சாரல் 27(1)

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

சாரல் 27(1) பதிவு செய்துட்டேன். நலம் விசாரித்த, தங்களுக்கு தெரிந்த குறிப்புகள் சொல்லி அக்கறை காட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இன்னும் முழுதாக சரியாவில்லை தான். லேசாக வலி இருக்கு.

இப்படியே விட்டா உங்களுக்கும் கஷ்டமாக இருக்கும் என சிறிய பதிவாக போட்டு இருக்கேன் மக்களே. தீவிரமாக கதை பதிவுகள் தரனும் என்று நினைக்கும் போது தொடர் வேலைகள் உடல் நலக் குறைவு என்னை வச்சு செய்யுது மக்களே. என்னோட நிலையை புரிந்துகொள்வீங்க என நம்புறேன்.

போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. உங்களது ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 27

அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள், பிருந்தா. மனம் எங்கும் வேதனையே பரவியிருக்க, உயிர் உடலை விட்டு பறந்து விடாதா எனும் ஏக்கம் அவள் அகமெங்கும் வியாபித்திருந்தது. கண்கள் இரண்டும் தொடர் அழுகையால் சிவந்து வீங்கி, பார்க்க என்னவோ போல இருந்தாள், மாது. அக்காவின் நிலைக் கண்டு, வருந்திய முகுந்தன், “அக்கா கொஞ்சமாச்சும் சாப்பிடுக்கா! இப்படியே நீ சாப்பிடாம இருந்தா உன் உடம்பும் கெட்டுடும்க்கா! ப்ளீஸ்கா கொஞ்சமாச்சும் சாப்பிடேன்!” கையில் தட்டை ஏந்திக் கொண்டு தமக்கையிடம் கெஞ்சினான் தம்பி.


“எனக்கு வேண்டாம்டா! தயவு செஞ்சு அதை எடுத்துட்டு போ!” உணர்வுகள் மரத்த குரலில் உறுதியாய் மறுத்தாள். “நீ சாப்டாம நானும் சாப்பிட மாட்டேன்!” அப்படியேனும் தமக்கையின் தொண்டைக் குழியில் ஒரு வாய் உணவாவது இறங்கி விடாதா? எனும் ஏக்கம் அவனிடம். அவன் புறம் மெல்ல தனது பார்வையை செலுத்தியவள், “ம்ம்ச் இப்படியெல்லாம் பேசி என்னை மேற்கொண்டு சங்கடப்படுத்தாத முகுந்த். இப்ப நான் சாப்பிடாம இருந்தா மட்டும் ஒன்னும் மாறப் போறதுமில்லை!” முற்பாதியை சத்தமாய் தம்பியிடம் சொன்னவள், பிற்பாதியை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

உடன் பிறந்தவளின் விட்டேறியான தோற்றம் அவனுள் ரத்தம் வடிய செய்ய, தளும்பும் கண்களை தனது சட்டையில் துடைத்துக் கொண்டான். அவன் சென்றதும், மீண்டும் கால்களை குறுக்கி அதில் தலை கவிழ்ந்துக் கொண்டாள், பெண். மனம், கடந்து சென்ற நாட்களை வலியோடு அசைபோட்டது.

அன்று…

விஷ்வாவும் பிருந்தாவும், மனதில் பரவியிருந்த இனிமையுடன் வீடு வர, வாசலில் அமர்ந்திருந்தார், முத்துவேல். தந்தையை கண்டவுடன் முகம் விகசிக்க, அப்பா என்றழைத்தபடியே மகள் தந்தையிடம் விரைய, தந்தையை கண்டவுடன் தன்னை மறந்து ஓடும் காதலியை சிறு புன்னகையுடன் தான் பார்த்திருந்தான், காதலன். முத்துவேலின் கண்கள் மகளை அவளையும் அறியாது கூர்மையுடன் அளவிட்டது யாருக்குமே தெரியாமல் தான் போனது.

“எங்கடா போய்ட்டு வர? மகளிடம் கேட்க, “நம்ம வயலுக்கு தான்ப்பா!” எந்த விகல்பமுமின்றி பதிலளித்தாள், மகள். “ஒஹ்!” என்றவரிடம் ஓர் ஆழ்ந்த அமைதி. “சரி நீ போ!” மகளை உள்ளே அனுப்பியவரின் கண்கள் அடுத்து விஷ்வாவிடம் நிலை பெற்றது.
மாமனின் பார்வை தன் மீது படியவும், அவரைக் கண்டு வரவேற்பாய் புன்னகை புரிந்தவனுக்கு தெரியாது, அவர் தனது புன்னகையை களவாடத்தான் வந்திருக்கிறாரென!

“எப்படி இருக்கீங்க மாமா? இப்பதான் வந்தீங்களா? அத்தை வந்துருக்காங்களா?” வரிசையாய் கேள்வி எழுப்பியபடி அவன் கண்கள் தனது அத்தையை உள்ளே தேடியபடி இவரிடம் திரும்ப, அதுவரை அவன் மீது ஆராய்ச்சியை தனது பார்வையை பதித்திருந்த முத்து, “கீதா உள்ள இருக்காப்பா!” என்றார்.

“ஒஹ்! பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா மாமா?” அகத்தில் இருந்து உண்மையான அக்கறையுடன் கேட்க, “ம்ம்ம் ம்ம்ம்!” என்று தலையை மட்டும் ஆட்டினார் முத்துவேல்.


“வேலையெல்லாம் எப்படி போகுது விஷ்வா?” மெதுவாய் ஆரம்பிக்க, “ம்ம்ம் அதுகென்ன மாமா எல்லாம் சூப்பரா போகுது!” அகம் நிறைந்து பதிலிறுத்தான், விஷ்வா.

“அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க விஷ்வா?” அவர் கேட்க, புரியாது நோக்கினான். “இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை செய்வ?” வார்த்தைகளில் உட்பொருள் வைத்து பேச, நிச்சயமாய் அவனுக்கு புரியவில்லை.

“எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மாமா! இந்த வேலை சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்கு தான். நம்ம வயல் தோப்பு எல்லாம் இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனி ஆரம்பிக்கணும் மாமா. நம்ம பக்க மக்களுக்கு எல்லாம் வேலை கொடுக்கணும்! அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறனும் என்னோட கம்பெனிய லீடிங் கம்பெனியா ஆக்கணும்!” விழிகளில் எதிர்கால கனவுகள் மின்ன மாமனிடம் தனது எதிர்கால லட்சியத்தை விவரித்துக் கொண்டிருந்தான், விஷ்வா.

அவன் சொல்வதை எல்லாம் ஒருவித அலட்சிய பாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார், முத்துவேல். கனவுலகில் மிதந்தபடி, தனது எண்ணக் கிடக்கை வெளியிட்டவனை நினைவுலக்கு மீட்டு வந்தது முத்துவேலின் குரல். “இதெல்லாம் நடக்குற காரியமா விஷ்வா? நீயும் உங்க அப்பா மாதிரி வயல் தோட்டம்னு நீ படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ண போறியா? பேசாம ஒரு ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு ஒரு கவர்ன்மென்ட் வேலையில உட்கார்ந்துட்டீனா வாழ்க்கை முழுக்க கடைசி வரை நீ ராஜாவா இருக்கலாம்!”


அவரது வார்த்தைகளை கேட்டு புன்னகை சிந்திய விஷ்வா, “எனக்கு யாருகிட்டயும் கை கட்டி வேலை பார்க்க இஷ்டமில்லை மாமா! நமக்கு என்ன குறைச்ச மாமா? நம்ம ஒரு பெர்சென்ட் உழைப்பை கொடுத்தா அதுக்கு நூறு மடங்கு திருப்பி தர பூமி நமக்கு இருக்கும் போது எதுக்கு மாமா வெளிய எல்லாம் வேலை பார்த்துக்கிட்டு? கொஞ்ச நாள் கழிச்சு இந்த பக்கமே ஒரு பாக்டரி ஆரம்பிச்சுடுவேன் மாமா!” மாமனுக்கு தன்னை புரிய வைத்திடும் முனைப்பு அவனிடம்.

அவனது முயற்சி புரிந்தவராய், “ம்ம்ம் நல்ல ஐடியா தான்ப்பா ஆல் தி பெஸ்ட்!” என்பதுடன் முடித்துக் கொண்டார் மனிதர்.
“சரிங்க மாமா நான் கிளம்புறேன். அத்தைக்கிட்ட சொல்லிடுங்க!” என்றபடி அருகில் இருக்கும் தனது வீடு நோக்கி சென்றான், விஷ்வா. செல்லும் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தார், முத்துவேல். அந்த நொடி தனது மனதில் இருக்கும் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமானார். தாயைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கொண்டு சுற்றினர், உடன் பிறப்புகள் இருவரும். மனம் கவர்ந்தவனிடம் தனது அகத்தை வெளிப்படுத்திய மகிழ்வில், பிருந்தாவின் கண்களும், வதனமும் என்றும் இல்லாத வகையில் தனி பொலிவுடன் மின்னியது.
காலை உணவு முடிந்து அக்கடாவென அமர்ந்திருந்த முத்துவேலிடம், சில பல சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பின், “தம்பி பிருந்தாவுக்கும் கல்யாண வயசு வந்திடுச்சு….” தந்தையின் எங்கு வருகிறார் என புரிந்தாலும், அவரை பேசவிட்டு அமைதியாக இருந்தார், முத்துவேல்.
“ம்ம்ம் நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா!” முத்துவேலே எடுத்துக் கொடுக்கவும், உற்சாகமான சிவசிதம்பரம், “ம்ம்ம் எனக்கு தெரியும்ப்பா! நம்ம விஷ்வாவுக்கு பேத்தியை….” என்றவரை இடையிட்டு,
“அப்பா… அந்த பேச்சை மட்டும் எடுக்காதீங்கப்பா. வேற எதை பற்றியாவது பேசுங்க!” என்றும் இல்லாத நாளாய் தந்தையிடம் தீர்க்கமாய் அழுத்தமாய் சொன்னார், முத்துவேல்.

மகனின் அழுத்தமான குரலிலே திகைத்துப் போயிருந்த சிவசிதம்பரம், “ஏன்ப்பா நம்ம விஷ்வாவுக்கு என்ன குறைச்சல்? அவனை மாதிரி தங்கமான பையன் ஊருல எங்க தேடுனாலும் கிடைக்காது! நம்ம கண்ணு எதிர்க்கவே வளர்ந்த பையன். ஒரு குத்தம் குறை சொல்ல முடியாது. ரெண்டு பேருக்கும்…!” என்றவரை மீண்டும் இடையிட்ட மைந்தன்,
“அப்பா சென்னையில வி.என். எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனியோட பையன் நம்ம பிருந்தாவை எங்கேயோ பார்த்திருக்காராம். உடனே பிடிச்சு போய் என்கிட்டே கேட்டாங்க. நானும்!” மைந்தனை இடையிட்டார், தந்தை.

“நீ… நீயும் எங்களை கலந்துக்காம முடிவு சொல்லிட்டியா?” தளர்ந்துப் போன குரலில் கேட்டார், தந்தை. “அப்பா உங்களை கேட்காம எப்படிப்பா நான் முடிவு பண்ணுவேன்?” என்றவரின் வார்த்தைகள் அவர்களை நோக்கி வந்த சுந்தரைக் கண்டதும் நின்று போனது.


“வாயா!” சிவா வரவேற்க, “என்ன மாப்பிளை ஆளு கிறங்கி போய்ட்டியேயா! வேலை அதிகமோ?” நண்பனின் மீதான அக்கரையில் கல்மிஷமின்றி கேட்டார், சுந்தர்.
“அப்படியெல்லாம் இல்லடா” பட்டும் படாமலும் முத்துவேல்.
“உனக்கு பிடிக்குமேனு நம்ம கருப்பனிடம் அயிர மீனு சொல்லி வச்சிருந்தேன்! காலையில வீட்டுல கொண்டு வந்து கொடுத்தான். இப்பதான் பிடிச்சது. பிரெஷா இருக்குடா! தங்கச்சி அருமையா வைக்கும்!” என்றபடியே தங்கையை தேடி பையுடன் சென்றார்.

செல்லும் அவரையே பார்த்திருந்த முத்துவேலின் மனம் லேசாய் குறுகுறுத்தாலும், அதனை தலையை தட்டி அடக்கி வைத்து, எதேச்சையாய் தன்னையே பார்த்திருக்கும் தந்தையின் பார்வையை சந்தித்தார், மனிதர்.

“பார்த்தியா! உன் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பவனின் அன்புக்கு முன்னால், நீ நினைக்கும் பணமும் பகட்டும் ஒன்றுமே இல்லை!” என சொல்வது போல இருந்தது, அவர் பார்வை. தந்தையின் பார்வையை சந்திக்க முடியாது, அவரது அகம் தடுக்க, தனது பார்வையை தழைத்துக் கொண்டார், முத்துவேல். மகனை தீர்க்கமாய் சில நொடிகள் வெறித்த சிவசிதம்பரம், “காசு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிள்ளை வாழ்க்கையை பாழாக்கிடாத!” என்றவர் தனது துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு உள்ளே சென்றார்..

மனம் ஒரு நொடி உறுத்தினாலும், அவரது தான் எனும் அகம் தடுக்க, தனது முடிவில் தீர்க்கமாய் நின்றார், மனிதர். தான் எடுக்கும் முடிவுகள் சரியானதே என்று தீர்மானமாய் அவர் எடுத்த முடிவுகளின் முடிவில் அவர் மீது அன்பு கொண்டிருந்த ஜீவன்களின் ஜீவனை மரித்துப் போக செய்திருந்தார், முத்துவேல்.

சாரல் அடித்தது….

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top