சாரல் 23

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,


சாரல் 23 பதிவு செய்துட்டேன். எனக்கு லைக் கமெண்ட் செய்து ஆதரவு தரும் நட்பூஸ் அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் fb இழுக்குது. நானும் சீக்கிரமே முடிக்க தான் நினைக்கறேன். ஆனா இப்படி தான் எனக்கு வருது. சோ யாரும் கோச்சுக்காம படிங்க ப்ளீஸ்.


படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,


நான் உங்கள்

சுதீக்ஷா ஈஸ்வர்




சாரல் 23


ஏனோ அன்றைய தினம் மகளின் நினைவு அதிகமாய் கீதாவை தாக்க, அதனூடே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். மனமோ மகளைக் காண வேண்டும் என ஏங்கியது. ஆனால் அது முடியாதே! உடனே செல்ல முடியாத தூரத்தில் அவளிருக்க??? போய் பார்க்கவோ, இல்லை அவள் இங்கு வந்து சீராடும் சூழ்நிலையும் அவர்களுக்கு வாய்க்கவில்லையே! தங்களது நிலையை எண்ணி பெருமூச்செறிய மட்டும் தான் அவரால் முடிந்தது. மனம் இறுக்கமாக உணர, மெல்ல தங்களது அறையைவிட்டு மகளின் அறைக்கு வந்தவர், அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்களைக் கண்டு இதழ் விரித்தார்.



எதுவோ தோன்ற பரண் மீதிருந்த பழைய ஆல்பங்களை எடுத்தார். பல வருடங்களாக எடுக்காததால் தூசி படிந்திருக்க, தனது புடவையால் துடைத்தவர் கண்கள் அதனைத் திறந்தும் மென்மையாகிப் போனது. கண்களும் மனமும் பிள்ளைகளின் நினைவில் மென்மையாகியிருக்க, கரம் கொண்டு சிறுவயது பிருந்தாவின் படத்தை வருடினார். ஒவ்வொரு படங்களாய் திருப்பியவர் வதனத்தில், அப்புகைப்படங்களின் பின்னணியும் நினைவுக்கு வர, பழைய நினைவுகளில் ஆழ்ந்தார், கீதா. வரிசையாய் அனைத்து ஆல்பங்களையும் பார்வையிட்டவரின் கரங்களில் கடைசியாய் சிக்கியது, அது. தன்னுள் பல ரகசியங்களையும் பூகம்பங்களையும் புதைத்து வைத்துக்கொண்டு. அது பிருந்தாவின் கல்லூரி காலத்து ஆல்பம். அதிலிருந்த புகைப்படங்களை வரிசையாய் பார்த்துக்கொண்டே வந்தவர் கண்களில் பட்டது விஷ்வாவின் புகைப்படம்.

அந்த ஆல்பத்தில் பெரும்பாலும், முகுந்தன், விஷ்வா மற்றும் பிருந்தா சரண்யாவே நிறைந்திருக்க, அவர்களின் நினைவில் மலுக்கென நிறைந்தது நீர். கண்கள் கலங்க, கன்னத்தில் குழி விழுக, மாயக்கண்ணனாய் புன்னகைத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் புகைப்படத்தை மெல்ல வருடியது கீதாவின் கரங்கள். அவனது நிழலின் மீது ஒருதுளி நீர் சிதற, “இந்த அத்தை மேல உனக்கு என்ன கோவம் கண்ணா?” மானசீகமாய் மருமகனிடம் கேட்டார்.


கண்களை துடைத்துவிட்டு ஒவ்வொரு படங்களாக பார்த்துக் கொண்டிருந்தவர் இதழ்களில் சிறு புன்னகையும், விழிகளில் நீரும் நிறைந்திருந்தது. ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தவரின் கரம், அடுத்ததை திருப்ப முனையும் போது, ஒரு இடத்தில் அவர் பார்வை நிலைப்பெற்றது. கண்களில் கூர்மையை தேக்கி, வேகமாய் பார்த்தவர் விழிகள், அதிலேயே நிலைத்திருந்தது. மனம் அதிர, வேகமாய் அப்படத்தை கையில் ஏந்தியவர், கண்கள் அதையே வெறித்திருக்க, விழிகள் உணர்ந்த செய்தியில் மூளை செயல்பட மறுத்தது. அதிர்வில் கையிலிருந்ததை நழுவ விட்டவர் கண்களோ கலங்கி கண்ணீரை சொரிய, தொண்டையை விட்டு வெடித்து கிளம்ப முயன்றது, அழுகை.


அதே நேரம் மனையாளை தேடி வந்த முத்துவேல், மகளின் அறையில் வெளிச்சம் தெரியவும் அங்கே செல்ல, அவர் கண்களில் பட்டதென்னவோ, முகம் சிவந்து, கண்கள் கண்ணீரில் தத்தளிக்க, கீழே வெறித்துக் கொண்டிருந்த கீதாவை தான். அவரின் பார்வையை தொடர்ந்து தானும் பார்வையை செலுத்தியவர் தானும் அதிர்ந்துப் போனார். முகம் பதட்டத்தில் வியர்த்து விறுவிறுக்க, அந்த படமும், அதன் பின் நடந்தவையும் அவரை நிலையிழக்க செய்தது. தனது காலடியில் விழுந்திருந்த படத்தில் நிழலாட, கண்ணீர் வழிந்த கண்களோடு நிமிர்ந்தவர், கணவனிடம் ஆறுதல் தேடும் முனைப்புடன், “இந்த பொண்ணு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சேங்க!” என்றபடி கேவ, சில நொடிகள் கழித்து தான் கணவனின் அசைவற்ற நிலையை உணர்ந்துக் கொண்டார், கீதா.


முத்துவேலின் நிலைக் கண்டு பதட்டமானவர், “என்னங்க! என்ன பண்ணுது? நீங்க இங்க வாங்க! வந்து இப்படி உட்காருங்க!” அவரின் கைப்பற்றி படுக்கையில் அமர வைத்தவர், மின்விசிறியை சுழலவிட்டு, அடுக்களைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தவரின் நடை, கணவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனது.


அந்த புகைப்படத்தை தனது மாரோடு அணைத்தபடி, “ஐயோ சுந்தர்! டேய் சுந்தர்! ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டியேடா! எதிரில் இருக்கவன் மனசு நோக பேசக்கூட அவ்வளவு யோசிப்பியேடா! அப்படிப்பட்ட உன்னை… நா… நானே கொன்னுட்டேனே! நானே… உன் சாவுக்கு காரணம் ஆகிட்டேனேடா! அய்யோ என் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதா? நான் பண்ணின பாவத்துக்கு தான் இப்ப ஒரு பாவமும் அறியாத பிருந்தா தண்டனை அனுபவிக்கிறாளே! பெத்தவங்க பாவம் பிள்ளைங்களை தான் சேரும்னு சொல்லுவாங்க அது என்னோட விஷயத்துல உண்மையாகி போச்சே! யாருக்காக.. எது…க்காக நண்பன்னு என்னை உயிரா நெனச்சிருந்த உன்னை உயிரோட கொன்னனோ! அவ வாழ்க்கை கேள்வி குறியாகி நிக்குதே! ஐயோ இப்பவே நான் நெஞ்சு வெடிச்சு செத்தா என்ன! இதெல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோட இருக்கேனே! என் கண்ணு முன்னாடி வளர்ந்த பசங்களோட வாழ்க்கை என்னோட சுயநலத்தால நாசமாகி போச்சே!” என்ற முத்துவேலின் கதறலில், அதிர்வில் தனது கையில் இருந்த சொம்பை தவறவிட்டார், கீதா.


பாத்திரம் தவறி விழுந்த சத்தத்தில், திகைத்து நிமிர்ந்த முத்துவேல், மனையாளின் அதிர்ந்த பார்வையில் தன்னிலை அடைந்தார். கீதாவின் கண்களில் கண்ணீரும் அதிர்வும் சமமாய் விரவியிருக்க, “எ… என்…என்ன சொன்னீங்க? இப்ப என்ன சொல்…லிட்டு இருந்தீங்க? எங்கண்ணன் சாவுக்கு நீங்க தான் கா… காரணமா?” அதிர்வில் வார்த்தைகள் திணறலாய் திக்கி திக்கி வர, மனையாளை குற்றவுணர்வுடன் நேருக்கு நேர் பார்க்கமுடியாது தனது பார்வையை தழைத்தார், முத்துவேல். ஒவ்வொரு அடியாய் எடுத்து கணவனை நெருங்கி வந்தவர், “என்ன பண்ணுனீங்க? சொல்லுங்க… சொல்லுங்க? என்ன பண்ணி தொலைச்சீங்க?” மெதுவாய் கேட்டவர் கணவன் பதிலின்றி அமைதியாய் தலை குனியவும், பெருங்குரலில் சீறினார்.


“அப்ப உங்களுக்கு எல்லாமே முன்னாடியே தெரியுமா? சொல்லுங்க தெரியுமா? ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க?” அழுகையுடன் ஒலித்த கீதாவின் குரலில் தவிப்புடன் மனையாளை ஏறிட்டார், முத்துவேல்.


மகனருகில் படுத்திருந்த பிருந்தாவின் விழிகள் நேரே வெறித்திருக்க, கன்னங்களை இடைவிடாது நனைத்தது கண்ணீர். கடந்த காலத்தின் வலி நிறைந்த பக்கங்களை வலிக்க வலிக்க, திரும்ப புரட்ட ஆரம்பித்தது பெண்ணவளின் மனம்.




பிருந்தா கல்லூரியில் அடியெடுத்து வைக்க, விஷ்வாவும் தனது பணியில் மும்மரமாக இருந்த நேரமது. கல்லூரியில் அவளுக்கு கிடைத்த நட்பு தான் சரண்யா. நாட்கள் ஏகாந்தமாக பறக்க, கல்லூரியில் சரண்யாவுடனும், வீட்டில் விஷ்வாவுடனும் இனிதாய் கரைந்தது பெண்ணுக்கு.

ஒருநாள் சீக்கிரமே கல்லூரி விட, விஷ்வாவிடம் பிருந்தாவை அழைத்து வர சொன்னார், கீதா. சரண்யாவுடன் வாயிலில் பிருந்தா காத்திருக்க, “ஹே வாவ் எவ்ளோ அழகா இருக்கான்? யாருடி இந்த ஆணழகன்? இவ்ளோ நாள் நான் இவனை பார்த்ததேயில்லையே! ஹே அவன் நம்மளை நோக்கி தான் வரான்” என்ற சரண்யாவின் உற்சாக குரலில் யாரென திரும்பிப் பார்த்தாள், பெண். பார்த்தவள் கண்களோ அதிர்வில் விரிய, அங்கே அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்ததோ விஷ்வா. “ஒய்! அது எங்க விஷ்வா மாமா!” பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள், பெண்.


“யாரா இருந்தா என்னடி… என்னது உங்க மாமாவா! இப்படி ஒரு அழகான மாமா உனக்கு இருக்கிறதா என்கிட்ட நீ சொல்லவேயில்லையே!” விஷ்வாவையே பார்த்தபடி உரைத்தாள், சரண்யா. அவளது அசையாத பார்வையில் உள்ளுக்குள் ஏதோவொன்று பற்றிக்கொள்ளும் போல் இருந்தது பிருந்தாவுக்கு.

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டவளின் கண்களில் கனல் கூடியது. ஆனால் விஷ்வாவின் பார்வை அவளைவிட்டு அசையவில்லை.



“ஹே ஹே! கொஞ்சம் அவரை இன்டரடுஸ் பண்ணி வைடி. ப்ளீஸ் ப்ளீஸ்!” பிருந்தாவின் கைப்பிடித்து சரண்யா கெஞ்சவே ஆரம்பிக்க, “ம்ம்கும் முடியாது!” நிர்தாட்சண்யமாய் மறுத்தாள், பாவை.


“நீ பண்ணாட்டி என்னடி? நானே இன்ட்ரோ ஆகிக்கிறேன்!” என சரண்யா அவளை மேலும் சீண்ட, அதற்குள் அவர்களை அடைந்திருந்தான், விஷ்வா. அவர்களை கண்டு புன்னகைத்தப்படி வர, “வாவ் அந்த கன்னக்குழி சிரிப்பு இருக்கே சிரிப்பு! அதுல விழுந்தா எழுந்திரிக்கவே தோணாதே எனக்கு!” சரண்யா கூச்சமேயின்றி விஷ்வாவை வர்ணிக்க, “இவனை யாரு வர சொன்னா?” வாய்க்குள் முணங்கினாள், பிருந்தா.


