் கணவனையே விழி அகற்றாது பார்த்தாள்.


“என்ன இவ்வளவு நேரம் தூங்குறான்? இந்நேரம் துரை விழுந்தடிச்சு எழுந்து ஓடியிருக்கணுமே!” மனதினுள் நினைத்தபடி இன்னும் தனது பார்வையை மாற்றாது யோசனையில் ஆழ்ந்தாள், அபிரக்ஷிதா. அப்போதுதான், முந்தைய தினம் இரவு நடந்த சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அவளது நினைவடுக்கை தட்ட, தன்னவனிடம் பார்வையை நிலைக்கவிட்டவளின் மனம், மெல்ல நேற்றைய இரவை அசை போட துவங்கியது.
**
பல வருடங்களாக தனது மனதில் போட்டு அழுத்தி வைத்த பாரமனைத்தும், மனையாளிடம் பகிர்ந்ததாலோ என்னவோ மனம் சற்றே ஆசுவசமாகியிருக்க, தனது நினைவில் உழன்றவனை கலைத்தது, அவர்களது புதல்வியின் “அப்பா!” எனும் அழைப்பு. தாய்க்கு எட்டாத குழந்தையின் மெல்லிய அழைப்பும் தானும், தந்தையின் செவியை எட்டியதோ? வேக எட்டுக்களுடன் மனையாளுக்கு முன் மகளின் அறை நோக்கி விரைந்தவன், அரவம் எழுப்பாது நுழைய, தந்தையை காணாது பாதி தூக்கத்தில் எழுந்தமர்ந்து இருந்தாள், பிரகதி. விரைந்து மகளிடம் வந்தவன், “அம்முமா!” என குலைந்த குரலில் அழைக்க, அதில் ஒற்றை கண்ணை சிரமப்பட்டு திறந்து “அப்பா!” என அரை தூக்கத்தில் தந்தையை நோக்கி கையை நீட்டியது சின்ன சிட்டு. மகளை அலுங்காது தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டிக்கொடுக்க, தந்தையின் அணைப்பு தந்த கதகதப்பில் சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கினாள், குழந்தை.


அவள் உறங்கியது தெரிந்தும், மேலும் பல நிமிடங்கள் கழித்தே மகளை படுக்கையில் விட்டு நிமிர, அவன் கண்களுக்கு மகள் மறைந்து, “மாமா! மாமா!” என அனைத்துக்கும் தன்னை நூல் பிடித்துக் கொண்டு சுற்றும் பிருந்தாவே தெரிந்தாள். அதில் மலுக்கென கண்ணில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க, அவன் சுதாரிக்கும் முன்னே விழி நீர் அவனது கன்னங்களை ஸ்பரிசித்திருந்தது.


அபி பிரகதியை சுமந்த பொழுதில், அவன் மனையாளுடன் அதிகம் நேரம் செலவழித்ததில்லை. ஆசையாய் மகளுக்கு உணவு ஊட்டியதில்லை. வெளியே அழைத்து சென்றதுமில்லை. அவனுக்கு தெரிந்து அவனைவிட அவன் மனையாள் தான் குழந்தைக்கு அனைத்தும் செய்தது, செய்வது. இருந்த பொழுதிலும், ஏனோ தாயை விட தந்தையை தான் அதிகம் நாடுவாள் பிரகதியும். மகளை கண்டு, தன் மீதான மகளின் அளவற்ற பாசத்தை கண்டு தான் அஞ்சினான், விஷ்வாவும்.

