கண்ணீர் - அத்தியாயம் 12

Advertisement

Nuha Maryam

Active Member
அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.

இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.

ஆனால் எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை என அனுபல்லவி நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு எதிராக தீட்டிய சதித் திட்டங்கள் அனைத்தையும் பிரணவ் அழகாக முறியடித்ததை அவள் அறியாமல் போனாள்.

************************************

விடுமுறை முடிந்து மறுநாளே ஆஃபீஸ் வந்த அனுபல்லவியை பிரணவ் எதுவுமே கேட்கவில்லை.

'என்ன இவர் எதுவுமே நம்மள கேட்கல? இப்படி எல்லாம் இருக்க மாட்டாரே... சும்மாவே எறிஞ்சி விழுவார்... இதுல ப்ராஜெக்ட் டைம்ல சடன்னா லீவ் வேற போட்டு இருக்கேன்... ஒருவேளை புலி பதுங்குறது பாயுறதுக்கோ?' என யோசிக்க, 'அவர் என்ன கேட்கணும்னு நீ எதிர்ப்பார்க்குற?' என்ற மனசாட்சியின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்ட அனுபல்லவி, 'அதானே... நான் ஒருத்தி லூசு மாதிரி...' எனத் தன்னையே கடிந்து கொண்டாள்.

பிரணவ், "மிஸ் பல்லவி... பல்லவி... பல்லவி உங்களைத் தான்..." என்ற கத்தலில் தன்னிலை அடைந்த அனுபல்லவி, "ஆஹ் சார்... ஏதாவது சொன்னீங்களா?" எனக் கேட்டாள் அவசரமாக.

"என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்... காதுல விழலயா?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "சாரி சார்... வேற ஏதோ யோசனை..." என்றாள் தயக்கமாக.

பிரணவ், "எப்பப்பாரு இதே வேலையா போச்சு உங்களுக்கு... எல்லாம் பண்ணிட்டு அதுக்கப்புறம் சாரி கேட்பீங்க... ப்ராஜெக்ட் எந்த அளவுல போய்ட்டு இருக்கு? டெட்லைனுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு..." என்க, "மேக்சிமம் முடிச்சிட்டோம் சார்... ஃபைல்ஸ் எல்லாம் ஈவ்னிங் உள்ள உங்க கிட்ட சப்மிட் பண்றேன் சார்..." என அனுபல்லவி கூற, "குட்... இதே ஸ்பிரிட்டோட வர்க் பண்ணுங்க... யூ மே லீவ் நவ்..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி வெளியேறினாள்.

இங்கு பிரதாப்போ பெங்களூர் முழுவதும் அனுபல்லவியைப் பற்றி விசாரிக்க, எங்கு கேட்டும் அவனுக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

சலித்துப் போய் வீட்டில் அமர்ந்து இருக்கும் போது வாசல் அழைப்பு மணி ஒலி எழுப்பவும் பிரதாப் சென்று கதவைத் திறக்க, அங்கு அர்ச்சனா கோபமாக நின்றிருந்தாள்.

பிரதாப்பைக் கேள்வியாக நோக்கிய அர்ச்சனா, "கார்த்திக் எங்க? நீங்க யாரு?" என வீட்டினுள் நுழைந்தவாறு கேட்க, 'என்ன இவ பாட்டுக்கு உள்ள வரா... ஒருவேளை கார்த்திக்கோட ஆளா இருப்பாளோ... ஆனா அவன் அப்படி என் கிட்ட எதுவும் சொல்லலயே...' என பிரதாப் யோசிக்கும் போதே, "உங்களைத் தான் கேட்குறேன் மிஸ்டர்... கார்த்திக் எங்க?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

பிரதாப், "குளிச்சிட்டு இருக்கான்... வருவான் இப்போ... வெய்ட் பண்ணுங்க..." என்க, சமையலறைக்குச் சென்று குளிரூட்டியைத் திறந்து குளிர் நீர் போத்தலை எடுத்து வந்து ஹாலில் அமர்ந்தாள் அர்ச்சனா.

சற்று நேரத்திலேயே குளித்து விட்டு வந்த கார்த்திக், "ஹேய் அர்ச்சு... எப்போ வந்த?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு வர, "ஹ்ம்ம் இப்போ தான் கார்த்திக்... அது யாரு? உன் ஃப்ரெண்டா?" என ஒரு ஓரமாக நின்று இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி இருந்த பிரதாப்பைக் காட்டிக் கேட்டாள் அர்ச்சனா.

கார்த்திக், "ஆமா அர்ச்சு... இவன் பிரதாப்... பிரதாப்... இது அர்ச்சனா... என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... நாங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா ஒரே ஆசிரமத்துல தான் வளர்ந்தோம்..." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்க, பிரதாப்பிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.

அர்ச்சனா, "கார்த்திக்... நீ ஏதாவது யோசிச்சியா? வர வர அந்த அனு தொல்லை தாங்கல... இந்த பிரணவ் வேற எப்பப்பாரு பல்லவி பல்லவின்னு அவளைத் தனியா கூப்பிட்டு பேசுறான்... எனக்கு பிரணவ் வேணும் கார்த்திக்... எதாவது ஐடியா சொல்லு..." எனக் கோபமாகக் கூற, அவளின் கூற்றில் முகம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழிக்குத் தெரியாமல் மறைத்தபடி, "நீ இந்த விஷயத்துல சீரியஸா தான் இருக்கியா அர்ச்சு? எதுக்கும் கொஞ்சம் இன்னொரு தடவை திங்க் பண்ணு..." எனக் கெஞ்சினான்.

பதிலுக்கு அர்ச்சனா ஏதோ கோபமாகக் கூற வர, இவ்வளவு நேரமும் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்த பிரதாப் அர்ச்சனா அனு என்று கூறியதும் நெற்றி சுருக்கியவன், "அர்ச்சனா... நீங்க இப்போ என்ன பெயர் சொன்னீங்க... ஒரு பொண்ணு பெயர் சொன்னீங்கல்ல..." எனக் கேட்க, அவனைப் புரியாமல் நோக்கிய அர்ச்சனா, "ஹ்ம்ம்... அனு..." என்றாள்.

பிரதாப், "ஃபுல் நேம் என்ன அந்தப் பொண்ணோட?" என்க, "அனுபல்லவி" என அர்ச்சனா கூறவும் பிரதாப்பின் முகம் காட்டிய உணர்வில் அர்ச்சனாவிற்கே 'திக்' என்றானது.

"அனு தான் உங்க காதலுக்கு தடையா இருக்காளா? அவளால இனிமே உங்களுக்கு எந்தத் தொல்லையும் இருக்காது... அதுக்கு நான் கேரென்ட்டி..." என பிரதாப் விஷமப் புன்னகையுடன் கூற, "டேய் பிரதாப்? என்னடா சொல்ற? அனுவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டான் கார்த்திக் புரியாமல்.

அர்ச்சனாவும் அதே கேள்வியைத் தாங்கி பிரதாப்பின் முகம் நோக்க, "அனுவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு அவசியம் இல்ல... உங்களுக்கு என் ஹெல்ப் வேணும் இப்போ... அவ்வளவு தான்..." என்றான் பிரதாப்.

விஷமப் புன்னகையுடன் பிரதாப் முன் கரத்தை நீட்டிய அர்ச்சனா, "என் வழில இருந்து அனுவைத் தூக்கிட்டா போதும்... அவ உங்களுக்கு யாரா இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்ல..." என்க, பதிலுக்கு தன் கரம் நீட்டிய பிரதாப், "என் கிட்ட விடுங்க..." என்றான் அதே விஷமப் புன்னகையுடன்.

************************************

அன்று அனுபல்லவிக்கு வேலை முடிய சற்று தாமதம் ஆனதால் சாருமதி முன்னதாகவே வீட்டிற்கு சென்றிருக்க, ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவியை திடீரென வழிமறித்து நின்றான் பிரதாப்.

பிரதாப்பைக் கண்டதும் அனுபல்லவி அதிர்ச்சியில் உறைய, "என்ன அனு? மாமனைக் கண்டது உனக்கு சந்தோஷமா இல்லையா?" என விஷமமாகக் கேட்க, "பிர...பிரதாப்... நீ... நீ எப்படி இங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி பயத்துடன்.

அவளின் தாடையை அழுத்திப் பிடித்த பிரதாப், "பெங்களூர்ல வந்து ஒழிஞ்சிக்கிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? நீ உயிரோடா இருந்தாலும் செத்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்ல... ஆனா எங்களுக்கு சேர வேண்டியதைக் கொடுத்துட்டு எங்க வேணாலும் போய்த் தொலை..." எனக் கோபமாகக் கூறியவன் தன் பிடியை இன்னும் அதிகரிக்க, வலியில் கண்கள் கலங்கிய அனுபல்லவி பிரதாப்பின் கரத்தை தட்டி விட முயன்றாள்.

ஆனால் முடியாமல் போக, "என்னைக்... கொன்னே போட்....டாலும் நீங்க நினைச்சது... நடக்க விட மாட்டேன்..." என்றாள் அனுபல்லவி கஷ்டப்பட்டு.

அனுபல்லவியின் தாடையிலிருந்து தன் கரத்தை எடுத்த பிரதாப் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் சேர்த்து அவள் கன்னத்தில் ஓங்கி அறையவும் கீழே விழுந்தவளின் உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

அவளின் முடியை ஆவேசமாகப் பற்றிய பிரதாப், "இப்பவே நீ என் கூட ஊருக்கு வராய்... அடுத்த முகூர்த்தத்துலயே உனக்கும் எனக்கும் கல்யாணம்..." என்க, அப்போது தான் ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த பிரணவ் அனுபல்லவியிடம் ஒருவன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டு, "ஏய்... யாரு நீ? பல்லவி..." என்றவாறு அவசரமாக அவர்கள் அருகில் சென்றான்.

அனுபல்லவி, "பிரணவ் சார்..." எனக் கண்கள் கலங்க அழைக்க, அவளின் கண்ணீர் பிரணவ்வை ஏதோ செய்தது.

அனுபல்லவியின் முடியை விட்ட பிரதாப், "ஓஹ்... நீ தான் அந்த பிரணவ்வா?" எனக் கேட்டான் இளக்காரமாக.

பிரதாப்பின் காலரைக் கோபமாகப் பிடித்த பிரணவ், "யாரு டா நீ? எதுக்கு எங்க ஆஃபீஸ் முன்னாடியே எங்க ஸ்டாஃப் கிட்ட பிரச்சினை பண்ற?" என்க, "வெறும் ஸ்டாஃப் மட்டும் தானா?" என அனுபல்லவியை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தபடி பிரதாப் கேட்கவும் அனுபல்லவிக்கு அவமானமாக இருக்க, பிரதாப்பின் பேச்சில் எரிச்சலடைந்த பிரணவ், "நீ யாரா வேணாலும் இரு... என் இடத்துக்கு வந்து எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணன்னா சும்மா விட மாட்டேன்..." என்றவன் பிரதாப்பைத் தள்ளி விட்டு அனுபல்லவியிடம் சென்றான்.

"பல்லவி... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்ட பிரணவ் அவளுக்கு எழுந்துகொள்ள கை கொடுக்க, பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்த அனுபல்லவி, "ஐம் ஓக்கே சார்... தேங்க்ஸ்..." என்கவும் தான் அவளின் உதட்டில் இருந்து வடிந்த இரத்தத்தைக் கண்டு கொண்டான் பிரணவ்.

பிரணவ், "பல்லவி பிளட்..." எனத் தன் கைக்குட்டையை எடுத்து அவளின் காயத்தைத் துடைக்கும் போது, "என்னடா பல்லவி பல்லவின்னு ரொம்பத் தான் கொஞ்சுற... அவளைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்?" எனக் கோபமாகக் கேட்ட பிரதாப் அனுபல்லவியிடம் இருந்து பிரணவ்வைப் பிரித்து தள்ளி விடவும் சமநிலை இழந்த பிரணவ் அருகில் இருந்த கம்பத்தில் பலமாகத் தலை மோதி கீழே விழுந்தான்.

"பிரணவ்..." என அனுபல்லவி அதிர்ந்து கத்தவும், "என்ன டி பிரணவ்? ஒழுங்கு மரியாதையா என் கூட வா..." என்ற பிரதாப் அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுக்க, அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராடினாள் அனுபல்லவி.

தூரத்தில் எங்கோ போலீஸ் ஜீப்பின் சத்தம் கேட்கவும் பயந்த பிரதாப், "இன்னைக்கு என் கிட்ட இருந்து தப்பிச்சிட்ட... சீக்கிரம் உன்னைத் தேடி திரும்ப வருவேன் டி..." என்றவன் அவசரமாக தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றான்.

பிரதாப் சென்றதும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி, "சார்... என்னாச்சு சார்? நீங்க நல்லா இருக்கீங்களா? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..." எனப் பதற, பிரணவ்விற்கோ அன்று விபத்தின் போது தன்னைக் காப்பாற்றிய பெண்ணின் குரல் கேட்பது போல் இருந்தது.

மெதுவாகத் தலையைத் தூக்கி அனுபல்லவியின் முகம் காண வழமையாக அவனின் மனக் கண்ணில் தெரியும் அந்த மங்கலான முகத்திற்கு பதிலாக இப்போது அனுபல்லவியின் முகம் தெளிவாகத் தெரிந்தது.

தன்னை மறந்து அவளின் முகத்தைத் தொட கரம் நீட்டிய பிரணவ், "சார்..." என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் படுத்திக்கொண்டான்.

பிரணவ், "ஐம் ஓக்கே பல்லவி..." என்றவன் அனுபல்லவியின் உதவியை மறுத்து விட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, "நானே உங்களை ட்ராப் பண்றேன்..." என்று விட்டு தன் வண்டியை நோக்கி சென்றான்.

அனுபல்லவியும் தலை குனிந்தபடியே பிரணவ்வின் பின்னே சென்று வண்டியில் ஏறியவள் கவலையாக அமர்ந்து இருக்க, "யார் அது பல்லவி?" எனத் தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டியபடி பிரணவ் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "என் அத்தை பையன் சார்..." என்றவள் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

அதிலே அவளின் பயத்தை உணர்ந்து, "எதுக்கு அப்போ உன்ன மிரட்டிட்டு இருந்தான்?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

இமை தாண்டி வடிந்த கண்ணீரை பிரணவ்விற்கு தெரியாமல் மறைக்க கார் விண்டோ வழியே வெளியே பார்வையைப் பதித்த அனுபல்லவி, "அதைப் பத்தி மட்டும் எதுவும் கேட்காதீங்க சார்... ப்ளீஸ்..." என்று மட்டும் கூறினாள்.

அதன் பின் பிரணவ்வும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு தொல்லை கொடுக்காமல் அமைதியாக வர, அனுபல்லவிக்கு பிரணவ் ஏதும் கேட்காதது நிம்மதியாக இருந்தது.

அனுபல்லவி தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வந்ததும் பிரணவ் காரை நிறுத்த, அதைக் கூட உணர முடியாத நிலையில் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்த அனுபல்லவியின் கரம் பற்றி, "பல்லவி..." எனப் பிரணவ் அழைக்கவும் திடுக்கிட்டவள் அதன் பின்னே சுற்றம் உணர்ந்தாள்.

எதுவும் பேசாது காரை விட்டு இறங்கிய அனுபல்லவி பிரணவ்விடம் எதுவும் கூறாது கால் போன போக்கில் வீட்டினுள் நுழைய, அவள் வீட்டினுள் நுழைந்து கதவை மூடும் வரை அவள் சென்ற திசையையே வெறித்திருந்தான் பிரணவ்.

பின் தன் வீட்டிற்கு சென்றவன் அந்த இளமஞ்சள் நிற துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

"பல்லவி... நீ தான் எனக்கு மறுஜென்மம் அளிச்சியா? ஏன் எனக்கு ஒன்னுன்னதும் நீ அவ்வளவு துடிச்ச?" எனத் தன்னையே கேட்டவனின் இதழ்கள் அழகாய் விரிந்தன.

அனுபல்லவியின் துப்பட்டாவை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனுக்கு ஏதோ அவளையே அணைத்த உணர்வு.

பல நாட்கள் கழித்து மனம் விட்டு புன்னகைத்தான்.

************************************

பிரணவ் ஆஃபீஸில் தன் அறையில் வேலையாக இருக்க, திடீரென, "பாஸ்..." எனக் கத்திக்கொண்டு அவனின் அனுமதி கூட வாங்காது அறையினுள் நுழைந்தான் ஆகாஷ்.

அவனைப் புரியாமல் பார்த்த பிரணவ், "என்னாச்சு ஆகாஷ்?" எனக் கேட்க, ஓடி வந்த களைப்பில் நீண்ட மூச்சுகளாக விட்டு தன்னை சமன் செய்து கொண்ட ஆகாஷ், "பாஸ்... உங்களைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்த அந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன்..." என்க, "பல்லவி..." என்றான் பிரணவ்.

ஆகாஷ் அதிர்ச்சியாக அவனை நோக்க, "அனுபல்லவி தான் என்னை அன்னைக்கு காப்பாத்தினாங்க... இல்லயா?" என பிரணவ் கேட்க, "பாஸ்... செம்ம பாஸ்... எப்படி கண்டு பிடிச்சீங்க?" என ஆகாஷ் கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது மெல்லியதாக புன்னகைத்த பிரணவ், "இதை சொல்லத் தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்தீங்களா ஆகாஷ்?" எனக் கேட்டான்.

தலையில் அடித்துக்கொண்ட ஆகாஷ், "பாருங்க பாஸ்... முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்..." என்கவும் பிரணவ் அவனைக் கேள்வியாக நோக்க, "பாஸ்... அன்னைக்கு உங்க காரை ஆக்சிடன்ட் பண்ணின லாரி ட்ரைவர் ஆக்சிடன்ட் பண்ணிட்டு பயந்து தப்பி ஓடிட்டான்னு போலீஸ் சொன்னாங்கல்ல... அவன் தெரியாம ஒன்னும் ஆக்சிடன்ட் பண்ணல... அவனுக்கு பணம் கொடுத்து உங்களை ஆக்சிடன்ட் பண்ண வெச்சிருக்காங்க..." என்கவும் அதிர்ச்சியில் எழுந்து நின்றான் பிரணவ்.

ஆகாஷ், "ஆமா பாஸ்... நேத்து தான் அந்த லாரி ட்ரைவர் ஒரு குடோன்ல மறைஞ்சி இருக்கும் போது போலீஸ் அவனை பிடிச்சு இருக்காங்க... அந்த குடோன் உங்க மாமா பெயர்ல இருக்கு..." என்கவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட பிரணவ்விற்கு தலைவலி வந்து இருக்கையில் பட்டென அமர்ந்தான்.

"பாஸ்... என்னாச்சு?" என ஆகாஷ் பதட்டமாகக் கேட்கவும், "எனக்கு ஒன்னும் இல்ல ஆகாஷ்... மாமா எதுக்கு என்னைக் கொல்ல ட்ரை பண்ணார்? இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா?" எனக் கேட்டான் கரங்களால் தலையை ஏந்தியபடி.

"என்ன காரணம்னு சரியாத் தெரியல பாஸ்... அந்த லாரி ட்ரைவர் போலீஸ் கிட்ட மாட்டினதும் போலீஸ் அவனை விசாரிக்கவும் தான் உங்க மாமா பெயரை சொல்லி இருக்கான்... பட் நேத்து நைட் அவன் ஜெய்ல்ல தற்கொலை பண்ணிக்கிட்டான்... அதனால அதுக்கு மேல எந்த விஷயமும் தெரியல... உங்க மாமாவுக்கு எதிரான வேற எந்த ஆதாரமும் அவங்களுக்கு கிடைக்கல பாஸ்... அப்புறம் மேடமுக்கு இன்னுமே இதைப் பத்தி தெரியாது..." என ஆகாஷ் கூறவும் யோசனை வயப்பட்டான் பிரணவ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top