கண்ணீர் - அத்தியாயம் 11

#1
விடிந்தும் விடியாததுமாய் இருக்கும் அதிகாலைப் பொழுதில் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கையில் பையுடன் வந்து நின்ற நண்பனைக் கேள்வியாய் நோக்கினான் கார்த்திக்.

கார்த்திக், "டேய் பிரதாப்? என்னடா இது? நீ வரதா சொல்லவே இல்ல?" எனக் கேட்க, "ப்ச்... சொல்லிட்டு வரலன்னா வீட்டுக்குள்ள எடுக்க மாட்டியா? ச்சீ தள்ளு..." எனக் கடுப்புடன் கூறிய பிரதாப் வாசலில் நின்ற கார்த்திக்கைத் தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.

'என்ன நடக்குது இங்க? இது என் வீடா? இல்ல அவன் வீடா?' என மனதினுள் தன்னையே கேட்டுக்கொண்ட கார்த்திக் பிரதாப்பின், "டேய் நாயே..." என்ற கத்தலில் தோளைக் குலுக்கிக் கொண்டு அவசரமாக உள்ளே ஓடினான்.

சமையலறையில் காஃபி தயாரித்துக் கொண்டிருந்த பிரதாப்பிடம் சென்ற கார்த்திக், "என்ன விஷயமா பெங்களூர் வந்து இருக்கடா?" எனக் கேட்கவும், "முக்கியமான ஒருத்தரை தேடி வந்திருக்கேன்... என் லைஃப்ல ரொம்....ப முக்கியமான ஒருத்தர்..." என ரொம்ப என்பதில் அழுத்தம் கொடுத்து கூறிய பிரதாப்பின் கண்களில் இருந்த வெறியை நல்ல நேரம் கார்த்திக் கவனிக்கவில்லை.

கார்த்திக், "ஓஹ்... ஃபிகரா மச்சி? நீ நடத்து ராசா... பட் ஜாக்கிரதை பிரதாப்... சென்னை போல இல்லடா பெங்களூர்... அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..." என்கவும் பிரதாப் காஃபியை ஒரு மிடர் பருகியபடி சரி எனத் தலையசைத்தான்.

"சரிடா... அப்போ நான் ஆஃபீஸ் கிளம்ப ரெடி ஆகுறேன்... ஏதாவது தேவைன்னா கால் பண்ணு... நான் வர ஈவ்னிங் ஆகும்..." என்று விட்டு கார்த்திக் கிளம்பி விட,

'அனு... வந்துட்டேன் டி... இந்த தடவை உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது...' என்று விஷமமாக புன்னகைத்தான் பிரதாப்.

************************************

"அனு... என்ன பண்ணுற? ஆஃபீஸ் கிளம்பலயா?" என்ற சாருமதியின் கேள்விக்கு கட்டிலில் குப்புப்படுத்தவாறே மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

அவளின் அருகில் சென்று ஆறுதலாக தோள் மீது கை வைத்த சாருமதி, "அனு... எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்க போற? நீ பெங்களூர் வந்து மூணு வருஷம் ஆச்சு... ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல நீ இப்படி தான் இடிஞ்சி போய் சோகமா இருக்க... அப்படி என்ன தான் நடந்துச்சின்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற... பெஸ்ட் ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொல்ற... ஆனா எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியல..." எனக் கோபமும் வருத்தமும் கலந்து உரைக்கவும் எழுந்த அனுபல்லவி சாருமதியைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டவள், "சாரு... நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும்..." என்றாள் கண்கள் கலங்க.

"ஹ்ம்ம் ஹ்ம்ம்... தெரியும் தெரியும்... அதனால தான் உன்ன எதுவும் கேட்காம இருக்கேன்..." என்றாள் சாருமதி போலிக் கோபத்துடன்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் டி... சரியான நேரம் வரும் போது நான் உன் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்... அதுவரைக்கும் ப்ளீஸ் இதை பத்தி என் கிட்ட எதுவும் கேட்காதே சாரு..." என்றவள் சாருமதி சரி எனத் தலையசைக்கவும், "சாரு... என்னை பத்தி எல்லா உண்மையையும் தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ என்னை வெறுத்துட மாட்டேல்ல..." எனக் கண்ணீருடன் கேட்க, "லூசு அனு... நான் எப்படி உன்ன வெறுப்பேன்... உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ என்ன பண்ணினாலும் அதுக்கு ஒரு வேலிட் ரீசன் இருக்கும்னு நான் நம்புறேன்..." எனச் சாருமதி கூறவும் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.

சற்று நேரத்தில் அனுபல்லவி அழுது அழுதே உறங்கிப் போக, சாருமதி மாத்திரம் ஆஃபீஸ் கிளம்பினாள்.

நேற்றில் இருந்தே அனுபல்லவியைக் காணாதது பிரணவ்விற்கு ஏதோ போல் இருந்தது.

சீசிடீவி கேமரா வழியாக தன் கணினியில் அடிக்கடி அனுபல்லவி வழமையாக அமரும் இடத்தையே பார்த்தபடி இருந்தான்.

'ஏன் பல்லவி இன்னைக்கு வரல?' என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவனது மெயிலுக்கு அனுபல்லவியின் விடுமுறைக் கடிதம் வந்தது.

ஏதோ சுகவீனம் என்று கூறி இன்று மாத்திரம் விடுமுறைக் கேட்டிருக்க, அதனை ஆமோதித்து பதில் அனுப்பிய பிரணவ்விற்கு தன்னால் தானோ அவள் சுகவீனமுற்றாள் எனக் குற்றவுணர்வாக இருந்தது.

அனுபல்லவியைப் பற்றி பிரணவ் யோசிக்கும் போதே அவனைக் காப்பாற்றிய அந்த முகம் அறியாப் பெண்ணின் நினைவும் சேர்ந்து வந்து விட, தலைவலி வந்தது தான் மிச்சம்.

சரியாக ஆகாஷ் அங்கு வரவும் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவனைக் கண்டு பதறி, "என்னாச்சு பாஸ்? திரும்ப தலைவலியா? ஹாஸ்பிடல் போகலாமா?" எனக் கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "எனக்கு ஒன்னுமில்ல ஆகாஷ்... டோன்ட் வொரி... எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் தெரியணும் ஆகாஷ்..." என்க, "சொல்லுங்க பாஸ்... எதைப் பத்தி இன்ஃபார்மேஷன் வேணும் உங்களுக்கு?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சில நொடி அமைதி காத்த பிரணவ், "அன்னைக்கு எனக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ ஒரு பொண்ணு தான் என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துச்சு... அந்தப் பொண்ணைப் பத்தி தெரியணும்..." என்க, 'பொண்ணா? இவர் எதுக்கு அந்தப் பொண்ணைப் பத்தி கேட்குறார்?' என யோசித்த ஆகாஷ் அதனை மறைக்காமல் பிரணவ்விடமே கேட்டு விட்டான்.

ஆகாஷ், "எதுக்கு பாஸ் அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்கவும், "ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்ல தான்... எனக்கு மறு வாழ்வு கொடுத்து இருக்கா அந்தப் பொண்ணு... அவளுக்கு ஏதாவது என்னால உதவி பண்ண முடிஞ்சா பண்ண தான்..." என்றான் பிரணவ்.

"ஓஹ்... உதவி... ஹ்ம்ம்ம்ம்..." எனக் கேலி இழையோடிய குரலில் ஆகாஷ் இழுக்கவும், "என்ன?" என பிரணவ் பார்த்த அழுத்தப் பார்வையில், "ஓக்கே பாஸ்... ஓக்கே பாஸ்... நான் உடனே விசாரிச்சு சொல்றேன்..." என்று விட்டு கிளம்பப் பார்த்த ஆகாஷ் மீண்டும் நின்று, "ஆமா... எப்படி பாஸ் உங்களைக் காப்பாத்தினது ஒரு பொண்ணு தான்னு கன்ஃபார்மா சொல்றீங்க? டாக்டர்ஸ் கூட உங்களை ஹாஸ்பிடல் கொண்டு வரப்போ நீங்க சுயநினைவு இல்லாம இருந்ததா சொன்னாங்களே..." என ஆர்வம் மிகுதியில் கேட்டு விட்டு நாக்கைக் கடித்தான் பிரணவ் என்ன சொல்லுவானோ என்ற பயத்தில்.

நெஞ்சுக்கு குறுக்காக கரங்களைக் கட்டிக்கொண்டு ஆகாஷை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "ஆகாஷ்... நீங்க இப்போ நான் சொன்ன வேலையை செய்ய போறீங்களா? இல்ல இங்க நின்னு என்னை என்கொய்ரி பண்ண போறீங்களா?" எனக் கேட்டான்.

"இதோ போய்ட்டேன் பாஸ்..." என்று விட்டு தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடிய ஆகாஷ் சாருமதியின் மேல் மோதி நிற்க, "இடியட்... உனக்கு இதே வேலையா போச்சா? எப்பப்பாரு என்னையே வந்து இடிச்சிட்டு இருக்க... உனக்கு வேற ஆளே கிடைக்கலயா? சரியா இரிட்டேட் பண்றான்..." எனக் கோபத்தில் கத்தியபடி கீழே விழுந்த தன் கைப்பையை எடுக்கக் குனிய, அவளுக்கு முன்பே குனிந்து அந்தக் கைப்பையை எடுத்த ஆகாஷ் சாருமதியின் கரத்தில் கைப்பையைத் திணித்து விட்டு, "ஏய் குட்டச்சி... என்ன வாய் ரொம்ப நீளுது? எனக்கு வேற வேலை இல்லாம தான் பாரு நான் வந்து உன்னை இடிக்கிறேன்... ஏதோ ரெண்டு தடவை தெரியாம உன் மேல வந்து மோதிட்டேன்னு ரொம்ப தான் பேசுற... நாம மேடமுக்கு இரிட்டேட்டிங்காமே... ஏதோ லவ் பண்ற பொண்ணாச்சேன்னு அமைதியா போறேன்... வந்துட்டா மனுஷனுக்கு கடுப்பைக் கிளப்பிக்கிட்டு..." என சாருமதியை விட கோபமாகக் கத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

முதன் முறையான ஆகாஷின் கோபத்தில் ஒரு நிமிடம் கண் கலங்கி நின்ற சாருமதி, "அவன் கோவமா பேசினா எனக்கென்ன வந்தது? நான் எதுக்கு ஃபீல் பண்ணணும்? நான் என்ன அந்த பனை மரத்த லவ் பண்றேனா? இல்லயே... அவன் எப்படி இருந்தா எனக்கென்ன? காலையிலயே மூட ஸ்பாய்ல் பண்ணிட்டான்... திரும்ப வந்தா இருக்கு அவனுக்கு..." எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு தன் பணியினைப் பார்க்கக் கிளம்பினாள்.

************************************

"அர்ச்சு... என்னாச்சு உனக்கு? எப்படி இவ்வளவு பெரிய காயம்? அவ்வளவு கேர்லெஸ்ஸா இருப்பியா நீ? ஆஃபீஸ் போனப்போ மீனா தான் உனக்கு நடந்ததை சொன்னா... உடனே கிளம்பி உன்னப் பார்க்க வந்துட்டேன்..." என நல்ல நண்பனாக கார்த்திக் கடிந்துகொள்ள, "நிறுத்து கார்த்திக்... எனக்கு அட்வைஸ் பண்ண தான் நீ இப்போ இங்க வந்தியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன்... வந்துட்டான் கேள்வி கேட்டுட்டு..." என்றாள் அர்ச்சனா சலிப்பாக.

அர்ச்சனா, கார்த்திக் இருவருக்குமே பெற்றோர் குடும்பம் என யாரும் இல்லை. ஒரே ஆசிரமத்திலேயே இருவரும் வளர்ந்தனர். சிறு வயதில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். தொடர்ந்து கல்லூரி, ஆஃபீஸ் என அந் நட்பு தொடர, இன்று திடீரென அர்ச்சனா தன்னை எடுத்தெறிந்து பேசவும் மனம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழியிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அர்ச்சனா, "காஃபி போடும் போது கெட்டில் சூடா இருக்குறதை கவனிக்காம எடுத்து கால்ல ஊத்திக்கிட்டேன்... அவ்வளவு தான்... சரி அதை விடு... கார்த்திக்... அந்த அனுவுக்கும் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் இடைல என்ன இருக்கு?" என நேராக விஷயத்திற்கு வர, "அவளைப் புரியாமல் பார்த்த கார்த்திக், "நீ என்ன கேட்குறன்னு புரியல அர்ச்சு... என்ன இருக்குன்னா என்ன அர்த்தம்? நீ ஏன் அதைப் பத்தி கேட்குற?" எனக் கேட்டான்.

"ப்ச்... என்ன நீ வந்ததுல இருந்து கேள்வியே கேட்டுட்டு இருக்க கார்த்திக்? நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு டைரெக்டா பதில் சொல்ல முடியாதா உன்னால? என்ன இருக்குன்னா என்ன இருக்கு தான்... நான் பிரணவ்வை லவ் பண்றேன்... அவர் அனு கூட க்ளோஸா இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல..." என அர்ச்சனா கோபமாகக் கூற, கார்த்திக்கின் மனதில் ஏதோ சொல்ல முடியாத வலி.

அது ஏன் என்று கூட அவனுக்குப் புரியவில்லை.

கார்த்திக், "அ...அர்ச்சு... நீ... என்ன சொல்ற? லவ்வா? அதுவும் பிரணவ் சார் மேலயா? எப்படி?" எனத் தயக்கமாகக் கேட்க, "ஆமா... லவ் தான்... ஏன் எனக்கு என்ன குறை? அழகு இல்லயா? படிப்பு இல்லயா? எத்தனை பசங்க என் ஒரு கண் அசைவுக்காக என் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சி இருப்பானுங்க... அதுவும் போக அந்த பிரணவ் யூஸ் பண்ற கார், மொபைல் எல்லாம் பார்த்து இருக்கியா நீ? எல்லாமே ஹை க்ளாஸ் பசங்க யூஸ் பண்றது... அவன் சாதாரணமானவன் இல்லன்னு நினைக்கிறேன்... அவன் கூட இருந்தா நான் ஆசைப்படுற லக்ஸரி லைஃப என்னால வாழ முடியும்... பையன் ஹேன்ட்ஸமா வேற இருக்கான்... சின்ன வயசுல இருந்தே யாரோ உடுத்திட்டு தூக்கிப் போட்ட ட்ரெஸ்ஸைப் போட்டு, பிடிச்சதை வாங்கிக்க முடியாத நிலமை கொடுமை கார்த்திக்... இனிமேலும் என்னால இந்த நரகத்துல இருக்க முடியாது... பிரணவ்வை சீக்கிரமா என் பக்கம் விழ வெச்சி காட்டுறேன்... ஆனா இந்த அனு தான் எனக்கு தடையா இருக்கா..." எனக் கண்களில் தீவிரத்துடன் கூறிய அர்ச்சனாவைக் காண கார்த்திக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

வெறும் பணத்திற்காக தன் தோழி இந்த அளவுக்கு இறங்கிப் போகிறாள் என நினைக்கும் போது கார்த்திக்கின் மனம் ஒரு பக்கம் வேதனை அடைய, தன்னால் அவளுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே எனத் தன் மீதும் கழிவிரக்கம் தோன்றியது.

"அர்ச்சு... நீ ஏதோ அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கன்னு தோணுது... நல்லா யோசிச்சு பாரு... நீ ஆசைப்படுறது போல வாழணும்ங்குறதுக்காக லவ் பண்றது சரியா?" என தோழிக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசிய கார்த்திக்கை கை நீட்டி தடுத்த அர்ச்சனா, "உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணு கார்த்திக்... இல்லன்னா கிளம்பி போய்ட்டே இரு... சும்மா சும்மா அட்வைஸ் பண்ணிட்டு வராதே..." என்றாள் கோபமாக.

அப்போது சரியாக பிரதாப்பிடமிருந்து கார்த்திக்கிற்கு அழைப்பு வந்தது.

அர்ச்சனாவை ஏக்கமாகப் பார்த்தபடியே கார்த்திக் அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரதாப், "டேய் எங்கடா இருக்க நீ? ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்னு சொன்ன... இன்னும் காணோம்..." எனக் கோபமாகக் கேட்க, 'ஏதோ நான் இவன் பொண்டாட்டி போல கேள்வி கேட்குறதை பாரு... ஏன் வீட்டுக்கு இன்னும் வரலயாம்... ச்சே... இவன் வேற...' என மனதுக்குள் பிரதாப்பை வறுத்தெடுத்த கார்த்திக், "வரேன் மச்சான்... என் ஃப்ரெண்டுக்கு சின்ன ஆக்சிடன்ட் ஒன்னு... அதான் பார்க்க வந்தேன்... இப்போ கிளம்பிட்டேன்..." என்றான் அர்ச்சனாவை நோட்டம் விட்டபடி.

அவளோ பிரணவ்வை எப்படி தன் காதல் வலையில் சிக்க வைக்கலாம் எனத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, அழைப்பில் இருந்த பிரதாப், "நீ ஒன்னும் வர வேணாம்... எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்..." என்க, 'அதானே... இவன் எப்போ நம்மளை மனுஷனா மதிச்சிருக்கான்?' என எப்போதும் போல மனதில் கவுன்டர் கொடுத்தான் கார்த்திக்.

கார்த்திக், "ஹ்ம்ம்... சொல்லுடா... என்ன பண்ணணும்? மது மாது ஏதாவதுன்னு மட்டும் சொன்ன கொலை பண்ணிடுவேன்..." என மிரட்ட, "ஏ ச்சீ வாயைக் கழுவு... அசிங்கமா பேசிக்கிட்டு... எனக்கு உடனடியா ஒரு பைக் ஆர் கார் ரென்ட்டுக்கு வேணும்..." என்றான் பிரதாப்.

'ஆமா... நான் அசிங்கமா பேசுறேன்... ஐயா பண்றது எல்லாமே புண்ணிய காரியம்...' என மனதில் பிரதாப்பிற்கு கவுன்டர் கொடுத்த கார்த்திக்கிற்கு அப்போது தான் அவன் கேட்டது மூளையில் பதிய, "என்ன? பைக் ஆர் காரா? ரென்ட்டுக்கா? டேய்... நானே மாசம் பதினைந்தாயிரம் சம்பளத்துல வாடகை வீட்டுல நாளைக் கடத்திட்டு இருக்கேன்... எனக்கு ஆஃபீஸ் போறதுக்கே கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு பைக்கை வாங்கி இருக்கேன்... நீ ஈசியா ஏதோ சாக்லேட் வாங்கி கேட்குறதை போல கேட்குற..." எனக் கேட்டான் கோபமாக.

பிரதாப், "ஓஹ்... அதுவும் சரி தான்... சரிடா... அப்போ நாளைல இருந்து நீ பஸ் பிடிச்சு ஆஃபீஸ் போ... உன் பைக்கையே நான் யூஸ் பண்ணிக்குறேன்... நான் பெங்களூர்ல இருந்து போகும் வரை எனக்கு தேவைப்படும்..." என்றவன் கார்த்திக்கின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட, "டேய் பிரதாப்... மச்சான்..." என கார்த்திக் கத்தினது எதுவும் பிரதாப்பின் செவியை எட்டவில்லை.

அர்ச்சனா, "என்ன கார்த்திக்? ஓக்கேயா? அந்த அனுவை என்ன பண்ணலாம்? அவளை பிரணவ்வே கம்பனியை விட்டு துரத்தி விடுறது போல பண்ணணும்..." என ஆத்திரமாகக் கூற, 'இதுங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குற பாவத்துக்கு என்னை வெச்சி செய்றாங்க...' என மானசீகமாகத் தன்னையே நொந்து கொண்டான் கார்த்திக்.

************************************

கணினித் திரையில் பார்வையைப் பதித்திருந்த பிரணவ் தன்னிடம் அனுமதி கூட வாங்காமல், "பாஸ்..." எனப் பதட்டமாக ஓடி வந்த ஆகாஷைக் கேள்வியாக நோக்கியவன் ஆகாஷ் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement