என் இதயமே நீ தானே 15

ShanviSaran

Well-Known Member
#1
கார் கதவை திறந்து வெளியேறியவன் , வராத போனை கையில் வைத்து சிறிது தூரம் நடந்து தன்னை சமன் செய்து கொண்டு காரை எடுத்தான்.

தூத்துகுடிக்கு நேராக செல்வதில் விருப்பமே இல்லை.இந்த உலகையும் , இந்த ஊரின் கட்டுப்பாடுகளையும் மிகவும் வெறுத்தான். தான் விரும்பும் பெண், துன்பத்திலிருக்கிறாள் அவளை உடனே சென்று காண முடியவில்லை, ஆறுதலிளிக்க இயலவில்லை , இவ்வாறு மன சஞ்சலங்களுடன் மாலை ஆறு மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தனர்.

மறுநாள் காலை தன் தம்பி வீட்டுக் காரில் கிளம்பிய சாந்தி கார்த்தியிடம் "நீ இங்க வேலைய முடிச்சுட்டு அங்க மாமாவோட பண்ணை வீட்டுக்கு வந்துரு, சாயந்திரம் கிளம்பிடுவோம்".

"சரிமா , நீங்க கிளம்புங்க நான் வந்துருவேன்"

இல்லாத வேலையை இருப்பதாக காட்டிக் கொண்டு மதியம் ஒரு மணி வரை இழுத்தவன் அதற்கு மேல் பொறுமையின்றி கிளம்பி விட்டான்.

ஊரை அடைந்தவனுக்கு , அவள் வீடு கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமில்லை. தென்னை ஓலை கொட்டகையிட்டு உறவினர்கள் எல்லாரும் அந்த சிறிய தெருவில் உள்ள வீட்டின் முன் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது தெரிந்தது.

காரை அங்கிருந்த மரத்தின் அடியில் நிப்பாட்டி விட்டு இறங்கி நடந்தான். அங்கிருந்த சிலர் அவன் யார் என்றுப் பேசிக் கொண்டார்கள். யாரோ ஓர் பணக்கார வீட்டு இளைஞன் அவர்களை நோக்கி வருகிறான் என்றதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்பொழுது அங்கிருந்த நாற்காலில் அமர்ந்திருந்த பார்வதியின் தந்தை எழுந்து வந்த ,

"வாப்பா ,மயினி சொன்னாக நீ வருவனு " என்று சொல்லி கூட்டத்திற்குள் அழைத்துச் சென்று "நம்ம சாந்தி மயினி மகன் , அவுகள கூட்டிட்டு போக வந்துருக்காப்ல " என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தார்.

அவனை அமர வைத்து விட்டு உள்ளே சென்று சாந்தியிடம் தகவல் அளித்தார். உள்ளே இறந்தவர்க்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வைத்துக் கொண்டு இருந்தனர். அவள் பேசியும் சாப்பிட்டும் இரண்டு நாட்களாகிருந்தன. நேற்று முழுவதும் அவளுக்கு டிரிப்ஸ் போடப்பட்டதால் அவளது வெண்மையான கை சிவந்து வீங்கி இருந்தது. வென் பிளான் போட்ட இடத்தில் பேன் டேஜ் ஒட்டப்பட்டு கசங்கிய பூ போல் இருந்தாள்.

பார்வதியும் செளமினியும் அவள் அருகில் அமர்ந்து இருந்தனர். உள்ளே வந்த பார்வதியின் தந்தை , "மயினி கார்த்தி தம்பி வந்துட்டாப்ல வெளில உட்கார வச்சு இருக்கேன் , நீங்க வாரீகளா "

"மினிமா நீ திவ்யா கிட்டயே இரு நான் அண்ணன்கிட்ட இருக்கேன்" என்று கண்ணசைவில் திவ்யாவைப் பார்த்துக் கொள்ள சொல்லி வெளியேறினார். அங்கு எல்லோரும் அடுத்து என்ன செய்வது என்பது போல் பேசிக் கொண்டு இருந்தனர்.

திவ்யாவின் பெரியப்பா " அப்புறம் பெரியம்மா காரியமெல்லாம் முடிஞ்சது. இந்த வீட்டை நானே எடுத்துக்குறேன், அடுத்த மாசம் தான் மகளுக்கு பதினெட்டு வயசு ஆகும். அப்போ இந்த விட்டுக்கான பணத்தை அவபேர்ல போட்டு வச்சிரலாம்.

ராஜன் வடநாட்டுகார பொண்ண கட்டிட்டுட்டு வந்துட்டான். அந்தப்பொண்ணு குடும்பத்த பம்பாய் ல ( மும்பய் என்று பெயர் மாறினாலும் இன்றும் அங்கு உள்ளவர்களுக்கு அது பம்பாய் தான்) நம்மாளுகள விட்டு விசாரிக்க சொல்லிருக்கேன். ஒரு மாசத்துக்குள்ள விவரம் தெரியுதா பார்ப்போம்."

ஒரு பெரியவர் "சண்முகம் , நீ சொல்றது சரிதான் அது வரை புள்ளைய யார் பார்த்துக்கறது, அப்படி வள்ளிக்கா மருமக குடும்பம் கிடைக்கலன என்ன செய்றது "

இப்படி திவ்யாவை குறித்து அவர்கள் பேசிக் கொண்டது கார்த்திக்கு கோபத்தையும் எரிச்சலையும் தூண்டிக் கொண்டு இருந்தது.

உள்ளே இருந்த திவ்யாவுக்கும் இந்தப் பேச்சுக்கள் கேட்டதும் , மெதுவாக எழ முற்பட்டாள் .அவள் எழ முயற்சிக்கிறாள் என்றதும் பார்வதியும் செளமினியும் அவளை மெதுவாக தாங்கிப் பிடித்து வெளியே அழைத்து வந்தார்கள்.

அந்த பெரியவர் கேட்டதற்கு பதிலளிக்கும் விதமாக "அப்படி யாரும் கிடைக்கலன, எம் பொஞ்சாதி சொன்னது போல , முப்பதாம் நாள் முடியர வரைக்கும் எங்க வீட்ல வச்சுட்டு , பதினெட்டு வயசு ஆனதும் எம்மச்சினன் மகனுக்கு கட்டி வச்சுருவோம்.…."

'டமார் 'என்று பிளாஸ்டிக் நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்கவும் , எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். கார்த்தி தான் அவ்வளவு வேகமாக எழுந்திருந்தான்.

அவனது கோபத்தைக் கண்ட சாந்தி " கார்த்தி , அமைதியா இரு , எனக்கும் கோபம் வர தான் செய்து , ஆனா பொறுமையா தான் பேசணும்"

அவன் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள் " பெரியப்பா " என்று மெல்லிய குரலில் திவ்யா அழைத்தாள். அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்த கார்த்தி அப்படியே தளர்ந்து போய் மறுபடியும் அந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

இரு நாட்களுக்கு முன் அவனது தேவதை இருந்த அழகென்ன , இன்று அவள் இருக்கும் தோற்றம் என்ன , அவனை மயக்கும் அந்தக் கூந்தல் இன்றும் விரித்து விடப்பட்டு இருந்தது. ஆனால் அது அவன் கண்களுக்கு தெரியவில்லை. ஓர் பழைய தாவணியில் கை வீக்கத்தோடு தோழிகளின் துணையோடு வந்து நின்றவளைக் கண்டு காதல் கொண்ட இதயம் வலிப்பது போல் இருந்தது.

"பெரியப்பா... , நான் பிளஸ் டூ ல நல்ல மார்க் வாங்குவேன். அப்போ கவர்மெண்டே என்ன படிக்க வச்சிடும். பாட்டிக்கூட எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும் என்ன படிப்ப மட்டும் விட்டுறக்கூடாதுனு சொல்லிருக்காங்க, நான் நான் … " பேச முடியாமல் சிரமப்பட்டவளுக்கு பார்வதி ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தாள்.

அதை சிரமப்பட்டு குடித்தவள்" நான் இப்போ (சாந்தியைக் காண்பித்து) அத்த வீட்ல ஆச்சியைக் கவனிக்கிற வேலை செய்றேன். அங்க என் வேலை முடிஞ்சதும் , எங்க ஸ்கூல் மதர் கிட்ட சொல்லி ஏதாவது ஆர்பனேஜ்ல சேர்த்துக்குவேன். இங்க யாருக்கும் சிரமம் தரமாட்டேன் பெரியப்பா , எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்"

அவள் பெரியம்மா இடையில் வந்து "அவளுக்கு என்ன தெரியும் சின்ன புள்ள , நாம தான் பார்த்துச் செய்யனும் நாளைக்கு எல்லாரும் கொழுந்தன் மகளை கவனிக்காம விட்டானு சொல்றதுக்கா, அதனால பெரியவுக எல்லாம் பேசி ஒரு முடிவ சொல்லுங்க"

கார்த்திக்கு அவள் பேசியதையும் , அவள் பெரியம்மா பேசியதையும் கேட்டவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் பொங்கியது .

"ஏஞ்சல் நீ என்னோடவள், நீ போய் இப்படி கெஞ்சிட்டு இருக்க... நான் இருக்கும் போது உன்ன அநாதனு எப்படி சொல்லலாம், (அவள் பெரியம்மாவைப் பார்த்தவன்)
, குண்டம்மா என் ஏஞ்சல யார்க் கோ கல்யாணம் பண்ண பார்க்கிறியா , உனக்கு இருக்கு" என்று திட்டிக் கொண்டு இருந்தவன் முன் அவள் மெல்ல நடந்து வந்தாள்.

அவனருகில் வர வர இதயம் வேகமாக துடிப்பது போல் இருந்தது. அவளையேப் பார்த்து கொண்டிருந்தவன் அவள் அருகில் வந்து , அவன் அம்மா முன் நின்று கைகூப்பி "அத்த பாட்டிய கவனிக்கிற வரைக்கும் அங்க இருப்பேன் , அதுக்கப்புறம் நான் ஹாஸ்டல் போயிருவேன். எங்க பெரியப்பாகிட்ட சொல்லி என்னைய கூட்டிட்டு போயிருங்க ப்ளீஸ் , நான் படிக்க ஆசைப்படுறேன்" .

அவள் கையை சட்டென்று கீழே இறக்கி விட்டவர், "நீ என்கிட்ட வந்து கேக்கலனாலும் நான் அத தான் செய்ய போறேன். நீ கவலைப் படாத திவ்யா மா" என்றவர் அதற்கு மேல் ஒரு நிமிடம் தாமதிக்கவில்லை.

அவர் செல்வாக்கு அனைவரும் அறிந்ததே , அவள் பெரியம்மா தான் கொஞ்சம் முனுமுனுத்தார். கடைசியாக சாந்தியே கூட்டிக் கொண்டு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. மற்றபடி வந்தவர்கள் எங்கே நம்மள கைகாட்டி விடுவார்களோ என்றே பயந்து கொண்டே இருந்தனர்.

ஒரு வழியாக எல்லோரும் பேசி முடிவெடுத்து இதோ சென்னை செல்லும் காரில் , கார்த்திக்கு நேர்பின் அமர்ந்து திவ்யா சென்று கொண்டு இருந்தாள்.

முன் கண்ணாடியில் அவளையே தான் பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தான். அம்மாவும் தங்கையும் , தூங்கிக் கொண்டு இருந்தார்கள். திவ்யா மட்டும் இருளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். இவன் அவளைப் பார்த்தாலும் அவள் கண்கள் எங்கோ தான் இருந்தன.

இன்று அம்மா பேசவில்லை என்றால் தான் எப்படியும் பேசியிருப்போம், ஆனால் பின் விளைவுகள் திவ்யாவுக்கே என்றே தோன்றியது. அவனுக்குத் தெரியும் அம்மா விட மாட்டார் என்று . சென்னையை நெருங்கி கொண்டு இருக்கும் போது , அங்கிருந்த மோட்டல் கண்ணில் படவும் வண்டியை நிறுத்தினான்.

பெண்கள் மூவரும் இறங்கி ரெஸ்ட் ரூம் செல்லவும் ,இவன் அவர்களுக்கு டீ வாங்கி கொண்டு இருந்தான். எல்லோரும் வரவும் அவர்களிடம் கொடுத்தவன், "அம்மா நீங்களும் மினியும் பின்னால வசதியா உட்காருங்க, பாருங்க கால் வீக்கமா இருக்கு "என்றவன், "திவ்யா நீ முன்னால உட்காரு என்று சொல்லிவிட்டு சென்றான்"

அவன் சொன்னது போலவே சென்று அமர்ந்தார்கள், அவன் கைகளில் பிஸ்கெட் பாக்கெட்கள் , தண்ணீர் பாட்டில்களுடன் வந்து ஒரு செட்மினியிடமும் , மற்றொன்றை திவ்யாவிடமும் தந்தான்.

அவன் முகத்தைப் பார்த்தவள் சிறிது தயக்கத்துடனே வாங்கி முன்புறம் வைத்துக் கொண்டாள். மினி பிரித்து சாப்பிட்டவள் அவள் அம்மா மேல் படுத்து உறங்க ஆரம்பித்து விட்டாள்.

பின்னால் இருவரும் ஆழ்ந்துறங்குவதைக் கண்டவன் "அந்த பிஸ்கட் பிரி " எனவும் பிரித்து அவனிடம் கொடுத்தாள். அதில் ஒன்றை எடுத்து இடது கையால் அவளிடம் கொடுத்தான். வாங்க தயங்கவும்" சாப்பிடு" என கொஞ்சம் சத்தமாக சொல்லவும் திடுக்கிட்டவள் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். பின் அவனும் சாப்பிட்டுக் கொண்டே பென்டிரைவ் செருகி இளையராஜாவின் பாடல்களை ஒலிக்கவிட்டான்.

தண்ணீர் பாட்டிலை திறக்க முற்பட்டவள் கை வலி கொடுக்க "ஷ் " என்றவள் , அதை அப்படியே வைக்கப் போனாள். " இரு, இரு " என்றவன் அவளை "அந்தக் கையில பாட்டில் பிடி "என்று தன் கையால் திறந்து தந்து "இன்னும் ரெண்டு மணி நேரத்துல வீட்டுக்கு போயிருவோம்.அதுவரை நீ கண்ண திறக்க கூடாது". "தூக்கம் வரல அத்தான் " , "தூக்கம் வருது வரல கண்ண நான் சொல்றவரை திறக்கக் கூடாது "
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa