'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Prefinal 2

Advertisement

Priyaasai

Active Member
View attachment 11176

சந்தம் - 45.1

"ப்ரெஸ் மீட் இன்னொரு நாள் பார்த்துக்கலாம் இப்போ உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்று வித்யா தேவி அவளை பார்க்க

'என்னது ஆன்டி..??' என்றவளுக்கு அவரது கூர்பார்வையே அச்சுறுத்தியது அவளை குறித்து எதுவரை தெரிந்து வைத்திருக்கிறார் அது குறித்து என்ன கேள்வி கேட்பார் என்ற யூகமே இல்லாமல் அவரை பார்த்திருந்தாள்.

"அப்போ உனக்கும் தேவ்க்குமான சம்பந்தம் ஆதிரையன் மட்டுமே அப்படி தானே ப்ரீத்தி..??" என்று கேட்க,

அவர் கேட்கவுமே அவள் தலை அன்னிச்சையாக 'ஆம்' என்று அசைந்து கொடுத்தது.

'அப்புறம் ஏன் இந்த லவ், சண்டை, பிரிவுன்னு இந்த நாடகம் எல்லாம்..?? நீ இந்த வீட்டுக்கு வந்த போதே உண்மையை ஏன் சொல்லலை..??' என்று கேட்க அன்று விஷ்வா வீடியோ கொண்டு அவளை மிரட்டி அழைத்து வந்ததும் அதை தொடர்ந்து அன்று இரவு இருவருக்கும் இடையிலான ஒப்பந்தமும் நினைவில் எழ இதழ்களை அழுந்த மடித்து அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றிருந்தாள் ப்ரீத்தி.

பதில் சொல்லுமா..?? என்றவர் அவள் அழுத்தமாக நிற்ப்பதை கண்டு

'பதில் இல்லையா இல்ல பதில் சொல்ல விருப்பம் இல்லையா..??' என்று தலை சாய்த்து அவளை பார்த்தவரின் மனதிலோ மகன் மிரட்டியதை கூற பிரீத்தியிடம் ஏன் இந்த தயக்கம் என்ற கேள்வியே...!!

"சரி உனக்கு விருப்பம் இல்லன்னு எடுத்துக்குறேன் ஆனா ஏன் நீ என் பையன் மேல இதுவரை கம்ப்ளைன்ட் கொடுக்கலை"

'ஆன்டி' என்று திகைத்து அவரை பார்த்தாள்.

"உனக்கே தெரியாம அவன் குழந்தையை உன்னை சுமக்க வச்சது தப்பு இல்ல ப்ரீத்தி அது மிக பெரிய குற்றம் ஆனா ஏன் நீ அவனை உள்ள தள்ளாம இங்க வந்து இருக்க..?? என்ன காரணம்" என்று கேட்க,

இத்தனை நாட்களாக வித்யாவை அருகே இருந்து பார்ப்பவளுக்கு அவரது குணம் பற்றிய புரிதல் இருந்தாலும் இப்படி பெற்ற மகன் என்றும் பாராமல் இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று நிச்சயமாக எதிர்பாராத ப்ரீத்தி முழுதாக அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்க,

'ஸ்பீக் அவுட் ப்ரீத்தி..!! இப்படி அமைதியா நிற்கிறது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது' என்றவரின் குரலில் கடுமை .

அதை உணர்ந்த ப்ரீத்தி கலக்கத்தோடு அவரை ஏறிட்டு பார்த்தவள் மெல்லிய குரலில், "தப்பு என்னோடது ஆன்டி" என்றாள்.

'புரியலை'

'உங்க பையன் பண்ணினது போல நான் பண்ண நினைச்சதும் தப்பு தான் ஆன்டி, அப்படி கம்ப்ளயின்ட் கொடுக்குறதா இருந்தா முதல்ல என் மேல தான் கொடுக்கணும்' என்றாள் தலையை குனிந்தவாறு.

'என்ன பேசுற ப்ரீத்தி என் பிள்ளையோட குழந்தையை நீ உனக்கே தெரியாம சுமந்து பெத்திருக்க என்னதான் நீ தப்பு பண்ண நினைச்சது நிஜமா இருந்தாலும் நீ சொல்ற மாதிரி அப்படி ஒரு தப்பு நடக்கவே இல்லையே அப்புறம் எப்படி நீ குற்றவாளி ஆவ..??

"நீங்க சொல்ற மாதிரி என்னோட அந்த தப்பு நடக்காம தடுத்ததே உங்க பிள்ளை தானே..?? ஆன்டி உங்களுக்கு தெரியாதது இல்ல இங்க தப்பு பண்றவங்களை விட தப்பு பண்ண தூண்டுறவங்க தான் பெரிய குற்றவாளி..!! அப்படி பார்த்த உங்க பையன் இந்த தப்பு செய்யறதுக்கான பிள்ளையார் சுழி போட்டதே நான் தானே அப்புறம் எப்படி அவரை தப்பு சொல்ல முடியும்..?? அதான் நான்.." என்று முடிக்காமல் ப்ரீத்தி அவரை பார்க்க,

"சரிம்மா நீ சொல்ற மாதிரியே வச்சிக்கிட்டாலும் என் பையனை உனக்கு முன்னாடியே தெரியுமா..??"

'இல்லை' என்ற தலையசைப்பு

'அப்புறம் எந்த நம்பிக்கையில அவனோட இங்க வந்த..?? என்னமா முட்டாள்தனம் இது ஒருத்தன் உன்னை நீ செய்ய இருந்த தப்புல இருந்து காப்பாத்தினா அவனை நம்பி வந்துடுவியா ஒருவேளை அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவனா இருந்திருந்தா அதை மறைச்சி உனக்கு குழந்தை கொடுத்து இருந்தா இல்ல ஏதாவது மோசமான கும்பலை சேர்ந்தவனா இருந்து உன்னை தப்பா உபயோக படுத்தி இருந்தா இல்ல பணத்துக்காக உன்னை எங்கயாவது கொண்டு வித் .. என்று அவர் கூறும்போதே இதற்கு மேலும் கேட்க முடியாது என்பது போல் கைகளால் காதை பொத்தி கொண்ட ப்ரீத்தி.

"ஸ்டாப் ஆன்டி ப்ளீஸ் ஸ்டாப்..!! என்ன பேசுறீங்க நீங்க..??" என்றவளின் குரல் அவளையும் அறியாமல் உயர்ந்து இருந்தது...

'இது என்னமா கேள்வி..?? நாட்டுல நடக்குறதை தானே சொன்னேன் ஒரு பொண்ணு இப்படி யார் என்னன்னே தெரியாம ஒருத்தனை நம்பி வந்தா நாளைக்கு உனக்கு எதா...' என்று அவர் பேசிக்கொண்டே செல்ல அன்று ப்ரீத்தியால் கலைவாணி அம்மா சரனை வெறுத்து பேசியது அவள் கண் முன் வலம் வர இப்போது அவளால் மீண்டும் ஒரு தாய் தன் மகனை தவறாக எண்ணக்கூடிய நிலைக்கு அவரை தள்ளிய தன்னையே வெறுத்து போனவளுக்கு 'கடவுளே இன்னும் எத்தனை பேர் என்னால் இப்படி காயப்பட போகிறார்கள்" என்று மனம் நோக அவள் கண்களில் நீர் முட்டி கொண்டு நின்றது.

"ஆன்டி ப்ளீஸ் எதுக்கு இப்படி அனாவசியமா பேசுறீங்க..!! என்று அவரை அடிபட்ட பார்வை பார்த்தவள் "எனக்கு உங்க பையனை தெரியாது ஆனா அப்புறம் அவர் பாரும்மாவோட தம்பி பையன் சௌமியோட அண்ணன்னு தெரிஞ்சது.." என்று கூறிய ப்ரீத்தி அறியாமலே அவள் மனதை சிறுக சிறுக திறக்க வைத்து கொண்டிருந்தார் வித்யா.

'என்ன பேசுற ப்ரீத்தி பாரு அண்ணியோட தம்பி பையன்ங்கிற தகுதி போதுமா அவனை நம்பி வந்துடுவியா..?? உனக்கே தெரியாம இப்படி ஒரு அக்கிரமத்தை பண்ணி இருக்கான் அவனை போய்...' என்று அவர் பேசிக்கொண்டே செல்ல.., என்னதான் விஷ்வா அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டிருந்தாலும் அவனை இப்படி பெற்ற தாயே பேசுவதை பொறுக்க முடியாதவள்,

'எதுக்கு நீங்க இப்படி பேசுறீங்க..?? அவர் உங்க பையன் அவர் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?? எதுக்கு இப்படி தப்பு தப்பா ஒருத்தரை அபாண்டமா பேசுறீங்க..??' என்று கேட்டவளுக்கு இன்னுமே விஷ்வாவை மோசமானவனாக , பெண்ணை கடத்தி சென்று விற்க கூடியவனாக கற்பனை செய்து கூட முடியவில்லை

'என் பையனா இருந்தா தப்பு சரி ஆகிடாது ப்ரீத்தி..!! அவன் பணத்துக்காக உன்னை இல்ல.. குழந்தையை விற்க கூடிய கும்பலை சேர்ந்தவனா..." என்று அவர் முடிக்கும் முன்னமே அதை தாள முடியாதவள்

"ஐயோ போதும் ப்ளீஸ் நிறுத்துங்க ஆன்டி..!!" என்று உரக்க சத்தமிட்டு இருந்தாள்.. வித்யா அவளை கண்களை எட்டாத புன்னகையுடன் பார்க்க,

"ஆன்டி நான் தான் சொல்றேனே அந்த தப்புக்கே மூல காரணம் நான் நீங்க எது பேசுறதா இருந்தாலும் என்னை பேசுங்க எதுக்கு உங்க பையனை நீங்களே இப்படி பேசுறீங்க ..!!' என்ற போதே கண்ணீர் அவள் கன்னம் தாண்டி வழிந்தது.

ஆம் அன்று கலைவாணி சரணை தவறாக புரிந்து மனம் நொந்து பேசிய போது சபித்த போது பிரகாசம் மீதான அவளை கட்டி போட்ட நிலையில் அன்று அனைத்தையும் கேட்டு கொண்டு கல்லாக நின்றால் ஆனால் இன்று..??

அன்று தாய் மகனை பிரித்த பாவத்திர்க்காக தானே சரண் வீட்டில் இருந்த நாட்களில் கலைவாணியை தங்க தட்டில் வைத்து தாங்கி அவள் பாவத்தை குறைக்க முயன்றாள். ஆனால் இப்போது மீண்டும் அது போன்ற ஒரு நிலையை எதிர்கொள்ள அவள் தயாராக இல்லை. விஷ்வா மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை தாயே கூறுவதை தடுக்கும் வேகம் அவளிடம்.

தன் மகனுக்காக தன்னிடமே வரிந்து கட்டிக்கொண்டு அவன் தரப்பு நியாயங்களை பேசும் மருமகளை விழி விரித்து பார்த்தவருக்கு இருவருக்குமான ஒற்றுமை புரிந்தது. இதை விட வேறு என்ன பொருத்தம் வேண்டும் இவர்களுக்கு..?? என்று தோன்றிய அதே நேரம் தன் கணிப்பு பொய்த்து போகாததில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

பொங்கிய மகிழ்ச்சியை தன்னுள் மறைத்த வித்யா, "சரிம்மா உன்னையே கேட்கிறேன் சொல்லு எதுக்காக இந்த காதல், பிரிவு நாடகம் இதெல்லாம்..?? யாருன்னே தெரியாத ஒருத்தன் கூட நீ ஏன் இங்க இருக்க..?? அப்படி என்ன உனக்கு கட்டாயம்..?? பதில் சொல்லு" என்று அவர் திடமான பார்வையோடு நிற்க,

அவள் இங்கு இருப்பதற்க்கான காரணத்தை அவரிடம் கூறினால் நிச்சயம் விஷ்வா குறித்த இன்னும் தவறான எண்ணமே அவரிடம் ஓங்கும் அது மேலும் அத்தாயின் மனதை நோக செய்யும்..!! ஏற்கனவே மகனை தவறாக நினைப்பவரிடம் அவன் பேசியது தன்னிடம் முறை கேடாக நடந்து கொண்டது எல்லாம் கூறினால் இன்னுமே மகனை வெறுத்துவிடுவார் என்பது புரிபட எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் அவள் பதிலுக்காக காத்திருந்த அவரோ ஒரு பெரு மூச்சை எடுத்து விட்டு "உன்கிட்ட பதில் இல்ல, சரி பரவால்ல ஆனா உனக்கு என் பையனை பிடிச்சிருக்கா..?? என்றவரின் கேள்வியே இதற்க்காவது பதில் சொல்வாயா..??" என்பதாக இருந்தது.

அவர் கேள்வியை எதிர்பாராதவள் சட்டென அவனை நிமிர்ந்து பார்க்க, 'சொல்லுமா உனக்கு தேவ் பிடிச்சிருக்கா..??'

'இதற்கு என்ன பதில் சொல்ல..??' என்று தன்னிடமே கேட்டு கொண்டவளின் மனதினுள் பல குழப்பம் மிக தொடங்கியது. இத்தனை நாட்கள் சரண் கீர்த்தி குறித்து மட்டுமே நினைத்து கொண்டு இருந்தவளுக்கு வேறு யார் குறித்த சிந்தனையும் இல்லாத நிலையில் இப்போது சட்டென யோசிக்கவும் விஷ்வாவை அவள் பார்த்ததற்கும் அவன் குறித்து கேட்டதற்கும் வானளவு வித்யாசம் இருக்க எது நிஜம் எது பொய் என்று கணிக்க முடியாமல் அலமலந்து போனவளுக்கு படபடப்பு அதிகரித்திட வித்யாவை பார்த்தாள்.

அவரோ உன் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியவாறு அவளையே பார்த்து கொண்டு இருந்தார்.

அதில் இன்னும் அவளுக்கு மனம் தடதடக்க விஷ்வா குறித்த அலசலில் ஈடுபட்டு இறுதியில் கண்கள் கலங்க பதில் கூற முடியாமல் நின்றாள்.

"ஓகே இதுக்கும் உன்கிட்ட பதில் இல்ல பரவால்ல" என்றவர் எழுந்து செல்ல..., ஒன்றும் சொல்லாமல் செல்லும் அவரை கண்ணீரோடு பார்த்த ப்ரீத்தி இன்னுமே குழப்பத்தில்..!!

****

திரும்பி வந்த வித்யாதேவி ப்ரீத்தி முன் முன் இரண்டு பத்திரத்தை நீட்டினார்.

'என்ன ஆன்டி இது..??' என்று ப்ரீத்தி கலங்கிய விழிகளை துடைத்து கொண்டு அவரை பார்க்க ,

ஒன்றை சுட்டி காட்டி "இது என் பையனை விவாகரத்து பண்றதுக்கான பத்திரம்..!! இது அவன் பண்ணின தப்புக்காக அவன் மேல கொடுக்க போற கம்ப்ளையின்ட் இதுல நீ எதை தேர்ந்தெடுத்து சைன் பண்ணாலும் எனக்கு சந்தோசம்" என்று நிறுத்தி ப்ரீத்தியை பார்த்தவர் அவள் உச்சகட்ட திகைப்போடு அதிர்ச்சியில் விழிகள் தெறிக்க நின்றிருப்பதை திருப்தியோடு பார்த்தவர் தொடர்ந்து,

"நவ் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் ப்ரீத்தி..!!" ஒரு கட்டாய வாழ்க்கை உனக்கு வேண்டாம் யாருக்கும் பயப்படாம யாரை பத்தியும் யோசிக்காம உன்னை மட்டும் உன்னோட எதிர்காலத்தை மட்டும் யோசிச்சி முடிவு எடு.. குழந்தை, சொசைட்டி, குடும்பம், ப்ளாப்ளா எது பத்தியும் கவலை படாத..!! ஒரு பெண்ணோட வாழ்க்கை அவளோட விருப்பபடி தான் அமையனும். எனக்கு தெரியும் என்ன ஆனாலும் நீ ஆதிரையனை நல்லாவே வளர்ப்ப சோ அவனை பத்தின கவலையும் உனக்கு வேண்டாம்".

' என் பையனை டைவர்ஸ் பண்ணினாலும் நான் உன் கூட இருப்பேன் அவனை ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சாலும் நான் உன் கூட இருப்பேன் யாருக்கும் பயப்படாம முடிவு எடு' என்றவர் அவள் கையில் இரண்டு பத்திரத்தையும் திணித்து விட்டு

'முக்கியமா எந்த முடிவு எடுத்தாலும் தாலியை கழட்டி கொடுத்துடுமா ஏன்னா உன்னோட எதிர்காலத்துக்கு அது என்னைக்குமே தடையா இருக்க கூடாது' என்று அவள் தலையில் இடியை இறக்கிவிட்டு மிக நிதானமாக சென்று நாற்காலியில் அமர்ந்து இருகரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினார்.

இரு பத்திரங்களையும் கையில் ஏந்தி நின்றவளின் முகத்தில் அதை எதிர்பாராத அதிர்ச்சி ஏகத்திற்கும் நிறைந்திருந்தாலும் அதையும் மீறிய வலி அவள் விழிகளில் படர்ந்திருந்தது. பல நிமிடம் அதை வெறித்து கொண்டு நின்றவளின் செவியில் இருந்தியாக அவர் கூறிய வரிகளே நிறைந்திருக்க ப்ரீத்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாக புரண்டோட அவள் கால்களோ வலுவிழந்து போக தள்ளாடியவள் தன்னை சமாளித்து ஒருவாறு அப்படியே மடங்கி கீழே அமர்ந்திருந்தாள்.

தன் கோபமும் ஆக்ரோஷமும் பலரை பந்தாடி இப்போது அவளையே பந்தாடுவதை கண்டவளுக்கு ஒரு கணம் மூச்சே நின்று போனது. இத்தனை நாட்கள் இங்கே வாழ்ந்த வாழ்க்கை நிரந்தரமானது இல்லை என்ற நிஜம் அவளை கூர்வாளாக கூறு போட நைந்து போயிருந்த மனம் அத்தனை ரணமாகி போனது. காலத்திற்கும் தனக்கு நிம்மதியான வாழ்க்கையே இல்லையா..?? வித்யாவில் தொடங்கி வர்ஷு வரை தனக்கு கிடைத்த சொந்தங்களும் தன் குழந்தைக்கான அங்கீகாரமும் இனி தனக்கு இல்லை என்ற உண்மை நெற்றி பொட்டில் அறைந்தார் போல புரிபட நடுங்கும் இதழ்களை அழுத்தமாக பற்றிக்கொண்டு அமர்ந்து இருந்த அவளையும் மீறி கண்ணீர் உற்பத்தி ஆகி இருந்தது.

எத்தனை நேரம் அமர்ந்திருந்தாலோ அவளே அறியாள் ஆனால் மனம் முழுக்க வலியும் வேதனையுமே மீதமிருந்தது. தன் தவறுகளை மன்னித்து வித்யா தன்னை ஏற்று கொண்டதாக அவள் நினைத்திருக்கையில் அவர் இப்படி தன்னை வெளியேற்ற முனைவர் என்று எதிர்பாராதவளுக்கு நெஞ்சம் கனத்து போனது அதில் மேலும் கண்ணீர் அதிகரிக்க தேம்பி அழ தொடங்கி இருந்தாள்.

வித்யாவோ அவள் கண்ணீரை கண்டும் அமைதியாக நின்றிருந்தார். ஆம் இது அவள் வாழ்வை தீர்மானிக்க கூடிய தருணம் இதில் யாரின் குறுக்கீடும் இல்லாமல் அவளே யோசித்து செயல்பட வேண்டிய நொடிகளில் எந்த குறுக்கீடும் செய்யாமல் அவள் முடிவை தெரிந்து கொள்ள அமைதி காத்திருந்தார்.

மெல்ல அவள் அழுகை குறைந்து விசும்பலாக மாறி அதுவும் ஒரு கட்டத்தில் நின்று போக ப்ரீத்தியின் முகம் தெளிவடைந்திருந்தது. மெல்ல கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்து வித்யாவின் முன் வந்தவள் 'அத்தை' என்று அழைத்து அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அவள் வார்த்தையை கேட்ட வித்யாதேவி முகத்தில் திகைப்பின் சாயல்.

அவர் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு "நா.. நான் உங்களை அத்தைன்னு கூப்பிடலாமா..??" என்று கேட்டவளின் குரல் தழுதழுத்து போனது.

அவரோ அதிர்ச்சி விலகாத முகத்தோடு 'சரி' என்று சம்மதம் அளித்தார்.

'தேங்க்ஸ் அத்தை' என்றவள் அவர் முன் முதல் பத்திரத்தை நீட்டி..,

"முதல்ல உங்க பையன் மேல கம்ப்ளையின்ட் கொடுக்க எனக்கு எந்த தகுதியும் இல்ல ஏன்னா அவர் பண்ணது தப்புன்னா நான் பண்ண இருந்தது பெரிய பாவம்..!! ஆனா இங்க எனக்கே மன்னிப்பு கிடைக்கும் போது அவருக்கு மட்டும் தண்டனை எப்படி சரியாகும் அதனால இதுக்கு அவசியம் இல்ல அத்தை" என்றவள் விஷ்வா மீதான புகாரை கிழித்து போட,

வித்யா மெச்சுதலாக மருமகளை பார்த்திருந்தார்.

அடுத்து விவாகரத்து பத்திரத்தை அவர் முன் நீட்டியவள், 'Opportunity knocks the door only once ' ன்னு சொல்லுவாங்க அத்தை' என்று அவரை பார்த்தவள்,

' எல்லாருக்கும் ரெண்டாவதா ஒரு வாய்ப்பு அவ்ளோ சீக்கிரம் கிடைச்சிடாது' என்று கழுத்தில் இருந்த தாலியை பார்த்தவாறே கூறியவள்,

'உங்களுக்கு தெரியுமா..??' என்று அவரிடம் தாலியை சுட்டி காட்டியவள்,

'இது இல்லாம எங்க அம்மா பட்ட அவமானம், வேதனை,வலி அதிகம் ஆனா உங்க பையன் தாலி என் கழுத்துல ஏறின போது எங்க அம்மா முகத்துல நான் பார்த்த சந்தோசம் இத்தனை வருஷத்துல பார்க்காதது, அதை விட இதை தக்க வச்சுக்கோன்னு அவங்க என் காலுல விழுந்து கெஞ்சினாங்க அத்தை..' என்றவளி குரலில் அத்தனை வலி.

'பிடிச்சோ பிடிக்காமலோ இந்த தாலி எனக்கு ரெண்டாவது முறையா கிடைச்சி இருக்கு இப்பவும் நான் அதை அவமதிக்கிறது சரி கிடையாது... உங்களுக்கு ஒன்னு தெரியுமா..?? சரண் கட்டினது வெறும் மஞ்சள் கயிறு அதுல மஞ்சள் கிழங்கோ,இல்ல பொன்தாலியோ கோர்க்கவே இல்ல ஆனாலும் அது எனக்கு எவ்ளோ பாரமா இருந்ததுன்னு வார்த்தையில சொல்ல முடியாது அத்தை. ஒருவேளை அது எனக்கு சொந்தமானது இல்லாததால தான் அப்போ பாரமா இருந்ததுன்னு நினைக்கிறேன். என்றவள் ஏதோ நினைவு வர அவரிடம்,

'அத்தை நீங்க நரகத்தை பார்த்து இருக்கீங்களா..??' என்று கேட்க வித்யா புருவம் சுருக்கி அவளை பார்த்தார்.

"ஆனா நான் பார்த்தேன்..!! என் குழந்தையோட என்னை ஜெயிலுக்கு அனுப்புவேன்னு சொல்லி அலர் எனக்கு நரகத்தை காட்டிட்டா..!! அங்க என்ன மாதரியான கொடுமையை அனுபவிப்போம்ன்னு கேள்வி பட்டிருக்கோமோ ஒரு சில மணி நேரமாவே இருந்தாலும் அதை நான் உயிரோட அனுபவிச்சேன் அதை என்னால இப்ப நினைச்சி கூட பார்க்க முடியாது" என்றவளின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிய அதை துடைத்தவாறே,

" உங்களுக்கு தெரியுமா அத்தை..??" என்று இதழ்கள் துடிக்க மூச்சை ஆழமாக இழுத்து விட்டவள் "அப்படி நடந்திருந்தா என்.. என் குழந்தை எந்த தப்பும் பண்ணாம அப்பா இல்லாம ஒரு குற்றவாளி அம்மாக்கு பையனா ஜெ.. ஜெயில்ல பிறந்திருக்கும். நான் இன்னும் பாவி ஆகி இருப்பேன் ஆனா எழில் மாமா அதை நடக்க விடாம என்னை காப்பாத்தினாரு" என்றவளிடம் மீண்டும் அழுகை,

'காம் டவுன் ப்ரீத்தி..!! அதெல்லாம் முடிஞ்சது எதுக்கு இப்போ..?? அந்த பேச்சை விடு' என்று ஆறுதல் படுத்த,

'நீ.. நீங்க தாலி..' என்று அவரை பார்த்தவள்

'நான் நிஜமா சொல்றேன் உங்க பையன் கட்டின தாலி எனக்கு பாரமாவே இல்ல சொல்லப்போனா அது எனக்கு பாதுக்காப்பை, நம்பிக்கையை, நிம்மதியை கொடுத்து இருக்கு நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் என்னால தாலியை கழட்ட முடியாது சாரி அத்தை'

"அதே சமயம் நீங்க சொல்ற மாதிரி என்னால சுயநலமா இருக்க முடியாது..!! இத்தனை நாள் நான்.. நான்னு சுயநலமா இருந்தது எல்லாம் போதும் இனியாவது எனக்காக இருக்கிறவங்களுக்காக வாழறேனே.., இப்போ நான் இதை மறுத்து கழட்டிட்டு போனா என்னை சார்ந்த எல்லோரும் சந்தோஷப்படுவாங்கன்னு நினைக்குறீங்களா..?? நிச்சயமா இல்ல எனக்கு ஒரு வாழ்க்கை அமையனும்ன்னு உண்மையா பாடுபட்ட அவங்களை நான் அசிங்கபடுத்தின மாதிரி, நாதன் அப்பாவை ஏற்கனவே ஒரு முறை காயபடுத்திட்டேன் இனியும் என்னால முடியாது"

" முக்கியமா இது தான் எனக்கு அருமையான மாமியாரை, பாசமான மாமனாரை, பாட்டியை, வருஷுவை, ஆகாஷ்ன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என் மேல உண்மையான பாசத்தை கொடுக்க கூடிய உறவுகளை கொடுத்து இருக்கு நான் இதை இழந்தா உங்களை எல்லாம் இழக்க வேண்டி இருக்கும் நிச்சயம் அது என்னால் முடியாது"

'முட்டாளா இருக்கிறது தப்பில்லை ஆனா புத்திசாலின்னு நெனச்சி முட்டாள்தனமா நடந்துக்குறது தப்பு.., போதும் அத்தை இத்தனை நாளா நான் முட்டாள்தனமா நடந்துகிட்டது எல்லாம் போதும். இத்தனை நாள் நான் மட்டும் இல்லாம என்னை சேர்ந்தவங்களையும் நான் வாழ விடலை இனியாவது அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து வாழறனே..!! என்று ஏக்கமும் எதிர்பாப்பும் போட்டி போட அவரை பார்த்தவள்,

"என்னால மத்தவங்க பட்டதும் போதும் ப்ளீஸ் அத்தை அதனால இதுவும் வேண்டாம்" என்று விவாகரத்து பத்திரத்தையும் கிழித்து போட்டாள்.


அவள் முடிவை கண்ட வித்யா மனதினுள் மருமகளுக்கு சபாஷ் சொல்லிகொண்டாலும் அவள் உறுதியை சோதிக்க வேண்டி மீண்டும், "சரிம்மா எனக்கு புரியுது தாலியை கழட்ட சொல்லலை ஆனா எதுக்குமா இப்ப பேப்பர்ஸை கிழிச்சி போட்ட..?? நான் தான் சொன்னேனே எனக்கு நீ எந்த முடிவு எடுத்தாலும் ச.." என்றவரை இடை நிறுத்திய ப்ரீத்தி,

'நான் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு சம்மதமா அத்தை..??' என்று அவரையே திருப்பி கேட்க,

'ஆமா' என்றவரிடம் அத்தனை உறுதி.

"அப்போ நான் இந்த வீட்டு மருமகளா வாழ ஆசைபடறேன் அத்தை என்னை ஏத்துப்பீங்களா..?? " என்று அவர் கரங்களை பிடித்து கொண்டு கேட்டவளின் கண்களில் கண்ணீர் துளி..!!

வித்யா ஏதோ பேச முற்படவும், 'ப்ளீஸ் அத்தை என்னை இங்க இருந்து போக சொல்லாதீங்க என்னால அது முடியாது' என்று கண்ணீருடன் அவர் காலில் விழ போக,

வித்யாவோ சட்டென அவளை தடுத்து பிடித்து, 'ப்ரீத்தி என்ன இது எந்திரி' என்று அவளை எழுப்பி நிறுத்தினார்.
Lovely....semma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top