கண்ணீர் - அத்தியாயம் 9

Advertisement

Nuha Maryam

Active Member
"கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்ற கேலிக் குரலில் அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

ஆகாஷ், "என்ன குட்டச்சி? அப்படி பார்க்குற? எவன் கூட கடலை போட்டுக்கிட்டு இப்படி ரோட்ட நேரா பார்க்காம நடக்குற?" எனக் கேலி செய்யவும், "யூ ப்ளடி இடியட்... நான் எவன் கூடயாவது கடலை போடுறதை நீ பார்த்தியா மேன்? அப்படியே போட்டாலும் உனக்கு என்னடா வந்தது?" எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.

"எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல குட்டச்சி... ஆனா அந்தப் பையனை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு..." என ஆகாஷ் உச்சுக் கொட்டவும் சாருமதி அவனைப் புரியாமல் நோக்க, அவளின் தோளில் தன் முழங்கையை ஊன்றிய ஆகாஷ், "அது ஒன்னுமில்ல குட்டச்சி... இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி தான் காலம் பூரா பார்த்துட்டு இருக்க போறானோ? அநேகமா கூடிய சீக்கிரம் சந்நியாசி ஆகிடுவான்னு நினைக்கிறேன்... இல்லன்னா இப்படி குட்டி அண்டா சைஸ்ல இருக்குற உனக்கு எப்படி லைஃப் லாங் சாப்பாடு போடுவான்?" என்றான் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு.

ஒரு நிமிடம் அவன் என்ன கூறுகிறான் என அமைதியாகக் கேட்ட சாருமதி ஆகாஷ் என்ன கூற வருகிறான் எனப் புரிந்துகொண்டவள் கோபத்தில் அவனின் கரத்தைத் தட்டி விட்டு, "உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா நான்..." எனத் தன் கைப்பையால் ஆகாஷைப் போட்டு அடித்தாள்.

"உண்மைகள் சில நேரம் கசக்கும் டி குட்டச்சி..." எனக் கேலியாகக் கூறிய ஆகாஷ் அவளிடமிருந்து தப்பித்து ஓடினான்.

ஆகாஷ் மேல் இருந்த கோபத்தில் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் சாருமதி.

சாருமதி சென்றதும் தன் இருக்கையில் வந்தமர்ந்த அனுபல்லவி, "சரியான சிடுமூஞ்சி... எப்பப்பாரு உர்ருன்னே இருக்குறது... ஒரு மனுஷி பேசுறதை காது கொடுத்து கேட்டா தான் என்னவாம்? சிடுமூஞ்சி சிடுமூஞ்சி..." என பிரணவ்வை வறுத்தெடுத்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இங்கு தன் அறை கண்ணாடி வழியாக தெளிவற்றுத் தெரியும் அனுபல்லவியின் விம்பத்தைப் பார்த்தவாறு தண்ணீர் குடித்த பிரணவ்விற்கு திடீரென புறை ஏறியது.

தன் தலையில் தட்டி அடக்கிய பிரணவ்வின் பார்வை தானாகவே அனுபல்லவி இருந்த இடத்தை அடைந்தது. அவன் முகத்தில் கூட ஒரு இளநகை.

பிரணவ், 'ஓஹ்... திட்டுறீங்களா மேடம்?' என மனதில் எண்ணி விட்டு கணினித் திரையில் பார்வையைப் பதித்தான்.

நன்றாக இருட்டி விட்ட நிலையில் சாருமதி அடிக்கடி அனுபல்லவிக்கு அழைத்து அவள் எந்த நேரத்தில் வருவாள் எனக் கேட்டு விசாரித்தாள்.

ஆனால் அனுபல்லவிக்குத் தான் வேலைகள் முடிந்த பாடில்லை.

பத்து பேர் இணைந்து செய்யும் வேலையை அவள் ஒருத்தியே செய்தால் எப்படி முடியும்? போதாக்குறைக்கு தூக்கக்கலக்கம் வேறு.

அடிக்கடி கொட்டாவி விட்டபடி தூங்கி விழுந்தவளை நெருங்கியது அழுத்தமான காலடி ஓசை.

வேலைகளின் இடையே தன் கைக் கடிகாரத்தை தூக்கி மணியைப் பார்த்த பிரணவ் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கவும் அனுபல்லவி இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள் எனப் பார்க்க வந்தான்.

அனுபல்லவி இருக்கையில் சாய்ந்து தலை ஒரு பக்கம் வளைய ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைத் தட்டி எழுப்புவதற்காக தன் கரத்தை நீட்டிய பிரணவ் என்ன நினைத்தானோ கரத்தைப் பின்னே இழுத்துக்கொண்டான்.

பெருமூச்சு விட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் அனுபல்லவியின் மேசை மீதிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து பட்டென்று கீழே போட, அமைதியாக இருந்த ஆஃபீஸில் தண்ணீர்க் குவளை விழுந்து உடையும் சத்தம் பலமாக எதிரொலித்தது.

திடீரென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த அனுபல்லவி தன் அருகில் பிரணவ்வை எதிர்ப்பார்க்காது பயத்தில், "ஆ...." எனக் கத்தவும் அவசரமாக தன் கரம் கொண்டு அவளின் வாயை அடைத்தான் பிரணவ்.

"ஷ்ஷ்ஷ்... ஷ்ஷ்ஷ்... எதுக்கு கத்துற? நான் தான்..." என பிரணவ் கடுப்பாகக் கூறவும், "ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்..." என அனுபல்லவி ஏதோ கூற முயன்றாள்.

பிரணவ், "முதல்ல வாய திறந்து பேசு..." எனக் கோபமாகக் கூறவும் கண்களால் தன் வாயை மூடியிருந்த பிரணவ்வின் கரத்தை சுட்டிக் காட்டினாள் அனுபல்லவி.

அவசரமாக தன் கரத்தை எடுத்த பிரணவ், "ஓஹ் சாரி... சாரி..." என்க, நெஞ்சை நீவி பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "ஏன் சார் இப்படி பயமுறுத்துறீங்க? இன்னும் கொஞ்சம் இருந்து இருந்தா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து அல்பாயுசுல போய் சேர்ந்து இருப்பேன்... எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல... அட்லீஸ்ட் லவ் கூட பண்ணல..." எனச் சோகமாகக் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்தான் பிரணவ்.

அப்போது தான் அவன் கூறிய வேலை ஞாபகம் வந்து அதிர்ச்சியில் கண்களை விரித்த அனுபல்லவி, "சாரி சார்... சாரி சார்... திரும்ப திட்டிடாதீங்க... தெரியாம தூங்கிட்டேன்... இப்போவே முடிச்சிடுறேன்..." என அவசரமாகத் திரும்பி வேலை செய்யவும் அனுபல்லவிக்கு முன் இருந்த கணினியை அணைத்தான் பிரணவ்.

அனுபல்லவி, "சார்..." என இழுக்க, "நாளைக்கு ஏர்லியா வந்து வர்க்க முடிங்க... இப்போ கிளம்புங்க... ரொம்ப லேட் ஆகிடுச்சு..." என பிரணவ் கூறவும், "பரவால்ல சார்... நான் இதை முடிச்சிட்டே கிளம்புறேன்..." என்றாள் அனுபல்லவி.

"அதான் கிளம்புங்கன்னு சொல்றேன்ல..." எனப் பிரணவ் சற்று குரலை உயர்த்திப் பேசவும், "ஓக்கே சார்... ஓக்கே சார்..." என அவசரமாக இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி நேரத்தைப் பார்க்க, மணி நள்ளிரவு பன்னிரண்டைக் கடந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தவள், "என்ன? டுவல்வ் பாஸா? சாரு வேற திட்டுவாளே..." என்று அவசரமாக பிரணவ்விடம் கூட கூறாது தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள்.

அவளின் செய்கையைக் கண்டு தோளைக் குலுக்கிய பிரணவ் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவி தன் கைப்பேசியை எடுத்து டாக்சிக்கு அழைக்கப் பார்க்க, அதுவோ எப்போதோ தன் உயிரை விட்டிருந்தது.

"ப்ச்... போயும் போயும் இப்பவா இந்த மொபைலும் சதி பண்ணணும்? ச்சே... இப்போ எப்படி வீட்டுக்கு போறது? சாரு வேற நிறைய தடவை கால் பண்ணி இருந்தாளே... ம்ம்ம்... வேற வழி இல்ல... பஸ்ல போக வேண்டியது தான்..." என்ற அனுபல்லவி நடந்தே பேரூந்து தரிப்பிடம் நோக்கிச் சென்றாள்.

நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டதால் பேரூந்து தரிப்பிடத்தில் யாருமே இருக்கவில்லை. இரண்டு பேர் குடித்து விட்டு வாய்த் தாக்கம் செய்து கொண்டிருக்க, அவர்களை விட்டு சற்று ஓரமாக சென்று நின்ற அனுபல்லவி, 'இந்த டைம் பஸ் வருமா இல்லயான்னு கூட தெரியலயே...' என மனதில் பேசினாள்.

வாய்த் தாக்கம் செய்து கொண்டிருந்த இருவரின் பார்வையும் மெதுவாக அனுபல்லவியின் பக்கம் திரும்ப, இருவரின் முகத்திலும் ஒரு குரூரப் புன்னகை.

பேரூந்து வரும் வரை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவிக்கு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்வு வர, லேசாகத் திரும்பிப் பார்த்தவள் இருவரின் பார்வையையும் கண்டு அதிர்ந்தாள்.

தன் கைப்பைக்குள் கையை விட்டு ஏதோ தேடிய அனுபல்லவி, அவர்கள் அவளை நெருங்கவும் தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்து அவர்களின் முகத்தில் அடிக்கப் பார்க்க, சரியாக பிரணவ்வின் கார் வந்து அனுபல்லவியின் அருகில் நின்றது.

திடீரென யாரோ வரவும் அந்த குடிகாரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல, அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆஃபீஸில் இருந்து கிளம்பிய பிரணவ் அவன் தங்கியிருந்த வீட்டை நோக்கிச் செல்ல, வழியில் பேரூந்து தரிப்பிடத்தில் அனுபல்லவி காத்திருப்பதைக் கண்டு முதலில் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்.

சற்று தூரம் செல்லவும் கார் சைட் மிரரில் அந்த குடிகாரர்கள் இருவரும் கண்களில் வெறியுடன் அனுபல்லவியை நெருங்குவதைக் கண்டு கொண்டவன் அவசரமாக ரிவர்ஸ் எடுத்து அனுபல்லவியின் அருகே காரை நிறுத்தினான்.

அவர்கள் சென்றதும் பிரணவ் கார் ஹார்னை வேகமாக அழுத்த, வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி ஏறியதும் பிரணவ் காரை இயக்க, அனுபல்லவி தன் கைப்பேசியை இயக்க முயன்று கொண்டிருந்தாள்.

மெதுவாக தொண்டையைச் செறுமிய பிரணவ், "இந்த தேங்க்ஸ் எல்லாம் சொல்ற பழக்கம் இல்லயா?" என்க, அவனைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, "எதுக்கு தேங்க்ஸ்?" எனக் கேட்டாள்.

"அந்த குடிகாரங்க கிட்ட இருந்து உங்களைக் காப்பாத்தினதுக்கு தான்..." என பிரணவ் பாதையில் பார்வையைப் பதித்தவாறு கூற, ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

பிரணவ் திரும்பி அவளை முறைக்க, கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி, "சாரி சார்.‌‌.." என்று விட்டு தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துக் காட்டினாள்.

பிரணவ் ஒற்றைப் புருவம் உயர்த்தி கண்களாலே என்ன என வினவ, "பெப்பர் ஸ்ப்ரே... நீங்க வரலன்னா கூட நான் அவங்களை சமாளிச்சிருப்பேன்‌... சரியாப் பார்த்தா நீங்க தான் என் கிட்ட சாரி சொல்லணும்... பத்து பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையை ஒத்த ஆளா என் கிட்ட கொடுத்து இவ்வளவு நேரம் தனியா வர்க் பண்ண விட்டீங்க... அதனால் தான் இவ்வளவு லேட் ஆகி, என் மொபைல் ஆஃப் ஆகி, டாக்ஸிக்கு கூட வர சொல்ல முடியல..." என்றாள் அனுபல்லவி சற்று கடுப்பாக.

பிரணவ்வோ அவள் கூறியதை காதிலே வாங்காதவன் போல, "வழி?" என்க, "அதானே... இவர் வாயை திறந்தா தான் அப்படியே முத்து உதிர்ந்திடுமே..." என முணுமுணுத்த அனுபல்லவி வீட்டுக்குச் செல்லும் வழியைக் கூறினாள்.

சற்று நேரத்திலே அனுபல்லவியும் சாருமதியும் தங்கியிருந்த வீடு வர, பிரணவ் அங்கு காரை நிறுத்தவும் இறங்கிக் கொண்டாள் அனுபல்லவி.

சாருமதி அவளுக்காக வாசலிலேயே காத்திருக்க, காரை விட்டு இறங்கிய அனுபல்லவி கார் விண்டோவைத் தட்டவும் பிரணவ் விண்டோவைத் தாழ்த்தினான்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் சார்... இந்த தேங்க்ஸ் அன்டைம்ல அந்த பஸ் ஸ்டாப்ல யாரோன்னு என்னைக் கண்டுக்காம தனியா விட்டுட்டு போகாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டதுக்கு..." எனப் புன்னகையுடன் கூற, "யாரோன்னு உங்களைக் கண்டுக்காம உங்களைக் கடந்து தான் போனேன் மிஸ் பல்லவி... அப்புறம் அந்த குடிகாரங்களால உங்களுக்கு பிரச்சினையோன்னு தான் திரும்ப வந்து பிக்கப் பண்ணேன்..." என கண்களில் ஒரு வித திமிருடன் ஏளனமாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது காரை இயக்கிக்கொண்டு அங்கிருந்து செல்லவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியை வந்து அணைத்துக்கொண்ட சாருமதி, "அனு... ரொம்ப பயந்துட்டேன் டி... லேட் ஆனா கால் பண்ண மாட்டியா டி?" என்று கடிந்து கொண்டாள்.

"சாரி சாரு... மொபைல் டெட்... அதான் உன்ன கான்டேக்ட் பண்ண முடியல... டைம் போனதே தெரியல... சார் வந்து கிளம்ப சொன்னதுக்கு அப்புறம் தான் டைம் பார்த்தேன்..." என அனுபல்லவி விளக்கம் அளிக்க, "பொல்லாத சார்... ப்ராஜெக்ட் மேனேஜரா இருந்தே நம்மள இப்படி வாட்டுறார்... இதுவே எம்.டியா இருந்தா நாம காலி..." என்றாள் சாரு கோபமாக.

அதில் புன்னகைத்த அனுபல்லவி, "விடு டி... என் மிஸ்டேக்னால தானே அவருக்கு கோவம் வந்துச்சு..." என்றவளுக்கு ஏனோ தோழியிடம் கூட பிரணவ்வை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.

அனுபல்லவி, "சாரு... ரொம்ப டயர்டா இருக்கு... காஃபி ஒன்னு போட்டு கொடு டி... ப்ளீஸ்..." எனக் கண்கள் சுருக்கிக் கெஞ்ச, அவள் தோளில் அடித்த சாருமதி, "லூசு... போட்டுத் தான்னு கேட்டா போட்டு தரப் போறேன்... அதுக்கு எதுக்கு டி ப்ளீஸ்லாம் சொல்லிக்கிட்டு?" என்கவும் இளித்து வைத்தாள் அனுபல்லவி.

சாருமதி உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து கைகளில் நெட்டி முறித்தபடி அனுபல்லவி சென்றாள்.

காரில் சென்று கொண்டிருந்த பிரணவ்விற்கு அனுபல்லவி கூறியதே காதில் ஓடியது. சிதாராவின் பயந்த சுபாவத்துடன் அனுபல்லவியை ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு அவனையும் அறியாமல் அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

ஆனால் உடனே சிதாராவுக்கு தான் செய்த அநியாயத்தை எண்ணி பிரணவ்வின் உடல் இறுக்கத்தைத் தத்தெடுத்தது.

************************************

மறுநாள் காலை சற்று விரைவாகவே ஆஃபீஸ் வந்த பிரணவ்விற்கு தன் மேசை மீது கிடந்த கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்க்க, ஆஃபீஸிற்கு அந் நேரத்தில் ஓரிரண்டு பேரே வந்திருக்க, அனுபல்லவியோ தன் மேசை மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தன் கேபினுக்குள் நுழைந்து அனுபல்லவி வைத்திருந்த கோப்புகளைச் சரி பார்த்தவன் அனுபல்லவிக்கு அழைத்து தன் கேபினுக்கு வரக் கூறினாள்.

தூக்கக் கலக்கத்திலேயே சரி எனப் பதிலளித்தவள் சற்று நேரத்தில் அனுமதி வாங்கிக்கொண்டு பிரணவ்வின் அறைக்குள் நுழைந்தாள்.

அனுபல்லவியின் முகத்தில் ஆங்காங்கே இருந்த நீர்த் துளிகள் அவள் அப்போது தான் தூக்கத்தைப் போக்க முகம் கழுவி விட்டு வந்துள்ளாள் என எடுத்துரைத்தது.

அனுபல்லவி, "சார்... வர சொன்னீங்க..." என்க, "ம்ம்ம்... குட் ஜாப் மிஸ் பல்லவி... ஃபைல்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு... இனிமே இந்த மிஸ்டேக்ஸ் விடாம பார்த்துக்கோங்க..." என பிரணவ் கூறவும், "ஓக்கே சார்..." என்றாள் அனுபல்லவி.

பிரணவ், "அப்புறம் நான் சில சேன்ஜஸ் சொல்றேன்... நோட் பண்ணிக்கோங்க..." என்கவும் அனுபல்லவி மேசையில் இருந்த பேப்பர் பென்னை எடுத்து பிரணவ் கூறக் கூற குறித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் பேனையைப் பிடித்து எழுதும் போது அனுபல்லவி வலியில் முகம் சுருக்குவதை பிரணவ் முதலில் கவனிக்கவில்லை.

திடீரென அனுபல்லவி வலியில், "ஸ்ஸ்ஸ்..." என முனங்கவும் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் அனுபல்லவியின் வலியில் சுருங்கிய முகத்தைக் கண்டு, "என்னாச்சு?" எனக் கேட்க, "நத்திங் சார்... நீங்க சொல்லுங்க..." என சமாளித்தாள் அனுபல்லவி.

தன் இருக்கையை விட்டு எழுந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை அழுத்தமாகப் பார்த்தபடி அவளை நெருங்க, அனுபல்லவியின் இதயம் வேகமாகத் துடித்து.

அனுபல்லவி, "சா...ர்..." எனத் தடுமாற, அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவியின் கரங்களை அவளின் அனுமதி இன்றியே பிடித்துப் பார்த்தான்.

பிரணவ்வின் திடீர் செயலில் அனுபல்லவியின் கரத்திலிருந்த பேப்பர் பென் கீழே விழ, அவளின் கரங்களோ அனிச்சையாக நடுங்கியன.

முன் தினம் பல மணி நேரம் ஓய்வின்றி டைப் செய்ததால் அனுபல்லவியின் உள்ளங்கையில் ஆங்காங்கு சிவந்து கன்றிப் போய் இருக்க, பிரணவ்விற்கு குற்றவுணர்வாக இருந்தது.

அவளின் கரத்தை வெறித்தவாறே, "ஐம் சாரி..." எனப் பிரணவ் மன்னிப்பு கேட்க, பிரணவ்வின் நெருக்கம் தந்த நடுக்கத்தில், "ப...பரவால்ல சார்..." என்ற அனுபல்லவி அவசரமாக தன் கரத்தைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.

அனுபல்லவி, "அவ்வளவு தான்னா நான் போகட்டுமா சார்?" எனத் தயக்கமாகக் கேட்கவும் பிரணவ் சரி எனத் தலையசைக்க, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடப் பார்த்த அனுபல்லவியை பிரணவ்வின், "பல்லவி..." என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அனுபல்லவி திரும்பி பிரணவ்வைக் கேள்வியாக நோக்க, "நீங்க இன்னைக்கு லீவ் போட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க... கைக்கு ஏதாவது ஒய்ன்மன்ட் பூசுங்க..." எனப் பிரணவ் கூறவும் மறுக்க வாய் எடுத்தவள் அதற்கும் பிரணவ் ஏதாவது திட்டுவான் என நினைத்து அமைதியாக சரி எனத் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ் தன் பணியினைத் தொடர்ந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top