“ஹாய்!” ஆளுக்கு முன்னே சரண்யா கையை நீட்ட, அவளைக்கண்டு திகைத்துப்போய் ஓரடி தள்ளி நின்றான். அவனது செய்கையில் காற்றுப்போன பலூனாய் பாவையின் முகம் சுருங்க, அதனைக் கண்டு குதூகலமாகிப் போனது பிருந்தாவுக்கு. “பாரு பாரு நல்லா பாரு! உனக்கு இது தேவை தான்!” எனும் பார்வை பார்த்தாள், தனது தோழியை.


சரண்யாவை தொடர்ந்து விஷ்வாவும் தனது பார்வையை அத்தை மகளிடம் செலுத்த, தனது பார்வையை திருப்பிக் கொண்டாள், பூவை. “ஹாய்! நான் சரண்யா பிருந்தா பிரின்ட்.” தானே முன்வந்து அறிமுகம் செய்துக்கொள்ள, “ஹாய்!” என்ற வார்த்தையுடன், சிறு தலையசைப்பு மட்டுமே அவளுக்கு பதிலாக கிடைக்க, வெடித்து கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டாள், பிருந்தா.


“ஓகே போகலாமா?” என்ற விஷ்வாவுக்கு ஒரு தலையசைப்பை பதிலாக தந்தாள், கோதை. பின்னே அமர்ந்தவள், நண்பியை கண்டு நாக்கு துருத்த, “போடி!” என வாயசைத்தாள், சரண்யா.


“என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள?” கேள்வியாய் விஷ்வா இருவரின் பார்வைக்கண்டு வரும் வழியில் கேட்க, “அது… அவ உன்னை இன்ட்ரோ கொடுக்க சொன்னா மாமா. நான் மாட்டேன்னு சொல்லவும் அவளே உன்கிட்ட பேசுறேன்னு சொன்னா… ஆனா நீ அவளுக்கு செம்மையா பல்பு கொடுத்துட்ட!” பிருந்தா நினைத்து நினைத்து சிரிக்க, “என்னது?” அதிர்ந்துப் போய் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான், விஷ்வா.


“ரொம்ப ஷாக் ஆகாத மாமா! நீ முதல வீட்டுக்கு போ! ரொம்ப பசிக்குது!” என பெண்ணவள் சொல்ல, சலிப்பாய் இருபுறமும் தலையாட்டிக் கொண்டு வண்டியை கிளப்பினான், விஷ்வா.


அன்று முழுதும் அவனைக் கண்டு குறும்பாய் சிரித்து சிரித்து வைத்தாள், பிருந்தா. அவன் அவளைக் கண்டு முறைக்க, உதட்டை சுளித்து அவனை நன்றாக வெறுப்பேற்றினாள். என்னவென்று கேட்ட கீதாவிடம், சொல்லாதே என விஷ்வா மறுக்க, “அப்போ எனக்கு சமோசா வாங்கிக் கொடு!” பேரம் பேசினாள்.



அடுத்த நாள் காலை, சரண்யா சோகமே உருவாய் அமர்ந்திருக்க, அவளைக் கண்டு குபீரென சிரிப்பு கிளம்பியது இவளுக்கு. “என்னடி கப்பல் கவுந்த மாதிரி சோகமா மூஞ்சியை வச்சிருக்க?” அவளை கேலி செய்ய, “என்னடி லந்தா?” என்றாள், சரண்யா.


“ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லடி!” வாய் சொன்னாலும், கண்கள் அப்பட்டமாய் அப்படி தான் என்றது. அதில் அவளை இன்னும் நன்றாக முறைத்தாள், சரண்யா.


“விடுடி! விஷ்வா இல்லனா ஒரு விஷ்ணு!” பிருந்தா சொல்ல, “ஐயைய அந்த பேச்சுக்கே இடமில்லை! மணந்தாள் விஷ்வா இல்லனா…” தொக்கி நிறுத்த,


“இல்லனா!” இழுத்தவள், “வேற யாரும் கிடைக்காமலா போய்டுவான்? அப்டி யாரும் கிடைக்கலானா, வீட்டுல ஒருத்தனை கட்டி வைப்பாங்க அவனை சைட் அடிக்க வேண்டியது தான்!” கண்ணடித்தாள், சரண்யா.


“அடிப்பாவி!” பிருந்தா வாயில் கை வைக்க, “சில் செல்லக்குட்டி! நீ ரொம்ப குட்டிப் பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது!” என்று வேற சொல்ல, தலையில் அடித்துக் கொண்டாள், பெண்.


“சரி சரி நீ சொல்லு உனக்கு அவர் எப்படி மாமா வேணும்?” சரண்யாவின் கேள்வியில் புருவம் சுருக்கியபடி, “எப்படினா?” எதிர்க்கேள்வி கேட்க, “அடியேய்! உன்னை…” பல்லைக் கடித்த சரண்யா,


“முறைப்பையனா?” சரண்யா.


“முறைப்பையனா?” என யோசித்தவள், தோழி தனது முகத்தையே ஆர்வமாய் பார்ப்பது கண்டு, “ம்ம்ம் அப்டியும் சொல்லலாம்” என இவள் இழுக்க, “உன்னை கொல்லபோறேன் பாரு! ஒழுங்கா சொல்லுடி என் செல்லமே! உனக்கு அவர் வெறும் மாமா தானே!” உயிரை கையில் பிடித்தபடி அவள் கேட்க,


“என்னடி லூசு உளறுற?” பிருந்தா. மூச்சை நன்றாக வெளியிட்ட சரண்யா, “அடியே அவர் உனக்கு வெறும் மாமாவா? இல்லை ஸ்பெஷல் மாமாவா?” என ‘ஸ்பெஷலில்’ அழுத்தம் கொடுத்து கண்ணடித்து கேட்க,


“லூசு அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!” முகத்தை சுளித்தபடி பிருந்தா சொல்ல,


“ஹப்பா! இப்பதாண்டி என் நெஞ்சுல பாலை வார்த்த! இனிமே ஒரு பிரச்சனையும் இல்லை. என் ரூட் கிளியர்!’ அப்படி ஒரு ஆசுவாசம் அவளுள்.


அவள் புரியாது பார்க்கவும், “நான் கூட உன்னை கட்டிக்க போறவர்னு நெனச்சு கவலைப்பட்டேன்டி!” என்றவள் விளக்க,


“அடியே அவர் என்னோட விஷ்வா மாமா!” பிருந்தா சிலிர்த்தெழ, “நீதான் அப்படி எதுவும் இல்லன்னு சொன்னலடி!” சரண்யா தோழியிடம் நியாயம் கேட்க,



“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆனா நீ அவரை பார்க்கக்கூடாது!” கட்டளை போல சொல்ல,


“ஏண்டி?”

“பார்க்க கூடாதுனா பார்க்கக்கூடாது! அவ்வளவுதான்!” என்றவளின் மனதில் இனம் புரியாத ஒரு எரிச்சல், தவிப்பு, பயம். அதனை இனம்காண அவளுக்கு தெரியவில்லை.



அங்கே தோழியை கலவரப்படுத்தி விட்டு வருபவள், இங்கே விஷ்வாவிடம் அதனை சொல்லி சொல்லி அவனை ஓட்டவும் செய்தாள். ஒருநாள் சரண்யா அவளிடம், “ஹேய் ஹே நீ என் உயிர் நண்பி தானேடி! எனக்காக ஒரு உதவி செய்ய மாட்டியா?” பலமான பீடிகை போட, என்னவென்று கண்ணால் வினவினாள், பிருந்தா.


“அது… அது… உங்க மாமாகிட்ட இந்த லெட்டரை நீ கொடுக்கணும்!” வெட்கத்தோடு சரண்யா அதனை நீட்ட, “என்னது இது? லவ் லெட்டரா?” சுவாரசியம் பொங்க தோழியிடம் கேட்க,


“ம்ம்ம்ம்!” தலையசைத்தாள் பெண். “கொடு பார்ப்போம்!” பிருந்தா பறிக்க போக, “ஏய் ஏய் இத நீ படிக்க கூடாது. நீ இதை அவர்கிட்ட கொடுத்தா மட்டும் போதும்!” படப்படப்பாய் சரண்யா சொல்ல,


“எவர்கிட்ட?” மூக்கில் புகை வராத குறையாய் பிருந்தா கேட்க, “அதான் உங்க விஷ்வா மாமாகிட்ட!” வெட்கபட்டபடி அவள்.


“என்னைத்தான் நீ படிக்க கூடாதுன்னு சொல்லிட்டியே! அப்போ எதுக்கு என்கிட்டே கொடுக்கிற? நீயே கொடுக்க வேண்டியது தானே!” சிலுப்பலாய் சொல்லிவிட்டு, முகம் திருப்பிக்கொண்டு முதுகு காட்டி அமர்ந்தாள், பிருந்தா.



“ஹேய் அப்படியா? எப்படிடி? எனக்கு பயமா இருக்கு!” என்றவளின் குரலில் பயமும், தவிப்பும் ஆசையும் சரிவிகிதத்தில் கலந்தொலித்தது. பிருந்தாவின் முதுகை சுரண்டியவள், “ஹேய் பிருந்தா! நீ உங்க மாமாவ நம்ம காலேஜ் பக்கத்துல இருக்க அந்த பேக்கரிக்கு கூட்டிட்டு வரியா?” சரண்யா கெஞ்சலாய் கேட்க,


“கூட்டிட்டு வந்தா எனக்கு என்ன வாங்கி தருவ?” பட்டென திரும்பிய பிருந்தா பேரம் பேச, உடனே சரண்யாவின் கண்கள் மின்ன, முகம் பளிச்சென்றாக, “ நீ என்ன கேட்டாலும்…!” என வாக்கு தந்தாள்.



“சரி பேச்சு மாறக்கூடாது! நாளைக்கு பாக்கலாம்!” பிருந்தா சொல்லவும், கலர் கலராய் கனவுகள் விரிந்தது பெண்ணுள். அன்று இரவு பிருந்தா விஷ்வாவிடம், “நாளைக்கு நீ வந்து என்னைய காலேஜ்ல விடு மாமா!” சலுகையாய் கேட்க, புருவம் சுருக்கி அவளை பார்த்தான் விஷ்வா.

“என்ன விஷயம்?” புருவம் உயர்த்தி அவன் கேட்க, என்ன சொல்வதென தெரியாது திருதிருவென முழித்தாள், பெண். அதில் மேலும் சந்தேகமடைந்தவன், “ஒய் என்னை வச்சு என்ன பிளான் பண்ணியிருக்க?”


“அது… அது உன்னை வச்சு நான் என்ன பிளான் பண்ணியிருக்க போறேன்? சும்மா கூப்பிட்டேன் அவ்வளவுதான்!” சிறு தோள் குலுக்கலுடன் அவள் சொல்ல, “உன் முகத்தை பார்த்தா நம்புற மாதிரி இல்லையே!” விஷ்வா சொல்ல,


“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு. டெய்லியும் பஸ்ல வர கஷ்டமாயிருக்குன்னு தான் ஒரு நாள் உன்னை கூப்பிட்டேன். அதுக்கு ரொம்பதான் பிகு பண்ணிக்கிற!” முகவாயை தோளில் இடித்தபடி வாய்க்கு வந்ததை அவள் சொல்ல, இன்னும் முழுதாய் அவளை நம்பாவிட்டாலும், அவள் சொன்ன கஷ்டமாயிருக்கு என்ற வார்த்தையில், அவனது சந்தேகமனைத்தும் கரைந்து காணாதுபோய்விட,


“சரி சரி கோச்சுக்காத பிந்துக்குட்டி! மாமா நாளைக்கு வரேன்!” என்று வாக்கு கொடுத்தான் விஷ்வா. மறுநாள் அவள் கேட்டுக் கொண்டபடியே அவன் பிருந்தாவுக்காக காத்திருக்க, சரண்யா அவனுக்காக காத்திருக்க, தனக்கு அதிர்ச்சியளித்த சரண்யாவுக்கு அதிர்ச்சி அளித்தான், விஷ்வா.



சாரல் அடித்தது….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top