சாரல் 18

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,


வாரம் ஒருமுறை தான் என்னாலும் எபி தர முடியுது. நான் எவ்வளவு தாமதம் செய்தாலும், கதைக்கான உங்களோட அன்பும் ஆதரவும் அளப்பரியது. நீங்க இல்லனா எனக்கு எதுவும் சாத்தியமில்லை. போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் எல்லாருக்கும் நன்றி. இந்த பதிவுக்கும் உங்களோட ஆதரவை தாங்க மக்களே.


A special thanks to raji mani sis, barathi priya sis, vasanthi ganesan sis, jayabharathi senthilkumar sis, uma ganapathi sis, padmavathy sis, kalai karthi sis harisaran sis shanthy durai ananthan sis parimala sis, latha pugazh sis, humaith hasan sis, priya vickey sis, swarna latha sis,, உங்க எல்லாருக்கும் என்னோட நன்றி.



உங்களது ஆதரவு வேண்டி,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 18


“ச்சே கனவா!” பெண் மனம் நிதர்சனம் புரிந்து தெளிந்த வேளை, “ம்ம்கும் இவனை கட்டிக்கிட்டு உனக்கு லிப்லாக் வேற கேட்குதா? அதுவும் நடுரோட்ல! உனக்கெல்லாம் அது கனவுல கூட நடக்க வாய்ப்பில்லை!” மூளை எக்காளமிட, உண்மையை ஏற்க முடியாது, “நீ கொஞ்சம் வாயை மூடு!” என அதனிடம் சீறி அடக்கி வைத்தாள். அபி.


நிதர்சனத்தை ஏற்க மறுத்த பாவை உளமோ குமுறியது. அனைத்தையும் ஓரக் கண்ணில் அவதானித்தபடி தான் வந்தான், அபியின் கல்லுளி மங்கன். விஷயம் தெரியாவிடினும், அதற்கு காரணம் தான் தான் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.


அவள் கோபம் புரிந்தும், அவளை சமாதனப்படுத்த முயலாது, இயந்திரமென அவன் வாகனத்தை இயக்க, காரினுள்ளே கனத்த மௌனம் எங்கும் வியாபித்திருந்தது. அவனுடன் பேச்சை வளர்க்க பிடிக்காது சாலையை வெறித்தபடி வந்தாள், அபி. அகம் குமுற, சினத்தில் அவள் வெளியிடும் மூச்சுக்காற்றோ உஷ்ணமாய் இருந்தது. ஏமாற்றத்தில் நெஞ்சு விம்ம, மார்புக்கூடு ஏறி இறங்க, அடக்கப்பட்ட சினத்தில் அவளது தொண்டைக் குழி ஏறி இறங்கியது.


கார் அவனது கைகளில் சீராக செல்ல, அடையவேண்டிய இடத்தை சென்று அடைந்திருந்தனர். கதவு விரிய திறந்திருக்க, பாதையின் இரு மருங்கும் கொட்டிக்கிடந்த அழகு இருவரின் கருத்தையும் கவர முயன்றது. அவ்விடத்தின் வனப்பு, துளியும் விஷ்வாவை கவராது போக, அபியின் கொந்தளித்த மனதிற்கு சற்றே இதம் பரப்ப முனைந்தது அவ்விடம்.


கண்களில் ஆச்சரியத்தை தேக்கி பார்த்தபடியே அவள் திரும்ப, கணவனின் நிர்மலமான பார்வை கண்டு, உள்ளுக்குள், “ம்ம்கும் அவன் உன்னையவே கல்லையும் மண்ணையும் மாதிரி தான் பார்த்து வைப்பான்! இதெல்லாம் அவனை டச் கூட பண்ணாது!” மணவாளனை பற்றி அறிந்தவளாய் அவளது மனம் விஷ்வாவை கேலி செய்ய, “அது சரி! இவன் சாமியார் தானே!” நேரம் காலமின்றி அவனை திட்டி தீர்த்தது வஞ்சியவள் மனம்.


இருக்கை பட்டியை விடுவித்தபடி திரும்பியவனின் கருத்தில் மனையாளின் கேலி சுமந்த வதனம் பட, கண்கள் சுருக்கி அவளையே பார்க்க, கணவன் தன்னை துளைப்பது உணர்ந்து, நொடியில் தனது பாவனையை மாற்றிக் கொண்டாலும், அவளது விழிகளில் கேலி இன்னும் எஞ்சியிருந்தது. புருவம் இடுங்க, மனையாளின் முகத்திலேயே தனது பார்வையை நிலைக்க விட்டான். பாவையின் விழி மொழி அவனுக்கும் எட்டியது போலும். இரு புருவம் உயர்த்தி என்னவென்று அவளிடம் வினவ, கொண்டவனின் ஆளை அசத்தும் விழிமொழியில் சமநிலை தவற தெரிந்தாள், வஞ்சி.



“அடியேய் நீ அவன் மேல கோபமா இருக்க!” மூளை மணியடிக்க, அவனில் கரைய முயன்ற கோபத்தை இழுத்து பிடித்தாள், காரிகை. கண்களால் அவன் மனையாளை மிரட்ட, அதற்கெல்லாம் அசருபவளா அபிரக்ஷிதா? நேரமாவது உணர்ந்து, குரலை செருமிக் கொண்டவன், “நம்மகூட டை-அப் பண்ண போற கம்பெனி சேர்மேன் நம்மளை இன்னைக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க. நம்ம சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். ப்ளீஸ் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ!” அவளை எச்சரிக்க, அதில் சினம் மேவ, “ஹலோ நாங்களும் பிசினஸ் பாமிலில இருந்து வந்தவ தான்! எங்க அப்பாவும் பெரிய பிசினஸ்மேன் தான். எனக்கும் எங்க எப்படி நடந்துக்கணும் என்று நல்லாவே தெரியும்!” வார்த்தைகளில் அனல் பார்க்க அவள் பதிலளிக்க, அவளை ஒரு நொடி ஆழ்ந்து அமைதியாய் பார்த்தவன், “தெரிஞ்சா சரிதான்!” என்றவாறே இறங்கினான்.



அவனது குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்துக் கொண்டவள், “இவனை…. கொழுப்பு கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு!” திட்ட மட்டுந்தான் முடிந்தது அவளால்.
வெளிப்புறத்தை தன் பார்வையால் வலம் வந்தவன் ஏனோ சஞ்சலமாய் உணர்ந்தது. உருவமில்லா எதோ ஒன்று அவனை தாக்க, உள்ளம் அவன் வசம் இல்லாது தவித்தது. வேகமாய் அந்த உணர்வை நெட்டி தள்ளியவன், நொடியில் தன்னை மீட்டுக்கொண்டான். வெளியே வந்து அவள் புறமாய் வந்து நிற்க, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள், அபி. குனிந்து பார்த்து, தன் தோற்றத்தில் திருப்தியுற்றவளாய், “ம்ம் போலாம்!” என்றவாறே கணவனுடன் இணைந்து நடக்க,


எவ்வித சலனமுமின்றி நேர்ப்பார்வை பார்த்தபடி வந்தான் விஷ்வா. இவர்களுடன் இன்னும் சிலரை வைத்தி அழைத்திருக்க, இவனது தலையை கண்டவுடன் யாருடனோ பேசிக் கொண்டிருந்த வைத்தியநாதன் அவனை எதிர்க்கொண்டு வரவேற்றார். “அடடே பிரகாஷ் வாப்பா! வாங்கம்மா!” என இருவரையும் புன்னகை முகமாய் வரவேற்க, ஏனோ வைத்தியநாதனை கண்டதும் தனது தந்தையின் நினைவு மனதினுள் மின்னி மறைந்தது விஷ்வாக்கு.


அவனோடு நடந்தபடியே, தாயிடம் அழைத்து சென்றவர், “அம்மா! நான் சொன்னேன்ல பிரகாஷ் அது இவர் தான்!” விஷ்வா, பாட்டியின் காலில் விழுக, கணவனை பின்னொற்றி தானும் விழுந்தாள், அபி. அதில் பாட்டியின் மனது குளிர்ந்துவிட, “நல்லா இருங்கப்பா! நல்லா இருங்க!” என ஆசீர்வதித்தார். விஷ்வாவின் செய்கையில் வைத்தியின் முகத்தில் பெரும் புன்னகை. அவனை அழைத்து சாரதாவிடம் அறிமுகப்படுத்த, முதல் பார்வையிலேயே அவரின் எண்ணவோட்டத்தை உணர்ந்துக் கொண்டான், நாயகன்.


தூரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த முரளி தந்தை அழைக்கவும், திரும்பியவன், அவருடன் நின்றிருந்த புதியவனை யாரென்று பார்க்க, “முரளி இது பிரகாஷ்!” வைத்தியின் ஒற்றை வரியில் அவனுக்கு விளங்கிப் போனது. வேகமாய் தனது அளவிடும் பார்வையை மாற்றிக் கொண்டு, அவன் புறம் கைநீட்டி, “ஹாய் நைஸ் டு மீட் யூ! அப்பா உங்களை பத்தி நிறையா சொல்லி இருக்காங்க!” சம்பிரதாயமாய் சொன்னவனின் முகத்தில் என்ன இருந்தது என எளிதில் எதிரில் இருப்பவரால் கண்டுக்கொள்ள முடியாது.


“நீங்க வாங்கப்பா!” என அவனை அமர வைத்தவர், மனைவியிடம் உணவு தயாராக இருக்கிறதா என கேட்க, யாரிடமோ வளவளத்துக் கொண்டிருந்த சாரதா சட்டென மூண்ட சினத்தில், “எனக்கென தெரியும்? உங்க மருமக தான் எல்லாத்தையும் கரெக்ட்டா செய்வாளே!” வெடுக்கென சொல்ல, சொல்லிய பின்பே தனது தவறு உணர்ந்து, “ஹீ ஹீ அது மருமக பார்த்துப்பானு சொல்ல வந்தேங்க!” என சமாளிப்பாய் சொல்ல, உன்னை நான் நம்பவில்லை என்றது வைத்தியின் பார்வை.



கணவன் சென்றதும், வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தவர், “எல்லாம் ரெடியா இருக்கா? கெஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க!” அதிகாரமாய் கேட்க, “எல்லாம் ரெடியா இருக்குங்கம்மா!” என்று மொழிந்தார், வேலையாள்.

“ஆமா எங்க அவ?” என சாரதா கேட்க,


“யாருங்கம்மா?”


“ம்ம்ம்ம் இந்த வீட்டு மகாராணி!” என்றவர், “தலைக்கு மேல வேலை கெடக்கு. இவ எங்க போனானே தெரியலை! ” தனக்குள் அவர் முணுமுணுக்க,


“பிருந்தா அம்மா இப்பதான் போனாங்கம்மா!” வேலையாள் சொல்ல, “ஒஹ் மேடம் இப்ப தான் கிளம்பவே போனாங்களா? ரொம்ப சந்தோசம்..அம்மணி இப்பதான் சீவி சிங்காரிக்க போனாங்களா?” எள்ளலாய் கேட்க, அதற்குள் அமிர்தம் பாட்டி அனுப்பியதாய் ஒரு வேலையாள் வர, “இந்த வீட்டுல எல்லாம் நானே தான் பார்க்கணும் போல! எல்லாம் எங்க நேரம்!” இவ்வளவு நேரம் தான் தான் அனைத்தையும் தலையில் தாங்கியது போல சாரதா அலட்ட, அங்கிருந்த வேலையாட்கள் அனைவருக்குமே “ச்சீ!” என்றானது. பின்னே இவ்வளவு நேரம் பிருந்தா அவர்களோடு இணைந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்க, இவர் அவளிடம் மெனுவை சொன்னதோடு சரி. இப்போது தான் உள்ளேயே வருகிறார்!



