சாரல் 27(2)

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

சாரல் 27(2) பதிவு செய்துட்டேன். உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. யாருக்கும் நான் பதிவு போடுவது தெரியலையா? ஏதாவது என்றால் எனக்கு தெரியப்படுத்துங்க நட்பூஸ்.

இன்னும் ஒரு பதிவுல fb முடிந்து விடும் நட்பூஸ். போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவரும் நன்றி. இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தாங்க நட்பூஸ்.

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 27(2)

அன்று உறக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தார், சிவா தாத்தா. கணவனின் அசைவில் தூக்கம் கலைந்த கல்யாணி பாட்டி, “என்னாச்சு? உடம்புக்கு பண்ணுதா?” குரலில் ஏகத்துக்கும் பதட்டம் விரவியிருந்தது. மனைவியின் குரலில் தனது நினைவிலிருந்து மீண்டவர், “ஹ்ம்ம் உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு…” கணவனின் குரலில் ஏதோவொன்றை உணர்ந்துக் கொண்ட கல்யாணி பாட்டி, “அப்ப மனசுக்கு என்னங்குறேன்?” கொண்டவனின் மனதில் வியாபித்திருக்கும் எண்ணம் அறியும் எண்ணத்தில் கேட்க, “ஒண்ணுமில்லை. நீ தூங்கு!” என்றார், தாத்தா.

“ம்ம்ச் என்னாச்சு? இப்ப எதுக்கு மனசை போட்டு அலட்டிக்கிறீங்க?” பாட்டி விடாது கேட்க,
எல்லாம் பகிர்ந்துக் கொண்டவர், “எங்க முத்துவேலு பேத்தி வாழ்க்கையை வீணாக்கிடுவானோன்னு ஒரு பயம் இருக்கு கல்யாணி!” இறுதியில் தனது ஐயத்தையும் சொல்ல, எல்லாம் கேட்டுக் கொண்டவர், “இப்ப என்ன உடனே பரிசமா போட்டுட்டாங்க? அவங்க கேட்டாங்க. நம்ம கேட்காம அவன் ஒரு முடிவு எடுத்திடுவானா? அவளை பெத்தவ இருக்கா! அதுக்கும் மேல வாழப் போறவ சம்மதம் வேணும்! நீங்க கண்டதையும் நினைக்காம தூங்குங்க!” கணவனை சமாதானம் செய்துவிட்டு படுத்தவர், மனதிலோ கணவனின் வார்த்தைகளை கேட்டு பெரும் ஐயம் உருவாகியிருந்தது தான் நிஜம்.

அறையில் தனது படுக்கையில் அமர்ந்து, சரண்யா கொடுத்த அந்த ஆல்பத்தை நூறாவது முறையாக திருப்பி திருப்பி பார்த்திருப்பாள் பிருந்தா. தங்களுக்கே தெரியாமல் சரண்யா சேகரித்த தங்களது நினைவுகளை, தனது விழிகள் வழி அகத்தில் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டிருந்தாள். அவளது கரங்கள் எத்தனை ஆயிரம் முறையாக அந்த படத்தை தீண்டியது என கேட்டால் அவளுக்கு தெரியாது!

இதழ்களில் அழியா புன்னகை தங்கியிருக்க, அதனை நிரந்தரமாய் தனது தந்தை அழிக்க போவது தெரியாது இருந்தாள், பாவை. சென்னையில் இருந்து வந்தவுடன் அவளுக்கு கிப்ட் ராப் செய்த ஒரு பரிசை சரண்யா அவளிடம் தர, வாங்கி பிரித்தவள் மகிழ்ச்சியில் சரண்யாவை கட்டிபிடித்து கொண்டாடி தீர்த்துவிட்டாள். அன்னை அழைக்கவும் அவசரத்தில் ஆல்பத்தை அப்படியே வைத்து விட்டு செல்ல, மகளை தேடி வந்த முத்துவேலின் கண்களில் அந்த புகைப்படம் பட்டு, அவரின் முடிவில் அவரை உறுதியாக மேலும் நிற்க சொல்லி தூண்டியது.


மறுநாள் காலையில், நண்பனைக் காண வந்தார், சுந்தர். “அடடே வாடா மச்சான்! நானே உன்னை வந்து பார்க்கணும்ன்னு நெனச்சேன்!” நண்பனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் முத்து.

“என்னடா மாப்பிள்ளை ரொம்ப சந்தோசமா இருக்க போல?” நண்பனின் மகிழ்வு அவரிடமும் தொற்றிக் கொள்ள, “ஆமாடா. ரொம்ப ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன். நம்ம பிருந்தாவுக்கு, சென்னையில வி.என். க்ரூப்ஸ் வைத்தியநாதன் பையனுக்கு கேட்டு இருக்கங்கடா!” என்றவர், “ஒஹ் அவங்களை தெரியாதுல! சென்னையில பெரிய கம்பெனிடா அவங்களோடது. அவங்க கால் வைக்காத பீல்டே இல்லடா. அவங்களுக்கு ஒரே பையன்! அவரும் நம்ம பிருந்தாவை எங்கேயோ பார்த்து இருக்காறாம்! பார்த்தவுடனே பிருந்தாவை ரொம்ப பிடிச்சு போச்சாம்!” மகிழ்வாய் தெரிவித்துக்கொண்டு இருந்தார், முத்து.


அவரின் வார்த்தைகளை கேட்டு மூன்று ஜீவன்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சிவா தாத்தா, பிருந்தா மற்றும் சுந்தர் தான். மகனது புதிய பரிணாமம் கண்டு, வாயடைத்து போய் இருந்தார், தந்தை. தந்தையின் திடீர் முடிவில் அதிர்ச்சி, பயம், வலி என கலவை உணர்வில் தத்தளித்தாள், மாது.
தந்தையின் வார்த்தைகள் இதயத்தில் கூர்ஈட்டியை பாய்ச்சிய வலியை கொடுக்க, ஆரம்ப கட்ட அதிர்வில் இருந்தே வெளிவரவில்லை, அவள். சில நொடிகள் அதிர்வில் இருந்த சுந்தர், தன்னை மீட்டுக் கொண்டவர், நண்பனை கண்டு புன்னகைத்தபடி, “ம்ம் என் தங்கச்சி மகளை யாருக்காவது பிடிக்காம போகுமா? அந்த மீனாட்சியே என் மருமகளா வந்து பொறந்து இருக்கா? அவளோட நல்ல மனசுக்கு அவ நிச்சயம் நல்லா இருப்பா!” மனதில் எழுந்த வலியை மறைத்துக்கொண்டு தங்கையின் மகளின் நல்வாழ்வுக்கு வாழ்த்தினார், அந்த பெரிய மனிதர். மனதில் எழுந்த ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு, நல்ல படியாகவே பேசிவிட்டு சென்றார், சுந்தர். தனது மகனின் மனது அறிந்தால்?


வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதனை ஆர்ப்பாட்டமாகவே பகிர்ந்துக்கொண்டார், சுந்தர். வித்யாவுக்கும் உள்ளுக்குள் ஏமாற்றம் இருந்தாலும், அவரும் தன்னை தேற்றிக் கொண்டார். அவரை சுற்றி இருந்த நல்ல மனிதர்களின் மனதை கருத்தில் கொள்ளாது, தனது முடிவில் வீம்பாய் இருந்தார், மனிதர். விஷ்வா வேலை சம்பந்தமாய் சென்னை வரை சென்றிருக்க, அப்போது அனைவரிடமும் கைபேசி பரவலாக இல்லாத காலமது. அவனுக்கு ஊரில் நடப்பது தெரியாமலே போனது. நாட்கள் விரைந்து பறந்திருக்க, தந்தையின் முடிவில் வாய் இருந்தும் பேசா மடந்தையாய் இருந்தாள், பூவை. சரண்யாவிடம் இவள் விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள, “உனக்கு என்ன வாய் இல்லையா? நீ உங்க அப்பாகிட்ட பேசுறியா? இல்லை நான் பேசவா?” அவள் கடுகடுவென பொரிய, தோழி தந்த தைரியத்தில், அப்பாவிடம் எப்படி பேச வேண்டும்? என அனைத்தையும் மனதினுள் பிருந்தா ஒத்திகை பார்த்து வைத்திருக்க, அடுத்த நாள் நடந்த சம்பவத்தில் அவளது தைரியம் அனைத்தும் தூள் தூளானது.

ஒவ்வொருக்கும் அன்றைய இரவு தூங்கா இரவாகவே கழிய, பிருந்தா எப்படியாவது தந்தையிடம் பேசிவிட வேண்டும் எனும் முனைப்புடன் விடிவதற்காக காத்திருந்தாள். அன்றோடு தனது வாழ்வு அஸ்தமனமாக போவது அறியாது. காலையில் எழுந்தவள், தந்தையிடம் பேசும் நேரத்திற்காக, முன்பாகவே எழுந்து, அவர்களின் அறை வாசலையே பார்த்திருந்தாள். மகளைக் கண்டு மென்னகை புரிந்த முத்துவேல், “என்னடா நேரமே எழுந்துட்டியா?” வாஞ்சையாய் மகளிடம் கேட்க, ஒரு இதழ் விரிப்பே அவளிடம். காலைக்கடன்களை முடிக்க கொள்ளை பக்கம் சென்றவர், மயங்கி விழுங்க, கணவனைக் காணாது அவரை தேடி சென்ற கீதாவின் அலறலில், வீடு அமளி துமளியானது. அனைவரும் உயிரை கையில் பிடித்து மருத்துவர் வருகைக்காக காத்திருந்த தருணமது. “பயப்பட ஒண்ணுமில்லை. பிரஷர் ரைஸ் ஆகி இருக்கு. சரியா மாத்திரை போடல போல. நல்ல வேளை கொஞ்சம் முன்னாடியே கூட்டிட்டு வந்துட்டீங்க! காட்ஸ் கிரேஸ். அவரோட ஹெல்த்… பார்த்து கவனிச்சுக்கோங்க. இனிமே கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க!” தனது கடமை முடிந்ததென சென்றார் மருத்துவர். அனைவரையும் பதற வைத்து மூன்று மணி நேரம் கழித்து கண் விழித்தார், முத்துவேல். தந்தையை காண பரிதவிப்புடன் சென்றாள், பிருந்தா. அனைவரையும் கண்டு சோர்வாய் அவர் புன்னகைக்க, அப்போது தான் போன உயிர் மீண்டது போல உணர்ந்தனர்.


“என்னடா பயந்துட்டியா? அதெல்லாம் அப்பாக்கு ஒண்ணுமாகாது! என்னோட பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணாம இந்த உயிர் போகாது!” மகளின் கண்ணீர் முகம் கண்டு அவள் தலையை வருடி ஆதரவாய் சொல்ல, தந்தையின் வார்த்தைகளில் அத்தனை நேரம் மறந்து இருந்த விஷயம் மெல்ல மெல்ல மேலெலும்ப, தந்தையின் உடல்நிலைக் கருதி, தொண்டைக்குழியை விட்டு வரத்துடித்த வார்த்தைகளுக்கு அணையிட்டுக் கொண்டாள், மாது.


மருத்துவமனை வாசம் முடிந்து முத்துவேல் வந்து இரண்டு நாட்களானது. தந்தைக்கு அமைதியாய் ஜூஸ் பிழிந்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. “பிருந்தா!” மெதுவாய் தந்தை அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் மகள்.

“என்னடா முடிவு பண்ணிருக்க?” பதில் சொல்ல முடியாது உதடு கடித்து அமைதி காத்தாள், மகள். மெதுவாய் முரளி பற்றி சொன்னவர், “அப்பா உன் நல்லதுக்கு தாண்டா சொல்றேன். ஒரே பையன். சொத்து பத்து ஏராளம். காசுக்காக சொல்லலை. அவரை கல்யாணம் பண்ணிகிட்டா நீ ராணி மாதிரி வாழலாம். அப்பா நல்லா விசாரிச்சுட்டேன். எல்லாரும் மாப்பிள்ளையை பத்தி நல்ல விதமாக தான் சொல்றாங்க! நீ தான் உன் முடிவை சொல்லணும்! அப்பா உனக்கு கெட்டது நினைப்பேனாடா?” மகளுக்கு தன் மீதிருக்கும் பரிதாபத்தை தனக்கு சாதகமாய் மாற்ற முயன்றார், மனிதர். பிருந்தா பதில் சொல்ல முடியாது அமைதியாய் தலை குனிய, “ஒன்னும் அவசரமில்லை. நீ நல்ல ஒரு ரெண்டு நாள் கழிச்சு உன் முடிவை சொல்லு!” என்பதுடன் கண்களை மூடிக் கொண்டார். தந்தையிடம் எதுவும் சொல்லாது, அறையை விட்டு அமைதியாய் வெளியேறினாள், மங்கை.

மனம் விஷ்வாவிடம் பேச வேண்டும் என துடியாய் துடித்தது. அவளது நேரம் அவனது வருகை தாமதமாக, என்ன செய்வதென்று புரியாது தவித்தாள், பாவை. “கடவுளே!” தனது நிலையை எண்ணி பெண் மனம் ஊமையாய் அரற்ற, உள்ளுக்குள் புழுங்கி தவித்தாள், கோதை.

அடுத்த நாள் விஷ்வா வந்த விஷயம் அறிந்து, அவனை காண துடித்தாள், பிருந்தா. வேகவேகமாய் அவனை காண விரைய, அவன் வெளியே சென்றிருப்பதாக வித்யா சொல்லவும், ஓய்ந்து போனாள். அவன் வருவான்! வருவான்! என காத்திருந்து காத்திருந்து மனம் அல்லலுற்ற வேளை அது. சாயங்காலம் போல வந்தான். கண்களில் ஜீவனற்று, முகம் பொலிவிழந்து பார்க்க என்னவோ போல இருந்தான். எப்போதும் அவனது முகத்தில் குடி இருக்கும் அந்த பளிச் புன்னகை தொலைந்தது போல இருந்தது. தாயிடம் பயணப் களைப்பு என்று அவர் முகம் காண மறுத்து, அறைக்குள் மறைந்துக் கொண்டான்.

இருவரும் ரசிக்கும் இயற்கை, இன்று நடக்கப்போவது அறிந்து அதுவும், கண்ணீர் வடித்ததோ? புயலாய் வீசிக் கொண்டிருந்தது. அவன் வந்தது அறிந்து, புயலாய் அவனைக் காண சென்றாள், பிருந்தா.


யாரையும் கருத்தில் கொள்ளாது, கொக்கொன்றே மதி என்பது போல் வில்லில் இருந்து சீறிப் பாயும் அம்பாய் அவனை தேடி சென்றாள். வித்யா வேலையாய் இருக்க, யாரின் அனுமதியும் தான் அவளுக்கு தேவையில்லையே! அவனது அறைக்கு சென்ற வேளை, தலையை துவட்டிக் கொண்டு இருந்தான், விஷ்வா. நெடுநாள் கழித்து கண்டதால், அவனை தனது விழிகளுள் நிரப்பிக் கொண்டாள், பிருந்தா. மற்றவை அனைத்தும் மறந்து போக, அவன் வந்துவிட்டான், அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்! எனும் ஆசுவாசம் அடைந்திருந்தது, அவளது மனது. இன்னும் சற்று நேரத்தில் அது உடைய போவது அறியாது!

அவள் வருவாள் என அவனும் எதிர்பார்த்து இருந்தானோ? அவனும் அவள் வந்ததை உணர்ந்து தான் இருந்தான். “ஹே பிந்தும்மா வா வா!” சாதாரணமாய் அவன் அவளை வரவேற்க, மெதுவாய் அவனது அறைக்குள் அடியெடுத்து வைத்தாள். “மாமாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” மாமனின் நலத்தை அவன் விசாரிக்க, “ம்ம்ம் இப்ப பரவாயில்லை!”


அவனிடம் எப்படி கேட்க? உள்ளுக்குள் பெரும் போராட்டம், அவளுள். தொண்டைக் குழி ஏறி இறங்க, “அப்புறம் கல்யாணப் பொண்ணு… கல்யாணமானதும் இந்த மாமன் மகனை எல்லாம் மறந்துடாத!” எனும் விசாவின் வார்த்தைகளில் அதிர்ந்து அவனை ஏறிட்டாள், பிருந்தா.


அவனது வார்த்தைகளில் அதிர்ந்து போனவள் கண்களில் கண்ணீர் தேங்கி, சரேலென வழிந்தது ஒற்றை துளி கண்ணீர். அப்போது தான் உணர்ந்தாள், அவனிடமுள்ள வித்தியாசத்தை. மனமோ படபடவென அடித்துக் கொள்ள, நம்ப முடியாது “மாமா!” உயிர் உருக்கும் குரலில் அழைத்தாள். அவளது மாமா எனும் அழைப்பில் இவனது உயிர் நின்று துடித்தது. அவளது அனுமதியின்றியே கண்கள் கண்ணீரை சொரிய ஆரம்பிக்க, உதடு கடித்து ஆர்ப்பரிக்கும் மனதையும், கண்களையும் அடக்க முயன்றாள்.

இவனிடம் சொல்லி, காதலனது துணைக் கொண்டு தந்தையிடம் பேச வேண்டும் என வந்திருந்த அவளது எண்ணம் அனைத்தும் அவனது வார்த்தைகளில் தவிடு பொடியானதை உணர்ந்துக் கொண்டாள்.


“ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுற?” தவிப்புடன் அவனது வார்த்தைகள் அனைத்தும் பொய்யாக இருக்க கூடாதோ எனும் வேண்டுதலுடன் அவன் முகம் காண, வழியும் கண்ணீரோ, அவனது வதனத்தை காண விடாது சதி செய்தது. அவளது கண்ணீர் குரலில், தளும்பும் விழிகளை அவசரமாய் சிமிட்டி சரி செய்துக் கொண்டவன், நொடியில் தன்னை சீர் செய்துக் கொண்டான்.


சாரல் அடித்தது….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top