காதலே சாதலாய்-9

#1
காதலே சாதலாய்-9


மெல்லினத்தின் மென்மையும், ஆழிபேரலையின் சுழற்சியையும் விழியென கொண்டவள் தன் தூக்கம் கலைந்து பார்க்க தன்னருகில் காவலுக்கு இருந்த வாமிலனை காணவில்லை. அவனை காணாது அருகில் சுற்றி சுற்றி பார்த்தவள் பசுங்கொடிகள் சூழ தான் படுத்திருந்த ஊஞ்சலில் இருந்து இறங்கி ஒரு மரத்தின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.


காதலி சோக உருவாய் இருக்க, அவள் சோகத்தை துடைக்க வேண்டியவனோ அல்லும் பகலும் யாரை நினைத்து காதல் கொண்டானோ அவள் முகத்தில் இன்று விழித்த இந்த பொன்னான நாளை மனம் மகிழ்ந்து சிறப்புற செய்வதற்காக, சங்கம கீற்றின் அருகில் நின்று கொண்டிருந்தான்.


சலசலத்து ஓடும் நீரோடை, சங்கம கீற்றின் சாணக்கிய மொழியை தோற்றுவிக்க, அந்த இன்னிசை மொழியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் விழியையும், அதிசய நிலையில் கோல் ஊன்றி நின்ற கால்களையும் சற்றே தன்பக்கம் திசை திருப்பியவன், கரும்பாறை ஊசி துகள்களில் அடர் நீல வண்ண மயமாக காட்சியளித்த பச்சை கொடியை வெகுசிரமம் கொண்டு அரிந்து எடுத்தான். அதன் மென் தன்மையை முகத்தின் அருகே வைத்து சிலிர்த்து பார்த்து ரசித்துவிட்டு, அந்த சிலிர்ப்பு தன்மையோடே அடிமேல் அடி வைத்து நீருக்குள் நடந்தான். தன் தேன் இதழ் மொட்டவிழ சிரிக்கும் வெண் மலரான வெண்தாமரை மொட்டை கையில் எடுத்து ரசித்தவன், நீளக்கொடி நெளிவில் கூம்பியிருந்த அந்த மொட்டின் அழகில் தன்னையே மெய் மறந்து நின்றிருந்தான். இரண்டொரு நிமிடத்தில் நிதானத்திற்கு வந்தவன், தாமரை மொட்டை முதுகுக்கு பின் மறைத்து வைத்துக் கொண்டு அவளிடம் செல்ல, அழகில் சிவந்திருந்த மங்கை, உதடு கோணி மரக்கிளைகளின் இடுக்கில் தெரியும் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


“தூக்கம் கலைஞ்சு எழுந்தாச்சா மேடம். கிளைக்கு இடைல என்ன தெரிதுன்னு என்னை கூட தேடாம அத ரசிச்சு ரசிச்சு பாக்குறிங்க". பேருக்கு கூட புன்னகை என்பதன் மொழி மறந்திருந்த அவளிடம் கேலி சிந்தியவன் சிரித்தவாறே அவளை நோக்க, குழலியின் பார்வை என்னவோ இன்னும் கிளைக்கு நடுவில் தெரியும் வானத்தைதான் வெறித்தது.


அவள் முன் முட்டி போட்டு அமர்ந்தவன், “ம்ஹும்... நடந்ததையே இன்னும் எம்புட்டு நேரம் யோசிச்சு கஷ்டப்படுவீங்க. நீங்க ஏ கூட வந்தாலாவது சந்தோசமா இருப்பிங்கன்னுதா தனு உங்கள ஏ கூட அனுப்பி வச்சா, நீங்க என்னவோ இன்னும் அதையே நினச்சு. ப்ச்... எல்லாத்தையும் தூக்கி போடுங்க குழல். இந்த இடம் உங்களுக்கு சந்தோசம் மட்டுமே குடுக்க போகுது. பெருசா நடக்க இருந்த அசம்பாவிதம் எப்டியோ, ஏதோ ஒரு ரூபத்துல மறைஞ்சு போச்சு. அந்த அசம்பாவிதம் தடுத்து போன மாதிரி உங்க வாழ்க்கைல நடக்குற கெட்டதெல்லாம் ஒழிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கோங்க. இனி நடக்குறதெல்லாம் நல்லதாவே நடக்கும்னு சிரிச்சு பழகுங்க. இந்தாங்க உங்களோட ஏகாந்த நாள் இந்த அழகான தாமரை மொட்டு பாத்து அம்சமா விடியட்டும்”. சிரித்தவாறே தாமரை மொட்டை அவள் முன் நீட்ட, அந்த அழகிய தாமரையையும், அவன் பொலிவேறிய முகத்தையும் பார்த்து என்ன நினைத்தாலோ களஞ்சிய உதட்டில் சிரிப்பை மட்டும் உதிர்க்காது தாமரை மொட்டை வாங்கிக் கொண்டாள்.


அந்த தாமரை மொட்டை தொட்டு தடவி பார்த்தவள், “உங்களுக்கு தெரியாது சார் இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்? ஏது நடக்கும்னு? ஆனா எல்லா தெரிஞ்ச நா எப்டி சந்தோசமா இருக்க முடியும். அந்த குடும்பத்துல எல்லாருமே காட்டு மிராண்டிங்க, எப்போ என்ன பண்ணுவாங்கன்னு ஒன்னும் தெரியாது. ஏ தனுவ வேற அங்க தனியா தவிக்கவிட்டுட்டு வந்துட்டேன். அதுவேற நெஞ்ச அடைக்குது. நம்மள தேடி அலைஞ்ச உத்தமன் நம்மள தப்பிச்சு போக விடமாட்டாரு? கண்டிப்பா அவரு நம்மள தேடி இங்க வருவாரு சார். அவர எனக்கு இருவது வருஷமா தெரியும். அவரோட ஒவ்வொரு செயலும் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியும். அவரமீறி நா வந்துருந்தாலே என்னை வெட்டி போடணும்னு சொல்லுவாரு. இப்போ ஊரர்கூடி நின்ன சபைல அத்தன பேர் முன்னவும் அவர அசிங்கபடுத்திட்டு வந்துருக்கேன் அதனால...” தொண்டை குழியில் சிக்கிய வார்த்தை அவளை பேசவிடாது அழுகையை வரவழைக்க, குழலியின் மதிப்புமிக்க கண்ணீர் அந்த வெண்தாமரை மொட்டை சுட்டது.


அவளின் கண்ணீர் இவனின் இதயத்தை குத்தீட்டியாய் குத்த, மனதால் வாடியவன் அவளின் கண்ணீரை துடைக்க எழுந்த கையை மீண்டும் சிரமம் கொண்டு அடக்கிக் கொண்டான்.


அழுகையோடே அவள் தொடர்ந்தாள், “அங்க அம்மா, அப்பா, அத்தை, மாமானு யார் இருந்தும் ஒருத்தர் கூட எம்மேல பாசம் காட்டுனது இல்ல தெரியுமா. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒருநாள் கூட எங்கம்மா எனக்கு நிலவ காட்டி சாப்பாடு ஊட்டுனது இல்ல, அன்பா ரெண்டு வார்த்தை பேசுனது இல்ல, கொஞ்சுனது இல்ல, முத்தம் குடுத்தது இல்ல, திருஷ்டி கழிச்சது இல்ல. அம்மான்ற தகுதில நின்னு எதுவுமே பண்ணதில்ல. எங்கப்பாவும் அப்டிதா. அவரு நெஞ்சுல சாஞ்சது இல்ல, நிலா, நட்சத்திரத்த பாத்து கத கேட்டது இல்ல, அவரு கைய புடிச்சு எங்கையும் சுத்துனது கூட இல்ல. இப்டி பல விஷயம் ஏ வாழ்க்கைல கிடைச்சதே இல்ல. இந்த ஒவ்வொன்னுக்கும் ஏ வாழ்க்கைல நா எவ்ளோ ஏங்கிருப்பேன் தெரியுமா. அதெல்லாம் கொடுமையான ஒன்னு சார். அவங்களுக்கு பொறந்த பொண்ணான எங்கிட்டயே இப்டி நடந்துக்கும் போது கடவுள் ஏ நம்ம வாழ்க்கைல மட்டும் இப்டிலாம் பண்றாருன்னு தோணும். தனுவுக்காவது இந்த கஷ்டத்த எல்லாம் போக்கி ஆறுதல் சொல்ல நா கிடச்சேன் சார் ஆனா எனக்கு... தினமும் அவர (உத்தமன) பாத்து பாத்து பயந்து இறுகி செத்ததுதா மிச்சம். என்னதா பிடிக்காத பொண்ணா இருந்தா கூட இப்டி ஒரு வயசானவனுக்கு என்னை கட்டி வைக்க அவங்க ஏ நினைக்குறாங்க. நினச்சு பாக்க நினச்சு பாக்க ஆத்திரமும், கோவமும்தா வருது சார். ஆனா நா பொண்ணா போய்ட்டேனே அவங்கள எதுத்து என்னால என்ன பண்ண முடியும்”.


முகம் மூடி அழுதவளின் வேதனை என்ன என்பதை அவளின் ஒவ்வொரு சொல்லும் பறை சாற்றியது.


அவளை வேதனையோடு பார்த்து நின்றவன், “உன் உறவெனும் அன்பனாய் நானிருக்க எந்த துயரத்தை நினைத்து கண்கலங்கி தவிக்கிறாய் செல்லம்மா. உன் ஒருதுளி கண்ணீர் என்னை உயிரோடு கொன்று புதைக்கிறது என்பதை ஏன் நீ தெரிந்து கொள்ள மறுக்கிறாய். கண்ணை திறந்து வைத்துக் கொண்டு கண்ணாமூச்சியே ஆட நினைக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காக பிறந்தவன் உன் துயரை துடைத்து என்னோடு சேர்த்தணைத்துக்கு கொள்ளவே ஆவலாய் துடிக்குறேன். இதோ இந்த வானமும், பூமியும், மலையும், மண்ணும் சாட்சியென கொண்டு உன்னை என்னில் பாதியாய் இழைந்து கொள்கிறேன். நான் அப்படி இழைந்து கொள்வதற்கு வரம் தருவாயா? செல்லம், வைரம், தங்கம் என தாமரை நிலவை தூக்கி கொஞ்ச அலை அலையாய் என்னுள் எண்ணம் பெருகுகிறது. உன்னை நான் தாயாய் மாறி தூக்கி கொஞ்ச, நீ சேயாய் மாறி என் தாலாட்டை கேட்க ஒரு நொடியில் வரம் தருவாயா?”. உள்ளம் துடிக்க காதலின் மொழியை அவளிடம் சொல்ல வழியறியாது தவித்துக் கொண்டு உள்ளுக்குள்ளே கயமை மொழி பேசினான் அவன்.


அவன் காதலை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பம் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்தவன், முட்டிக்குள் முகம் புதைத்து அழும் அவளை தூக்கி நிமிர்த்தி, “குழல் உங்க கஷ்டம் எனக்கு ரொம்ப நல்லாவே புரிது. இருந்தாலும் நா சொல்ல வர்றது என்னனா".


குழலி, வாமிலனையே பார்த்திருக்க, “எல்லாரும் சொல்லுற ஒன்னுதா, சாகுற நாள் தெரிஞ்சுட்டா மனுஷே வாழுற கொஞ்ச நாள் கூட நரகமா மாறிடும். நேத்து நடந்த கஷ்டத்தையும், நாளைக்கு நடக்க போற துயரத்தையும் நினைச்சு இன்னிக்கான சந்தோசத்த எதுக்காக தொலைக்குறிங்க. இதோ இங்க பாருங்க சுட்டெரிக்குற சூரியனோட கதிர்வீச்சு இன்னு கொஞ்சம் ஆழமா ஊடுருவி பாஞ்சா இந்த காடு மொத்தமும் அழிஞ்சு போகும். என்னிக்கோ அழிய போற அதை நினைச்சு மரம்தா நீண்டு வளராம இருக்கா? இல்லை பூக்கள்தா பூக்காம இருக்கா? இந்த காட்டுல இருக்குற மரம், செடி, கொடி ஒவ்வொன்னும் தா அழிஞ்சு போறத பத்தி என்னிக்காவது கவலைப்பட்டு நீங்க பாத்துருக்கிங்களா. தா வாழுற வர தன்னை சுத்தி இருக்குற அஞ்சறிவு உயிரினத்த எல்லாம் சந்தோசமா வச்சுக்கதா அது போராடுது. அடுத்த உணர்வுக்கு மதிப்பு கொடுக்குற இயற்கையே இப்டி நினைச்சா நாம ஆறறிவு படைச்ச மனுஷங்க உடலும், உயிரும், உணர்வும் கொண்டு படைக்கப்பட்டவங்க. நாம மட்டும் ஏ எல்லாத்தையும் நினச்சு கஷ்டப்படணும். இங்க பாருங்க குழல், இது உங்களுக்காக கடவுள் உருவாக்கி குடுத்த நாள், இந்த ஒருநாளோட இந்த உலகமே அழிஞ்சு போக போகுதுன்னு நினைச்சுக்கோங்க. நீங்க என்னன்னா அனுபவிக்கனும்னு நினைக்குறீங்களோ அத எல்லாம் இந்த ஒருநாள்லயே ஆண்டு அனுபவிச்சுக்கோங்க. உங்க சந்தோசத்த பாத்து ரசிக்க, ஒவ்வொன்னையும் எடுத்து சொல்ல நா இருக்குறே. உங்க கரம்பிடிக்க நானும்..."


குழலி அவனையே விழி உயர்த்தி பார்க்க, “அதாவது உங்க கைபிடிச்சு எல்லாத்தையும் ரசிக்க வைக்க நா இருக்கேன்னு சொன்னே".


அவள் முகபாவம் சரியாக மாறிய பிறகு, “உன்னோட கரம் கோர்க்க எனக்கு அனுமதி இல்லையா? கேள்வியாவே என்னை பாக்குறியே குழல்" மனதில் நினைத்துக் கொண்டான்.


“சரி சரி எல்லாமே ஓவர். எழுந்துருங்க நாம இங்க ரசிக்க வேண்டியது நிறையா இருக்கு. நம்ம பிரச்சனை எல்லாத்தையும் மறந்து நாம இன்னிக்கு இங்க ஜாலி பன்றோம்".


குழலியின் கையை பிடித்து எழுந்தவன், புற்களையும், மண்மேடுகளையும் மிதித்துக் கொண்டு தாமரை மொட்டுகள் மலர்ந்திருந்த சிற்றருவியில் விழுந்தான் தொப்புகட்டீர் என்ற சத்தத்தோடு.


குழலியின் மகிழ்ச்சிக்கான இந்த ஒற்றை நாள் வாமிலனின் வாழ்வையே கூண்டோடு திசை மாற்றக் கூடியது.


தனக்காக ஒதுக்கப்பட்ட டீ எஸ்டேட்டின் அலுவல் அறையில் அதே அடாவடி கோவத்தோடு அமர்ந்திருந்தான் உத்தமசீலன். வளை வளையாய் சுற்றிவிட்டுக் கொண்டிருந்த சிகரெட் புகை இரண்டாவது பாக்கெட்டாய் முடிந்து மூன்றாவதாய் தொடர்ந்து கொண்டிருந்தது. சிலநேரத்தில் நெஞ்சை சுடும் ரணம் ஆயிரம் மருந்துக்களை அள்ளிபோட்டாலும் ஆறிப்போகாதே, அதேபோல் தீரா அகபுண்ணோடு தத்தளித்துக் கொண்டிருந்தான் அவன். மேஜை மேல் கால் நீட்டி அமர்ந்திருந்த அவனுக்கு எதிரே ஹிமாச்சலபிரதேசத்தின் வரைபடத்தை வைத்துக் கொண்டு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்தனர் சேகர், வேலன் இருவரும். அவர்களை சுற்றி நின்ற நான்கைந்து தடிமாடுகள் தாங்கள் தான் இந்த ஏரியாவுக்கே ரௌடி எனும் தெனவெட்டோடு நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்தனர்.


அந்த சமயம் பார்த்து உத்தமனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தால் தனுர்மதி.


“சே... இந்த காட்டெருமைய நம்ப வைக்க இன்னும் என்னென்ன பண்ணனுமோ. சீக்கிரம் சென்னைக்கு போனா எம்மேல சந்தேகம் வந்துடும்னுதா இங்கையே சுத்துறே இருந்தும் இவே விடாம குழலி விஷயத்துல என்னை சேத்து வச்சே குடையுறானே. வாமிணா கூட குழல நாந்தா அனுப்பி வச்சேன்னு மட்டும் இவனுக்கு தெரிஞ்சுச்சு அடுத்த செகண்ட் நா கந்தல் துணிதா. வீட்ல இருக்குற நாலு கூமுட்டைங்களயே சமாளிச்சாச்சு இவன சமாளிக்குறதா பெரிய விஷயம். சமாளிப்போம்”.


“அய்யையைய்ய, அண்ணா ஊர் முன்னாடி உன்ன தலகுனிஞ்சு நிக்க வச்ச அவள பத்தியே இன்னும் எவ்ளோ நேரம் யோசிப்ப. உன்ன புடிச்ச பீட விட்டு ஒழிஞ்சுச்சுன்னு தலமுழுகுனே நீ சந்தோசமா இருப்ப”.


உத்தமன், தனுவையே ஊடுருவி பார்க்க,


“அண்ணா தேவையில்லாதத யோசிச்சு உடம்ப கெடுத்துக்காத. வா வந்து சாப்டு".


சிகரெட்டை கசக்கி வெளியே எறிந்தவன், தட் தட்டென்ற நடையோடு தனுவை நோக்கி வர, அவள் எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாது எச்சிலை கூட்டி விழுங்கினாள். கனல் போல் சிவந்திருந்த கண்ணோடு அவளை பார்த்தவன், “சாப்பாட்ட அப்டி வச்சுட்டு வீட்டுக்கு போமா. நா எல்லாத்தையும் பாத்துக்குறேன்".


சாந்தமாய் பேசும் அவனை பார்த்தவள், உதட்டில் தவழவிட்ட புன்னகையோடு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.


“என்னங்கடா தேடுனது ஏதாவது கிடச்சுச்சா”.


“உத்தமா நானும் முடிஞ்ச மட்டும் அலசி பாத்துட்டேன் எனக்கும் ஒன்னும் விளங்கல, சுத்தி நிக்கிற இந்த பன்னாடைங்களுக்கும் ஒன்னும் விளங்கல".


“சீ... நீயெல்லாம் எதுக்குமே ஆகமாட்ட" சேகரின் கையில் இருந்த வரைபடத்தை பற்றியவன், மேஜை மேல் அதை பரப்பி, “அவ, அவேங்கூட ஓடுனது தெக்காம இருக்குற காட்டுக்குள்ள. ரிஷிகேசுக்கும், இமயமலைக்கும் நடுவுல இருக்கு இந்த காடு. இந்த காட்டோட நாலு மூலையவும் குறிச்சு பாத்தா, கிழக்குல நீராருவி, மேக்குல எரிமலை குழம்பு, வடக்குல வெள்ளி பனிக்கட்டி, தெக்குல சிம்லாவ சுத்தி பாக்குறதுக்கான ஹைவே ரோடு. இந்த நாலு மூலைல ஏதாவது ஒருவழிய புடிச்சுதா அதுங்க மேல வரணும். இப்போ சொல்லு சேகரா அதுங்க எந்த வழிய புடிச்சு காட்ட தாண்டி வருங்க".


கலகலவென சிரித்த வேலன், “ண்ணா, சின்னபுள்ளைய கேட்டா கூட சொல்லும். அதுங்க எங்க சுத்துனாலும் கடைசில ரோட புடிச்சுதா மேல வரணும். அதனால நாம எல்லாரும் அங்கனையே போய் நிக்கலாம். அப்டி நின்னு அதுங்கள தொக்கா புடிச்சுடலாம்”.


வேலனை முறைத்த உத்தமன் இம்முறை வாயை விட்டு மூக்கிலேயே ஓங்கி ஒன்று குத்த, வேலனின் சில்லு மூக்கு உடைந்து ரத்தம் தெறித்து வந்தது.


“ண்ணா, நா சரியா தான சொன்னேன். எதுக்கு என்னை அடிச்சிங்க".


உத்தமன் மீண்டும் கையை முறுக்க வேலன் வாயை இழுத்து மூடிக்கொண்டான்.


“உத்தமா... அவே சொன்னதுல என்ன இருக்கு? எப்டியும் அதுங்க அந்த காட்ட தாண்டி யார்கிட்டயாவது உதவினு கேக்கனும்னா கூட தார்சாலைக்குதா வந்தாகணும். நீ என்னமோ இத புரிஞ்சுக்காம வேலன போய் அடிச்சுகிட்டு”.


“சேகரா... நீ அவன மாதிரி முட்டாதனமா யோசிக்காத. நா ஆளுங்கள சேத்துகிட்டு ஊரு முழுக்க சுத்துவேன்னு அவளுக்கு நல்லாவே தெரியும். எல்லா இடத்துலையும் தேடி ஓஞ்சு போய்ட்டா கடைசில ஹைவே ரோட்டு கிட்ட போய் நிப்போம்னும் அவளுக்கு தெரியும். கண்டிப்பா அதுங்க இந்த இடத்துகிட்ட வராதுங்க. இந்த மூணு மூலைல எங்கையோ ஒரு இடத்துல எங்க? எங்க? எங்க?" பூமி அதிர ஓங்கி மிதித்தவன் தலையை பிய்த்துக் கொள்ள,


“உத்தமா கோவத்தை குறை. இவ்ளோ தூரம் சொன்ன உன்னால அதுங்க எந்த மூலை பக்கம் பாத்து வரும்ங்கன்னும் சொல்ல முடியும் கொஞ்சம் யோசி".


மூளையை கசக்கி யோசித்தவன் சட்டென்று பொறி தட்டியது போல் புருவ முடிச்சுகள் சுருங்க, மூன்று மூலைக்கும் கோடுகள் கிழித்தான். சேகரா அலுவல் அறை அதிர கத்தியவன், “கிழக்கால நீராருவி எப்போ கூடி வரும், குறைச்சு வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. அதனால அதுங்க கிழக்கு பக்கம் போகாதுங்க. மேக்குல எரிமலை. அது எப்போ வெடிக்கும், எப்போ லாவாவ கக்கும்னு யாராலையும் சொல்ல முடியாது. அதனால அதுங்க அந்தபக்கமும் போகாதுங்க. கடைசில இருக்குறது வடக்கு மூலதா ஐஸ் கட்டி உருகிகிட்டு இருக்குற நேரம் ராத்திரி பனிமழை கொட்டும், கொஞ்சதூரம் பாத்து நடந்து வந்தா அதுங்க ஈசியா தப்பிச்சு போய்டலாம். ஹாஹ்ஹஹா... புடிச்சுட்டேன் சேகரா புடிச்சுட்டேன். டேய் எல்லாரும் கிளம்புங்க நாம வடக்கு மூலைக்குதா போறோம். குழலி எங்கிட்ட இருந்து உன்னால தப்ப முடியுமா?” ஓங்கி ஒற்றே ஒற்றை மிதி திண்ணமாக இருந்த மேஜை சுக்கு சுக்காய் நொறுங்கி போனது.


குளிரும் இரவுக்கும், மேனியின் அனலுக்கும் சருக்கிலைகளின் எரியூட்டுதல் கத கதப்பாய் விளங்க, எதிரெதிரே அமர்ந்திருந்த இரு உயிர்களும் ஒருவரை ஒருவர் ரசனை மிகுந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தன.


பிறந்ததிலிருந்து இத்தனை நாள்வரை சிரிப்பென்பதன் அடையாளம் தொலைத்திருந்தவள் இன்று புன்னகை பூவாகவே காட்சியளிக்க, அந்த புன்னகை பூவின் வாடாத வதனத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் வாமிலன்.


“என்னங்க, ஏ முகத்துல என்ன தெரிது, எதுக்கு இப்டி பாக்குறீங்க".


“வாடாத பூவும், வாசமல்லி மொட்டும் உன் அழகு வதனம் தனில் சாரலடிக்க கண்டேன் கண்ணே. பூக்கும் பூவும் உன் புன்னகை மொழியை கடனாய் தான் கேட்குமோ? நிலவு பிம்பமும், நீள நட்சத்திரமும், இந்த புன்னகை மொழியில் வியந்து வானத்து போர்வைக்குள் தான் ஒளிந்து கொள்ளாதோ? விழி பிம்பத்தில் நிறைத்து பேருவுவகை கொண்டேனே! உனக்குள் உறைந்து, எனக்குள் நிறைந்து நாம் என்ற சொல்லில் மூழ்கி நாதம் தொடும் நாளும் என்னாளோ!". மூச்சடக்கி கவி திட்டியவன் சிரித்த முகமாகவே அவளை நோக்க, அவனின் சிரிப்பில் சிவந்து நின்ற மருதாணி கன்னத்தை தொட்டு ரசித்தபடியே அவனை தழைந்த பார்வை பார்த்திருந்தாள்.


“குழல் நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க. உங்க சிரிப்பு மத்தாப்ப பாத்தா கவிஞன் கூட உருகி உருகி கவிதை மடல் வரையுவான்”.


“ஆஹான்... அப்டியா சொல்லுறீங்க. ஏ முகத்துல சிரிப்ப மீட்டு கொடுத்ததே நீங்கதாங்க. ஏ முகத்த கண்ணாடில கூட பாத்து ரசிக்காத என்னை நீராருவிய பாத்து இம்புட்டு அழகா ரசிக்க வச்சதே நீங்கதா. உண்மைய சொல்லணும்னா நா இந்த நொடி செத்து போனாக் கூட ரொம்ப சந்தோசமா செத்து போவேன். ஏன்னா நா இன்னிக்கி அவ்ளோ சந்தோசமா இருக்கே".


“என்னங்க இது சந்தோசமா இருக்கேன்னு சொல்லிட்டு செத்து போறத பத்தி பேசிக்கிட்டு. இந்த சந்தோசத்தோட நீங்க வாழ்க்கை முழுசும் வாழ்ந்தா எவ்ளோ நல்லாருக்கும்”.


“சந்தோசமா இருக்குற இந்த நேரத்துல எதுக்குங்க நாளைய பத்தி யோசிச்சுகிட்டு விடுங்க".


“ஏங்க நாளைக்கு உங்களால சந்தோசமா இருக்க முடியாதுன்னு சொல்லுறீங்களா".


“இருக்க முடியாதுன்னு சொல்லல. அவரு என்னை சந்தோசமா இருக்க விடமாட்டாரு”.


“அவே என்ன செல்லம்மா உன்னை சந்தோசமா இருக்க விடாம பண்றது. நீ மட்டும் ஊனு ஒருவார்த்தை சொன்னா அவன எதுத்து என்ன, உலகத்தையே எதுத்து உன்னை செம்மையா வாழ வைப்பே. ஏ காதல் உனக்கு காவலுக்கு இருக்கும்போது நீ எதுக்கும் கலங்க கூடாது. நீ கலங்கி போகவும் நா விடமாட்டேன்", மனதில் நினைத்தவன் அவளை பார்க்க, அந்த வளர்ந்த குழந்தை அவன் மடியையே தலையணையாக்கி அதில் நித்திரை கொள்ள துவங்கியிருந்தது.


இமை இரண்டும் மூட மறந்து தூக்கம் துறந்து கருவிழி இரண்டும் அங்கும், இங்கும் அலவ கூட விடாமல் அவளையே பார்த்திருந்தான் வாமிலன். இந்த நொடிக்கு பின் அவள் அருகாமை, அவளின் புன்சிரிப்பு, அந்த மென் வதனம் அனைத்தையும் தொலைக்க போவது தெரியாமல்...


“ஏய் இத எடுத்து உள்ள வை. ஒவ்வொன்னுக்கும் ஓராயிரம் தடவ அலைவியா. எல்லாத்தையும் பாத்து எடுத்து வைக்கணும். என்ன நா சொல்லுறது புரிதா”.


“செளவ் நீ மாதுவ பிடிச்சு வச்சு அவள ரம்பமா அருக்குறது இது கோடான கோடியே முறை”.


“என்ன? என்னை கிண்டல் பண்றதா நினைப்பா. ஏ புள்ள ஊருல இல்ல அதனால குளிர்விட்டு போச்சு. ம்ஹும்... அவே வரட்டும் நல்லா கவனிக்க சொல்லுறே".


“என்ன மாப்ள தங்கச்சி கவனிப்பு அது, இதுனு எல்லாம் சொல்லுறாப்ல என்ன விஷயம்".


“அது ஒன்னுமில்ல மச்சா எங்களுக்குள்ள சும்மா. ஆமா நீங்க கிளம்பிடிங்க சரண எங்க".


“நா அவன கிளம்பதா சொன்னேன் மாப்ள ஆனா அவே என்ன நினைக்குறானோ, கிளம்பவே மாட்டேன்னு முரண்டு பண்ணிட்டு இருக்கான்".


“ஏது கிளம்பமாட்டேன்னு இருக்கானா? அப்பா, அம்மா, மாமா நீங்க எல்லாம் முன்னாடி போங்க நா அவன கொஞ்சம் மந்திரிச்சுவிட்டு கூட்டிட்டு வாறே".


மெத்தையில் அமர்ந்து யோசனையில் இருந்த சரணின் தலையில் கொட்டிய மாதங்கி, “டேய் எருமை வீட்ல எல்லாரும் சந்தோசமா கிளம்பிட்டு இருக்கும்போது நீ மட்டும் என்னத்த இப்டி யோசிச்சுகிட்டு இருக்க. எழுந்துரு ஒழுங்கா டிரெஸ் பண்ணிட்டு கிளம்பி வா".


“முடியாது போடி நானெல்லாம் அங்க வரல. எனக்கு அங்க வர சுத்தமா இன்ரெஸ்ட் இல்ல".


“டேய் என்ன விளையாடுறியா. அங்க முன்ன நின்னு எல்லா வேலையவும் கவனிக்க வேண்டியது நீயும், நானும்தா, கண்டத யோசிச்சு பிணாத்தாம வந்து சேரு”.


சரணின் அங்க வஸ்திரத்தை அவன் கையில் திணித்துவிட்டு மாது சென்றிட, “நடக்குற எதுவும் சரியாபடல. வாமி இதுக்கு ஒத்துக்குவானா? எனக்குதா மனசு கிடந்து அடிச்சுகிது. கடவுளே ஓ மேல பாரத்த போட்டுட்டு நானும் இதுல தலைய நுழைக்குறே. நடக்குறத நல்லதா நடத்தி குடு".


நாராயணமூர்த்தி, சௌந்தர்யா, சிவப்பிரகாசம் மூவரும் காரில் செல்லும் நேரம், “ஏங்க நாம குடுக்க போற இன்ப அதிர்ச்சி இலாவுக்கு ரொம்ப பிடிக்கும்லங்க. எனக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாவும், அதேசமயம் ஏதோ நெருடலாவும் இருக்கு".


“செளவ் நீ எதையும் நினைச்சு மனச ஒளப்பாத. கண்டிப்பா வாமிக்கு நாம குடுக்குற சர்ப்ரைஸ் பிடிக்கும் பாரு. என்ன மச்சா அமைதியாவே வாரீங்க. இது எல்லாத்துக்கும் காரணகர்த்தா நீங்கதான. உங்க தங்கச்சி கிட்ட பேசி சிரிச்ச முகமா வரச் சொல்லுங்க".


“மாப்ள சொல்லுற மாதிரி சிரிச்சுகிட்டே வா சௌந்தர்யா. இலாவுக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். நீ வேண்ணா பாரு, நாம குடுக்குற இன்ப அதிர்ச்சில அவே நம்மள தூக்கி ரங்க ராட்டினம் மாதிரி சுத்த போறான்".


கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

அவரைக்கு பூ அழகு

அவருக்கு நான் அழகு...


“அடியாத்தாடி... இன்னுமே நேர்ல பாக்காத அவருக்கு எப்டியெல்லாம் பாட்டு படிக்குறா உங்க மக. அடியே இன்னிக்கி மாப்ள பையே வரல சம்மந்தி வீட்டுகாரெங்க மட்டும்தா வாராங்க. இன்னிக்கி நிச்சயதார்த்தம் முடியுற வர ஓ கனவுகள கொஞ்சம் குறைச்சுக்கோ".


தங்கநிற ஜரிகை வைத்த எட்டு முழாம் புடவையில் தித்திக்கும் தேன் கரும்பாய் இருக்கும் அவிரா மெல்லிய நூலின் தன்மை கொண்ட இமைக்கு கண்மை தீட்டிக் கொண்டிருக்க, அவளை பார்த்து பரிகசித்துக் கொண்டிருந்தார் அவளின் தாய் கோமதி.


கனவில் மிதந்தவன் காதலியை கண்டு இன்புற்று அமர்ந்திருக்கிறான்.


அவன் மனதில் அவள் மேல் தீரா காதல் உள்ளது என்பதை அறியாத மங்கை அவனருகில் இருக்கிறாள்.


இவர்கள் இருவருக்கும் நடுவில் புது முடிச்சாய் ஒரு மலர்.


நடக்க போவது என்ன?


காதலின் சாதல் வெல்லுமா?...


சாதல்கள் தொடரும்...

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes