என்றென்றும் அன்புடன் அழகி - 8

#1
"மதி.. மதி.. மணி ஆறு ஆயிடுச்சு.. இன்னும் எழுந்திரிக்காம என்ன பண்ற? சீக்கிரம் குளிச்சிட்டு வா.. உங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்திடுவாங்க" என தாலி கோர்க்கும் விசேஷத்துக்கு மதியை எழுப்பிக் கொண்டிருந்தார் சாந்தி.

காலை ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து விசேஷத்துக்கு வந்துவிடுவதாக மீனாட்சி கூறி இருந்தார். அவர்களுக்கு காலை உணவை தயார் செய்து கொண்டிருந்த சாந்தி மதியையும் எழுப்பி கொண்டிருந்தார்.

தூங்கி எழுந்தவள் குளித்துவிட்டு வர "அப்பாடா" என்றிருந்தது சாந்திக்கு. பின்னே இந்த ஒரு வாரமாக முகத்தை தூக்கி வைத்து கொண்டு தன் எதிர்ப்பை காட்டி கொண்டிருந்தாள் மதியழகி. அவளிடம் சமாதானம் பேசினால் இன்னும் முறுக்கி கொள்ளுவாள் என சாந்தியும் அவள் போக்கில் விட்டுவிட்டார். ஆனால் மனதில் எங்கே விஷேசம் அன்று ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவாள் என ஒரு பக்கம் பயமும் இருந்து கொண்டுதான் இருந்தது. மதி குளித்து முடித்து புடவை கட்டி கொண்டு வரவும் தான் சற்று தெளிந்தார் சாந்தி. பாதி சமையல் முடிந்திருக்க மதியும் சாந்திக்கு உதவ சீக்கிரமே காலை உணவை செய்து முடித்திருந்தார் சாந்தி. ஒன்பது மணிக்கு வள்ளியம்மையும், மீனாட்சியும் வந்திருந்தனர். வந்தவர்களை உபசரித்து அனைவரும் காலை உணவை முடிக்க உறவினர்களும் வர ஆரம்பித்தனர். மதியழகி நொடிக்கொரு முறை வாசலை பார்த்து கொண்டிருந்தாள். அவளின் பார்வை உணர்ந்து "அன்பு வந்திருந்தா நல்ல இருந்திருக்கும்.. எவ்ளோ கூப்பிட்டும் பிடிவாதமா வரமாட்டேன்னு சொல்லிட்டான்" என வள்ளியம்மையிடம் குறைபட்டு கொண்டிருந்தார் மீனாட்சி. அங்கே வந்த உறவுக்கார பெண்மணி "என்ன சின்னமா.. உங்க பேரனை காணோம்?" என கேட்க அவர் பதில் சொல்லும் முன் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து மனோ, ஜனனி மற்றும் அன்பு இறங்க "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா மறுபடியும் இங்க வருவ?" என கேட்டுக்கொண்டு வந்தார் அழகம்மை.

அவரது குரலில் ஏதோ சண்டை போல் என நினைத்து கொண்டு மதியழகி வெளியே வர "யாரும் மனோவையும் சனனியும் பேச கூடாது. எங்க வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காங்க. யாரவது அவங்க இருக்க கூடாதுனு சொன்னா நாங்களும் கிளம்பி போயிடுவோம்" என வள்ளியம்மை பேச "என்ன பெரியம்மா இது? நல்ல காரியம் நடக்குற வீட்ல இப்படி பேசுறீங்க? இங்க யாரும் மனோவை ஒன்னும் பேசாம மாட்டாங்க" என சாந்தி அழகம்மையை பார்த்து பேச அதற்கு மேல் அழகம்மையும் எதுவும் பேசாமல் ஒதுங்கி கொண்டார்.

"சாந்தி நேரமாகுது.. புள்ளைங்கள மனைல உட்காரவைக்கலாமா?"

"சரி பெரியம்மா" என அவர் மதியழகியை அழைக்க உள்ளே செல்ல "அப்படியே பக்கத்துல இன்னொரு மனைல மனோவும் சனனியும் உட்கார வச்சுடலாம்"

வள்ளியம்மை கூறியவுடன் அங்கெ சலசலப்பு கிளம்ப "அதெல்லாம் வேண்டாம் ஆச்சி என மறுத்தனர் மனோ மற்றும் ஜனனி".

"இன்னைக்கு நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும். சாந்தி இந்த புடவையை மதி கிட்ட கொடுத்து கட்டிக்கிட்டு வர சொல்லு".

"இதென்ன வள்ளியம்மை புது பழக்கமா இருக்கு? புடவை கொடுக்கறது நம்ம பழக்கம் இல்லையே?" என பங்காளிகளில் ஒருவரான பேச்சி கேட்க "கல்யாணம் அவசரத்துல நடந்ததால எங்க வீட்ல இருந்து கல்யாண புடவை கொடுக்கல. அதனால தான் தாலி பிரிச்சி கோர்க்கும் போது புடவை எடுத்து கொடுத்தோம். சரி சரி.. பேசிட்டு இருக்காம சீக்கிரம் வேலைய பாருங்க" என அவர் விரட்ட அங்கே பேச்சுக்கு இடமில்லாமல் வேலை நடக்க ஆரம்பித்தது.

இத்தனை கலவரத்திலும் அன்பு, மனோவை முறைத்த வண்ணமே இருக்க மனோவோ அவன் புறம் திரும்பினால் தானே.

"ஏன் மனோ உன்னை இந்த அன்பு இப்படி பாக்குறான்?"

"ஆச்சி!! உங்களை!! அவன்கிட்ட என்ன கோர்த்துவிட்டுட்டு இப்ப கேள்வி வேற கேக்குறீங்களா?"

"நா என்ன பண்ணேன்?"

"ஏன் நீங்களே அவனை இந்த விசேஷத்துக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானே? அவன் மேல உங்களுக்கு அவ்ளோ பயம்.. அதுதான் ஒரு அப்பாவிய மாட்டிவிட்டுட்டு இப்போ கேள்வி வேற.. அவன் ஏன் பாக்குறான்னு.. அவன் பாக்கல.. என்னை முறைக்குறான்"

"முறைக்குறானா? எதுக்கு?"

"ம்ம்.. இங்க தான் வரப்போறோம்னு சொன்னா வரமாட்டானு எங்க கல்யாணத்தை பதிவு பண்ணனும்னு சொல்லி அவனை அலேக்கா தூக்கிட்டு வந்துருக்கேன்.."

"அடப்பாவி.. பொய்யா சொன்ன?"

"அப்போ நீங்க அவன்கிட்ட உண்மையா சொல்லி கூட்டிட்டு வந்து இருக்க வேண்டியது தானே?"

"என்னை யாரோ கூப்பிட்ற மாதிரி இருக்கு.. நான் போய் பாக்குறேன்"

"அந்த பயம் இருக்குல்ல? ஐயோ இவன் கிட்ட வேற கோர்த்துவிட்டாங்களே.. இன்னும் ஒரு மாசத்துக்கு என்னை வச்சு செய்வானே" என மனோ புலம்ப இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த அன்புவிற்கும் புன்னகை மலர்ந்தது.

அன்புவிற்கும் பட்டு வேஷ்டி, சட்டை கொடுத்து மாற்றி வர சொல்ல ஒன்றும் சொல்லாமல் மனோவை இழுத்து கொண்டு உடை மாற்ற சென்றான். உள்ளே அறைக்கு வந்ததும் "மனோ" என அன்பு பேச வர "அப்பா சாமி!! என கையை தலைக்கு மேல் கும்பிட்டவன் "என்னால முடியல டா டேய்!!! பாட்டியும் பேரனும் என்னை டார்ச்சர் பண்றிங்க டா.. உங்க குடும்பத்துல வாக்க பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகுறேன்.. இப்போ ஏதாவது நீ பேசுன நானே உனக்கு டிரஸ் மாத்தி விட்ருவேன்.. எப்படி வசதி?" என மனோ கேட்க அதற்கும் முறைத்துவிட்டு எதுவும் கூறாமல் உடை மாற்றி வெளியே வந்தான் அன்பு.

"சீக்கிரம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள வந்து உட்காருங்க" என வள்ளியம்மை இரு ஜோடியையும் உட்கார சொல்ல மனோவும் ஜனனியும் தயங்க "சீக்கிரம் பா" என பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க இருவரும் மனையில் அமர்ந்தனர். சந்தன நிறத்தில் முழுக்கை சட்டை, பட்டு வேஷ்டி என கம்பீரமாக அன்பு அமர அவனுக்கு அருகில் கத்தரிப்பூ வண்ண பட்டுடுத்தி அதற்கேற்றாற் போல் நகை அணிந்து மதியழகி அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு அமர்ந்தாள். அன்புவும் மதியழகியை பார்த்தான். ஆனால் யாரும் அறியா வண்ணம்!!

இரு ஜோடிகளிடமும் தங்க தாலி கொடியை கொடுக்க திருமணத்தன்று போல் இல்லாமல் இன்று அன்புவும், மதியழகியும் அந்த தருணத்தை ரசித்த அனுபவித்தனர் தத்தம் துணை அறியாத வண்ணம்.

மதியின் மனதில் அன்புவின் மேல் ஈர்ப்பு வந்தது போல் அன்புவிற்கும் ஈர்ப்பு உருவாகியிருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவன் அடுத்த கட்டத்திற்கு போக முயலவில்லை. மதிய உணவு முடிந்து அனைவரும் அன்று மாலையே சென்னை கிளம்ப அன்று போல் இல்லாமல் இன்று அன்பு அனைவரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டே சென்றான் மதியழகியை தவிர. காலையில் இருந்து உற்சாகத்தில் இருந்தவள் அன்புவின் செயலால் மீண்டும் கோபம் துளிர்க்க ஆரம்பித்தது. தன் படுக்கையில் விழுந்தவள் காலையில் இருந்து நடந்ததை அசைபோட்ட வண்ணம் உறங்கியிருந்தாள்.

மதியழகியின் கல்லூரி விடுமுறை முடிந்து நாளை விடுதி செல்வதற்கு தேவையானவற்றை அடுக்கி கொண்டிருந்தாள். தன் கைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவள் மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது. விஷேஷத்திற்கு வந்து சென்றது முதல் மீனாட்சியும் வள்ளியம்மையும் தினமும் மதியழகிக்கு அழைத்து பேசிவிடுவர். முதலில் சிறிது தயங்கினாலும் பின் மதியழகியும் அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். தொடக்கத்தில் மீனாட்சியை "அத்தை" என அழைப்பதில் தயக்கம் இருக்க இப்போது அந்த தயக்கமும் இல்லை.

இதற்கிடையில் ஜனனியும் மதியழகியுமே நெருங்கி பழக ஆரம்பித்திருந்தனர். தன்னை "அக்கா" என்றழைக்கும் மதியழகியை ஜனனிக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயது முதலே பெற்றோரை இழந்து உறவுகள் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த ஜனனிக்கு இந்த உறவுகள் இதுவரை தான் இழந்த அன்பை வழங்கி கொண்டிருந்தது. இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாற்றம் வந்திருக்க அன்பு, மதியின் உறவில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது.

அன்பு தொடரும்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement