என்றென்றும் அன்புடன் அழகி - 3

Advertisement

Dharanika

Active Member
"அழகன் அழகியிடம் ஆசை கொண்டான்" இந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு கதை வெளியாகி இருப்பதால் "என்றென்றும் அன்புடன் அழகி" என்று கதையின் பெயரை மாற்றியுள்ளேன்.. தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் பகிருங்கள்..

அத்தியாயம் - 3

இன்னும் ஒரு மணி நேரமே இருக்க அன்புக்கு பட்டு வேஷ்டி சட்டையும், ஜனனிக்கு புடவையும், மாங்கல்யமும் வாங்க இருவரை அனுப்பி வைத்தார் வள்ளியம்மை. அனைத்தையும் கையை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பார்த்து கொண்டிருந்தான் அன்பு. பின்பு அன்புவிடம் வந்தவர் "எல்லாரையும் சமாளிச்சது பெருசில்ல வள்ளியம்மை.. இவனை சமாளிக்கறது தான் பெருசு.. உன்னோட முழு திறமையும் இவன இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்க வைக்கறதுல தான் இருக்கு" என மனதுக்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டவர் "அய்யா அன்பு.. கொஞ்சம் இங்கன வாய்யா.." என அன்புவை தனியாக அழைத்து கொண்டு செல்ல கூடவே "என்ன நடக்க போகுதோ" என்ற பதட்டத்தோடு மீனாட்சியும் உடன் சென்றார்.

தான் சற்றும் வள்ளியம்மைக்கு சளைத்தவன் இல்லை என்ற பார்வையோடு "நீங்க கல்யாணத்த முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க. அதுவரைக்கும் நான் ஹோட்டல்ல இருக்கேன்" என்று தன் காரை நோக்கி நடந்தான் அன்பு.

"அடேங்கப்பா.. நான் எதிர்பார்த்ததைவிட ரொம்ப விவரமா இருக்கானே என் பேரன்" என மனதிற்குள் எண்ணி கொண்டவர், "இந்த அப்பாதாவோட கடைசி ஆசைய்யா.. உனக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கணும். உன்னோட புள்ளைகளை இந்த கிழவி தூக்கணும். நிறைவேத்தி வைப்பியா அழகா?" என்றார் கண்களில் கண்ணீருடன் அன்புவின் கைகளை பிடித்துக்கொண்டு. அதை பார்த்திருந்த மீனாட்சி, "அத்த, அன்பு கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான். நீங்க அழாதீங்க" என்றார் அன்புவை பார்த்து “சம்மதித்து விடு” என்ற வேண்டுகோளுடன்.

அன்புவின் கையை பிடித்துக்கொண்டே வள்ளியம்மை மயங்கி விழ "அப்பத்தா" என தன் கைகளில் தாங்கி கொண்டான் அன்பு. வள்ளியம்மை மயங்கி விழுவதை பார்த்த சிலர் மருத்துவருக்கு தகவல் கொடுக்க, "பாட்டியம்மாவுக்கு ரத்தக்கொதிப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. காலைல சாப்பிடங்களா?

"இல்லை" என தலையாட்டினார் மீனாட்சி.

"அவங்களுக்கு சாப்பிட கொடுங்க" என்றவர் மீண்டும் மயங்கி விழுந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க சொன்னார்.

நேற்று சென்னையில் இருந்து கிளம்பும் பொழுது சாப்பிட்டது. பின் இன்று காலை தேநீர் குடித்ததுடன் சரி. மேலும் இங்கு நடந்த சர்ச்சையில் வள்ளியமைக்கு ரத்தக்கொதிப்பு கூடியது. மருத்துவர் சென்றவுடன் செய்வதறியாது நின்றிருந்தான் அன்பு. அதற்குள் மணமக்களுக்கு துணியும், மாங்கல்யமும் வாங்கி கொண்டு வந்திருந்தனர்.

சாந்தி, மதியழகியை திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லிக் கொண்டிருந்தார். "மதி, நமக்கு எது விதிச்சிருக்கோ அது தான் நடக்கும். மனசை போட்டு குழப்பிக்காம அம்மா சொல்றதை கேளு. அம்மா உன்னோட நல்லதுக்கு தான் சொல்வேன்" என்றார் தன கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்தபடி.

"அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் மா. நான் படிக்கணும்"

"இங்க பாரு மதி.. உனக்கு அம்மா வேணும்னா இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கோ. இல்லைன்னா உன் இஷ்டம்" என்றபடி நகர்ந்தார் சாந்தி.

இருமனதும் இணையாமலே நிர்பந்தத்தினால் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இங்கே வள்ளியம்மை முழித்தவுடன் அவருக்கு பழச்சாறு கொடுக்க, அதை வாங்காமல் அன்புவை பார்த்தபடி இருந்தார். அவரின் பார்வையின் கேள்வியை உணர்ந்து "அப்பத்தா முதல்ல இதை குடிங்க. அப்போதானே உங்க பேரனோட கல்யாணத்தை தெம்பா பார்க்க முடியும்" என்றவன் அங்கு நிற்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் கூறிய செய்தியில் வள்ளியம்மைக்கு பழைய தெம்பு மீண்டிருந்தது. பழச்சாறை அருந்திவிட்டு சாந்தியை காண சென்றார். இன்னும் அரைமணி நேரமே இருக்க அதற்குள் அன்பு மற்றும் ஜனனி இருவருக்கும் புது உடை கொடுத்து அணிந்து வர சொன்னார். இருவரும் வந்தவுடன் அம்மனுக்கு தீபாராதனை காட்டிவிட்டு அம்மன் பாதத்தில் மாங்கல்யம் வைத்து அன்புவிடமும், மனோவிடமும் கொடுத்தார் பூசாரி.

மனோ தாலி கட்டும்போது ஜனனியை பார்க்க, திருமணம் நடந்ததில் பிரச்சனை இருந்தாலும் தங்களது காதல் கை கூடியதில் இருவரின் மகிழ்ச்சியும் முகத்தில் பிரதிபலித்தது. அன்பழகனோ மதியின் முகத்தை கூட சரியாக பார்க்காமல் அவள் கழுத்தில் தாலி கட்டினான். திருமணமும் நல்லபடியாக முடிந்தது. மனோ, ஜனனி தம்பதியினர் அவர்களின் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி விட்டு அங்கு சூழ்நிலை சரியில்லாததால் அன்று மாலையே சென்னைக்கு புறப்பட திட்டமிட்டனர். அழகம்மையின் வீட்டிற்கு வந்த அன்பு, மதி இருவரையும் பூஜை அறையில் விளக்கேற்றிவைத்து சாமி கும்பிட சொன்னார் வள்ளியம்மை. அடுத்து மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க, அதுவரை பொறுத்திருந்த அன்பழகனால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. ஒரு நிமிஷம் என்று தன் தாயை அழைத்தவன், "அம்மா, உங்க விருப்பப்படி கல்யாணம் செய்துகிட்டேன். என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. எனக்கு மூச்சு முட்டுது.. நா கிளம்புறேன். நீங்க எப்போ வரேன்னு சொல்றிங்களோ அப்போ உங்களுக்கு கார் புக் பண்றேன் என்றவன் யாரிடமும் கூறாமல் வெளியேறி இருந்தான்.

மீனாட்சி மட்டும் தனியாக உள்ளே வர அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தனர். "மன்னிச்சுக்க சாந்தி.. அன்புக்கு முக்கியமான வேலை இருக்குனு கிளம்பிட்டான்.. " என்றார் சங்கடத்துடன். அதை கேட்ட சாந்தியின் மனம் வாட, உறவுக்கார பெண்மணி ஒருவர் கேட்க "கல்யாண அன்னைக்கே அப்படி என்ன முக்கியமான வேலை?"

அது.. திடீர்னு கல்யாணம் நடந்திடிச்சுல.. கல்யாணம் முடிஞ்ச உடனே கிளம்பனும்னு சென்னைல இருந்து கிளம்பும் போதே சொல்லிருந்தான்" என்று சமாளித்தார் வள்ளியம்மை. நாங்க மதியழகிய கூட்டிட்டு இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறோம் சாந்தி என்றார் மீனாட்சி. இதுவரை பேசாமல் இருந்த மதி “ என்னால எங்கயும் வரமுடியாது” என்றாள் தாயை பார்த்து. சாந்தி செய்வதறியாது மீனாட்சியை பார்க்க அவரோ, "அன்பு உன்கிட்ட சொல்லாம போய்ட்டான் கோவமா இருக்கியாமா? உன்னை எங்க கூட கூட்டிட்டு வர சொல்லிட்டான். அவனுக்கும் எதிர்பாராம நடந்த கல்யாணம் தானே.. அதான் கொஞ்சம் கோபமா இருக்கான். போக போக சரியாகிடும்"

"அம்மா நான் என்னுடைய படிப்பை பாதியில நிறுத்த முடியாது. நான் படிக்கணும்" என்றாள் சாந்தியிடம்.

"நீ தாராளமா படி மதி. ஆனா அங்க வந்து நம்ம வீட்ல இருந்து படி" என்றார் வள்ளியம்மை.

"அம்மா எனக்கு எங்கேயும் போக விருப்பம் இல்ல" என மதியழகி முகத்தில் அடித்தார் போன்று பேச "மீனாட்சி கிளம்பு.. நாம போகலாம். அன்புக்கு போன் பண்ணி கார் அனுப்ப சொல்லு" என கிளம்பிவிட்டார் வள்ளியம்மை.

மீனாட்சி சங்கடத்துடன் சாந்தியிடம் தலை அசைத்துவிட்டு வெளியேற அவர் பின்னேயே சாந்தியும் சென்றார். "பெரியம்மா, மதி ஏதோ கோவத்துல பேசிட்டா. நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க. பெரியவங்க கிட்ட எப்போதும் மரியாதையா தான் பேசுவாள்.. இன்னைக்கு என்னனு தெரியல"

"அட விடுத்தா.. சின்ன புள்ள தான.. நீ ஏதும் மனசுல நினைச்சு வருத்தப்படாத. சீக்கிரம் ரெண்டு பேரும் சரியாடுவாங்க"

இருவரையும் வழியனுப்பிட்டு உள்ளே வந்த சாந்தி மகளிடம், "நீ செய்றது எதுவும் சரியில்ல மதி. பெரியவங்கள இப்படி தான் எடுத்தெறிஞ்சு பேசுவீயா? அவங்க தான் சென்னைல படிக்க சொல்றாங்கள? இங்க படிக்கறது அங்க போய் படிக்க போற. இது தான் உன் வாழ்க்கை. நல்ல படியா வாழறதும் வாழம இருக்கறதும் உன் கைல தான் இருக்கு"

"அம்மா போதும்மா. என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா. மனோ மாமா கூட கல்யாணம் சொன்னப்பவே எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்.. நீங்க தான் கட்டாயப்படுத்துனீங்க.. இப்போ முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர் கூட நான் போய் எப்படி வாழ முடியும்? அதுவும் கல்யாண முடிஞ்ச உடனே கிளம்பிட்டாரு. போதும் மா.. என்னைய இதுக்கு மேல எதுக்கும் கட்டாய படுத்தாதீங்க" என்றவள் நிற்காமல் தனது அறைக்கு சென்றாள்.

அன்பு தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top