Rudraprarthana
Well-Known Member

அடுத்த அரைமணி நேரத்தில் செக் இன் செய்து தன் அறைக்குள் நுழைந்தவன் முதலில் பயணக்களைப்பு தீர குளித்து விட்டு வெளியில் வர கைபேசி சிணுங்கியது.., எடுத்து பார்க்க அதில் தந்தையின் எண் ஒளிர்வதை கண்டவன் பிறகு அழைக்கிறேன் என்று அவருக்கு செய்தி அனுப்பிவிட்டு தலையை துவட்டியவாறே அறையோடு இணைந்திருந்த பால்கனியில் சென்று நின்றுவிட்டான்.
அகம் முழுக்க ப்ரீத்தியின் புன்னகை முகமே நிறைந்திருக்க வேறு எதை பற்றியும் சிந்திக்க தோன்றாமல் உயிர்காதல் கொடுக்கும் அவஸ்த்தையை சுகமாய் அனுபவித்தவாறே நீலவானை வெறித்து விழி பதித்தான்.
எத்தனை நேரம் நின்றிருந்தனோ தெரியாது ஆனால் வெறும் டிஷர்ட் ஷார்ட்சோடு இருந்தவனை குளிர் ஊசியாய் துளைக்கவும் தான் இருகரங்களையும் மார்பின் குறுக்காக கட்டி கொண்டு அங்கிருந்த கவுச்சில் அமர்ந்தவன் இதழ்கள் தாமாக..,
"ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்தை தேட
அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாதல்லவா..!!
நீ ஆசை மொழின் நகரம் தான்
நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்"
என்று ப்ரீத்தியை எண்ணி பாட தொடங்கிட அவளை கண்ட நாள் முதலே அவள் கருவிழியின் அசைவிற்கு ஏற்ப நகரும் அவன் மனதை இழுத்து பிடிப்பதே பலநேரம் அவனுக்கு பெரும் பாடாகி போகும்.., இதில் எங்கிருந்து அவள்...?? என்று வெறுமையாக புன்னகைத்து கொண்டவனுக்கு மேலும் மேலும் துரத்தும் ப்ரீத்தியின் நினைவுகளை அணையிடும் மார்க்கம் தெரியாமல் உழன்றிட ஒரு கட்டத்தில் குளிரில் கைகள் சில்லிட்டு உடலே மரத்து போகவும் தான் அறைக்கு திரும்பி ஹீட்டை போட்டு விட்டு படுக்கையில் குப்புற விழுந்திருந்தான்.
அவனிருக்கும் நிலைக்கு குறைந்தது மூன்று பகல் நான்கு இரவுகள் தொடர்ந்து உறங்க வேண்டும் அத்தனை அசதி..!!
ஆனால் கண்களை இறுக மூடியவனுடன் ப்ரீத்தி போலவே உறக்கமும் ஊடல் கொண்டு அவனை தழுவாமல் போக நிமிர்ந்து படுத்து இருகரங்களையும் தலைக்கு அணைவாய் கொடுத்தவனின் இதழ்கள் மீண்டும்,
"காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே
உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல
அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே
என் இமையை மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும் திருடாதே..!!"
என்று புன்னகையுடன் பாடியவனுக்கு அல்லவா தெரியும் பல வருடங்களாக அவன் துயிலை திருடிக்கொண்டு இருப்பவளை பற்றி..!! வளைக்காப்பின் போதே அவளோடு சேலம் திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் ஆனால் எதிர்பாராத விதமாக அவளுக்கு பிரசவவலி ஏற்ப்பட வேறு வழி இன்றி ஆரணியிலே தங்கிவிட்டவனுக்கு ப்ரீத்தியை அவன் வீடு கொண்டு வந்து சேர்க்கும் வரையிலான இந்த நான்கு நாட்களும் சுத்தமாக தூக்கம் இல்லை.
'நான்கு நாட்கள் மட்டுமா..??'
'இல்லையே..!!!'
அவன் உணர்ந்த வரையில் அவளை கண்ட நாள் முதலே தினமும் உறக்கத்தில அவனிமைகளை ஊடுருவி நிற்ப்பவளால் அவன் கொள்ளும் காதல் வதை வார்த்தைகளில் வடிக்க முடியாதவை..!!
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பொது இடங்கள் என்று எத்தனை எத்தனை பெண்களை கடந்து வந்திருப்பான் ஆனால் ஒருவரும் ப்ரீத்தியை போல முதல் சந்திப்பிலேயே அவனை ஈர்க்கவில்லை. என்றுமே மனித மனதை அறிந்து கொள்ள அவர்களின் விழிமொழி படிப்பவனை அன்று கல்லூரியில் ப்ரீத்தியின் விழிகளில் அவன் கண்ட நிமிர்வு, அச்சமின்மை, நேர்மை, உண்மை , ஆதங்கம், ரௌத்திரம், கருணை அனைத்தும் ஏனோ காரணமே இன்றி அவனை அவள் பால் கட்டி இழுத்துவிட்டது என்பது தான் நிஜம்.
சிறு பொறி போதுமே காதல் நெஞ்சம் தீப்பற்றி கொள்ள அதுபோல அன்று அவன் சௌமியாவை சந்திக்க வேண்டி கல்லூரிக்கு சென்ற போது அத்தனை ஆவேசமாக பேசிய ப்ரீத்தியின் பார்வை நொடிக்கும் குறைவாக கூட்டத்தில் நின்றிருந்த விஷ்வாவின் மீது படிந்த நொடி அவனில் முழுதாக நுழைந்து விட்டாள் ப்ரீத்தி.
'லவ் அட் பிரஸ்ட் சைட்டில்' சுத்தமாக நம்பிக்கை இல்லாத விஷ்வதேவிர்க்கு நண்பர்கள் மத்தியிலும் அவனை கடந்த பெண்கள் மத்தியிலும் மற்றொரு பெயர் உண்டு அதுதான் விஷ்வாமித்திரன்..!! அந்த அளவிற்கு பெண்களிடம் இருந்து ஒதுங்கி காதல் கத்தரிக்காய் என்று நேரத்தை விரயமாக்காமல் படிப்பிலும் இசையிலும் மனதை செலுத்துபவன் தான் அவன். விளையாட்டாக காதல் குறித்து சிவசங்கரன் அவனிடம் கேட்கும் போது எல்லாம் அன்னை பார்க்கும் பெண்ணை மணம் புரிவது என்ற உறுதியுடன் இருந்தவனே எதிர்பாராத வகையில் அன்று அவனில் துளியாக விழுந்தவள் இன்று கடலாக மாறி அவன் சிந்தை, மனம், செயல் என்று எங்கம் ப்ரீத்தியே நீக்கமற வியாபித்து ததும்பி நிற்கிறாள் என்றால் அவன் காதலின் ஆழமும் அவன் நிலையும் சொல்லிலடங்காதவை ...!!
இதோ இப்போதும் மூடிய இமைகளுக்குள் நுழைந்த ப்ரீத்தி அவன் துயிலை கலைக்க அதற்க்கு மேலும் படுக்க முடியாமல் எழுந்தே அமர்ந்துவிட்டான்.
ஆம் பல வருடம் கழித்து அவளை காணும் வரையில் காதலினால் காதலியினால் உறக்கம் தொலைத்தான் என்றால் அதன் பின் என்று நாடு திரும்பி ப்ரீத்தியை பார்வதியின் அறையில் கண்டானோ எப்போது அவளை தன் குழந்தைக்கு தாயாக்குவது என்ற முடிவை எடுத்தானோ எப்போது அதனை செயல் படுத்தினானோ அன்றிலிருந்தே அவன் உலகமே மாற கண்களை மூடவும் முடியாமல் தவித்து கிடப்பவன்.
குறைந்த பட்சம் இப்போது அவளை அவன் நினைத்தது போல அவன் வீட்டில் கொண்டு வந்து சேர்த்த பின்பாவது உறங்கலாம் என்று நினைத்தால் எங்கே முடிகிறது..?? சுவாசித்தான் ஆனால் அது அவன் வாழ்வதற்க்காகவா..?? என்றால் நிச்சயம் இல்லை ப்ரீத்தியை வாழவைப்பதற்கு..!! தட்டில் என்ன விழுகிறது என்று கூட பார்க்காமல் நேரத்திற்கு உணவை உட்கொண்டான் ஆனால் அதன் ருசி அவன் நாவை கட்டிபோட்டதா..?? வயிறை நிறைத்ததா..?? என்று கேட்டால் நிச்சயம் அவன் பதில் இல்லை தான்..!! அவளை உயிர்ப்பிக்க அவன் உயிர் வாழ வேண்டும் அதற்கு உணவு வேண்டுமே என்பதற்காக உண்டான்.
அவன் கொண்டிருக்கும் உயிர் வதையில் வார்த்தைகளை மறந்து பல நேரம் திண்டாடுபவன் பேச்சு மறந்துவிடக்கூடாதே என்று பேசுகிறான் ஆனால் அது ஆத்மார்த்தமாகவா..?? என்று கேட்டால் நிச்சயம் இல்லை..!! அவள் இல்லையெனில் அவன் இல்லை என்பதை என்று உணர்ந்தானோ அன்று முதலே அவன் பேசும் பேச்சும் வாங்கும் மூச்சும் ப்ரீத்திக்காகவே என்றாகிப்போனது..!!
மீண்டும் அலைபேசி ஒலிக்க, எடுத்து பார்க்க அதில் எழிலின் எண் அதை கண்டவனின் முகம் கசங்க அலைபேசியை உயர்த்தி மீண்டும் பார்த்தவனுக்கு எழில் எதற்க்காக அழைக்கிறார் என்பதை நன்கு உணர்ந்தே இருந்தான். பின்னே ப்ரீத்தி உள்ளறையில் எழிலுக்கு அழைத்து அழுதது பேசியது அனைத்தையும் இவனும் கேட்டிருந்தானே, சென்னை செல்லும் வழியிலேயே எழில் பலமுறை அழைத்தும் விஷ்வா எடுக்கவில்லை என்பதை விட எடுத்து பேசும் மனநிலையில் அவன் இல்லை என்பது தான் நிஜம்.
நல்லவேளை சரண் சம்பந்தமாக எழில் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டு இருந்ததால் விஷ்வா தப்பித்தான் இல்லையென்றால் நடுஇரவு என்றும் பாராமல் மீண்டும் சேலம் வந்து விஷ்வாவை முதல் நாள் சந்தித்த போது கொடுத்த அறையை விட பலமாக இப்போது கொடுத்து ப்ரீத்தியை கையோடு கூட்டி சென்றிருப்பார் என்பதில் விஷ்வாவிற்கு அத்தனை நிச்சயம்.
ஆம் என்று அவள் கீர்த்தி அல்ல ப்ரீத்தி என்று தெரிந்ததோ அன்றே பார்வதியை தேடி சென்னை கிளம்பிய எழில் அவரிடம் தீவிர விசாரணையில் இறங்கி அவர் மூலமாக குழந்தையின் தந்தை விஷ்வா என்பதை அறிந்து கொண்டவன் உடனே அவனை தேடி வந்துவிட்டான். தங்கள் குடும்ப பெண்ணிற்கே தெரியாமல் அவளை தன் குழந்தைக்கு ஒருவன் தாயாக்கி இருப்பதில் விஷ்வாவை ஆத்திரத்தோடு நெருங்கி "எப்படி ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளை தாயாக்குவாய்..??" என்று கேட்டவன் அவனை ஓங்கி அறைந்து,
"ஒரு தவறுக்கு மற்றொரு தவறு என்றுமே தீர்வாகாது..!! ப்ரீத்தியை விடவும் அவன் செய்தது மாபெரும் குற்றம்" எனக்கூற,
இறுகிய முகத்துடன் நின்ற விஷ்வா அவனின் நியாமான கோபத்திற்கு மதிப்பு கொடுத்து சில நிமிடம் அமைதியாக இருந்தவன் பின் தன் தரப்பை எடுத்து கூற எழிலும் ப்ரீத்தி பற்றி விவரிக்க 'தனக்கும் எல்லாம் தெரியும்' என்றவன் 'எப்படி..??' என்று தன்னிலை விளக்கம் அளித்து ப்ரீத்தியை தன் உயிரினும் மேலாக பாதுகாப்பான் என்ற உறுதியை எழிலுக்கு அளித்து அதன் பின்பும் சில மணி நேரத்திற்கு பிறகே எழிலை சமாதானபடுத்தி இருந்தான்.
கண்ணீர் என்றால் என்ன விலை..?? என்று கேட்கக்கூடிய ப்ரீத்தியின் கண்ணீரிலும் அழுகையிலும் எழில் எத்தகைய வேதனை கொண்டு இருப்பான் என்பதை புரிந்தவன் இப்போது பேசியை எடுக்க...,
மறுகணமே, "விஷ்வா" என்ற எழிலின் குரலில் அத்தனை ஆவேசம்
குரலை செருமி "அண்ணா" என்றிட,
அடுத்த நொடியே 'ப்ரீத்தியை என்ன சொன்ன..??' என்று பற்களுக்கிடையில் எழில் வார்த்தைகளை அரைத்து துப்பியிருந்தான்.
எதிர்பார்த்த கேள்வி என்பதால் சிறுதயக்கமும் இன்றி, "ண்ணா இந்த கேள்விக்கு நான் எதுவும் சொல்லலைன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா..??" என்று அவன் எதிர் கேள்வி கேட்டான்.
"உன்மேல நம்பிக்கை வச்சி தான் ப்ரீத்தியை அனுப்பினதா எனக்கு நியாபகம் விஷ்வா"என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்,
"அப்போ அதே நம்பிக்கையோடு இருங்க ஐ ப்ராமிஸ் யு அகைன்"
"அப்புறம் ஏன் ப்ரீத்தியை அழவிட்ட..??"
கண்களை இறுக மூடி திறந்தவன், "இது தான் ப்ரீத்தியோட கடைசி அழுகையா இருக்கும்ண்ணா" என்றான்.
"இன்னொரு முறை அவ அழரவரைக்கும் உன்னை விட்டுவைப்பேன்னு நினைக்கிறியா..??" என்று எழில் ஆத்திரத்துடன் கேட்க
'இல்லை' என்ற விஷ்வா "ண்ணா எல்லா வியாதியையும் ஒரே மருந்துல குணப்படுத்த முடியாது அதனோட தன்மை, வீரியம் பொறுத்து மருத்துவமும் மருந்தும் மாறுபடும்... பெரும்பான்மையான மருந்து கசக்கதாண்ணா செய்யும் அதுக்காக அது கொடுக்காம இருக்க முடியாது தேவைபட்டா டோசெஜ் கூட்டி கொடுத்து குணப்படுத்த தான் பார்ப்பேனே தவிர கடைசி வரை பின்வாங்க மாட்டேன்"
"நான் கண்ணீருக்கான காரணம் கேட்டேன்"
கசந்த முறுவலுடன் "இருக்கிறதுலேயே ரொம்ப கசப்பான மருந்தை கொடுத்தேன், எப்படி அதை குடிக்கும் போது குழந்தைங்க அழுமோ அதே போல தான் உங்க குழந்தையும் உங்ககிட்ட அழுதிருக்கா பட் ஐ ப்ராமிஸ் யு அகைன், இனி நான் கொடுத்த கசப்பு மருந்துக்கான தேவை இருக்காது அவ அழவும் மாட்டா.., நான் விடவும் மாட்டேன் "என்று உறுதியான குரலில் கூற,
விஷ்வா குரலிலும் வார்த்தையிலும் நம்பிக்கை வரபெற்ற எழில், "ஏன் ப்ரீத்தியை தனியே விட்டுட்டு போன" என்று விஷ்வாவின் தந்தை மூலமாக அவன் வெளிநாட்டிற்கு சென்றிருப்பது குறித்து கேட்க
'ட்ரீட்மென்ட்ல இது அடுத்த கட்டம்ண்ணா, சீக்கிரமே அவ குணமாகி நீங்க புது ப்ரீத்தியை பார்ப்பீங்க' என்றிட,
"உன் மேல இருக்க நம்பிக்கை இன்னும் அப்படியே தான் இருக்கு விஷ்வா அதை கெடுத்துக்க மாட்டேன்னு நம்புறேன் ஆனா ட்ரீட்மென்ட்ன்னு சொல்லி ப்ரீத்தியை இன்னொருமுறை என்கிட்டே அப்படி ஒரு கேள்வி கேட்க வச்சிடாத..!!" என்று கலங்கிய குரலில் கூற,
ப்ரீத்தியின் கேள்வியில் எழிலை விடவும் நூறு மடங்கு கலங்கி நிற்ப்பவனுக்கு பல நிமிடங்களுக்கு வார்த்தை எழாமல் தொண்டையை அடைத்து கொள்ள இரண்டு மூன்று முறை 'விஷ்வா' என்று எழில் அழைக்கவும் குரலை செருமி 'ப்ராமிஸ்ண்ணா' என்றவன் அதற்கு மேலும் பேசும் சக்தி அற்றவனாக 'அப்புறம் பேசுறண்ணா' என்று கைபேசியை வைத்தான்.
எழிலுடனான பேச்சை அசைபோட்டவாறே அறைக்குள் நடந்து கொண்டிருந்தவனுக்கு எழிலுடனான முதல் சந்திப்பு அதன் பின் ப்ரீத்தியை அவனுடன் அழைத்து வருவதற்கு தடையாக இருந்த தாய் , தந்தை அடுத்து நாதன் என்று ஒவ்வொருவரையும் சமாதனபடுத்தி நிமிர்ந்தவன் முன் இருந்த மிகப்பெரிய சவாலே ப்ரீத்தி தான்..!!
'நிச்சயம் இது தன் குழந்தை' என்று கூறியதும் அவள் ஒன்றும் அதை ஏற்றுக்கொண்டு உடனே அவனுடன் வாழவரப்போவது இல்லை என்பதை அறிந்திருந்தவன் வேறு வழி இன்றி ப்ரீத்தியையும் மிரட்டியே அழைத்து வரவேண்டியதாகி போனது. இவை அனைத்தும் ஒருபுறம் என்றால் ஒரு நாள் முழுவதையும் விழுங்கிய பயண களைப்பு மறுபுறம் அவனை சோர்வுற செய்ய மேலும் நடையை தொடராமல் விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் படுத்து கண் மூடிட அவன் விழிகளை மீண்டும் ஊடுருவி நின்றாள் ப்ரீத்தி.
அதுவும் அன்று இரவு அவள் கூறிய 'I am not a whore as you think..!!' என்ற வாக்கியமே இந்த நொடி வரை அவன் உயிரை சிறுக சிறுக குடித்து கொண்டிருக்க எங்கிருந்து உறக்கம் வரும்..?? எந்த வார்த்தையை அவளிடம் இருந்து கேட்டுவிடக் கூடாது என்று இத்தனை பாடுபட்டானோ அதை அவனிடமே கூறி விட்டவளுக்கு தெரியாது அவள் வார்த்தைகள் அவனை எத்தனை ஆயிரமாக, லட்சமாக கூறு போட்டு கொண்டிருக்கிறது என்று...!!
