சாரல் 20

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,


எல்லாரும் எப்படி இருக்கீங்க? வழக்கம் போல இந்த முறையும் நான் லேட். காரணம் சொல்லி சமாளிக்க நினைக்கலை. ஆனா எழுத நேரமும் மனதும் இல்லை என்பது தான் உண்மை.


சாரி என்ன முயன்றாலும், கால தாமதம் ஆகிடுது. இனிமே எந்த சபதமும் எடுக்க கூடாதுன்னு நினைக்கிறேன். சாரல் அடுத்த பதிவு போட்டுட்டேன். உங்க அன்பும் ஆதரவும் தான் எனக்கு வேண்டும். குழந்தை பிள்ளைய மன்னிச்சு விட்ருங்க மக்கா. And a special thanks to thavaselvi ganeshan sis, saraswathy gurusamy sis, revathi TS sis, fathi naz sis and that 5 star koduththa peyar theriyatha 2 anbu ullangal, அஞ்சாயாள் சண்முகம் sis, saras hp sis, kalai karthi sis, MSmurthy sis, shobha kalirajan sis, Anita karan sis, vanajavanesh sis, vijaydharuayar sis, renuga rajan sis, vijirsn1965 sis, revathi D sis, rajam rajam sis, eswarikasirajan sis, saro jaa sis, padma vathy sis, rohini kanishka sis, bharathi raman sis, velvizhi gowrikanthan sis, sathvika elango sis, sembaruthi sis, sumee sis, lakshmi murugan sis, kavithadhananrajan sis, sundara ganesan sis, poova sis, sathya.A sis, siva geetha sis, ums sis, sanju saraka sis, kalai karthi sis, veena sis, suganya 17 sis, kavitha subramani sis, valli mano sis, venmathi m sis, elakkiya prakash sis, devitamil sis, sumee sis, rsakthi sis. Unga ellarukum ennoda special thanks.


இந்த பதிவையும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்துங்க மக்களே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்

சாரல் 20


முரளியின் கை அணைப்பில் செல்லும் பிருந்தாவையே வேதனையுடன் பார்த்திருந்தான், விஷ்வா. கலங்க துவங்கிய கண்களை கட்டுக்குள் வைக்க பெரும்பாடு பட்டான். அவனது கண்ணில் அவளுக்கான பரிவு தான் இருந்தது. முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு கைகளை விலக்கும் போது அவன் முன் பிரசன்னமாகி இருந்தாள், அபிரக்ஷிதா. அவளது முகத்தை கூட காணாது, “போகலாம்!” ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு முன்னே நடந்தான். காரில் எங்கும் அமைதியே படிந்திருந்தது. அபி அடிக்கடி கணவனது முகத்தையே திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தாள்.

கண்ணீருக்கு கரையிட முயன்றதால், கண்கள் சிவந்து தெரிய, அது அவனது மனப் போராட்டத்தை பறை சாற்றியது. இவை எதுவும் அவன் கருத்தில் பதியவேயில்லை. அவன் அகம் முழுதும் சற்று முன் நடந்த சம்பவங்கள் தான் அணிவகுத்து நின்று இருந்தது. தொண்டைக்குழி ஏறி இறங்கியதில் இருந்தே, மனதின் துக்கத்தை அடக்க வெகுவாக பிரயத்தனப்படுகிறான் கணவன் என அபிக்கு தெரிந்திருந்தது.


*


அனைவரையும் கவனித்து, வழியனுப்பி என வேலைகள் வரிசை கட்டி நின்றது பிருந்தாவுக்கு. உள்ளம் சோர்ந்து போனதால், உடலும் சோர்ந்து பெண்ணை வாட்டியது. சற்று தனிமை கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. உடல் அதன் பாட்டில் இயந்திரகதியில் அதன் பணியை செய்தாலும், மனம் முழுதும் கணவனின் நினைவு தான் மங்கைக்கு. முடிந்தவரை ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையாட்களிடம் மீதியை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு, படி ஏறினாள், பிருந்தா. முரளியின் பார்வை உள்ளுக்குள் தோன்றி, அவளை நடுக்கமுற செய்தது. எவ்வளவு மெதுவாக வந்தும், அறை வந்தேவிட்டது. உள்ளே செல்லாமல், கதவருகே நின்றிருந்தவள் மனமோ ‘திக் திக்’ என அடித்துக்கொண்டது, அந்த இரவின் நிசப்தத்தில் வெளியே கேட்கும் போல இருந்தது.


அந்நொடியின் கணத்தை தாளமுடியாது, என்னவாகினும் பார்த்துக் கொள்ளலாம் என துணிந்து கைப்பிடியில் கையை வைக்க, கதவு திறந்துக்கொண்டது. அறை எங்கும் கனத்த அமைதி ஆக்கிரமித்திருக்க, கண்களை சுழட்டி பார்வையை ஓடவிட்டாள். கணவனை எங்கும் காணாது போக, அந்த அமைதி அவளை அச்சுறுத்தியது. அணிந்திருந்த புடவையை களைந்துவிட்டு, இரவுடையை அவள் மாற்றிக் கொண்டிருந்த சமயம், முதுகில் எதுவோ துளைப்பது போல உணரவும் அவசரமாய் திரும்பி பார்த்தாள். அவளது கணவன் தான் பால்கனியில் இருந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனது அசையாத பார்வை அவளுள் இனம்புரியா பயத்தை உண்டு செய்ய, கலங்கிப் போனாள்.



முரளி அவளை நோக்கி மெதுவாய் எட்டுவைக்க, சோர்ந்த மனதால், நடுங்க துவங்கிய கால்களை ஸ்திரப்படுத்தி கொண்டு நின்றாள். ஆக்ரோஷமான முரளியை விட இந்த அமைதியான முரளி அவளை நிரம்பவும் பயங்கொள்ள செய்தான். அவனது கோபத்தை கூட தாங்கி விடலாம், என்றே தோன்றியது பிருந்தாவுக்கு. அவளையே துளைத்தது அவனது கூர் விழிகள். அவனது அசையாத பார்வை, உள்ளுக்குள் பிருந்தாவுக்கு பல நினைவுகளை தோற்றுவித்தது.


இந்த பார்வை! இந்த பார்வை! தன்னை கூறு போட்ட பார்வை, தன்னை உயிரோட வதைத்த பார்வை என அவளது நினைவடுக்கில் வேண்டாத பல சம்பவங்கள் முட்டி மோதி, அவளை வதைக்க, பொங்கிய அழுகையை அடக்கியதில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. முரளியின் பார்வை அவளது வதனத்தில் தான் நிலைத்திருந்தது. அவளது சிவந்து விடைத்த மூக்கும், ஏறி இறங்கும் தொண்டைக்குழியும் அவனது பார்வைக்கு தப்பவில்லை. மெதுவாய் அறைக்குள் வந்தவன், கைகளை கட்டிக்கொண்டு ஒருபக்கமாய் சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.



கணவனது முகத்தையே தான் பிருந்தாவும் பார்த்திருந்தாள். இருவரது பார்வையும் அடுத்தவரில் நிலைத்திருக்க, மௌனத்தின் நேரம் நீண்டுக்கொண்டே இருந்தது. “ஹ்ம்ம் அப்புறம்! முன்….னால் காதலனை ஆசை… இல்ல இல்ல முன்னால் ஆசை காதலனை ஆசை தீர பார்த்துட்டு வந்தாச்சா?” முதலில் அறையின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது முரளியின் குரல்.


அவனது தொனியே அவளுக்குள் பயபந்தை உருள செய்திருக்க, அவனது வார்த்தைகள் அவளுள் அபாயமணி ஒளிர செய்தது. என்ன நடந்தாலும், வாயை திறக்காதே என மூளை அறிவுறுத்த, அதன் கட்டளையை ஏற்று மௌனத்தை தாங்கி நின்றாள், மாது.


“ம்ம்ம் சொல்லு! கேட்டதுக்கு பதிலே வரலை? என்ன முன்னால் காதலனை பார்த்துட்டு வந்தாச்சா?” என்றபடியே அடிமேல் அடி வைத்து அவளை நோக்கி வந்தான். அவன் அருகே வர வர, இதயம் மத்தளம் கொட்ட ஆரம்பித்தது.


“ம்ம்ச் சரியா பேசியிருக்க முடியாது. குறுக்க நான் தான் கரடியா வந்து கெடுத்துட்டேனே!” போலியாய் வருந்தியவன், அந்த “பேசியிருக்க” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான். அவனது வார்த்தைகளுக்கு மறுவார்த்தை அவளிடம் இல்லாது போக மெல்ல மெல்ல உஷ்ணம் ஏறியது அவனுள்.



“சொல்லுடி பொண்டாட்டி! நான் வேணா ஒரு கேண்டில் லைட் டின்னர் புக் பண்ணி தரட்டுமா?” நக்கலாய் அவன் மொழிய, அவனது வார்த்தைகளில் விலுக்கென நிமிர்ந்த பிருந்தாவின் விழிகள் அவனை பொசுக்கியது.


“அப்பா பயமா இருக்கே! என்ன கண்ணாலே பொசுக்குற? பா அனல் தாங்கலையே!” என்றபடி தனது டிஷர்ட்டை உதறிக்கொண்டான். “என்னடி? முறைச்சா பயந்துடுவேனா? நீ கண்ணால பார்த்தா எரிஞ்சு போக நான் கொக்கும் இல்லை. நீ பத்தினியும் இல்லை!” என நரம்பில்லாத நாவில் தனது இஷ்டத்துக்கு பேசினான்.



“என்னடி அமுக்கமா கமுக்கமா அவனை சந்திக்க போன போல… எல்லாம் என்னால வேஸ்ட் ஆகிடுச்சே! என்ன சொன்னான் உன்னோட விஷ்… ஹான் விஷு மாமா!” என்றவனிடத்தில் எள்ளல் ஏகத்துக்கும் நிறைந்திருந்தது.



“நல்ல பணக்கார பொண்ணை தான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான் போல… நான் கூட நீ கொடுத்த பில்ட் அப்லாம் வச்சு காதல் தோல்வில தாடி வளர்த்து, குடிச்சு குடிச்சே குடல் வெந்து, போய் சேர்ந்து இருப்பான்ல நெனச்சேன்!” என்றவனை கண்டு முறைத்தாள், பிருந்தா.


“என்னடி பொண்டாட்டி முன்னால் காதலனை சொன்னவுடன் பார்வையில உஷ்ணம் கூடுது!” இரு புருவம் உயர்த்தி அவளிடம் கேட்க, அவனது முகத்தை காண பிடிக்காது முகம் திருப்பிக் கொண்டாள், பெண்.


“என்னடி புதுசா முகத்தை எல்லாம் திருப்புற? என்ன குளிர் விட்டுப் போச்சோ?” அவள் முகம் திருப்பலில், சினம் சீறி எழ, அவளது மோவாயை வலிக்க பற்றி தன் முகம் காண செய்தான்.


அவளது விழிகளையே கூர்ந்து பார்த்தவன், “இந்த கண்ணு அவனை பார்க்கும் போது அப்படியே உருகி வழிஞ்சதே! ப்பா என்ன பார்வைடி அது? ஊன் உருக உள்ளம் உருகன்னு படிச்சிருக்கேன்! ஆனா அதை உன் கண்ணுல தான் நேரா பார்த்தேன்!” என்றவனின் கண்களில் அவளை காயப்படுத்தி விடும் வேகம் கொழுந்து விட்டு எரிந்தது.


“ம்ம்ச்” அவனது பிடியில் வலி தாளாமல், அவள் முகம் சுருக்க, “என்ன வலிக்குதா? ரொம்ப வலிக்குதோ! எனக்கும் இப்படி தாண்டி வலிச்சுச்சு! நான் ஆசை ஆசையா விரும்புன உன்னோட மனசுல, எனக்கு முன்னாடி வேற ஒருத்தன் இருந்தான்னு தெரியும் போது இப்படி தாண்டி வலிச்சுச்சு! ப்பா….. உயிரையே உருவி வெளிய எடுக்குற வலி! அந்த வலி உனக்கு புரியாதுடி! உன்னை மாதிரி காசுக்காக கல்யாணம் பண்றவளுக்கு எல்லாம் என்னோட வலி புரியாதுடி!” என்றவன், பற்றி இருந்த அவளது முகத்தை கண்டு சினம் தலைக்கு ஏறி, வேகமாய் உதற, தடுமாறி விழுந்தாள், பிருந்தா.

*


காரை போர்ட்டிக்கோவில் நிறுத்திய விஷ்வா, வேகமாய் காரை விட்டு இறங்கினான். அபி கதவை திறந்து இறங்குவதற்குள் முடுக்கிவிட்ட பொம்மை போல தளர்வாய் வீட்டினுள் நுழைந்தான். கார் கதவை சாற்றிவிட்டு, தன்னை திரும்பியும் பாராது செல்லும் கணவனையே பார்த்திருந்தாள், பெண். அவளையும் அறியாது பெருமூச்சு ஒன்று வெளிப்பட, அமைதியாய் அவனை தொடர்ந்தாள். விஷ்வாவை அறிந்தவர்களுக்கு நிச்சயம் அவனது நடையில் இருக்கும் அந்த கம்பீரமும், வேகமும் தொலைந்து இருப்பது நன்றாகவே புலப்படும்.



அறைக்குள் சென்றவள், அவனை காணாது தேட, பால்கனியில், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி நின்ற அவனது வரிவடிவம் அந்த அரையிருளில் நன்றாக தெரிந்தது. அவனையே சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள், அறைக்குள் சென்று உடை மாற்றி வந்த பிறகும், அவன் நிலையில் மாற்றமில்லை. படுக்கையில் விழுந்தவள் கண்கள் அவனையே தான் வெறித்தபடி இருந்தது.


அண்ணாந்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் மனமோ, “பிருந்தா சந்தோசமா இல்லப்பா! அவ கண்ணே சொல்லுது! தப்பு பண்ணிட்டேனோ?” என மாண்டுப் போன தந்தையிடம் மானசீகமாக கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணீர் உருண்டு அவன் கன்னத்தை நனைக்க, அதனை கூட உணராது இருந்தான்.



அபிக்கும் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க துவங்க, வேகமாய் போர்வையை உதறித் தள்ளியபடி எழுந்தவள், ஆவேசமாய் அவனை நோக்கி சென்றாள். “இப்ப எதுக்கு நீ அவளை நினைச்சு உருகிக்கிட்டு இருக்க? என்ன ஆகிப் போச்சுன்னு இப்படி தவிக்குற? என்ன பழைய காதலை மறக்க முடியலையோ?” என பொருமியவளின் வார்த்தைகள் கோவமாக வெளிப்பட, “என்னவோ உலகத்துல இல்லாத அழகி மாதிரி ரொம்ப தான் உருகிக்கிட்டு!” என வாய்க்குள் முனங்கிக் கொண்டாள். அதில் நிச்சயம் பொறாமை தான் இருந்தது.



“உனக்குன்னு ஒரு குடும்பம், உனக்குன்னு பொண்டாட்டி பிள்ளைன்னு இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?” ஆவேசமாய் கேட்டவளுக்கு எந்த பதிலும் தராமல், அமைதியாய் நின்றான், விஷ்வ பிரகாஷ்.



“யோவ் உன்னையத்தான் கேட்குறேன்! என்ன தான்யா உன் மனசுல நெனச்சுக்கிட்டு இருக்க?” அவன் அமைதியில் கொந்தளித்து, வேகமாய் அவனது கைப்பற்றி தன்புறம் திருப்ப, கணவன் கண்ணில் ஜொலித்த நீர் மணிகளை கண்டு பேச்சிழந்து ஸ்தம்பித்து நின்றாள், அபி.


***


“என்னடி ஊமைக்கொட்டான் மாதிரி நிக்குற? வாயை திறந்து பதில் சொல்லுடி!” அவன் தள்ளியதில் தடுமாறி விழுகத் தெரிந்த, பிருந்தா கால்களை ஊன்றி சமாளித்து நின்றாள்.
அதிர்வுடன் அவனை ஏறிட, “இந்த முகம் தான்! இந்த முகம் தான்! இந்த அப்பாவி மூஞ்சியும், முழியும் பார்த்து தான், நான் இப்போ ஏமாந்து நிக்குறேன்! பாக்கதடி பாக்காத!” வீறிட்ட படி அவள் அருகில் வந்தவன், அவளது கையை இறுக பற்றியபடி, “அப்படி பாக்காதன்னு சொல்றேன்ல! ஐயோ என்னால முடியலையே! என்னால முடியலையே!’ பைத்தியக்காரன் போல தனது கோபத்தை எல்லாம், அங்கிருந்த பொருட்கள் மீது காட்ட, அவனது சீற்றம் தாளாமல் ஒவ்வொன்றும் அவளது காலருகே உடைந்து சிதறியது.



அவனைக்கண்டு அவன் ஆக்ரோஷம் கண்டு, அஞ்சி நடுங்கி கண்களை இறுக மூடி, கைகளால் காதுகளை பொத்தியபடி அவள் இருக்க, அவனது கோபம் அடங்கிய பாடாகத்தான் இல்லை.


“எல்லாத்துலையும் ஜெயிச்ச நான்! என்னோட வாழ்க்கையில தோத்துட்டேன்! ரொம்ப அசிங்கமா தோத்துட்டேன்! கேவலமா தோத்துபோய் நிக்குறேன்!” என்றபடியே மீதி இருந்த பொருட்களையும் துவம்சம் செய்தான். அவன் உதைத்து தள்ளியதில், அங்கிருந்த மரடீப்பாய் அவளது காலில் விழுக, “ஆ!” என அலறினாள் பிருந்தா. அவள் குரலில் திரும்பி பார்த்தான் முரளி.



வேகமாய் அவளை நெருங்க, அவன் வேகம் கண்டு பின்வாங்கினாள், பெண். அதில் அடங்கி இருந்த கோபம் திரும்ப மேலெழ, “என்னை அப்படி பார்க்காத! அப்படி பார்க்காதன்னு உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன்!” அவளது பயந்த பார்வைக்கண்டு அவன் சொல்ல,
“உனக்கு ஏண்டி என்னைய பிடிக்காம போச்சு?” என்றவனின் குரலில் துக்கம், ஆற்றாமை, கவலை, கோபம் வருத்தம் அனைத்தும் ஏகத்துக்கும் நிரம்பி இருந்தது.


என்ன பதில் சொல்வாள் பெண்ணவளும்? “ச்சீ போடி!” அவளை உதறி தள்ளி அறைக் கதவை அறைந்து சாத்தி வெளியேறியவன், தனது காரை எடுத்துக் கொண்டு, மனம் போன போக்கில் சுற்றினான். அவன் சென்றதும், அறையை சுற்றி பார்வையை ஓடவிட்ட பிருந்தாவோ, அதன் நிலைக்கண்டு ஓய்ந்து போனாள். அவனது ருத்ர தாண்டவத்தில் அறையே போர்க்களமாய் காட்சி அளிக்க, மெதுவாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள், பிருந்தா.


இதே போல அலங்கோலமாய் கிடந்த அறை, பிருந்தாவின் நினைவடுக்கில் வந்து அவளை மருட்டியது. அன்றும் இதே போல கால்களை மடக்கி குறுக்கிக் கொண்டு, கணவனுக்காய் தவிப்புடன் அமர்ந்திருந்ததும், கூடவே அதன் தொடர்ச்சியாய் சில பல நினைவுகளும் சேர்ந்தே நினைவுக்கு வந்தது. வலிக்க வலிக்க, இன்றைய, அன்றைய சம்பவங்களின் பிண்ணனியை புரட்டி பார்க்க துவங்கியது பிருந்தாவின் நெஞ்சம்.



சாரல் அடிக்கும்….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top