கொலுசொலி மயக்குதடி - 19

Advertisement

அத்தையிடம் போன் பேசி முடித்துவிட்டு சிவானி சிறிது நேரம் படுத்து தூங்கினாள்.. ஆறுமணி வாக்கில் அவளைத் தேடி வந்த அன்னம் அவளின் தோளில் தட்டியவாறு... என்னடா இராஜாத்தி இன்னும் உறக்கம் போகலியா என்றவாறு எழுப்பினார்...

மெதுவாக கண்களை திறந்தவள் தாயை கண்டதும் சட்னெ எழுந்து கொண்டாள்... என்ன மா நீங்க ஏன் மாடி ஏறி வந்து கஷ்டப்படறீங்க... யாராவது அனுப்பிருக்கலாம்ல.. அவரை பாசத்துடன் பார்த்தவாறு எழுந்து அமர்ந்தாள்....

இருக்கட்டும்டா இதுல என்ன இருக்கு... முகம் கழுவிட்டு வாடா.. அப்பா உன்ற கையால விளக்கேத்தனும்னு பிரியப்படறாங்க....

ஓஓஓ.... விளக்கேத்தற டைம் ஆயிருச்சா... மன்னிச்சுக்கோங்க மா... அசதியில் தூங்கிட்டேன்... மன்னிப்பும் வேண்டும் தோரணையில் அவள் பேசவும்.. இதுல என்ன இருக்கு வெரசா கீழே வா.. நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்...

அன்னம் சொல்லிவிட்டு கீழே போய்விட.. இவளும் வேகமாக தயாராகி கீழே வந்தாள்...

என்ன கண்ணு நல்லா தூக்கமா... ஹாலில் அமர்ந்திருந்த அவளது தந்தை கேட்கவும்.. ஆமாங்க அப்பா நீங்க நேரமாவே வந்துட்டீங்களா... சாப்டீங்களா... அவரிடம் கேட்டவாறு அருகில் வந்தாள்...

ஆச்சு கண்ணு.. போ போய் விளக்கேத்திட்டு அம்மாவை அழைச்சுட்டு வாங்க... அவளிடம் சொல்லியனுப்ப சரியென பூஜையறையை நோக்கிப் போனாள்...

அன்னம் அதற்குள் அங்கு இருந்த அனைத்து தெய்வங்களையும் பூக்களால் அலங்கரித்து தீபமிட ஏதுவாய் விளக்கில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி வைத்திருந்தார்...

ஐந்து முகம் கொண்ட இரு பெரிய குத்துவிளக்கையும் சிவானி ஏற்றவும் தாயும் மகளும் கடவுளை பூஜித்துவிட்டு ஹாலிற்கு போனார்கள்...

இவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இராஜசேகர் வந்து உட்காருங்க என கம்பீர குரலில் சொல்ல... இருவரும் அமர்ந்து கொண்டார்கள்...

உனக்கு படிப்பு முடிஞ்சுது கண்ணு... உன்கிட்ட தொழில் பொறுப்புகளை எல்லாம் ஒப்படைக்கலாம்னு இருக்கேன்.. நீ உன்னோட முடிவை சொல்லுமா.. அவர் எடுத்தத்தும் அவ்வாறு சொல்லவும் மகள் என்ன சொல்வாளோ என அன்னபூரணி பயந்தார்...

பொண்ணுனு படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணாம தொழிலை நம்பி கொடுக்கறதாக சொல்றீங்க.. உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குதுங்க.. எனக்கு இதுல முழு சம்மதம்...

மகளின் பதிலில் பெற்றவர்கள் இருவரும் குளிர்ந்து போனார்கள்...

பொம்பளைப் புள்ளையா இருந்தால் என்ன கண்ணு.. நீ பொறந்த அன்னைக்கு எங்க அப்பாவோட சாயல்ல கம்பீரமாக இருந்தாய்.. அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் இந்த ஆஸ்தியை எல்லாம் கட்டி ஆளப்போற என்னோட சிங்கக்குட்டியே நீதான்னு...

அதனால தான் ஒத்த பொண்ணையும் தைரியமாக இருக்கனும்னு வெளியில் தங்கி படிக்க வச்சேன்.. அதோட தொழில் அறிவையும் அப்பப்போ பேக்டரிக்கு எல்லாம் கூட்டிட்டு போய் வளர வச்சேன்.. நீயும் அதுக்கேத்த மாதிரி தான் வளர்ந்திருக்க....

தந்தை பேசபேச தான் ஒரு இராணியைப் போல உணர்ந்தாள்.. உங்க நம்பிக்கையை என்னைக்கும் காப்பாத்துவேன் பா.. கவலையே படாதீங்க என நம்பிக்கை கொடுத்தவள் அடுத்த நாளே அவருடன் பாக்டரிக்கு வருவதாய் ஒப்புக் கொண்டாள்...

இரவு உணவிற்கு போய் தயார் செய்வதாக அன்னபூரணி சமையல்கட்டை நோக்கி செல்லவும் சிவானியை ஆபிஸ்அறைக்கு அழைத்துப் போனார் இராஜசேகர்...

கடந்த ஒரு வருடத்திய நிர்வாக நிலைமையை பற்றி விரிவாக எடுத்து சொல்லத் தொடங்கினார்...

அவரின் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு மேனேஜரை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்... அவர்களின் மூலம் அந்தந்த தொழிலைப் பற்றிய தகவல்கள் வாரம் ஒருமுறை இவரின் கண்பார்வைக்கு வந்துவிடும்.. வாரக்கடைசி நாளில் எல்லா பக்கமும் நேரில் சென்று பார்வையிட்டு நல்ல முறையில் நடக்கிறதா என உறுதி செய்து கொள்வார்...

அவர் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல அனைத்தையும் அங்கிருந்த நோட்பேடில் குறிப்பெடுத்துக் கொண்டாள்... தந்தை சொல்வதைக் கேட்டதும் அவளிற்கு பிரமிப்பாக இருந்தது...

அடுத்த நாளே அவர்களது முதன்மை அலுவலகத்திற்கு போவதாக பேசி முடிவெடுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்...

மறுநாள் பளிச்சென நீல வண்ண சில்க் காட்டன் புடவையில் அடர்ந்த கூந்தலை பின்னலிட்டு சிறு ஒப்பனையுடன் அலுவலகம் செல்ல கீழே வந்தாள்...

காலை உணவை முடித்துக் கொண்டு சாமியை தரிசித்து சிவானி தந்தை தாயை நிற்க வைத்து காலில் விழுந்தாள்... அவர்களும் சிறு புன்னகையுடன் வாழ்த்தினார்கள்...

அலுவலகம் வந்த மகளை பொறுப்பில் அமர வைத்தவர் தள்ளி நின்று கொண்டார்.... அவருக்கு உதவியாக இருக்கும் சதாசிவம் கேபினின் உள்ள வந்தவர் மீட்டிங் ஹாலில் அனைவரும் காத்திருப்பதாக சொன்னார்...

சிவானியும் தந்தையை அழைத்துக் கொண்டு வேக எட்டுகளில் மீட்டிங் ஹாலை அடைந்தாள்...அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கவும் சிறு தலையசைப்புடன் ஏற்றவள் அங்கு நடுநாயகமாக இருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தாள்...

அவளின் பக்கவாட்டில் இருந்த சேரில் இராஜசேகர் அமர்ந்து கொண்டார்... எல்லோருக்கும் வணக்கம் என் பேரு சிவானி இராஜசேகர்.. இனிமேல் நிர்வாகத்தை பார்த்துக்க போறேன்.. என்னைவிட நீங்க எல்லாரும் ரொம்ப அனுபவம் மிக்கவர்கள்.. சோ நீங்க தான் எனக்கு துணையாக இருக்கனும்..

சிவானியின் தொடக்கமே அனைவருக்கும் பிடித்துப் போக... கண்டிப்பாக மேடம் என ஒருமித்த குரலில் சந்தோசமாக கூறினார்கள்...

மேலும் தொழில் தொடர்பாக சிலவற்றை அவள் பேசி... மற்றவர்களிடமும் சிலவற்றை கேட்டு தெளிவுபடுத்தி கொண்டாள்.. மீட்டிங் முடித்ததும் சிவானி தந்தையை அழைத்துக் கொண்டு கேபினிற்கு கிளம்பி விட்டாள்...

அவர்களுடன் வந்த சதாசிவம்... ஐயா நம்ம சிவானி பாப்பாவா இப்படி வெளுத்து கட்டுது.. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு... ஆத்மார்த்தமாக அவர் சொல்லவும் அவரும் ஆமாஆமா என்றார் மீசையை முறுக்கியவாறு...

என்ன அங்கிள் என சினுங்கியவள்.. இன்னும் எதுவும் தொடங்கவே இல்லை.. அதுக்குள்ள புகழறீங்க... அவளின் பணிவைக் கண்டு இருவரும் மகிழ்ந்தார்கள்....

அடுத்து வந்த நாட்களில் அவளின் புத்திசாலித்தனத்தால் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தாள்... அதையெல்லாம் மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் இராஜசேகர்...