மகள் தன்னை நாடும் பொழுதெல்லாம் “ஏற்கனவே தன்னையே சுற்றி சுற்றி வந்தவளின் மனதை உடைத்தது போதாதா? பிருந்தா கண்ணீர் சிந்தினாலே பொறுக்காத தான் தான், கடைசியில் அவளது கண்ணீருக்கு காரணமாகி போனேனே!” என நினைத்து மகளைளிடம் இருந்து ஓடி ஒழிந்தான் தந்தையானவன். இன்னும் அழுகையில் கரைந்து, கண்களில் உயிரை தேக்கி, ஒருமுறை தன்னை ஆழ்ந்து பார்த்துவிட்டு சென்ற பிருந்தாவின் முகம் அவனது மனதை விட்டு மறையாது இருக்க, அதன் தாக்கத்தில் மகளிடமும் மனைவிடமும் தள்ளியே இருந்தான், விஷ்வா. அவன் எத்தனை விலகி சென்றாலும், இரும்பை ஈர்க்கும் காந்தமென, உணர்வுகளை தொலைத்து இரும்பாய் இறுகி நின்றவனை, மகள் தனது பாசம் எனும் காந்தம் கொண்டு தந்தையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.


அவனுக்கும் பிருந்தாவுக்கும் இடையே இருந்தது, ஒரு அழகான, எந்த வரையரைக்குள்ளும் அடங்காத ஒரு ஆத்மார்த்தமான பந்தம். பிரகதியின் ஒவ்வொரு அசைவிலும் அவன் பிருந்தாவை காணவில்லை. இருந்தாலும், இப்படி தானே அவளும் நம்மை வாய் ஓயாது அழைப்பாள்! இப்படிதானே ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் நம்மை எதிர்பார்ப்பாள்! என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மருகினான், விஷ்வா. கணவன் தன்னிடம் இருந்து விலகி இருக்கவும், முதலில் தன்னால் முடிந்த அளவு அவனை நெருங்க முயற்சி செய்த அபிரக்ஷிதா, பின்னர் சோர்ந்தவளாய் அமைதியாகி போனாள். ஆனால் தாய்க்கும் சேர்த்தே தன்னையும் அறியாது தந்தை போட்டிருந்த தடைகள் அனைத்தையும் தகர்த்து வெற்றிகரமாக முன்னேறினாள், பிரகதி.


கண்களை துடைத்துக் கொண்டு மகளின் பிறை நுதலில் முத்தமிட்டு திரும்ப, அவனையே ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்திருந்த மனையாளின் பார்வையை சந்தித்தவன், பாவையின் பார்வைக்கு பதில் மொழி உரைக்க முடியாது, தனது பார்வையை தழைத்துக் கொண்டான், விஷ்வா. கணவனின் பார்வை தன் மீது விழுந்ததை உணர்ந்து வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்ட அபியின் மனதிலோ, எதிலோ தோற்ற உணர்வு அலை அலையாய் பரவுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை. அவளுக்கு தெரியும் கணவனுக்கு நிறைவேறாத காதல் ஒன்று உண்டென! அந்த காலத்து பெண்களைப் போல திருமணம் முடிந்ததும், அவனை என் அன்பால் மாற்றுவேன்! கணவன் மனதில் உள்ள வெற்றிடத்தை என் காதலால் நிரப்புவேன்! என்றெல்லாம் அவள் நினைத்ததில்லை.


அவள் கொஞ்சம் யதார்த்தமான பெண். என்னதான் சிந்தனை செயல் என நவநாகரீக பெண் என தன்னை நினைத்துக் கொண்டாலும், மனதின் அடியாழத்தில், தனது கணவனுக்கு தனக்கு முன்னால் ஒரு காதல் இருந்திருக்கிறது. இன்னமும் அது அவனை வதைக்கிறது என்பதை பெண்ணவளால் தாள முடியாமல் தான் போனது. இருவருக்குமான பேச்சு வார்த்தைகளும், புரிதல்களும் குறைவே என்பதால், அவனின் எண்ணவோட்டத்தை அவள் அறியாது தான் போனாள். அவனும் மங்கையின் மனதில் தைத்திருக்கும் முள்ளை அறியாது போனது இருவரின் துரதிர்ஷ்டமே.



யாரை சொல்லி என்ன பயன்? அனைவரின் முகம் கண்டே அவர்களின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் விஷ்வா, தனது சரிபாதியிடம் சறுக்கி போனான் என்பது தான் நிஜம். அவனும் அவளது மனதை அறிய முயற்சிக்கவில்லை. அவளும், அவனுக்கு அவகாசமும் தரவில்லை. அவன் தென்முனையில் இருந்தால், இவள் வடமுனையில் இருப்பதுமாக இருக்க, அங்கே எங்கே புரிதல் ஏற்படும்? குடும்பம் எனும் பந்தத்தை உருவாக்கியதும் பிரகதி தான். உடையாது, பிரியாது அதனை பிணைத்து தக்க வைத்திருப்பதும் அவர்களது மகள் பிரகதி தான்.


நெடுமூச்சுடன் அறையை விட்டு மனையாளிடம் வந்தவன், மெளனமாக மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நிற்க, அவனது வருகை உணர்ந்தும் திரும்பாது நின்றாள், அபி. சில நொடிகள் கழித்து, “நீங்க அதுக்கு அப்புறம் பிருந்தாவை பார்க்கவேயில்லையா?” நேரே வெறித்தபடி அவள் கேள்வியெழுப்ப, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், கரகரத்த குரலை சரி செய்தபடி, “இல்லை! அன்னைக்கு தான் நான் அவளை கடைசியா பார்த்தது” என்றான்.

அவனது பதிலில் திகைத்து சட்டென அவன் புறம் திரும்பியவள், “ஏன்?” என்றாள் ஒரு வார்த்தையில். “ஏன்னா… நான் அந்த ஊருலயே இல்லை! அதுக்கு அப்புறம் அவளை இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு தான் பார்த்தேன்!” என்றவன் குரலில், காதலியை இன்னொருவன் உடமையாய் காணும் துக்கம் என்ன முயன்றும் வெளிப்பட்டது.
அவனது குரலில், அவனது வார்த்தையில், உள்ளுக்குள் ஏதோ உடைவதை உணர்ந்தாள், அபிரக்ஷிதா. மனதில் பெரும் வலி உருவாக, தொண்டையை கவ்வி பிடித்த வலியை எச்சில் விழுங்கி போக்க முனைந்தாள், விஷ்வாவின் மனையாள்.

மனதில் ஒரு கேள்வி முணுமுணுவென அரிக்க, அதனை கேட்கவா? வேண்டாமா? எனும் போராட்டம் அவளுள். முடிவில், சராசரியான பெண்ணாக, அவளுள் இருந்த ‘விஷ்வாவின் மனையாள்’ எனும் எண்ணமே ஜெயிக்க, அவனிடம் தனக்குள் தோன்றிய கேள்வியை கேட்டாள், அபி.

“நீ…. நீங்க… என்னை ல…லவ் ப…ண்…ணுறீங்களா?” தனது உரிமையை, உரிமையாய் கேட்க முடியாது, அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி தடுக்க, திணறலாய் வெளிவந்தது அவளது வார்த்தைகள். தனக்குள் உழன்றுக் கொண்டிருந்த விஷ்வா, மனையாளின் குரலில் கலைந்தவன், அவளை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்க்க, அவனது பதிலில், உள்ளுக்குள் ஒருத்தி உயிர் வலியை அனுபவிக்க இருப்பது உணராது, “தெரியாது!” என்றான். இப்படியான ஒரு பதில் தான் அவனிடம் இருந்து வெளிப்படுமென தெரிந்தும், தெரிந்தே கேள்வி கேட்ட தனது மடத்தனத்தை நொந்துக் கொண்டவள், முயன்று தனது முகம் மாற்றத்தை அவன் அறியாது காக்க பாடுபட்டாள்.


“நீ…நீங்க இ…இன்னும் அ… அவ… அவங்களை… பிருந்தாவை லவ் பண்ணுறீங்களா?” எப்படியோ தைரியம் அனைத்தையும் ஒன்று திரட்டி கேட்டே விட்டாள்.
அவளது கேள்வியில் அதிர்ந்து மனையாளை பார்த்த விஷ்வாவினுள் முதலில், “என்னை பார்த்து அப்படி கேட்டுவிட்டாளே? என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? அடுத்தவன் மனைவியை இன்னும் மனதில் சுமப்பவன் போலவா என்னை அவளுக்கு தெரிகிறது? நான் என்ன அவ்வளவு கேவலமானவா? கணவன் மீது ஒரு நம்பிக்கை வேண்டாமா?” என்றெல்லாம் நொடி நேரத்தில் அவன் மனம் பொரும,

“டேய் அடங்குடா! ரொம்பதான் ஆடுற! நீ என்னைக்குடா உன் மனசை அவக்கிட்ட சொல்லியிருக்க? ரெண்டும் பாதி நாள் மண்டையை உடச்சுகிட்டு, ரூமை ரத்தகளரியாக்கி, கை காலுல பாண்டேஜ் போட்டுட்டு தான் திரிஞ்சீங்க! இதுல எங்க இருந்துடா அவளுக்கு உன் மனசுல இருக்கிறதை சொன்ன? அவ உன்னை புரிஞ்சிக்க?” அவனது மனசாட்சி அவனை காரி துப்ப,



“அதுக்காக… இத்தனை நாள் என்னை பார்த்துக்கிட்டு தானே இருக்கா? அப்ப கூடவா என்னை பத்தி தெரியாது!” அவனது ஆண் எனும் கர்வம் அவளிடம் சண்டையிட சொல்லி அவனுக்கு தூபமிட, அவன் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட, அந்த சில வினாடிகள் அவளுக்கு பல யுகங்களாக கழிய, தவிப்புடன் கணவனின் வாய்மொழிக்காக அவனது வதனம் பார்த்து காத்திருந்தாள், அபிரக்ஷிதா. அவளின் முகம் கண்டு, முதல்முறை அவளது உணர்வை உணர முயன்றானோ கோமகனும்?


“இல்ல…!” அவளின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அவன் மொழிந்ததில், உள்ளுக்குள் பனியின் குளுமையை அவள் அனுபவித்ததை அவன் உணர வாய்ப்பில்லை. கண்கள் சடுதியில் கலங்கும் போல இருக்க, உதடு கடித்து ஆர்ப்பரிக்கும் மனதை கட்டுக்குள் வைக்க போராடினாள், அபிரக்ஷிதா. அவளுக்கு பதிலிறுத்துவிட்டு அவன் தொலைவானத்தை வெறிக்க ஆரம்பிக்க, வேறெதுவும் சொல்லவோ, கேட்கவோ தோன்றாது, அறைக்குள் திரும்பியவளின் நடை, கணவனின், “என்னை பார்த்தா அப்படியா உனக்கு தெரியுது?” எனும் கேள்வியில் தடை பெற்றது. என்ன முயன்றும் அவனை, அவனால் தடுக்க முடியாது போக, அவளிடம் கேட்டுவிட்டான்.


அவனது குரலில் திரும்பாது அப்படியே நின்றவள், சில நொடிகள் கழித்து, தலையை திருப்பி அவனை பார்த்தவள், “நமக்குள்ள அந்த அளவு ஒட்டுதல் இருக்கா என்ன?” எள்ளலாய், கன்னத்தில் உதடு வைத்து அவள் கேட்ட விதத்தில் அவனது அகந்தை சீண்டி விடப்பட, அவளை உறுத்து விழித்தவன், “எங்க அம்மா என்னை ஒன்னும் அப்படி மோசமா வளர்க்கலை!” சீறலாய் மொழிந்தவன், அவளை தாண்டி சென்று படுக்கையில் விழுந்தான். அவனையே பார்த்திருந்தவள் இதழ்க்கடையில், ஒரு ஏளன புன்னகை உதயமானது. அவனை பார்த்தப்படி படுக்கையில் மறுப்பக்கம் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி படுத்தவள் மனதிலோ, ஆயிரம் எண்ண அணிவகுப்புகள். அனைத்தையும் யோசித்து பார்த்தவள், விழிகளோ அதற்கு மேல் யோசிக்க பிடிக்காமல் அலுப்பில் மூடிக்கொண்டது.
***
அனைத்தையும் நினைத்து பார்த்தவள், கண்களிலோ முன் முப்பதுகளில் இருந்த கணவனது ஆண்மை ததும்பும் கம்பீரமும், மிடுக்கும் அவளை என்றும் போல இப்போதும் கவரவே செய்தது. “என்ன சொல்லு அழகன்டா நீ!” அவன் மீது பித்துக் கொண்ட பூவை மனம், ‘இவன் என்னவன்’ என்பதில் கர்வம் கொண்டு அவனை கொஞ்சிக் கொண்டது.

“நீ தான் அவனை மெச்சுக்கணும்!” இன்னொரு மனம் அவளை நொடிக்க, “எங்க அது உண்மையில்லைன்னு சொல்லு பார்ப்போம்!” மனசாட்சி உள்ளே நுழைந்து, அவளது குட்டை அம்பலப்படுத்தியது. “இவ்வளவு பேசுறல.. அப்போ அவன் முழிச்சு இருக்கும் போது கொஞ்ச வேண்டியது தானே!” அவளின் பலவீனம் அறிந்து அதிலேயே அடிக்க, அதுநேரம் வரை இருந்த உற்சாகம், அவளிடம் இருந்து விடைபெற்றது. அதற்குள் விஷ்வாவிடம் இருந்து அரவம் எழும்ப, வேகமாய் கண்களை மூடி, அசையாது படுத்திருந்தாள், அபி. உடலை நெளித்து சோம்பல் முறித்தவன், அலுப்பாய் விழிகளை திறக்க, ஜன்னல் வழி வந்த வெளிச்சத்தைக் கண்டு, சடுதியாய் மணியை பார்க்க, அது ஏழு என காட்டவும், “என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” பதறி எழ முற்பட்டவனின் பார்வை வட்டத்தில் விழுந்தாள், அவனது மனையாள்.


எப்போதும் அவள் எழுவதற்குள் அறையை விட்டு வெளியேறி இருப்பவன், இன்று அவளை புதிதாக திருமணமானவன் பார்ப்பது போல பார்த்தான். இதுநாள் வரை அவன் இப்படி ஆற அமர அவளை பார்த்ததுண்டா? என்றால், அது அவனுக்கு நினைவிலுமில்லை. தூங்கும் தனது சரிபாதியாய் அளவிட்டது அவனது கண்கள்.


நேரமாவது உணர்ந்து, தலையை உலுக்கி, தன்னை மீட்டுக் கொண்டவன், வேகமாய் படுக்கையை விட்டு எழுந்து குளியறைக்குள் சென்று மறைந்தான். குளியலறை கதவு மூடும் சத்தத்தில், மெல்ல ஒருகண் திறந்து பார்த்த அபி, அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள். “அபி கல்யாணமாகி ஆறு வருஷம் கழிச்சு உன் புருஷன் உன்னை பார்க்கிறான். ரொம்ப பெரிய முன்னேற்றம் தான் போ!” மனம் அவளை கிண்டலடிக்க, அதில் அவளது முகமோ உணர்விழந்து தான் போனது.


மனையாளின் மனமறிந்து, அவளின் உணர்வுகளை மீளவும் (திரும்பவும்) மீட்பானா விஷ்வா? வண்ணமிழந்த அவர்களின் வாழ்வு தனை, கொண்டவளின் துணை கொண்டு, அவளது உள்ளத்து உணர்வுகளை தானும் மீட்டு, அவளை மீட்டி, அவர்களின் வாழ்வுக்கு வண்ணம் சேர்ப்பானா அபிரக்ஷிதாவின் கணவன்?

சாரல் அடிக்கும்….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top