சாரல் 26

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

சாரி இந்த முறை பதிவு தாமதம் ஆகிடுச்சு. போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களோட ஆதரவு இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை.

அதே மாதிரி கதையை சரியா கொண்டு போறேனா என பெரிய கேள்வி எனக்கு இருக்கு. அதை தீர்த்து வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு நட்பூஸ். உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்.

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 26

குளிர் காற்று இதமாய் முகத்தில் மோத, மனதுக்கு இனியவனுடனான அந்த பயணத்தை வெகுவாக ரசித்தாள், பிருந்தா. அவளது தோளில், தூங்கி விழுந்த முகுந்தனை தனது பக்கம் சாய்த்துக் கொண்டான், விஷ்வா. பேருந்தில் மூவர் அமரும் இருக்கையில் ஜன்னல் புறம் பிருந்தாவும், நடுவே முகுந்தனும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அரணாய் விஷ்வா. நினைவு தெரிந்து பெற்றோரின்றி மேற்கொள்ளும் பயணம் என்பதே பெண்ணுக்கு மகிழ்வை கொடுத்தது என்றால், அகம் நிறைத்தவன் உடனான பயணம் என்பது கூடுதல் மகிழ்வை தந்தது.

சரண்யாவின் நிச்சயத்திற்கு தான் சென்னை பயணம். ஆமாம் பெற்றோர் பார்த்து வைத்த வரன். அவளுக்கும் மறுக்க எந்த காரணமின்றி போக மகிழ்வாய் தலையை ஆட்டிவிட்டாள். இப்போது நிச்சயம், படிப்பு முடிந்ததும் திருமணம் என பேசி, மாப்பிள்ளை வீடு சென்னையில் தான் நிச்சயம் வைக்க வேண்டும் என்றுவிட அந்த பொருட்டே இந்த பயணம். மகளை அவ்வளவு தூரம் அனுப்ப பெற்றவர்கள் தயங்க, சரண்யா குடும்பத்தோடு தான் அழைத்தாள், இவர்களால் வரமுடியாதபடி போக, தயங்கினர் பெற்றோர்.

வழமை போல கீதாவே எடுத்துக்கொடுக்க, இதோ விஷ்வா, முகுந்தனுடன் பிருந்தாவின் பயணம். முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு உள்ளே பனியின் குளுமையை அனுபவித்தாள் பெண். அவளது முகம் காட்டும் வர்ணஜாலங்களை ரசித்தான், ஆணவன்.

சென்று அடைந்ததும், தோழியைக் கட்டிக்கொண்டு ஆனந்த கூச்சலிட்டாள் மணப்பெண். நிச்சயம் நல்ல படியாய் நடக்க, சரண்யாவும், அவளின் வருங்காலமும், எதிர்கால கனவுகளில் திளைத்து, அதை கண்கள் வழி தங்களது இணைக்கு கடத்திக் கொண்டிருந்தனர். அதனை பார்த்த விஷ்வா பிருந்தா இருவருக்கும், அந்த இடத்தில் மனம் தானாய் தங்களை பொருத்தி பார்த்து மகிழ்ந்தது.

இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள, அதே நேரம் விஷ்வா பிருந்தா சொல்லி வைத்தார் போல தங்களது இணையை ஏறிட்டனர். நிச்சயம் முடிந்ததும் அக்கடாவென அமர்ந்த சரண்யாவிடம் கிளம்புவதாக சொல்ல, “என்னடி விளையாடுறீயா? ஒழுங்கா நாளைக்கு கிளம்பலாம் சொல்லிட்டேன். நாளைக்கு காலையில பீச் போகலாம். அப்புறம் நீங்க சாயங்காலம் பஸ் ஏறுங்க!” சரண்யா கட்டளை போல சொல்ல, தாய் தந்தையை நினைத்து சுணங்கினாள், பிருந்தா.



கண்களால் விஷ்வா அவளிடம் சம்மதம் சொல்ல, தெளிந்தாள், கோதை. அதனைக் கண்டு, “ம்ம்ம் மேலிடத்துகிட்ட இருந்து பெர்மிசன் வந்தா தான் மேடம் முகமே தெளியுது! இப்பவே இப்படி! இப்படியெல்லாம் இருந்தா சரிப்பட்டு வராது பிருந்தா! ரொம்ப கஷ்டம்!” சரண்யா பூடகமாய் சொல்ல, “தெய்வமே ஏன் இப்படி? இன்னைக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா? ஆளை விடுங்க!” சிட்டாய் பறந்தான், விஷ்வா.