திறந்த விழிகளுடன் இருட்டறையை வெறித்து கொண்டிருந்தவனின் இமையோரத்தில் கண்ணீர் கோடுகள் இறங்கி தலையணையை நனைத்து கொண்டிருக்க அன்று அவள் வாக்கியத்தை தொடங்கிய போதே தெரியும் அதை தாங்கும் வல்லமையை அவன் பெறவில்லை என்பது..!! இதோ இப்போது அதை நினைத்தாலும் அவள் வலியை தனதாக உணர்ந்து துடிப்பவனின் நெஞ்சில் குருதி கசிகிறதே அதை எங்கனம் அவனும் தடுக்க..??
ப்ரீத்தி வெடிப்பாள் என்பதை கணித்திருந்தவனுக்கு அதனால் அவன் கொள்ள போகும் காயத்தின் ஆழத்தை கணக்கிட தவறி இருந்தான். எனினும் அதற்குள் மேல் அவளுடன் அங்கே இருந்தால் எங்கே தன்னை கட்டுபடுத்த முடியாமல் வெளிபடுத்திவிடுவோமோ என்ற அச்சத்திலேயே பத்து நாட்களுக்கு பிறகு நடக்ககூடிய கருத்தரங்கம் , ஆய்வுகளில் கலந்து கொள்ள முன்னரே திட்டமிட்டு வந்துவிட்டவனுக்கும் தன்னை தேற்றி கொள்வதற்கான அவகாசம் கிடைக்கபெற அடுத்த ஒருவாரத்திற்கு அறையை விட்டு எங்கும் அவன் வெளியேறவில்லை யாரிடமும் பேசவில்லை அறையில் அடைந்து கிடந்தவன் கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையில் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் அத்தனை தூரம் ப்ரீத்தி கூறிய வார்த்தைகள் அவனை கொன்று தின்று கொண்டிருந்தது.
இந்த அளவு தன்னிலை மறந்து இருப்பவனல்ல அவன்..!! ஆனால் காதல் அவனை அந்த அளவு படுத்தி எடுத்தது, இத்தோடு அவன் வேதனைகள் தீரப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தவன் இனியும் காலம் முழுக்க தொடரக்கூடிய நாட்களுக்கும் சேர்த்தே அந்த ஒருவாரத்தில் தன்னை செதுக்கி கொண்டான்.
கைபேசியில் இருந்த அவள் நிழற்படத்தை பார்த்தவாறே நாட்களை கடத்தியவன் அவளிடம் தினமும், "என்னை இன்னும் மோசமா கூட பேசு ப்ரீத்தி கேவலமா திட்டு, அடி, ஆத்திரம் தீர குத்தி கிழி ஆனா இன்னொருமுறை உன்னை அன்.. அந்த வார்..த்..தை" என்றவனின் குரல் உடைய நா தழுதழுக்க மீண்டும் கண்ணீர் துளிர்க்க தொடங்கி விட்டது.
அதை தொடர்ந்து சில நொடிகள் கண்மூடி தன்னை கட்டுக்குள் கொண்டுவர போராடியவனுக்கு வாய்விட்டு கதற தோன்றிட அரும்பாடு பட்டு தன் அழுகையை மென்று தொண்டைக்குழியினுள் தள்ளியவன்,
"ஐ பெக் யூ.. ஐ பெக் யூ புவர்லி ப்ரீத்தி (I beg you poorly..!!) ப்ளீஸ்... ப்ளீஸ்.. இன்னொருமுறை அப்படி சொல்லாத" என்று நொடிக்கொருமுறை அவளிடமே அவளுக்காக மன்றாடி கொண்டிருந்தான்.
*
சௌமியா ப்ரீத்தியுடன் இருந்த இரண்டு நாட்களும் எப்படி போனது என்றே தெரியாத வகையில் அத்தனை வேகமாக சென்றிருந்தது... வர்ஷினியும் விடுமுறை இருந்ததில் தோழிகளுடன் உடன் சேர்ந்துக்கொள்ள இரவும் பகலும் மூவரின் கூட்டணியில் வீடே நிறம் மாறி போயிருந்தது. மகிழ்ச்சியும், சிரிப்பும், ஆரவாரமுமாக அவர்கள் வீட்டை வளைய வர அங்கே ததும்பி வழிந்த சந்தோஷத்தில் மனம் பூரித்து போனார் வசுந்தரா தேவி.
ப்ரீத்தியின் புன்னகை முகத்தை கண்ட சிவசங்கரன் மனைவியை பார்க்க வித்யாவோ ப்ரீத்தி வந்த போது இருந்ததற்கும் இப்போதைய அவள் மாற்றத்தையும் சத்தமில்லாமல் தனக்குள் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தார்.
சௌமியாவின் வரவிற்கு பின் விஷ்வா குறித்த தகவல்களை மேலும் விரிவாக தெரிந்து கொண்ட ப்ரீத்திக்கு முன்பு போல வித்யாவை எதிர்கொள்வதில் இருந்த அச்சமும் தயக்கமும் இப்போது இல்லை. என்னதான் சௌமியா உடன் இருந்ததில் பெரிதாக தெரியாமல் போனாலும் தொடர்ந்த நாட்களிலும் விஷ்வா வீட்டிற்கு வராமல் இருந்ததில் இம்முறை ப்ரீத்தியால் ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
விஷ்வா எங்கு சென்றிருப்பான் என்று சௌமியாவை கேட்டதற்கு அவளுக்கும் தெரியவில்லை என்று கூற வர்ஷினியிடம் கேட்க தயக்கம் கொண்டவள் தினமும் அவனுக்கு தொடர்ந்து அழைக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளிடம் இருந்த எண்ணிற்கு அவள் எப்போது அழைத்த போதும் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்ததில் விஷ்வா மீது ஆதங்கம் மேலோங்கியது.
யாரிடம் சென்று கேட்பது என்று விழித்து கொண்டிருந்தவள் உடனே சௌமியாவிற்கு அழைத்து அவள் கணவனிடம் கேட்க சொல்ல அதன் பின்பே அவன் வெளிநாடு சென்றிருப்பதும் அது அவன் பெற்றோருக்கும் தெரியும் என்றும் தெரியவந்தது. கார்த்திக் மூலமாக ஓரளவிற்கு அவன் பயணத்திட்டம் அறிந்து கொண்டவள் மனதின் ஓரம் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.
ப்ரீத்தி வந்து ஒரு வாரம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைக்கும் அவளுக்கும் செய்ய வேண்டிய சம்பிரதாயம் குறித்து பேசுவதற்காக சிவசங்கரன் நாதனுக்கு அழைத்திருக்க அழைப்பை ஏற்ற கதிர் நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக கூற அதை அறிந்த ப்ரீத்தி மனம் நிலைகொள்ளாமல் தவித்து போனது எங்கே தன்னால் அவரது உடல் நிலை சீர்கெட்டு போனதோ இன்னும் அவளால் அவர் என்னவெல்லாம் சந்திக்க வேண்டும் என்று உடைந்து போனவள் உடனே நாதனை பார்க்கவேண்டும் என்று கண்ணீருடன் அவரிடம் கேட்க சிவசங்கரனும் வித்யா மற்றும் ப்ரீத்தியோடு ஆரணி சென்று திரும்பி இருந்தார்.
