உனக்காக துடிக்கும் என் இதயம்-2

Kavitasuman

Writers Team
Tamil Novel Writer
#1
பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்பு

வீட்டு ஹாலில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராமலிங்கம்.வயதின் தளர்வு அவர் முகத்தில் தெரிந்தது.பொறுப்புகளை மகன் பேரன் எனக் கொடுத்துவிட்டு ஓய்வாக இருந்தார்.அவருக்கென்று எந்த குறையும் இல்லை.

அவர் நிழலாக இருக்கும் மனைவி,தந்தை சொல்லை மதிக்கும் மகன் மருமகள்,பெறாவிட்டாலும் பெற்ற மகளை விட அதிக பாசத்தோடு பார்த்துக் கொள்ளும் மகள்,பொறுப்போடு புத்திசாலித்தனமும் நிறைந்த பேரன்கள்... முக்கியமாக மூத்த பேரன் மணிமாறன்.உழைப்பிலும் குணத்திலும் பிறருக்கு உதவும் பண்பிலும் அவரைப் போலவே இருந்தான் அவன்.அதில் அவருக்கு அடங்காத பெருமை.கடைசியாக அந்த வீட்டிற்கு வந்து அதை பிருந்தாவனமாக மாற்றிய அவரின் செல்ல பேத்தி பூங்குழலி.

அவருக்கு மட்டுமல்ல வீட்டிலிருந்த அனைவருக்குமே அவள் செல்லம் தான்.காலையில் அவர் கண் விழிக்கும் போது அவள் கையால் கொடுக்கும் காபியிலிருந்து இரவு படுக்கும் போது அவருக்கு அவள் போர்வை போர்த்துவது வரை அவள் இல்லாமல் அவருக்கு எதுவும் இல்லை.

அவருக்கு மட்டுமல்ல அவர் மனைவி முத்துலட்சுமிக்கும் பேத்திக்கு விதவிதமாக அலங்கரிப்பதும் கொஞ்சுவதும் அவளோடு சரிக்கு சரியாக வம்பு வளர்ப்பதும் தான் உலகத்திலேயே முக்கியமான வேலை.

குழலி அந்த மூக்கு கண்ணாடி எங்கே இந்த பேப்பரை எடுத்து வா என்று சுந்தரேசனும் தன் ஆசை மருமகளைத் தான் கேட்பார்.

மங்கையர்க்கரசியும் பார்க்கும் டிவி சீரியலில் இருந்து கோயில் விசேஷம் என எல்லாவற்றிக்கும் அவளுக்கு குழலி தான் வேண்டும்.

ஏறக்குறைய ஒரே வயதினனான சிவாவோ குழலியோடு ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருமுறை கோழி சண்டை போட்டாவிட்டால் அவன் பொழுதே விடியாது.

அந்த வீட்டின் கடைக்குட்டியான விஸ்வத்திற்கோ குழலிதான் எல்லாம்.தாத்தா பாட்டி பெற்றோர் அண்ணங்கள் எல்லோரையும் விட அவள்தான் அவனுக்கு நெருக்கமானவளாக இருந்தாள்.அவனுக்கு விளையாட்டு தோழியும் அவள்தான் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையும் அவள்தான்.வெளியே யாராவது அவனிடம் வம்பிழுத்தால் அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடும் மெய்க்காப்பாளினியும் அவள்தான்.அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் குறும்புகள் அளவிட முடியாதவை.அவர்கள் குறும்புகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.அதில் அதிகம் மாட்டிக் கொள்வது சிவா தான்.

அவன் ஆசையாக தன் அறையில் மாட்டி வைத்திருக்கும் விராட் கோலி படத்திற்கு கொம்பு வரைவதில் இருந்து அவன் காலேஜுக்கு போட்டுக் கொண்டு போகும் சட்டை பட்டனை எடுப்பது வரை அவனை அவர்கள் சீண்டாத நாட்களே இல்லை.அதற்காக அவன் சண்டை போட்டால் ஏதாவது கூறி இருவரும் தப்பித்து விடுவர்.அதில் அவர்களுக்கு உதவுவது வேறு யாரும் இல்லை மணிமாறன் தான்.

ஐந்து வயது குழந்தையாக தன் தாயுடன் அவள் அந்த வீட்டிற்கு வந்தது முதல் அவள் அவனின் செல்ல கற்கண்டானாள்.

அவன் அவளைக் கூப்பிடுவதே அப்படித் தான்.கற்கண்டு என்று கூறி அவன் எதை சொன்னாலும் அவள் அதைத் தட்டாமல் செய்து விடுவாள்.

மொத்தத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் வீடு பிருந்தாவனமாக இருந்தது.

அன்று சமையலறையில் மங்கையர்க்கரசியும் வைதேகியும் மாலை சிற்றுண்டி செய்துக் கொண்டிருந்தனர்.உதவிக்கு மகள் வருவாள் என அத்தனை நேரம் காத்திருந்த வைதேகி அவள் வராமல் போகவே

"குழலி....குழலி.....ஏய்ய்ய்.....குழலிலிலி...."என கத்தினாள்.

"வந்திட்டேன்......."என குரல் கேட்டது தூரத்திலிருந்து.

அங்கே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தாள் குழலி.நீண்ட பின்னல் அசைந்தாட கொலுசொலி வீட்டை நிரப்ப அழகான பாவாடை தாவணியில் மான்குட்டியென ஓடி வந்தவள் எதிரே வந்த விஸ்வா மேல் மோதிக் கொண்டுவிட்டாள்.

"டேய்....கண்ணு தெரியல இப்படி வந்து மோதுறியே"

"எனக்குதான் கண்ணு தெரியலேங்கற உன் கண்ணை பின்னாடியா வச்சுருக்க... நீதான் பாத்து வரது"

"டேய் என்னையே சொல்றியா!"

இவர்கள் சண்டையைப் பார்த்து அருகில் வந்த வைதேகி மகளின் காதைப் பிடித்துத் திருகினார்.

"ஆ......அம்ம்மா....விவிடுங்க....காகாத....வலிக்குது..ஆ....."என கத்தினாள்.

"ஏன்டி டிபனுக்கு உதவி பண்ண வான்னா....தம்பி கிட்ட வம்புக்கு நிக்குறியா"என மேலும் அவள் காதைத் திருகினார்.

"ஆ....ஆ....."என குழலி அலறவும் அதை கண்டு பொறுக்காத விஸ்வா

"அத்தே....!விடுங்க அவளை!இப்ப விட போறீங்களா இல்லையா? அக்காக்கு வலிக்கும்... விடுங்க மொதல்ல..."என அத்தையையே அதட்டினான்.

மகளின் காதை விட்டவர் அவளுக்கு ஒன்று எனவும் வரிந்துக் கட்டிக் கொண்டு வரும் அவனைப் பார்த்து சிரித்தார்.

"நல்ல பிள்ளைங்க போ! நீங்க சண்டைதான் போட்றீங்கன்னு நெனைச்சுகிட்டு நடுவுல வந்தா நீங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு என்னை சோப்ளாங்கி பண்ணிட்டீங்களே..ம்...."

பேசிக்கொண்டே அனைவரும் சமையலறைக்கு வந்திருந்தனர்.

"அது அப்படித்தான் நாங்க சண்டை போடுவோம் உடனே ஒண்ணா சேந்துக்குவோம்...அது தெரியாம யாராவது நடுவுல வந்தா அவங்கள ஓட ஓட விரட்டுவோம்...இல்லடா விஸ்வா...."

"பின்ன என்ன நெனைச்சீங்க நாங்க எப்பவும் ஒரே கட்சி...."

"ஆமா...பருத்தியூரின் மக்கள் திலகத்தின் கட்சி...எங்களை யாரும் அசச்சிக்க முடியாது..."என்றாள் குழலி.

இதுவரை பேசாமல் அவர்கள் பேசுவதை சிரித்தபடி பார்த்திருந்த மங்கையர்க்கரசி,

"ஆமா... நானும் ரொம்ப நாளா கேக்கனும்ன்னு நெனைச்சேன்...எப்ப பாரு பருத்தியூர் மக்கள் திலகம்ன்னு சொல்றீங்களே...அது யாரு?

"அதானே எப்பவும் அதையே சொல்றீங்க அது யாரு?"என்றாள் வைதேகி.

குழலியும் விஸ்வாவும் மர்மமாக சிரித்தனர்.

"டேய் ரொம்ப பண்ணாம சொல்ல போறீங்களா இல்லையா?"

"அக்கா!சொல்லிடுவோமா?"

"வேண்டா வேண்டா...அது நமக்கு மட்டுமேயான சீக்ரெட்...சொல்லாதே"

"எங்களுக்கு சொல்ல கூடாதது என்ன அது....குழலி இப்ப சொல்லப் போறியா இல்லையா"என படபடத்தார் வைதேகி.

"ப்ளீஸ்டா குழலி... இந்த அத்தைக்கு கூட சொல்ல மாட்டியா?"என்று மங்கையர்க்கரசி கொஞ்சலாக கேட்கவும்,

"அம்மா மக்கள் திலகம்ன்னா மணிமாறன் அண்ணா தான்..அவரைத் தான் அப்படி சொல்றோம்"

"என்ன மாறனையா! அப்படி எதுக்கு சொல்லனும்?"

"பின்ன என்ன?எப்பவோ எம் ஜி ஆர் படத்தை பாத்திட்டு...மணிமாறன்னு பேரு வைக்கறதா.... இந்த காலத்து பேரா ஆதித்யா ராகுல்ன்னு இப்படி ஏதாவது பேரை வைக்கறத விட்டுட்டு....இப்ப மணின்னு கூப்பிட்டா பொம்பள பேரு மாதிரி இருக்கு....மாறான்னு கூப்பிடாலாம்ன்னா ரொமேண்டிக்ன்னா கிலோ எவ்வளவு வெலைன்னு கேக்றவரு அவரு....பின்ன நாங்க எப்படித்தான் கூப்பிடறதாம்... அதுக்கு தான் மக்கள் திலகம்ன்னு புது பேரை வெச்சுட்டோம்..."

"ஆமா அண்ணாதான் மக்கள் திலகம்.எங்க கட்சி மக்கள் திலகம் கட்சி... நீங்களும் வேணா சேந்துக்கலாம்....ஆனா நல்லா வாழ்க போடனும் சரியா...எங்க சொல்லுங்க மக்கள் திலகம்"என அவன் கூற

"வாழ்க"என்றாள் குழலி.

"புரட்சி தலைவர்"

"வாழ்க"

என்று இருவரும் கையை உயர்த்திக் கொண்டு கத்தியபடி தங்கள் பின்புறம் திரும்பியவர்கள் விக்கித்து நின்றுவிட்டனர்.

ஏனென்றால் சமையலறையின் கதவில் கைகள் இரண்டையும் கட்டியபடி சாய்ந்தவாறு நின்றிருந்தான் மணிமாறன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement