காற்றோடு பேசவா கொடியே-2

Advertisement

Ritika

New Member
ஹாய் பிரெண்ட்ஸ் இரண்டாவது அத்தியாயத்தோடு வந்திட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் ♥️




அன்று இரண்டாவது சனிகிழமை ஆதலால் நிதானமாக எழுந்து நீண்ட அவள் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்துக் கொண்டு கை சோர்வுறும் வரை கிணற்றில் நீர் இறைத்து குளித்தாள் எழில்.மனம் உற்சாகமாக இருக்க அவளுக்கு பிடித்தமான பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

அவளின் அதீத உற்சாகத்திற்கு காரணம் அந்த கடம்பூர் சம்பந்தம் வெற்றிகரமாக தோல்வியடைந்தது தான்.பெற்றோரின் விருப்பத்தை மீற முடியாமல் சம்மதித்தவளுக்கு மாப்பிள்ளை என்று சிவந்த கண்களும் கடாமீசையுமாக இருந்த மணமகனை கண்டு கடவுளே எப்படியாவது இந்த சம்பந்தத்தை முறித்துவிடு என்று பிராதித்தபடியே இருந்தாள்.

அவள் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்த்தது போல் மாப்பிள்ளை வீட்டார் ஐம்பது பவுன் நகை,வெள்ளிப் பாத்திரங்கள்,கார் என நீண்ட பட்டியல் வாசிக்க ஏழை விவசாயியான மணிவாசகம் சோர்ந்துப் போனார்.ஏதோ கொஞ்சம் நகை சீர் எல்லாம் நிலத்தை அடமானம் வைத்தாவது செய்யலாம் என்று அவர் கணக்குப் போட்டிருக்க அவர்கள் கேட்பதை கொடுப்பது என்றால் அவர் சொத்து முழுவதும் விற்றாலும் போதாதே!அத்தோடு வடிவுக்கரசிக்கும் செய்ய வேண்டுமல்லவா!

அவர்கள் வீட்டைப் பார்த்தே முகம் சுளித்தவர்கள் அவர் மவுனமாக இருக்கவும் இது சரிவராது என்று நேரடியாகவே கூறிவிட்டு சென்றுவிட்டனர்.அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் எழில்.அதை நினைத்து இப்போது புன்னகைத்தாள் அவள்.

தமக்கையின் தோளில் இடித்த அரசி,

"ஏய் அக்கா மரியாதையா ட்ரீட் குடுத்திடு இன்னிக்கி"என்று கேட்க,

"எதுக்குடி ட்ரீட்டு?"

"எதுக்கா அந்த கரிமேடு கரிவாயன் என் மாமாவா வரமா ஆயிடுச்சுல்ல அதுக்கு தான் ட்ரீட்டு ம் கிளம்பு"என்று அக்காவை டவுனுக்கு இழுத்துச் சென்றாள் அவள்.

அங்கே புதிதாக வந்த சினிமாவை பார்த்துவிட்டு ஹோட்டலில் உணவுண்டு இருவரும் பஸ் நிலையத்தில் நின்றப் போதுதான் அவள் தந்தையிடமிருந்து போன் வந்தது.

"எழில்மா! திடிரென்னு மெயின் ஸ்விட்ச்லேந்து நெருப்பு மாதிரி வந்து கரெண்ட் போயிடுச்சுடா!கரெண்ட் ஆபிஸ்ல கேட்டா ஏதோ பெரிய வேலை இருக்கு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் வர முடியும்னு சொல்றாங்க நீ கொஞ்சம் வரும்போது அந்த கரெண்ட்கார பையன்கிட்ட சொல்லி கூட்டிட்டு வரியாமா?"என்று அவர் கவலையோடுக் கேட்க,

"ஓ சரிப்பா நா சொல்லி கூட்டிட்டு வரேன் நீங்க அதுவரைக்கும் எதையும் தொடாதீங்க"என்று எச்சரித்தவள் தங்கையிடம் அதை கூறினாள்.சோலையூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும்,

"அரசி!நீ வீட்டுக்கு போ!நா போய் கூட்டிட்டு வரேன்"என்று கூற சரியென அவள் வீடு நோக்கி செல்ல இவள் சிவகாமி அத்தையின் வீடு இருந்த திசையில் சென்றாள்.ஆம் சிவகாமி மணிவாசத்தின் ஒன்றுவிட்ட தங்கைதான்.ஆனால் அவ்வளவு நெருக்கமில்லை.ஏதோ கண்டால் விசாரிப்பது என்ற அளவில் தான் உறவு இருந்தது.எழிலுக்கு பத்து வயதில் கடைசியாக அங்கே சென்றவள் தான்.அதன்பின் சிவகாமியின் கணவரின் இழப்பிற்கு அவளின் பெற்றோர் மட்டுமே சென்று வந்தனர்.அதனால் வழியில் வீடு எங்கே என்று விசாரித்துக் கொண்டே சென்றாள்.

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி திவாகரனோடு பேசிக் கொண்டிருந்தான் கதிர்.அவன் வீட்டை பார்த்தபடி அமர்ந்ததால் எழில் வேலிப் படலைத் திறந்துக் கொண்டு வந்ததை அவன் கவனிக்கவில்லை.ஆனால் திவா அவளை கண்டுவிட்டு,

"ஹே கதிரா!ஷ்....அங்கே பாருடா!அடேய்...!"என்று ஜாடை காட்ட கையில் வைத்திருந்த டீயை குடித்தபடி திரும்பிய கதிர் தன் அல்வாவை காணவும் திகைப்பில் புரையேறிவிட விடாமல் இருமினான்.இது என்ன இது என்று எழில் விழிக்க நண்பனின் தலையையும் முதுகையும் தட்டிய திவா அவன் காதில்,

"அடேய் அடங்குடா!நீ இப்படி காசநோய் வந்தவன் மாதிரி இருமினா புள்ள பயந்து ஓடிரும்"என்று முணுமுணுக்க முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட கதிர்,

"என்ன விஷயமா வந்தது?"என்று தேன் தடவிய குரலில் கதிர் கேட்க,

'ம் உங்களை லவ் பண்றேன்னு சொல்ல வந்திருக்கு'என்று திவா மைண்ட் வாய்ஸில் பேச,

"அது வீட்ல திடிரென்னு மெயின்ல நெருப்பு புடிச்சா மாதிரி ஆகி கரெண்ட் போயிடுச்சு ஆபிஸ்ல சொன்னா இன்னும் ரெண்டு நாளு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க அதான் நீங்க கொஞ்சம் வர முடியுமான்னு அப்பா கேட்டுவிட்டாரு!"என்றாள் எழில்.

"ஓ அப்படியா சரி நீ போ நா சாமான்லாம் எடுத்திட்டு பின்னாடியே வரேன்"என்று அவன் உள்ளே செல்ல,

"கரெண்ட்...!"என்ற எழிலின் அழைப்பில்,

"எதே கரெண்ட்டா.....?!"

"அது சாரி எனக்கு உங்க பேர் தெரியல... அதான் கரெண்ட்டுன்னு கூப்பிட்டேன்"என்று எழில் கூறியதும் தன் பெயர் கூட அவளுக்கு தெரியவில்லை என்றதில் கதிரின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆக,

"மரண பங்கம்டா டேய் கதிரா...."என்ற திவா சிரிப்பை அடக்க முடியாமல் வீட்டிற்குள் ஓடிவிட்டான்.

'உன்னைய அப்புறம் வச்சுக்கறேன்டா'என்று உள்ளுக்குள் கருவியவன்,

"நான் கதிர்...கதிர்வேலன்"என்று ஸ்டைலாக கூற,

"அது போகட்டும் அத்தை நல்லா இருக்காங்களா அதை கேக்கத்தான் கூப்பிட்டேன்"

'அப்ப பேரை கேட்டு ஒன்னுமேயில்லையா'என்று மனதுள் நொந்தாலும் அவள் தன் தாயை அத்தை என்றதில் மனம் மகிழத்தான் செய்தது.

"அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க"

"ஓ சரி நான் கிளம்பறேன் கொஞ்சம் லேட் பண்ணாம வந்திடுங்க"என்றவள் மேலும் நில்லாமல் சென்றுவிட்டாள்.அவள் சென்றபின்னும் அவளின் பிரத்யேக மணம் அங்கே சூழ்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு.ஒரிரு கணம் அதை கண்மூடி ரசித்தவன் பின் தன்னிலை அடைந்து தன் சாமான்களோடு அவள் வீடு நோக்கி சென்றான்.

அங்கே வாயிலில் பைக்கை விட்டு அவன் இறங்கி உள்ளே சென்ற போது,

"வாய்யா கதிரு!நல்லாயிருக்கியா?அண்ணி நல்லாயிருக்காங்களா?"என்று கனகம் வினவ,

"என்னமோ அத்தே நீங்களாவது என்னை தெரிஞ்சு வச்சிருக்கீங்களே அதுவே சந்தோசம்"என்று அவன் கூற,

"அட என்னப்பா உன்னை கூட தெரியாத பேரு யாருய்யா இருக்காங்க?"

"ஏன் இல்ல அத்தே ரொம்ப பேரு என் பேரை கூட தெரியாம தான் இருங்காங்க ஊருக்குள்ள"

"ஆத்தி அப்ப அவங்க உலகம் தெரியாத கிணத்து தவளையாத்தான் இருக்கனும்"என்று சிரித்துக் கொண்டே கூறியவர் அவனுக்கு காபி தருவதாகக் கூறி உள்ளே செல்ல அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த எழில் அவன் வேண்டுமென்றே தன்னை குறித்தே தான் அப்படி பேசினான் என்று புரிந்ததால் அவனை வேண்டும் மட்டும் முறைத்தாள்.அதற்குள் கனகம் காபியோடு வர வேறுபுறம் வேலை இருப்பதுப் போல பாவனை செய்தாள்.

கோபத்தில் கூட செந்தாமரையாக ஜொலித்த முகத்தை காபியை குடிக்கும் சாக்கில் ஓரக்கண்ணால் ரசித்தான் அந்த கள்வன்.

மெயின் ஸ்விட்சை ஆராய்ந்தவன் மணிவாசகத்திடம்,

"மாமா இது சாதாரண வேலை இல்லை!வீடு பூராவும் இருக்க வொயருங்க சுட்டு போயிடுச்சு சரி பண்ண இரண்டு மூணு நாள் ஆகும்(அட நிஜம்தான்பா நம்புங்க) ஒரு வாட்டி நல்லதா பண்ணிட்டா உங்களுக்கு நாலஞ்சு வருசத்துக்கு கவலை இருக்காது"என்று விளக்க சரியென்று விட்டார் மணிவாசகம்.அதனால் அப்போதே வேலையை தொடங்கிவிட்டான் அவன்.

இரவு ஒன்பது மணி வரை வேலை செய்தவனை உணவுண்டே செல்ல வேண்டும் என்று கனகம் வற்புறுத்த சரியென்று ஒத்துக் கொண்டவன் சிவகாமிக்கு போன் செய்து தான் மாமன் வீட்டிலேயே சாப்பிட்டு வருவதாகக் கூற திகைத்தாலும் சரியென்று விட்டார் அவர்.ஏனெனில் அவன் இதுவரை உறவினர்கள் வீடானாலும் சரி வேலையிடமானாலும் சரி தன் வீட்டைத் தவிர வெளியே உண்டதே இல்லை.நேரமாகும் என்று தோன்றினால் உணவை கையில் எடுத்து சென்றுவிடுவான்.எடுத்துப் போகாத போது வாழைப்பழம் கம்பு பிஸ்கட் என்று அன்றைய உணவை முடித்துக் கொள்வான்.

அப்படிப்பட்டவன் இன்று அதிகம் சென்றேயிராத மாமன் வீட்டில் உண்பது அவருக்கு புதிராக இருந்ததில் ஆச்சரியமில்லை.ஆனால் அவனின் அல்வா தன் கையால் சமைத்தது என்று அறிந்த மேல் அவன் விட்டுவிடுவானா என்ன!