ஆராய்ச்சி கூடத்தில் இருந்து அறைக்கு திரும்பிய விஷ்வாவிற்கு மீண்டும் சிவசங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது. பல நாட்களாக சிவசங்கரின் அழைப்பை ஏற்காமல் இருந்தவன் குளித்து முடித்த பின் நிதானமாக அவருக்கு எடுக்க,
'தேவ்' என்றவரின் குரலில் அத்தனை எரிச்சல்,
'சொல்லுங்கப்பா'
"தேவ் ஏன் இத்தனை நாளா கால் பண்ணலை எடுத்து பாரு தினமும் பத்து முறையாவது உனக்கு கால் பண்ணி இருப்பேன் அவசரத்துக்கு எடுக்க மாட்டியா..??" என்று அவனை கடிய
'ப்பா ஒரு வாரமா லேப்ல இருந்தேன்பா எப்படி எடுக்க சொல்றீங்க..??உங்களுக்கு தெரியாதா..??' என்று அவரையே திருப்பி கேட்டவன் தந்தையிடம் இருந்தும் தன் வலியை மறைத்திருந்தான்.
பின்னே அவன் கொண்டிருக்கும் உயிர் வேதனையை அறிந்தால் மனிதர் துடிதுடித்து போய் அவன் திட்டம் அனைத்தையும் கெடுத்து விடுவாரே அதனால் அவரிடம் சாதாரணமாக கேட்க,
தன் கேள்வியில் இருந்த அபத்தம் புரிந்தவர், "சாரி கண்ணா மறந்துட்டேன்..!! ஆனா இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு உனக்கு தெரியுமா..??" என்று பதட்டத்துடன் கேட்க,
'என்ன நடக்குது இப்போ சொல்லுங்க கேட்கிறேன்'
'தேவ் நீ ப்ரீத்தி கிட்ட எதுவும் சொல்லலையா..??'
'என்னப்பா சொல்லணும்..??'
'என்ன சொல்லனுமா..??' என்று மகனை திருப்பி கேட்டவர் 'நீ யூ.எஸ் போறதை பத்தி ப்ரீத்தி கிட்ட ஏன் சொல்லலை..??' என்று நேரிடையாக கேட்க
''எதுக்குப்பா சொல்லணும்"
'தேவ்' என்றார் அதிர்வுடன்
'ரிலாக்ஸ்பா' என்று அவர் அதிர்ச்சி புரிந்தவனாக கூற,
"தேவ் நீ எதுவும் சொல்லாம கிளம்பிட்ட இங்க உன் அம்மா இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சாச்சுடா"
"ஆரம்பிக்கட்டுமேப்பா அதுக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க..??"
"டேய் ஏன்டா சொல்ல மாட்ட..?? உங்க அம்மாக்கு ப்ரீத்தி மேல இருந்த சந்தேகம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஊர்ஜிதம் ஆகிற மாதிரியே ப்ரீத்தியும் நடந்துட்டு இருக்கு.., நீ சொன்ன மாதிரி ப்ரீத்தி ஒன்னும் ஸ்மார்ட் இல்ல முதல் நாளே உங்க அம்மா கேட்ட பல கேள்விக்கு சொதப்பி வச்சி இருக்கு நான் தான் உங்க அம்மாகிட்ட மருமகளுக்கு டைம் கொடுன்னு இழுத்து பிடிச்சி இருக்கேன் ஆனா இப்படியே போனா சீக்கிரம் உங்க அம்மாக்கு எல்லாமே தெரிஞ்சிடும் போல இருக்குடா" என்று தவிப்புடன் கூற
'தெரியட்டுமேப்பா அதனால என்ன..??'
'தேவ் என்ன பேசுற..?'
'சரியா தான்பா பேசுறேன்' என்றவனின் வார்த்தைகளை உச்சபட்ச அதிர்வில் திகைத்து நின்றான் சிவசங்கரன்
ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். விஷ்வா தரப்பு விளக்கங்கள் ஆரம்பம் ஆகிடுச்சி கன்வின்சிங்கா இருக்கான்னு சொல்லிட்டு போங்க.
நன்றிகள்
ருத்ரபிரார்த்தனா
Last edited: