கண்ணீர் பசி தீர்க்குமா!!!

Advertisement

Nuha Maryam

Active Member
"அம்மா....அம்மா....சீக்கிரம் வாங்கம்மா...பாட்டிக்கு ரொம்ப மூச்சு வாங்குது..." என வாசலிலிருந்து கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்து அந்த 8 வயது சிறுவன் கத்த, குடத்தைக் கீழே போட்டவாறு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தவள் தன் அத்தை இருந்த அறைக்குள் சென்று ஒரு மூலையில் பாதி உடைந்த நிலையிலிருந்த மரப்பெட்டியைத் திறந்து இன்ஹேலரை எடுத்து அத்தையின் வாயில் வைக்கவும் அவர் அவ் இன்ஹேலரில் இருந்த கடைசி சொட்டு மருந்தை உள்ளெடுத்தவாறு அவர் அமைதியாகினார்.

அதன் பிறகே அச் சிறுவனின் தாயான மாலாவுக்கு சீரான மூச்சு வந்தது.

பின் தன் சேலை நுனியிலிருந்த முடிச்சை அவிழ்த்து அதிலிருந்த கடைசி 150 ரூபாயையும் தன் மகன் கையில் கொடுத்து,"ரவி..இந்த காச எடுத்துட்டு டௌவுனுக்கு போய் பாட்டிக்கு இன்ஹேலர் வாங்கிட்டு வாப்பா..ஊரடங்கு 2 மணிக்கு மறுபடியும் போடுறாங்கலாம்..சீக்கிரம் வாப்பா.." என அனுப்பி வைக்க அடுத்த அறையில் அவளது 2 வயது மகன் அழும் சத்தம் கேட்டு அங்கு போக,"மா..அப்பா எப்ப வதும்...எக்கு பதிக்கிது..." என அழ மாலாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

வியாபாரத்துக்கு பொருட்கள் எடுத்துப் போன இடத்தில் அவளது கணவன் கோபி ஊரடங்கு போட்டதால் திரும்ப வர முடியாமல் மாட்டிக்கொள்ள ஒரு வாரமாய் எவ் வித வருமானமுமின்றி அவ் ஓலைக் குடிசையில் தன் 2 மகன்கள் மற்றும் மாமியாரை வைத்துக் கொண்டு தவிக்கிறாள்.

மகனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்று பார்த்த போது அனைத்து டப்பாக்களும் காலியாக இருந்தது.

ஒரு பிடி அரிசியே இருந்தது.அதைக்கொண்டு கஞ்சி காய்த்து தன்னைத் தவிர்த்து மற்ற மூவருக்கும் பிரித்து சிறிய மகனுக்கு ஊட்டிவிட்டு மாமியாருக்கும் எடுத்துச் சென்று பருக்கினாள்.

ரவி அதற்குள் வீடு வர அவனுக்கும் கஞ்சியை ஊற்றிக்கொடுத்துவிட, ரவி அதனைப் பருக வாயிற்கருகே கொண்டு சென்று பருகாமல் மாலாவைப் பார்த்து,"நீ சாப்டியாம்மா.." எனக் கேட்க தன் கண்ணீரை அவனுக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு,"நான் அப்போவே சாப்டேன் கண்ணா..நீ சாப்பிடுப்பா.. நான் அடுப்படிக்கு போறேன்.." என்றவாறு சமையலறைக்கு செல்ல அதன் பின்னே ரவி சாப்பிட்டான்.

சமையலறைக்குள் நுழைந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வடிந்தோட,"கடவுளே..என் புள்ளைங்க பசி போக்க வழி காட்டுப்பா..." என வேண்டினாள்.

அவள் வேண்டுதல் கடவுள் செவிக்கு எட்டியதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எங்கோ யாரோ செய்த தப்புக்கு முழு உலக மக்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.

யார் செய்த தப்புக்கு யாருக்கு தண்டனை???

2 நாளாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் லேசாக மயக்கம் வர அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சென்றுப்பார்க்க எதிர் வீட்டுப்பெண்மணி மூச்சு வாங்க நின்றிருந்தார்.

அவர்,"மாலா இன்னெக்கி இந்த ஏரியா மக்களுக்கு அரசாங்கத்தால ஐயாயிரம் ரூபா கொடுக்குறாங்களாம்.. சீக்கிரம் கிளம்பி என்னோட வா.." என்றது தான் தாமதம் கண்களில் கண்ணீர் வழிய அங்கு ஓடினாள் ஆனால் இம்முறை ஆனந்தக்கண்ணீர்...

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top