என்றென்றும் அன்புடன் அழகி - 2

Advertisement

Dharanika

Active Member
காரில் ஏறியவுடன் "அன்பு, நல்ல பாட்டா ஓடவிடுய்யா. பயண அலுப்பு தெரியாது" என கூற அவரை முறைத்தவாறு காரை கிளப்பினான். அனைத்தயும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி, மனதிற்குள் தன் மாமியாருக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தனர். நேராக தங்களுக்கு அறை பதிவு செய்திருந்த ஹோட்டலில் காரை நிறுத்தியவனை இருவரும் பார்க்க, மீனாட்சி எதுவும் கேட்காமல் இருக்க, வள்ளியம்மையோ " உங்க அத்தை வீட்டுக்கே போயிடலாம்ய்யா" என கூறியவர் அன்புவின் முறைப்பை பார்த்து வாயை மூடிக் கொண்டார்.

இரு அறைகள் பதிவு செய்திருக்க ஒன்றில் மீனாட்சி, வள்ளியம்மை இருவரும் தங்கிக்கொள்ள மற்றொரு அறைக்கு அன்பு செல்கையில், "அன்பு காலைல ஆறு மணிக்கு நாச்சியாபுரம் கிளம்பலாம்" என்றவரிடம் "சரி" என தலையசைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

ஆறு மணிநேரமாக கார் ஓடியதில் களைப்பாக இருந்தவன் படுத்ததும் உறங்கிவிட்டான். பக்கத்து அறையில் இருந்த மீனாட்சிக்கும், வள்ளியம்மைக்கும் தூக்கம் வராமலிருக்க, "அத்த, எப்படியோ அன்புவை ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க. எங்க அவன் வரமாட்டேன்னு சொல்லிடுவான்னு நினைச்சேன்".

"வள்ளியமையா? கொக்கா? என்னோட நடிப்பு எப்படி மீனாட்சி?"

"ம்ம்.. சூப்பர் அத்த நீங்க.. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் வெளி விஷேங்களுக்கு வரான்" என அவர் கண்கலங்க, "அட விடு மீனாட்சி.. இப்போ வந்துட்டான்ல.. முடிஞ்சதையே நினைச்சிட்டு இருக்காம நடக்கறதை பார்க்கலாம்"

கைபேசியின் சத்தத்தில் கண் முழித்தவன் "அம்மா.. ரொம்ப களைப்பா இருக்குமா.. ஒரு அறை மணி நேரத்துல கிளம்பி வரேன்"

சொன்னது போல் அறை மணிநேரத்தில் கிளம்பியவன் மூவருக்கும் தேநீர் வாங்கி கொண்டு நாச்சியாபுரத்தை நோக்கி காரில் சென்றனர்.

திருச்சியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் நாச்சியாபுரம் வந்தடைந்தனர். முத்துமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியை கேட்டு வந்தடைந்தவர்கள் அங்கே ஒரே சச்சரவாக இருக்க மீனாட்சியும், வள்ளியமையும் காரில் இருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி சென்றனர். அங்கே முத்தையா எனப்படும் பெரியவீட்டு தாத்தா "அழகம்மை, நீ இப்போ என்ன தான் சொல்ற? உன் பேரனை நம்பி வந்திருக்கு அந்த புள்ள. அதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா?"

"என்ன நியாயத்தை சொல்ல சொல்றீக?"

"அந்த புள்ளைக்கும் உன் பேரன் மனோவுக்கும் கல்யாணத்த முடிகிச்சு வைத்தா"

"அப்போ என் பேத்தி மதிக்கு என்ன பதில் சொல்றது?"

"எங்களை கேள்வி கேக்குறத விட்டுட்டு உன் பேரனை கேளு" என்றார் ஊரில் பெரிய தலைக்கட்டுகளில் ஒருவரான சொக்கன்.

" அட என்னப்பா இப்போ? மதிக்கு என்ன இப்போ மாப்பிள்ளையா கிடைக்காது? முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த முடிச்சு வைக்கலாம்" என்றார் அழகம்மையின் பங்காளிகளில் ஒருவரான கருப்பையா .

நிலைமை தங்கள் கைமீறி போகவே மனோவின் பெற்றோரும் , அழகம்மைக்கும் வேறு வழி தெரியாமல் கல்யாணத்திற்கு ஒத்து கொண்டனர். காரை நிறுத்திவிட்டு வந்த அன்பு, தன் அன்னையை தேடி கொண்டிருந்தான். சற்று தள்ளி நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர் மீனாட்சியும், வள்ளியம்மையும். சாந்தி கண்ணீருடன் நின்று கொண்டிருக்க, மதியழகி மணப்பெண் அலங்காரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். மீனாட்சியை பார்த்தவுடன் சாந்தி "அத்தாட்சி" என்ன அவரை கட்டி கொண்டு அழுக, மதியழகிக்கு கண்கள் கலங்கியது. "வேற ஏதாவது வழியில இந்த கல்யாணத்த நிறுத்திருக்கலாமோ " என மனதினில் நினைத்துக் கொண்டிருக்க, "வேற ஆளுங்களா இருந்தாலும் அழகைம்மை தன் பேரன் காதலுக்கு ஒத்துகிடுச்சே"

"அட நீ வேற ராசாத்தி.. இந்த விஷயம் வெளிய தெரியவும் தான் வேற வழியில்லாம ஒத்துக்கிடுச்சு. இல்லனா காதும் காதும் வச்ச மாதிரி இந்த விஷயம் வெளிய தெரியமா பண்ணிருக்கும் அழகம்மை"

"அதுவும் சரி தான்" என பெண்கள் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட மதியின் மனமும் அதுதான் உண்மை என ஒப்புக்கொண்டது.

அங்கே நடப்பதை ஒருவாறாக யூகித்து கொண்ட மீனாட்சி, சாந்தியிடம் எதுவும் கேட்டு சங்கடப்படுத்தாமல் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். "அட விடுத்தா.. நம்ம பொண்ணுக்கென்ன குறைச்சல்? வேற நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம்" என வள்ளியம்மையும் ஆறுதல் கூறினார்.

"அதுசரி.. தாலி கட்டுற நேரத்துல கல்யாணம் நின்ன பொண்ணை யாரு கட்டுவா?" என்றார் கருப்பையா, அழகம்மை குடும்பமத்தின் மேல் உள்ள வன்மத்தில். அதை கேட்டு சாந்தி இன்னமும் அழுக, "என் பேத்திக்கு நான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பேன். வந்து நல்லா கல்யாண சாப்பாடு சாப்பிட்டு போ" என்ற வள்ளியம்மையிடன், "நீங்களே ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ தான் ஊருக்கு வரீங்க. இவ்ளோ நாள் சாந்தி இருக்கா? இல்லையான்னு? கூட உங்களுக்கு தெரியாது. போன வருஷம் உங்க மவன் இறப்புக்கு வந்ததுல இருந்து தான் சாந்தி கூட பேச ஆரம்பிச்சீங்க. இதுல நீங்க அது பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போறீங்க?" என நக்கலாக பேச, "ஆமாய்யா, இவ்ளோ நாள் சொந்தம் விட்டுப்போச்சு. இவ்ளோ நாள் பேசாம இப்போ பேசுனா சாந்தி என் பொண்ணு இல்லன்னு ஆகிடுமா? இல்ல மதி தான் என் பேத்தி இல்லன்னு ஆகிடுமா? ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுதாம்.. உன்னோட நோக்கம் என்னனு எனக்கு தெரியாது? எப்படியாவது அழகம்மை குடும்பத்தை ஊருக்கு முன்னால அசிங்க படுத்தணும்னு தான கங்கணம் கட்டிட்டு தெரியுற?"

"இவ்ளோ பேச்சு பேசுறியே. நீ உன் பேரனை கட்டி வைக்க வேண்டியது தானே? உன் பேரனுக்கு கட்டிக்குற முறை தானே?" எப்படியாவது அவர்களை அசிங்க படுத்திட வேண்டும் என கருப்பையா பேசிக்கொண்டிருந்தார்.

இவ்வளவு கலவரத்திலும் அன்பு, மனோ மற்றும் ஜனனியை முறைத்து கொண்டு நின்றிருந்தான். அவர்கள் அனைவரும் பேசி கொண்டிருப்பதை கேட்டு கொண்டிருந்தவன் கருப்பையாவின் கேள்வியில் வள்ளியம்மையையும் மீனாட்சியையும் பார்க்க, அவர்கள் இருவரும் இவன் ஒருவன் இருப்பதை மறந்து சாந்திக்கு ஆதரவாக பேசி கொண்டிருந்தனர். பேச்சின் திசை தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த அன்பு அந்த இடத்தை விட்டு நகர போக, "இன்னைக்கு தான் நீ உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க. எனக்கு கூட இது தோணவே இல்ல. என் பேத்தியை என் பேரன் அன்புவே கல்யாணம் பண்ணிப்பான்" என்ற வள்ளியம்மையின் வார்த்தையில் அப்படியே நின்று விட்டான் அன்பழகன். "பெரியம்மா.. அவசரத்துல வாக்கு கொடுத்துடாதீங்க. ஏற்கனவே அத்தை, மாமாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேத்த போய் தான் இவ்வளவு பிரச்சனையும்" என்றார் சாந்தி.

"நான் யோசிச்சு தான் சொல்றேன் சாந்தி. உன் பொண்ண என் பேரன் அன்புக்கு கல்யாணம் பண்ணிகொடுக்க சம்மதமா?"

கல்யாணம் நின்ன பொண்ண யாரு கட்டுவான்னு கலங்கி போயிருந்தேன் பெரியம்மா. எனக்கு முழு சம்மதம்.

"ஆத்தா மீனாட்சி, பெத்தவ உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம நா பாட்டுக்கு சொல்லிட்டேன்"

"அத்தை, உங்கள மீறி எனக்கு எதுவும் இல்லை. நீங்க சொன்னா சரி தான்."

இவர்களின் சண்டையில் முஹூர்த்தநேரம் முடிந்திருக்க, அடுத்த முஹூர்த்தம் 10.30 மணிக்கு கல்யாணத்தை அதே கோயிலில் இரண்டு ஜோடிக்கும் முடிவு செய்தனர்.

ஆசை தொடரும்...
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top