மறுநாள் பொழுதும் அழகாய் விடிய, வெயிலும் அவ்வளவாக இல்லாதிருக்க, இவர்கள் படை கடற்கரையை நோக்கி பயணமாகியது. மழலையாக மாறி பிருந்தாவும், சரண்யாவும் குதூகலிக்க, அதனை இதழில் ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்திருந்தான், விஷ்வா.
சற்று நேரத்துக்கெல்லாம் விஷ்வாவையும் கைபிடித்து அழைத்தாள், சரண்யா. அவன் தயங்க, அவனையே பார்த்திருந்த பிருந்தாவை கண்டு தானும் அவர்களுடன் இணைந்துக்கொண்டான்.


சிறிது நேரம் கழித்து விஷ்வா கரையில் அமர்ந்து இவர்களையே பார்த்திருக்க, இன்னும் ஆட வேண்டும் எனும் எண்ணமிருந்தாலும், அவனோடு அமரவேண்டும் எனும் ஆசை உந்தித் தள்ள, சிறு இடைவெளி விட்டு அமர்ந்துக்கொண்டாள், பிருந்தா.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் முகுந்தனும், சரண்யாவும் இன்னும் நீரில் ஆடிக்கொண்டிருந்தனர். சிலுசிலுவென வீசும் வாடைக்காற்று, அமைதியாக காலைத் தழுவும் கடல் அலை என சூழல் மனதிற்கு இதமாக இருக்க, காலை கட்டிக் கொண்டு கடலை மெளனமாக வெறித்தனர். இன்னுமே இருவரும் காதலை பகிர்ந்துக் கொள்ளவில்லை. இருவருக்குமிடையே யார் முதலில் காதலை வெளிப்படுத்துவது எனும் தயக்கம் பிறகு விளையாட்டாக உருமாறியிருந்தது.


நீரில் ஆடிக்கொண்டே திரும்பி பார்த்த சரண்யா, இவர்களைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ள, அவர்களை நோக்கி செல்லப் போன முகுந்தனை தடுத்து, “டேய் விளையாடியதுல ரொம்ப பசிக்குது. வா எதாவது சாப்பிட்டுட்டு வரலாம்!” அவனை திசை திருப்பி அழைத்து செல்ல, பாதி வழியில், “அக்கா அவங்ககிட்ட நம்ம சொல்லவே இல்லையே! நம்மளை காணோம்னு வேற தேடுவாங்க!” வேகமாய் சரண்யா சுதாரிப்பதற்குள் அக்காவை நோக்கி ஓடி இருந்தான், முகுந்தன்.

ஓடி வந்தவன் அதிர்ந்து நின்றான். பிருந்தா விஷ்வாவின் தோளில் தலையை சாய்த்து அமைதியாய் விழிமூடி அமர்ந்திருந்தாள். அவளது தலை மீது பக்கவாட்டாய் தனது தலையை சாய்த்து அமைதியாய் கடலை ரசித்துக் கொண்டிருந்தான், விஷ்வா. அதிர்ந்துப் நின்ற முகுந்தனை தீண்டியது சரண்யாவின் கரங்கள். இன்னும் அதிர்வில் இருந்து மீளாதவனாக அவன் சரண்யாவை ஏறிட சிறு புன்னகையுடன் இருவரையும் பார்த்தவள், அதே புன்னகையோடு முகுந்தனை பார்த்திருந்தாள்.


அவர்களது மோன நிலையை குறுக்கிடாது தம்பியின் கை பிடித்து தள்ளி அழைத்து வந்தாள். “அக்கா அக்கா!” பேச முடியாது முகுந்தன் தடுமாற, “அக்கா அது அது அக்கா…!” இன்னும் அவனுக்கு திக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு, “நீ என்ன நினைக்கிறியோ அது தான் முகுந்த் கண்ணா!” சத்தமின்றி அதிர வைத்தாள், சரண்யா. அதில் இன்னும் அதிர்ந்துப் போய் முகுந்தன் அக்காவின் தோழியை ஏறிட, “அப்போ அப்போ உ… உன்… உங்களுக்கு… மு… !” எப்படி கேட்பது என அவன் திணற, அதற்கு அவசியமேயின்றி, ”ம்ம் தெரியும்!” என்றாள், சரண்யா.

“ஏன் அக்கா நீங்க இதை சொல்லல?” ஏற்க முடியாது அவன் வினவ, “உன்னோட சிட்டுவேஷன் எனக்கு புரியுது முகுந்து! ஆனா விஷ்வாவை விட பெஸ்ட் பேர் உங்க அக்காவுக்கு இந்த உலகத்துலயே நீங்க எங்க தேடினாலும் உங்களுக்கு கிடைக்காது! இதுல என்ன தப்பு இருக்கு! இன்பாக்ட் இன்னைக்கு வரைக்கும் ரெண்டு பேரும் அவங்களோட காதலை சொன்னதில்லை. மத்தவங்களை மாதிரி எங்கேயும் சுத்தினதில்லை! ஏன் கை பிடிச்சுக்கிட்டதில்லை!”


ஆம் இருவரும் தங்களது காதலை தங்களுக்குள்ளே வைத்து ஆழ்ந்து அனுபவித்தனர். ஏனோ இருவருக்கும் மற்றவரை போல சுற்றும் எண்ணம் கூட தோன்றியதும் இல்லை. சிறுவயதில் இருந்தே கூடவே இருந்ததா? இல்லை தங்களது காதலுக்கு மொழி தேவையில்லை தங்களது விழியின் மொழியே போதும் என்று இருவரும் ஒன்று போல நினைத்ததா? இல்லை தங்களது காதலுக்கு தடையேதுமில்லை எனும் கண்ணுக்கு தெரியாத, பெற்றவர்கள் மேல் இவர்கள் வைத்த நம்பிக்கையா? தைரியமா? எதோ ஒன்று! சொல்லாத காதல் செல்லாது என்ற உண்மையை யார் இவர்களிடம் சொல்வர்?


தம்பியே ஆனாலும், தோழியின் காதலை தவறாக நினைத்துவிடக் கூடாது எனும் எண்ணம் அவளுக்கு. அதே நேரம், அவன் பின்னாளில் இதையே சலுகையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமும் தான். சரண்யாவின் வார்த்தைகளில் சற்று தெளிந்தவன், அக்காவுக்கு இவர் ஏற்றவர் தான்.


எந்த குறையும் சொல்ல முடியாத, தங்களை சிறுவயதில் இருந்து உணர்ந்தவர் என மனதினுள் நினைத்துக் கொண்டான், முகுந்தன். நேரம் வஞ்சமில்லாது கடக்க, குரலை செருமிக் கொண்டவன், அவளை பார்க்க, அவனது பார்வை உணர்ந்து தானும் நிமிர்ந்து பார்த்தாள். தான் எழுந்துக்கொண்டு அவள் எழ கை நீட்ட, தனது மையிட்ட நீள் விழிகள் மேலும் விரிய அவனையே இமைக்காது பார்த்திருந்தாள். அவளது கண்களில் இன்னும் சிறிது நேரம் என்ற கெஞ்சல் இருக்க, அதனை மறுக்க முடியாது முகுந்தனை தேடினான், விஷ்வா. எதுவோ தோன்ற தங்களது இருவர் பெயரையும், சுருக்கி, “விஷு பிந்து” என வரைந்தவள், அதனை சுற்றி இதயம் வரைந்தாள். மென்மையாக தனது விரல் கொண்டு அதனை வருடியவள், மனமோ என்றும் இல்லாத நிம்மதியை அடைந்திருந்தது.


பிருந்தாவை அழைக்க வந்த விஷ்வா இதனைக்கண்டு குறுநகை பூக்க, அரவம் உணர்ந்து திரும்பியவள், மாட்டிக்கொண்ட பாவனையில், நாக்கை கடித்துக் கொண்டாள். அவள் செய்கையில் அவனின் புன்னகை பெரிதாக, தூரத்தில் தனது கைகளில் கேமரா வைத்திருந்த சரண்யா, அவர்களுக்கே தெரியாது அந்த தருணத்தை படம் பிடித்துக் கொண்டாள்.

“போலாமா?” விஷ்வா கேட்க, சம்மதமாய் தலையாட்டிவள், எழுந்துக்கொண்டாள். பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி இருவரும் வர, வேகமாய் அவர்களை நெருங்கிய சரண்யா, “நீங்க போங்க நான் வந்துடுறேன்!” என்றபடியே அவர்களை கடந்து சென்றவள், அவர்கள் நின்ற இடத்தை பார்க்க, பார்த்தவள் முகமோ மென்மையை தத்தெடுத்துக் கொண்டது. பிருந்தா எழுதியதை தனது கேமராவில் சேமித்துக் கொண்டவள், அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள். முகுந்தனும் தனக்கு விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை.


அந்த விடுமுறைக்கு விஷ்வாவுடன் உடன்பிறப்புகள் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, கணவனை முன்னிட்டு கீதா வரவில்லை. இவர்கள் இருவரும் மற்றவர் அறியாது காதல் மொழி பேச, அனுபவஸ்தரான சிவசிதம்பரத்தின் கண்களுக்கு இவர்களின் கிள்ளை மொழி தப்பவில்லை. இருவரையும் கண்டு அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டார், மனிதர். மகன் ஊருக்கு வரும்போது இதுபற்றி பேச வேண்டும் என மனதினுள் நினைத்துக் கொண்டார், தந்தை.

ஊரில் வழக்கம் போல விஷ்வாவை வால் பிடித்துக்கொண்டே திரிந்தனர் இருவரும். முகுந்தன் உறங்கிக் கொண்டிருக்க, விஷ்வாவை வீட்டில் காணாது தேடிய பிருந்தா அவனைத் தேடி தங்களது வயலுக்கு விரைந்தாள். அவளை ஏமாற்றாது அங்கே தான் இருந்தான் அவளின் எண்ணத்தின் நாயகன். துள்ளலாய் அவன் முன் சென்று நிற்க, அவளை அந்த நேரம் எதிர்பாராதவன் சந்தோசமாய் அதிர்ந்து போனான். “ஹே நீ எங்க இப்படி? அதுவும் இவ்வளவு சீக்கிரமா?”


பின்னே சூரியன் உதிப்பதையே கண்டிராத பிருந்தா, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வந்திருந்தாள், அவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? இல்லையா? அவனது கேள்வி புரிந்து முறைத்தவள், கழுத்தை வெட்டிக்கொண்டு திரும்ப நடக்க போக, “ஹே சும்மா சொன்னேன்!” என பதறி போய் காதில் கை வைத்து மன்னிப்பு கேட்டான்.

மழை காலமாதலால் சூரியன் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருக்க, வெளிச்சம் பரவியும், வெளிவராத உதயனை நினைத்து, ‘கொய் மொய்’ என பறவைகள் கூக்குரலிட, சிலிர்த்து போய் நின்றாள், பிருந்தா. கிழக்கு வானை பார்த்தவன், வேகமாய் அவள் கைப்பிடித்து சென்றான். அவனது இழுவைக்கு என்ன ஏது என எதுவும் கேட்காது உடன் சென்றாள், கோதை.

தன்னைக் காணாது தவிக்கும் புள்ளினங்களின் குரலுக்கு செவி மடுத்த செங்கதிரோன், மெல்லமாய் தனது கரங்களை நீட்டி சோம்பல் முறிக்க, வயலின் வரப்பை தாண்டி ஒரு உயரமான மேட்டினை அடைந்த விஷ்வாவை பின்பற்றி தானும் அங்கே பார்வையை பதித்தாள், பிருந்தா.

காலை பொழுது ரம்மியமாக அமைய, அவனது கைகளுக்குள் தனது கைகளை கோர்த்துக் கொண்டவள், “இதே மாதிரி… உன் கூட…. காலையில, இப்படி உன் கையை பிடிச்சிக்கிட்டு உன் தோள்ல சாஞ்சிக்கிட்டு இந்த “கீச் கீச்” சத்தம், காலைல வீசுற இந்த சிலு சிலு காத்து, பால்கனில நின்னுக்கிட்டு ஒரு கப் காப்பியோட சூரிய உதயத்தை என் வாழ்நாள் முழுசும் பார்க்கணும்!” எனும் பிருந்தாவின் காதல் மொழியில் சந்தோசமாய் அதிர்ந்தான், விஷ்வா.

இதை விட வேற என்ன வேண்டும் அவனுக்கு? தனது மனதிற்கு இனியவள், தனது மனதை வெளிக்காட்டி இருக்க, சந்தோஷ கூத்தாடினான், கோமகன். திகைப்பு மாறாது அவன் அவளையே விழி எடுக்காது பார்த்திருக்க, உணர்ச்சி வேகத்தில் தனது மனம் திறந்திருந்த பிருந்தாவும், அவனிடம் அரவம் இல்லாது போகவும் தனது பார்வையை அவனிடம் திருப்ப, கதிரவனுக்கு இணையாக ஜொலி ஜொலிக்கும் அவனது வதனம் கண்டு அப்போது தான் தனது செய்கையை உணர்ந்தாள், வஞ்சி. சட்டென முகிழ்த்த வெட்கத்தினால், அவனது விழி வீச்சை தாள முடியாது தலையை குனிந்துக் கொண்டாள், பாவை.

பாவையவள் தயக்கம் துறந்து தனது மனதை வெளிபடுத்தியிருக்க, ஆணவன் அவன் மனதினை வெளிபடுத்தும் வேளை தான் வாய்த்திடுமோ?


சாரல் அடிக்குமா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top