அங்கே பிருந்தா நேரம் ஆவது உணர்ந்து அவசர அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் தயார் செய்து, குழந்தைகளை கிளப்பி, தானும் கிளம்ப வேண்டும். வேலை அனைத்தையும் பம்பரமாய் சுழன்று செய்து முடித்திருந்தாள் பிருந்தா. என்ன தன்யாவை தயார் படுத்துவதற்குள் தான் அவளது பாதி ஜீவன் வடிந்திருந்தது.


மூச்சு விடக் கூட நேரமின்றி அவள் சுழல, சற்று நேரம் இளைப்பாற தவித்தது பெண்ணின் உடலும், மனமும். உடல் தொடர் வேலைகளால் சோர்ந்திருக்க, “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடேன்!” ஒவ்வொரு அணுவும் அவளிடம் கெஞ்ச, வலியில் தெறித்த உடலுக்கு கொஞ்சம் சகாயமாய் வெந்நீரில் குளித்து முடித்து ஒப்பனைக்காக கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அழகு அவளது. அது தகுந்த கரங்களில் சேர்ந்திருந்தால், மேலும் மெருகேறி இருந்திருக்குமோ? மாமியார் நாத்தனார் என அனைவரும் அலங்கார சுந்தரிகளாக வலம்வர, அவர்களின் மேல்தட்டு ஸ்டேட்ஸ்க்கு ஏற்றார் போல, இன்றைய விழாவுக்கு அணிய தனது வார்ட்ரோபை குடைய ஆரம்பித்தாள்.


தேடலுக்கு மத்தியில், அவளது பார்வையில் விழுந்தது அந்த புடவை. அவளது கரங்கள் தன்னிச்சையாக அதனை எடுத்து வருடிக் கொடுக்க, “உனக்கு இந்த ப்ளூ கலர் சாரி ரொம்ப அழகா இருக்கும் பிந்தும்மா!” எனும் குரல் காதினுள் அசரீரியாய் கேட்க, விதிர்விதித்து போனாள், மங்கை. நெடு நாள் கழித்து செவியினுள் ஒலித்த குரல், ஒருவித நடுக்கத்தை உண்டு செய்திருக்க, புடவையை நழுவவிட்டாள். மனம் படபடவென மத்தளம் கொட்ட, பல வருடங்கள் கழித்து செவியினுள் ஒலித்த குரலில் உடல் நடுங்க ஆரம்பிக்க, வார்ட்ரோப் கதவை இறுக்கி பிடித்து தன்னை சமன் செய்துக்கொண்டாள். அன்னிச்சையாய் புடவையை விரல் நடுங்க எடுத்தவள், தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு, அதனை அணிந்துக் கொண்டாள்.


நேரம் ஆவது உணர்ந்து, அவசர அவசரமாய் தன்னை தயாராகினாள். தோற்றத்தின் மீதெல்லாம் அவள் சிறுவயதிலிருந்தே அவ்வளவாய் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. தாயும், அப்பத்தாவும், அவளை பராமரிக்க, தன்னை அவர்களிடம் ஒப்புக்கொடுத்து விடுவாள். ஆனால் இப்போது இடத்துக்கு தகுந்தார் போல, கணவனின் எண்ணத்துக்கு ஏற்றார் போல, மரியாதைக்கு தகுந்தார் போல், இன்னும் பல “போல்”களுக்காய், சாரதாவுக்கு ஈடாக இல்லாவிடினும், ஏதோ அவரளவில் ‘கொஞ்சம் சுமாராக’, தன்னை அலங்கரிக்க பழகிக் கொண்டாள். கண்ணாடியில் தன்னை பார்த்தவள் திருப்தியாய் உணர, வேகமாய் அறையை விட்டு வெளியேறி சமையலறைக்கு வந்தாள். “அக்கா எல்லாம் ரெடியா?” பரபரப்பாய் கேட்டபடியே அவள் வர, “எல்லாம் தயார்ம்மா!” என்றார் சீதாம்மா.


“அம்மா பெரியம்மா வந்துட்டு போனாங்க!” உபரி தகவலாய் தெரிவிக்க, அவளுள் ஒரு பரபரப்பு. “சரிங்க அக்கா! நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்க சொல்றேன்!” வெளியேற போனவள், சாரதாவின் கண்களுக்குள் சிக்கிக் கொண்டாள். பிருந்தாவின் அமைதியான அழகு அவர் கண்களை உறுத்த, அவளை நோகடித்திடும் வேகம் அவருள். மேலும் கீழும் அவளை அளவிட்டவர், “ம்ம்ம்… எதோ பரவாயில்லை. கொஞ்சம் பார்க்குற மாதிரியிருக்க!” என்றவர், “என்ன இருந்தாலும், எங்க ஸ்டேடஸ்க்கு ஏத்த மாதிரி உனக்கு டிரஸ் பண்ண தெரியலை!” என நொடித்துக்கொண்டு அவள் முகத்தையே ஆழம் பார்க்க, பிருந்தா எதையும் வெளிகாட்டாது அமைதியாய் நின்றாள். ”என்ன சொன்னாலும், அப்படியே ஆடாம அசையாம நிக்குறா பாரு கல்லு மாதிரி! ஊமை கோட்டான்” உள்ளுக்குள் பொருமியவருக்கு எப்படியாவது அவளை நோகடித்திடும் உத்வேகம்.


“சரி சரி சீவி சிங்காரிச்சு நின்னது போதும். மசமசன்னு நிற்காம வேலையை பாரு!” எனும் அதட்டலுடன் வெளியேறினார். அவர் சென்றதும் தான் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள், பிருந்தா. வேகமாய் வாயில்பக்கம் பார்த்த சீதாம்மா, அவளை நெட்டி முறித்து, “நீங்க ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்கம்மா. அம்மன் சிலை மாதிரியே இருக்கீங்க!” என சொல்ல, ஒரு இதழ் விரிப்பு மட்டுமே அவளிடம்.



வைத்தி தாயிடம் மருமகளை கேட்க,”அவ எதாவது வேலை செஞ்சுட்டு இருப்பாப்பா!” எனவும் அதிருப்தியாய் தலையை ஆட்டிக்கொண்டார். “இந்தபொண்ணு ஏன் தான் இப்படி இருக்காளோ தெரியலை!” புலம்பிய அமிர்தம் பாட்டியின் கண்கள் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருந்த மருமகளிடம் தான் படிந்திருந்தது. பெருமூச்சை வெளியிட்டவர், எதிர்ப்பட்ட ஒருவரிடம் பிருந்தாவை அழைத்து வர சொல்ல, அவளும் விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தாள்.


விஷ்வாவின் உள்ளுணர்வு எதையோ அவனுக்கு உணர்த்த முனைந்தது. அவனின் இதய துடிப்பு பன்மடங்காக எகிற துவங்க, நிலையில்லாது தவித்தான். உதறும் உள்ளத்தை சமாளிக்க, வேகமாய் எழுந்தவன், அங்கிருந்த செடி கொடிகளை பார்வையிடும் சாக்கில் தனது உணர்வுகளை யாரும் அறிந்திடா வண்ணம் இருக்க அரும்பாடுப்பட்டான்.


“பாட்டி கூப்டீங்களா?” என்றபடியே பிருந்தா வர, “எங்கம்மா போயிட்ட? உன்னையும் பசங்களையும் வைத்தி ரொம்ப நேரமா கேட்டுட்டு இருந்தான்!” என்றார் பாட்டி. “சரிங்க பாட்டி!” என்றவள் மாமனாரை தேடிச் செல்ல, “மாமா கூப்டீங்களா?” என்றபடியே வந்தவளிடம், “ஒஹ் எங்கம்மா போயிட்ட? எல்லாம் ரெடியா இருக்கா? டின்னர் ஆரம்பிக்கலாமா?” அவளிடம் கேட்டுக் கொள்ள,


“எல்லாம் ரெடியா இருக்கு மாமா. இருங்க நான் போய் ஒருதடவை எல்லாத்தையும் பார்த்துட்டு வரேன்!” என்றபடியே அவள் செல்ல எத்தனிக்க, “இரும்மா அதெல்லாம் ஆளுங்க பார்த்துப்பாங்க! நீ போய் பசங்களை கூட்டிட்டு வா!” என்றார்.


“சரிங்க மாமா!” அவள் நகர, “அம்மா பிருந்தா!” என சத்தமாய் அழைத்தார் வைத்தி. சற்று தள்ளி நின்றிருந்த விஷ்வாவின் காதிலும் விழுக, அவனது உடலிலோ சட்டென்று ஒரு இறுக்கம். அந்த பெயரை கேட்டதும், அவனது ஆவி துடிக்க, அவனது செல்கள் எங்கும் இறுக்கத்தையும் தாண்டிய ஒரு பரபரப்பு.


தொண்டைகுழி ஏறி இறங்க, மூச்சுக்கு தவித்தவன் போல சுவாசம் தடுமாறியது. உதடு மடித்து தன்னை சமன் செய்துக்கொண்டவன், “சீ சீ அது அவளாக இருக்காது! உலகத்துல இந்த பேரில் அவள் மட்டும் தான் இருக்காளா?” என மூளை அவனை சமாதானப்படுத்த, “இல்லை இல்லை அது அவள் தான்!” எனது உள்ளுணர்வு பொய்க்காது!” என்றது மனம்.


“பிருந்தா முரளியை கொஞ்சம் கூப்பிடும்மா!” என்றார். உணவுண்ணும் நேரம் வரவும், அனைவரையும் அழைத்தவர், அப்போது தான் சற்று தள்ளி நின்றிருந்த விஷ்வா அவரின் கண்ணில் பட்டான். “பிரகாஷ்!” அவனை அழைக்க, அவனுக்கு அது எட்டவில்லை. அவனுக்கு தன்னுள் போராடவே சரியாக இருந்தது. அவன் திரும்பாமல் இருக்கவும், “பிரகாஷ்!” மறுமுறை சத்தமாய் அழைக்க, அருகில் நின்ற பிருந்தாவும் தனது பார்வையை திருப்பினாள்.


அதே நேரம் விஷ்வாவும் திரும்பி இருந்தான். வேகமாய் அவனிடம் விரைந்தவர், “வாப்பா சாப்பிட போகலாம்!” என அழைக்க, அவனது பார்வையோ அதிர்வுடன் பிருந்தாவிடம் நிலைபெற்று இருந்தது. அதே நிலை தான் பிருந்தாவுக்கும். விஷ்வாவை கண்டதும் கண்கள் அதிர்ச்சியை அப்பட்டமாய் காட்ட, ஸ்தம்பித்து நின்றாள், பெண்.



இருவரின் முகமும் வர்ணஜாலங்களை வாரி இறைக்க, வைத்தி இருவரையும் கவனிக்காது போனார். விஷ்வா நொடியில் தன்னை மீட்டுக் கொண்டாலும், அவனது அகமோ உள்ளே எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும்!



பிருந்தாவுக்கு கண்கள் கலங்கும் போல இருக்க, வேகமாய் திரும்பியவள் யாரும் அறியாது கண்களை வேகமாய் துடைத்துக் கொண்டாள். அவனையும் அழைத்துக் கொண்டு பிருந்தாவிடம் வந்தவர், “ம்ம்மா பிருந்தா!” என அழைக்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டிருந்தாள் பிருந்தா. “இது விஷ்வ பிரகாஷ். நம்ம கம்பெனியோட புதுசா டை-அப் பண்ண போற கம்பெனி இவங்க தான்!” என அறிமுகம் செய்ய, உதடுகளை இழுத்து முயன்று சிரிப்பை வரவைத்தவள்,

கை கூப்பி வணக்கம் என மரியாதை செலுத்த, விஷ்வாவின் பார்வையோ அவளைவிட்டு அகலவில்லை. அவள் வணக்கம் செலுத்தியதில் தெளிந்தவன், தானும் வணக்கம் செலுத்த முயல, வார்த்தைகள் தொண்டைக்குழியை விட்டு வருவேனா என மறுத்து சண்டித்தனம் செய்தது. அடைத்த தொண்டையை செருமி சரிசெய்துக் கொண்டவன், தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



சாரல் அடித்தது….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top