மணிவாசகம் அருகே கதிருக்கும் இலை போட்டிருக்க படிக்க வேண்டும் என்பதால் வடிவும் அமர்ந்துவிட சிவகாமியும் எழிலுமே பறிமாறினர்.பக்கத்தில் மாமன் இருந்ததால் எழிலின் கண்ணாடி வளையல் அணிந்த பொன்வண்ண கரங்களையும் மெல்லிய கொலுசு அலங்கரத்த மாவிலை பாதங்களை விட்டு அவன் தன் கண்களை நிமிர்த்தவே இல்லை.

உணவின் ருசியா இல்லை சமைத்தவளின் மேல் உள்ள காதலா ஏதோவொன்று அன்று வழக்கத்தை விட அதிகமாகவே உண்டுவிட்டிருந்தான்.குனிந்து பறமாறியபோது அவளின் நீண்ட கூந்தல் நாகமாக நிலத்தில் புரள அதன் மென்மையை தீண்டும் பாக்கியம் தனக்கு கிடைக்குமா என்று எண்ணியபடியே கடைசி கவளத்தை உண்டவன் கவனியாமல் பொறியலோடு இருந்த பச்சை மிளகாயையும் கடித்துவிட,

"ஸ்.....ஆ...காரம்!அப்பா எரியுதே!"என்று பக்கத்தில் இருந்த சொம்பு நீரையும் குடித்தும் பகபகவென எரிந்தது நாக்கு.

"ஐயோ மிளகாய கடிச்சிட்டியாய்யா?...ஏ எழிலு என்ன பாத்திட்டு இருக்க போயி தேன் கொஞ்சம் கொண்டா நாக்குல தடவுனா எரிச்சல் போகும்!"என்று கனகம் கூற உள்ளிருந்து தேனை எடுத்து வந்து அவன் கையில் சிறிது ஊற்ற ஏனோ அவள் அமிர்தத்தயே கொடுத்ததுப் போல கண்களை மூடி அதை சுவைத்தான்.நாக்கோடு மனமும் இனித்தது.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து குளித்து தயாராகி இருந்த மகனை கண்டு மூக்கின் மேல் விரல் வைத்தார் சிவகாமி.ஒன்பது மணி அளவில் திவாகரன் வந்தான்.அன்று அவனும் நண்பனோடு வேலைக்கு வருவதாக முன்தினமே கூறியிருந்தான்.படலை திறந்துக் கொண்டு வந்தவன் பைக் மேல் தயாராக நின்ற நண்பனைக் கண்டு தன் கைகெடிகாரத்தை பார்த்து தலையை சொரிந்தான்.

"உன் கெடிகாரம் சரியாதான் இருக்குடோய்!உன் சோட்டுகாரன் தான் சரியில்லை..ரெடியாகி ரெண்டு மணி நேரமா பைக்கிட்ட தான் தவமிருக்கான்!என்ன சேதி அல்வா கிண்டி முடிச்சாச்சா!அதான் கிறுக்குப்புடிச்சி நிக்கானா"என்று சிவகாமி கேலி செய்ய பதில் கூறாமல் அன்று போலவே இன்றும் முழித்தே சமாளித்தான் அவன்.

"சொல்ல மாட்டிங்கள்ள!சொல்லிட்டி எனக்கு தெரியாதாக்கும் கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆவனும்... அன்னிக்கு வச்சுக்கறேன் உங்க ரெண்டு பேருக்கும் கச்சேரிய"என்றபடி உள்ளே செல்ல பைக்கை வேகமாக எடுத்தவன் பத்தே நிமிடத்தில் எழிலின் வீட்டு வாயிலில் நின்றான்.

பைக் கண்ணாடியில் கலைந்த முடியை சரி செய்தவன் உள்ளே செல்ல முன்னேற வேறுபுறமாக பார்த்தபடி வந்த எழில் கையில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்ததை அவன் மேல் வீசியிருந்தாள்.

முன்தினம் ஊசிப் போயிருந்த குழம்பு தலையிலிருந்து கால் வரை வழிய பரிதாபமாக நின்றான் கதிர்வேலன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top