கண்ணீர் - அத்தியாயம் 27

Advertisement

Nuha Maryam

Active Member
"அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக.

அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல இருக்கும் போது நீங்க பிரஜு கூடவே இருப்பீங்க... ஆனா இங்க வந்ததுல இருந்து என்னை கேர் டேக்கர் கிட்ட விடுறீங்க... ஐ மிஸ் யூ மா..." என்றான் மழலைக் குரலில் தேம்பியபடி.

பிரஜன் அவ்வாறு கூறவும் பிரணவ் தன் கடந்த காலம் பற்றி தன்னிடம் கூறியது தான் அவளுக்கு நினைவு வந்து கண்கள் கலங்கின.

"இனிமே அம்மா உன்ன கேர் டேக்கர் கிட்ட விட மாட்டேன்... ஓக்கேயா? நாம இப்போ பெங்களூர் போய்ட்டு அங்க இருந்து சிங்கப்பூர் போயிடுவோம்... திரும்ப இங்க வர மாட்டோம்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஹை... ஜாலி ஜாலி... வீட்டுக்கு போக போறோம்... ஆனா..." என அனுபல்லவியிடம் இருந்து இறங்கி துள்ளிக் குதித்த பிரஜனின் முகம் மறு நொடியே வாடி ஏதோ கூற வர, அதற்குள் பிரதாப் அங்கே வரவும் அவனைக் கண்டு கோபத்தில் முகத்தைத் திருப்பினான் பிரஜன்.

அவனின் கோபத்தைக் கண்டு பிரதாப்பிற்கு தாங்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

எங்கு சிரித்தால் தன் செல்லக் குழந்தையின் கோபம் அதிகரித்து விடுமோ என்று சோகமாக இருப்பது போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் பிரதாப்.

அதனைக் கண்டு உதட்டைச் சுழித்த பிரஜன், "அம்மா... நாம மட்டும் தனியா சிங்கப்பூர் போலாம்... வேற யார் கூடவும் நான் பேச மாட்டேன்..." என மழலை மொழியில் தன் கோபத்தை வெளிப்படுத்திய பிரஜன் பிரதாப்பை முறைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடி விட்டான்.

இருவரையும் புரியாமல் நோக்கிய அனுபல்லவி, "என்னாச்சு? எதுக்கு பிரஜன் உங்க கூட கோவமா இருக்கான்?" எனக் கேட்டாள்.

"அ..அது... ஒன்னும் இல்ல அனு... சும்மா தான்... அவன் கேட்ட டாய் ஒன்ன வாங்கி கொடுக்கல... அதான் கோவமா இருக்கான்... நான் அவன சமாதானப்படுத்துறேன்..‌." என்றான் பிரதாப் சமாளிப்பாக.

"ம்ம்ம்..." என்று மட்டும் கூறிய அனுபல்லவி சிங்கப்பூர் செல்ல தன் உடமைகளை அடுக்கி வைக்க, "கண்டிப்பா அங்க போயே ஆகணுமா அனு?" எனத் தயக்கமாகக் கேட்டான் பிரதாப்.

அவனைப் பாராமலே, "என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல..." என்றாள் அனுபல்லவி.

பிரதாப், "ஈவ்னிங் ஃப்ளைட்ல பெங்களூர் கிளம்பலாம்... சிங்கப்பூர் போக இன்னைக்கு நைட் ஃப்ளைட் புக் பண்ணி இருக்கேன்..." என்றவன் அங்கிருந்து செல்லவும் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.

"அப்பா..." என உறங்கிக் கொண்டிருந்தவரின் தலையை வருடவும் அவர் கண் விழிக்க, "நாளைக்கே சிங்கப்பூர் கிளம்புறோம் பா... திரும்ப இங்க வரதா ஐடியா இல்ல...‌ அங்க உங்களுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்... உங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்கள வெளியவே வர முடியாதபடி பண்ணிட்டேன்... இப்போ உங்களுக்கு சந்தோஷமா ப்பா?" எனக் கேட்டாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஆ... ஆனா‌... நீ... நீ..." என ஏதோ கூற முயன்றவரின் கண்கள் கலங்கின.

கசந்த புன்னகையுடன் அதனைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "எனக்குன்னு இனிமே ஒன்னும் இல்லப்பா... இனிமே வாழ போற வாழ்க்கை என் பிரஜனுக்காக மட்டும் தான்..." என்றாள் எங்கோ வெறித்தபடி.

****

"பிரணவ் கண்ணா... வந்துட்டியாப்பா? ட்ராவல் எல்லாம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் லக்ஷ்மி புன்னகையுடன்.

"ஃபைன் மா..." என்ற பிரணவ்வின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.

"கங்கிரேட்ஸ் மை சன்... எனக்கு தெரியும் நீ கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிடுவேன்னு..." என்றார் மூர்த்தி பிரணவ்வை அணைத்து.

"ஆமா... என் மருமகள் எங்க? நேரா நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல..." என லக்ஷ்மி கேட்கவும், "ப்ச்... அவ வீட்டுக்கு போய்ட்டா... எப்படியும் கொஞ்ச நேரத்துல இங்க தானே வரப் போறா..." எனச் சலிப்பாகக் கூறிய பிரணவ்,

"அப்பா‌.‌.. இன்னைக்கு ஈவ்னிங் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. ப்ராஜெக்ட் சைன் பண்ண நம்ம கம்பனி வராங்க... நீங்களும் அம்மாவும் கூட வாங்க..." என்றான்.

மூர்த்தி, "நீ தானேப்பா இப்போ கம்பனிய பார்த்துக்குற... நானும் அம்மாவும் எதுக்கு?" எனக் கேட்டார் புரியாமல்.

பிரணவ், "இதுக்கு முன்னாடி அம்மாவும் நீங்களும் தானே பிஸ்னஸை கவனிச்சீங்க... அதுவும் இல்லாம அம்மாவுக்கு பிஸ்னஸ்னா ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்... இனிமே அவங்களும் பழையபடி பிஸ்னஸை பார்த்துக்கட்டும்... ரொம்ப பெரிய கான்ட்ராக் சைன் பண்ண போறோம்... இந்த ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சா நம்ம கம்பனி பெயர் உலகம் ஃபுல்லா ஃபேமஸ் ஆகும்... சோ இந்த நல்ல காரியம் உங்க ரெண்டு பேர் ஆசிர்வாதத்தோட ஆரம்பிக்க விரும்புறேன்..." என்கவும் அவர்களால் மறுக்க இயலவில்லை.

மாலை மூர்த்தி, லக்ஷ்மி, பிரணவ் மூவரும் தம் அலுவலகத்தில் அனுபல்லவி வரும் வரை காத்திருந்தனர்.

அதே நேரம் அர்ச்சனா அங்கு வர, "நீ எதுக்கு இங்க வந்த? இம்பார்ட்டன்ட் மீட்டிங் நடக்க போறது தெரியும்ல..." எனக் கேட்டான் பிரணவ் கடுமையாக.

"அவள ஏன் பா திட்டுற? என் மருமகளுக்கு இல்லாத உரிமையா? அவ தானே இனிமே உன் கூட சேர்ந்து நம்ம பிஸ்னஸ் எல்லாம் கவனிச்சிக்க போறா..." என லக்ஷ்மி கூறவும் அர்ச்சனாவிற்கு குளு குளு என்றிருந்தது.

பிரணவ்வோ எதுவும் கூற முடியாமல் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

சரியாக ஆகாஷ் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, அவனைத் தொடர்ந்து தனக்கே உரிய கம்பீரத்துடன் மிடுக்காக நடந்து வந்தாள் அனுபல்லவி.

பிரதாப்பும் அனுபல்லவியுடன் ஜோடியாக வந்திருப்பதைக் கண்டு பிரணவ்வின் கண்கள் சிவந்தன.

அனுபல்லவியை இதற்கு முன்னர் தம் கம்பனியில் கண்டுள்ளதால் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்து, "இது..." என ஏதோ கூற வர, "இவ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி அத்தை... அப்புறம் இது அவ புருஷன் பிரதாப்..." என்றாள் அர்ச்சனா முந்திக்கொண்டு.

அவளுக்கு அனுபல்லவியின் முன் பிரணவ் மீது தனக்கு இருந்த உரிமையைக் காட்ட வேண்டிய தேவை இருந்தது.

அதனால் தான் அனைவரையும் முந்திக்கொண்டு பதிலளித்தாள்.

அனுபல்லவி அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

பிரணவ், "அவங்க ஒரு பெரிய கம்பனியோட எம்.டி... முதல்ல அடுத்தவங்களுக்கு எப்படி மரியாதை தரணும்னு கத்துக்கோ..." என்றான் அர்ச்சனாவிடம் கடுமையாக.

அனுபல்லவியின் இதழ்கள் இப்போது ஏளனமாக வளைந்தன.

தன்னை அனுபல்லவியின் முன் பிரணவ் அவமானப்படுத்திய கோபத்தில் அனுபல்லவியை முறைத்தாள் அர்ச்சனா.

"உட்காருங்க ரெண்டு பேரும்... பட் மிஸ்டர் பல்லவன் தானே அந்த கம்பனி எம்.டி..." எனக் கேட்டார் மூர்த்தி புரியாமல்.

"பல்லவனோட ஒரே பொண்ணு தான் நான்... அனுபல்லவி..." என்றாள் இருக்கையில் வாகாக அமர்ந்தபடி.

லக்ஷ்மியோ அனுபல்லவி வந்ததில் இருந்து அவளையே பார்வையால் அளந்து கொண்டிருந்தார்.

"நாம நேரா விஷயத்துக்கு வரலாமா? ஈவ்னிங் ஃப்ளைட்ல நாங்க கிளம்பணும்..." என்றான் பிரதாப் பட்டென்று.

பல்லைக் கடித்த பிரணவ் அனுபல்லவியின் முன் ஒரு கோப்பைத் தூக்கிப் போட்டான்.

அனுபல்லவி எதுவும் கூறாமல் அக் கோப்பைப் படித்து விட்டு கையொப்பமிட முனைய, "அம்மா..." எனக் கத்திக்கொண்டு அவ் அறைக்குள் நுழைந்தான் பிரஜன்.

அவனைத் தொடர்ந்து ஓடி வந்த நடுத்தர வயது ஒருவர், "சாரி சார்... சாரி மேடம்... தம்பி எவ்வளவு சொல்லியும் கேட்காம திடீர்னு கார்ல இருந்து இறங்கி ஓடி வந்துட்டார்..." என்றார் தயக்கமாக.

பிரஜனை அங்கு கண்டதும் அனுபல்லவியின் உடல் நடுங்க, இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

அதே சமயம், "என்னங்க... இந்தப் பையன் நம்ம பிரணவ் சின்ன வயசுல இருந்தது போலவே இருக்கான்ல..." என்றார் லக்ஷ்மி தன்னை மறந்து.

பயத்தில் எச்சில் விழுங்கிய அனுபல்லவி அவசரமாக பிரஜனை நெருங்கி, "பிரஜு... அம்மா உன்ன கார்ல தானே வெய்ட் பண்ண சொன்னேன்‌... நீ எதுக்கு இங்க வந்த? போ... ட்ரைவர் அங்கிள் கூட போய் கார்ல வெய்ட் பண்ணு..." என்றாள் கடுமையாக.

அன்னையின் கோபத்தில் முகம் வாடிய பாலகன் அனுபல்லவியிடம் இருந்து விலகி ஓடிச் சென்று பிரணவ்வின் கால்களைக் கட்டிக் கொண்டது.

அனைவரும் குழந்தையைப் புரியாமல் நோக்க, "ஏன் பா நீங்க பிரஜுவ பார்க்க வரல? பிரஜுவ பார்க்ல பார்த்தும் ஏன் பேசல? பிரஜுக்கு ரொம்ப சேட் ஆகிடுச்சு... ஏன் நீங்க பிரஜுவ தூக்கல?" என வருத்தமாகக் கேட்ட பிரஜன் தன் தாயைப் பார்த்து, "பிரஜு குட் பாயா கார்ல தான் வெய்ட் பண்ணேன் மா... அப்போ தான் இந்த பிள்டிங்குக்கு வெளிய அப்பாவோட ஃபோட்டோ பெரிசா மாட்டி இருக்குறதைப் பார்த்ததும் ஓடி வந்தேன்..." என்றான் கண்கள் பளிச்சிட.

பிரஜனின் கேள்வியில் பிரணவ்வின் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது.

பிரஜன் முன்னரே பிரணவ்வை சந்தித்ததாகக் கூறவும் பிரதாப்பைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள் அனுபல்லவி.

பிரணவ் குழந்தைக்கு பதிலளிக்காது அமைதியாக இருக்க, "ஹேய்... யாரைப் பார்த்து நீ அப்பான்னு சொல்ற? அதோ நிக்கிறான் உன் அப்பா..." என பிரதாப்பைக் கை காட்டி அர்ச்சனா கடுமையாகக் கூறவும் குழந்தை பயந்து பிரணவ்வின் பின்னால் ஒளிந்து கொண்டது.

அர்ச்சனா குழந்தையைக் கடிந்து கொள்ளவும் பிரணவ் அவளை விழிகளாலேயே சுட்டெரிக்க, கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் அர்ச்சனா.

இவ்வளவு நேரமும் உடல் நடுங்க நின்று கொண்டிருந்த அனுபல்லவி தன் முன்னே தன் மகனை அர்ச்சனா திட்டவும் ஆவேசமானவள் அர்ச்சனாவை முறைத்து விட்டு பிரஜனை தன்னை நோக்கி இழுத்தாள் கோபமாக.

பிரஜனோ பிரணவ்வை இறுக்கிக் கட்டிக்கொள்ள, "பிரஜு... இப்போ அம்மா கிட்ட வரப் போறியா இல்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி பிரஜனை மீண்டும் இழுத்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் கரத்தை பற்றிய பிரணவ் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, "அப்பா உங்க அம்மா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு... அது வரைக்கும் அங்கிள் கூட போய் வெளிய விளையாடுறியா?" எனப் பிரஜனிடம் குனிந்து புன்னகையுடன் கேட்கவும், "ஓக்கே ப்பா..." என்றான் பிரஜன் புன்னகையுடன்.

பிரணவ் அனுபல்லவியின் கார் ட்ரைவரைத் திரும்பிப் பார்க்கவும் அவர் பிரஜனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அனுபல்லவி பிரணவ் பிடித்திருந்த தன் கரத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கரத்தை விட்ட பிரணவ், "இப்போ சொல்லு... ஏன் இப்படி எல்லாம் பண்ணுற?" எனக் கேட்டான் அழுத்தமாக.

அனுபல்லவியோ எதுவும் கூறாது தலை குனிந்து நின்றிருக்க, "உன்ன தான் கேட்குறேன்... வாயைத் திறந்து பதில் சொல்லு பல்லவி..." என அவளின் தோளைப் பற்றி உலுக்கி ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.

அப்போதும் அனுபல்லவி அமைதியாக இருக்க, "பிரணவ்... என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ புருஷன் முன்னாடியே இப்படி நடந்துக்குற..." எனக் கடிந்து கொண்டார் மூர்த்தி.

"யாருக்கு யாரு புருஷன்? இதோ இவரா?" எனப் பிரதாப்பைக் காட்டிக் கேட்ட பிரணவ், "நீ தான் இவ புருஷனா? சொல்லு? நீ தான் பிரஜனோட அப்பாவா?" எனக் கேட்டான் பிரதாப்பிடம் கடுமையாக.

பிரதாப் அமைதியாக இருக்க, "பிரணவ்... ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற? அதுவும் அர்ச்சனா முன்னாடியே... அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட அவன் முன்னாடியே இப்படி நடந்துக்கலாமா?" எனக் கேட்டார் லக்ஷ்மியும் கோபமாக.

அனுபல்லவியின் அருகில் சென்ற பிரணவ், "யாரு அடுத்தவன் பொண்டாட்டி? நான் என் பொண்டாட்டி கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கேன்... நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி கிட்ட..." என ஆவேசமாகக் கூறியவன் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய தாலியைத் தூக்கிக் காட்டவும் அனுபல்லவி, பிரதாப் தவிர அனைவருமே அதிர்ந்தனர்.

அர்ச்சனா, "பி... பிரணவ்... பொய் சொல்லாதீங்க... நானும் நீங்களும் தான் காதலிச்சோம்... நமக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்க போகுது... பிரதாப் தான் அனு புருஷன்..." என்கவும், "ஏய்..." எனக் கத்தி விரல் நீட்டி எச்சரித்த பிரணவ், "எனக்கு பழசு மறந்ததைப் பயன்படுத்தி நீ இதுவரை போட்ட நாடகம் எல்லாம் போதும்... உன்ன நான் அப்புறம் கவனிச்சுக்குறேன்... இப்போ நான் என் பொண்டாட்டி கிட்ட கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கு..." என்றான் அழுத்தமாக.

பிரணவ் கூறிய செய்தியில் லக்ஷ்மியும் மூர்த்தியும் அதிர்ந்து அர்ச்சனாவை நோக்கினர்.

'இவனுக்கு எப்போ பழசு ஞாபகம் வந்தது?' என அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்க, "பாஸ்... உங்களுக்கும் அனுவுக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு?" எனக் கேட்டான் இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த ஆகாஷ்.

பிரணவ் அனுபல்லவியை அழுத்தமாக நோக்க, அனுபல்லவியும் கலங்கிய கண்களுடன் அவனைத் தான் நோக்கிக் கொண்டிருந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top