சாரல் 28

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சாரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி நான் நடுவுல கொஞ்சம் காணாம போயிட்டேன். Fbல போஸ்ட் பண்ணி இருந்தேன்.

இந்த வருடக் கடைசிகுள்ள இந்த கதையை முடிச்சுடுவேன்னு நெனச்சு தான் திரும்ப எழுதவே ஆரம்பிச்சேன். ஆனா வழக்கம் போல பனி காலம், இந்த டிசம்பர் மாதம், என்னை வழக்கம் போல வச்சு செய்ய, first என்னோட ulcerஓட பத்து நாள், அப்புறம் என் மகனுக்கு காய்ச்சல், எனக்கு கையில அடி, எனக்கு காய்ச்சல் என்று இந்த வருடம் எனக்கு அமோகமா முடிந்தது.

வெறும் காரணம் மட்டும் சொல்ல எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னால ஒரு வார்த்தை கூட எழுத முடியலை. ஒரு கதைக்கான பதிவுகள் தொடர்ந்து இருந்தா தான் படிக்கவே interest வரும் எனக்கும் அது புரியுது ஆனா சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும் என்று விட்டுட்டேன். நெறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். சோ கோச்சுக்காம இந்த பதிவை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்க மக்களே. உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் ஹோர்லிக்ஸ் எல்லாமே. போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து தொடர் ஆதரவு தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
Happy reading மக்களே.

சாரல் 28

அவனது வார்த்தைகளில், அதிர்ந்து போனவளின் கண்கள் கண்ணீரை சொரிய, வார்த்தைகள் தொண்டை குழியை விட்டு வராமல், மேலும் கீழும் சிக்கி தவிக்க, வறண்டிருந்த இதழ்களை பிரித்து, முயன்று, “மாமா” ஒட்டு மொத்த உயிரையும் அதில் தேக்கி, பிருந்தா அழைக்க, அவளது தவிப்பையும், மாமா எனும் வார்த்தையிலும் உடைய முயன்ற மனதையும், கண்களையும் அடக்க முயல்வதே அவனுக்கு பெரும் சிரமமாக தான் இருந்தது. இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டவன், அடைத்த தொண்டையையும் செருமி சீர் செய்துக் கொண்டு, “ம்ம் மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம் பிந்துகுட்டி! நீ….. நீ ரொம்ப….. வசதியா….. ரொம்….ப சந்…..தோ…ஷமா…..!” என்றவனின் வார்த்தைகள், “என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு மாமா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகளில் தேங்கி போனது. தளும்பும் கண்களை அவளுக்கு காட்டக் கூடாது எனும் முடிவில் தான், பிரம்ம பிரயத்தனங்கள் செய்து, மனதையும், குரலையும் இறுக்கி அவன் பேசிக் கொண்டு இருந்தது அனைத்தும், அவளது வார்த்தைகளில் தவிடு பொடி ஆகும் போல இருந்தது.


தான் கேட்டது சரிதானா? தனது காதில் விழுந்தது சரிதானா? மனம் நம்ப மறுக்க! ஜன்னல் பக்கம் நின்று இருந்தவன், அதிர்வுடன் அவளை பார்க்க, அவனது நம்பாத பார்வைக் கண்டு, உதடு கடித்து தவிப்புடன் நின்றாள். முகம் முழுதும் அழுததால் சோர்ந்து போயிருக்க, கண்களில் கரை கட்டி நின்ற கண்ணீர் கன்னங்களையும் ஸ்பரிசம் செய்திருக்க, தனது அகம் நிறைத்தவனையே, பார்வையால் இறைஞ்சிய படி நின்ற பெண்ணவளை கண்டு உள்ளுக்குள் இதயம் வலித்தாலும், அதனை வெளிக்காட்டாது, “ப்ளீஸ் மாமா! என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு! என்…எ…ன்…னால நீ இல்லாம இரு….க்க… முடியாது மாமா! செத்….துடுவேன்….!” தனது தவிப்பை, காதலை இந்த முறையும் அழகாய் வெளிப்படுத்தினாள், பாவை.


காதலை காதலனிடமே யாசித்தபடி நிற்கும் பெண்ணவளின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. தனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ? அவன் கை சேர முடியாது போய்விடுமோ? எனும் பயம் அவளை நிலையில்லாது தவிக்க விட செய்ய, காதல் கொண்ட மனதின் தவிப்பிற்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்திருந்தாள், பிருந்தா.


அகமும் புறமும் நீக்கமற நிறைந்த காதலி! காதலி வாயால் காதலை கேட்பது எவ்வளவு சந்தோசம்? காதலிக்கப்படுவது எத்துணை பெரிய பாக்கியம்? எத்தனை இன்பம் தருவது? என அந்த நிமிடம் முழுமையாய் உணர்ந்தான், விஷ்வா. ஆனால் அந்த காதலுக்கு தான் தகுதியானவன் தானா? இத்தனை காதலுக்கான தகுதி கொண்டவன், நான் இல்லையே! மனதில் மலையளவு அவள் மீதான காதல் இருந்தும், அதனை வெளிபடுத்த முடியாத நிலையில் தன்னை வைத்திருக்கும் விதியின் சதியை அந்த நிமிடம் நிரம்பவே சபித்தான், ஆண்மகன். இவளின் காதலுக்கு என்னால் நியாயம் செய்ய முடியாதே! இவளின் காதலுக்கான ஆள் நான் கிடையாதே! அதற்கான தகுதி தான், எனக்கு கிடையாதே! என ஆண் மனம் திரும்ப திரும்ப அதையே உருப்போட்டுக் கொண்டிருந்தது.


சமூகம் பெண்ணுக்கு வகுத்திருக்கும் அத்தனை கோட்பாடுகளையும் மீறி, அவள் தான் தனது மனதை முதலில் வெளிபடுத்தினாள். அவளது கண்களில் வழியும் தனக்கான காதலிலும், தன்னை கண்டதும் மின்னலென பளிச்சிடும் விழிகளையும், பலமுறை அவனே கண்டிருக்கிறானே! அதனை எப்படி மறுப்பது? ஐயோ இந்த நிமிடமே தனது உயிர் பறவை இந்த கூட்டை விட்டு பறந்து விடக்கூடாதா? எனும் ஏக்கமே அந்நேரம் அவனது நெஞ்சம் முழுதும் வியாபித்திருந்தது.


அவளது கண்ணீர் எப்போதும் போல தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்தவன், இளகும் இதயத்தை மீண்டும் இரும்பாக இறுக்கிக் கொண்டான். “Beggers are not choosers!” என விரக்தியாய் நினைத்துக் கொண்டான். கலங்கும் விழிகளுடன் அவனது வதனத்தையே உள்ளுக்குள் பரவிய ஒரு வலியுடன் பார்த்திருந்தவள், அவனது பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒரு யாசகன் போல தவித்திருந்தாள், மாது. அவனது முகமும் அது காட்டும் பாவனைகளும் கண்டு உள்ளுக்குள் அவளுக்கு அபாயமணி அடிக்க, “ப்ளீஸ் மாமா என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு!” இந்த முறை திடமாகவே வந்தது பெண்ணவளின் குரல்.


அவனுக்கு தான் அவளை நுனி முதல் அடி வரை தெரியுமே! இது இந்த பிருந்தா… தான் சொல்வதை கேட்டு தலையை ஆட்டுபவள் இல்லை! தனக்கு வேண்டியதை அழுத்தமாக சாதித்துக் கொள்ளும் பிருந்தாவின் குரல் என்பதை அவனும் உணர்ந்த தருணமது.
அந்நேரம் வரை மனதினுள் அவளை எண்ணி எண்ணி மடிந்து கொண்டிருந்தவன், அந்நொடி… அந்நொடி தீர்க்கமான முடிவெடுத்த நேரமது. அவளை ஒருமுறை கூர்ந்துப் பார்த்தவன், வதனமோ மெல்ல மெல்ல இறுக ஆரம்பித்தது. அவனது முகம் கண்டு, ஏதோ தவறாக நடக்க போகிறது என அவளும் உணர்ந்தாள். “இல்ல! இல்ல! எதுவும் சொல்லிடாதே சொல்லிடாதே…!” அவள் மனம் கதறுவதை அவனும் பாவை விழி வழி உணர்ந்து தான் இருந்தான். “இ…இது காதலே கிடையாது… பிந்துக்குட்டி! ஜஸ்ட் ஒரு infactuation!” இதனை சொல்லும் போது நடுங்கிய இதழ்களை உதடு கடித்து அடக்கிக் கொண்டான்.


“சின்ன வயசுல இருந்து நீயும் நானும் ஒன்னாவே சுத்தி இருக்கோம். அ… அது ஒருவகை ஈர்ப்பு! இதெல்லாம் காதல் இல்லை. நீயும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒருத்தரை ஒருத்தரை நல்லா தெரிஞ்சவங்க! சோ… ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் லைப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு நினைப்போம். அது தானே தவிர இது கா…தல்…. எல்லாம் கிடையாது!” அடைத்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்தவன், “இப்ப எல்லாம் நல்லா தான் இருக்கும் பிந்துகுட்டி! ஆனா இந்த ஈர்ப்பு பின்னாடி மறைந்து போன அப்புறம் நம்ம காதல்னு நம்புறது காணாம போயிருக்கும்! இதை காதல்னு நம்பி நம்ம வாழ்க்கையை வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, இப்ப இதை கடந்து போய்டோம்னா பின்னாடி நம்ம லைப் நல்லா இருக்கும். இப்ப மாமா உனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிகிட்டனா ராணி…”


ஏதோ சொல்லிக்கொண்டே வந்தவன் அவளது பார்வையை சந்திக்க, அவளோ அவனையே பார்த்தபடி நின்றாள். அதற்கு மேல் அவளது தீட்சண்யமான பார்வையை சந்திக்க முடியாமல், தனது பார்வையை திருப்பிக் கொள்ள, “சொல்லு மாமா! இன்னும் எதோ சொல்ல வந்தியே? முழுசா அதையும் சொல்லிடு! மனசுக்குள்ள எதையும் வச்சுக்காத மாமா!” எனும் பிருந்தாவின் குரலில் வேகமாய் தனது பார்வையே அவளுடன் கலக்க,

“என்னை தவிர வேற… ஒருத்திய உன்னால நெனச்சு பார்க்க முடியுமா மாமா!” அவளது கேள்வி கூர்மையாய் வெளிவர, திடுக்கிட்டு தான் போனான், விஷ்வா. எப்படி அவனால் முடியும்? எப்படி முடியும்? அவன் மடிந்தால் மட்டுமே அது சாத்தியமென அவனுக்கு தெரியும் என்பது அவளுக்கும் தெரிந்து தான் இருந்தது.


“வேற எதாவது ட்ரை பண்ணு மாமா!” அவனது முயற்சி புரிந்து, வலி கலந்த சிறு புன்னகையுடன் அவள் சொல்ல, தன்னை கண்டுக்கொண்டாள் என்பதை உணர்ந்தவனுக்கு அந்த நொடியிலும் மனதில் உதிரம் வடிந்தாலும், உள்ளுக்குள் கீற்றாய் அவளை நினைத்து சிறு இதம் பரவ தான் செய்தது.


“பதில் சொல்லு மாமா! முடியுமா உன்னால? இது நம்ம வாழ்க்கை மாமா! அப்பா சொல்ற ஆளை கட்டிக்கிட்டா ராணி மாதிரி வசதியா வாழுவேன்! ஆனா உயிர்ப்போட இருப்பேனான்னு தெரியாது மாமா! என்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டு நீ இருந்துடுவியா மாமா! சொல்லு… சொல்லு… எனக்கு பதிலை சொல்லு… சொல்லு.. இருந்துடுவியா? இருந்துடுவியா?” என்றபடியே அவன் போட்டிருந்த பனியனை பற்றி உலுக்கியபடி கேட்டவள், கடைசியில் அவன் மீதே சாய்ந்து அழுகையில் கரைந்தாள்.


அவளது கேள்வியில் ஆவி நின்று துடித்தது, விஷ்வாவுக்கு. மனம் அவளது அழுகையில் இளகி நின்ற நொடி, மறுநொடியே எதனையோ நினைத்து, இளகிய மனம் மீண்டும் இறுக துவங்க, மீண்டும் தன் முடிவில் ஸ்திரமாய் நின்றான், விஷ்வா. அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கதறிக்கொண்டு இருந்தவள், அழுத விழிகளுடன் மெதுவாய் அவன் வதனத்தை ஏறிட்டு பார்க்க, சில நொடிகள் அவனது முகத்தையே அசையாது பார்த்தவள், அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள். மெதுவாய் தலையை திருப்பி பார்த்துவிட்டு, மீண்டும் அவன் முகம் கண்டவள், அவனது இறுக மடித்து வைத்திருந்த கைகளையும் கண்டாள். தன்னை ஆறுதல்படுத்த கூட அவன் அணைக்காததையும் உணர்ந்துக் கொண்டவள் இதழ்களிலோ விரக்தி சிரிப்பொன்று பரவியது.


சிறு வயதில் இருந்து அவள் அழுகும் போது, மற்றவர்களை விட, அதிகம் தாங்குவதும் விஷ்வா தான். அவனை அணைத்துக் கொண்டு, அவன் தோள் சாய்ந்து என அழுகையில் பிருந்தா அவனிடம் தான் அடைக்கலம் அடைவாள். எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என ஆறுதலாய் அவளை அணைத்துக் கொள்ளும் கரங்கள் இன்று இறுகி இருப்பதை கண்டே அவனது எண்ணம் செல்லும் திசையை அறிந்துக்கொண்டாள், மாது.


அவள் விலகியதும், வேகமாய் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டவன், கண்களோ அடக்கப்பட்ட அழுகையில் சிவக்க ஆரம்பிக்க, வேகமாய் அவன் முன் நின்றவள், “உன்னால என்னை மறந்துட்டு வேற வாழ்க்கையை வாழ முடியும்னா சொல்லு மாமா! நா..நான் இப்பவே உன் வாழ்க்கையை விட்டு போயுடுறேன்!” கடைசி முறை என நினைத்துக் கொண்டு அவள் கேட்க, அவளது கேள்வியில், அவனது முகத்திலோ பல வர்ணஜாலம்.

“இது லவ்வே கிடையாதுடா பிருந்தா! ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்… இதுக்கு ஆயுசு ரொம்ப கிடையாது!” என அவன் சொல்ல,
“நான் கேட்டதுக்கான பதில் இது கிடையாது!” வெடுக்கென சொல்ல, அவள் முகம் காண மறுத்தான், விஷ்வா.


“ஐயோ என்னால முடியாதே! பாவி எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு, என்னை உயிரோட கொல்றாளே!” அவன் மனம் உள்ளுக்குள் ஊமையாய் கதற, எப்படியாவது அவனது மனதை மாற்ற முடியாதா எனும் தவிப்பு, பிருந்தாவினுள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தது.


“முடியுமா விஷ்வா? அவ கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதில் இருக்கா?” காதல் கொண்ட ஆண்மனம் கடைசி நொடிதனிலும், அவனது முடிவை மாற்ற தானும் போராட, “இல்லை வேண்டாம் விஷ்வா!” அவனுள் ஒரு குரல் ஒலிக்க, அதற்கு செவி மடுத்தான், விஷ்வா. அவளது கண்களை சந்திக்க முடியாது, விழிகளை மூடிக்கொண்டு “மு… முடியும்!” நடுங்கிய குரலை வெளிக்காட்டா வண்ணம் அவன் சொல்ல, உள்ளுக்குள் மொத்தமாய் நொறுங்கி தான் போனாள், பிருந்தா. எதிரே அரவம் இல்லாது போகவும், விழி திறந்து அவளை பார்க்க, “நீயா? நீயா சொன்னாய்?” எனும் கேள்வியை கண்களில் தேக்கி அவனை பார்த்தாள், பிருந்தா.

அந்நொடி, தன்னை தானே விஷ்வா வெறுத்த நொடியது. அவனது வார்த்தையில் வேகமாய் ஒரு துளி நீர் சரேலென அவளது கன்னத்தை நனைக்க, ஜீவனற்ற அவளது விழிகள் இவனை என்னவோ செய்தது. அவளது அசைவற்ற நிலை கண்டு, “பிந்த்…பிந்து..மா..!” தன்னை மீறி அவளை அழைக்க போக, அதற்குள் தன்னிலை அடைந்திருந்தவள், “வ..வரேன் மாமா!” அடக்கி வைத்த அழுகையுடன் சொன்னவள், அவனை திரும்பியும் பார்க்காமல் கடந்து செல்ல, என்ன நினைத்தாளோ, அறை வாயிலை கடக்கும் போது, “என் மாமாவுக்கு என்கிட்ட பொய் சொல்ல தெரியும்னு எனக்கு இப்பதான் தெரியும்!” உணர்வுகள் தொலைத்த, மரத்த குரலில் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட, அவளது வார்த்தைகளில் அதுவரை அவன் தனக்கு விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்து கொண்டு, அடக்கப்பட்ட துக்கமனைத்தையும் அழுகையில் கரைத்தான், விஷ்வா.

சாரல் அடித்தது….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top