கேளாய் பூ மனமே டீசர்

Advertisement

கேளாய் பூ மனமே டீசர்


“கந்தா கடம்பா கதிர்வேலா எங்க குலம் தழைக்க, வளம் பெறுக அருள் புரியப்பா..” காமாட்சி அம்மா தன் முன் உயர்ந்து நின்றிருந்த முருகனை பக்தியுடன் வணங்கி வெளியே வர, அவரை எதிர்பார்த்து நின்றிருந்தார் கேசவன். அவரின் மூத்த மகன்.

காமாட்சியின் கணவர் அருணாச்சலம் முகம் இறுக சோபாவில் அமர்ந்திருக்க, காமாட்சி மகனை கேள்வியாக பார்த்தார். “இன்னைக்கு நிச்சயத்துக்கு பெரிய பாப்பா வீட்ல இருந்து வரலை போல இருக்கும்மா..” கேசவன் சொல்ல,

“அதெப்படி வராம இருப்பாங்க..? நீங்க அதுக்காக தான் இப்படி உட்கார்ந்திருக்கீங்களா..? எழும்புங்க, அவ்வளவு வேலை கொட்டி கிடக்கு, கம்பை புடிச்சுட்டு உட்கார்ந்துட்டா ஆச்சா..?” என்று மகனில் ஆரம்பித்து கணவரை விரட்டினார்.

“ம்ப்ச்.. அவங்க வரலை எனக்கு தெரியும்..” அருணாச்சலம் சொன்னார்.

“அப்படின்னு பெரியவ உங்களுக்கு சொன்னாளா..?” காமாட்சி கேட்க,

“சின்னவ சொன்னா..” என்றார் அருணாச்சலம்.

“நினைச்சேன்.. அவ சொல்றது எல்லாம் நம்பிட்டு இருப்பீங்களா, அவளுக்கு அப்படி இப்படி காதை எட்டிட்டா போதும், உடனே அதை பத்தாக்கி கதை கட்டிடுவா, இன்னைக்கு நேத்தா அவளை பார்க்கிறோம்..” காமாட்சி கணவர் முன் அமர்ந்தவர், போன் எடுத்து பெரிய மகளுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டார்.

“சொல்லுங்கம்மா..” அந்த புறம் எடுக்க,

“இன்னும் அங்கேயே இருந்துகிட்டு சொல்லுங்கம்மான்னா ஆச்சா பெரியவளே, இங்க வந்து அண்ணா குடும்பத்துக்கு ஒத்தாசை பண்றதில்லையா..?” காமாட்சி அம்மாவாக கேட்டார்.

“இதோ கிளம்பிட்டோம்மா.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..” என்றார் ஜெயலக்ஷ்மி.

“சரி சரி உடனே வந்து சேருங்க..” என்று வைக்க போக,

“ம்மா.. நானே உங்களுக்கு பேசணும் நினைச்சேன்..” என்றார் ஜெயலக்ஷ்மி.

“என்ன பெரியவளே..?” காமாட்சி புருவம் சுருக்கி கேட்க,

“அது.. அது அவ வர மாட்டேன்னு..”

“ஏன் வர மாட்டாளாம்..?” காமாட்சி கோவமாக கேட்டார்.

“ம்மா.. அவளுக்கு அங்க.. அங்க வர..”

“என்ன பெரியவளே அவ தான் புரியாம பேசுறான்னா நீயும் கூட சேர்ந்து பேசுற மாதிரி இருக்கு, என்கிட்ட இந்த வேலை எல்லாம் நடக்காது, அவ வந்து தான் ஆகணும்..” என்று வைக்க, அவருக்கு முன் யுவராஜ் நின்றிருந்தான்.

காமாட்சி அவனை பார்க்கவும், ‘எப்போ வந்தான்னு தெரியலையே..?’ என்று முணுமுணுத்தவர், “அது உங்க அத்தை தான்.. கிளம்பிட்டாங்களாம்.. இப்போ வந்திடுவாங்க, நான்.. நான் இந்த தோரணம் கட்டிட்டாங்களான்னு பார்க்கிறேன்..” என்று வாசலுக்கு நடந்துவிட்டார்.

“அம்மா எங்கப்பா..?” யுவராஜ் அவனின் அப்பா கேசவனிடம் கேட்டான்.

“உள்ள இருக்காப்பா..” என, அவன் அவரை தேடி சென்றான்.

இன்று அந்த வீட்டின் இளைய பேரனுக்கு நிச்சயதார்த்தம். வீட்டிலே என்பதால் ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது.

மாலை ஆறு மணிக்கு பெண் வீட்டினர் இவர்கள் வீட்டுற்கு வர, அதுவரையிலும் காமாட்சியின் பெரிய மகள் ஜெயலஷ்மியின் குடும்பம் வரவில்லை. வீட்டினர் எல்லோரும் அவர்களை எதிர்பார்த்து காத்திருக்க, பெண் வீட்டினர் நல்ல நேரத்தில் நிச்சய தட்டை மாற்றி கொள்ளலாம் என்றனர்.

“இன்னும் கொஞ்ச நேரம்..” அருணாச்சலம் சொன்னவர் மகன் கேசவனை பார்க்க, அவர் போன் எடுத்து அழைத்தார். அந்த பக்கம் எடுக்கவில்லை. கேசவன் தலை ஆட்ட, யுவராஜ் ஓரமாக கை கட்டி நின்றிருந்தான்.

“நேரம் போயிருங்களே..?” பெண்ணின் தாத்தா சொல்ல, அருணாச்சலம் வாசலை பார்க்க, சரியாக பெரிய மகள் குடும்பத்தினர் வந்தனர்.

“அதோ வந்துட்டாங்க.. நிச்சய பத்திரிக்கை வாசிச்சிடலாம்..” என்றுவிட, நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டு மாற்றி கொள்ளப்பட்டது.

அடுத்து பெண், மாப்பிள்ளையை அமர வைத்து சந்தனம், திருநீறு வைத்து ஆசீர்வாதம் செய்யபட்டது. வீட்டின் பெரியவர்கள் தம்பதி சகிதமாக சென்று வைக்க, “தம்பி நீயும் உன் பொண்டாட்டியோட வைப்பா..” என்றார் யுவராஜிடம் பெண்ணின் பெரியப்பா.

மொத்த குடும்பமும் யுவராஜை பார்க்க, அவன் யார் மேலும் பார்வையை பதிக்காமலும், சொன்னதை கேட்காதவன் போலும் நின்றிருந்தான். “ஏய் சும்மா இரப்பா.. அவர் பொண்டாட்டி இப்போ அவரோட இல்லை, இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க..” பக்கத்தில் இருந்தவர் கிசுகிசுத்தார்.

“அப்படியா..? தம்பி மன்னிச்சுக்கோங்க.. விஷயம் தெரியாம சொல்லிப்புட்டேன்..” என்றார் அவர். அதற்கும் அவன் அமைதியாக இருக்க, மீதம் உள்ளவர்கள் வைத்தனர்.

இறுதியில் ஜெயலக்ஷ்மியின் மகள் எழுந்து சென்று மணமக்களுக்கு சந்தனம், திருநீறு வைக்க போக, பக்கத்தில் யுவராஜ் வந்து நின்றான். அவள் அவனை பார்க்காமலே உணர்ந்து கொண்டவள், சந்தனம், திருநீறு வைக்காமல் நகர போக, யுவராஜ் அவள் கையை இறுக்கமாக பிடித்தான். அவள் ஜமுனா. அவனின் மனைவி. ம்ஹூம்.. முன்னாள் மனைவியாக போகிறவள்.

ஜமுனா அவனை பாராமலே, அவன் பிடியில் இருந்து கையை விலக்க பார்க்க, அவன் இருவர் கையையும் சேர்ந்து சந்தனம் எடுத்தான். தங்கள் முன் அமர்ந்திருந்த மணமக்களை மனதில் கொண்டு திமிறலை விட்டவள், அவனுடனே மணமக்களுக்கு சந்தனம், திருநீறு வைத்து முடித்தாள்.

அடுத்த நொடி தன் கையை வலுவாக இழுத்துவிட, அவனும் விட்டுவிட்டான். ஆனால் அவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அவள் முன் நின்றவன், பக்கத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து, அவள் உச்சியில், நெற்றியில் அழுத்தமாக வைத்தான்.

ஜமுனா கண் மூடி நிற்க, “இன்னும் நீ என் குங்குமத்துக்கு உரிமைபட்டவ தாண்டி..” என்று விலகி செல்ல, ஜமுனா கலங்கிய கண்களுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

சூப்பர் அக்கா நியூ ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள் ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top