சிவானியை பெற்ற தினத்தை விட இன்றுதான் அதிக சந்தோசம் தருவதாக எண்ணி அன்னபூரணியும் பூரித்துப் போனார்...

அந்த வார இறுதியில் சொன்னது போலவே சிவகாமி தனது கணவர் செல்வ லிங்கத்துடன் பிறந்தகம் வந்து சேர்ந்தார்...

இருவரையும் ஆரவாரமாக வரவேற்றார்கள் சிவானியின் குடும்பத்தினர்...

என்ன அத்தை மாமா.. இப்போ தான் வரீங்களா என்றபடியே படியிறங்கி வந்தாள் சிவானி...

ஆரஞ்சு வண்ண தாவணியில் அழகோவியமாய் வந்தவளைக் கண்டதும் மற்றவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்...

அவளை அழைத்து அருகில் அமர வைத்த சிவகாமி... இப்போ தான் வரோம்டா... பார்த்து எவ்ளோ நாளாச்சு... நல்லா வளர்ந்துட்டியே... அவளது கன்னம் கிள்ளி நெட்டி முறித்தார்...

போங்க அத்தை என சினுங்கியவள்... நடவு வேலை எல்லாம் முடிஞ்சுதா மாமா என விசாரித்தாள்...

முடிஞ்சுது டா.. பாத்தீங்களா மச்சான் வந்ததும் மருமக எவ்வளவு பொறுப்பாக விசாரிக்கிறாள்.... செல்வலிங்கம் பெருமையாக இராஜசேகரிடம் சொல்லவும்... அப்படியே எங்க அப்பா மாதிரிங்க மாப்ளே.. எல்லா விவரமும் புள்ள கைக்குள்ள வச்சிருக்கும்... அவரும் ஒப்புக்கொண்டு சிரித்தார்...

அதற்குள் குடிக்க மோருடன் ஹாலிற்கு வந்தார் அன்னபூரணி... அண்ணா அண்ணி எடுத்துக்கோங்க என இல்லத்திற்கு பொறுப்பானவராய் அவர் உபசரித்தார்...

பேசியவாறு நேரம் இனிமையாக கழிந்தது. சக்தி மாப்ள வரலீங்களா... அன்னம் தான் சிவகாமியை பார்த்து கேட்டார்..

எங்கத்த அன்னம்.. அவன் என்னடான்னா மும்பையை கட்டிட்டு அழறான்.. நமக்கு இவ்ளோ சொத்து இருக்கு.. அவன் சொந்த கால்ல நிற்கனுமாம்... என்னை கொஞ்ச வருஷம் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்லிட்டான்.. மகனை நினைத்து அவர் அங்கலாய்த்துக் கொண்டார்...

சக்தி தம்பியை பத்தி தெரியாதா அண்ணி.. விடுங்க கொஞ்ச நாள் தானே.. அப்புறமாக இங்க நம்ம கூடவே தான் இருக்கப் போகுது.. அன்னபூரணி சொல்லவும் சிறிது சமாதானம் ஆனார்....

சிவானி தான் தொழிலை பார்த்துக்கறதாக தம்பி சொன்னான்... ரொம்ப சந்தோசமாக இருக்கு அன்னம்... சிவகாமியும் பேச்சை மாற்றினார்....

பேசி முடித்துவிட்டு அன்று கிளம்பும் முன்பு சிவானியை தனியே அழைத்த சிவகாமி... இதுல உன்னோட அத்தான் சக்தி போட்டோ இருக்குடா... அவன் தான் இங்க எல்லாம் வரவே இல்லை.. நீயும் ஹாஸ்டல்ல இருந்துட்ட... எப்படி இருக்கான்னு பாரு...

அத்தை சொல்லி கொடுக்கவும் வேறு வழியின்றி சிரித்தவாறு வாங்கிக் கொண்டாள்....அவர்களும் சந்தோசத்துடன் கிளம்பி விட்டார்கள்....

தனதறைக்கு வந்த சிவானியோ அந்த கவரை அலமாரியில் வைத்து பூட்டியவள் அதைப்பற்றி மறந்தே போனாள்... இறுதிவரை அவனது முகத்தைக் கூட பார்க்காமல் போகும்படியும் ஆனது....

மயக்குவாள்.....

ஆசையாக இருந்த சிவகாமியின் விருப்பமும் சக்தியின் விருப்பமும் நிராசையாக காரணம் என்ன...? சிவானியின் மாற்றத்திற்கு என்ன காரணம் இனிவரும் அத்தியாயங்களில்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top