என்றென்றும் அன்புடன் அழகி - 7

Advertisement

Dharanika

Active Member
தேர்வு ஆரம்பித்ததிலிருந்து தன் கவனம் முழுக்க படிப்பில் இருக்க தேர்வை நன்றாகவே எழுதியிருந்தாள் மதியழகி. மனோவின் மூலம் மதியின் கைபேசி எண்ணை தெரிந்து கொண்டு வள்ளியம்மை அவளுக்கு அழைத்தார். புதிய எண்ணாக இருக்கவும் யார் என்ற யோசனையில் மதி கைபேசியை எடுக்காமல் இருக்க மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்தது. மறுபடியும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, "ஹலோ, யாரது?"

"மதி.. நான் தான் வள்ளியம்மை. நல்ல இருக்கியா?"

சற்று தயங்கியவள் "நல்ல இருக்கேன் ஆச்சி.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம்.. உனக்கு பரீட்சை முடிஞ்சதா?"

"இன்னைக்கு தான் முடியாது ஆச்சி.."

"சரித்தா.. இரு உன் மாமியார் பேசணுமாம்"

"அம்மாடி மதி.. எப்படிம்மா இருக்க? பரீட்சை முடிஞ்சதா?"

"நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"ம்ம்.. நல்லா இருக்கோம் மா.. மனோ தான் உன்னோட நம்பர் கொடுத்தான். போன மாசம் மனோவோட வரவேற்புக்கு போயிருந்தோம்.. அப்போ தான் உன்னோட நம்பரை வாங்கினேன்.. உனக்கு எக்ஸாம் நடந்துகிட்டு இருக்கும்.. பரீட்சை நடக்கறதால உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு பரீட்சை முடிஞ்சதும் கூப்பிட்டேன்.."

"ஓ சரி.." என்றவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் பொதுவாக பேசியவர் "சரிம்மா.. வச்சிடுறேன்.." என அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் கைபேசியை துண்டித்தார் மீனாட்சி.

"மதி.. நான் நாளைக்கு ஊருக்கு போறேன்.. நீ எப்போ கிளம்ப போற?"

"ம்ம்.. கிளம்பனும் கனி.."

"என்னடி கிளம்பனும்னு இழுக்குற? ஊருக்கு போற தானே? செமிஸ்டர் லீவு விட்டாச்சு.. இங்க ஹாஸ்டல்லயும் யாரும் இருக்க மாட்டாங்க.. அப்படியே இருந்தாலும் ஒன்னு ரெண்டு பேரு தான் இருப்பாங்க.. சாப்பாடும் ஒழுங்கா இருக்காது"

"கிளம்புறேன் கனி.. நாளைக்கு காலைல.."

அதை ஏண்டி இவ்ளோ வருத்தமா சொல்ற? ஒருவழியா நாமளும் சீனியர் ஆகப்போறோம். தேர்ட் (மூன்றாம்) இயர் போக போறோம்ன்ற சந்தோசம் கொஞ்சம் கூட உன்கிட்ட இல்லையே? என்ன மாமாவை நினைச்சு பீலிங்சா?

"மாமாவா? அது யாரு?"

"அடியேய்.. என்ன பொசுக்குன்னு இப்படி கேட்டுட்ட? உன்னோட அத்தான்.. புருஷன்.. ஆத்துக்காரர்.. வீட்டுக்காரர்.."

"போதும்.. போதும்.. ஒரு பீலிங்க்ஸும் இல்ல.. போய் உன் சூட்கேஸை பேக் பண்ற வேலையை பாரு"

"ஆமா.. பீலிங்ஸ் இல்லாமா தான் ரகசியமா அடிக்கடி அந்த போட்டோவ பார்த்துப்பாளாம்.. கேட்டா பீலிங்ஸ் இல்லன்னு சொல்லுவாளாம்..." என மதிக்கு கேட்குமாறு சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.

அடுத்த காலை பதினோரு மணிக்கு தன் வீடு வந்து சேர்ந்தாள் மதி. திருமணம் முடிந்து விடுதிக்கு சென்றதிலிருந்து தன் அம்மாவே அழைத்தால் பேசுவாள் தவிர தானாக சாந்திக்கு அழைப்பதில்லை. அதனால் தான் வீட்டுக்கு வரப்போவதாக சாந்தியிடம் தகவல் சொல்லவில்லை. திடீரென்று வந்து நின்ற மகளை பார்த்து சாந்தி கண்கலங்க மதியழகிக்கும் தன் தவறு புரிந்தது. எதுவும் பேசாமல் தன் அறையில் தன் பையை வைத்துவிட்டு பரமசிவத்தை பார்க்க சென்றாள். அரை மணிநேரம் அவருடனே இருந்தவளை சாந்தி வந்து சாப்பிட அழைத்தார். மதியழகி சாப்பிட்டு கொண்டிருக்க மீனாட்சியிடம் இருந்து சாந்தியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

"அத்தாச்சி.. நல்ல இருக்கீங்களா? பெரியாம்மா நல்ல இருக்காங்களா? தம்பி நல்லாயிருக்காங்களா?" என இருவரும் பேசிக்கொண்டிருக்க மதியழகிக்கு அழைப்பு யாரிடம் இருந்து என புரிய வேகமாக சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

"சரி அத்தாச்சி.. நான் மதியழகிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்"

"மதி.. மதி.. உள்ள என்ன பண்ற?"

"வரேன் மா"

"வர வெள்ளிக்கிழமை தாலி பிரிச்சு கோர்க்கலாமான்னு அத்தாச்சி கேக்குறாங்க.. உனக்கு அன்னைக்கு தோதுப்படுமா?" என்றவரை முறைத்தவள் "அம்மா.. இதெல்லாம் தேவை இல்லை. அவங்களை வர வேண்டாம்னு சொல்லிடுங்க"

"மதி.. இப்படிலாம் பேசக்கூடாது.. நான் அவங்களை வர சொல்றேன். எல்லாம் உன் இஷ்ட்டத்துக்கு விடமுடியாது" என்றவர் அலைபேசியை எடுத்து மீனாட்சிக்கும் சொல்லிவிட்டார்.

"என்னோட இஷ்டமா? எது என்னோட இஷ்டப்படி நடந்தது?" என நடந்தவற்றை நினைத்து கொண்டே படுத்திருந்தவள் உறங்கிவிட்டாள். பின் மாலை எழுந்தவள் தன் கைபேசியை எடுத்து பார்க்க புதிய எண்ணில் இருந்து செய்தி வந்திருந்து. திறந்து பார்த்தவள் அதை பார்த்தவாறு அமர்ந்துவிட்டாள். ஜனனியிடம் இருந்து திருமணத்தன்று எடுத்த புகைப்படங்கள் வந்திருந்தது. அன்பு தாலி கட்டுவது, வகிட்டில் குங்குமம் வைப்பது, இருவரும் ஜோடியாக பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது என அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் வந்திருந்தது.

தன்னையும் மீறி அன்புவை ரசிக்க ஆரம்பித்தாள் மதியழகி. அதே வேளையில் அன்புவிற்கும் மனோவிடமிருந்து செய்தி வந்திருந்தது. மதியழகிக்கு அனுப்பிய அதே புகைப்படங்கள்!!!

புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த மதியழகியின் மனம் வெள்ளிக்கிழமை அன்புவின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அன்பு வருவானா???

அன்பு தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top